Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“அது உண்மையா இருக்க முடியாது!”

“அது உண்மையா இருக்க முடியாது!”

அமெரிக்காவிலுள்ள நியு யார்க்கைச் சேர்ந்த ஒருவர் சொல்கிறார்: “என் பையன் ஜானத்தன், சில மைல் தூரத்துல இருந்த அவனோட நண்பர்கள பார்க்க போயிருந்தான். என் மனைவி வாலன்டீனாவுக்கு அவன் போறதுல துளிகூட இஷ்டமில்ல. ஏன்னா அவளுக்கு ட்ராஃபிக்-னாலே ரொம்ப பயம். ஆனா என் பையனுக்கு எலக்ட்ரானிக்ஸ்-ல ஆர்வம் ஜாஸ்தி. அதனால அத பழகிக்கிறதுக்காக நண்பர்களோட ஒர்க்-ஷாப்புக்கு போனான். நான் நியு யார்க்-ல, வெஸ்ட் மன்ஹாட்டன்ல இருக்கிற எங்க வீட்டுல இருந்தேன். என்னோட மனைவி, பியூர்டோ ரிகோ-ல இருக்கிற அவளோட சொந்தக்காரங்கள பார்க்க போயிருந்தா. ‘ஜானத்தன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்’னு நான் நினைச்சேன். அப்போ காலிங் பெல் அடிச்சுது. அவனாத்தான் இருப்பான்னு நினைச்சிட்டே கதவ திறந்தேன். ஆனா போலீஸும் அவசர சிகிச்சை தர்ற ஆட்களும் நின்னுட்டு இருந்தாங்க. ‘இந்த டிரைவர் லைசென்ஸ் யாரோடதுன்னு உங்களுக்கு தெரியுமா?’னு போலீஸ் அதிகாரி கேட்டாரு. ‘இது என் பையன் ஜானத்தனோடது’னு சொன்னேன். உடனே அவரு, ‘உங்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. ஒரு விபத்துல . . . உங்க பையன் . . . இறந்துட்டாரு’ன்னு சொன்னாரு. அத கேட்டப்போ என்னால நம்பவே முடியல. ‘அது உண்மையா இருக்க முடியாது!’னுதான் நினைச்சேன். அந்த பேரிடிய எங்களால தாங்கிக்கவே முடியல. எத்தனையோ வருஷங்களுக்கு அப்புறம்கூட அந்த வலி போகல.”

‘உங்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. ஒரு விபத்துல . . . உங்க பையன் . . . இறந்துட்டாரு.’

ஸ்பெயினிலுள்ள பார்சிலோனாவில் இருக்கும் ஒரு அப்பா இப்படிச் சொன்னார்: “1960-கள்ல நான் குடும்பத்தோட ஸ்பெயின்ல இருந்தேன். நானும் என் மனைவி மரியாவும் மூணு பிள்ளைங்களோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தோம். அப்ப, எங்களோட முதல் பையன் டேவிட்டுக்கு 13 வயசு, பக்கீட்டோவுக்கு 11, இஸபெல்லுக்கு 9.

1963 மார்ச் மாசத்துல ஒரு நாள், பக்கீட்டோ பயங்கர தலைவலியோட ஸ்கூல்ல இருந்து வந்தான். அவனுக்கு ஏன் தலைவலி வந்துச்சுன்னு எங்களுக்கு புரியல. ஆனா, மூணே மணிநேரத்துல அவன் இறந்துட்டான். அவனோட மூளையில இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்த விஷயம் அப்புறம்தான் எங்களுக்கு தெரியவந்துச்சு.

பக்கீட்டோ இறந்து 30 வருஷங்களுக்கு மேல ஆயிடுச்சு. ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் அவனோட இழப்ப எங்களால ஜீரணிக்கவே முடியல. எந்த அப்பா-அம்மாதான் பிள்ளைய பறிகொடுத்துட்டு வேதனைப்படாம இருப்பாங்க! எவ்வளவு காலமானாலும் சரி, எத்தன பிள்ளைங்க இருந்தாலும் சரி, இறந்துபோன பிள்ளையோட இழப்ப மறக்கவே முடியாது.”

இந்த இரண்டு அனுபவங்களும் காட்டுகிறபடி, ஒரு பிள்ளை இறக்கும்போது ஏற்படுகிற மனக் காயம் ஆழமானது, ஆறாதது. ஒரு டாக்டர் இப்படி எழுதினார்: “பெரியவர்களைவிட பிள்ளைகள் சாகும்போதுதான் துக்கமும் வேதனையும் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், ஒரு பிள்ளை இறந்துபோகும் என்று யாரும் எதிர்பார்க்கவே மாட்டார்கள். . . . பிள்ளையை இழக்கும்போது, எதிர்கால கனவுகளையும், [மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் போன்ற] உறவுகளையும், நல்ல அனுபவங்களையும் . . . இழக்க வேண்டியிருக்கிறது.” அவருடைய வார்த்தைகள் ரொம்பவே உண்மை. இப்படிப்பட்ட கடும் வேதனை, கருச்சிதைவினால் குழந்தையைப் பறிகொடுக்கிற தாய்மார்களுக்குக்கூட ஏற்படுகிறது.

கணவரை இழந்த ஒரு பெண் இப்படிச் சொல்கிறாள்: “என்னோட கணவர் ரஸல், ரெண்டாவது உலகப் போர் நடந்துட்டிருந்த சமயத்துல, பசிபிக் பகுதியில மருத்துவ உதவியாளரா வேலை செஞ்சிட்டு இருந்தாரு. பயங்கரமான சண்டைகள் நடந்த இடத்துல அவரு இருந்திருக்காரு, அதிலிருந்து தப்பிச்சும் வந்திருக்காரு. அப்புறம் அவரு அமெரிக்காவுக்கு திரும்பி வந்துட்டாரு. இங்க சூழ்நிலை அமைதியா இருந்துச்சு. அதுக்கு அப்புறம் யெகோவாவின் சாட்சியா ஆனாரு. 60 வயச தாண்டுனதுக்கு அப்புறம் அவருக்கு இதய நோய் வந்துடுச்சு. இருந்தாலும் எப்பவும் போல சகஜமா வாழ முயற்சி செஞ்சாரு. ஆனா, 1988 ஜூலை மாசத்துல ஒருநாள், பயங்கரமான மாரடைப்பு வந்து இறந்துட்டாரு. அவரோட இழப்ப என்னால தாங்கிக்கவே முடியல. கடைசியா அவர்கிட்ட ஒருசில வார்த்தைகள்கூட பேச முடியாம போயிடுச்சு. அவர் எனக்கு கணவரா மட்டும் இல்ல, அருமையான நண்பராவும் இருந்தாரு. 40 வருஷமா அவரோட சேர்ந்து வாழ்ந்துட்டு, இப்போ தனி மரமா நிக்குறது ரொம்ப கொடுமையா இருக்கு.”

இதுபோன்ற ஆயிரக்கணக்கான துயர சம்பவங்கள் உலகம் முழுவதும் இருக்கிற குடும்பங்களை ஒவ்வொரு நாளும் தாக்குகின்றன. பிள்ளையை, கணவரை, மனைவியை, பெற்றோரை, அல்லது நண்பரை இழந்து தவிக்கிற ஒவ்வொருவருமே, மரணம் எவ்வளவு பெரிய எதிரி என்பதை ஒத்துக்கொள்வார்கள். பைபிள் எழுத்தாளரான பவுலும் மரணத்தை “கடைசி எதிரி” என்று சொல்லியிருக்கிறார். நமக்குப் பிரியமான ஒருவர் இறந்துவிட்டார் என்ற துக்க செய்தியைக் கேட்டவுடன் நாம் பெரும்பாலும், “அது உண்மையா இருக்க முடியாது! நான் அத நம்ப மாட்டேன்” என்று சொல்லலாம். அதன் பிறகு, மற்ற விதங்களில் துக்கம் நம்மைப் பாடாய்ப் படுத்தலாம். எப்படி?—1 கொரிந்தியர் 15:25, 26.

அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, சில முக்கியமான கேள்விகளுக்குப் பதில்களைப் பார்க்கலாம். ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய வாழ்க்கை ஒரேயடியாக முடிந்துவிடுகிறதா? அவரை மறுபடியும் நம்மால் பார்க்க முடியாதா?

உண்மையான நம்பிக்கை ஒன்று இருக்கிறது

‘கடைசி எதிரியான’ மரணத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பற்றி பைபிள் எழுத்தாளரான பவுல் விளக்கினார். மரணம் “ஒழிக்கப்படும்” என்று அவர் சொன்னார். (1 கொரிந்தியர் 15:26) அதை அவரால் எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிந்தது? ஏனென்றால், உயிரோடு எழுப்பப்பட்டிருந்த இயேசு கிறிஸ்துவே அவரிடம் பேசியிருந்தார். (அப்போஸ்தலர் 9:3-19) அதனால்தான், “ஒரே மனிதனால் [ஆதாமினால்] மரணம் வந்தது, அதேபோல் ஒரே மனிதனால் [இயேசு கிறிஸ்துவினால்] உயிர்த்தெழுதலும் வருகிறது. ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல், கிறிஸ்துவினால் எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்றும் பவுல் எழுதினார்.—1 கொரிந்தியர் 15:21, 22.

நாயீன் என்ற ஊரிலிருந்த ஒரு விதவையின் மகன் இறந்துவிட்டதைப் பார்த்தபோது இயேசு மிகவும் வேதனைப்பட்டார். பைபிள் இப்படிச் சொல்கிறது: “[நாயீன்] நகரத்தின் வாசலுக்குப் பக்கத்தில் [இயேசு] வந்தபோது, இறந்துபோன ஒருவனைச் சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவன் தன்னுடைய அம்மாவுக்கு ஒரே மகன். அவளோ ஒரு விதவை. அந்த நகரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அவளோடு வந்தார்கள். இயேசு அவளைப் பார்த்தபோது, மனம் உருகி, ‘அழாதே’ என்று சொன்னார். பின்பு, பாடைக்குப் பக்கத்தில் போய் அதைத் தொட்டார். அதைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் அப்படியே நின்றார்கள். அப்போது அவர், ‘இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திரு!’ என்று சொன்னார். இறந்துபோனவன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான்; பின்பு, இயேசு அவனை அவனுடைய அம்மாவிடம் ஒப்படைத்தார். அங்கிருந்த எல்லாரும் பயந்துபோனார்கள்; ‘பெரிய தீர்க்கதரிசி ஒருவர் நம் மத்தியில் தோன்றியிருக்கிறார்’ என்றும், ‘கடவுள் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்’ என்றும் சொல்லி கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பித்தார்கள்.” இயேசு எப்படி மனம் உருகி அந்த விதவையின் மகனை உயிரோடு எழுப்பினார் என்பதைக் கவனித்தீர்களா? எதிர்காலத்தில் அவர் என்ன செய்வார் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?—லூக்கா 7:12-16.

நிறைய பேருடைய கண்களுக்கு முன்பாக அந்த இளைஞனை இயேசு உயிரோடு எழுப்பினார்! மறக்க முடியாத அந்தச் சம்பவம் நடப்பதற்குக் கொஞ்சக் காலத்துக்கு முன்புதான், பூமியில் உயிர்த்தெழுதல் நடக்கும் என்று அவர் சொல்லியிருந்தார்; “இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்” என்று அவர் சொல்லியிருந்தார். இனிமேல் நடக்கப்போகும் உயிர்த்தெழுதலுக்கு அந்த இளைஞனின் உயிர்த்தெழுதல் ஒரு உத்தரவாதமாக இருந்தது.—வெளிப்படுத்துதல் 21:1, 3, 4; யோவான் 5:28, 29; 2 பேதுரு 3:13.

பேதுருவும், இயேசுவோடு ஊழியம் செய்த 12 சீஷர்களில் வேறு சிலரும் இன்னொரு உயிர்த்தெழுதலுக்குக் கண்கண்ட சாட்சிகளாக இருந்தார்கள். அதுதான் இயேசுவின் உயிர்த்தெழுதல். உயிரோடு எழுப்பப்பட்ட இயேசு கலிலேயா கடற்கரையில் அவர்களிடம் பேசினார். பைபிள் இப்படிச் சொல்கிறது: “இயேசு அவர்களிடம், ‘வந்து சாப்பிடுங்கள்’ என்று சொன்னார். சீஷர்களில் ஒருவருக்குக்கூட, ‘நீங்கள் யார்?’ என்று கேட்கத் தைரியம் வரவில்லை; ஏனென்றால், அவர்தான் தங்கள் எஜமான் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இயேசு வந்து ரொட்டியை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார், அதேபோல் மீனையும் கொடுத்தார். இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பின்பு தன்னுடைய சீஷர்கள் முன்னால் தோன்றியது இது மூன்றாவது தடவை.”—யோவான் 21:12-14.

அதனால், பேதுரு முழு நம்பிக்கையோடு இப்படி எழுதினார்: “நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளாகவும் தகப்பனாகவும் இருப்பவருக்குப் புகழ் சேரட்டும். அவர் இயேசு கிறிஸ்துவை உயிரோடு எழுப்பியதன் மூலம் தன்னுடைய மகா இரக்கத்தின்படி எங்களுக்குப் புதிய பிறப்பைக் கொடுத்தார். இதனால் அசைக்க முடியாத நம்பிக்கை [கிடைத்திருக்கிறது].”—1 பேதுரு 1:3.

அப்போஸ்தலனாகிய பவுலும் தனக்கு உறுதியான நம்பிக்கை இருந்ததை இப்படித் தெரியப்படுத்தினார்: “திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்புகிறேன். அதோடு, நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று கடவுளிடம் இவர்கள் நம்பிக்கை வைத்திருப்பது போலவே நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.”​—அப்போஸ்தலர் 24:14, 15.

சீக்கிரத்தில், அன்பானவர்களை மறுபடியும் உயிரோடு பார்க்க முடியும் என்று லட்சக்கணக்கானவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அப்போது, இந்தப் பூமியில் நிலைமைகள் அடியோடு மாறியிருக்கும். எப்படி? இதைப் பற்றிய கூடுதலான விவரங்கள், இந்தப் புத்தகத்தின் கடைசி பகுதியில் (அதாவது, “இறந்தவர்களுக்கு உறுதியான நம்பிக்கை” என்ற பகுதியில்) கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் முதலாவதாக, பிரியமான ஒருவரை இழந்து தவிக்கும்போது உங்கள் மனதுக்கு வரும் சில கேள்விகளைப் பற்றிப் பார்க்கலாம்: நான் இப்படித் துக்கப்படுவது இயல்புதானா? துக்கத்தை எப்படிச் சமாளிப்பது? அதைச் சமாளிக்க மற்றவர்கள் எப்படி எனக்கு உதவி செய்ய முடியும்? துக்கத்தில் இருக்கிற மற்றவர்களுக்கு நான் எப்படி உதவி செய்ய முடியும்? இறந்தவர்களுக்கு மறுபடியும் கிடைக்கப்போகும் வாழ்க்கையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? இறந்துபோன என்னுடைய அன்பானவர்களை மறுபடியும் நான் பார்ப்பேனா? எங்கே பார்ப்பேன்?