Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்பது உண்மையா?

கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்பது உண்மையா?

பைபிளின் கருத்து

கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்பது உண்மையா?

கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று அநேகர் நம்புகிறார்கள். ஞானமுள்ள சாலொமோன் ராஜா யெகோவா தேவனிடம் ஜெபம் செய்தபோது: “பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக” என்றார். (1 இராஜாக்கள் 8:30, 39) பைபிள் சொல்கிறபடி யெகோவா தேவன் ஓர் இடத்தில் வசிக்கிறார். அந்த இடத்தை ‘பரலோகம்’ என்று சாலொமோன் அழைத்தார். ஆனால், பரலோகம் என்றால் என்ன?

பரலோகம் என்பது வானத்தைக் குறிப்பதில்லை. பைபிளின் மூல மொழியில் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த இரண்டிற்கும் இடையே அர்த்தம் வேறுபடுகிறது. வானம் என்பது பூமியைச் சுற்றி அமைந்துள்ள வானவெளியைக் குறிக்கிறது. பரலோகம் என்பது கடவுள் வசிக்கும் இடத்தைக் குறிக்கிறது. (ஆதியாகமம் 2:1, 4) என்றாலும், வானம், பூமி... என எல்லாவற்றையும் கடவுளே படைத்திருப்பதால் அவர் வசிக்கும் இடம், இவை எல்லாவற்றிற்கும் முன்பே இருந்திருக்க வேண்டும். அப்படியென்றால், கடவுள் வசிக்கும் இடம் இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டது என்பது தெளிவாகிறது. எனவே, கடவுள் வசிக்கும் இடத்தை பரலோகம் என்று பைபிள் சொல்லும்போது அது வானத்தையோ விண்வெளியையோ குறிப்பதில்லை. ஆனால், கடவுளும் அவருடைய காணமுடியாத படைப்புகளும் உள்ள இடத்தைக் குறிக்கிறது.

மலைக்கவைக்கும் தரிசனம்!

யெகோவா வசிக்கும் இடத்தைப் பற்றிய தரிசனம் அப்போஸ்தலன் யோவானுக்குக் கிடைத்தது. அவர் பார்த்த அந்தப் பிரம்மாண்டமான காட்சி பைபிளில் பதிவாகியுள்ளது. அதில் பரலோகத்தின் கதவு திறந்திருப்பதை அவர் கண்டார். “இங்கே ஏறி வா” என்ற ஒரு குரலையும் கேட்டார்.—வெளிப்படுத்துதல் 4:1.

அதன்பிறகு, அந்தத் தரிசனத்தில் யெகோவாவின் தோற்றத்தைப் பார்த்து அவர் அப்படியே மலைத்துப்போனார். அவர் பார்த்ததை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்: “பரலோகத்தில் ஒரு சிம்மாசனம் இருந்தது; அந்தச் சிம்மாசனத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருடைய தோற்றம் சூரியகாந்தக்கல் போலவும், விலைமதிப்புள்ள சிவப்புக்கல் போலவும் இருந்தது; சிம்மாசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல் இருந்தது. . . . அந்தச் சிம்மாசனத்திலிருந்து மின்னல்களும் குரலோசைகளும் இடிமுழக்கங்களும் வெளிப்பட்டன; . . . மேலும், சிம்மாசனத்திற்கு முன்பாகப் பளிங்கு போன்ற கண்ணாடிக் கடல் இருந்தது.”—வெளிப்படுத்துதல் 4:2-6.

இது, கண்ணைக் கொள்ளைக்கொள்ளும் யெகோவாவின் அழகையும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவருடைய மகிமையையும் பற்றிய தத்ரூபமான வர்ணனை. இதில், அவருடைய சிம்மாசனத்தைச் சுற்றியுள்ள சூழலைக் கொஞ்சம் கவனியுங்கள். அந்த வானவில், அங்கே அமைதியும் சமாதானமும் நிறைந்திருப்பதைப் படம்பிடித்து காட்டுகிறது. மின்னல்களும் குரலோசைகளும் இடிமுழக்கங்களும் கடவுளுடைய வல்லமையைப் பறைசாற்றுகின்றன. பளிங்கு போன்ற கண்ணாடிக் கடல், அவர் முன்னிலையில் இருப்பவர்கள் அவருடைய அங்கிகாரத்தைப் பெற்று தூய்மையாய் இருப்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது.

இவையெல்லாம் அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், இவற்றிலிருந்து கடவுளுடைய இருப்பிடத்தைப் பற்றி நம்மால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. பரலோகத்தில் எல்லாம் அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதையே இது காட்டுகிறது. அங்கே குழப்பம் என்ற வார்த்தைக்கே இடமில்லை.

எங்கும் எப்போதும் இருக்கிறாரா?

யெகோவாவுக்கு ஓர் இருப்பிடம் இருக்கிறது என்பதிலிருந்து அவர் எங்கும் எப்போதும் நிறைந்திருப்பதில்லை என்பது தெளிவாகிறது. அப்படியென்றால், எந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று அவரால் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? (2 நாளாகமம் 6:39) அதற்கு அவர் பயன்படுத்துகிற ஒரு வழி, அவருடைய சக்தி. சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “உம்முடைய ஆவிக்கு [அதாவது, சக்திக்கு] மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.”—சங்கீதம் 139:7-10.

கடவுளுடைய சக்திக்கு எந்தளவு ஆற்றல் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள சூரியனின் உதாரணத்தைக் கவனியுங்கள். சூரியன் ஓர் இடத்தில்தான் இருக்கிறது. என்றாலும், அதன் கதிர்கள் பூமியின் கடைக்கோடிவரை பரந்து விரிகிறது. அதுபோலவே, யெகோவா தேவனும் ஓர் இடத்தில்தான் வசிக்கிறார். இருந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் அவருடைய விருப்பத்தை அவரால் நிறைவேற்ற முடியும். அதோடு, தம்முடைய சக்தியைப் பயன்படுத்தி எந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று அவரால் தெரிந்துகொள்ளவும் முடியும். அதனால்தான், 2 நாளாகமம் 16:9 இவ்வாறு சொல்கிறது: “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.”

அதுமட்டுமல்ல, கடவுளுடைய அதிகாரத்தின்கீழ் ஏராளமான தேவதூதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் லட்சக்கணக்கில், சொல்லப்போனால் கோடிக்கணக்கில், இருக்கலாம் என்று பைபிள் சொல்கிறது. (தானியேல் 7:10; வெளிப்படுத்துதல் 5:11) அந்தத் தேவதூதர்கள் பலமுறை கடவுளுடைய பிரதிநிதிகளாக இந்தப் பூமிக்கு வந்தது, மனிதர்களிடம் பேசியது, அதைப் பற்றி கடவுளிடம் தெரிவித்தது... பற்றிய பதிவுகள் பைபிளில் நிறைய உள்ளன. உதாரணத்திற்கு, ஆபிரகாம் வாழ்ந்த சமயத்தில், சோதோம் கொமோராவின் அக்கிரமங்களைப் பற்றிய கூக்குரலை விசாரிப்பதற்காக தேவதூதர்கள் அங்கு வந்தார்கள். அவர்கள் கடவுளிடம் கொடுத்த அறிக்கையை வைத்து அவர் அந்த நகரங்களை அழிக்கத் தீர்மானித்தார்.—ஆதியாகமம் 18:20, 21, 33; 19:1, 13.

எனவே, யெகோவா தேவன் எல்லா இடத்திலும் நிறைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. அவருடைய சக்தியின் மூலமும் தூதர்கள் மூலமும் இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் என்ன நடக்கிறது என்பதை அவரால் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.

நம்முடைய படைப்பாளரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள பைபிள் நமக்குப் பெரிதும் உதவுகிறது. பைபிளிலிருந்து அவரைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்? அவர் பரலோகத்தில், இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஓர் இடத்தில் இருக்கிறார். அவரோடுகூட கோடானுகோடி தேவதூதர்கள் இருக்கிறார்கள். அவர் இருக்கும் இடத்தில் அமைதியும் தூய்மையும் குடிகொண்டுள்ளது, வல்லமை நிறைந்திருக்கிறது. விரைவில், பரலோகத்தில் நிலவுகிற சமாதான நிலைமையை யெகோவா தேவன் இந்தப் பூமியிலும் கொண்டுவருவார், ஆம், அதை ஏற்ற சமயத்தில் கொண்டுவருவார் என்று பைபிள் வாக்களிக்கிறது.—மத்தேயு 6:10. (g11-E 04)

உங்கள் பதில்?

● கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறாரா?—1 இராஜாக்கள் 8:30, 39.

● கடவுளுடைய சக்தியின் ஆற்றல் எந்தளவுக்கு இருக்கிறது?—சங்கீதம் 139:7-10.

[பக்கம் 27-ன் சிறுகுறிப்பு]

சூரியன் ஓர் இடத்தில்தான் இருக்கிறது. என்றாலும், அதன் கதிர்கள் பூமியின் கடைக்கோடிவரை பரந்து விரிகிறது. அதுபோலவே, யெகோவா தேவனும் ஓர் இடத்தில்தான் வசிக்கிறார். இருந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் அவருடைய சக்தியைப் பயன்படுத்தி என்ன நடக்கிறது என்று அவரால் தெரிந்துகொள்ள முடியும்