Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள்

பைபிள்

பைபிள்

சொற்பொருள் விளக்கம்: மனிதவர்க்கத்துக்கான யெகோவாவின் எழுதப்பட்ட வார்த்தை. இதைப் பதிவு செய்ய அவர் 16 நூற்றாண்டுகளடங்கிய காலப்பகுதியினூடே, சுமார் 40 மனிதர்களைச் செயலாளர்களாகப் பயன்படுத்தினார். ஆனால் அது எழுதப்படுவதைக் கடவுள்தாமே அவருடைய ஆவியின்மூலம் வழிநடத்துவதில் ஈடுபட்டார். இவ்வாறு, இது கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. இந்தப் பதிவின் பெரும் பகுதியானது, யெகோவாவின் நேரடியாகச் செய்யப்பட்ட அதிகார அறிவிப்புகளாலும், கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மற்றும் செயல்நடவடிக்கைகளின் நுட்ப விவரங்களாலும் ஆகியது. இவற்றில், கடவுள் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் கட்டளையிடும் தகுதிகளையும் மற்றும் பூமிக்குரிய தம்முடைய மகத்தான நோக்கத்தை நிறைவேற்ற அவர் செய்யவிருப்பதையும் பற்றிய அறிவிப்புகளை நாம் காண்கிறோம். இந்தக் காரியங்களுக்கான நம்முடைய போற்றுதலை ஆழப்படுத்த, தனிப்பட்ட நபர்களும் தேசங்களும் கடவுளுக்குச் செவிகொடுத்து அவருடைய நோக்கத்திற்கு இசைவாக நடக்கையில் என்ன நேரிடும் என்பதையும், தங்களுடைய சொந்த வழிகளில் செல்லும்போது உண்டாகும் விளைவுகளையும் நடைமுறையில் மெய்ப்பித்துக் காட்டும் விவரப்பதிவையும் யெகோவா பைபிளில் பாதுகாத்து வைத்திருக்கிறார். இந்த நம்பத்தகுந்த வரலாற்றுப் பதிவின்மூலம் மனிதவர்க்கத்துடன் தம்முடைய செயல்தொடர்புகளையும், இவ்வாறு தம்முடைய மகத்துவமுள்ள சொந்த தனிப்பண்பியல்புகளையும் யெகோவா நமக்குத் தெரியப்படுத்துகிறார்.

பைபிளைக் கருத்துடன் கவனிக்க வேண்டியதற்குக் காரணங்கள்

பைபிள், மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகராகிய கடவுள் அருளியதென அதில்தானே சொல்லியிருக்கிறது

2 தீமோ. 3:16, 17: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”

வெளி. 1:1: “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும் . . . வெளிப்படுத்தினதுமான விசேஷம்.”

2 சாமு. 23: 1, 2: “ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்: கர்த்தருடைய ஆவியானவர் [ஆவி, NW] என்னைக்கொண்டு பேசினார் [பேசியது]; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.”

ஏசா. 22:15, தி.மொ.: “சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொன்னது.”

மனிதவர்க்கத்துக்கான கடவுளுடைய செய்தி பூமி முழுவதும் கிடைக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். பைபிள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, சுமார் 1,800 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதனுடைய விநியோகம் கோடிக்கணக்கில் இருக்கிறது. உலக புத்தக என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு சொல்லுகிறது: “சரித்திரத்திலேயே பைபிள்தான் அதிகப் பரவலாக வாசிக்கப்படும் புத்தகம். அதுவே மிக அதிகச் செல்வாக்குச் செலுத்தும் புத்தகமாயும் இருக்கலாம். வேறு எந்தப் புத்தகத்தையும்விட பைபிளே மிக அதிக பிரதிகள் விநியோகிக்கப்பட்ட புத்தகம். மேலும் இதுவே வேறு எந்தப் புத்தகத்தையும்விட அதிக தடவைகள் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.”—(1984), புத். 2, பக். 219.

பைபிள் தீர்க்கதரிசனம் உலக நிலைமைகளின் உட்பொருளை விளக்குகிறது

அநேக உலகத் தலைவர்கள், மனிதவர்க்கம் அழிவின் எல்லைக்கோட்டில் இருக்கிறதென ஒத்துக்கொள்கின்றனர். பைபிள், இந்த நிலைமைகளை வெகு காலத்துக்கு முன்னதாகவே முன்னறிவித்தது; அது அவைகளின் உட்பொருளையும் விளைவு என்னவாயிருக்கும் என்பதையும் விளக்குகிறது. (2 தீமோ. 3:1-5; லூக்கா 21:25-31) எக்கணமும் நிகழ இருக்கிற உலக அழிவைத் தப்பிப்பிழைத்து, இங்கே பூமியில் நீதியான நிலைமைகளின்கீழ் நித்திய ஜீவனடையும் வாய்ப்பைப்பெற, நாம் என்ன செய்யவேண்டுமென அது நமக்குச் சொல்கிறது.—செப். 2:3; யோன் 17:3; சங். 37:10, 11, 29.

வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவிசெய்கிறது

பின்வருபவற்றைப்போன்ற கேள்விகளுக்கு அது பதிலளிக்கிறது: உயிர் எங்கிருந்து வந்தது? (அப். 17:24-26) நாம் ஏன் இங்கு இருக்கிறோம்? ஒருசில ஆண்டுகளே வாழ்ந்து, வாழ்க்கையிலிருந்து நம்மால் பெறக்கூடியதைப் பெற்று, பின்பு மரிப்பதுதானா?—ஆதி. 1:27, 28; ரோமர் 5:12; யோன் 17:3; சங். 37:11; சங். 40:8.

நீதியை நேசிக்கிறவர்கள் மிக அதிகம் விரும்பும் அதே காரியங்களை நாம் எவ்வாறு பெறமுடியுமென பைபிள் காட்டுகிறது

உண்மையிலேயே ஒருவரையொருவர் நேசிக்கும் ஆரோக்கியமுள்ள கூட்டாளிகளை எங்கே காணலாம் (யோவான் 13:35), நமக்கும் நம்முடைய குடும்பங்களுக்கும் போதிய உணவு இருக்குமென எது உறுதிதர முடியும் (மத். 6:31-33; நீதி. 19:15; எபே. 4:28), நம்மைச் சூழ்ந்திருக்கும் கடினமான சூழ்நிலைமைகளின் மத்தியிலும் நாம் எவ்வாறு சந்தோஷமுள்ளவர்களாக இருக்கலாம் (சங். 1:1, 2; 34:8; லூக்கா 11:28; அப். 20:35) ஆகியவற்றை பைபிள் நமக்குச் சொல்கிறது.

கடவுளுடைய ராஜ்யமாகிய அவருடைய அரசாங்கம், தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையை நீக்கிவிடும் என்று அது விளக்குகிறது. (தானி. 2:44), மேலும் அதன் ஆட்சியின்கீழ் மனிதவர்க்கம் பரிபூரண ஆரோக்கியத்தையும் நித்திய ஜீவனையும் அனுபவிக்க முடியும் என்றும் விவரிக்கிறது.—வெளி. 21:3, 4; ஏசாயா 33:24-ஐ ஒத்துப்பாருங்கள்.

கடவுள் அருளியதாக உரிமைபாராட்டுவதும், உலக நிலைமைகளின் உட்பொருளையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் விளக்குவதும், நம்முடைய பிரச்னைகள் எவ்வாறு தீர்க்கப்படுமென காட்டுவதுமான ஒரு புத்தகம் கருத்தான கவனிப்புக்குத் தகுதிவாய்ந்தது.

ஏவப்பட்டதற்கான அத்தாட்சிகள்

எதிர்காலத்தின் நுட்பவிவர அறிவைப் பிரதிபலிக்கும் தீர்க்கதரிசனங்களால் அது நிரம்பியிருக்கிறது—மனிதருக்கு இயலாத ஒன்று

2 பேதுரு 1:20, 21: “வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.”

தீர்க்கதரிசனம்: ஏசா. 44:24, 27, 28; 45:1-4, தி.மொ.: “யெகோவா சொல்லுகிறதைக் கேள்: . . . நான் ஆழத்தைப் பார்த்து, வற்றிப்போ என்றும் உன் நதிகளை வறண்டுபோகச் செய்கிறேன் என்றும் சொல்லுகிறேன். கோரசைப்பற்றி, அவன் என் மேய்ப்பன், எனக்கு இஷ்டமானதை அவன் நிறைவேற்றி முடிப்பான் என்று சொல்லுகிறேன்; எருசலேமைப்பற்றி, அது கட்டப்படும் என்றும் தெய்வாலயத்தைப்பற்றி, அதற்கு அஸ்திபாரம் போப்படும் என்றும் சொல்லுகிறேன். நான் அபிஷேகம்பண்ணின கோரசுக்கு முன்பாக ஜாதிகளை அடக்கி ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும் அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாமல் கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும் நான் அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டேன் என்று உரைத்த யெகோவா கோரசுக்குச் சொல்வதைக் கேளுங்கள்: நான் உனக்கு முன்னேபோய்க் கரடுமுரடானவைகளைச் செம்மையாக்குவேன், செப்புக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறி[ப்பேன்]. . . . என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும் நான் தெரிந்தெடுத்த இஸ்ரவேலினிமித்தமும் நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்[தேன்].” (சுமார் பொ.ச.மு. 732-ல் ஏசாயா எழுதி முடித்தான்.)

நிறைவேற்றம்: இந்தத் தீர்க்கதரிசனம் எழுதப்பட்டபோது கோரசு பிறந்திருக்கவில்லை. யூதர்கள் பொ.ச.மு. 617-607 வரையாக பாபிலோனுக்கு நாடுகடத்தப்படவில்லை மற்றும் எருசலேமும் அதன் ஆலயமும் பொ.ச.மு. 607 வரை அழிக்கப்படவில்லை. பொ.ச.மு. 539-லிருந்து இந்தத் தீர்க்கதரிசனம் நுட்பவிவரமாக நிறைவேற ஆரம்பித்தது. கோரசு ஐப்பிராத் நதியின் நீரை ஒரு செயற்கை ஏரிக்குத் திருப்பினான். நகரத்தில் விருந்து நடந்துகொண்டிருக்கையில் பாபிலோனின் நதிவாசல்கள் அஜாக்கிரதையாய்த் திறந்துவிடப்பட்டிருந்தன. கோரசின் தலைமையின்கீழ் மேதிய-பெர்சியர் பாபிலோனைக் கைப்பற்றினர். அதன்பின், கோரசு சிறையிருப்பிலிருந்த யூதர்களை விடுதலைசெய்து எருசலேமில் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கான கட்டளைகளோடு எருசலேமுக்கு அவர்களை அனுப்புவித்தான்.—தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா (1956), புத். III, பக். 9; பூர்வ கடந்த காலத்திலிருந்துவரும் ஒளி (பிரின்ஸ்டன், 1959), ஜாக் ஃபினிகன், பக். 227-229; “வேதவாக்கியங்களெல்லாம் கடவுளால் ஏவப்பட்டது பயனுடையது” (நியு யார்க், 1983), பக். 282, 284, 295.

தீர்க்கதரிசனம்: எரே. 49:17, 18: “ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான். சோதாமும் கொமாராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று கர்த்தர் [யெகோவா] சொல்லுகிறார்; அங்கே ஒருவனும் குடியிருப்பதில்லை.” (எரேமியாவின் தீர்க்கதரிசன பதிவுகள் பொ.ச.மு. 580-ல் எழுதி முடிக்கப்பட்டன.)

நிறைவேற்றம்: “அவர்கள் [ஏதோமியர்கள்] கி.மு. 2-ம் நூற்றாண்டில் யூதாஸ் மக்கபீஸால் பலஸ்தீனாவிலிருந்து துரத்தப்பட்டனர். கி.மு. 109-ல் ஜான் ஹிர்கானிஸ் என்ற மக்கபீஸ் தலைவன் யூதா ராஜ்யத்தை, ஏதோமிய நிலப்பகுதிகளின் மேற்கு பகுதியையும் சேர்க்கும் வகையில் விரிவாக்கினான். கி.மு. முதல் நூற்றுண்டில் ரோம விஸ்தரிப்பு ஏதோமியரின் சுதந்தரத்தின் கடைசி சுவடுகளையும் வாரிக்கொண்டுபோனது . . . ரோமர்கள் கி.பி. 70-ல் எருசலேமை அழித்தப் பின்னர் . . . இடுமியா [ஏதோம்] சரித்திரத்திலிருந்து மறைந்துவிட்டது.” (தி நியு ஃபங்க் அண்டு வாக்னல்ஸ் என்ஸைக்ளோபீடியா, 1952, புத். 11, பக். 4114) இந்த நிறைவேற்றம் நம்முடைய நாள்வரையாகவும் நீடித்திருப்பதைக் கவனியுங்கள். நிகழ்ச்சிகள் நடந்தேறிய பின்னரே இந்தத் தீர்க்கதரிசனம் எழுதப்பட்டது என்று ஒருவரும் வாதிட முடியாது.

தீர்க்கதரிசனம்: லூக்கா 19: 41-44; 21:20, 21: “அவர் [இயேசு கிறிஸ்து] . . . நகரத்தைப் [எருசலேமைப்] பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது, . . . உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.” இரண்டு நாட்களுக்குப் பின்பு, அவர் தம்முடைய சீஷர்களுக்குப் பின்வருமாறு அறிவுரை கூறினார்: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், . . . கடவர்கள்.” (பொ.ச. 33-ல் இயேசு கிறிஸ்து சொன்ன தீர்க்கதரிசனம்.)

நிறைவேற்றம்: எருசலேம் ரோமுக்கு எதிராகக் கலகம் செய்தது. பொ.ச. 66-ல் செஸ்டியஸ் காலஸின் தலைமையின்கீழ் ரோம சேனை நகரத்தைத் தாக்கியது. ஆனால் யூத சரித்திராசிரியன் ஜொஸிபஸ் அறிவிப்பதன்படி, அந்த ரோம தளபதி, “தன் ஆட்களைத் திடீரென்று பின்வாங்கச் செய்தான், அவன் எந்தத் தோல்வியையும் அனுபவிக்கவில்லையெனினும் நம்பிக்கை இழந்து, எவ்விதக் காரணமுமின்றி நகரத்திலிருந்து பின்வாங்கி ஓடினான்.” (ஜொஸிபஸ், யூதப் போர், பென்குயின் கிளாசிக்ஸ், 1969, பக். 167) இது நகரத்தைவிட்டு வெளியே ஓடிப்போகக் கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பளித்தது. அவ்வண்ணமே அவர்கள் செய்தார்கள். யூஸிபியஸ் பாம்பிலஸ் திருச்சபைசார்ந்த சரித்திரம் (C. F. குரூசே மொழிபெயர்த்தது, லண்டன், 1894, பக். 75) என்ற தன் நூலில் சொல்லியுள்ளபடி யோர்தானுக்கு அப்பாலிருந்த பெல்லாவில் அடைக்கலம் புகுந்தார்கள். பின்னர், பஸ்கா பண்டிகைக் காலத்தின்போது, பொ.ச. 70-ல் தளபதி டைட்டஸ் நகரத்தை முற்றுகையிட்டான், சுற்றி வட்டமிடும் 4.5 மைல்கள் (7.2 கி.மீ.) நீளமான வேலியை மூன்றே நாட்களில் கட்டியமைத்தான். ஐந்து மாதங்களுக்குப் பின் எருசலேம் கைப்பற்றப்பட்டது. “எருசலேமோ, திட்டமிட்டபடி அழிக்கப்பட்டது, ஆலயம் பாழ்க்கடித்து விடப்பட்டது. தேசம் முழுவதிலும் யூதர்களின் கட்டிடங்களின் அழிவு எவ்வளவு படுமோமாயிருந்ததென்பதை புதைபொருள் ஆராய்ச்சி வேலை இன்று நமக்குக் காட்டுகிறது.”—பைபிளும் புதைபொருள் ஆராய்ச்சியும் (கிராண்ட் ராப்பிட்ஸ், மிச்சிகன்; 1962), J. A. தாம்சன், பக். 299.

மனித ஆராய்ச்சியாளர்கள் பிற்பட்ட காலத்திலேயே கண்டுபிடித்தக் காரியங்களின்பேரில் அதில் அடங்கியுள்ள குறிப்புகள் விஞ்ஞானப்படி திருத்தமாயுள்ளன

சர்வலோகத்தின் தொக்கம்: ஆதி. 1:1: “ஆதியிலே தேவன் வானத்தயும் பூமியையும் சிருஷ்டித்தார்.” 1978-ல் வான சாஸ்திர நிபுணர் ராபர்ட் ஜஸ்ட்ரோ பின்வருமாறு எழுதினார்: “வான சாஸ்திர அத்தாட்சி உலகின் ஆரம்பத்தைப் பற்றிய பைபிள் கருத்துக்கு வழிநடத்துகிறது என்பதை இப்பொழுது நாங்கள் காண்கிறோம். நுட்பவிவரங்கள் வேறுபடுகின்றன, ஆனால், ஆரம்பத்தைப்பற்றிய வான சாஸ்திர மற்றும் பைபிள் விவரங்களின் முக்கிய அம்சங்கள் ஒன்றாகவே இருக்கின்றன: மனிதனுடைய தோற்றத்துக்கு வழிநடத்திய சங்கிலிபோன்ற நிகழ்ச்சிகள் திடீரென்றும் திட்டமான கணநேரத்தில் காலந்தவறாமலும், ஒளி மற்றும் சக்தியின் திடீர்த் தோற்றத்திலும் தொங்கின.”—கடவுளும் வான்கணிப்பாளர்களும் (நியு யார்க், 1978), பக். 14.

கிரக பூமியின் வடிவமைப்பு: ஏசா. 40:22: “அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்.” பூர்வ காலங்களில் பூமி தட்டையானது என்ற பொதுவான கருத்து இருந்தது. பைபிள் மூலவாக்கியம் எழுதி 200-க்கு மேற்பட்ட ஆண்டுகளான பின்பே கிரேக்கத் தத்துவஞானிகளின் ஒரு பள்ளி இந்தப் பூமி உருண்டையாய் இருக்கலாமென தர்க்கித்தனர், மேலும் இன்னும் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்குப் பின்பே ஒரு கிரேக்க வான்கணிப்பாளன் பூமியின் ஆரக்கோட்டின் ஏறத்தாழ சரியாயுள்ள நீளத்தைக் கணித்தான். ஆனால் அப்போதுங்கூட உருண்டையான பூமி என்ற எண்ணம் பொதுவான கருத்தாக இல்லை. 20-ம் நூற்றாண்டில்தான் மனிதர்கள் விமானம் மூலம் பயணம் செய்ய முடிந்திருக்கிறது, பின்னர் விண்வெளிக்கும், சந்திரனுக்கும் சென்றனர். இவ்வாறு பூமியின் அடிவானத்தின் “உருண்டை” வடிவின் தெளிவான காட்சி அவர்களுக்குக் கிடைத்தது.

விலங்கின உயிர்வாழ்வு: லேவி. 11:6: “முயலானது அசைபோடுகிறது.” குறைகாண்போர் சிலர் இந்தக் கூற்றை நெடுங்காலமாகக் கண்டனம் செய்தபோதிலும் முயல் அசைபோடுவதை 18-ம் நூற்றாண்டில் உவில்லியம் கெளப்பர் என்ற ஆங்கிலேயர் கடைசியாகக் கவனித்தார். இதன் அசைபோடும் அசாதாரண முறை 1940-ல் லண்டனின் விலங்குநூலாராய்ச்சி சங்க நடவடிக்கைக் குறிப்பேடு, புத். 110, தொர் A, பக். 159-163-இல் விவரிக்கப்பட்டது.

அதன் உட்புற ஒத்திசைவு குறிப்பிடத்தக்கது

பைபிளின் புத்தகங்கள், அரசன், தீர்க்கதரிசி, மேய்ப்பன், ஆயக்காரன் மற்றும் மருத்துவன் ஆகிய பல்வேறுவகையினரான சுமார் 40 ஆட்களால் பதிவு செய்யப்பட்ட இந்த உண்மையைக் கவனிக்கையில் முக்கியமாய் அவ்வாறிருக்கிறது. அவர்கள் 1,610 ஆண்டுகளடங்கிய காலப்பகுதியினூடே இதை எழுதினர்; ஆகவே வஞ்சக ஒப்பந்தங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இருப்பினும் அவர்கள் எழுதியவை சிறிய நுட்பவிவரங்களிலும் ஒத்திருக்கின்றன. பைபிளின் பல்வேறு பகுதிகள் எவ்வளவு ஒத்திசைவாக ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன என்பதை மதித்துணர நீங்கள்தாமே அதைத் தனிப்பட்டு வாசிக்கவும் ஆராய்ந்துபடிக்கவும் வேண்டும்.

பைபிள் மாற்றப்படவில்லையென நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?

“ஒரு நூலின் உண்மைத் தன்மையை நிரூபிக்கும் பூர்வ கையெழுத்துப் பிரதிகளின் எண்ணிக்கை, மற்றும் மூலப்பிரதிக்கும் அதை உறுதிப்படுத்தும் கையெழுத்துப் பிரதிக்கும் இடையே உள்ள ஆண்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கையில் பைபிள், [ஹோமர், பிளாட்டோ இன்னும் மற்றவர்கள் எழுதிய] சரித்திர நூல்களைப் பார்க்கிலும் ஒரு நிச்சயிக்கப்பட்ட அனுகூலத்தை அனுபவிக்கிறது. . . . மொத்தமாக, சரித்திர நூல்களைப் பற்றிய கையெழுத்துப்பிரதிகளின் எண்ணிக்கை பைபிள் சம்பந்தமானவற்றைப் பார்க்கிலும் சிறிய எண்ணிக்கையாகவே இருக்கின்றன. எந்தப் புராதன புத்தகமும் பைபிளைப்போன்று அவ்வளவு உண்மையான நிரூபிக்கும் ஆதாரங்களைக் கொண்டில்லை.”—தொடக்கத்திலிருந்து பைபிள் (நியு யார்க், 1929), P. மரியன் சிம்ஸ், பக். 74, 76.

முழுமையாகவோ, பகுதியாகவோ, எபிரெயு வேத எழுத்துக்களின் 6,000 கையெழுத்துப் பிரதிகள் பெரும்பாலும் இருக்கின்றனவென 1971-ல் பிரசுரித்த ஓர் அறிக்கை காட்டுகிறது; மிகப் பூர்வமானது பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குரியதாயுள்ளது. கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களின் அத்தகைய ஏறக்குறைய 5,000 பிரதிகள் கிரேக்கில் இருக்கின்றன, மிகப் பூர்வமானது, பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிக்குரியது. மேலும் மற்ற மொழிகளில் மொழிபெயர்த்தத் தொக்கக் கால மொழிபெயர்ப்புகளின் பல நகல்களும் இருக்கின்றன.

தி செஸ்டர் பியட்டி பிப்ளிக்கல் பெப்பைரி பற்றிய தன் ஏழு புத்தகங்களுக்கான முன்னுரையில் சர் பிரட்ரிக் கெனியன் பின்வருமாறு எழுதினார்: “அவற்றை [கையெத்துப் பிரதிகளை] ஆராய்ந்து பார்த்ததில் அடைந்த முதல் மற்றும் மிக அதிக முக்கியமான முடிவு திருப்தியளிக்கும் ஒன்றாக இருக்கிறது, அதாவது அவை இப்பொழுது இருக்கும் மூலப் பகுதிகளின் பழுதற்றத் தன்மையை உறுதிசெய்கின்றன. பழைய ஏற்பாட்டிலோ புதிய ஏற்பாட்டிலோ குறிப்பிடத்தக்க அல்லது அடிப்படையான வித்தியாசம் எதுவும் காணப்படுவதில்லை. குறிப்பிடும் வகையில் பகுதிகள் நீக்கப்படவுமில்லை சேர்க்கப்படவுமில்லை. உண்மைகளை அல்லது கோட்பாடுகளைப் பாதிக்கும் வகையில் மாறுபாடுகளும் இல்லை. மூலவாசகங்களின் மாறுபாடுகள், சொற்களின் வரிசைப்படுத்திய முறை அல்லது திட்டமான சொற்கள் பயன்படுத்தியிருத்தல் . . . ஆகியவைப்போன்ற சிறிய காரியங்களையே பாதிக்கின்றன. ஆனால் அவற்றின் இன்றியமையாத முக்கியத்துவம், அவை, இப்பொழுது கிடைக்கக்கூடிய அத்தாட்சிக்கும் முந்திய காலத்துக்கு உரியதாக இருப்பதன்மூலம் தற்போது இருக்கும் மூலப்பகுதிகளின் உண்மைத்தன்மைக்கு உறுதியளிக்கும் காரியமே.”—(லண்டன், 1933), பக். 15.

சில பைபிள் மொழிபெயர்ப்புகள் மற்றவற்றைப் பார்க்கிலும் பூர்வ மொழிகளில் இருப்பதோடு மிக நெருங்க ஒத்திருக்கின்றன என்பது உண்மையே. நவீன பொழிப்புரை பைபிள்கள் சிலசமயங்களில் மூல அர்த்தத்தை மாற்றும் வகையில் சுயாதீனப் போக்கைக் கையாண்டிருக்கின்றன. சில மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய சொந்த நம்பிக்கைகள் தங்கள் மொழிபெயர்ப்பைப் பாதிக்க அனுமதித்திருக்கின்றனர். ஆனால், பல்வேறுபட்ட மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தக் குறைபாடுகளை அடையாளங் கண்டுகொள்ளலாம்.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

நான் பைபிளை நம்புவதில்லை’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘ஆனால் ஒரு கடவுள் இருக்கிறார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களல்லவா? . . . பைபிளில் நீங்கள் நம்புவதற்குக் கடினமாயிருப்பது எதுவென நான் கேட்கலாமா?’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘நீங்கள் எப்பொழுதும் இவ்வாறு உணர்ந்தீர்களா? . . . இவ்வாறு மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன், எனினும் அவர்கள் பைபிளைத் திட்பநுட்பமாகப் படிக்கவில்லை, ஆனால், பைபிளிலிருப்பது கடவுள்தாமே கொடுத்தச் செய்தி எனவும், அதை நாம் நம்பி அது சொல்வதன்படி நடந்தால், அவர் நமக்கு நித்திய ஜீவனை அளிப்பாரெனவும் பைபிளில்தானே தெளிவாய்ச் சொல்லியிருப்பதால், அது உரிமைபாராட்டுவது உண்மைதானா இல்லையாவென்பதைக் கண்டுபிடிக்க அதை ஆராய்ந்தாவது பார்ப்பது தகுந்ததென நீங்கள் ஒப்புக்கொள்வீர்களல்லவா? (பக்கங்கள் 60-63-ல் உள்ள குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.)’

‘பைபிள் தன்னில்தானே முரண்படுகிறது’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘மற்றவர்கள் இவ்வாறு சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் எது உண்மையில் முரண்பாடென எனக்குக் காண்பிக்க ஒருவராலும் முடியவில்லை. நான் என் சொந்த தனி பைபிள் வாசிப்பில் அவ்வாறு ஒன்றை ஒருபோதும் காணவில்லை. ஓர் உதாரணத்தை நீங்கள் எனக்குக் கொடுக்கக்கூடுமா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘நான் கண்டது என்னவென்றால், பலர், பைபிள் தங்களைச் சிந்திக்கச் செய்தக் கேள்விகளுக்குப் பதில்களை ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை. உதாரணமாக, காயீன் தன் மனைவியை எங்கிருந்து அடைந்தான்? (பக்கங்கள் 301, 302-ல் உள்ள குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.)’

‘மனிதர் பைபிளை எழுதினர்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘அது உண்மைதான். சுமார் 40 பேர்கள் அதில் பங்குபெற்றனர். ஆனால் அது கடவுளால் ஏவப்பட்டது’. பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘இதன் பொருளென்ன? ஓர் அலுவலாளர் ஒரு செயலாளரைத் தனக்காகக் கடிதங்களை எழுத பயன்படுத்துவதைப்போல் இதை எழுதுவதைக் கடவுள் வழிநடத்தினார்.’ (2) ‘வானவெளியில் இருக்கும் ஒரு நபரிடமிருந்து செய்திகள் பெற்றுக்கொள்வதைக் குறித்தக் கருத்து நம்மை வியப்பில் ஆழ்த்தவேண்டியதில்லை. மனிதருங்கூட சந்திரனிலிருந்து செய்திகளையும், படங்களையும் அனுப்பியிருக்கின்றனர். அவர்கள் அதை எவ்வாறு செய்தார்கள்? நெடுங்காலத்திற்கு முன்பாகவே கடவுளிடமிருந்துதானே தோன்றின சட்டங்களைப் பயன்படுத்துவதன்மூலமே.’ (3) ‘ஆனால் பைபிளில் அடங்கியிருப்பது உண்மையில் கடவுளிடமிருந்து வந்ததென நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்? மனிதத் தோற்றுமூலத்திலிருந்து வந்திருக்கச் சாத்தியமல்லாதத் தகவல்கள் அதில் அடங்கியிருக்கின்றன. எத்தகைய தகவல்கள்? எதிர்காலத்தைப்பற்றிய நுட்பவிவரங்கள்; மேலும் இவை எப்பொழுதும் முழுவதும் திருத்தமாக நிரூபித்திருக்கின்றன. (உதாரணமாக, பக்கங்கள் 60-62-ஐயும், மேலும் பக்கங்கள் 234-239-ல் “கடைசி நாட்கள்” என்ற தலைப்பின்கீழும் பாருங்கள்.)’

‘பைபிளைப்பற்றி அவரவர் தங்கள் சொந்த பொருள் விளக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘எல்லாரும் சொல்வதும் சரியென்று இருக்கமுடியாது.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘நம்முடைய கருத்துக்களுக்கு இசைய வேதவசனங்களைப் புரட்டுவது நிரந்தரமான தீங்கில் விளைவடையக்கூடும். (2 பேதுரு 3:15, 16)’ (2) ‘பைபிளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு இரண்டு காரியங்கள் நமக்கு உதவக்கூடும். முதலாவது, எந்தக் கூற்றாயினும் அதன் சூழமைவைக் (சுற்றியுள்ள வசனங்களைக்) கவனியுங்கள். அடுத்தது, அந்தந்தப் பொருளின்மீதான, பைபிளின் மற்ற வசனங்களோடு இந்த வசனத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதன்மூலம் நாம் கடவுளுடைய சொந்த வார்த்தைதானே நம்முடைய சிந்தனையை வழிநத்த அனுமதிக்கிறோம், அந்தப் பொருள்விளக்கம் நம்முடையதல்ல அவருடையதே. காவற்கோபுர பிரசுரங்களில் இந்த அணுகுமுறைதான் கையாளப்படுகிறது.’ (பக்கங்கள் 204, 205-ல், “யெகோவாவின் சாட்சிகள்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

‘அது நம்முடைய நாளுக்கு நடைமுறையானதல்ல’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நாம் நமக்கு நடைமுறையானதாயுள்ள காரியங்களில் அக்கறைகொண்டிருக்கிறோம் அல்லவா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘போரை நிறுத்துவது நடைமுறையானதென நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? . . . ஒரு தேசத்து மக்கள் மற்ற தேச மக்களோடு சமாதானத்தோடு வாழக் கற்றுக்கொண்டால், அது ஒரு நல்ல ஆரம்பமென நீங்கள் ஒப்புக்கொள்வீர்களல்லவா? . . . பைபிள் இதையே துல்லியமாக முன்னறிவித்தது. (ஏசா. 2:2, 3) பைபிள் கல்விபயிற்றுவிப்பின் பலனாக, யெகோவாவின் சாட்சிகளுக்குள் இன்று இது நடந்தேறுகிறது.’ (2) ‘இன்னும் அதிகமான ஒன்றும் தேவைப்படுகிறது—போர்களுக்குக் காரணமாயுள்ள மனிதரையும் தேசங்களையும் நீக்குவது. இத்தகைய ஒன்று என்றாவது சம்பவிக்குமா? ஆம், எவ்வாறென பைபிள் விளக்குகிறது. (தானி. 2:44; சங். 37:10, 11)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘நான் உங்கள் அக்கறையைப் போற்றுகிறேன். ஒரு வழிகாட்டிப் புத்தகம் நடைமுறையில் பயனுள்ளதாயிராவிடில், அதை நாம் பயன்படுத்துவது முட்டாள்தனமாயிருக்கும் அல்லவா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘ஒரு சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடத்துவதை நமக்குச் சாத்தியமாக்கும் நல்ல ஆலோசனையைத் தரும் ஒரு புத்தகம் நடைமுறையானதென ஒப்புக்கொள்வீர்களா? . . . குடும்ப வாழ்க்கையைச் சார்ந்த கோட்பாடுகளும் பழக்கங்களும் பல தடவைகள் மாறியிருக்கின்றன, இன்று நாம் காணும் அதன் விளைவுகள் நல்லவையாக இல்லை. ஆனால் பைபிள் சொல்பவற்றை அறிந்து அவற்றை நடைமுறையில் பொருத்திப் பயன்படுத்துவோர் உறுதியான, சந்தோஷமுள்ள குடும்பங்களை உடையோராயிருக்கின்றனர். (கொலோ. 3:12-14, 18-21)’

‘பைபிள் ஒரு நல்ல புத்தகம், ஆனால் பூரண சத்தியம் என்று ஒன்று இல்லை’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘ஒவ்வொருவரும் வெவ்வேறு எண்ணமுடையோராயிருப்பது உண்மைதான். ஒருவன் தான் ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்தாலும் அவன் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாத இன்னொரு அம்சம் இருக்கிறதென அடிக்கடி அறியவருகிறான். ஆனால், அத்தகைய ஒரு குறைபாட்டைக் கொண்டிராத ஒருவர் இருக்கிறார். அவர் யாராக இருக்கமுடியும் . . . ஆம், இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரே.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘இதனிமித்தமே இயேசு கிறிஸ்து அவரிடம் பின்வருமாறு சொன்னார்: “உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17) இந்தச் சத்தியம் பைபிளில் இருக்கிறது. (2 தீமோ. 3:16, 17)’ (2) ‘அறியாமையில் நாம் தடவித்தேடுவதைக் கடவுள் விரும்புவதில்லை, நாம் சத்தியத்தின் திருத்தமான அறிவுக்கு வரவேண்டுமென்பது தம்முடைய சித்தமென அவர் சொல்லியிருக்கிறார். (1 தீமோ. 2:3, 4) முழுமையாகத் திருப்தியளிக்கும் வகையில் பைபிள், . . . போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது.’ (சில ஆட்களுக்கு உதவிசெய்ய, நீங்கள், கடவுள் இருக்கிறார் என்பதில் நம்பிக்கை வைப்பதற்கான ஆதாரங்களைப்பற்றி முதல் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கலாம். பக்கங்கள் 145-151-ல், “கடவுள்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

‘பைபிள் வெள்ளையரின் புத்தகம்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘அவர்கள் பைபிளின் பல பிரதிகளை அச்சடித்துள்ளனர் என்பது நிச்சயமாக உண்மைதான். ஆனால் ஓர் இனத்தைப் பார்க்கிலும் மற்றொரு இனம் மேம்பட்டதென பைபிள் சொல்வதில்லை.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘பைபிள் நம்முடைய சிருஷ்டிகர் அளித்தது, அவர் பட்சபாதமில்லாதவர். (அப். 10:34, 35)’ (2) ‘அவருடைய ராஜ்யத்தின்கீழ் பூமியில் என்றும் வாழ்வதற்கான வாய்ப்பை எல்லாத் தேசங்களின் மற்றும் கோத்திரங்களின் ஜனங்களுக்கும் கடவுளுடைய வார்த்தை அளிக்கிறது. (வெளி. 7:9, 10, 17)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘அவ்வாறு ஒருபோதும் இல்லை! பைபிளின் 66 புத்தகங்களைத் தாம் ஏவி எழுதச் செய்ய மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகர்தாமே ஆட்களைத் தேர்ந்தெடுத்தார். வெண்ணிறத் தோலுடையோரை அவர் தெரிந்துகொண்டாரென்றால், அது அவருடைய பொறுப்பாகும். ஆனால் பைபிளின் செய்தி வெள்ளையருக்குமட்டுமேயென வரையறுக்கப்படவில்லை.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘இயேசு சொன்னதைக் கவனியுங்கள் . . . (யோவான் 3:16) “எவனோ அவன்” (“ஒவ்வொருவனும்,” NW) என்பது தோல்நிறம் என்னவாயினும் கவலையில்லாமல் எல்லாரையும் உள்ளடக்குகிறது. மேலும், இயேசு, தாம் பரலோகத்துக்கு ஏறிப்போகுமுன் இந்தப் பிரியாவிடை வார்த்தைகளைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார் . . . (மத். 28:19)’ (2) ‘அக்கறையூட்டுவதாய் அப்போஸ்தலர் 13:1-ல் நீகர் என்ற பெயருடைய ஓர் ஆளைக் குறித்துப் பேசப்பட்டிக்கிறது, இந்தப் பெயரின் பொருள் “கறுப்பன்” என்பதாகும். இவன் சீரியாவிலிருந்த, அந்தியோகியா சபையின் தீர்க்கதரிசிகள் மற்றும் போகர்களில் ஒருவனாக இருந்தான்.’

‘நான் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பை மட்டுமே நம்புகிறேன்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நீங்கள் உங்களுடையதைக் கைவசம் வைத்திருந்தால், நான் மிகவும் உற்சாகமளிப்பதாகக் கண்டதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘பலர் அந்தப் பைபிள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துகின்றனர். நானும் என்னுடைய நூல்நிலையத்தில் அதில் ஒன்றை வைத்திருக்கிறேன்.’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1)‘தொடக்கத்தில் பைபிள் எபிரெயு, அரமேயிக் மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்தென நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? . . . உங்களுக்கு அந்த மொழிகளைவாசிக்கத் தெரியுமா? . . . ஆகவே பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதற்காக நாம் நன்றியுடனிருக்கிறோம்’ (2) ‘இந்த அட்டவணை (“பைபிளின் புத்தகங்களுடைய அட்டவணை,” NW பைபிளிலுள்ளது) பைபிளின் முதல் புத்தகம் ஆதியாகமம் பொ..மு. 1513-ல் எழுதிமுடிக்கப்பட்டதென காட்டுகிறது. ஆதியாகமம் எழுதப்பட்ட பின்பு, முழு பைபிளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்னால் ஏறக்குறைய 2,900 ஆண்டுகள் கடந்துவிட்டனவென உங்களுக்குத் தெரியுமா? மேலும் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு (பொ.ச. 1611-ல்) மொழிபெயர்த்து முடிப்பதற்குமுன் 200-க்கு மேற்பட்ட இன்னுமதிகமான ஆண்டுகள் கடந்தன.’ (3) ‘17-வது நூற்றாண்டிலிருந்து இதுவரை, ஆங்கிலம் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது. நாம் இதை நம்முடைய சொந்த வாழ்நாளில் கண்டிருக்கிறோமல்லவா? . . . ஆகையால் அதே மூல சத்தியங்களை நாம் இன்று பேசும் மொழியில் கவனமாய் மொழிபெயர்த்துள்ள நவீன மொழிபெயர்ப்புகளை நாம் மதிக்கிறோம்.’

‘நீங்கள் உங்கள் சொந்த பைபிளை வைத்திருக்கிறீர்கள்’

“புதிய உலக மொழிபெயர்ப்பு” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.