Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அமைப்பு

அமைப்பு

அமைப்பு

சொற்பொருள் விளக்கம்:  ஒரு குறிப்பிட்ட வேலைக்காக அல்லது நோக்கத்துக்காக முயற்சிகளை ஒத்திசைவிக்கும் ஆட்களின் ஒரு கூட்டிணைவு அல்லது சங்கம். ஓர் அமைப்பின் உறுப்பினர் நிருவாக ஏற்பாடுகளாலும் தராதரங்கள் அல்லது கட்டளைகளாலும் ஒன்றுபடுத்தப்படுகின்றனர். யெகோவாவின் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாயுள்ள ஆட்கள், பிறப்பினாலோ வலுக்கட்டாயத்தாலோ அல்ல, தங்கள் சொந்தத் தெரிந்துகொள்ளுதலின் பலனாக யெகோவாவின் அமைப்புக்குள் வருகின்றனர். அதன் போதகங்களும் செயல்களும் மற்றும் அது செய்யும் வேலையில் தாங்கள் பங்குகொள்ள வேண்டுமென அவர்கள் விரும்புவதும் அவர்களை அவருடைய பூமிக்குரிய அமைப்பினிடம் இழுத்திருக்கின்றன.

யெகோவா இங்கே பூமியில் ஓர் அமைப்பை உண்மையில் கொண்டிருக்கிறாரா?

இந்தக் கேள்விக்கு விடையளிக்க, பின்வருவதைக் கவனியுங்கள்:

கடவுளுடைய பரலோக சிருஷ்டிகளான, தூதர்கள் ஒருமுகப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கிறார்களா?

தானி. 7:9, 10: “நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.”

சங். 103:20, 21, தி.மொ.: “யெகோவாவினுடைய சொல்லின் சத்தத்துக்குச் செவிகொடுத்து அவர் சொற்படி செய்கிற பலத்த வீரர்களே, அவர் தூதர்களே, அவரை ஸ்தாத்திரியுங்கள். யெகோவாவின் சர்வ சேனைகளே, அவருக்குப் பிரியமானதைச் செய்துவருகிற அவர் பணிவிடையாட்களே, அவரை ஸ்தாத்திரியுங்கள்.” (“சேனை” என்பது ஒழுங்கமைப்புடைய ஒரு தொகுதி.)

கடந்த காலங்களில் கடவுள் பூமியிலிருந்த தம் ஊழியருக்குக் கட்டளைகளை எவ்வாறு தெரிவித்தார்?

யெகோவாவின் வணக்கத்தார் எண்ணிக்கையில் ஒருசிலராயிருந்தபோது, நோவா மற்றும் ஆபிரகாமைப்போன்ற குடும்பத் தலைவர்களுக்கு அவர் கட்டளைகளைக் கொடுத்தார், அவர்கள் அப்பொழுது தங்கள் குடும்பங்களுக்கு யெகோவாவின் பிரதிநிதி பேச்சாளர்களாக நடித்தனர். (ஆதி. 7:1, 7; 12:1-5) யெகோவா இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுதலைசெய்தபோது, மோசயின்மூலமாய் அவர்களுக்கு வழிநடத்தும் கட்டளைகளைக் கொடுத்தார். (யாத். 3:10) சீனாய் மலையில், கடவுள் அவர்களுடைய வணக்கத்தையும் ஒருவரோடொருவரின் உறவுகளையும் ஆளுவதற்குச் சட்டங்களையும் விதிமுறைகளையும் கொடுத்து ஒரு ஜனத்தாராக அந்த மக்களை ஒழுங்குபடுத்தி அமைத்தார். (யாத். 24:12) வணக்கத்துக்குரிய காரியத்தில் தலைமைதாங்கி நடத்தவும் அந்த ஜனங்களுக்கு யெகோவாவின் கட்டளைகளைக் கற்பிக்கவும் ஓர் ஆசாரியத்துவத்தை அவர் நிலைநாட்டினார்; சில சமயங்களில் அந்த ஜனத்துக்குத் தேவைப்பட்ட அறிவுரையையும் எச்சரிக்கையையும் கொடுக்க தீர்க்கதரிசிகளையும் அவர் எழுப்பினார். (உபா. 33:8, 10; எரே. 7:24, 25) இவ்வாறு, தம்மை வணங்கின தனியாட்கள் ஒவ்வொருவரின் ஜெபங்களுக்கும் யெகோவா செவிகொடுத்தபோதிலும், அவர்களுக்கு வேண்டிய போனையை அமைப்புக்குரிய ஓர் ஏற்பாட்டின்மூலமே அளித்தார்.

உண்மை வணக்கத்தாரை இயேசு கிறிஸ்துவின்மூலம் தம்முடன் ஒப்புரவாக்கத் தொங்குவதற்கான காலம் நெருங்கினபோது, கடவுள் அவரைத் தம்முடைய பிரதிநிதி பேச்சாளராகச் செயல்படும்படி பூமிக்கு அனுப்பினார். (எபி. 1:1, 2) பின்பு பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டதோடு, கிறிஸ்தவ சபை உண்டாயிருக்கச் செய்யப்பட்டது. இயேசு பரலோகத்துக்குத் திரும்பிச் சென்றுவிட்டபின்பு, இந்தச் சபை போனைகொடுப்பதற்கும் தனியாட்களான கிறிஸ்தவர்களின் முயற்சிகளை ஒத்திசைவிப்பதற்கும் யெகோவாவின் ஏற்பாடாயிற்று. அந்தந்த இடத்து சபைகளில் தலைமைத்தாங்கி நடத்த கண்காணிகள் இருந்தனர், மேலும் ஒரு மத்திப நிர்வாகக் குழு தேவையான தீர்மானங்களைச் செய்து ஊழிய நடவடிக்கையை ஒத்திசைவிக்க உதவியது. தெளிவாகவே, பூமியில் உண்மையான கிறிஸ்தவர்களாலாகிய ஓர் அமைப்பை யெகோவா உண்டாயிருக்கச் செய்தார்.—அப். 14:23; 16:4, 5; கலா. 2:7-10.

யெகோவாவின் இயற்கை சிருஷ்டிப்பு வேலைகள் அவர் அமைப்புக்குரிய கடவுளென உணர்த்திக் காட்டுகின்றனவா?

ஏசா. 40:26: “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.” (நட்சத்திரங்கள் பால்வீதி மண்டலங்களாகக் கூட்டங்கூட்டமாய்ப் பிரிக்கப்பட்டு, தனித்தனி நட்சத்திரங்களின் இயல்பு வேறுபடுகிறபோதிலும், ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட முறையில் சுற்றிவருகின்றன. கிரகங்கள் துல்லிய காலத்திட்ட அமைப்புடன், அதனதற்கு நியமித்துள்ள கோப்பாதைகளில் சுற்றிவருகின்றன, ஒவ்வொரு மூலப்பொருளின் ஒவ்வொரு அணுவிலும் காணப்படுகிற மின்னணுக்களும் (எலெக்ட்ரான்களும்) சுற்றிச் சுழலும் பாதைகளைக் கொண்டிருக்கின்றன. எல்லாச் சடப்பொருட்களின் அமைப்பும் அவ்வளவு நிலைபெறான கணக்கியல் மாதிரியைப் பின்தொடருவதால், விஞ்ஞானிகள் குறிப்பிட்ட மூலப்பொருட்கள் இருப்பதைத் தாங்கள் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே சொல்ல முடிகிறது. இதெல்லாம் அசாதாரண அமைப்புக்குரிய அத்தாட்சியைக் குறிக்கிறது.)

உண்மையான கிறிஸ்தவர்கள் ஒழுங்காக அமைக்கப்பட்ட ஜனமாக இருப்பார்களென பைபிள் காட்டுகிறதா?

மத். 24:14; 28:19, 20, NW: “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” “ஆகையால் நீங்கள் போய் சகல ஜாதிகளின் ஜனங்களையும் சீஷராக்குங்கள். அவர்களை முழுக்காட்டி . . . அவர்களுக்குக் கற்பியுங்கள்.” (அமைப்பு இல்லாமல் இதை எவ்வாறு நிறைவேற்ற முடியும்? இயேசு தம்முடைய முதல் சீஷர்களை இந்த வேலைக்காகப் பயிற்றுவிக்கையில், அவரவர் தனக்கு விருப்பமான இடத்துக்குச் சென்று தான் தெரிந்துகொள்ளும் எந்த முறையிலாவது தன் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளும்படி அவர்கள் ஒவ்வொரிடமும் வெறுமென சொல்லவில்லை. அவர் அவர்களைப் பயிற்றுவித்து, திட்டமான கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து ஒழுங்காக அமைக்கப்பட்ட முறையில் அவர்களை வெளியில் அனுப்பினார். லூக்கா 8:1; 9:1-6; 10:1-16 ஆகியவற்றைப் பாருங்கள்.)

எபி. 10:24, 25: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” (ஆனால் அவர்கள் கூடிவரும்படி ஒழுங்காய்க் கூட்டங்களை நடத்தும் ஓர் அமைப்பு இல்லையெனில், அக்கறை காட்டும் ஆட்கள் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியும்படி அவர்களை ஒருவர் எங்கே வழிநடத்துவது?)

1 கொரி. 14:33, 40: “தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார், . . . சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.” (இங்கே அப்போஸ்தலன் பவுல், சபை கூட்டங்களில் ஒழுங்கான நடைமுறையைக் கடைப்பிடிப்பதை விவாதித்துப் பேசுகிறான். தேவாவியால் ஏவப்பட்ட இந்த அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவது அமைப்புக்கு மதிப்புக் காட்டுவதைத் தேவைப்படுத்துகிறது.)

1 பேதுரு 2:9, 17: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தமது ஆச்சரியமான வெளிச்சத்தினிடத்திற்கு வரவழைத்தவரின் புண்ணியங்களை அறிவிக்கும்படி, தெரிந்தெடுக்கப்பட்ட சந்ததியும் ராஜரிகமான ஆசாரியக்கூட்டமும் பரிசுத்த ஜாதியும் அவருக்குச் சொந்தமான ஜனமுமாம். . . . சகோதரக்கூட்டத்தாரில் அன்புகூருங்கள்.” (ஒரு குறிப்பிட்ட வேலையை நிறைவேற்றுவதற்குத் தங்கள் முயற்சிகளை ஒருங்கே செலுத்தும் ஆட்களின் கூட்டிணைவே ஓர் அமைப்பாகும்.)

கடவுளின் உண்மையுள்ள ஊழியராயிருப்போர், கிறிஸ்தவமண்டலத்தின் பல்வேறு சர்ச்சுகளில் சிதறியுள்ள தனியாட்கள்தானா?

2 கொரி. 6:15-18: “அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? . . . ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொதிருங்கள் என்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் [யெகோவா] சொல்லுகிறார்.” (தாங்கள் உண்மையில் அவிசுவாசிகளென தங்கள் வாழ்க்கைமுறையால் காட்டுவோருடன் வணக்கத்தில் ஒருவன் தொர்ந்து பங்குகொண்டுவந்தால் அவன் மெய்யாகக் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியனா? “மகா பாபிலோன்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

1 கொரி. 1:10, தி.மொ.: “சகோதரரே, நீங்களெல்லாரும் ஒன்றையே பேசவும் பிரிவினைகளின்றி ஒரே மனதும் ஒரே கருத்துமுள்ள உத்தமராயிருக்கவும் வேண்டுமென்று நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.” (இத்தகைய ஒற்றுமை கிறிஸ்தமண்டலத்தின் பல்வேறுபட்ட சர்ச்சுகளுக்குள் இல்லை.)

யோவான் 10:16, தி.மொ.: “இத்தொழுவத்திற்குரியவைகளல்லாத வேறே ஆடுகளும் எனக்குண்டு; அவைகளையும் நான் நடத்திக்கொண்டு வரவேண்டும், அவைகள் என் குரலைக்கேட்கும்; அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” (இத்தகையோரை இயேசு “ஒரே மந்தைக்குள்” கொண்டுவருவாராதலால் அவர்கள் கிறிஸ்தவமண்டலத்தின் மதங்களுக்குள் சிதறியிருக்க முடியாதென்பது தெளிவாயிருக்கிறதல்லவா?)

நம்முடைய நாளில் யெகோவாவின் காணக்கூடிய அமைப்பை எவ்வாறு அடையாளங்கண்டுகொள்வது?

(1) யெகோவாவே ஒரே உண்மையுள்ள கடவுளென அது உண்மையில் உயர்த்துகிறது.—மத். 4:10; யோன் 17:3.

(2) யெகோவாவின் நோக்கத்தில் இயேசு கிறிஸ்து—யகோவாவின் பேரரசாட்சியைச் சரியென நிரூபித்துக் காட்டுபவராக, ஜீவாதிபதியாக, கிறிஸ்தவ சபையின் தலையாக, ஆளும் மேசியானிய அரசராக—வகிக்கும் இன்றியமையாதப் பாகத்தை அது முற்றிலும் மதித்துணருகிறது.—வெளி. 19:11-13; 12:10; அப். 5:31; எபே. 1:22, 23.

(3) கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையை மிக நெருங்கக் கடைப்பிடிக்கிறது, அதன் எல்லா போகங்களையும் நடத்தைக்குரிய தராதரங்களையும் பைபிளில் ஆதாரங்கொள்ளச் செய்கிறது.—2 தீமோ. 3:16, 17.

(4) உலகத்திலிருந்து பிரிந்த நிலையில் தன்னை வைத்துக்கொள்கிறது.—யாக். 1:27; 4:4.

(5) யெகோவாதாமே பரிசுத்தமுள்ளவராகையால், அது அதன் உறுப்பினருக்குள் ஒழுக்கச் சுத்தத்தின் உயர்நிலையைக் காத்துவருகிறது.—1 பேதுரு 1:15, 16; 1 கொரி. 5:9-13.

(6) நம்முடைய நாளுக்காக பைபிளில் முன்னறிவித்துள்ள வேலையை, அதாவது, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை உலகமுழுவதிலும் ஒரு சாட்சியாகப் பிரசங்கிப்பதைச் செய்வதற்குத் தன் முதன்மையான முயற்சிகளை முற்றிலும் ஈடுடுத்துகிறது.—மத். 24:14.

(7) மனித அபூரணங்கள் இருப்பினும், அதன் உறுப்பினர் கடவுளுடைய ஆவியின் கனிகளை—அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றை—வளர்த்துப் பிறப்பிக்கிறார்கள். இதை அத்தகைய அளவில் அவர்கள் செய்வது அவர்களை இவ்வுலகத்திலிருந்து தனிப்பட பிரித்துவைக்கிறது.—கலா. 5:22, 23; யோன் 13:35.

யெகோவாவின் அமைப்புக்கு நாம் எவ்வாறு மதிப்பு காட்டலாம்?

1 கொரி. 10:31: “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.”

எபி. 13:17, தி.மொ.: “உங்களை வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கியிருங்கள்; அவர்கள் கணக்கொப்புவிக்கப்போகிறவர்களாய் உங்கள் ஆத்துமாக்களுக்காக விழித்திருக்கிறார்கள்.”

யாக். 1:22: “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.”

தீத்து 2:11-13: “எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, நான் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, . . . எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.”

1 பேதுரு 2:17, தி.மொ.: “சகோதரக்கூட்டத்தாரில் அன்புகூருங்கள்.”