Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் இணைக்கும் பாலம்தான் பேச்சுத்தொடர்பு

பெற்றோர்களுக்கு

5: பேச்சுத்தொடர்பு

5: பேச்சுத்தொடர்பு

இதன் அர்த்தம் என்ன?

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதுதான் உண்மையான பேச்சுத்தொடர்பு.

இது ஏன் முக்கியம்?

டீனேஜ் பிள்ளைகளிடம் பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்வது ரொம்பவே சவாலாக இருக்கலாம். ஏனென்றால், சிறு வயதில் உங்கள் பிள்ளைகள் மனதில் இருப்பதையெல்லாம் உங்களிடம் சொல்லியிருக்கலாம். ஆனால், டீனேஜ் வயதை எட்டிய பிறகு உங்களிடம் அவ்வளவாகப் பேசாமல் இருக்கலாம். அதனால், என்ன யோசிக்கிறார்கள், எப்படி உணருகிறார்கள் என்பதே உங்களுக்குத் தெரியாமல் போய்விடலாம். அவர்களுக்குப் பேச விருப்பமில்லாததுபோல் தெரிந்தாலும், இந்த டீனேஜ் வயதில்தான் நீங்கள் அவர்களோடு அதிகமாகப் பேச வேண்டும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

உங்கள் பிள்ளை பேச விரும்பும் சமயத்தில் பேசுங்கள். இரவு ரொம்ப நேரம் ஆகிவிட்டாலும் பேசுங்கள்.

“‘காலைலயிருந்து உன்கூடதான இருந்தேன்! இப்போதான் உனக்கு பேசணுமா?’னு நீங்க உங்க பிள்ளைகிட்ட சொல்ல தோணலாம். ஆனா பிள்ளைங்க, மனசு திறந்து பேச வர்றப்போ அப்படி சொன்னா நல்லாவா இருக்கும்? எல்லா அப்பா அம்மாவும் பிள்ளைங்க பேசணும்னுதான ஏங்குறாங்க?”—லீசா.

“நான் சீக்கிரமா தூங்கணும்னுதான் நினைப்பேன், ஆனா என் டீனேஜ் பிள்ளைங்ககிட்ட நான் சுவாரஸ்யமா பேசுனதெல்லாம் நடுராத்திரிக்கு அப்புறம்தான்.”—ஹெர்பெர்ட்.

பைபிள் நியமம்: “ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.”—1 கொரிந்தியர் 10:24.

கவனச்சிதறல்களைத் தவிர்த்திடுங்கள். “என்னோட பிள்ளைங்க என்கிட்ட பேசும்போது சிலசமயம் என் மனசுல வேற ஏதேதோ ஓடிகிட்டு இருக்கும். ஆனா, அவங்க அதை கண்டுபிடிச்சிடுவாங்க; அவங்கள ஏமாத்திட முடியாது!”

உங்கள் விஷயத்திலும் இது உண்மையென்றால், உங்கள் பிள்ளை பேச வரும்போது டிவியை அணைத்துவிடுங்கள், ஃபோனை ஒரு பக்கமாக வைத்துவிடுங்கள். உங்கள் பிள்ளை சொல்வதை நன்றாகக் கவனியுங்கள்; அவன்/ள் உப்புச்சப்பில்லாத விஷயங்களைப் பேசுவதுபோல் தெரிந்தாலும், அவன்/ள் சொல்கிற விஷயம் ரொம்பவே முக்கியம் என்பதுபோல் காதுகொடுத்துக் கேளுங்கள்.

“பிள்ளைங்களோட உணர்ச்சிகள நீங்க முக்கியமானதா நினைக்குறீங்கனு அவங்க புரிஞ்சுக்கணும். அப்படி புரிஞ்சுக்கலன்னா, அவங்க உங்ககிட்ட எதையும் சொல்ல மாட்டாங்க, எல்லாத்தையும் அவங்க மனசுக்குள்ளயே புதைச்சு வைச்சிருவாங்க. இல்லன்னா, அவங்க மனசுல இருக்குறத வேற யார்கிட்டயாவதுதான் சொல்வாங்க.”—மரான்டா.

“உங்க பிள்ளை யோசிக்குற விதம் தப்பா இருந்துச்சுனா, ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க.”—ஆன்தனி.

பைபிள் நியமம்: “நீங்கள் கேட்கிற விதத்துக்குக் கவனம் செலுத்துங்கள்.”—லூக்கா 8:18.

பேசுவதற்கான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சிலசமயங்களில் பிள்ளைகள், பெற்றோர்களுடைய முகத்தைப் பார்த்து உட்கார்ந்திருக்கும்போது, பேசத் தயங்குவார்கள்.

“நாங்க கார்ல போற சந்தர்ப்பங்கள பயன்படுத்திக்குவோம். கார்ல நேருக்கு நேர் உட்காராம பக்கத்து பக்கத்துல உட்கார்ரதுனால, எங்களால நிறைய பேச முடிஞ்சிருக்கு.”—நிக்கோல்.

ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும் நேரங்களைப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

“ராத்திரி சாப்பாட்டு நேரத்துல, அன்னைக்கு நாள் முழுசும் நடந்த நல்லது, கெட்டத பேசுவோம். இப்படி செய்றதுனால, எங்களால ஒற்றுமையா இருக்க முடியுது, பிரச்சனைகள தனியா சமாளிக்க வேண்டியதில்லங்கறத புரிஞ்சுக்கவும் முடியுது.”—ராபின்.

பைபிள் நியமம்: “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.”—யாக்கோபு 1:19.