Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துயரத்தில் துவண்டிருக்கிறீர்களா?

துயரத்தில் துவண்டிருக்கிறீர்களா?

துயரத்தில் துவண்டிருக்கிறீர்களா?

‘நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு [யெகோவா] சமீபமாயிருக்கிறார்.’—சங்கீதம் 34:18.

உங்கள் நேசத்துக்கும் பாசத்துக்கும் சொந்தமான ஒருவர் இறந்துபோனதை நினைத்து நீங்கள் வேதனைப்படுகிறீர்களா? அந்தச் சமயத்தில், பல்வேறு உணர்ச்சிகள் உங்களை அலைக்கழிக்கலாம்; நீங்கள் அதிர்ச்சியில் உறைந்துவிடலாம், அப்படியே இடிந்துவிடலாம், சோகத்தில் மூழ்கிவிடலாம், குற்றவுணர்ச்சியில் தவிக்கலாம், ஏன் சில சமயம் உங்கள்மீதே கோபம் கோபமாக வரலாம். ஆனால், எல்லாரும் ஒரே விதமாக துக்கப்படுவதில்லை. ஒருவேளை, இப்படிப்பட்ட எல்லா உணர்வுகளும் உங்களுக்கு வராமல் இருக்கலாம். அதோடு, மற்றவர்கள் துக்கப்படுகிற விதத்திற்கும், நீங்கள் துக்கப்படுகிற விதத்திற்கும் வித்தியாசம் இருக்கலாம். என்றாலும், துக்கத்தை உள்ளுக்குள்ளே பூட்டிவைக்காமல் கொட்டிவிட வேண்டுமென நீங்கள் நினைத்தால், அதில் தப்பே இல்லை.

“நன்றாக அழுது தீர்த்துவிடுங்கள்”

மருத்துவராக இருக்கும் எலோயீசா தன்னுடைய அம்மாவைப் பறிகொடுத்தார்; ஆனால், தன்னுடைய துக்கத்தையெல்லாம் அடக்கிக்கொள்ள முயன்றார். அவர் சொல்கிறார்: “ஆரம்பத்தில் நான் அழுதேன்; அதன்பிறகு, என் துக்கத்தை அடக்கிக்கொண்டே இருந்தேன். என்னிடம் வருகிற நோயாளி யாராவது இறந்துபோனால் எப்படி இருப்பேனோ அப்படியே இருந்தேன். அதனாலோ, என்னவோ என்னுடைய உடல்நிலை ரொம்பவே மோசமானது. பிரியமான ஒருவரை மரணத்தில் பறிகொடுத்துவிட்டவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: நன்றாக அழுது தீர்த்துவிடுங்கள். உங்களுடைய துக்கத்தையெல்லாம் கொட்டிவிடுங்கள். அப்போதுதான் உங்களுடைய மனம் லேசாகும்.”

ஆனால், நாட்கள் நகர நகர, ஒருவேளை நீங்கள் செஸல்யாவைப் போல் உணரலாம். இவருடைய கணவர் புற்றுநோயால் இறந்துவிட்டார். “சிலர் என்னிடம், ‘இன்னுமா நீ துக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறாய்’ என்று கேட்கும்போது எனக்குக் கஷ்டமாக இருக்கும். நான்தான் அளவுக்குமீறி துக்கப்படுகிறேனோ என எனக்குத் தோன்றும்” என்கிறார் அவர்.

ஒருவேளை நீங்கள் இப்படி நினைத்தால், இதை மனதில் வையுங்கள்: இப்படித்தான் துக்கப்பட வேண்டும் என்ற எந்தவொரு விதிமுறையும் இல்லை. இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவது சிலருக்கு ஓரளவு எளிதாக இருக்கலாம். சிலருக்கோ அது கஷ்டமாக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருவர் சீக்கிரமே சகஜ நிலைக்கு திரும்பிவிட வேண்டும் என்றில்லை. எனவே, நீங்களாகவே ஒரு “காலக்கெடு” வைத்துகொண்டு பழைய நிலைக்கு வந்துவிட வேண்டும் என நினைக்காதீர்கள். *

உங்களால் துக்கத்திலிருந்து மீளவே முடியாததுபோல் தோன்றுகிறதா? சதா சோகத்தில் மூழ்கியிருப்பதால் சக்தியே இல்லாததுபோல் உணருகிறீர்களா? உங்களுடைய நிலைமை முற்காலத்தில் வாழ்ந்த நீதிமானாகிய யாக்கோபின் நிலைமைக்கு ஒத்திருக்கிறது. தனது மகன் யோசேப்பு இறந்துவிட்டாரெனக் கேள்விப்பட்டபோது அவர், ‘எந்த ஆறுதலான வார்த்தைக்கும் செவிகொடுக்கவில்லை.’ (ஆதியாகமம் 37:35, பொது மொழிபெயர்ப்பு) நீங்களும் அவ்வாறே நடந்துகொண்டால், துக்கம் எனும் படுகுழியிலிருந்து மெதுமெதுவாக வெளியேற என்ன நடைமுறையான படிகளை நீங்கள் எடுக்கலாம்?

உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள். “சில சமயங்களில், நான் ரொம்பவே சோர்வாக இருப்பேன், ‘இதற்குமேல் என்னால் கொஞ்சம்கூட தாங்க முடியாது’ என நினைப்பேன்” என்கிறார் செஸல்யா. அவர் சொல்கிறபடி, துக்கத்தில் துவண்டிருப்பவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சக்கையாய் பிழியப்பட்டதுபோல உணரலாம். எனவே, நீங்கள் உங்களுடைய உடலைக் கவனித்துக்கொள்வது ரொம்பவே முக்கியம். நன்கு ஓய்வெடுங்கள், சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுங்கள்.

உண்மைதான், சாப்பிடுவதற்கோ, கடைக்குப் போய் பொருள்களை வாங்கி வருவதற்கோ, சமைப்பதற்கோ உங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், சத்துள்ள உணவுகளை நீங்கள் சாப்பிடாமல் இருந்தால், சீக்கிரத்தில் ஏதாவது வியாதி வந்துவிடலாம்; இதனால், உங்களுடைய மனவேதனை இன்னும் அதிகரிக்கலாம். எனவே, உடல்நிலை கெட்டுப் போகாமல் இருப்பதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாகவாவது சாப்பிட முயலுங்கள். *

முடிந்தால், ஏதாவது உடற்பயிற்சி செய்யுங்கள், நடைப்பயிற்சியாவது செய்யுங்கள். வீட்டுக்குள்ளே அடைந்துகிடக்காமல் வெளியே வர இது உங்களுக்கு உதவும். அதோடு, அளவான உடற்பயிற்சி செய்யும்போது நம் உடல், ‘என்டார்பின்ஸ்’ என்ற ஒரு ரசாயனத்தை மூளையில் சுரக்கிறது. உங்கள் மனபாரத்தைக் குறைக்க இது உதவுகிறது.

மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய துணையை நீங்கள் இழந்திருந்தால், மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்வது முக்கியம். ஒருவேளை, இதுவரை உங்கள் துணைதான் வீட்டுக்காரியங்கள் பலவற்றைக் கவனித்து வந்திருக்கலாம். உதாரணமாக, உங்கள் துணைதான் பண விஷயங்களையோ, வீட்டு வேலைகளையோ கவனித்து வந்திருந்தார் என்றால், இப்போது அதை எப்படிச் செய்வது எனத் தெரியாமல் நீங்கள் திணறிப் போய்விடலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், விவேகமான நண்பர்கள் தருகிற ஆலோசனைகள் உங்களுக்குப் பெரிதும் உதவலாம்.—நீதிமொழிகள் 25:11.

உண்மை நண்பன், ‘துன்ப காலத்தில் உதவப் பிறந்திருக்கிறான்’ என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:17, NW ) எனவே, நீங்கள் மற்றவர்களுக்குப் பாரமாகிவிடக் கூடாது என நினைத்துக்கொண்டு, உங்களையே தனிமைப்படுத்திக்கொள்ளாதீர்கள். மாறாக, மற்றவர்களுடன் நன்றாகப் பழகினால், துக்கமெனும் பெருங்கடலைக் கடப்பதற்கு அவர்கள் உங்களுக்குப் பாலமாக இருப்பார்கள். இளம்பெண் சாலீ தன் அம்மாவைப் பறிகொடுத்த பிறகு, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் மற்றவர்களுடன் பழகியதுதான் ரொம்பத் தெம்பளித்ததாக உணர்ந்தாள். அவள் சொல்கிறாள்: “என்னுடைய நண்பர்கள் பொழுதுபோக்கு, விருந்து போன்ற எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் என்னையும் அதில் சேர்த்துக்கொண்டார்கள். தனிமை எனும் சிறையிலிருந்து வெளியேற இதுதான் எனக்கு ரொம்பவே உதவியது. யாராவது என்னிடம், ‘உன்னோட அம்மா இறந்த துக்கத்தை உன்னால சமாளிக்க முடிகிறதா?’ என்று கேட்கும்போது எனக்கு ஆறுதலாக இருக்கும். என்னுடைய அம்மாவைப் பற்றிப் பேசுவதுதான் மனக்காயத்துக்கு மருந்தாக இருக்கிறது.”

நினைவுகளைப் பசுமையாய் வைத்திருங்கள். உங்களுடைய அன்புக்குரியவரோடு நீங்கள் செலவிட்ட சந்தோஷமான தருணங்களை அடிக்கடி நினைவுபடுத்திப் பாருங்கள்; அவர்களுடைய போட்டோக்களை எடுத்துப் பாருங்கள். உண்மைதான் இப்படியெல்லாம் செய்யும்போது, ஆரம்பத்தில் மனதிற்கு வேதனையாக இருக்கும். ஆனால், காலப்போக்கில், அது காயப்பட்ட உங்கள் மனதை மயிலிறகாய் வருடும், முள்ளாய் குத்தாது.

டைரி எழுதும் பழக்கத்தைக்கூட நீங்கள் வைத்துக்கொள்ளலாம். அதில் அவரைப் பற்றிய இனிமையான நினைவுகளை நீங்கள் எழுதிவைத்துக்கொள்ளலாம்; அவர் உயிரோடு இருந்தபோது எதையெல்லாம் சொல்ல ஆசைப்பட்டீர்களோ அதையெல்லாம் எழுதிவைக்கலாம். நீங்கள் எழுதியதை எடுத்து வாசித்துப் பார்த்தீர்கள் என்றால், உங்களுடைய உணர்வுகளை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். இப்படி எழுதுவது, உங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குச் சிறந்த வடிகாலாக இருக்கும்.

ஞாபகார்த்தப் பொருள்களை வைத்திருப்பது பற்றி என்ன சொல்லலாம்? இந்த விஷயத்தில் அபிப்பிராயங்கள் வேறுபடுகின்றன; இதில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஏனென்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக துக்கப்படுகிறார்கள். இறந்தவருடைய பொருள்களை வைத்திருப்பது மனதை இன்னும் ரணமாக்குமெனச் சிலர் நினைக்கிறார்கள்; சிலரோ அப்படி வைத்திருப்பது மனக்காயத்தை ஆற்றுமென நினைக்கிறார்கள். மேலே பார்த்த சாலீ இப்படிச் சொல்கிறாள்: “என்னோட அம்மா உபயோகித்த பல பொருள்களை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். துக்கத்தைச் சமாளிக்க அது எனக்கு ரொம்பவே உதவுகிறது.” *

‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளைச்’ சார்ந்திருங்கள். ‘யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்’ என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 55:22) ஜெபம் என்பது ஏதோ தற்சமயத்துக்கு உங்கள் மனதுக்கு ஆசுவாசம் அளிப்பதில்லை. உங்கள் மனக்குமுறல்களைக் கடவுளிடம் கொட்டும் போதெல்லாம், யெகோவா உங்களுக்கு ஆறுதலின் ஊற்றாக இருப்பார்; ஏனென்றால், ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளாகிய அவர் எல்லா உபத்திரவங்களிலும் [நமக்கு] ஆறுதல் அளிக்கிறார்.’—2 கொரிந்தியர் 1:3, 4.

கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் அளவில்லா ஆறுதல் அளிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “நீதிமான்களும் அநீதிமான்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று கடவுளிடம் . . . நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 24:15) இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்கள் என்ற பைபிள் நம்பிக்கையைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது உங்களுடைய அன்புக்குரியவரின் இழப்பைச் சமாளிக்க உங்களுக்குப் பெருமளவு உதவலாம். * லாரன் என்ற பெண்ணிற்கு இந்த நம்பிக்கைதான் கைகொடுத்தது. தன் டீன்-ஏஜ் தம்பியை ஒரு விபத்தில் பறிகொடுத்த அவர் சொல்கிறார்: “எனக்கு எவ்வளவு வேதனையாய் இருந்தாலும்சரி, பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பிப்பேன். ஒரு வசனத்தையாவது வாசிப்பேன். என்னுடைய மனதுக்கு இதமளித்த வசனங்களைத் தேடித்தேடி, அதைத் திரும்பத் திரும்ப வாசிப்பேன். உதாரணமாக, லாசரு இறந்த பிறகு மார்த்தாளிடம் இயேசு, ‘உன் சகோதரன் எழுந்திருப்பான்’ என்று சொன்ன வார்த்தைகள் எனக்கு ஆறுதலைத் தந்தது.”—யோவான் 11:23.

“சோகத்திலேயே மூழ்கிவிடாதீர்கள்”

துக்கத்தைச் சமாளிப்பது கஷ்டம்தான் என்றாலும், நீங்கள் அதைச் சமாளிக்க எடுக்கிற முயற்சிகள் வீணல்ல, அப்படியே முடங்கிவிடாமல், வாழ்க்கையைத் தொடர அது உங்களுக்கு உதவும். நீங்கள் சகஜ நிலைக்குத் திரும்பினால், அது உங்களுடைய அன்புக்குரியவருக்குத் துரோகம் செய்வதாகவோ, அவரை மறந்துவிட்டதாகவோ இருக்குமென நினைத்து குற்றவுணர்ச்சியால் தவிக்காதீர்கள். எவ்வளவு காலமானாலும்சரி, உங்களுடைய பிரியத்துக்குரியவரை உங்களால் மறக்கவே முடியாது என்பதுதான் உண்மை. சில சமயம், உங்களுடைய மனதில் அவரைப் பற்றிய நினைவலைகள் அலைமோதலாம் என்றாலும், போகப் போக அந்த நினைவுகள் உங்களுக்கு அதிக வேதனையூட்டாது.

அதோடு, சோகமும் சந்தோஷமும் கலந்த நினைவுகளை நீங்களும் ஆசை ஆசையாய் அசைபோட்டுப் பார்ப்பீர்கள். உதாரணமாக, ஆஷ்லீ சொல்கிறாள்: “என் அம்மா சாவதற்கு முந்தின நாள் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவருடைய உடல்நிலை ஓரளவு தேறிவிட்டது போலத் தெரிந்தது. பல நாட்கள் கழித்து அன்றைக்குத்தான் அவர் கட்டிலைவிட்டு கீழே இறங்கியிருந்தார். என் அக்கா அவருக்குத் தலைவாரிக் கொண்டிருந்தபோது ஏதோ சொல்லி நாங்கள் எல்லாரும் சிரித்துக்கொண்டு இருந்தோம். ரொம்ப நாளைக்கு பின்பு அன்றைக்குத்தான் அவர் முகத்தில் சிரிப்பைப் பார்த்தேன். தன் மகள்களோடு இருக்கிறோம் என்ற சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.”

உங்களுடைய நேசத்துக்குரியவரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல நல்ல விஷயங்களையும்கூட யோசித்துப் பார்க்கலாம். உதாரணமாக, சாலீ சொல்வதைக் கேளுங்கள்: “என்னோட அம்மா சொல்லிக்கொடுத்தமாதிரி யாராலும் சொல்லிக்கொடுக்க முடியாது. அவர் எங்களுக்கு நல்ல நல்ல புத்திமதிகள் சொல்வார்; ஆனால் கேட்கிறதற்கு அது புத்திமதி மாதிரியே இருக்காது, அவ்வளவு அன்பாகச் சொல்வார். நல்ல தீர்மானங்கள் எடுக்க எனக்குக் கற்றுக்கொடுத்தார்; அவரோ, அப்பாவோ சொன்னதை அல்ல, நானே யோசித்து சொந்தமாக தீர்மானம் எடுக்க கற்றுக்கொடுத்தார்.”

உங்களுடைய பிரியத்துக்குரியவரைப் பற்றிய நினைவுகளே, வாழ்க்கைப் பயணத்தைத் தொடர உங்களுக்கு உதவியாக இருக்கும். அலெக்ஸ் என்ற இளைஞனுடைய விஷயத்தில் அதுதான் உண்மையாக இருந்தது. அவன் சொல்கிறான்: “என்னுடைய அப்பா இறந்த பின்பு, அவர் சொல்லிக்கொடுத்த மாதிரியே வாழத் தீர்மானித்தேன். ஆமாம், அவர் சொன்ன மாதிரியே வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழத் தீர்மானித்தேன். அப்பாவையோ அம்மாவையோ இழந்தவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்: உங்களால் ஒருபோதும் அந்தத் துக்கத்திலிருந்து வெளியே வரமுடியாது, ஆனால் அந்தத் துக்கத்திலேயே மூழ்கிவிடாதீர்கள். நன்றாக புலம்பி, அழுது தீர்த்துவிடுங்கள். மிச்சமிருக்கிற வாழ்க்கையை நீங்கள் இன்னும் வாழ வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.” (g11-E 04)

[அடிக்குறிப்புகள்]

^ இந்தச் சமயத்தில், வீட்டை மாற்றுவது, மறுமணம் செய்துகொள்வது போன்ற முடிவுகளை அவசரப்பட்டு எடுக்காதீர்கள். தற்போதைய சூழ்நிலைமைக்கு ஏற்றாற்போல வாழ்வதற்குப் பழகிய பின்பு மட்டுமே இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்.

^ உங்களுடைய சோகத்தை ஓரளவு மறக்க மதுபானம் உதவினாலும், அது கொஞ்ச நேரத்திற்குத்தான். காலப்போக்கில், அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் போய்விடும், அதோடு நீங்கள் அதற்கு அடிமையாகிவிடுவீர்கள்.

^ ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமாக துக்கப்படுவதால், நண்பர்களும் உறவினர்களும் இந்த விஷயத்தில் தங்களுடைய சொந்தக் கருத்துக்களை ஒருவர்மீது திணிக்கக் கூடாது.—கலாத்தியர் 6:2, 5.

^ இறந்தவர்களின் நிலைமையையும் உயிர்த்தெழுதலைப் பற்றிக் கடவுள் தந்துள்ள வாக்குறுதியையும் குறித்து அறிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 6 மற்றும் 7-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது.

[பக்கம் 31-ன் சிறுகுறிப்பு]

“எனக்கு எவ்வளவு வேதனையாய் இருந்தாலும்சரி, பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பிப்பேன். ஒரு வசனத்தையாவது வாசிப்பேன்”—லாரன்

[பக்கம் 30-ன் பெட்டி/படம்]

குற்றவுணர்வைச் சமாளித்தல்

நீங்கள் கொஞ்சம் அசட்டையாக இருந்ததால்தான் உங்கள் அன்பானவர் இறந்துவிட்டார் என்ற குற்றவுணர்ச்சி ஒருவேளை உங்களை வாட்டலாம். சில சமயம் இது உண்மையாகவும் இருக்கலாம், அல்லது கற்பனையாகவும் இருக்கலாம்; எப்படியானாலும்சரி, அது இயல்பானதுதான், துக்கத்தைச் சமாளிக்க அது உங்களுக்கு உதவியாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட உணர்ச்சிகளை உங்களுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் எந்தளவு குற்றவுணர்ச்சியால் தவிக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகப் பேசும்போது உங்கள் மனம் லேசாகலாம்.

என்றாலும், நம்முடைய அன்புக்குரியவரை நாம் எவ்வளவு அதிகமாக நேசித்தாலும் சரி, அவருடைய மரணத்தை நம்மால் நிறுத்த முடியாது, ‘எதிர்பாராத வேளைகளில் நேரிடுகிற அசம்பாவிதங்களிலிருந்து’ அவரை நம்மால் காக்கவும் முடியாது. (பிரசங்கி 9:11, NW) அதோடு, நிச்சயம் உங்களுக்குத் தப்பான உள்நோக்கம் இருந்திருக்காது. உதாரணமாக, உங்களுடைய அன்புக்குரியவரை டாக்டரிடம் கொண்டுபோக கொஞ்சம் தாமதமாகிவிட்டது என வைத்துக்கொள்ளுங்கள்; அவர் நோய்வாய்ப்பட்டு செத்துப்போகட்டும் என நீங்கள் நினைத்ததால்தான், அப்படிச் செய்தீர்களா? நிச்சயமாகவே இல்லை! அப்படியானால், ‘அவருடைய சாவுக்கு நான்தான் காரணம்’ என நினைத்து நீங்கள் குற்றவுணர்ச்சி அடைய வேண்டிய அவசியமும் இல்லை.

ஒரு தாய் தன்னுடைய மகள் ஒரு கார் விபத்தில் இறந்தபிறகு குற்றவுணர்ச்சியால் தவித்தாலும், பின்பு அதைச் சமாளிப்பதற்குக் கற்றுக்கொண்டார். அவர் சொல்கிறார்: “அவளை ஏன்தான் வெளியே அனுப்பினேனோ என்று நினைத்து நினைத்து குற்றவுணர்ச்சியால் தவித்தேன். ஆனால் அப்படி நினைப்பது முட்டாள்தனம் என்று எனக்குப் போகப் போக புரிந்தது. அவளுடைய அப்பாவோடு வெளியே போக அவளை அனுப்பியதில் தப்பு ஒன்றும் இல்லை. அது தற்செயலாக நடந்த ஒரு பயங்கரமான விபத்துதான்.”

‘நான் என்னென்னவோ சொல்ல வேண்டுமென நினைத்தேன், செய்ய வேண்டுமென நினைத்தேன்’ என்பதாக நீங்கள் சொல்லலாம். உண்மைதான், நாம் யாராவது ஒரு பரிபூரணமான அப்பாவாகவோ அம்மாவாகவோ பிள்ளையாகவோ இருக்கிறோம் எனச் சொல்ல முடியுமா? பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது: “நாம் எல்லாரும் பலமுறை தவறு செய்கிறோம். பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்.” (யாக்கோபு 3:2; ரோமர் 5:12) ஆகவே, நீங்கள் பரிபூரணராக இல்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். “நான் மட்டும் இதைச் செய்திருந்தால் அல்லது அதைச் செய்திருந்தால்” என்று எப்போதும் யோசித்துக்கொண்டே இருப்பது எதையும் மாற்றிவிடாது. ஆனால், அது நீங்கள் சகஜ நிலைக்குத் திரும்புவதை தாமதப்படுத்தலாம். *

[அடிக்குறிப்பு]

^ நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்... என்ற சிற்றேட்டைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது.

[பக்கம் 29-ன் படம்]

சில சமயம், துக்கத்திலிருக்கிற வயதான பெற்றோர் ஒருவர், தன் வளர்ந்த பிள்ளைக்கு ஆறுதல் சொல்லலாம்

[பக்கம் 32-ன் படங்கள்]

உங்களுடைய அன்புக்குரியவர் இறந்த துக்கத்தைச் சமாளிக்க டைரி எழுதலாம், போட்டோக்களைப் பார்க்கலாம், மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ளலாம்