Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோரின் அனுபவ வார்த்தைகள் 1

பெற்றோரின் அனுபவ வார்த்தைகள் 1

பெற்றோரின் அனுபவ வார்த்தைகள் 1

உங்கள் பிள்ளைகள் இன்னும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கவில்லையா? அப்படியென்றால், பிள்ளைகள் அடிக்கும் லூட்டியைச் சமாளிக்க முடியாமல் நீங்கள் திணறிக்கொண்டிருக்கலாம். உதாரணமாக, அடம்பிடிக்கிற குழந்தையை எப்படிச் சமாளிப்பது? சரி எது, தவறு எது என எப்படிக் கற்றுக்கொடுப்பது? ஒரேயடியாகச் செல்லம், ஒரேயடியாகத் தண்டனை என இரண்டு எல்லைக்குப் போகாமல் இருப்பது எப்படி? சில பெற்றோர் கொடுக்கும் டிப்ஸைக் கேட்போமா...

அடம்பிடித்தால்

“இரண்டு வயசு குழந்தைகளைச் சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டம்; அவங்க கேட்டதெல்லாம் கிடைக்கனும்னு நினைப்பாங்க. எங்க மகனும் அப்படித்தான் இருந்தான். அவன் கேட்டது கிடைக்கலனா, கையில் கிடைச்சதை எல்லாம் தூக்கி எறிவான். அவன்தான் எங்களோட முதல் குழந்தை. அதனால், அவனை எப்படிச் சமாளிக்கிறதுனே தெரியல. ‘இந்த வயசுல குழந்தைங்க இப்படித்தான் இருப்பாங்க’னு மத்த பெற்றோர் எங்கள சமாதானப்படுத்தினாங்க. இருந்தாலும், எங்களுக்கு கவலையாத்தான் இருந்தது.”—சூசன், கென்யா.

“எங்க இரண்டு வயசு பொண்ணு, தரையில விழுந்து உருளுவா, காட்டுக் கூச்சல் போடுவா, ‘ஓ’னு ஒப்பாரி வைப்பா, கால உதைச்சுகிட்டு அழுவா. . . . அத பார்த்தா எங்களுக்கு கோபம் கோபமா வரும். அந்தச் சமயத்தில அவகிட்ட உக்காந்து பேசறதெல்லாம் சரிப்பட்டு வராது. அதனால நாங்க அவள, அவ ரூமுக்கு போக சொல்வோம், ‘உன் கோபம் எல்லாம் தீர்ந்த பிறகு, நீ வெளியே வா, நாம அப்ப பேசலாம்’னு சொல்வோம். அவ அமைதியான பிறகு, நானோ அவரோ அவ ரூமுக்கு போய், அவ செஞ்சது ஏன் சரியில்லனு அவளுக்குப் புரிய வைப்போம். இப்படிச் செஞ்சது நல்ல பலன் தந்தது. ஒருசமயம் அவ கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்டு ஜெபம் செய்ததகூட கேட்டோம். போகப் போக, இப்படியெல்லாம் பண்றத அவ குறைச்சுகிட்டா, அப்புறம் சுத்தமா நிறுத்திட்டா.”—யோலான்டா, ஸ்பெயின்.

“சின்னக் குழந்தைங்க, பெற்றோரை இணங்க வைக்க முடிஞ்சவரைக்கும் முயற்சி பண்ணுவாங்க. முதல்ல ‘வேண்டாம்’னு சொல்லிட்டு, பின்னாடி ‘சரி’னு சொன்னோம்னா, குழந்தை குழம்பிப் போயிடும். குழந்தைங்க என்னதான் கத்தி கூச்சல் போட்டாலும், நாம உறுதியா இருக்கனும், சொன்ன வார்த்தைய மாத்தாம இருக்கனும்னு நாங்க தெரிஞ்சுகிட்டோம்; கத்திக் கூச்சல் போடறதுல எந்தப் பிரயோஜனமும் இல்லனு எங்க பிள்ளைகளும் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுகிட்டாங்க.”—நீல், பிரிட்டன்.

கண்டிப்பு

“ஐந்து வயதுக்குக் கீழே இருக்கிற குழந்தைங்க, நாம சொல்றத காதுல வாங்குறாங்களா, இல்லையானு தெரிஞ்சுக்கிறது கஷ்டம். அதனால, அவங்ககிட்ட ஒரு விஷயத்த திரும்பத் திரும்ப சொல்றது முக்கியம். அதை, ஆயிரம் தடவ சொன்னாலும் தப்பில்ல, சொல்லிட்டே இருங்க. உங்களுடைய சைகையிலும், குரல்லயும் உறுதிய காட்டுங்க.” —செர்ஷ், பிரான்ஸ்.

“எங்க நாலு பிள்ளைகளையும் நாங்க ஒரே மாதிரிதான் வளர்த்தோம். ஆனா, நாலு பேரும் நாலு விதமா இருந்தாங்க. ஒருத்தி ஏதாவது தப்பு பண்ணிட்டு, நாங்க திட்டுவோமோனு பயந்து அழுவா. இன்னொருத்தி என்ன செஞ்சு எங்கள மசிய வைக்கலாம்னு பார்ப்பா. சில நேரத்தில, முறைச்சு பார்த்தாலே போதும், இல்லன்னா, அதட்டினாலே போதும். ஆனா சில நேரத்தில, ஏதாவது ஒரு தண்டனை கொடுக்க வேண்டியிருக்கும்.”—நேதன், கனடா.

“குழந்தைங்க இழுக்கிற இழுப்புக்கெல்லாம் நாம பணிந்துபோயிட கூடாது. அதே நேரத்தில, ரொம்ப கறாராவும் இருக்க கூடாது. சில சமயத்தில, செஞ்ச தப்ப உணர்ந்து எங்க பிள்ளை மன்னிப்பு கேட்கும்போது, அத புரிஞ்சுகிட்டு தண்டனைய குறைச்சிடுவோம்.”—மாத்யு, பிரான்ஸ்.

“அத செய்யாத, இத செய்யாதனு குழந்தைங்கள அளவுக்குமீறி கட்டுப்படுத்த மாட்டேன். ஆனா, நான் வைச்சிருக்கிற கட்டுப்பாடுகள எந்தக் காரணத்தை கொண்டும் மாத்த மாட்டேனு தெளிவா சொல்லிடுவேன். கீழ்ப்படியாம போனா என்ன தண்டன கிடைக்கும்னு என் மூன்று வயசு பையனுக்கு தெரியும். அதனால், அவன் ஒழுங்கா நடந்துக்குவான். சில சமயம் நான் களைப்பா இருக்கும்போது, அவன் செய்யற தப்பை கண்டுக்காம விட்டுடலாம்னு தோணும். ஆனா, சொன்னத மாத்தக் கூடாதுன்ற காரணத்தால, உடனே அவனை கண்டிப்பேன். வார்த்தை மாறாம இருக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம்.”—நட்டலீ, கனடா.

வார்த்தை மாறாதீர்கள்

“பெற்றோர் ஏதாவது ஒரு சின்ன விஷயத்தகூட மாத்தி சொன்னா, பிள்ளைங்க அத நல்லா ஞாபகம் வைச்சுப்பாங்க.”—மில்டன், பொலிவியா.

“சில சமயத்தில, நாங்க எப்பவும் ஒரே பதில்தான் கொடுக்கிறோமானு பார்க்கறதுக்காக என் பையன் ஒரே கேள்வியை வேற வேற மாதிரி கேட்பான். நான் ஒருமாதிரி பதில் சொல்லி, அவன் அம்மா வேற மாதிரி சொன்னாங்கன்னா, அதை பிடிச்சுகிட்டு தனக்குச் சாதகமா பயன்படுத்திக்குவான்.”—ஆங்கேல், ஸ்பெயின்.

“சில சமயம், நான் நல்ல ‘மூட்’ல (mood) இருந்தா என் பையன் பண்ற தப்பை கண்டுக்க மாட்டேன். ஆனா, என் ‘மூட்’ சரியில்லைனா, போட்டு சாத்துசாத்துனு சாத்திடுவேன். இதனால, அவன் குணம் இன்னும் மோசமாதான் ஆனது.”—ஜியாங்-ஆக், கொரியா.

“சின்ன பிள்ளைங்க பண்ற ஒரு விஷயத்தை நாம தப்புனு சொல்லி கண்டிச்சோம்னா, அது இன்னைக்கு மட்டுமல்ல, என்னைக்குமே தப்புதான்னு அவங்க புரிஞ்சுக்கறது ரொம்ப முக்கியம்.”—அன்டானியு, பிரேஸில்.

“பெற்றோர் வார்த்தை மாறிட்டே இருந்தாங்கன்னா, ‘அப்பா-அம்மா நேரத்துக்கு ஏத்தமாதிரி மாறிப்பாங்க, அவங்க ‘மூட்’ பொருத்து முடிவெடுப்பாங்க’னு பிள்ளை நினைக்கும். ஆனா, பெற்றோர், தங்களோட நெறிகள விட்டுக்கொடுக்காம இருந்தா, ஒன்னு தப்புன்னா அது எப்பவுமே தப்புதான்னு பிள்ளைங்க புரிஞ்சுக்குவாங்க. பெற்றோர் தங்களோட அன்பையும் பாதுகாப்பையும் பிள்ளைங்களுக்கு இந்த விதத்திலேயும் உறுதிப்படுத்தலாம்.”—ஸில்மர், பிரேஸில்.

“பிள்ளைங்களுக்கு ஏதாவது வேணும்னா, சமயம் பார்த்து கேட்பாங்க, உதாரணமா, மத்தவங்க முன்னாடி கேட்டா அப்பா-அம்மா வேற வழி இல்லாம ஒத்துக்குவாங்கனு நினைப்பாங்க. நான் இல்லைனு ஒருதடவ சொல்லிட்டேன்னா, கடைசி வரைக்கும் அத மாத்த மாட்டேன். ‘நீ எவ்வளவு நச்சரிச்சாலும் இல்லைனுதான் சொல்வேன்’னு அவன்கிட்ட தெளிவா சொல்லிடுவேன்.”—சாங்-சாக், கொரியா.

“எந்த ஒரு விஷயத்துலயும் பெற்றோர் இரண்டு பேரும் ஒத்துப்போகனும். அதனால்தான், எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்தா, பிள்ளைங்க முன்னாடி அத பேச மாட்டோம், தனியறையில முடிச்சுக்குவோம். எந்த விஷயத்திலாவது பெற்றோர் ஒத்துபோகலைனா பிள்ளைங்க அத கண்டுபிடிச்சுடுவாங்க. அப்புறம் அத தங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்குவாங்க.”—கெஸூஸ், ஸ்பெயின்.

“எதையாவது கேட்டா அப்பா-அம்மாகிட்டயிருந்து ஒரே மாதிரிதான் பதில் வரும், என்ன சொன்னாலும் அவங்கள ஒத்துக்க வைக்க முடியாதுனு பிள்ளைக்குத் தெரிஞ்சிருக்கனும். அது அவனுக்குத்தான் பாதுகாப்பு. அவன் கீழ்ப்படிஞ்சா என்ன கிடைக்கும், கீழ்ப்படியலேனா என்ன நடக்கும்னு புரிஞ்சுக்குவான்.”—டமரிஸ், ஜெர்மனி.

“நானும் என் மனைவியும், என் மகளுக்கு தண்டனை கொடுக்கிற விஷயத்தில மட்டுமில்ல, ஏதாச்சும் வாங்கிக் கொடுக்கிறதா சொல்லியிருந்தா அந்த விஷயத்திலயும் வார்த்தை மாறமாட்டோம். இதனால, நாங்க என்ன சொன்னாலும் அதை நிச்சயம் செய்வோம்னு அவளுக்கு நம்பிக்கை இருக்கு.”—ஹென்டிரிக், ஜெர்மனி.

“என் முதலாளி என் வேலையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி செய்யச் சொன்னார்னா, எனக்கு கோபம் கோபமா வரும். குழந்தைகளும் அந்தமாதிரி தானே. பெற்றோர் வைச்சிருக்கிற கட்டுப்பாடுகள தெரிஞ்சிருந்தா, அது மாறாதுனு தெரிஞ்சிருந்தா அவங்க பாதுகாப்பா உணருவாங்க. கீழ்ப்படியலேனா தண்டனை கிடைக்கும்னு அவங்க தெரிஞ்சிருக்கனும்; அதோடு, அந்தத் தண்டனையில மாற்றம் இருக்காதுனும் அவங்க தெரிஞ்சிருக்கனும்.”—கிளென், கனடா. (g11-E 10)

[பக்கம் 8-ன் சிறுகுறிப்பு]

“நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றும் இருக்கட்டும்.”—யாக்கோபு 5:12

[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]

டைரி

எதிர்பாராத கருத்தரிப்பு அதிர்ச்சியிலிருந்து ஆனந்தம்!

டாம் ஹன், யூன்ஹீ ஹன் தம்பதி சொன்னபடி

டாம்: எங்களுக்கு கல்யாணமாகி ஆறு மாசம்தான் ஆகியிருந்தது. அதுக்குள்ள யூன்ஹீ கர்ப்பமாயிட்டா. அத கேட்டு அப்படியே ஆடிப்போயிட்டேன். இருந்தாலும், அவளுக்கு தைரியம் சொல்லி தேத்த வேண்டியிருந்ததனால, என்னோட பதற்றத்த வெளில காட்டிக்காம அமைதியா இருந்தேன்.

யூன்ஹீ: எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு, ரொம்ப பயமாவும் இருந்துச்சு! நான் அழுதேன், அழுதேன், அழுதுட்டே இருந்தேன். அம்மா-ன்ற ஸ்தானத்துக்கு நான் தயாரா இல்ல, என்னால அத சரியா செய்ய முடியாதுனு தோணிச்சு.

டாம்: எனக்கும்கூட அப்பா-ன்ற பொறுப்ப நல்லா செய்வேன்னு தோணல! மத்த பெற்றோர்கிட்ட இதப் பத்தி பேசினோம். ‘உங்களுக்கு மட்டும் இல்ல, நிறைய பேருக்கு இப்படி நடந்திருக்கு’னு அவங்க சொன்னாங்க. அதோட, அப்பாவா, அம்மாவா இருக்கறதால எவ்வளவு சந்தோஷம் கிடைக்குதுனு சொன்னாங்க. இதெல்லாம் கேட்டு நாங்க மனச தேத்திகிட்டோம். போகப்போக, எனக்குள்ள இருந்த பயம், குழப்பமெல்லாம் போயிடுச்சு, குழந்தைய பத்தின எதிர்பார்ப்புகளோட வாழ ஆரம்பிச்சேன்.

யூன்ஹீ: அமண்டா பிறந்த பிறகு, புதுசுபுதுசா பிரச்சினைகள் வர ஆரம்பிச்சது. அவ ஓயாம அழுதிட்டே இருப்பா, அதனால, நான் வாரக்கணக்கா தூங்க முடியாம கஷ்டப்பட்டேன். பசியும் எடுக்காது, உடம்பெல்லாம் அடிச்சுப் போட்ட மாதிரி இருக்கும். ஆரம்பத்தில, யாரையுமே பார்க்க பிடிக்காது, எப்பவும் தனியாவே இருப்பேன். ஆனா, இப்படி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்லனு புரிஞ்சுகிட்டேன். அதனால, புதுசா குழந்தை பெத்துகிட்ட அம்மாமார்களோட பழக ஆரம்பிச்சேன். அவங்க சொல்றதையும் என் சூழ்நிலையையும் ஒத்துப் பார்த்தப்ப எனக்கு மட்டுமே பிரச்சினைகள் இல்லன்றதை புரிஞ்சுகிட்டேன்.

டாம்: நாங்க தவறாம செய்ற காரியங்கள்ல எந்த மாற்றமும் வராம பார்த்துகிட்டேன். உதாரணமா, நாங்க யெகோவாவின் சாட்சிகளா இருக்கிறதால, ரெண்டு பேரும் சபை கூட்டங்களையும், பிரசங்க வேலையையும் தவறவே விடக்கூடாதுனு தீர்மானிச்சோம். குழந்தை இருந்தா, எக்கச்சக்கமாக செலவும் இருக்கும், சில சமயத்துல எதிர்பாராத செலவுகூட வரும். அதனால, வரவுக்கேத்த செலவு செய்ய முடிவு செஞ்சோம். ஏன்னா, தாம்தூம்னு செலவு பண்ணி கடனாளியா ஆயிட்டா, இப்ப இருக்கிற கவலைகள் போதாதுனு இன்னும் அதிகமாதான் ஆகும்.

யூன்ஹீ: குழந்தைய தூக்கிட்டு பிரசங்க வேலைக்கு போனா, மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும்னு நெனச்சேன். ஆனா, கூட்டிட்டு போன பிறகு என் எண்ணத்த மாத்திட்டேன். குழந்தைங்கன்னா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும், அத யாரும் தொல்லையா நினைக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அதனால, பிரசங்க வேலையில தவறாம கலந்துக்க ஆரம்பிச்சேன். என் குழந்தை கடவுள் தந்த பரிசுன்ற எண்ணம் என் மனசுல இன்னும் ஆழமா பதிஞ்சது.

டாம்: பிள்ளைங்க, “யெகோவா தந்த சொத்து,” “அவர் கொடுக்கும் பரிசு”னு பைபிள் சொல்லுது. (சங்கீதம் 127:3, NW) எந்தவொரு குழந்தையும் விலைமதிக்க முடியாத பரிசுனு இதிலிருந்து நான் தெரிஞ்சுகிட்டேன். உங்க கிட்ட ஒரு சொத்திருந்தா, அத நீங்க என்ன வேணும்னாலும் செய்யலாம், பல மடங்காவும் பெருக்கலாம், நாசமும் பண்ணலாம். குழந்தையோட வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தனித்துவம் இருக்கும்னு நான் தெரிஞ்சுகிட்டு வரேன். என் மகளோட வாழ்க்கையில ஒவ்வொரு கட்டத்திலேயும் அவகூடவே இருக்கனும்னு ஆசப்படறேன். ஏன்னா, அதுல ஒன்ன தவறவிட்டாகூட, திரும்ப கிடைக்காது பாருங்க.

யூன்ஹீ: சில சமயங்கள்ல, வாழ்க்கையில நாம நினைச்சே பாக்காத விஷயமெல்லாம் நடக்கும். எதிர்பார்க்காம கருத்தரிக்கிறதுகூட அதே மாதிரிதான்; அத ஒன்னும் கெட்ட விஷயம்னு சொல்ல முடியாது. அமண்டாவுக்கு இப்ப ஆறு வயசு. அவ இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால கற்பனைகூட பண்ணிப் பார்க்க முடியல.

[படம்]

மகள் அமண்டாவுடன் டாம், யூன்ஹீ