Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குறிக்கோள்களைக் கட்டிட வரைபடங்களுக்கு ஒப்பிடலாம்; முயற்சி செய்தால், அவற்றை நிஜமானதாக ஆக்க முடியும்

இளைஞர்களுக்கு

12: குறிக்கோள்கள்

12: குறிக்கோள்கள்

இதன் அர்த்தம் என்ன?

குறிக்கோள் வைப்பது என்றால் ஏதோவொன்றைப் பற்றி வெறுமனே கனவு காண்பதோ, ஏதோவொன்றுக்காக ஆசைப்படுவதோ அல்ல. உண்மையான குறிக்கோள்களில்... திட்டமிடுவது, வளைந்துகொடுப்பது, குறுக்கு வழியைத் தேடாமல் கடினமாக வேலை செய்வது ஆகியவை உட்படுகின்றன.

குறுகிய காலக் குறிக்கோள் (சில நாட்களில் அல்லது வாரங்களில் அடைய முடிந்தது), கொஞ்சக் காலக் குறிக்கோள் (சில மாதங்களில்), நீண்ட காலக் குறிக்கோள் (ஒரு வருஷத்தில் அல்லது அதற்கும் மேல்) என்று குறிக்கோள்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். குறுகிய காலக் குறிக்கோள்களையும் கொஞ்சக் காலக் குறிக்கோள்களையும் வைப்பதன் மூலம் நீண்ட காலக் குறிக்கோள்களை அடைந்துவிடலாம்.

இது ஏன் முக்கியம்?

குறிக்கோள்களை அடையும்போது உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும், நட்பு பலப்படும், சந்தோஷம் பூத்துக்குலுங்கும்.

தன்னம்பிக்கை: சின்னச் சின்னக் குறிக்கோள்களை வைத்து அவற்றை அடையும்போது கஷ்டமான குறிக்கோள்களையும் அடைந்துவிட முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படும். அதோடு, அன்றாடப் பிரச்சினைகளை, உதாரணத்துக்கு நண்பர்களிடமிருந்து வரும் தொல்லைகளை, சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகமாகும்.

நட்பு: குறிக்கோள்களை வைத்து அவற்றை அடைவதற்குக் கடினமாக உழைக்கிறவர்களோடு இருக்கவே மற்றவர்கள் விரும்புவார்கள். அதோடு, ஒரே குறிக்கோளை அடைவதற்கு நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து உழைக்கும்போது, அவர்களுடைய நட்பு பலமாகும்.

சந்தோஷம்: குறிக்கோள்களை வைத்து அவற்றை அடையும்போது, எதையோ சாதித்துவிட்ட உணர்வு உங்களுக்குள் ஏற்படும்.

“குறிக்கோள் வைக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால எப்பவும் என்னை பிஸியா வைச்சுக்க முடியுது; அடுத்தடுத்து குறிக்கோள் வைக்க என்னை தூண்டுது. ஒரு குறிக்கோள அடைஞ்சதுக்கு அப்புறம், ‘சூப்பர்! என்னால நம்பவே முடியல! நினைச்சத செஞ்சு முடிச்சுட்டேன்’னு சொல்லிக்குவீங்க.”—க்ரிஸ்டோஃபர்.

பைபிள் நியமம்: “காற்றையே பார்த்துக்கொண்டிருக்கிறவன் விதைக்க மாட்டான், மேகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறவன் அறுவடை செய்ய மாட்டான்.”—பிரசங்கி 11:4.

நீங்கள் என்ன செய்யலாம்?

குறிக்கோள்கள் வைப்பதற்கும் அவற்றை அடைவதற்கும் இந்தப் படிகளை எடுங்கள்:

யோசியுங்கள். உங்கள் குறிக்கோள்களை யோசித்துப் பார்த்து பட்டியலிடுங்கள்; பிறகு, எதை முதலாவது, இரண்டாவது, மூன்றாவது அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதன்படி அவற்றை வரிசைப்படுத்தி எழுதுங்கள்.

திட்டமிடுங்கள். ஒவ்வொரு குறிக்கோளை வைக்கும்போதும் இப்படிச் செய்யுங்கள்:

  • அதை அடைவதற்கு நியாயமான கால வரம்பை (டெட்லைனை) தீர்மானியுங்கள்.

  • அதில் உட்பட்டுள்ள படிகளைத் திட்டமிடுங்கள்.

  • என்ன தடைகள் வரலாம் என்பதையும், அவற்றை எப்படிச் சமாளிக்கலாம் என்பதையும் யோசியுங்கள்.

செயல்படுங்கள். ஒரு குறிக்கோளை அடைய உதவுகிற எல்லா விஷயங்களையும் செய்து முடிக்கும்வரை காத்திருக்காதீர்கள், உடனடியாகச் செயல்பட ஆரம்பியுங்கள். ‘குறிக்கோள அடையறதுக்கு முதல்ல நான் என்ன செய்யணும்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பிறகு, அதைச் செய்யுங்கள். ஒவ்வொரு படியையும் சரியாகச் செய்திருக்கிறீர்களா என்று கவனியுங்கள்.

பைபிள் நியமம்: “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.”—நீதிமொழிகள் 21:5.