Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் அப்பா-அம்மா ஏன் என்னை ஜாலியாக இருக்க விடுவதில்லை?

என் அப்பா-அம்மா ஏன் என்னை ஜாலியாக இருக்க விடுவதில்லை?

இளைஞர் கேட்கின்றனர்

என் அப்பா-அம்மா ஏன் என்னை ஜாலியாக இருக்க விடுவதில்லை?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயது அலேசின்னுக்கு * ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை ஸ்கூலுக்குப் போவதை நினைத்தாலே எரிச்சலாக இருக்கும்.

அவள் சொல்கிறாள்: “சனி-ஞாயிறு அன்னைக்கு ஸ்கூல்ல எல்லாரும் என்ன செய்தாங்கன்னு பேசிட்டிருப்பாங்க. அதைக் கேட்கவே சுவாரஸியமா இருக்கும். அவங்க எத்தன ‘பார்ட்டிகளுக்கு’ போனாங்க, எத்தன பையன்களுக்கு முத்தம் கொடுத்தாங்கன்னு அடுக்கிட்டே போவாங்க. சில சமயம் போலீஸ் கண்ல மண்ண தூவிட்டு எப்படித் தப்பிச்சுட்டு ஓடினாங்கன்னுகூட சொல்லுவாங்க. . . . கேட்க பயமா இருக்கும், இன்னொரு பக்கம் ‘திரிலிங்காவும்’ இருக்கும். அவங்க காலையில 5 மணிக்குதான் வீட்டுக்கே வருவாங்களாம். அவங்க அம்மா-அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாங்களாம். ஆனா, எங்க வீட்டுல கதையே வேறு. நைட்ல நான் ‘டான்னு’ படுக்கைக்குப் போயிடனும். ஆனா, என் ஃபிரெண்ட்ஸோ அப்பதான் கும்மாளம் அடிக்கவே ஆரம்பிச்சிருப்பாங்க!

“அவங்க அந்தக் கதையெல்லாம் சொல்லி முடிச்ச பிறகு ‘நீ என்ன செஞ்சன்னு’ கேட்பாங்க. நான் என்னன்னு பதில் சொல்வேன்? கூட்டங்களுக்கு போனேன், ஊழியத்துக்கு போனேன், அவ்வளவு தானே. நான் மட்டும் எதயோ ‘மிஸ்’ பண்ணின மாதிரி இருக்கும்; அதனால, நான் ஒண்ணுமே செய்யலன்னுதான் எப்பவுமே சொல்வேன். அப்ப எங்ககூட வந்திருக்கலாமில்லனு அவங்க எங்கிட்ட கேப்பாங்க.

“சரி, திங்கட்கிழமதான் முடிஞ்சிருச்சே, இனி அத பத்தி பேசமாட்டாங்கனு நினைப்பேன். ஆனா, அடுத்த சனி-ஞாயிறு என்ன செய்யலாமுனு செவ்வாக்கிழமயே உட்காந்து யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க! அப்ப நான் சும்மா உக்காந்து அவங்க பேசறதயே கேட்டுக்கிட்டிருப்பேன். அத்தன பேர் சுத்தி இருந்தாலும் நான் மட்டும் தனியா இருக்கிற மாதிரி இருக்கும்!”

திங்கட்கிழமை காலை நீங்கள் ஸ்கூலுக்குப் போகிறீர்கள். உங்கள் நண்பர்களெல்லாம் சனி-ஞாயிறன்று எப்படி ஜாலியாகப் பொழுதைக் கழித்தார்கள் என்று கதைகதையாகச் சொல்கிறார்கள். அப்படிச் சொல்லிக்கொள்ள உங்களுக்கு எதுவுமே இல்லை என்று நினைக்கிறீர்களா? உங்களைத் தவிர இந்த உலகத்தில் எல்லாரும் ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்... என வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கிறார்கள், ஆனால் உங்களை மட்டும் உங்கள் அப்பா-அம்மா ஜாலியாக இருக்கவே விடுவதில்லை என நீங்கள் நினைக்கிறீர்களா? உதாரணத்திற்குச் சொன்னால், நீங்கள் ‘தீம் பார்க்கில்’ இருக்கிறீர்கள், ஆனால் எதிலும் விளையாட விடாமல் உங்கள் பெற்றோர் உங்களை தடுப்பது போல் உணருகிறார்களா? சரி, உங்கள் நண்பர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது ஜாலியாக இருக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். அப்படியென்றால், வர சனி-ஞாயிறன்று எப்படிப்பட்டப் பொழுதுபோக்குகளில் ஈடுபட நீங்கள் விரும்புகிறீர்கள்?

டான்ஸ்

பாட்டுக் கச்சேரி

சினிமா

பார்ட்டி

வேறு ஏதாவது ....

உங்களுக்குப் பொழுதுபோக்கு தேவைதான். (பிரசங்கி 3:1, 4) சொல்லப்போனால், உங்கள் இளமை காலத்தை நீங்கள் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் எனக் கடவுளும் விரும்புகிறார். (பிரசங்கி 11:9) உண்மையைச் சொன்னால், உங்கள் பெற்றோரும் அப்படித்தான் ஆசைப்படுகிறார்கள். இருந்தாலும், உங்கள் பெற்றோருக்கு இரண்டு நியாயமான கவலைகள் இருக்கலாம்: (1) நீங்கள் எப்படிப்பட்ட பொழுதுபோக்கில் ஈடுபட போகிறீர்கள்? (2) யாருடன் போகிறீர்கள்?

உங்கள் நண்பர்கள் உங்களை வெளியே போக கூப்பிடுகிறார்கள். ஆனால், உங்கள் பெற்றோர் அதற்குச் சம்மதிப்பார்களா என யோசிக்கிறீர்கள். இப்போது என்ன செய்வீர்கள்? எந்தவொரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பும் அதைப் பல கோணங்களில் யோசித்து பார்க்கும்படியும், அதிலுள்ள நல்லது கெட்டதை எடைபோட்டு பார்க்கும்படியும், பின்விளைவுகளைச் சிந்தித்து பார்க்கும்படியும் பைபிள் உங்களை ஊக்குவிக்கிறது. (உபாகமம் 32:29; நீதிமொழிகள் 7:6-23) இப்போது உங்கள் நண்பர்கள் உங்களை வெளியே போக கூப்பிட்ட விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் என்னென்ன கோணங்களில் யோசித்து பார்க்கலாம்?

1: கேட்காமலேயே போகலாம்.

நீங்கள் ஏன் இப்படி நினைக்கிறீர்கள்: உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது என்பதை உங்கள் நண்பர்களிடம் காட்டி அவர்களை அசத்த வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள். உங்கள் பெற்றோரைவிட உங்களுக்கு எல்லாம் தெரியும், அல்லது அவர்களுடைய பேச்சையெல்லாம் நீங்கள் பெரிதாக மதிப்பதில்லை என்பதைக் காட்ட நினைக்கிறீர்கள்.—நீதிமொழிகள் 15:5.

விளைவுகள்: நீங்கள் இப்படிச் செய்தால் உங்கள் நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நீங்கள் ஓர் ஏமாற்று பேர்வழி என்றுதானே நினைப்பார்கள். உங்கள் அப்பா-அம்மாவையே நீங்கள் ஏமாற்றுகிறீர்கள் என்றால் அவர்களையும் ஏமாற்றத் தயங்கமாட்டீர்கள் என்றல்லவா நினைப்பார்கள். அதுமட்டுமல்ல, நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் நண்பர்களோடு வெளியே போனீர்கள் என உங்கள் பெற்றோருக்குத் தெரியவந்தால், அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும் என்பதை யோசித்துப்பாருங்கள். அவர்கள் முன்பைவிட உங்களுக்கு இன்னும் அதிக கட்டுப்பாடு விதிக்கலாம். எனவே, அப்பா-அம்மாவிடம் கேட்காமல் வெளியே போவது முட்டாள்தனம்.—நீதிமொழிகள் 12:15.

2: கேட்கவும் வேண்டாம், போகவும் வேண்டாம்.

நீங்கள் ஏன் இப்படி நினைக்கிறீர்கள்: நண்பர்கள் கூப்பிடும் இடத்திற்கு போவது உங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என நினைக்கிறீர்கள். அல்லது உங்களோடு வரப்போகிற சிலருடைய நடத்தைச் சரியில்லை என யோசிப்பதால் போகவேண்டாம் என நினைக்கிறீர்கள். (1 கொரிந்தியர் 15:33; பிலிப்பியர் 4:8) இல்லாவிட்டால், உங்களுக்குப் போக ஆசைதான், ஆனால் உங்கள் பெற்றோரிடம் அனுமதி கேட்க உங்களுக்குத் தைரியம் இல்லை.

விளைவுகள்: அவர்களோடு போவது சரியில்லை என நினைத்து போகாமல் இருந்தீர்களென்றால், உங்கள் நண்பர்களுக்கு உங்களால் தயங்காமல் பதில் சொல்லமுடியும். ஆனால், பெற்றோரிடம் கேட்க பயந்துகொண்டு போகாமல் இருந்தீர்களென்றால், நீங்கள் வீட்டில் உட்கார்ந்து உங்களையே நொந்துகொள்வீர்கள். ‘சே, என்ன தவிர எல்லாரும் ஜாலியா இருக்காங்க’ என நினைத்து நினைத்து மனதுக்குள் குமுறுவீர்கள்.

3: கேட்டுத்தான் பார்க்கலாமே.

நீங்கள் ஏன் இப்படி நினைக்கிறீர்கள்: ஏனென்றால், உங்கள் பெற்றோருக்கு உங்கள்மீது அதிகாரம் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள், அவர்களுடைய பேச்சை மதிக்கிறீர்கள். (கொலோசெயர் 3:20) உங்கள் அப்பா-அம்மாவை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களிடம் சொல்லாமல் வெளியே போய் அவர்களுடைய மனதை நோகடிக்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள். (நீதிமொழிகள் 10:1) அதேசமயம், அவர்களிடம் அனுமதி கேட்க உங்களுக்கு நல்ல வாய்ப்பும் இருக்கிறது.

விளைவுகள்: நீங்கள் இப்படிச் செய்தால் உங்கள் பெற்றோரை நேசிக்கிறீர்கள்... மதிக்கிறீர்கள்... என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். நீங்கள் கேட்பது அவர்களுக்குச் சரியென பட்டால் உங்களுக்குப் பச்சைக் கொடி காட்டலாம்.

‘வேண்டாம்’ என்று பெற்றோர் சொல்வதற்கான காரணங்கள்

‘வேண்டாம்’ என்று உங்கள் பெற்றோர் சொன்னால் என்ன செய்வது? இதைக் கேட்டு நீங்கள் மனமொடிந்துபோகலாம். என்றாலும், அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டீர்கள் என்றால் நீங்கள் அந்தளவுக்கு வருத்தப்படமாட்டீர்கள். வேண்டாம் என்று அவர்கள் சொல்வதற்கு சிலபல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சிலவற்றை நாம் பார்க்கலாம்.

பெற்றோருக்கு அறிவும் அனுபவமும் இருக்கிறது. சில கடற்கரைகளில் கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள்; தனியாக நீச்சலடிப்பதைவிட அவர்களுடைய கண்காணிப்பின்கீழ் நீச்சலடிக்கத்தான் நீங்கள் ஆசைப்படுவீர்கள், இல்லையா? ஏனென்றால், நீங்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆபத்துகளைக் கவனிக்கவே மாட்டீர்கள். ஆனால், கண்காணிப்பாளர்கள் அதைத் தூரத்திலிருந்து கவனித்து உங்களை எச்சரிப்பார்கள்.

அதுபோலவே, உங்களைவிட அதிக அறிவும் அனுபவமும் உள்ள உங்கள் பெற்றோர் நீங்கள் கவனிக்காத ஆபத்துகளைக் கவனித்து உங்களை எச்சரிக்கலாம். கடற்கரையில் உள்ள கண்காணிப்பாளர்களைப் போலவே உங்கள் பெற்றோரும், உங்களுடைய சந்தோஷத்தைக் கெடுக்க நினைப்பதில்லை; ஆனால், நீங்கள் ஆபத்துகளில் சிக்கிக்கொண்டு உங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்ளக் கூடாது என்றுதான் நினைக்கிறார்கள்.

உங்கள்மீதுள்ள பாசமே. நீங்கள் எந்த ஆபத்திலும் சிக்கிக்கொள்ளாமல் பத்திரமாக இருக்க வேண்டும் என்றுதான் உங்கள் பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு சரி என்று படும்போது ‘சரி’ என்று சொல்கிறார்கள். ஆனால், வேண்டாம் என்று சொல்ல வேண்டியிருக்கும்போது ‘வேண்டாம்’ என்று சொல்கிறார்கள். உங்கள்மீது அன்பிருப்பதால்தான் அப்படிச் சொல்கிறார்கள். எதற்காவது நீங்கள் அவர்களிடம் அனுமதி கேட்டால், ‘நான் சரி என்று சொல்லிவிட்டால், அதனால் வருகிற பின்விளைவுகளைச் சந்திக்கத் தயாராய் இருக்கிறேனா?’ என்று முதலில் அவர்கள் தங்களையே கேட்டுக்கொள்கிறார்கள். நீங்கள் எந்த பிரச்சினையிலும் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தால்தான் ‘சரி’ என்று சொல்ல நினைப்பார்கள், பின்பு அதை உங்களிடம் சொல்வார்கள்.

முழு விவரமும் தெரியாவிட்டால். அன்பான பெற்றோர் எப்போதும் ஆபத்தை விலைக்கு வாங்க விரும்பமாட்டார்கள். நீங்கள் ஏன் கேட்கிறீர்கள், எதற்காக கேட்கிறீர்கள் என்று தெரியாதபோது, அல்லது முக்கியமான சில விவரங்களை நீங்கள் மறைக்கிறீர்கள் என்று நினைக்கும்போது, அவர்கள் அனுமதி அளிக்கத் தயங்குவார்கள்.

அவர்கள் ‘சரி’ என்று சொல்ல...

நான்கு முக்கியமான விஷயங்களை நீங்கள் மனதில் வைக்க வேண்டும்.

நேர்மை: உங்களையே நீங்கள் நேர்மையாகக் கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள்: ‘நான் ஏன் ஃபிரெண்ட்ஸுடன் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்? ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காகவா, அல்லது என் ஃபிரெண்ட்ஸ் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவா? இல்லையென்றால், எனக்கு ரொம்ப பிடிச்சவர்(ள்) அங்கே வருவார்(ள்) என்பதற்காகவா?’ உங்கள் பெற்றோரிடம் இதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். அவர்களும் உங்கள் வயதைத் தாண்டி வந்தவர்கள்தான், உங்களை அவர்கள் நன்கு புரிந்துகொள்வார்கள். நீங்கள் சொல்லாவிட்டாலும் உங்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் எப்படியாவது கண்டுபிடித்துவிடுவார்கள். உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள் என்றால் அவர்கள் உங்கள் நேர்மையை மதிப்பார்கள்; அதோடு, நீங்களும் அவர்கள் தருகிற ஞானமான ஆலோசனையிலிருந்து பயனடையலாம். (நீதிமொழிகள் 7:1, 2) ஆனால், நீங்கள் எதையாவது மறைத்தீர்கள் என்றால், உங்களை அவர்கள் நம்பமாட்டார்கள், உங்களுக்கு அனுமதி அளிப்பதும் சந்தேகம்தான்.

ஏற்ற நேரம்: உங்கள் பெற்றோர் வேலை முடிந்து களைப்பாக வீட்டுக்கு வரும்போதோ, வேறு ஏதாவது வேலையை மும்முரமாகச் செய்துகொண்டிருக்கும்போதோ அவர்களிடம் அனுமதி கேட்டு நச்சரிக்காதீர்கள். அவர்கள் ஆற அமர உட்கார்ந்திருக்கும் சமயத்தில் கேளுங்கள். அதற்கென்று கடைசி நிமிஷம் வரை தள்ளிப்போட்டு, பின்பு வந்து அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். அவசரப்பட்டு முடிவெடுக்க உங்கள் பெற்றோர் விரும்பாமல் இருக்கலாம்; அதனால் சீக்கிரம் கேளுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் ‘சரி’ என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது.

முழுமையான பதில் கொடுங்கள்: அவர்களுக்கு அறைகுறையான தகவல்களைக் கொடுக்காதீர்கள். எல்லா விவரங்களையும் சொல்லுங்கள். நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு ‘எனக்குத் தெரியாது’ என்று நீங்கள் பதில் சொல்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள்; அதுவும், ‘அங்கே யாரெல்லாம் இருப்பாங்க?’ ‘உங்ககூட பெரியவங்க யாராவது இருப்பாங்களா?’ ‘புரோகிராம் எப்ப முடியும்?’ போன்ற கேள்விக்கு நீங்கள் பொறுப்பாகப் பதில் சொல்லாவிட்டால் அவர்களுக்கு எரிச்சல் வரலாம்.

மனநிலை: பெற்றோரை எதிரிகள் போல் பார்க்காதீர்கள். நீங்களும் அவர்களும் ஒரு ‘டீம்’ போல் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்; ஏனென்றால், நீங்கள் எந்தத் தீர்மானம் எடுத்தாலும் அவர்களுடைய உதவி உங்களுக்குத் தேவைப்படும். அவர்களை நண்பர்களாக பார்க்க ஆரம்பித்தீர்கள் என்றால், அவர்கள் சொல்வதையெல்லாம் நீங்கள் எதிர்த்துக் கொண்டிருக்கமாட்டீர்கள், அவர்களும் உங்களுக்கு அதிக ஒத்துழைப்பு தருவார்கள். நீங்கள் அனுமதி கேட்டு அவர்கள் ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டால், மரியாதையுடன் அவர்களிடம், ‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’ எனக் கேளுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு பாட்டுக் கச்சேரிக்குப் போக அனுமதி கேட்கிறீர்கள், ஆனால் அவர்கள் ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டால், எதற்காக அப்படிச் சொல்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அந்த நிகழ்ச்சியை நடத்துகிறவர்களைப் பற்றி, அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்தைப் பற்றி, உங்களோடுகூட வருகிறவர்களைப் பற்றி, நுழைவு கட்டணத்தைப் பற்றி எல்லாம் நினைத்து ஒருவேளை அவர்கள் கவலைப்படலாம். ‘உங்களுக்கு என் மேல நம்பிக்கையே இல்ல,’ ‘எல்லாரும் போறாங்க, நான் மட்டும்தான் போல,’ ‘என் ஃபிரெண்டோட அப்பா-அம்மா எல்லாம் அனுப்புறாங்க, நீங்கதான் அனுப்பமாட்டேன்றீங்க’ என்றெல்லாம் சொல்லாதீர்கள். அவர்களுடைய தீர்மானத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டு, அதை மதிக்கும் அளவுக்கு உங்களுக்கு பக்குவம் இருக்கிறதென காட்டுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் உங்களை மதிப்பார்கள். அடுத்த முறை நீங்கள் எதற்காவது அனுமதி கேட்கும்போது அவர்கள் உங்களுக்கு ‘சரி’ என்று சொல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. (g11-E 02)

“இளைஞர் கேட்கின்றனர்” என்ற தொடரில் வெளியான மற்ற கட்டுரைகளை www.watchtower.org/ype என்ற வெப்சைட்டில் பாருங்கள்.

[அடிக்குறிப்பு]

^ பெயர் மாற்றப்பட்டுள்ளது.

[பக்கம் 13-ன் பெட்டி/படம்]

“என் அப்பா-அம்மா என்மேல ரொம்ப நம்பிக்கை வைச்சிருக்காங்க. ஏன்னா நான் எதையும் பொறுப்பா செய்வேன். என் ஃபிரெண்ட்ஸ் பத்தி என் அப்பா-அம்மாகிட்ட சொல்லுவேன், எதையும் மறைக்கமாட்டேன். நான் ஒரு பார்ட்டிக்கு போய் அங்க எனக்கு ஏதாவது பிடிக்கலனா நடுவில எழுந்திருச்சி வந்திடுவேன்.”

[படம்]

கிம்பர்லீ

[பக்கம் 14-ன் பெட்டி]

உங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்களேன்

இந்தக் கட்டுரையில் சிந்திக்கப்பட்ட விஷயத்தைக் குறித்து உங்கள் பெற்றோரின் கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அதற்கு ஒரே வழி, அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்வதுதான். சரியான சமயம் பார்த்து இதைப் பற்றிப் பேச்செடுங்கள். உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நீங்கள் ஜாலியாக இருப்பதைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் எனக் கேளுங்கள். அவர்களிடம் என்ன கேள்வி கேட்க நினைக்கிறீர்களோ அதைக் கீழே எழுதுங்கள்.

....

[பக்கம் 14-ன் படம்]

கடற்கரையில் கண்காணிப்பு வேலையில் இருப்பவர்களைப் போலவே உங்களுடைய பெற்றோராலும் வரப்போகும் ஆபத்தை முன்னதாகவே தெரிந்துகொண்டு உங்களை எச்சரிக்க முடியும்