Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

பிரேசிலில் 10-13 வயதுள்ள ஸ்கூல் பிள்ளைகளில் சுமார் 17 சதவீதத்தினர் அடாவடித்தனம் செய்பவர்களாக இருக்கிறார்கள் அல்லது அடாவடிக்கு ஆளானவர்களாக இருக்கிறார்கள்.—ஓ எஸ்டாடோ டா சாவோ போலோ, பிரேசில்.

12 வயதிற்கும் கீழே உள்ள பிள்ளைகளுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், சிறுநீரகக் கல், கல்லீரல் பிரச்சினைகள் போன்றவை இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. ஓடியாடி விளையாடாமல் இருப்பது, நொறுக்குத் தீனிகளை எக்கச்சக்கமாக நொறுக்குவது, குண்டாக இருப்பது ஆகியவையே இவற்றிற்குக் காரணம்.—ஏபிசி, ஸ்பெயின்.

ஐக்கிய மாகாணத்தில், ஒரு நடுத்தர குடும்பத்தில் 2008-ல் பிறந்த குழந்தையை 18 வயதுவரை வளர்க்க ஆகும் செலவு “சுமார் 221,190 டாலர் (98,91,617 ரூபாய்) (பண வீக்கத்தின்போது, சுமார் 291,570 டாலர் [1,30,39,010 ரூபாய்])” என அந்நாட்டு அரசாங்க கணக்கெடுப்பு காட்டுகிறது.—ஐக்கிய மாகாணங்களின் வேளாண்மைத்துறை, அ.ஐ.மா.

விளையாட்டா! பிள்ளைகளோடா!!

பெற்றோர் பிள்ளைகளோடு விளையாடுவதைப் பற்றி சமீபத்தில் பிரிட்டனில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி: ஐந்தில் ஒரு பெற்றோர், ‘பிள்ளைகளோடு விளையாடுவதா, அது எங்களுக்கு மறந்துவிட்டது’ எனச் சொன்னார்கள். மூன்றில் ஒரு பெற்றோர், ‘அதெல்லாம் போர் அடிக்கும்’ என்றார்கள். சிலர், ‘எப்படி விளையாடுவது என்றே தெரியவில்லை’ எனச் சொன்னார்கள்; இன்னும் சிலர், ‘அதுக்கெல்லாம் எங்களுக்கு எங்கே நேரம்?’ என்று சொன்னார்கள். மனநல மருத்துவரும் பேராசிரியருமான டான்யா பைரோன் இந்த ஆய்வைப் பற்றிக் கருத்து சொன்னார்: “பிள்ளைகளோடு நன்கு விளையாட நான்கு முக்கியமான விஷயங்கள் தேவை. அது, கல்வி, ஊக்கம், ஒத்துழைப்பு, பேச்சுத்தொடர்பு.” மூன்றில் ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதாகச் சொன்னாலும், பெரும்பாலான பிள்ளைகள் அதைத் தனியாக விளையாடவே விரும்புகிறார்கள். 5-15 வயதுள்ள பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களோடு திறந்தவெளி விளையாட்டுகளையும், ‘போர்டு கேம்ஸ்’களையும் விளையாடவே விரும்புகிறார்கள்.

கதைகதையாம் காரணமாம்...

குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக கதைகள் வாசித்துக் காட்ட நேரமில்லாத அப்பாமார்களுக்குக் கைகொடுக்க ஒரு இன்டர்நெட் கம்பெனி முன்வந்திருக்கிறது. “அப்பாமார்கள் கதை வாசிப்பதை ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம் மூலம் பதிவு செய்து, அதில் இசையையும், மற்ற சப்தங்களையும் சேர்த்து குழந்தைக்கு ஈ-மெயிலில் அனுப்புவதாக” சிட்னியின் டெய்லி டெலிகிராப் சொல்கிறது. மனித உறவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் இதை ஒத்துக்கொள்வதில்லை. “கதைகளை வாசிப்பது, குழந்தைகளும் பெற்றோரும் நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள உதவுகிறது” என்று ஆஸ்திரேலியாவிலுள்ள நியூகாஸில் யுனிவர்சிட்டியில் குடும்பங்களுக்கான ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக இருக்கும் டாக்டர் ரிச்சர்ட் ஃப்ளட்ச்சர் சொல்கிறார். கதை படிக்கும் சமயத்தில் அப்பாமார்கள் தங்கள் பிள்ளைகளை அணைத்து, கொஞ்சி குலாவி, சிரித்து மகிழ்கிறார்கள். இதெல்லாம் ஈ-மெயிலில் கிடைக்குமா, என்கிறார் ஃப்ளட்ச்சர். (g11-E 10)