Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உடலும் உள்ளமும் நலம்பெற...

உடலும் உள்ளமும் நலம்பெற...

உடலும் உள்ளமும் நலம்பெற...

“மனதில் சமாதானம் உள்ள ஒருவன் உடலிலும் ஆரோக்கியமாக இருப்பான்.”—நீதிமொழிகள் 14:30, ஈஸி டு ரீட் வர்ஷன்.

“மனமகிழ்ச்சியே நல்ல மருந்தாம்.”—நீதிமொழிகள் 17:22, திருத்திய மொழிபெயர்ப்பு.

● எளிமையான... முத்தான... இந்த வார்த்தைகளை வடித்தவர் இஸ்ரவேல் நாட்டை ஆண்ட சாலொமோன் ராஜா. அவர் இந்த வார்த்தைகளை எழுதி கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், அவை உண்மைதானா? நவீன மருத்துவம் இதைப் பற்றி என்ன சொல்கிறது? கேட்போமா...

அமைதியான மனதுக்கும் கோபத்தில் கொந்தளிக்கும் மனதுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி ஜர்னல் ஆஃப் த அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஒரு கருத்து சொல்கிறது: “கோபம், குரோதம் மற்றும் இருதய ரத்தக்குழாய் நோய் [coronary heart disease] ஆகியவற்றுக்கு இடையே மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. . . . இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கவும் இந்நோய் வராமல் தடுக்கவும் . . . மருந்துமாத்திரையோ, வைத்தியமோ மட்டுமே போதாது. கோபத்தையும் குரோதத்தையும் கட்டுப்படுத்த மனோதத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.” சுருக்கமாகச் சொன்னால், மன அமைதி ஆரோக்கியத்தின் ஆணிவேர். என்ன, பைபிள் சொல்வது உண்மைதானே?

அதேபோல், மனம் சந்தோஷமாக இருந்தாலும் பலன்கள் ஏராளம். பிபிஸி செய்தி அறிக்கையில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி டாக்டர் டெரக் காக்ஸ் இப்படிச் சொன்னார்: “சந்தோஷமாக இருப்பவர்களைவிட சந்தோஷமாக இல்லாதவர்களுக்குப் பிற்காலத்தில் அதிக நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.” அதே செய்தி அறிக்கையில் வந்த இன்னொரு தகவல்: “இருதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு எதிரான ஒரு பெரிய கவசம் சந்தோஷமான மனம் என்றே சொல்லலாம்.”

சாலொமோன் ராஜா அன்றே சொன்ன உண்மையை மனிதர்கள் இன்றுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியானால், சாலொமோனுக்கும் பைபிளின் மற்ற எழுத்தாளர்களுக்கும் இந்தளவு ஞானம் எங்கிருந்து கிடைத்தது? “தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும் . . . கொடுத்தார்.” (1 இராஜாக்கள் 4:29) அவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே அந்த ஞானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் அதை எழுதி வைக்க வழி செய்தார். அதுவும், முழுக்க முழுக்க இலவசமாக!

அந்த ஞானத்தால் உங்கள் மனதையும் நிரப்பிக்கொள்ள ஆசையா? அப்படியானால், தினமும் பைபிள் வாசிப்பதை உங்கள் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அப்படிச் செய்த லட்சக்கணக்கானோர் நன்மை அடைந்திருக்கிறார்கள்; பின்வரும் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதைத் தங்கள் வாழ்க்கையில் ருசித்திருக்கிறார்கள்: “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.” (நீதிமொழிகள் 2:10, 11) இதைப் படிப்பதே மனதுக்கு மருந்தாய் இருக்கிறது, அல்லவா? (g11-E 08)