Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரதீஸ்

பரதீஸ்

பரதீஸ்

சொற்பொருள் விளக்கம்:  பைபிளின் “கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் ஏதேன் தோட்டத்தைக் குறிப்பிட “பரதீஸ்” (பரதீய்ஸாஸ்) என்ற பதத்தை மொழிபெயர்ப்பாளர்கள் பொருத்தமாய்ப் பயன்படுத்தியுள்ளனர், ஏனெனில் அது வேலியடைக்கப்பட்ட பூங்காவெனத் தெரிகிறது. ஆதியாகமத்திலுள்ள விவரத்துக்குப் பின் பரதீஸைப்பற்றிக் கூறும் பைபிள் வசனங்கள் (1) அந்த ஏதேன் தோட்டத்தைத்தானே, அல்லது (2)ஏதேன் தோட்டத்தைப்போன்ற ஒரு நிலைமைக்கு எதிர்காலத்தில் மாற்றப்பட்டிருக்கப்போகும் பூமி முழுவதையுமே, அல்லது (3) பூமியில் கடவுளுடைய ஊழியருக்குள் செழித்தோங்கும் ஆவிக்குரிய நிலைமைகளை, அல்லது (4) ஏதேனை நினைப்பூட்டும் பரலோகத்திலுள்ள ஏற்பாடுகளைக் குறிப்பிடுகின்றன.

“புதிய ஏற்பாடு” எதிர்கால பூமிக்குரிய பரதீஸைக் குறிப்பிடுகிறதா அல்லது அது “பழைய ஏற்பாட்டில்” மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறதா?

பைபிளை இரண்டு பாகங்களாகப் பிரித்து, கூற்றுகளின் தகுதியை அவை “பழைய” பகுதியிலிருக்கின்றனவா அல்லது “புதிய” பகுதியிலிருக்கின்றனவா என்ற ஆதாரத்தின்பேரில் மதிப்பிடுவது வேதப்பூர்வமானதல்ல. 2 தீமோத்தேயு 3:16-ல் நமக்குப் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” ரோமர் 15:4-ல் கிறிஸ்தவ காலத்துக்கு முன்னால் தேவாவியால் ஏவப்பட்ட வேத எழுத்துக்களைக் குறித்துப் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “முன் எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போனையாகவே எழுதப்பட்டன.” (தி.மொ.) ஆகையால் இந்தக் கேள்விக்குத் தகுந்த விடை முழு பைபிளையும் கவனித்தாராய்வதாயிருக்க வேண்டும்.

ஆதியாகமம் 2:8-ல் (தி.மொ.) சொல்லியிருப்பதாவது: “கடவுளாகிய யெகோவா கீழ்த்திசையில் ஏதேனில் ஒரு தோட்டத்தையுண்டாக்கி [“பூங்கா,” Mo; “பரதீஸ்,” Dy; பரதீய்ஸன், LXX], தாம் உருவாக்கின மனுஷனை [ஆதாமை] அதில் வைத்தார்.” அங்கே பற்பலவகைகளான மற்றும் கவர்ச்சிகமான தாவர மற்றும் மிருக வாழ்க்கை ஏராளமாயிருந்தன. யெகோவா அந்த முதல் மனிதத் தம்பதிகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்,” என்று அவர்களுக்குக் கூறினார். (ஆதி. 1:28) பூமி முழுவதும் பரதீஸாகவும் நன்றியுணர்வுடன் தம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோரால் குடியேற்றப்பட்டும் இருக்கவேண்டுமென்ற கடவுளுடைய முதல் நோக்கம் நிறைவேறாமற் போது. (ஏசா. 45:18; 55:10, 11) இதனிமித்தமே இயேசு: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்,” என்று சொன்னார். இதனிமித்தமே பின்வருமாறு ஜெபிக்கும்படியும் அவர் தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத். 5:5; 6:9, 10) இதற்கு ஒத்தவாறு, எபேசியர் 1:9-11-ல் “பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்ற,” கடவுளுடைய நோக்கம் விளக்கப்பட்டுள்ளது. எபிரெயர் 2:5-ல் (NW) “வரவிருக்கும் குடியிருக்கப்பட்ட பூமி,” என குறிப்பிட்டிருக்கிறது. வெளிப்படுத்துதல் 5:10-ல் கிறிஸ்துவோடு உடன்-சுதந்தரவாளிகளாயிருப்போர், “பூமியின்மீது அரசாளுவார்கள்,” எனக் குறிப்பிடுகிறது. வெளிப்படுத்துதல் 21:1-5-லும் 22:1, 2-லும் “புதிய பூமியில்” இருக்கப்போகிற நிலைமைகளைப்பற்றிக் களிப்பூட்டும் விவரிப்புகள் மேலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன, இவை ஏதேனில் ஜீவவிருட்சத்தைக் கொண்டிருந்த அந்த முதல் பரதீஸை ஒருவருக்கு நினைப்பூட்டுகின்றன.—ஆதி. 2:9.

மேலும், இயேசு எதிர்கால பூமிக்குரிய பரதீஸைக் குறிப்பிடுகையில் பரதீய்ஸாஸ் என்ற கிரேக்கப் பதத்தைப் பயன்படுத்தினார். “அவர் அவனிடம் [இயேசுவின் அருகில் மரத்தில் அறையப்பட்டிருந்த ஒரு தீயோன், இவன் இயேசுவின் வரப்போகும் அரசாதிகாரத்தில் விசுவாசத்தை வெளிப்படுத்தினான்]: ‘இன்று நான் உனக்கு மெய்யாகவே சொல்லுகிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்.’”—லூக்கா 23:43, (NW).

லூக்கா 23:43-ல், இயேசு அந்தத் தீயோனிடம் கூறின பரதீஸ் என்பதால் எதைக் குறித்தாரென நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?

அது, ‘நீதியுள்ளோரின் பிரிந்துசென்ற ஆத்துமாக்களுக்கு’ ஒரு தற்காலிக இருப்பிடமா, ஹேடீஸின் ஒரு பாகமா?

இந்தக் கருத்தின் மூலத்தொடக்கமென்ன? தி நியு இன்டர்நாஷனல் டிக்‍ஷனரி ஆஃப் நியு டெஸ்டமன்ட் தியோலாஜி கூறுவதாவது: “ஆத்துமா அழியாமையுடையதென்ற கிரேக்கக் கோட்பாடு படிப்படியாய் நுழைந்ததோடு பரதீஸ் நீதிமான்களின் இடைப்பட்ட நிலையின்போது தங்குமிடமாகிறது.” (கிரான்ட் ராப்பிட்ஸ், மிச்.; 1976, காலின் பிரெளன் பதிப்பித்தது, புத். 2, பக். 761) இயேசு பூமியிலிருந்தபோது இந்த வேதப்பூர்வமற்றக் கருத்து யூதருக்குள் பொதுவாயிருந்ததா? இது சந்தேகத்துக்குரியதென ஹேஸ்டிங்ஸின் பைபிள் அகராதி குறித்துக் காட்டுகிறது.—(எடின்பர்க், 1905), புத். III, பக். 669, 670.

முதல் நூற்றாண்டில் இந்தக் கருத்து யூதருக்குள் பொதுவாயிருந்ததென்று எடுத்துக்கொண்டாலும், மனந்திரும்பின அந்தத் தீயோனுக்குத் தாம் கொடுத்த வாக்கால் இயேசு அதை ஏற்று ஆதரித்திருப்பாரா? கடவுளுடைய வார்த்தைக்கு முரண்பட்ட பாரம்பரியங்களைப் போதித்ததற்காக அந்த யூத பரிசேயரையும் வேதபாரகரையும் இயேசு மிகக் கண்டிப்புடன் கண்டனம்பண்ணினார்.—மத்.15:3-9; மேலும் “ஆத்துமா” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

அப்போஸ்தலர் 2:30, 31-ல் காட்டியிருக்கிறபடி இயேசு தாம் மரித்தபோது ஹேடீஸுக்குச் சென்றார். (அப்போஸ்தலன் பேதுரு அங்கே சங்கீதம் 16:10-ஐ குறிப்பிடுகிறபோது ஹேடீஸை ஷியோலுக்குச் சமமாகக் குறிப்பிடுகிறான்.) ஆனால் ஷியோல்/ஹேடீஸ் அல்லது அதன் எந்தப் பாகமாவது ஒருவனுக்கு இன்பத்தைக் கொண்டுவருகிற பரதீஸ் என பைபிளில் எங்கேயும் கூறியில்லை. அதற்கு மாறாக, அங்கிருப்போர் “ஒன்றும் அறியார்கள்,” என்று பிரசங்கி 9:5, 10-ல் சொல்லியிருக்கிறது.

லூக்கா 23:43-ல் குறிப்பிட்டுள்ள பரதீஸ் பரலோகமா அல்லது பரலோகத்தின் ஏதோவொரு பாகமா?

இயேசு அவனிடம் பேசின அதே நாளில் இயேசுவும் அந்தத் தீயோனும் பரலோகத்துக்குச் சென்றார்களென்ற கருத்தை பைபிள் ஒப்புக்கொள்கிறதில்லை. இயேசு தாம் கொல்லப்பட்ட பின்பு, மூன்றாம் நாள்வரை உயிர்த்தெழுப்பப்படுவதில்லையென முன்னறிவித்திருந்தார். (லூக்கா 9:22) அந்த மூன்று நாள் காலப்பகுதியின்போது அவர் பரலோகத்தில் இல்லை, ஏனெனில் தாம் உயிர்த்தெழுப்பப்பட்டபின் அவர் மகதலேனா மரியாளிடம்: “நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை,” என்று சொன்னார். (யோவான் 20:17) இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு 40 நாட்களுக்குப் பின்பே அவருடைய சீஷர்கள் அவர் பூமியிலிருந்து மேலே உயர எடுத்துக்கொள்ளப்பட்டு பரலோகத்துக்கு மேலேறிச்செல்லத் தொங்குகையில் அவர்கள் பார்வைக்கு மறைந்ததைக் கண்டார்கள்.—அப். 1:3, 6-11.

அந்தத் தீயோன் பிந்தின எந்தச் சமயத்திலுங்கூட பரலோகத்துக்குச் செல்வதற்கான தகுதிகளைப் பெறவில்லை. அவன்—நீரிலும் முழுக்காட்டப்படவில்லை கடவுளுடைய ஆவியால் பிறப்பிக்கப்படவுமில்லை ஆதலால்—“மறுபடியும் பிறக்க”வில்லை. அந்தத் தீயோனின் மரணத்துக்கு 50-க்கும் மேற்பட்ட நாட்களுக்குப்பின் வரையில் பரிசுத்த ஆவி இயேசுவின் சீஷர்கள்மீது ஊற்றப்படவில்லை. (யோவான் 3:3, 5; அப். 2:1-4) தம்முடைய மரண நாளில், இயேசு ‘சோதனைகளில் தம்மோடுகூட நிலைத்திருந்தவர்களுடன்’ பரலோக ராஜ்யத்துக்கான ஓர் உடன்படிக்கை செய்திருந்தார். அந்தத் தீயோன் உண்மையுள்ளவனாயிருந்த அத்தகைய எந்தப் பதிவையும் கொண்டிருந்ததில்லை அதில் அவன் சேர்க்கப்படவுமில்லை.—லூக்கா 22:28-30.

இந்தப் பரதீஸ் பூமிக்குரியதென எது குறிப்பிட்டுக் காட்டுகிறது?

எபிரெய வேத எழுத்துக்கள், பரலோக வாழ்க்கையின் பரிசை எதிர்பார்க்கும்படி உண்மையுள்ள யூதர்களை ஒருபோதும் வழிநடத்தவில்லை. இங்கே பூமியில் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுவதையே அந்த வேத எழுத்துக்கள் குறிப்பிட்டுக் காட்டின. மேசியாவுக்கு “ஆளுகையும் மகிமையும் ராஜ்யமும் கொடுக்கப்ப”டுகையில், “சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்க”வேண்டுமென தானியேல் 7:13, 14-ல் முன்னறிவித்திருந்தது. அந்த ராஜ்யத்தின் அந்தக் குடிமக்கள் இங்கே பூமியில் இருப்பார்கள். அந்தத் தீயோன் இயேசுவினிடம் சொன்னதில்; அந்தச் சமயம் வருகையில் இயேசு அவனை நினைவுகூருவாரென்ற நம்பிக்கையையே வெளிப்படுத்தினானென தெளிவாய்த் தெரிகிறது.

அப்படியானால், இயேசு, அந்தத் தீயோனுடன் எவ்வாறு இருப்பார்? அவனை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவனுடைய மாம்சப்பிரகாரமானத் தேவைகளுக்கு ஏற்பாடு செய்து, நித்திய ஜீவனடைவதற்கு யெகோவாவின் கட்டளைகளைக் கற்று அவற்றிற்குக் கீழ்ப்படிவதற்கான வாய்ப்பை அவனுக்குத் தருவதன்மூலம் அவ்வாறு இருப்பார். (யோவான் 5:28, 29) அந்தத் தீயோனின் மனந்திரும்பின மரியாதையுள்ள மனப்பான்மையில், இயேசு, அவனை பூமிக்குரிய வாழ்க்கைக்கும் பரதீஸில் என்றென்றும் வாழ்வதற்குத் தங்கள் தகுதியை நிரூபிப்பதற்கான வாய்ப்புக்கும் உயிர்த்தெழுப்பப்பபோகிற கோடிக்கணக்கானோருக்குள் சேர்த்துக்கொள்வதற்குரிய ஆதாரத்தைக் கண்டார்.

பரதீஸில் அந்தத் தீயோன் எப்பொழுது இருப்பான்?

லூக்கா 23:43-ஐ ஒருவர் விளங்கிக்கொள்வது மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தியுள்ள நிறுத்தக்குறிகளால் பாதிக்கப்படுகிறது. மூல கிரேக்க பைபிள் கையெழுத்துப்பிரதிகளில் நிறுத்தக் குறிகள் இருக்கவில்லை. தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா (1956, புத். XXIII, பக். 16) பின்வருமாறு கூறுகிறது: “கிரேக்கரின் பூர்வ கையெழுத்துப் பிரதிகளிலும் எழுத்துப்பொறிப்புகளிலும் நிறுத்தக்குறியிட முயற்சி செய்ததாகத் தோன்றுகிறதில்லை.” பொ.ச. 9-ம் நூற்றாண்டு வரையில் அத்தகைய நிறுத்தக்குறியிடுதலைப் பயன்படுத்தவில்லை. லூக்கா 23:43 எவ்வாறு வாசிக்கப்படவேண்டும், “இன்று, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்” (RS) என்றா, அல்லது ‘இன்று மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்’ என்றா? இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி பல நூற்றாண்டுகள் சென்றபின் மூலவாக்கியத்தில் இடையில் புகுத்தப்பட்ட ஒரு காற்புள்ளி அல்ல, கிறிஸ்துவின் மற்றும் பைபிளின் மற்றெல்லாப் பாகத்திலுமுள்ள போகங்களே இதைத் தீர்மானிப்பதற்கு ஆதாரமாயிருக்கவேண்டும்.

J. B. ரோதர்ஹாம் என்பவர் மொழிபெயர்த்த தி எம்ஃபஸைஸ்ட் பைபிள், புதிய உலக மொழிபெயர்ப்பிலுள்ள இந்த நிறுத்தக் குறியோடு ஒத்திருக்கிறது. லூக்கா 23:43-ன் பேரில் கொடுத்துள்ள ஓர் அடிக்குறிப்பில், ஜெர்மன் பைபிள் மொழிபெயர்ப்பாளர் L. ரேன்ஹார்டட் சொல்வதாவது: “இந்த வசனத்தில் தற்போது [பெரும்பான்மையான மொழிபெயர்ப்பாளர்] பயன்படுத்தும் நிறுத்தக்குறி சந்தேகமில்லாமல் தவறானது மேலும் கிறிஸ்துவும் அந்தத் தீயோனும் சிந்தித்த முறை முழுவதற்கும் முரணானது. . . . பரதீஸ் மரித்தோருடைய மண்டலத்தின் ஓர் உட்பிரிவென [கிறிஸ்து] நிச்சயமாகவே விளங்கிக்கொள்ளவில்லை, அதற்கு மாறாக பூமியில் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுதலையே குறித்தார்.”

இயேசு எப்பொழுது ‘தம்முடைய ராஜ்யத்தில் வந்து’ இந்தப் பூமியைப் பரதீஸாக்கும் தம்முடைய பிதாவின் நோக்கத்தை நிறைவேற்றுவார்? லூக்கா 23:42, 43-ல் பதிவுசெய்யப்பட்ட இந்தக் கூற்றுகள் சொல்லப்பட்டு 63 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட வெளிப்படுத்துதலின் புத்தகம், இந்தச் சம்பவங்கள் இன்னும் எதிர்காலத்தில் நடக்கப்போகிறவையென காட்டுகிறது. (பக்கங்கள் 95-98-ல், “தேதிகள்,” என்பதன்கீழும் மேலும் “கடைசி நாட்கள்,” என்ற முக்கிய தலைப்பின்கீழும் பாருங்கள்.)