Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கண்ணீர் ஒரு புரியாத புதிர்

கண்ணீர் ஒரு புரியாத புதிர்

அழுகையில்தான் நம் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. அழுகை குழந்தைகளின் மொழி! பசி, தாகம், அன்பு, அரவணைப்பு என எது தேவைப்பட்டாலும் குழந்தைகள் அழுகின்றன. அதனால் அழுகையை, “வாயுள்ள தொப்புள் கொடி” என ஒரு நிபுணர் வர்ணிக்கிறார். நாம் வளர்ந்து பெரியவர்களான பிறகு நம்முடைய உணர்ச்சிகளையும் தேவைகளையும் வெளிப்படுத்த பல வழிகள் இருந்தாலும், நாம் ஏன் அழுகிறோம்?

நாம் அழுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. துக்கமும் விரக்தியும் நம்மை வாட்டும்போது நாம் அழலாம். மனக் கஷ்டமும் உடல் வேதனையும் நம் கண்ணீருக்குக் காரணமாகலாம். அதேசமயம் அளவில்லா சந்தோஷம் அடையும்போது, நிம்மதி பெருமூச்சு விடும்போது, எதையாவது சாதிக்கும்போது நமக்கு ஆனந்தக் கண்ணீர் வரலாம். மற்றவர்கள் அழுவதைப் பார்க்கும்போதும் நாம் கண்ணீர் விடலாம். இதைப் பற்றி மரியா சொல்கிறார்: “யாராவது அழுவதை பார்த்தா உடனே எனக்கும் அழுகை வரும்.” சில சமயங்களில், ஒரு படம் பார்த்தபோது அல்லது புத்தகம் படித்தபோது நீங்கள் அழுதிருக்கலாம்.

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நம் கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீர் வெளிப்படுத்துகிறது. ‘கொஞ்ச நேரத்தில் நிறைய விஷயங்களை கண்ணீரால் வெளிப்படுத்த முடிகிறது’ என்று அழுகையைப்பற்றி அடல்ட் க்ரையிங் என்ற புத்தகம் சொல்கிறது. கண்ணீர் நம்மைச் செயல்பட வைக்கிறது. உதாரணத்திற்கு, யாராவது துக்கத்தில் அழுவதைப் பார்க்கும்போது நம்மால் சும்மா இருக்க முடியாது. உடனே, அந்த நபரை ஆறுதல்படுத்தவோ அவருக்கு உதவவோ முயற்சி செய்வோம்.

அழுகை, துக்கத்தின் வடிகால் என சில நிபுணர்கள் சொல்கிறார்கள். ஒருவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருந்தால் அது அவருடைய உடல்நலத்தைப் பாதிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அழுவதால் வரும் நன்மைகள் எதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அறிக்கைகள் காட்டுகிறபடி, 85 சதவீத பெண்களும் 73 சதவீத ஆண்களும் அழுதப் பிறகு நன்றாக உணருவதாகச் சொல்கிறார்கள். “சில சமயத்துல, எனக்கு அழணும்னு தோனும். அப்படி அழுததுக்கு அப்புறம் என் மனசு லேசாயிடும், நிம்மதியாகவும் இருக்கும். விஷயங்கள தெளிவா பாக்க முடியும்” என்கிறார் நோமீ என்ற பெண்.

அறிக்கைகள் காட்டுகிறபடி, 85 சதவீத பெண்களும் 73 சதவீத ஆண்களும் அழுதப் பிறகு நன்றாக உணருவதாகச் சொல்கிறார்கள்

இப்படி நிம்மதியாக உணர்வதற்கு அழுகை மட்டுமே காரணமில்லை; நம்முடைய அழுகைக்கு மற்றவர்கள் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். உதாரணத்திற்கு, நாம் கண்ணீர் விடுவதைப்  பார்த்து மற்றவர்கள் நம்மை ஆறுதல்படுத்தும்போது, நமக்கு உதவும்போது நாம் நிம்மதியாக உணர்வோம். ஆனால், நம்மை யாரும் கண்டுகொள்ளாவிட்டால் அது நமக்கு அவமானமாக இருக்கும், நம்மை உதாசீனப்படுத்திவிட்டதுபோல் உணர்வோம்.

நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு கடவுள் செய்திருக்கும் ஓர் அற்புதமான ஏற்பாடுதான் அழுகை. அழுகையைப்பற்றி நமக்குத் தெரிந்த உண்மை இது மட்டுமே. தெரியாத உண்மைகள் இன்னும் எத்தனை எத்தனையோ. ஆம், நம் அழுகை இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது! ▪ (g14-E 03)