Skip to content

நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்

நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்

நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்

பைபிளை நம்பமுடியாதென சிலர் சொல்லுகின்றனர், அவர்களுடைய கருத்துக்கள் விரிவாய் ஏற்கப்படுகின்றன. இதனால் இன்று பலர் பைபிள் சொல்வதை நம்பத்தகாததென தள்ளிவிடுகின்றனர்.

மறுபட்சத்தில், இயேசு கிறிஸ்து ஜெபத்தில் கடவுளிடம்: “உம்முடைய வசனமே சத்தியம்,” என்று சொன்னது, அதில் நம்பிக்கையை மேலும் ஊக்குவிக்கிறது. கடவுளால் ஏவப்பட்டதென பைபிள்தானேயும் உரிமை பாராட்டுகிறது.—யோவான் 17:17; 2 தீமோத்தேயு 3:16.

இதைப்பற்றி நீங்கள் நினைப்பதென்ன? பைபிளை நம்புவதற்கு நல்ல ஆதாரம் உண்டா? அல்லது பைபிள் நம்பத்தகாதது, தன்னில்தானே முரண்படுகிறது, மாறுபாடுள்ளது என்பதற்கு உண்மையான அத்தாட்சி உண்டா?

அது தன்னில்தானே முரண்படுகிறதா?

பைபிள் தன்னில்தானே முரண்படுகிறதென்று சிலர் வாதாடுகையில், உண்மையான ஒரு உதாரணத்தை எவராவது எப்போதாவது உங்களுக்குக் காட்டினதுண்டா? கூர்ந்த ஆராய்ச்சியைத் தாங்கி நிற்கக்கூடிய ஒன்றை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. குறிப்பிட்ட பைபிள் விவரங்களில் முன்பின் இசைவற்று முரண்பாடுகள் இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், நுட்ப விவரங்களையும் காலங்களின் சூழ்நிலைமைகளையும் பற்றிய அறிவு குறைவே பொதுவாய்ப் பிரச்னையாயிருக்கிறது.

உதாரணமாக, சிலர், பைபிளில் ஒரு முரண்பாடென தாங்கள் கருதுவதைக் கவனத்துக்குக் கொண்டுவருவதாக எண்ணி, ‘காயீன் தன் மனைவியை எங்கிருந்து அடைந்தான்?’ என்று கேட்பார்கள். ஆதாம் ஏவாளுக்கு இருந்த பிள்ளைகள் காயீனும் ஆபேலும் மாத்திரமேயென எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால் இந்த எண்ணம், பைபிள் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொண்டதன் பேரிலேயே ஆதாரங் கொண்டிருக்கிறது. ஆதாம் “குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்” என்று பைபிள் விளக்குகிறது. (ஆதி. 5:4) இதன்படி காயீன் தன் சகோதரிகளில் ஒருத்தியை அல்லது ஒருவேளை தம்பி அல்லது தங்கையின் மகளை மணஞ் செய்தான்.

குறைகாண்பவர்கள் வெறும் முரண்பாடுகளுக்காகவே அடிக்கடி தேடுகின்றனர், ஆகவே அவர்கள் பின்வருமாறு சொல்லலாம்: “இயேசுவிடம் ஒரு தயவுக்காக வேண்டிக்கொள்ள நூற்றுக்கு அதிபதி வந்தான் என்று பைபிள் எழுத்தாளன் மத்தேயு சொல்லுகிறான், அதே சமயம் இதற்கு நேர்மாறாக, லூக்கா, தயவுகேட்க பிரதிநிதிகளை அனுப்பினதாகக் கூறுகிறான். இதில் எது சரி? (மத்தேயு 8:5, 6; லூக்கா 7:2, 3) ஆனால் இது உண்மையில் ஒரு முரண்பாடா?

தொழிலாளர் நடப்பித்த நடவடிக்கை அல்லது வேலையின் பாராட்டு அதற்கு உண்மையில் பொறுப்புள்ளவனுக்குக் கொடுக்கப்பட்டால், நியாயமுள்ள ஆள் முரண்பாடென விவாதிக்கமாட்டான். உதாரணமாக, ஒரு பெருஞ்சாலையை அவனுடைய பொறிவலாளர்களும் தொழிலாளர்களும் உண்மையில் கட்டினபோதிலும், மாநகர் முதல்வர் பெருஞ்சாலையைக் காட்டினாரென்று கூறும் ஓர் அறிக்கையைப் பிழையென நீங்கள் கருதுவீர்களா? நிச்சயமாகவே இல்லை! அதைப்போலவே, லூக்கா எழுதுவதுபோல், அந்த வேண்டுகோள் சில பிரதிநிதிகளின் மூலமாய்ச் செய்யப்பட்டபோதிலும், நூற்றுக்கு அதிபதி இயேசுவை வேண்டிக்கொண்டான் என்று மத்தேயு சொல்வது முரண்பாடாக இல்லை.

மேலுமதிக நுட்ப விவரங்களைத் தெரிந்துகொண்டால், பைபிளில் முரண்பாடுகளைப்போல் தோன்றுபவை மறைந்துபோம்.

சரித்திரமும் விஞ்ஞானமும்

பைபிள் சரித்திரப் பூர்வமாய்த் திருத்தமாயிருப்பது ஒரு காலத்தில் விரிவாய்ச் சந்தேகிக்கப்பட்டது. உதாரணமாக, குறைகாண்பவர்கள், பைபிளில் குறிப்பிட்டுள்ள ஆட்கள், அசீரியாவின் அரசன் சார்கான், பாபிலோனின் பெல்ஷாத்சார், ரோம தேசாதிபதி பொந்தியு பிலாத்து ஆகியோர் உண்மையில் உயிர்வாழ்ந்ததைப் பற்றிக் கேள்வி எழுப்பினர். ஆனால் சமீப கண்டுபிடிப்புகள் பைபிள் விவரங்களின் உண்மையை ஒன்றன்பின் மற்றொன்றாகத் தொடர்ந்து உறுதி செய்திருக்கின்றன. இதனால் சரித்திராசிரியர் மோஷி பெர்ல்மன் பின்வருமாறு எழுதினார்: “பழைய ஏற்பாட்டின் சரித்திரம் பூர்வ பகுதிகளின் உண்மையையுங்கூட சந்தேகித்த சந்தேக வாதிகள், திடீரென்று தங்கள் கருத்துக்களை மறு ஆய்வு செய்து மாற்றியமைக்கத் தொடங்கினர்.”

நாம் பைபிளை நம்பவேண்டுமென்றால், விஞ்ஞானக் காரியங்களிலும் அது திருத்தமாயிருக்க வேண்டும். அவ்வாறு இருக்கிறதா? சிறிது காலத்துக்கு முன்பாக, விஞ்ஞானிகள் பைபிளுக்கு முரணாக சர்வலோகத்துக்குத் தொடக்கம் இருக்கவில்லை என்று உறுதியாய்க் கூறினர். ஆயினும், வான்கணிப்பாளர் ராபர்ட் ஜஸ்ட்ரோ இதைத் தவறென நிரூபிக்கும் மேலும் புதிய தகவலைக் குறிப்பிட்டு, பின்வருமாறு விளக்கினார்: “இந்த வானாராய்ச்சி சார்ந்த அத்தாட்சி இவ்வுலகத்தின் தொடக்கத்தைப் பற்றிப் பைபிளில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கு எப்படி வழிநடத்துகிறதென இப்பொழுது நாம் காண்கிறோம். நுட்ப விவரங்கள் வேறுபடுகின்றன, ஆனால் வானாராய்ச்சியிலும் ஆதியாகமத்திலுள்ள பைபிளின் விவரங்களிலும் முக்கிய மூலக்கருத்துக்கள் ஒன்றே.”—ஆதியாகமம் 1:1.

பூமியின் உருவம் சம்பந்தமான தங்கள் கருத்துக்களையும் மனிதர் மாற்றியிருக்கின்றனர். “கடற்பயணங்களின் கண்டுபிடிப்பு, உலகம் உருண்டையாக இருக்கிறது, பெரும்பான்மையர் நம்பினதுபோல் தட்டையாக இல்லையெனக் காட்டின, என்று தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா விளக்குகிறது. ஆனால் பைபிள் எப்போதுமே திருத்தமாயிருந்தது! அந்தக் கடற்பயணங்களுக்கு 2,000-த்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னரே பைபிளில் ஏசாயா 40:22-ல்: “அவர் பூமி உண்டையின்மேல்,” அல்லது மற்ற மொழிபெயர்ப்புகளின்படி “பூகோளத்தின்மேல்,” (டூவே), “உருண்டையான பூமியின்மேல்,” (மொஃபட்) வீற்றிருக்கிறவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இவ்வாறு மனிதர் எவ்வளவு அதிகமாய்ப் படித்தறிகிறார்களோ அவ்வளவுக்கு அதிகமாய்ப் பைபிளை நம்பலாமென்ற அத்தாட்சியும் பெருகுகிறது. பிரிட்டிஷ் பொருட்காட்சிச்சாலையின் முன்னாள் மேலாளர், சர் பிரட்ரிக் கெனியன் பின்வருமாறு எழுதினார். “அறிவின் பெருக்கத்திலிருந்து பைபிள் மேலும் உறுதிப்படுமேயன்றி வேறு எதுவும் ஆகாதென்று, விசுவாசம் குறிப்பிடுவதை ஏற்கெனவே அடைந்த பலன்கள் உறுதிப்படுத்துகின்றன.”

எதிர்காலத்தை முன்னறிவித்தல்

‘நீதியுள்ள புதிய வானங்களையும் புதிய பூமியையும்’ பற்றிய அதன் வாக்குகள் உட்பட, எதிர்காலத்தைப்பற்றி பைபிள் முன்னறிவிப்பவற்றை நாம் உண்மையில் நம்பலாமா? (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4) பைபிளின் நம்பத்தக்கத் தன்மையைப் பற்றிக் கடந்த காலத்தில் என்ன சான்று இருந்திருக்கிறது? பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நுட்ப விவரமாய்த் தவறாமல் அப்படியே நிறைவேறின சான்றுகள் திரும்பத் திரும்பக் காணப்படுகின்றன!

உதாரணமாக, பாபிலோன் வல்லரசு கவிழ்க்கப்படுவதை அது நடப்பதற்கு ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பே பைபிள் முன்னறிவித்தது. உண்மையில், பெர்சியரோடு ஒன்றுசேர்ந்த மேதியரே வெல்பவர்களென பெயர் குறிப்பிட்டது. பெர்சிய அரசனாகிய கோரேசு பிறப்பதற்கு முன்பே அவன் இதை வென்று கைப்பற்றுவதில் பிரதானமானவனாக இருப்பானென பைபிள் முன்னறிவித்தது. பாபிலோனுக்குப் பாதுகாப்பாயிருந்தத் தண்ணீர்கள், ஐப்பிராத் நதி, “வறண்டுபோம்,” மேலும் “[பாபிலோனின்] வாசல்கள் பூட்டாதிருக்”கும் என்றும் அது சொன்னது.—எரேமியா 50:38; ஏசாயா 13:17-19; 44:27-45:1.

சரித்திராசிரியன் ஹெரோடோடஸ் அறிவித்தபடி, இந்தத் திட்டவட்டமான நுட்பவிவரக் கூற்றுகள் நிறைவேறின. இன்னும், முடிவில் பாபிலோன் குடியிருப்பற்ற பாழ்நிலங்களாகும் என்று பைபிளில் முன்னறிவிக்கப்பட்டது. இவ்வாறே நடந்தது இன்று பாபிலோன் மனிதர் குடியிருப்பில்லாத பாழடைந்த மண்மேடுகள் நிறைந்துள்ளது. (ஏசாயா 13:20-22; எரேமியா 51:37, 41-43) மேலும் திகைக்க வைக்கும் நிறைவேற்றத்தை அடைந்துள்ள மற்றத் தீர்க்கதரிசனங்களும் பைபிளில் நிறைய உள்ளன.

அப்படியானால் தற்போதைய உலகக் காரிய ஒழுங்குமுறையைக் குறித்து பைபிள் என்ன முன்னறிவிக்கிறது? அதில் சொல்லியிருப்பதாவது: “இவ்வுலகத்தின் முடிவு யுகம் இக்கட்டுகளின் காலமாயிருக்கும். மனிதர் பணத்தையும் தங்களையுமேயன்றி எதையும் நேசியார்; அவர்கள் அகந்தையுள்ளவர்களும் தற்பெருமை பேசுகிறவர்களும், பழிதூற்றுபவருமாயிருப்பர்; பெற்றோரை மதியார், நன்றியறிதலிராது, பக்தியிராது, சுபாவ அன்பிராது . . . கடவுளுடைய இடத்தில் இன்பத்தை வைக்கும் மனிதராயிருப்பர், புறத்தோற்ற வகையான மதத்தைத் தொடர்ந்து அனுசரிப்பர், ஆனால் அதன் மெய்ம்மையை மறுதலிப்பர்.”—2 தீமோத்தேயு 3:1-5, தி நியூ இங்கிலிஷ் பைபிள்.

நிச்சயமாகவே இதன் நிறைவேற்றத்தை இப்பொழுது நாம் காண்கிறோம்! “இவ்வுலகத்தின் முடிவு யுகத்தில் பின்வருமாறு காரியங்கள் நடக்குமெனவும் பைபிள் முன்னறிவிக்கிறது: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும் உண்டாகும்.” கூடுதலாக, “பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும் கொள்ளை நோய்களும் உண்டாகும்.”—மத்தேயு 24:7; லூக்கா 21:11.

நிச்சயமாகவே, பைபிள் தீர்க்கதரிசனங்கள் இன்று நிறைவேற்றமடைந்து கொண்டிருக்கின்றன! அப்படியானால், பின்வருபவற்றைப் போன்ற இனிமேலும் நிறைவேற்றமடைய வேண்டிய வாக்குத்தத்தங்களைப் பற்றி என்ன: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்,” மேலும், “அவர்கள் தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாக அடிப்பார்கள். . . .; இனி அவர்கள் யுத்தம் கற்பதுமில்லை.”—சங்கீதம் 37:29; ஏசாயா 2:4, தி.மொ.

‘இவ்வளவு சிறப்பானது நடைமுறையில் நடக்க முடியாதது,’ என்று சிலர் சொல்லலாம். ஆனால், நம்முடைய சிருஷ்டிகர் வாக்குக் கொடுக்கும் எதையும் சந்தேகிப்பதற்கு மெய்யாகவே எந்தக் காரணமும் நமக்கில்லை. அவருடைய வார்த்தையை நம்பலாம்! (தீத்து 1:2) மேலுமான அத்தாட்சியை ஆராய்வதன் மூலம் இதைப் பற்றி உங்கள் நம்பிக்கை மேலும் மேலுமதிகமாய் உறுதிப்படும்.

மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிக்கப்படாத மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

“அறிவின் பெருக்கத்திலிருந்து பைபிள் மேலும் உறுதிப்படுமேயன்றி வேறு எதுவும் ஆகாதென்று, விசுவாசம் குறிப்பிடுவதை ஏற்கெனவே அடைந்த பலன்கள் உறுதிப்படுத்துகின்றன.”