Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மீட்கும் பொருள்

மீட்கும் பொருள்

மீட்கும் பொருள்

சொற்பொருள் விளக்கம்:  திரும்ப வாங்குவதற்கு அல்லது ஏதோ கடமையிலிருந்து அல்லது விரும்பத்தகாதச் சூழ்நிலைமையிலிருந்து விடுதலையைக் கொண்டுவருவதற்குச் செலுத்தும் விலைமதிப்பாகும். எல்லாவற்றையும்விட தனிக் கவனிப்புக்குரிய மீட்கும் விலைமதிப்பு இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தமேயாகும். இந்த மீட்பின் விலைமதிப்பைப் பரலோகத்தில் செலுத்தினதால், இயேசு, நம்முடைய முற்பிதாவாகிய ஆதாமின் பாவத்தின்காரணமாக நாமெல்லாரும் சுதந்தரிக்கும் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் ஆதாமின் சந்ததியாரான நம்மை விடுதலைசெய்வதற்கு வழியைத் திறந்தார்.

இயேசு கிறிஸ்துவின் மரணம் எவ்வாறு, இரத்தச் சாட்சிகளான மற்றவர்களின் மரணத்திலிருந்து வேறுபட்டது?

இயேசு பரிபூரண மனிதனாயிருந்தார். அவர் எந்தப் பாவக் கறையுமில்லாமல் பிறந்தார், இந்தப் பரிபூரண நிலையைத் தம்முடைய வாழ்க்கை முழுவதிலும் காத்துக்கொண்டார். “அவர் பாவஞ்செய்யவில்லை.” அவர் “மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமா”யிருந்தார்.—1 பேதுரு 2:22; எபி. 7:26.

இவர் கடவுளுடைய தனிப்பட்ட குமாரனாயிருந்தார். கடவுள்தாமே இதைப் பரலோகங்களிலிருந்து உரத்தக் குரலில் சாட்சிபகர்ந்தார். (மத். 3:17; 17:5) இந்தக் குமாரன் முன்னால் பரலோகத்தில் வாழ்ந்திருந்தார்; இவர் மூலமே கடவுள், முழு சர்வலோகத்திலுமுள்ள சிருஷ்டிக்கப்பட்ட மற்ற எல்லா ஆட்களையும் பொருட்களையும் உண்டாயிருக்கச் செய்தார். கடவுள், தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு இந்தக் குமாரன் மனிதனாய்ப் பிறக்கும்படி இவருடைய உயிரை ஒரு கன்னிப் பெண்ணின் கர்ப்பத்துக்கு அற்புதமாய் மாற்றினார். தாம் உண்மையில் மனிதனாகியிருந்ததை அறிவுறுத்த, இயேசு தம்மை மனுஷகுமாரன் எனக் குறிப்பிட்டார்.—கொலோ. 1:15-20; யோன் 1:14; லூக்கா 5:24.

தம்மைக் கொன்றவர்களுக்கு முன்னால் அவர் வல்லமையற்றவராயில்லை. அவர் சொன்னதாவது: “என் ஜீவனைக் . . . கொடுக்கிறேன். ஒருவனும் அதை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளான், நானே அதைக் கொடுக்கிறேன்.” (யோவான் 10:17, 18, தி.மொ.) தம்முடைய சார்பில் தலையிட்டுத்தடுக்கும்படி தேவதூதர் சேனைகளை அனுப்பும்படி வேண்டிக்கொள்ள அவர் மறுத்தார். (மத். 26:53, 54) பொல்லாத ஆட்கள், அவரை மரணத்துக்குட்படுத்தும்படியான தங்கள் சதித்திட்டங்களை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டபோதிலும், அவருடைய மரணம் உண்மையில் பலிக்குரியதே.

அவர் சிந்தின இரத்தம் மற்றவர்களுக்கு விடுதலையளிப்பதற்குரிய விலைமதிப்பைக் கொண்டுள்ளது. “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மாற்கு 10:45) ஆகையால் ஒருவன் தன் நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்க மறுத்ததால் மரித்த இரத்தச்சாட்சி மரணத்தைப் பார்க்கிலும் அவருடைய மரணம் மிக அதிகத்தைக் கொண்டிருந்தது.

பக்கங்கள் 266, 267-லும், “நினைவு ஆசரிப்பு” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

நாம் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு ஏன் மீட்கும் பொருள் அந்த முறையில் கொடுக்கப்பட தேவைப்பட்டது?

ரோமர் 5:12: “ஒரே மனுஷனாலே [ஆதாமால்] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” (நாம் எவ்வளவு நேர்மையாய் வாழ்ந்தாலும், நாம் எல்லாரும் பிறப்பிலிருந்தே பாவிகள். (சங். 51:5) நாம் என்றென்றும் வாழ்வதற்கான உரிமையைச் சம்பாதிக்க நமக்கு ஒரு வழியும் இல்லை.)

ரோமர் 6:23: “பாவத்தின் சம்பளம் மரணம்.”

சங். 49:6-9: “தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும்; அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.” (அபூரண மனிதன் ஒருவனும் வேறொருவனைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்கு வழிவகையை அளிக்க முடியாது. அவனுடைய பணம் நித்திய ஜீவனை வாங்கமுடியாது, மரணத்தில் செலுத்தும் அவன் ஆத்துமா, பாவத்தின் காரணமாக அவனுக்கு எவ்வாறாயினும் வரவிருக்கிற சம்பளமாயிருப்பதால், எவரையும் விடுவிப்பதற்கு மதிப்புடையதாயில்லை.)

ஆதாமும் ஏவாளும் தங்கள் கலகத்துக்காகக் கட்டாயம் மரிக்க வேண்டியபோதிலும், கடவுளுக்குக் கீழ்ப்படியும் அவர்களுடைய சந்ததியார் யாவரும் என்றென்றும் வாழலாமென கடவுள் ஏன் வெறுமென கட்டளையிடவில்லை?

ஏனெனில் யெகோவா “நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிற”வர். (சங். 33:5; உபா. 32:4; எரே. 9:24) ஆகையால், இந்தச் சூழ்நிலைமையை அவர் கையாண்ட முறை அவருடைய நீதியை உறுதியாய்க் கடைப்பிடித்தது, பூரண நியாயத்துக்குரிய தேவைகளைப் பூர்த்திசெய்தது, அதே சமயத்தில், அவருடைய அன்பையும் இரக்கத்தையும் விளக்கிக் காட்டியது. இது எவ்வாறு?

(1) ஆதாம் ஏவாள் தாங்கள் பாவஞ்செய்ததற்கு முன்னால் பிள்ளைகளைப் பிறப்பிக்கவில்லை, ஆகையால் ஒருவரும் பரிபூரணராய்ப் பிறக்கவில்லை. ஆதாமின் சந்ததியார் யாவரும் பாவத்தில் பிறப்பிக்கப்பட்டார்கள், பாவம் மரணத்துக்கு வழிநடத்துகிறது. யெகோவா இதை வெறுமென பொருட்படுத்தாமல் விட்டிருந்தால், இது அவருடைய சொந்த நீதியுள்ள தராதரங்களை மறுதலிப்பதாயிருந்திருக்கும். கடவுள் அதைச் செய்யமுடியாது, அவ்வாறு அநீதிக்கு உடந்தையாகவும் முடியாது. பூரண நியாயத்துக்குரிய தேவைகளை அவர் தட்டிக்கழித்துவிடவில்லை; ஆகையால் அறிவுள்ள சிருஷ்டி எவரும் இந்தக் காரியத்தில் சட்டப்படி ஒருபோதும் குற்றங்கண்டுபிடிக்க முடியாது.—ரோமர் 3:21-26.

(2) நியாயத்துக்குரிய தேவைகளைப் புறக்கணியாமல், ஆதாமின் சந்ததியாரில் யெகோவாவுக்கு அன்புள்ள கீழ்ப்படிதலை மெய்ப்பித்துக் காட்டுவோருக்கு, விடுதலைக்கான ஏற்பாட்டை எவ்வாறு செய்ய முடியும்? ஒரு பரிபூரண மனிதன் பலிக்குரிய முறையில் மரித்தால், அந்தப் பரிபூரண உயிர், அந்த ஏற்பாட்டை விசுவாசத்துடன் ஏற்போருக்கு பாவங்களை ஈடுசெய்ய நியாயம் அனுமதிக்கும். ஒரு மனிதனின் [ஆதாமின்] பாவம் மனிதக் குடும்பம் முழுவதையும் பாவிகளாகும்படி செய்ததற்கு உத்தரவாதமுள்ளதானதால், மற்றொரு பரிபூரண மனிதனின் (செயல்முறையளவில், ஓர் இரண்டாவது ஆதாமின்) சிந்தப்பட்ட இரத்தம், ஒரே சமமான விலைமதிப்புடையதாயிருப்பதால், நியாய அளவுகோல்களைச் சரியீடு செய்ய முடியும். ஆதாம் வேண்டுமென்றே பாவஞ்செய்த பாவியாதலால், அவன் இதில் பயனடைய முடியாது; ஆனால் பாவத்துக்காக மனிதவர்க்கம் முழுவதும் செலுத்தவேண்டியிருந்த தண்டனை இம்முறையில் வேறொருவரால் செலுத்தப்பட்டு, ஆதாமின் சந்ததியார் மீட்கப்படலாம். ஆனால் அத்தகைய பரிபூரண மனிதன் ஒருவனும் இல்லை. பூரண நியாயத்துக்குரிய அந்தத் தேவைகளை மனிதவர்க்கம் ஒருபோதும் பூர்த்திசெய்ய முடியாது. ஆகையால், அதிசயமான அன்பின் வெளிக்காட்டாலும் தமக்கே பெருஞ்செலவு உண்டாகவும், யெகோவாதாமே அந்த ஏற்பாட்டைச் செய்தார். (1 கொரி. 15:45; 1 தீமோ. 2:5, 6; யோன் 3:16; ரோமர் 5:8) கடவுளுடைய ஒரே பேறான குமாரன் தம்முடைய பங்கைச் செய்ய மனமுள்ளவராயிருந்தார். மனத்தாழ்மையுடன் தம்முடைய பரலோக மகிமையைப் பின்விட்டு பரிபூரண மனிதனாகி, இயேசு மனிதவர்க்கத்துக்காக மரித்தார்.—பிலி. 2:7, 8.

உதாரணம்: ஒரு குடும்பத் தலைவன் ஒருவேளை குற்றவாளியாகி மரணதண்டனைத் தீர்ப்பளிக்கப்படலாம். அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களாய்ப் பயங்கர கடனில் விடப்பட்டிருக்கலாம். ஒருவேளை அவர்களுடைய தயவான பாட்டனார் அவர்களுடைய சார்பாகத் தலையிட்டு, தன்னுடன் வாழும் ஒரு குமாரன்மூலம் அவர்களுடைய கடன்களைச் செலுத்தவும் ஒரு புதிய வாழ்க்கைக்குரிய சாத்தியத்தை அவர்களுக்குத் திறக்கவும் ஏற்பாடு செய்கிறார். நிச்சயமாகவே, அதில் பயனடைய, அந்தப் பிள்ளைகள் அந்த ஏற்பாட்டை ஏற்கவேண்டும், மேலும் அந்தப் பாட்டனார், அந்தப் பிள்ளைகள் தங்கள் தகப்பனின் போக்கைப் பின்தொடரமாட்டார்களென்பதை உறுதிசெய்ய சில காரியங்களை நியாயப்படி கேட்கலாம்.

இயேசுவின் பலியின் விலைமதிப்பு யாருக்கு முதலாவது பயன்படுத்தப்பட்டது, என்ன நோக்கத்துடன்?

ரோமர் 1:16, தி.மொ.: “[இயேசு கிறிஸ்துவையும் யெகோவாவின் நோக்கத்தில் அவர் வகிக்கும் பாகத்தையும் பற்றிய] சுவிசேஷ[ம்] . . . விசுவாசிக்கிறவன் எவனுக்கும், முதலில் யூதனுக்கும் பின் கிரேக்கனுக்குங்கூட, அது இரட்சிப்புக்கு ஏதுவான தெய்வ வல்லமையாம்.” (கிறிஸ்துவின்மூலமான மீட்புக்குரிய இந்த ஏற்பாட்டிலிருந்து பயன்பெறும்படியான இந்த அழைப்பு முதல் யூதருக்கும் பின்பு யூதரல்லாதவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.)

எபே. 1:11-14: “கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் [யூதர்கள், அப்போஸ்தலன் பவுல் உட்பட] அவருடைய மகிமைக்கும் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, . . . கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி [எதற்குச் சுதந்தரவாளிகளாகும்படி? பரலோக ராஜ்யத்துக்கு] தெரிந்துகொள்ளப்பட்டோம். நீங்களும் [எபேசுவிலிருந்த பலரைப்போல், புறஜாதி ஜனங்களிலிருந்து எடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களும்] உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்தியவசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் [பரிசுத்த ஆவி] நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரம்.” (1 பேதுரு 1:4-ல் காட்டியிருக்கிறபடி, இந்தச் சுதந்தரம் பரலோகங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் பங்குகொள்வோரின் எண்ணிக்கை 1,44,000 என வெளிப்படுத்துதல் 14:1-4-ல் குறிப்பிட்டிருக்கிறது. கிறிஸ்துவுடன்கூட, இவர்கள் மனிவர்க்கத்தின்மீது அரசர்களாயும் ஆசாரியர்களாயும் ஆயிரம் ஆண்டுகள் சேவிப்பார்கள், அந்தச் சமயத்தின்போது, இந்தப் பூமி பரதீஸாகி, முதல் மனித ஜோடியின் பரிபூரண சந்ததியாரால் குடியிருக்கப்படவேண்டுமென்ற கடவுளுடைய நோக்கம் நிறைவேற்றப்படும்.)

நம்முடைய நாளில் வேறு எவரும் இயேசுவின் பலியிலிருந்து நன்மைகளை அனுபவிக்கிறார்கள்?

1 யோவான் 2:2, தி.மொ.: “நமது [அப்போஸ்தலன் யோனின் மற்றும் ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட மற்றக் கிறிஸ்தவர்களின்] பாவங்களுக்கு அவரே [இயேசு கிறிஸ்து] பிராயச்சித்தபலி; நமது பாவங்களுக்குமாத்திரமல்ல சர்வலோகத்தின் [மனிதவர்க்கத்தில் மற்றவர்களின், பூமியில் நித்திய ஜீவனடையும் எதிர்பார்ப்பு கூடியதாக்கப்பட்டவர்களின்] பாவங்களுக்குமே.”

யோவான் 10:16: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் [மற்றச் செம்மறியாடுகள், NW] எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” (ராஜ்ய சுதந்தரவாளிகளின் “சிறு மந்தை”யின் மீதிபேர் இன்னும் பூமியில் இருக்கையில் இந்த “மற்றச் செம்மறியாடுகள்” இயேசு கிறிஸ்துவின் அன்புள்ள கவனிப்பின்கீழ் வருகின்றனர்; இவ்வாறு இந்த “மற்றச் செம்மறியாடுகள்” ராஜ்ய சுதந்தரவாளிகளோடு அந்த “ஒரே மந்தை”யின் பாகமாகச் சேர்க்கப்படலாம். அவர்கள் எல்லாரும் இயேசுவின் பலியிலிருந்து வரும் அதே நன்மைகள் பலவற்றை அனுபவிக்கலாம், ஆனால் ஒரே முறைப்படியல்ல, ஏனெனில் அவர்களுக்கு வெவ்வேறு முடிவுகள் இருக்கின்றன.)

வெளி. 7:9, 14, தி.மொ.: “இவைகளுக்குப்பின் கண்டேன்: இதோ, ஒருவரும் எண்ணமுடியாத திரள்கூட்டம். இவர்கள் சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலுமிருந்து வந்தவர்கள். . . . “இவர்களே பெரிதான உபத்திரவத்திலிருந்து வருகிறவர்கள்; தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெளுத்தார்கள்.” (ஆகையால், அந்தப் பெரிதான உபத்திரவம் தொங்குகையில், இந்தத் திரள்கூட்டத்தின் உறுப்பினர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர், மேலும், மீட்கும்பலியில் அவர்கள் விசுவாசம் காட்டுவதனால் கடவுளுக்கு முன்பாகச் சுத்தமான நிலைநிற்கையுடையோராய் இருக்கின்றனர். இதன் பலனாக அவர்களுக்கு எண்ணப்படும் நீதி அந்தப் பெரிதான உபத்திரவத்தினூடே அவர்களை உயிரோடு பாதுகாத்துவைப்பதற்குப் போதுமானதாயுள்ளது.)

இந்த மீட்கும் பலியின் பலனாக என்ன எதிர்கால ஆசீர்வாதங்களை அனுபவிப்பர்?

வெளி. 5:9, 10, தி.மொ.: அவர்கள் “புதிய பாட்டைப்பாடி: புஸ்தகத்தை எடுக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தேவரீரே [ஆட்டுக்குட்டியானவர், இயேசு கிறிஸ்து] பாத்திரர். நீர் கொல்லப்பட்டீர், உமது இரத்தத்தினால் ஒவ்வொரு கோத்திரத்திலும் பாஷையிலும் ஜனத்திலும் ஜாதியிலுமிருந்து கடவுளுக்கென்று மனிதரை மீட்டுக்கொண்டீர்; அவர்களை நமது கடவுளுக்கு ஒரு ராஜ்யமாக்கி ஆசாரியருமாக்கினீர். அவர்கள் பூமியின்மீது அரசாளுவார்கள் என்றார்கள்.” (இந்த மீட்கும்பலி, கிறிஸ்துவுடன் அரசாளப்போகிறவர்களுக்குப் பரலோக வாழ்க்கைக்குச் செல்லும் வழியைத் திறப்பதில் இன்றியமையாத அம்சமாயிருந்தது. சீக்கிரத்தில் பூமியின் புதிய அரசாங்கத்திலுள்ள எல்லா அரசர்களும் தங்கள் பரலோக சிங்காசனங்களில் இருப்பார்கள்.)

வெளி. 7:9, 10: “இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு [பலிக்குரிய ஆட்டுக்குட்டியைப்போல் மரித்த இயேசு கிறிஸ்துவுக்கு] முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.” (கிறிஸ்துவின் பலியில் விசுவாசம் காட்டுவது இந்தத் திரள் கூட்டம் மிகுந்த உபத்திரவத்தினூடே தப்பிப்பிழைப்பதற்கு அடிப்படை காரணம்.)

வெளி. 22:1, 2, NW: “பின்பு பளிங்கைப்போல் தெளிவான ஜீவத் தண்ணீருள்ள சுத்தமான நதி கடவுளின் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் சிங்காசனத்திலிருந்து அதன் பெரும்பாதையின் நடுவில் ஓடிக்கொண்டிருப்பதை எனக்குக் காண்பித்தான். அந்த நதியின் இக்கரையிலும் அக்கரையிலும் பன்னிரண்டு பருவ கனிதரும் ஜீவ விருட்சங்கள் இருந்தன, அவை ஒவ்வொரு மாதமும் தங்கள் கனிகளை விளைவித்தன. அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்களைச் சுகப்படுத்துவதற்கு ஏதுவானவை.” (இவ்வாறு, கடவுளின் ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவின் பலியின் விலைமதிப்பைப் பயன்படுத்துவது பாவத்தின் எல்லா பாதிப்புகளிலிருந்தும் மனிதவர்க்கத்தைச் சுகப்படுத்தவும் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழக்கூடியவர்களாக்கவும் கடவுள் செய்துள்ள ஏற்பாட்டின் ஒரு முக்கிய பாகமாகும்.)

ரோமர் 8:20: “சிருஷ்டியானது [மனிதவர்க்கம்] அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.”

இயேசுவின் பரிபூரண பலியிலிருந்து நிலையான பயனடைவதற்கு நாம் செய்ய வேண்டியதென்ன?

யோவான் 3:36, தி.மொ.: “குமாரனில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனையுடையவன்; குமாரனுக்கு அடங்காதவனோ ஜீவனைக்ண்பதில்லை, கடவுளின் கோபம் அவன்மேல் நிலைக்கும்.

எபி. 5:9, தி.மொ.: “தாம் [இயேசு கிறிஸ்து] பூரணராக்கப்பட்ட பின்பு தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்.”

மனிதவர்க்கத்தைப்பற்றிக் கடவுள் உணரும் முறையைக் குறித்து மீட்பின் ஏற்பாடு என்ன வெளிப்படுத்துகிறது?

1 யோவான் 4:9, 10, தி.மொ.: “கடவுளின் அன்பு நம்மிடத்தில் இவ்வாறாக வெளிப்பட்டது; தமது ஒரே பேறான குமாரனால் நாம் பிழைக்கும்படி கடவுள் அவரை இவ்வுலகத்தில் அனுப்பினார். அன்பு எதிலே விளங்குகிறது? நாம் கடவுளினிடம் அன்புகூர்ந்ததிலல்ல, அவர் நம்மிடம் அன்புகூர்ந்து நமது பாவங்களை நிவிர்த்தி செய்கிற பிராயச்சித்தபலியாகத் தமது குமாரனை அனுப்பினதினாலேயே அன்பு விளங்குகிறது.”

ரோமர் 5:7, 8: “நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”

நம்முடைய வாழ்க்கையை நாம் பயன்படுத்தும் முறையின்பேரில் இந்த ஏற்பாடு என்ன பாதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்?

1 பேதுரு 2:24: “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் [கழுமரத்தின்மேல், NW] சுமந்தார்.” (பாவங்களை நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்படி யெகோவாவும் அவருடைய குமாரனும் செய்திருக்கிற எல்லாவற்றையும் கருதுகையில், பாவப் போக்குகளை அடக்கி மேற்கொள்ள நாம் தளரா கடுமுயற்சி செய்ய வேண்டும். பாவமென நாம் அறிந்துள்ள எதையும் நாம் வேண்டுமென்றே செய்வது அறவே நினைக்க முடியாததாயிருக்கவேண்டும்!)

தீத்து 2:14, தி.மொ.: “அவர் [கிறிஸ்து இயேசு] . . . எல்லா அக்கிரமத்தினின்றும் நம்மை மீட்டுக்கொண்டு தமக்குரிய சொந்த ஜனமாகவும் நற்கிரியைகளைச் செய்ய வைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.” (இந்த அதிசயமான ஏற்பாட்டுக்காக நன்றிமதித்துணர்வது, உண்மையாய்த் தம்மைப் பின்பற்றுவோருக்குக் கிறிஸ்து நியமித்துள்ள அந்த வேலைகளில் வைராக்கியத்துடன் பங்குகொள்ளும்படி நம்மைத் தூண்டி இயக்கவேண்டும்.)

2 கொரி. 5:14, 15: “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.”