Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டீன்ஏஜ் அடுத்த பருவத்திற்கு அடித்தளம்

டீன்ஏஜ் அடுத்த பருவத்திற்கு அடித்தளம்

டீன்ஏஜ் அடுத்த பருவத்திற்கு அடித்தளம்

சூடுபறக்கும் சென்னையிலிருந்து சில்லென்ற சிம்லாவுக்குப் பறக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அங்கு கால்பதித்தவுடனே உறையவைக்கும் பனிக்காற்று உங்கள் உடலில் ஊடுருவுவதை உணருவீர்கள். இந்தச் சீதோஷ்ண மாற்றத்தை உங்களால் சமாளிக்க முடியுமா? முடியும், ஆனால் அதற்கு நீங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

உங்கள் செல்லச் சிட்டு டீன்-ஏஜ் பருவத்தை நோக்கிப் ‘பறக்கும்போதும்’ இதேபோன்ற ஒரு சூழ்நிலையைத்தான் எதிர்ப்படுகிறீர்கள். ஒரே இராத்திரியில் எல்லாம் தலைகீழாக ஆகிவிட்டதுபோல் உங்களுக்குத் தோன்றலாம். உங்கள் பின்னாடியே சுற்றிச் சுற்றி வந்த உங்கள் மகன் இப்போது நண்பர்களைச் சுற்றி இருக்கவே விரும்புகிறான். ஸ்கூலில் நடந்ததை மூச்சுவிடாமல் அளந்த உங்கள் மகள் இப்போது எதைக் கேட்டாலும் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்கிறாள்.

“இன்னைக்கு எப்படி இருந்தது?” என்று ஸ்கூல் விட்டு வரும் மகளிடம் கேட்கிறீர்கள்.

“நல்லா இருந்தது,”—இது அவள்.

கொஞ்ச நேரம் மௌனம்.

“என்ன யோசிச்சிட்டிருக்க?”—இது நீங்கள்.

“ஒன்னும் இல்ல,”—அவள்.

மீண்டும் மௌனம்.

என்ன ஆயிற்று? எல்லா விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்துகொண்ட உங்கள் மகள் இப்போது பட்டும் படாமல் பேசுகிறாள்; சில நேரங்களில் உங்களிடம் சொல்லாத சில விஷயங்களைக்கூட மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கிறாள். அவள் பெரியவளாக வளர்ந்துகொண்டிருக்கிறாள் என்பது உங்களுக்குப் புரிகிறது. ஆனால், என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்பது போல உங்களுக்குத் தோன்றுகிறது.

இந்தக் கட்டத்தில் உங்கள் பிள்ளையிடமிருந்து தள்ளிப் போய் விடுவீர்களா? ஒருநாளும் அப்படிச் செய்யக் கூடாது. டீன்-ஏஜ் என்ற கொந்தளிக்கும் பருவத்தை அவர்கள் கடப்பதற்கு நீங்கள் துடுப்பாக இருக்க முடியும். அதற்கு முதலில், இந்தப் பருவத்தில் அவர்களுக்குள் நடக்கும் அதிசயமான மாற்றங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

சின்னஞ்சிறுசுகள் வளர வளர...

ஒரு குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது அதன் மூளை கிட்டத்தட்ட முழு வளர்ச்சி அடைந்துவிடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் முன்பு சொன்னார்கள். இப்போதோ, ஐந்து வயதிற்குப் பிறகுகூட மூளையின் அளவில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் அது செயல்படும் விதத்தில் மாற்றம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். பருவமடையும்போது அவர்களது உடலில் ஹார்மோன்கள் விளையாடத் தொடங்குகின்றன. இதனால், அவர்களுடைய விருப்பு வெறுப்புகள், கருத்துகள், ரசனைகள்... எல்லாம் அதிரடியாக மாறுகின்றன. பொதுவாக, சிறுபிள்ளைகள் ஒரு விஷயத்தை சரியா தவறா என்று மேலோட்டமாக மட்டுமே பார்ப்பார்கள். ஆனால், டீன்-ஏஜ் பிள்ளைகள் ஏன், எதற்கு என்றெல்லாம் ஆழமாக யோசிப்பார்கள். (1 கொரிந்தியர் 13:11) எந்தவொரு விஷயத்திலும் அவர்களுக்கென்று ஒரு கருத்தை வைத்திருப்பார்கள், அதை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டார்கள்.

இத்தாலியில் வசிக்கும் பவோலோ என்ற அப்பா தன் மகனிடம் இதேபோன்ற ஒரு மாற்றத்தைக் கவனித்திருக்கிறார்: “என் டீன்-ஏஜ் பையனைப் பார்க்கும்போது, அவன ஒரு சின்ன பையனாவே நினைக்க முடியறதில்ல. பெரிய ஆள் மாதிரி தோணுது. அவனோட உடல்ல ஏற்பட்ட மாற்றத்த வச்சு மட்டும் சொல்லல, அவன் சிந்திக்கிற விதத்த வச்சும்தான். ஏன்னா, அவனோட கருத்துகளை பயப்படாம சொல்றான், ஆணித்தரமா சொல்றான். அதெல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு.”

உங்கள் டீன்-ஏஜ் பிள்ளை விஷயத்திலும் இதே கதைதானா? அவன் சின்ன பிள்ளையாக இருந்தபோது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று சொல்லியிருப்பீர்கள். ‘ஏன்’ என்று அவன் கேள்வி கேட்டால், “கேள்வி எல்லாம் கேட்காம அப்பா-அம்மா சொல்றத செய்” என்று மட்டும் சொல்லியிருப்பீர்கள். ஆனால் இப்போது, டீன்-ஏஜ் வயதில் இந்த பதில் போதாது. அவன் எல்லாவற்றுக்கும் காரணங்கள் கேட்க ஆரம்பித்துவிடுகிறான். ஏன், பெற்றோர் கடைப்பிடிக்கிற நெறிமுறைகளையும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறான். இதனால், சில நேரங்களில் அவன் அடங்காப்பிடாரியாக ஆகிவிட்டதுபோல் தோன்றலாம்.

ஆனால், நீங்கள் சொல்லிக்கொடுத்த நெறிமுறைகளை அவன் ஒதுக்கித் தள்ளிவிட்டான் என்று முடிவுகட்டி விடாதீர்கள். உங்களுடைய நெறிமுறைகளை அவனுடைய நெறிமுறைகளாக மாற்றிக்கொள்வதற்கு, அவனுடைய வாழ்க்கையின் ஒரு பாகமாக ஆக்கிக்கொள்வதற்கு போராடிக்கொண்டிருக்கலாம். உதாரணமாக, நீங்கள் வேறொரு வீட்டிற்குக் குடிமாறிச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பொருட்களையெல்லாம் எடுத்துச் செல்வதற்காக ‘பேக்’ செய்கிறீர்கள். அந்தப் புதிய வீட்டில் உங்களிடம் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் ஏற்ற ஒரு இடம் இருக்குமென சொல்ல முடியுமா? சந்தேகம்தான். அதற்காக, நீங்கள் பொக்கிஷமாக நினைக்கும் எந்தப் பொருளையும் தூக்கி எறிந்துவிட மாட்டீர்கள்.

உங்கள் டீன்-ஏஜ் மகனும் இதேபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் இருக்கிறான். “தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு” சொந்தக் காலில் நிற்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான். (ஆதியாகமம் 2:24) ஒருவேளை, அப்படிச் சொந்தக் காலில் நிற்பதற்கு நிறைய காலம் எடுக்கலாம். அவன் இன்னும் டீன்-ஏஜ் பையன்தான், பெரிய ஆள் இல்லை. சொல்லப்போனால், அவன் இப்போது ‘பேக்’ செய்துகொண்டிருக்கிறான். சின்ன வயதிலிருந்து அவனுக்குக் கற்பிக்கப்பட்ட நெறிகளை அலசி... ஆராய்ந்து... எதையெல்லாம் தன் அடுத்த பருவத்திற்கு ‘எடுத்துச் செல்ல’ வேண்டும் என்று தீர்மானிக்கிறான். *

உங்கள் மகன் இதுபோன்ற தீர்மானங்கள் எடுப்பதை நினைத்து உங்கள் அடிவயிற்றைச் சங்கடம் கவ்வலாம். ஆனால், அடுத்த பருவத்திற்குச் செல்லும்போது அவன் ‘பொக்கிஷமாக’ நினைக்கும் நெறிமுறைகளை மட்டுமே எடுத்துச் செல்வான் என்பது நிச்சயம். எனவே இப்போதே... அவன் உங்களோடு இருக்கும்போதே... எந்த நெறிமுறைகளின்படி வாழ்வான் என்பதை அவன் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.—அப்போஸ்தலர் 17:11.

இப்படிச் செய்வது உங்கள் டீன்-ஏஜ் மகனுக்குத்தான் நல்லது. ஏனென்றால், இப்போது உங்கள் நெறிமுறைகளை அவன் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டால், பின்னால் மற்றவர்கள் சொல்வதையும் மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. (யாத்திராகமம் 23:2) இப்படிப்பட்ட ஒரு இளைஞனைச் சுலபமாக ஏமாற்றிவிட முடியும். ஏனென்றால், பைபிள் சொல்கிறபடி இவன் ‘புத்தியில்லாத வாலிபனாக’ இருக்கிறான். (நீதிமொழிகள் 7:7, திருத்திய மொழிபெயர்ப்பு) அதோடு, தன் நம்பிக்கையில் உறுதியாக இல்லாத ஓர் இளைஞன் ‘மனிதர்களுடைய தந்திரத்தை . . . நம்பி, அலைகளினால் அலைக்கழிக்கப்படுவான், அவர்களுடைய போதனைகளாகிய பலவித காற்றினால் இங்குமங்கும் அடித்துச் செல்லப்படுவான்.’—எபேசியர் 4:14.

உங்கள் டீன்-ஏஜ் மகன் இந்த நிலைக்கு ஆளாகாமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? விலைமதிப்பில்லாத மூன்று விஷயங்கள் அவனிடம் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அவை என்ன?

1 பகுத்தறிவு

‘முதிர்ச்சி அடைந்தவர்கள் . . . நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்துகிறார்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 5:14) ‘நல்லது கெட்டதை எல்லாம் என் பிள்ளைக்கு சின்ன வயசிலயே சொல்லிக் கொடுத்துட்டேன்’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். உண்மைதான், அது அப்போது அவனுக்கு உதவியாய் இருந்திருக்கும், அதோடு டீன்-ஏஜ் பருவத்தில் அடியெடுத்து வைப்பதற்கும் அவனைத் தயார்ப்படுத்தியிருக்கும். (2 தீமோத்தேயு 3:14) இருந்தாலும், ஒருவர் தன் பகுத்தறியும் திறனைப் பயிற்றுவித்துக்கொள்ள வேண்டும் என்று பவுல் சொல்வதைக் கவனியுங்கள். சின்ன பிள்ளைகள், சரி எது தவறு எது என்று அறிந்திருக்க வேண்டும். ஆனால், டீன்-ஏஜ் பிள்ளைகள் ‘புரிந்துகொள்ளும் திறனைப் பொறுத்ததில் முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்க’ வேண்டியது அவசியம். (1 கொரிந்தியர் 14:20; நீதிமொழிகள் 1:4; 2:11) உங்கள் மகன் கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் நம்பாமல், நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றுதானே எதிர்பார்ப்பீர்கள். (ரோமர் 12:1, 2) இப்படிச் செய்வதற்கு நீங்கள் எப்படி அவனுக்கு உதவலாம்?

ஒரு வழி, அவனுடைய மனதிலுள்ளதைக் கொட்ட வாய்ப்பளிப்பதாகும். அவன் பேசும்போது குறுக்கே பேசாதீர்கள். உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைச் சொன்னால்கூட உணர்ச்சிவசப்படாதீர்கள். “கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருக்க வேண்டும்” என பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:19; நீதிமொழிகள் 18:13) “இருதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது” என்று இயேசுவும் சொன்னார். (மத்தேயு 12:34) அவன் பேசுவதைக் கவனித்துக் கேட்டீர்கள் என்றால் அவன் மனதுக்குள் இருப்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

நீங்கள் அவனிடம் பேசும்போது, ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்பதுபோல் பேசாதீர்கள்; அதற்குப் பதிலாக அவனுடைய மனதை மொண்டெடுக்கும் கேள்விகளைப் பயன்படுத்துங்கள். சில நேரங்களில் இயேசுவும்கூட இதே உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று தம் சீடர்களிடம் மட்டுமல்ல, முரட்டுப் பிடிவாதக்காரர்களிடம்கூட கேட்டிருக்கிறார். (மத்தேயு 21:23, 31) உங்கள் டீன்-ஏஜ் பிள்ளையின் விஷயத்திலும் இதையே நீங்கள் பின்பற்றலாம்—அவன் சொல்வது உங்கள் கருத்துக்கு எதிராக இருந்தால்கூட. உதாரணமாக:

உங்கள் மகன் இப்படிச் சொன்னால்: “கடவுள் இருக்காரான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.”

இப்படிச் சொல்லாதீர்கள்: “கடவுள் இருக்கார்னுதான நாங்க சொல்லித்தந்தோம். இப்ப என்ன உனக்கு புதுசா சந்தேகம் வருது.”

இப்படிச் சொல்லலாம்: “நீ எதனால அப்படி சொல்ற?”

ஏன் இப்படிக் கேட்க வேண்டும்? ஏனென்றால், அவன் வாய் வார்த்தையை நீங்கள் கேட்டீர்கள், இப்போது, அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 20:5) கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது அவனுடைய சந்தேகமாக இருக்காது. அவர் தந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவதா வேண்டாமா என்பது அவன் சந்தேகமாக இருக்கலாம்.

உதாரணமாக, கடவுளுடைய ஒழுக்க நெறிமுறைகளைப் பாரமாக நினைக்கிற ஓர் இளைஞன் கடவுள் நம்பிக்கையே இல்லையெனச் சொல்லி அதை நியாயப்படுத்தப் பார்க்கலாம். (சங்கீதம் 14:1) ‘கடவுளே இல்லை என்றால், பைபிள் நெறிமுறைகளின்படி வாழ வேண்டிய அவசியம் இல்லையே’ என்று அவன் ஒருவேளை நினைக்கலாம்.

உங்கள் டீன்-ஏஜ் மகனும் இப்படித்தான் நினைக்கிறானா? அப்படியென்றால், உங்கள் மகன், ‘கடவுளுடைய நெறிமுறைகளைக் கடைப்பிடித்தால் எனக்குத்தான் நன்மை என்று நான் உண்மையிலேயே நம்புகிறேனா?’ என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கும். (ஏசாயா 48:17, 18) தன் நன்மைக்குத்தான் என அவன் நம்பினால், அதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அவனுக்குப் புரிய வையுங்கள்.—கலாத்தியர் 5:1.

உங்கள் மகன் இப்படிச் சொன்னால்: “இது உங்க மதமா இருக்கலாம். அதுக்காக நானும் அதிலதான் இருக்கனும்னு அவசியம் இல்ல.”

இப்படிச் சொல்லாதீர்கள்: “இது நம்ப மதம், நீ எங்க பையன், நாங்க எத சொல்லிக்கொடுக்குறோமோ அதைதான் நீ நம்பனும்.”

இப்படிச் சொல்லலாம்: “நீ சொல்றத கேட்க அதிர்ச்சியாதான் இருக்கு. சரி, என்னோட நம்பிக்கைகளை நீ ஏத்துக்கலன்னா, உனக்குன்னு சில கொள்கைகள்... நெறிமுறைகள்... இருக்கனும் இல்லையா. நீ எதையெல்லாம் நம்பற? எப்படி வாழ்றது சரின்னு நீ நினைக்கிற?”

ஏன் இப்படிக் கேட்க வேண்டும்? ஏனென்றால், இதுபோன்ற கேள்விகளைக் கேட்பது அவனுடைய சிந்தனை சரிதானா என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்கு உதவும். உண்மையில் உங்களுடைய நம்பிக்கைகள்தான் அவனுடைய நம்பிக்கைகளாக இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளும்போது அவனுக்கே ஆச்சரியமாக இருக்கலாம். அப்படியென்றால், அவனுடைய பிரச்சினை முற்றிலும் வேறு. அது என்னவாக இருக்கும்?

உதாரணமாக, தன்னுடைய நம்பிக்கைகளை மற்றவர்களிடம் எப்படி விளக்குவது என்று அவனுக்குத் தெரியாமல் இருக்கலாம். (கொலோசெயர் 4:6; 1 பேதுரு 3:15) அல்லது வித்தியாசமான நம்பிக்கைகளை உடைய யாரையாவது அவன் காதலிக்கலாம். பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டுபிடியுங்கள். பிறகு அதை அவனுக்கும் காட்டுங்கள். பகுத்தறியும் திறனை எந்தளவு நன்றாகப் பயன்படுத்துகிறானோ அந்தளவு நன்றாக அவன் அடுத்த பருவத்தை நோக்கி வளர்ந்துகொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.

2 அனுபவமுள்ள நண்பர்கள்

பொதுவாக, டீன்-ஏஜ் பருவம் ஒருவித “கலவரமும் கவலையும்” நிறைந்த பருவம் என்று மனநல மருத்துவர்கள் சிலர் அதை வர்ணிக்கிறார்கள்; ஆனால், சில கலாச்சாரங்களில் இது மிகவும் அரிது. அத்தகைய கலாச்சாரங்களில் இளைய தலைமுறையினர் பெரியவர்களுடன் இணைந்து வேலை பார்க்கிறார்கள், பழகுகிறார்கள், பெரிய பெரிய பொறுப்புகளையும் தோளில் சுமக்கிறார்கள். இப்படி இளம் வயதிலேயே பெரியவர்களைப் போல வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள். பெரியவர்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து விடுகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். “இளைய சமுதாயம்” “இளம் குற்றவாளிகள்” என்ற வார்த்தைகளும் ஏன், “இளைஞர்கள்” என்ற வார்த்தையும்கூட அந்த கலாச்சாரங்களில் பயன்படுத்தப்படுவதில்லை.

அதேநேரம், சில நாடுகளில் இளைஞர்களின் கதையே வேறு. வதவதவென்று நிறைய மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் அவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தங்கள் வயது-நண்பர்கள், அவ்வளவுதான். பெரியவர்களோடு பழக அவர்களுக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. வீட்டிற்கு வந்தாலும் பேசவோ சிரிக்கவோ ஆளில்லை. அப்பாவும் அம்மாவும் ஆஃபீஸே கதி என்று இருக்கிறார்கள். சொந்தபந்தங்களோ ஆளுக்கொரு திக்கில். அவர்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் வெறும் இளைஞர் பட்டாளம்தான். * இதில் இருக்கும் ஆபத்து உங்கள் கண்ணுக்குத் தெரிகிறதா? பெரியவர்களுடைய சகவாசம் இல்லாமல் தனி உலகமாக இயங்கும்போது, சேரக்கூடாதவர்களோடு சேர்ந்துவிடுகிறார்கள். நாலு பேர் மெச்ச நல்ல பெயரெடுத்த பிள்ளைகள்கூட நாளாக நாளாக நாசமாகிவிடுகிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.

இப்படி இளைஞர்களும் பெரியவர்களும் தனித்தனி உலகமாக இயங்காமல் ஒரே சமுதாயமாகச் செயல்பட்டதற்கு ஓர் உதாரணம் பூர்வ காலத்து இஸ்ரவேல் மக்கள். பைபிளில் சொல்லியிருக்கும் உசியாவை எடுத்துக்கொள்வோம். அவர் இளம் பருவத்திலேயே யூதா தேசத்துக்கு ராஜாவானார். மலைபோன்ற இந்தப் பொறுப்பை தூக்கி சுமக்க எது அவருக்குக் கைகொடுத்தது? சகரியா என்ற ஒரு பெரியவர், சில காலம் அவருக்கு நல்ல ஆலோசகராக இருந்தார். சகரியா, ‘கடவுளுக்கு பயப்படுகிற பயத்தை [உசியாவிற்கு] போதித்துவந்தார்’ என்று பைபிள் சொல்கிறது.—2 நாளாகமம் [தினவர்த்தமானம்] 26:5, தி.மொ.

உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைக்கு உங்கள் நெறிமுறைகளைப் பின்பற்றுகிற அனுபவமுள்ள நண்பர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? உங்கள் மகன் அப்படிப்பட்டவர்களோடு நெருங்கிப் பழகுவதைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள். சரியானதைச் செய்வதற்கு இந்தத் தோழமை அவனுக்குக் கைகொடுக்கும். “ஞானமுள்ளவர்களோடு நட்பாக இரு, நீயும் ஞானம் அடைவாய்” என்று பைபிள் நீதிமொழி ஒன்று சொல்கிறது.—நீதிமொழிகள் 13:20, ஈஸி டூ ரீட் வர்ஷன்.

3 பொறுப்புணர்வு

சில நாடுகளில் டீன்-ஏஜ் பிள்ளைகள் ஒரு வாரத்தில் குறிப்பிட்ட மணிநேரத்திற்குமேல் வேலை செய்வதையோ, குறிப்பிட்ட வேலைகளைச் செய்வதையோ சட்டம் தடுக்கிறது. 18, 19-ஆம் நூற்றாண்டின்போது நடைபெற்ற தொழிற்புரட்சியின் விளைவால் ஏற்பட்ட இந்தச் சட்டங்கள் ஆபத்தான வேலைகளைச் செய்வதிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கும் வேலியாய் இருக்கின்றன.

குழந்தைத் தொழிலாளர் சட்டங்கள் ஒரு பக்கம் ஆபத்துகளிலிருந்தும் கொடுமைகளிலிருந்தும் இளைஞர்களைப் பாதுகாத்தாலும், இன்னொரு பக்கம் அவர்களைப் பொறுப்பற்றவர்களாகவும் ஆக்கியிருக்கின்றன என்பது சில நிபுணர்களின் கருத்து. “தாங்கள் நினைப்பதெல்லாம் தங்களுக்கு நோகாமல் கிடைக்க வேண்டும், பெற்றோர் தங்களுக்குக் கொடுத்தே ஆகவேண்டும் என்ற முரட்டுத்தனமான எண்ணத்தை” அநேக இளைஞர்கள் வளர்த்துக்கொள்வதாக எஸ்கேப்பிங் த என்ட்லஸ் அடலசன்ஸ் புத்தகம் சொல்கிறது. “இளைஞர்களிடம் பொறுப்புணர்வை விதைக்காமல், அவர்கள் எப்போதும் ஜாலியாகப் பொழுதுபோக்குவதையே ஊக்குவிக்கும் இந்த உலகில் [இப்படிப்பட்ட மனப்பான்மை] இயற்கைதானே” என்று அதன் எழுத்தாளர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், சின்ன வயதிலேயே பெரிய பெரிய பொறுப்புகளைச் சுமந்த இளைஞர்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. தீமோத்தேயுவை எடுத்துக்கொள்வோம். அப்போஸ்தலன் பவுலைச் சந்தித்தபோது அவர் டீன்-ஏஜ் வயதில் இருந்திருக்கலாம். பவுல் அவருக்கு ஆன்மீகத் தந்தையாக இருந்தார். “கடவுள் உனக்கு அருளிய . . . வரத்தை நெருப்புப்போல் மூட்டிவிட்டுக்கொண்டே இரு” என்று ஒருமுறை அவருக்கு பவுல் அறிவுரை கொடுத்தார். அதாவது, அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முழுமூச்சோடு செய்யும்படிச் சொன்னார். (2 தீமோத்தேயு 1:6) சுமார் 20 வயதில் தீமோத்தேயு தன் பெற்றோரை விட்டுப் பிரிந்து பவுலோடு சேர்ந்து மிஷனரியாக ஆனார். புதிய சபைகளை நிறுவவும், சகோதரர்களை ஆன்மீக விதத்தில் பலப்படுத்தவும் உதவினார். அவருடன் சேர்ந்து பத்து ஆண்டுகள் ஊழியம் செய்த பிறகு, பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களிடம் பவுல் இவ்வாறு சொன்னார்: “உங்களுக்குரிய காரியங்களை அக்கறையோடு கவனிப்பதற்கு அவரைப் போன்ற மனமுள்ளவர் வேறு யாரும் என்னோடு இல்லை.”—பிலிப்பியர் 2:20.

அநேக டீன்-ஏஜ் பிள்ளைகள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள். அதுவும் பிரயோஜனமான வேலை என்றால் அதை ஆசை ஆசையாய் செய்கிறார்கள். இப்படிப்பட்ட வேலைகளைச் செய்வது பொறுப்புள்ள ஆட்களாக வளர அவர்களைத் தயார்ப்படுத்துவதோடு, இப்போதே அவர்களின் திறமைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

“சீதோஷ்ண மாற்றத்தை” சமாளிக்க...

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்ததைப் போல, டீன்-ஏஜ் பிள்ளையை உடைய பெற்றோராக நீங்கள் இருந்தால் திடீரென “சீதோஷ்ணம்” மாறிவிட்டதாக உணரலாம். ஆனால், அதை நினைத்து பயப்பட வேண்டாம். உங்கள் பிள்ளையுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவனிடம் ஏற்பட்ட மாற்றத்திற்கு நீங்கள் ஒத்துப்போனதுபோல, டீன்-ஏஜ் பருவத்தில் ஏற்படுகிற மாற்றத்திலும் உங்களால் ஒத்துப்போக முடியும்.

டீன்-ஏஜ் பருவத்தில், (1) பகுத்தறிவைப் பயிற்றுவிக்க (2) அனுபவமுள்ள ஒரு நண்பரைப் பெற்றுக்கொள்ள (3) பொறுப்புணர்ச்சியை வளர்த்துக்கொள்ள உங்கள் மகனுக்கு உதவுங்கள். அதற்கு இதுவே சரியான நேரம். இப்படிச் செய்தால், அடுத்த பருவத்தில் அடியெடுத்து வைக்க அவனை நீங்கள் தயார்ப்படுத்துகிறீர்கள். (g11-E 10)

[அடிக்குறிப்புகள்]

^ டீன்-ஏஜ் பருவம் பெற்றோருக்குப் “பிரியாவிடை” கொடுப்பதற்குத் தயாராகும் காலகட்டம் என ஒரு புத்தகம் விவரிக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு அக்டோபர்-டிசம்பர், 2009 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 10-12-ஐ பார்க்கவும். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

^ இளைஞர்களையே குறிவைத்து தயாரிக்கப்படும் பொழுதுபோக்குகள், எப்போதும் நண்பர்களுடன் இருக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஆசைக்குத் தீனி போடுகின்றன. இளைஞர்கள் தங்களுக்கென்று உருவாக்கிய வட்டத்திற்குள் பெரியவர்களால் நுழைய முடியாது, ஏன் அதை எட்டிப் பார்க்கக்கூட முடியாது என்ற கருத்தை அத்தகைய பொழுதுபோக்குகள் ஊக்குவிக்கின்றன.

[பக்கம் 20-ன் பெட்டி/படம்]

“இந்த மாதிரி ஒரு அப்பா-அம்மா கிடைச்சது என் பாக்கியம்”

யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பெற்றோர், பைபிள் நெறிமுறைகளின்படி வாழ தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள், அதைச் செயலிலும் காட்டுகிறார்கள். (எபேசியர் 6:4) இருந்தாலும், தங்கள் நெறிமுறைகளைப் பிள்ளைகள்மீது திணிப்பதில்லை. மகனோ மகளோ சொந்தமாக முடிவெடுக்கும் வயதை எட்டியபிறகு எந்த நெறிமுறைகளின்படி வாழ வேண்டும் என்பதை அவரவரே தீர்மானிக்க வேண்டும் எனப் புரிந்திருக்கிறார்கள்.

18 வயது ஆஷ்லின், சிறுவயது முதல் தன் அப்பா-அம்மா கற்பித்த நெறிமுறைகளின்படி வாழ்கிறாள். அவள் சொல்கிறாள்: “என்னை பொறுத்தவரை, வாரத்துல ஏதோ ஒரு நாள் மட்டும் நான் யெகோவாவின் சாட்சி இல்ல. ஒவ்வொரு நிமிஷமும் நான் யெகோவாவின் சாட்சிதான். என்ன மாதிரி நண்பர்களோட பழகுவேன்... எந்த புத்தகங்கள படிப்பேன்... எப்படிப்பட்ட படிப்பை தேர்ந்தெடுப்பேன்-ன்னு எல்லா விஷயத்திலயும் நான் ஒரு யெகோவாவின் சாட்சின்றத மனசுல வச்சுதான் செய்வேன்.”

தன் பெற்றோர் தன்னை இந்த முறையில் வளர்த்ததை நினைத்து ஆஷ்லின் பெருமைப்படுகிறாள். “இந்த மாதிரி ஒரு அப்பா-அம்மா கிடைச்சது என் பாக்கியம். எப்பவும் யெகோவாவைதான் சேவிக்கனுன்ற ஆசைய என் மனசுல பதிய வைச்சுருக்காங்க. அத நான் பெரிய பொக்கிஷமா நினைக்கிறேன். நான் உயிர் வாழ்ற வரைக்கும் அப்பா-அம்மாதான் என்னோட வழிகாட்டி” என்கிறாள்.

[பக்கம் 17-ன் படம்]

மனதைத் திறக்க விடுங்கள்

[பக்கம் 18-ன் படம்]

அனுபவமுள்ள ஒரு நண்பர் உங்கள் பிள்ளையை மெருகேற்றுவார்

[பக்கம் 19-ன் படம்]

பிரயோஜனமான வேலை பொறுப்பானவர்களாக ஆக்குகிறது