Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விடுமுறைநாட்கள்

விடுமுறைநாட்கள்

விடுமுறைநாட்கள்

சொற்பொருள் விளக்கம்:  ஒரு நிகழ்ச்சிக்கு நினைவுவிழா கொண்டாடுவதற்காக உலகப்பிரகாரமான வேலையிலிருந்தும் பள்ளியிலிருந்தும் நேரமெடுத்துக்கொள்ளும் நாட்களை வழக்கமாய்க் குறிக்கின்றன. அத்தகைய நாட்கள் குடும்ப அல்லது சமுதாய பண்டிகைகளுக்குரிய தறுவாய்களாகவும் இருக்கலாம். அவற்றில் பங்குகொள்கிறவர்கள் அவற்றை மத அல்லது பெரும்பாலும் சமுதாய அல்லது உலகப்பிரகாரமான விவகாரங்களாகக் கருதலாம்.

கிறிஸ்மஸ் பைபிளில் ஆதாரங்கொண்ட கொண்டாட்டமா?

இந்தக் கொண்டாட்டத்தின் தேதி

மக்ளின்டாக் அண்டு ஸ்டிராங்ஸ் ஸைக்ளோபீடியாவில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “கிறிஸ்மஸ் ஆசரிப்பு தெய்வீக நியமிப்புமல்ல, பு[திய] ஏ[ற்பாட்டில்] தோற்றத்தைக் கொண்டுமில்லை. கிறிஸ்துவின் பிறந்த நாளை பு[திய] ஏ[ற்பாட்டி]லிருந்தோ, நிச்சயமாகவே, வேறு எந்தத் தகவல்மூலத்திலிருந்தோ உறுதியாய் அறிந்துகொள்ள முடியாது.”—(நியு யார்க், 1871), புத். II, பக். 276.

இயேசு பிறந்த சமயத்தில் மேய்ப்பர்கள் இரவில் வயல்வெளிகளில் இருந்தார்களென லூக்கா 2:8-11 காட்டுகிறது. இயேசுவின் காலத்தில் அனுதின வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகத்தில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “மந்தைகள் . . . குளிர்காலத்தை மூடப்பட்டுள்ள மறைப்பின்கீழ் கழித்தன; இந்த ஒன்றிலிருந்தே, குளிர்காலத்தில், கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்குக் குறித்துள்ள தேதி சரியாயிருக்கமுடியாதென காணலாம், ஏனெனில் மேய்ப்பர்கள் வயல்வெளிகளில் இருந்தார்களென சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிறது.”—(நியு யார்க், 1962), ஹென்ரி டான்யல்-ரோப்ஸ், பக். 228.

தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா பின்வருமாறு நமக்குத் தகவல் அளிக்கிறது: “டிசம்பர் 25-ஐ கிறிஸ்மஸ் என நிறுவினதற்குக் காரணம் ஒருவாறு தெளிவாய் அறியப்படாதிருக்கிறது, ஆனால் அந்த நாள், ‘சூரியனின் மறுபிறப்பைக்’ கொண்டாடுவதற்கு, பகல்கள் நீளமாகத் தொங்கும் குளிர்கால சூரிய கதிர்த்திருப்ப சமயத்துக்கு ஏறத்தாழ நிகழ்ந்த புறமத பண்டிகைகளுக்கு ஒத்திருக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டதெனப் பொதுவாய்க் கருதப்பட்டது. . . . (ரோம வேளாண்மைத் தெய்வமான சாட்டர்னுக்கும் [சனி], சூரியனின் திரும்பப் புதுப்பிக்கப்பட்ட வல்லமைக்கும் அர்ப்பணம்செய்யப்பட்ட ஒரு பண்டிகையான) ரோம சாட்டர்னேலியாவும் இந்தச் சமயத்தில் நிகழ்ந்தன, மேலும் கிறிஸ்மஸ் பழக்கவழக்கங்கள் இந்தப் பூர்வ புறமத கொண்டாட்டங்களில் மூலத்தோற்றங்கொண்டிருப்பதாக எண்ணப்பட்டன.”—(1977), புத். 6, பக். 666.

நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “கிறிஸ்து பிறந்த தேதி அறியப்பட்டில்லை. சுவிசேஷங்கள் அந்த நாளையோ மாதத்தையோ குறிப்பிடுகிறதில்லை. . . . H. யுஸ்மர் யோனைகூறிய தற்காலிகக் கருத்தின்படி . . . மேலும் இன்றைய நிபுணர்கள் பெரும்பான்மையர் ஏற்பதுமானது, கிறிஸ்துவின் பிறப்பு குளிர்கால கதிர்த்திருப்பத் தேதியாகக் குறிக்கப்பட்டதாகும் (ஜூலியன் ஆண்டுக்குறிப்பேட்டில் டிசம்பர் 25, எகிப்திய ஆண்டுக்குறிப்பேட்டில் ஜனவரி 6), ஏனெனில் இந்த நாளில் சூரியன் வட வானங்களுக்குத் திரும்பும் அதன் திருப்பத்தைத் தொங்குகையில், மித்ராவின் புறமத பக்தர்கள் டைஸ் நட்டாலிஸ் ஸோலிஸ் இன்விக்டி (வெல்முடியாத சூரியனின் பிறந்தநாளைக்) கொண்டாடினார்கள். டிச. 25, 274-ல் ஆரிலியன், சூரியக்கடவுளை அந்தப் பேரரசின் பிரதான காப்பாளனாக அதிகார அறிவிப்பு செய்து காம்ப்பஸ் மாரிஷியஸில் அதற்கு ஓர் ஆலயத்தைப் பிரதிஷ்டைசெய்தான். சூரிய வழிபாட்டு மதம் ரோமில் குறிப்பிடத்தக்க முறையில் செல்வாக்குமிகுந்ததாயிருந்த ஒரு சமயத்தில் கிறிஸ்மஸ் தொங்கிவைக்கப்பட்டது.”—(1967), புத். III, பக். 656.

ஞானிகள், அல்லது சாஸ்திரிகள், நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்டது

அந்தச் சாஸ்திரிகள் உண்மையில் கிழக்கிலிருந்து வந்த வான்கணிப்பாளர்கள் (சோதிடர்கள்). (மத். 2:1, 2, NW; NE) வான்கணிப்பு இன்று பல ஆட்களுக்குள் மிக விரும்பப்பட்டு வருகிறபோதிலும், இந்தப் பழக்கம் பைபிளில் கண்டிப்பாய்க் கண்டனஞ்செய்திருக்கிறது. (பக்கங்கள் 144, 145-ல், “விதி” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.) கடவுள், தாம் கண்டனஞ்செய்தப் பழக்கங்களைக் கடைப்பிடிக்கும் ஆட்களைப் புதிதாய்ப் பிறந்த இயேசுவிடம் வழிநடத்தியிருப்பாரா?

அந்த நட்சத்திரம் அந்த வான்கணிப்பாளர்களை முதலாவது அரசன் ஏரோதிடம் வழிநடத்தி பின்பு இயேசுவினிடம் வழிநடத்தினதென்றும் அப்பொழுது ஏரோது இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடினான் எனவும் மத்தேயு 2:1-16 காட்டுகிறது. அந்த வான்கணிப்பாளர்களைத் தவிர வேறு எவரும் அந்த “நட்சத்திரத்தைப்” பார்த்ததாக எந்தக் குறிப்பும் செய்யப்பட்டில்லை. அவர்கள் சென்றபின், பிள்ளையைப் பாதுகாப்பதற்கு எகிப்துக்கு ஓடிப்போகும்படி யெகோவாவின் தூதன் யோசப்பை எச்சரித்தான். அந்த “நட்சத்திரம்” கடவுளிடமிருந்து வந்த ஓர் அடையாளமா அல்லது அது கடவுளுடைய குமாரனை அழித்துப்போடும்படி தேடின ஒருவனிடமிருந்து வந்ததா?

கிறிஸ்மஸ் கலைவேலைப்பாடுகளில் வழக்கமாய்க் கருத்து உருப்படுத்திக் காட்டுகிறபடி, குழந்தை இயேசுவை அவர்கள் முன்னணையில் கிடத்தியிருக்கக் கண்டதாக பைபிள் விவரப் பதிவு சொல்லாததைக் கவனியுங்கள். அந்த வான்கணிப்பாளர்கள் வந்துசேர்ந்தபோது, இயேசுவும் அவருடைய பெற்றோரும் ஒரு வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் இயேசுவின் வயதைக் குறித்ததில், ஏரோது அந்த வான்கணிப்பாளரிடமிருந்து அறிந்ததை ஆதாரமாகக் கொண்டு பெத்லகேம் மாகாணத்திலிருந்த இரண்டு வயதும் அதற்குக் கீழுமிருந்த எல்லா ஆண்பிள்ளைகளும் அழிக்கப்படவேண்டுமென்று கட்டளையிட்டதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.—மத். 2:1, 11, 16.

அந்தக் கொண்டாட்டத்தின் பாகமாகப் பரிசுகள் கொடுத்தல்; சான்ட்டகிளாஸ், கிறிஸ்மஸ் தந்தை, முதலியோரைப் பற்றிய கதைகள்

கிறிஸ்மஸ் பரிசுகள் கொடுத்தலின் பழக்கம் அந்த வான்கணிப்பாளர் செய்ததன்பேரில் ஆதாரங்கொண்டில்லை. மேலே காட்டப்பட்டபடி, இயேசு பிறந்த சமயத்தில் அவர்கள் வந்துசேரவில்லை. மேலும், அவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளைக் கொடுத்துக்கொள்ளவில்லை, சிறப்புடைய ஆட்களைப் போய்ச் சந்திக்கையில் அப்பொழுது வழக்கமாயிருந்ததற்குப் பொருந்த பிள்ளையாகிய இயேசுவுக்கே பரிசுகளைக் கொடுத்தார்கள்.

தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா சொல்வதாவது: “சாட்டர்னேலியாவின்போது . . . விருந்துகள் நடந்தன, பரிசுகள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன.” (1977, புத். 24, பக். 299) பல எடுத்துக்காட்டுகளில் அது கிறிஸ்மஸ் ஈகையின் ஆவிக்கு—பரிசுகளைப் பரிமாற்றம் செய்வதற்கு உருமாதிரியாயமைந்துள்ளது. இத்தகைய பரிசு கொடுத்தலில் பிரதிபலிக்கும் ஆவி உண்மையில் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறதில்லை, ஏனென்றால் அது மத்தேயு 6:3, 4 மற்றும் 2 கொரிந்தியர் 9:7 ஆகியவற்றில் காணப்படுகிற கிறிஸ்தவ நியமங்களை மீறுகிறது. நிச்சயமாகவே, கிறிஸ்தவன் ஆண்டின் மற்றச் சமயங்களின்போது அன்பைத் தெரிவிக்கும் முறையாக மற்றவர்களுக்குப் பரிசுகளைக் கொடுக்கலாம், அடிக்கடி அவன் விரும்புகிறபோதெல்லாம் அவ்வாறு செய்யலாம்.

அந்தந்த இடத்தைச் சார்ந்து, பரிசுகள் சான்ட்டகிளாஸால், சென்ட் நிக்கொலஸால், கிறிஸ்மஸ் தந்தையால், பியெரி நேயெல், நெட்ச்ட் ரூப்ரெட்ச்ட், சோதிடன், சிறு குள்ளத்தெய்வதம் ஜுல்டோம்டென் (அல்லது ஜூலனீஸன்), அல்லது லா பெஃபானா என்ற சூனியக்காரி ஆகியவர்களால் கொண்டுவரப்பட்டதென பிள்ளைகளுக்குச் சொல்லப்படுகிறது. (தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா, 1984, புத். 3, பக். 414) நிச்சயமாகவே, இந்தக் கதைகள் எதுவும் உண்மையல்ல. இத்தகைய கதைகளைச் சொல்வது சத்தியத்துக்கு மதிப்பைப் பிள்ளைகளில் கட்டியெழுப்புகிறதா? கடவுளை உண்மையோடு வணங்கவேண்டுமென்று கற்பித்த இயேசு கிறிஸ்துவை இத்தகைய பழக்கம் கனப்படுத்துகிறதா?—யோவான் 4:23, 24.

மதக் காரணங்களுக்காகச் செய்யப்படாதவரையில், கிறிஸ்தவமல்லாத மூலத்தோற்றங்களைக் கொண்டிருக்கும் கொண்டாட்டங்களில் பங்குகொள்வதற்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா?

எபே. 5:10, 11, தி.மொ.: “ஆண்டவருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்தறியுங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்பங்காளிகளாகவேண்டாம், அவைகளைக் கடிந்துகொள்ளவே வேண்டும்.”

2 கொரி. 6:14-18, தி.மொ.: “நீதிக்கும் அக்கிரமத்துக்கும் சம்பந்தமேது? வெளிச்சத்துக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியோடு விசுவாசிக்குப் பங்கேது? கடவுளின் ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் இணக்கமேது? . . . ஆனபடியால் நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து வந்து பிரிந்திருங்களென்று, கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார், அசுத்தமான எதையும் தொதிருங்கள், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்[வேன்] . . . நீங்கள் எனக்குக் குமாரருங் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்ல கர்த்தர் (யெகோவா, NW) சொல்லுகிறார்.” (உணர்ச்சிவச கவர்ச்சியூட்டியிருந்திருக்கும் கிறிஸ்தவமல்லாதப் பழக்கங்களிலிருந்து தன்னைத் துண்டித்து விடுவித்துக்கொள்ள, யெகோவாவின்பேரிலுள்ள உண்மையான அன்பும் அவருக்குப் பிரியமுள்ளோராய் நடக்கவேண்டுமென்ற உறுதியான ஆவலும் ஒருவருக்கு உதவிசெய்யும். யெகோவாவை உண்மையில் அறிந்து நேசிக்கும் ஒருவன், பொய்க் கடவுட்களைக் கனப்படுத்தும் அல்லது பொய்ம்மையை முன்னேற்றுவிக்கும் பழக்கங்களை அறவே விட்டுவிலகியிருப்பதனால் தான் எவ்வகையிலும் மகிழ்ச்சியை இழக்கச் செய்யப்பட்டதாக உணருகிறதில்லை. உண்மையான அன்பு அவனை அநீதியின்பேரில் அல்ல, சத்தியத்தோடு சந்தோஷப்படும்படி செய்கிறது. 1 கொரிந்தியர் 13:6-ஐ [NW] பாருங்கள்.)

யாத்திராகமம் 32:4-10-ஐ (NW) ஒத்துப்பாருங்கள். இஸ்ரவேலர் எகிப்திய மதப் பழக்கம் ஒன்றை ஏற்று, ஆனால் அதற்கு “யெகோவாவுக்கு உற்சவம்,” என்ற ஒரு புதிய பெயரைக் கொடுத்ததைக் கவனியுங்கள். இதற்காக யெகோவா அவர்களைக் கடுமையாய்த் தண்டித்தார். இன்று விடுமுறைநாட்களோடு சம்பந்தப்பட்ட 20-ம் நூற்றாண்டு பழக்கவழக்கங்களை மாத்திரமே நாம் காண்கிறோம். இவற்றில் சில தீங்கற்றவையாகத் தோன்றலாம். ஆனால் இவை மூலத்தொடக்கத்தைக்கொண்டுள்ள புறமத பழக்கவழக்கங்களை யெகோவா நேரடியாய்க் கவனித்திருக்கிறார். அவருடைய நோக்கே நமக்கு முக்கியத்துவமுடையதாயிருக்க வேண்டுமல்லவா?

உதாரணம்: மதிப்புவாய்ந்த ஒருவரின் வீட்டுக்கு ஒரு கூட்டம் வந்து தாங்கள் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாட அங்கே வந்திருப்பதாகச் சொல்கிறார்களென வைத்துக்கொள்வோம். பிறந்தநாட்கள் கொண்டாடுதலை அவர் ஆதரிக்கிறதில்லை. ஆட்கள் மிதமீறி உண்பதை அல்லது வெறிக்கக் குடிப்பதை அல்லது கட்டுப்பாடற்ற நடத்தையில் ஈடுடுவதைக் காண அவர் விரும்புகிறதில்லை. ஆனால் அவர்களில் சிலர் இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்கிறார்கள், மேலும் அவரைத் தவிர அங்குள்ள எல்லாருக்கும் அவர்கள் பரிசுகள் கொண்டுவருகிறார்கள்! இந்த எல்லாவற்றிற்கும் மேல் அந்த ஆளின் சத்துருக்களில் ஒருவனுடைய பிறந்தநாளை அந்தக் கொண்டாட்டத்துக்குத் தேதியாகத் தெரிந்தெடுத்துக்கொள்கிறார்கள். அந்த ஆள் எவ்வாறு உணருவார்? நீங்கள் அதற்கு உடந்தையாயிருக்க விரும்புவீர்களா? கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களால் இதுவே உண்மையில் செய்யப்படுகிறது.

ஈஸ்டர் மற்றும் அதோடுசேர்ந்த பழக்கவழக்கங்களின் தொக்கம் என்ன?

தி என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுவதாவது: “புதிய ஏற்பாட்டிலோ, அல்லது அப்போஸ்தலப் பிரமுகர்களின் எழுத்துக்களிலோ ஈஸ்டர் பண்டிகை ஆசரிப்பைப்பற்றிய அறிகுறி எதுவுமில்லை. விசேஷித்தக் காலங்களைப் பரிசுத்தமாய்க் கருதும் எண்ணம் முதல் கிறிஸ்தவர்களின் மனதில் இல்லை.”—(1910), புத். VIII, பக். 828.

தி கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு சொல்கிறது: “தளிர்ப்புப் பருவம் திரும்பினதைக் கொண்டாடும் புறமத பழக்கங்கள் மிகப்பல ஈஸ்டரில் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கின்றன. அந்த முட்டை தளிர்ப்புப் பருவத்தின் தொக்கத்தில் உயிர் துளிர்ப்பதன் சின்னமாயிருக்கிறது. . . . முயல் ஒரு புறமத அடையாளம், கருவளத்துக்குரிய ஒரு சின்னமாக எப்பொழுதும் இருந்திருக்கிறது.”—(1913), புத். V, பக். 227.

அலெக்ஸான்டர் ஹிஸ்லாப் எழுதிய, இரண்டு பாபிலோன்கள் என்ற ஆங்கில புத்தகத்தில், நாம் வாசிப்பதாவது: “ஈஸ்டர் என்ற இந்தப் பதத்தின் பொருள்தானே என்ன? இது கிறிஸ்தவ பெயரல்ல. இதன் நெற்றியில்தானே இது இதன் கல்தேய தோற்றுமூலத்தை தாங்கியுள்ளது. ஈஸ்டர் என்பது, வான ராணியாகிய, பெல்டிஸின் பட்டப்பெயர்களில் ஒன்றான அஸ்டார்ட்டி என்பதே தவிர வேறு எதுவுமில்லை, இவளுடைய பெயர், . . . லேயர்ட் என்பவர் அசீரிய நினைவுச் சின்னங்களில் கண்டுபிடித்தபடி, இஷ்டார் என்பதாகும். . . . ஈஸ்டரின் சரித்திரம் இத்தகையதே. இதன் கொண்டாட்டக் காலப்பகுதியில் இன்னும் இருந்துவருகிற பலர் விரும்பும் பழக்கவழக்க முறைகள் அதன் பாபிலோனிய தனிப்பண்பைக் குறித்த சரித்திரத்தின் சாட்சியத்தைப் போதியளவு உறுதிசெய்கின்றன. பெரிய வெள்ளிக்கிழமையின் சூடான சிலுவை பன்களும், பஸ்காவின் அல்லது ஈஸ்டர் ஞாயிறுவின் சாயமிட்ட முட்டைகளும், இப்பொழுது அவை குறிப்பிடுகிறபடியே கல்தேய சமயச்சடங்குகளில் சின்னங்களாயமைந்திருந்தன.”—(நியு யார்க், 1943), பக்கங்கள் 103, 107, 108; எரேமியா 7:18-ஐ ஒத்துப்பாருங்கள்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஆட்சேபத்துக்குரியதா?

தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா ஆனதன் பிரகாரம், “ரோம அரசன் ஜூலியஸ் ஸீஸர் கி.மு. 46-ல் ஜனவரி 1-ஐ புது ஆண்டின் நாள் என நிலைநாட்டினான். ரோமர்கள் இந்த நாளை, வாசல்கள், கதவுகள், மற்றும் தொக்கங்களின் தெய்வமாகிய, ஜானஸூக்கு அர்ப்பணம் செய்தார்கள், ஜனவரி மாதத்துக்கு ஜானஸின் பெயர் கொடுக்கப்பட்டது, இவனுக்கு இரண்டு முகங்கள் இருந்தன—ஒன்று முன்னால் நோக்கினது மற்றது பின்னால் நோக்கினது.”—(1984), புத். 14, பக். 237.

புத்தாண்டு தேதியும் அதன் கொண்டாட்டங்களோடு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களும் நாட்டுக்குநாடு வேறுபடுகின்றன. பல இடங்களில் களியாட்டங்களும் குடிவெறியும் விழாநடைமுறைகளின் பாகமாயிருக்கின்றன. எனினும், ரோமர் 13:13-ல் அறிவுரை கூறியிருப்பதாவது: “களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.” (மேலும் 1 பேதுரு 4:3, 4; கலாத்தியர் 5:19-21-ஐயும் பாருங்கள்.)

“மரித்தோரின் ஆவிகளின்” நினைவுக் குறிப்பான விடுமுறைநாட்களின் அடிப்படையில் இருப்பதென்ன?

தி என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் 1910-ன் பதிப்பில் சொல்லியிருப்பதாவது: “சகல ஆத்துமாக்களின் நாள் . . . மரணத்தில் பிரிந்த உண்மையுள்ளோரின் நினைவுவிழாவுக்கு ரோமன் கத்தோலிக்கச் சர்ச்சில் ஒதுக்கிவைத்துள்ள நாள். இந்தக் கொண்டாட்டம், மரணத்தில் மன்னிக்கத்தக்கப் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டிராத, அல்லது கடந்தகால மீறுதல்களுக்கு ஈடு செய்யப்பட்டிராத உண்மையுள்ளோரின் ஆத்துமாக்கள், பேரின்ப காட்சியை அடையமுடியாது, அதை அடைய ஜெபத்தாலும் பலிப்பூசையாலும் அவர்களுக்கு உதவிசெய்யலாம் என்ற கோட்பாட்டின்பேரில் ஆதாரங்கொண்டிருக்கிறது. . . . சகல ஆத்துமாக்களின் நாளோடு சம்பந்தப்பட்ட பலர் விருப்பத்துக்குகந்த சில நம்பிக்கைகள் புறமதத்தில் தொக்கத்தைக் கொண்டிருக்கின்றன, மேலும் நினைவுக்கு எட்டாதத் தொல்பழமையானவை. இவ்வாறு மரித்தோர் சகல ஆத்துமாக்கள் தின இரவில் தங்கள் முந்தின வீடுகளுக்குத் திரும்பிவந்து உயிருள்ளோரின் உணவில் பங்குகொள்கிறார்களென பல கத்தோலிக்க நாடுகளின் உழுகுலத்தார் நம்புகின்றனர்.”—புத். I, பக். 709.

தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா சொல்வதாவது: “ஹாலோவீனோடு (சகல பரிசுத்தவான்களின் தினத்துக்கு முந்தின இரவு கொண்டாட்டத்தோடு) சம்பந்தப்பட்ட வழக்கங்களின் அடிப்படைக்கூறுகள் கிறிஸ்தவத்துக்கு முந்தின காலங்களிலிருந்த டுரூயிட் மதச் சடங்கில் தோன்றியவையென ஆராய்ந்து காணக்கூடியவை. கெல்ட்டிய இனத்தவர் இரண்டு பெரிய தெய்வங்களுக்குப் பண்டிகைகள் வைத்திருந்தனர்—சூரிய தெய்வத்துக்கும் (சம்ஹாய்ன் எனப்பட்ட) மரித்தோரின் தெய்வத்துக்கும், இந்தத் தெய்வத்தின் பண்டிகை, கெல்ட்டிய புது ஆண்டின் தொக்கமாகிய நவம்பர் 1-ல் கொண்டாடப்பட்டது. இந்த மரித்தோர் பண்டிகை படிப்படியாய் கிறிஸ்தவ ஆசாரங்களுக்குள் சேர்த்திணைக்கப்பட்டது.”—(1977), புத். 13, பக். 725.

மரித்தோர் வணக்கம் என்ற ஆங்கில புத்தகம் இந்தத் தொக்கத்தைக் குறிப்பிடுகிறது: “எல்லாப் பூர்வ ஜனத்தாரின் புராண இலக்கியங்களிலும் ஜலப்பிரளயத்தின் நிகழ்ச்சிகள் சேர்த்திணைக்கப்பட்டிருக்கின்றன . . . இந்தச் சம்பவத்தின் நினைவு விழாவாக மரித்தோரின் மகா பண்டிகை, ஒன்றோடொன்று பெரிதோ சிறிதோ போக்குவரத்துள்ள நாடுகளால்மட்டுமல்லாமல், சமுத்திரத்தாலும் நூற்றாண்டுக்கணக்கான காலத்தாலும் வெகு தூரமாய்ப் பிரிந்துள்ள ஜாதிகளாலும் ஆசரிக்கப்பட்டுவரும் இந்த உண்மையால் இந்த விவாதத்தின் உறுதி விளக்கிக் காட்டப்படுகிறது. மேலும், இந்தப் பண்டிகை, மோசயின் விவரப் பதிவின் பிரகாரம், அந்த ஜலப்பிரளயம் நடந்தேறின ஏறக்குறைய அதே நாளில் எல்லாராலும் கொண்டாடப்படுகிறது, உதாரணமாக, இரண்டாம் மாதத்தின் பதினேழாம் நாள்—இந்த மாதம் ஏறக்குறைய நம்முடைய நவம்பர் மாதத்துடன் ஒத்திருக்கிறது.” (லண்டன், 1904, கர்னல் J. கார்னியர், பக். 4) இவ்வாறு இந்தக் கொண்டாட்டங்கள், நோவாவின் நாளில் அவர்களுடைய கேட்டின் காரணமாகக் கடவுள் அழித்த ஆட்களைக் கனப்படுத்துவதில் உண்மையில் தொங்கின.—ஆதி. 6:5-7; 7:11.

மரித்தோர் மற்றொரு மண்டலத்தில் உயிரோடிருப்பதுபோல் “மரித்தோரின் ஆவிகளைக்” கனப்படுத்தும் இத்தகைய விடுமுறைநாட்கள், மரணம் முற்றிலும் உணர்வற்ற நிலை என்று பைபிள் மரணத்தை விவரிப்பதற்கு நேர்மாறாக இருக்கின்றன.—பிர. 9:5, 10; சங். 146:4.

மனித ஆத்துமா சாவாமையுடையதென்ற நம்பிக்கையின் தொக்கத்தைப்பற்றி, பக்கங்கள் 101, 102-ல் “மரணம்,” என்ற முக்கிய தலைப்பின் கீழும், பக்கங்கள் 379, 380-ல், “ஆத்துமா” என்பதன் கீழும் பாருங்கள்.

வாலென்டீனின் நாளின் தொக்கம் என்ன?

தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா நமக்குப் பின்வருமாறு தகவலளிக்கிறது: “வாலென்டீனின் நாள், வாலென்டீன் என பெயரிடப்பட்ட இரண்டு வேறுபட்ட கிறிஸ்தவ இரத்தச் சாட்சிகளின் பண்டிகைநாளிலிருந்து வருகிறது. ஆனால் அந்த நாளோடு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்கள் . . . ஒவ்வொரு பிப்ரவரி 15-லும் நடந்த லூப்பர்காலியா எனப்பட்ட பூர்வ ரோம பண்டிகையிலிருந்து பெரும்பாலும் வரலாம். இந்தப் பண்டிகை, பெண்களின் மற்றும் திருமணத்தின் ரோம தேவதை ஜூனோவையும், இயற்கைத் தெய்வமான பான் என்பதையும் கனப்படுத்தினது.”—(1973), புத். 20, பக். 204.

தாய்மார்களைக் கனப்படுத்துவதற்கு ஒரு நாளை ஒதுக்கிவைப்பதன் இந்தப் பழக்கத்தின் தொக்கம் என்ன?

தி என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்வதாவது: “பூர்வ கிரேக்கில் தாய் வணக்கத்தின் வழக்கத்திலிருந்து தோன்றிய ஒரு பண்டிகை. தெய்வங்களின் பெரிய தாய் சைபெலி, அல்லது ரியாவுக்குச் சடங்காசாரங்களுடன் நடத்தப்பட்ட, விதிமுறையான தாய் வணக்கம் சின்ன ஆசியா முழுவதிலும் மார்ச் 15-ம் நாளில் நடப்பிக்கப்பட்டன.”—(1959), புத். 15, பக். 849.

நாட்டின் அரசியல் சரித்திரத்திலுள்ள சம்பவங்களை நினைவுவிழா கொண்டாடும் ஆசாரங்களின் சம்பந்தமாகக் கிறிஸ்தவர்களின் நோக்குநிலையை பைபிளின் எந்த நியமங்கள் விளக்குகின்றன?

யோவான் 18:36: “இயேசு (ரோம தேசாதிபதிக்குப்) பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, . . . என்றார்.”

யோவான் 15:19: “நீங்கள் [இயேசுவைப் பின்பற்றினவர்கள்] உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.”

1 யோவான் 5:19: “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” (ஒத்துப்பாருங்கள்: யோவான் 14:30; வெளிப்படுத்துதல் 13:1, 2; தானியேல் 2:44.)

மற்ற உள்ளூர் மற்றும் தேசீய விடுமுறைகள்

இவை பல உண்டு. எல்லாவற்றையும் இங்கே விவாதிக்க முடியாது. ஆனால் மேலே கொடுக்கப்பட்ட சரித்திரப்பூர்வ தகவல், எந்த விடுமுறையின் சம்பந்தமாகவும் கவனிக்கவேண்டியதென்ன என்பதைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கிறது, மேலும் ஏற்கெனவே சிந்திக்கப்பட்ட பைபிள் நியமங்கள், யெகோவா தேவனுக்குப் பிரியமானதைச் செய்வதையே தங்கள் முதல் முக்கிய விருப்பமாகக் கொண்டிருக்கிறவர்களுக்குப் போதிய வழிநத்துதலை அளிக்கின்றன.