Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 அட்டைப்பட கட்டுரை

பொன்னான நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்

பொன்னான நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்

“நேரமே இல்ல!” எத்தனை முறை நீங்கள் இப்படிச் சொல்லியிருப்பீர்கள்? ஏழை-பணக்காரன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்று அனைவருக்கும் இருப்பது 24 மணி நேரமே. ஒரு நொடி போனால் போனதுதான், அது திரும்பக் கிடைக்கவே கிடைக்காது. அதை யாராலும் சேமித்து வைக்கவும் முடியாது. அதனால், நேரத்தை ஞானமாகச் செலவு செய்வது முக்கியம். அதை எப்படிச் செய்யலாம்? அநேகருக்கு உதவிய நான்கு வழிகளை இப்போது சிந்திக்கலாம்.

1. திட்டமிடுங்கள்

முக்கியமான காரியங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். “மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று” பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 1:10) செய்ய வேண்டிய வேலைகளில் எது முக்கியமானது எது அவசரமானது என்று பட்டியலிடுங்கள். உதாரணத்திற்கு, அடுத்த நாள் சமையலுக்குத் தேவையான பொருளை வாங்குவது முக்கியமாக இருக்கலாம், ஆனால் அவசரமாக இல்லாதிருக்கலாம். உங்களுக்குப் பிடித்த ஒரு டிவி நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து பார்க்க வேண்டும் என்பது அவசரமாக இருக்கலாம், ஆனால் அது முக்கியமாக இல்லாதிருக்கலாம். *

முன்கூட்டியே திட்டமிடுங்கள். “மழுங்கிய கோடரியைத் தீட்டாமல் பயன்படுத்தினால் வேலைசெய்வது மிகக் கடினமாயிருக்கும். ஞானமே வெற்றிக்கு வழி” என்கிறது பைபிள். (பிரசங்கி [சபை உரையாளர்] 10:10, பொது மொழிபெயர்ப்பு.) கோடரியை முன்னமே தீட்டி வைப்பது எப்படி வேலையைச் சுலபமாக்குமோ அதேபோல் நாம் செய்ய வேண்டிய வேலையை முன்கூட்டியே திட்டமிட்டால் நேரத்தைச் சிறந்த விதத்தில் பயன்படுத்த முடியும். உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணாக்கும் வேலைகளைத் தவிர்த்திடுங்கள். ஒரு வேலையை நீங்கள் திட்டமிட்டதைவிட சீக்கிரமாக முடித்துவிட்டால் அடுத்ததாகச் செய்ய நினைத்த வேலையைச் செய்யுங்கள். ஆக, முன்கூட்டியே திட்டமிட்டால் நிறைய வேலைகளைச் செய்து முடிக்க முடியும்.

தேவையற்ற காரியங்களைத் தவிர்த்திடுங்கள். நேரத்தை உறிஞ்சும் முக்கியமில்லாத வேலையைத் தவிர்க்க கற்றுக்கொள்ளுங்கள். பல வேலைகளை இழுத்துப் போட்டுகொண்டு செய்தால் தேவையில்லாத மன அழுத்தமும் சோர்வும்தான் மிஞ்சும்.

 2. நேரத்தை வீணடிக்காதீர்கள்

தயங்காதீர்கள், தள்ளிப்போடாதீர்கள். ‘காற்று தக்கவாறு இல்லை என்று காத்துக்கொண்டே இருப்போர், விதை விதைப்பதில்லை; வானிலை தக்கபடி இல்லை என்று சொல்லிக் கொண்டே இருப்போர் அறுவடை செய்வதில்லை.’ (பிரசங்கி [சபை உரையாளர்] 11:4, பொ.மொ.) நமக்கிருக்கும் வேலைகளைத் தள்ளிப்போடப் போட நம் நேரம் வீணாகும், வேலையும் குவிந்துகொண்டே போகும். எல்லா சூழ்நிலைகளும் சாதகமாக அமைந்த பிறகு விதைக்கலாம் என்று காத்திருக்கும் விவசாயி கடைசிவரை விதைக்கவும் மாட்டார் அறுவடை செய்யவும் மாட்டார். அதேபோல், எதிர்பாராத சம்பவங்கள் நேரிடுமோ என்ற பயத்திலே நீங்கள் சில தீர்மானங்கள் எடுக்க தயங்கலாம். அல்லது, ஒரு விஷயத்தைப்பற்றி எல்லா நுணுக்கமான விவரங்களும் கிடைக்கும்வரை தீர்மானங்கள் எடுக்காமல் காத்திருக்கலாம். தீர யோசித்துத் தீர்மானங்கள் எடுப்பது முக்கியம்தான். ‘விவேகி தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்’ என்று நீதிமொழிகள் 14:15 சொல்கிறது. ஆனால், எவ்வளவுதான் யோசித்து முடிவு எடுத்தாலும் அதில் சில குறைகள் இருக்கும் என்பதை நினைவில் வைப்பது அவசியம்.—பிரசங்கி 11:6.

எல்லாவற்றிலும் நூறு சதவீதம் எதிர்பார்க்காதீர்கள். ‘கடவுளிடமிருந்து வருகிற ஞானமோ நியாயமானதாக இருக்கிறது’ என்று யாக்கோபு 3:17 சொல்கிறது. ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்ய நினைப்பது நல்லதுதான்; ஆனால், நூறு சதவீதம் சிறப்பாகச் செய்ய நினைப்பது நியாயமாக இருக்காது. சிலசமயம், இது ஏமாற்றத்திலும் தோல்வியிலும்தான் முடியும். உதாரணத்திற்கு, புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள நினைப்பவரால் பிழைகள் இல்லாமல் பேச முடியாது. சொல்லப்போனால், பிழைகளிலிருந்துதான் அவரால் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், எதையும் நூறு சதவீதம் சரியாகச் செய்ய நினைக்கும் ஒருவர், பிழையில்லாமல் பேச நினைப்பார். இப்படிப்பட்ட மனநிலை அவருடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும். எனவே, நம் வரம்புகளைப் புரிந்து தன்னடக்கத்தோடு நடக்க வேண்டும். “தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 11:2, பொ.மொ.) அதோடு, தன்னடக்கம் இருக்கும் ஒருவர் தான் செய்யும் பிழைகளை நினைத்து மட்டுக்குமீறி கவலைப்படாமல் அதை லேசாக எடுத்துக்கொள்வார்.

“பொருளை நீங்கள் பணம் கொடுத்து வாங்குவதில்லை, உண்மையில் நேரத்தைக் கொடுத்துத்தான் வாங்குகிறீர்கள்.”—பிறப்பிலிருந்து மரணம்வரை வாழ்க்கை, [ஆங்கில] புத்தகம்

 3. சமநிலையோடும் எதார்த்தத்தோடும் நடந்துகொள்ளுங்கள்

வேலையில் சமநிலையோடு இருங்கள். “காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி [ஓய்வு] ஒரு கையளவு இருப்பதே மேல்.” (பிரசங்கி [சபை உரையாளர்] 4:6, பொ.மொ.) வேலையே கதியாக இருப்பவர்கள் அவர்களுடைய கடின உழைப்பின் பலன்களை ருசிப்பதே இல்லை. வேறு எதையும் செய்வதற்கு அவர்களுக்குச் சக்தியோ நேரமோ இருப்பதில்லை. சோம்பேறிகளோ எந்த வேலையும் செய்யாமல் வீணாக பொழுதைக் கழிக்கிறார்கள். எனவே, கடினமாக உழைப்பதிலும் அதன் பலனை அனுபவிப்பதிலும் சமநிலையோடு இருக்க வேண்டும் என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. அதில் வரும் சந்தோஷம் ‘கடவுளிடமிருந்து கிடைக்கும் பரிசு.’—பிரசங்கி 5:19, NW.

நன்கு தூங்கி ஓய்வெடுங்கள். “நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்” என்றார் ஒரு பைபிள் எழுத்தாளர். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 4:8, பொ.மொ.) உடல் ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும், மன ரீதியிலும் ஆரோக்கியமாக இருக்க, எட்டு மணிநேர தூக்கம் நம் எல்லோருக்கும் தேவை. போதுமான தூக்கம் ஞாபக சக்தியையும் அறிவாற்றலையும் அதிகரிக்கும், கவனச் சிதறலைத் தவிர்க்கும். தூக்கமின்மையோ மூளையை மந்தமாக்கும், எரிச்சலடைய செய்யும், விபத்துகளுக்குக் காரணமாக இருக்கும்.

எட்ட முடிந்த இலக்குகளை வையுங்கள். “இல்லாத ஒன்றை அடைய விரும்பி அலைந்து திரிவதைவிட உள்ளதே போதும் என்ற மனநிறைவோடிருப்பதே மேல்.” (பிரசங்கி [சபை உரையாளர்] 6:9, பொ.மொ.) இந்த வசனத்திலிருந்து என்ன புரிந்துகொள்கிறோம்? புத்திசாலியான ஒருவர் தன் ஆசைகள் தன்னை ஆட்டிப்படைக்க அனுமதிக்கமாட்டார். முக்கியமாக, நடக்காத ஒன்றையோ நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றையோ எட்ட முயல மாட்டார். கண்ணைக் கவரும் விளம்பரங்களால் ஏமாந்துவிட மாட்டார். தன்னிடம் ‘உள்ளதே போதும் என்ற மனநிறைவோடு’ இருப்பார்.

 4. நல்ல நெறிகளைக் கடைப்பிடியுங்கள்

உங்கள் நெறிகளை யோசித்துப் பாருங்கள். வாழ்க்கைக்கு எது நல்லது, முக்கியமானது, பயனுள்ளது என்பதைச் சீர்தூக்கி பார்க்க நன்நெறிகள் உங்களுக்கு உதவும். வாழ்க்கை என்னும் அம்பைச் சரியான பாதையில் எய்வதற்கு நன்நெறிகள் உதவும். முக்கியமானவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பதற்கும், ஒவ்வொரு நாளையும் நிமிடத்தையும் சிறந்த விதத்தில் பயன்படுத்துவதற்கும் இது உதவுகிறது. ஆனால், அப்படிப்பட்ட நெறிகளை எப்படித் தெரிந்துகொள்வது? அவை பைபிளில் இருப்பதை உணர்ந்த அநேகர் அதன் உதவியை நாடுகிறார்கள்.—நீதிமொழிகள் 2:6, 7.

அன்பைத் தலைசிறந்த பண்பாகக் கொண்டிருங்கள். ‘எல்லோரையும் பரிபூரணமாகப் பிணைப்பது அன்பு’ என்று கொலோசெயர் 3:14 சொல்கிறது. சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உணர, முக்கியமாக குடும்பத்தில் அப்படி உணர, அன்பு மிகவும் அவசியம். அன்பிற்கு முக்கியத்துவம் தராமல் பணத்திற்கும் வேலைக்கும் முக்கியத்துவம் தருபவர்கள் சந்தோஷத்தைத் தொலைத்துவிடுகிறார்கள். இதனால்தான், அன்பின் மகிமையைப் பற்றி பைபிள் அடிக்கடி சொல்கிறது.—1 கொரிந்தியர் 13:1-3; 1 யோவான் 4:8.

ஆன்மீக விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். அன்பான மனைவி, அழகான பிள்ளைகள், நல்ல நண்பர்கள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்தார் ஜெஃப். மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் இவர், மக்கள் உயிருக்காகப் போராடுவதையும் வலியால் துடிப்பதையும் தினம் தினம் பார்த்தார். “இதுதான் வாழ்க்கையா?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். ஒருநாள், யெகோவாவின் சாட்சிகளுடைய சில பிரசுரங்களை வாசித்தார். அவர் மனதில் இருந்த கேள்விக்குத் திருப்தியான பதிலைத் தெரிந்துகொண்டார்.

கற்றுக்கொண்ட விஷயங்களைத் தன் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் பகிர்ந்துகொண்டார். சீக்கிரத்தில் அவர்கள் சாட்சிகளுடன் சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். அது அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்கியது. அதுமுதல் அவர்கள் நேரத்தை ஞானமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். வேதனையும் மரணமும் இல்லாத வாழ்வைப் பெற ஆவலோடு காத்திருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.

“ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று இயேசு கிறிஸ்து சொன்னதை, ஜெஃபின் அனுபவத்திலிருந்து உணர முடிகிறது. (மத்தேயு 5:3) ஆன்மீக விஷயங்களுக்கு நீங்களும் ஏன் கொஞ்சம் நேரம் ஒதுக்கக்கூடாது? அப்படிச் செய்தால், உங்கள் பொன்னான நேரத்தை ஞானமாகப் பயன்படுத்த முடியும், இன்றும், என்றும், என்றென்றும். ▪ (g14-E 02)

^ பாரா. 5 ஏப்ரல் 2010 ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில், “நேரத்தை நன்றாகப் பயன்படுத்த 20 வழிகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.