Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆரம்பக் கால கையெழுத்துப் பிரதிகளில், கடவுளுடைய பெயர் (அன்றைய எபிரெய எழுத்துக்களில்) நிறைய தடவை காணப்படுகிறது

பைபிளின் கருத்து

கடவுளுடைய பெயர்

கடவுளுடைய பெயர்

கர்த்தர், உன்னதமானவர், அல்லா அல்லது கடவுள் போன்ற மரியாதைக்குரிய பல பட்டப்பெயர்களை வைத்து இன்று லட்சக்கணக்கான மக்கள் கடவுளை அழைக்கிறார்கள். ஆனால், கடவுளுக்கென்று ஒரு பெயர் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்த வேண்டுமா?

கடவுளுடைய பெயர் என்ன?

சிலர் என்ன சொல்கிறார்கள்

 

கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிறைய பேர், கடவுளுடைய பெயர் இயேசு என்பதாக நம்புகிறார்கள். மற்றவர்கள், சர்வவல்லமையுள்ள கடவுள் ஒருவர் மட்டுமே இருப்பதால் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர், கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது சரியல்ல என்று வாதாடுகிறார்கள்.

பைபிள் என்ன சொல்கிறது

 

இயேசு என்பது சர்வவல்லமையுள்ள கடவுளுடைய பெயர் கிடையாது. ஏனென்றால், இயேசு சர்வவல்லமையுள்ள கடவுள் கிடையாது. சொல்லப்போனால், “தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று சொல்லி ஜெபம் செய்யுங்கள் என்று இயேசு தன்னோடு இருந்தவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். (லூக்கா 11:2) “தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று சொல்லி இயேசுவும் கடவுளிடம் ஜெபம் செய்தார்.—யோவான் 12:28.

“நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர். என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன்” என்று கடவுள் பைபிளில் சொல்லியிருக்கிறார். (ஏசாயா 42:8) “யெகோவா” என்பது நான்கு எபிரெய மெய்யெழுத்துக்களைக் கொண்ட (יהוה) கடவுளுடைய பெயரின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்! இந்தப் பெயர் சுமார் 7,000 தடவை எபிரெய வேதாகமத்தில் * இருக்கிறது. “கடவுள்,” “சர்வவல்லமையுள்ளவர்,” “கர்த்தர்” போன்ற பட்டப்பெயர்களைவிட இந்தப் பெயர் அதிகமான தடவை இருக்கிறது. அதேபோல், ஆபிரகாம், மோசே, தாவீது என்ற பெயர்களையும்விட இது அதிகமான தடவை இருக்கிறது.

தன்னுடைய பெயரை மரியாதைக்குரிய விதத்தில் பயன்படுத்தக் கூடாது என்று யெகோவா பைபிளில் எங்கேயும் சொல்லவில்லை. கடவுளுடைய பெயரை அவருடைய ஊழியர்கள் பயன்படுத்தியிருப்பதாக பைபிள் காட்டுகிறது. தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் பெயர் வைத்ததிலிருந்தும் இது தெளிவாகத் தெரிகிறது. எலியா என்பதற்கு “யெகோவா என் கடவுள்” என்றும், சகரியா என்பதற்கு “யெகோவா நினைத்துப் பார்த்திருக்கிறார்” என்றும் அர்த்தம். அன்றாடப் பேச்சுகளிலும் அவர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.—ரூத் 2:4.

தன்னுடைய பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். ‘யெகோவாவுக்கு நன்றி சொல்லவும், அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளவும்’ நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். (சங்கீதம் 105:1) தன்னுடைய ‘பெயரை எப்போதும் நினைக்கிறவர்களை’ குறித்து அவர் மிகவும் சந்தோஷப்படுகிறார்.—மல்கியா 3:16.

“யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.”—சங்கீதம் 83:18.

கடவுளுடைய பெயரின் அர்த்தம் என்ன?

எபிரெய மொழியில், “ஆகும்படி செய்பவர்” என்பதே கடவுளுடைய பெயரின் அர்த்தம் என்று சில அறிஞர்கள் நம்புகிறார்கள். “ஆகும்படி செய்பவர்” என்பதன் அர்த்தம் என்ன? யெகோவா தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற தன்னுடைய படைப்புகளை எதை வேண்டுமானாலும் செய்ய வைக்க முடியும்... தன்னாலும் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்... என்பதுதான் அதன் அர்த்தம்! சர்வவல்லமையுள்ள படைப்பாளரால் மட்டுமே தன்னுடைய பெயருக்கேற்ப வாழ முடியும்.

உங்களுக்கு என்ன நன்மை

 

கடவுளுடைய பெயரைத் தெரிந்துகொள்வது, நீங்கள் அவரைப் பற்றி யோசிக்கும் விதத்தை மாற்றும். அவரிடம் நெருங்கிப்போவதும் உங்களுக்குச் சுலபமாக இருக்கும். ஒருவருடைய பெயரைத் தெரிந்துகொள்ளாமல் உங்களால் எப்படி அவரிடம் நெருங்கிப்போக முடியும்? கடவுள் தன்னுடைய பெயரை வெளிப்படுத்தியிருப்பது, நீங்கள் அவரிடம் நெருங்கி வர வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது.—யாக்கோபு 4:8.

யெகோவா தன்னுடைய பெயருக்கேற்ப தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அதனால்தான், “உங்களுடைய பெயரைத் தெரிந்தவர்கள் உங்கள்மேல் நம்பிக்கை வைப்பார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 9:10) மாறாத அன்பு, இரக்கம், கரிசனை, நியாயம் போன்ற குணங்களோடு யெகோவாவுடைய பெயர் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும்போது, உங்களால் அவர்மேல் அப்படிப்பட்ட நம்பிக்கையை வைக்க முடியும். (யாத்திராகமம் 34:5-7) யெகோவா தன்னுடைய வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றுவார் என்பதும், தன்னுடைய குணங்களுக்கு ஏற்ப நடந்துகொள்வார் என்பதும் நமக்கு எவ்வளவு ஆறுதலைத் தருகிறது!

சர்வவல்லமையுள்ள கடவுளுடைய பெயரைத் தெரிந்துவைத்திருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! இது நமக்கு இன்றும் என்றும் அளவில்லாத ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். “அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்” என்று கடவுள் வாக்குக் கொடுக்கிறார்.—சங்கீதம் 91:14. ▪

“யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.”—யோவேல் 2:32.

வெவ்வேறு மொழிகளில் கடவுளுடைய பெயர்

^ பாரா. 9 நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகள் கடவுளுடைய பெயரை நீக்கிவிட்டு, “கர்த்தர்” என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கின்றன. இன்னும் சில மொழிபெயர்ப்புகள், சில வசனங்களில் அல்லது அடிக்குறிப்புகளில் மட்டுமே கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கின்றன. பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு என்ற பைபிளில், கடவுளுடைய பெயர் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.