Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 10

குடும்ப அங்கத்தினர் ஒருவர் நோய்ப்பட்டிருக்கையில்

குடும்ப அங்கத்தினர் ஒருவர் நோய்ப்பட்டிருக்கையில்

1, 2. யோபுவின் உத்தமத்தன்மையை முறிப்பதற்கு சாத்தான் எவ்வாறு கடுந்துயரங்களையும் நோயையும் பயன்படுத்தினான்?

 யோ பு என்ற மனிதரையும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அனுபவித்த நபர்களுள் ஒருவராக கருத வேண்டும். ‘கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவர்’ என்று பைபிள் அவரை அழைக்கிறது. அவருக்கு ஏழு குமாரர்களும் மூன்று குமாரத்திகளுமாக, மொத்தம் பத்து பிள்ளைகள் இருந்தனர். அவருடைய குடும்பத்தாரை நன்றாக பராமரிப்பதற்கு தேவையான பொருளாதார வளமும்கூட அவரிடம் இருந்தது. அதிமுக்கியமாக, ஆவிக்குரிய நடவடிக்கைகளில் அவர் தலைமை ஏற்று நடத்தினார், யெகோவாவுக்கு முன்பு அவருடைய பிள்ளைகளின் நிலைநிற்கையைக் குறித்து அவர் கவலையுள்ளவராய் இருந்தார். இவையனைத்தும் நெருக்கமான, மகிழ்ச்சியான குடும்ப பிணைப்புகள் ஏற்படுவதில் விளைவடைந்தன.—யோபு 1:1-5.

2 யெகோவா தேவனின் பெரும்பகைவனாயிருந்த சாத்தான் யோபின் நிலைமையை உற்றுநோக்கினான். கடவுளுடைய ஊழியர்களின் உத்தமத்தன்மையை முறிப்பதற்கு எப்போதுமே வகைதேடிக்கொண்டிருக்கும் சாத்தான், அவருடைய மகிழ்ச்சியான குடும்பத்தை அழித்துப்போடுவதன்மூலம் யோபுவை தாக்கினான். பின்பு, அவன் “யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.” இவ்வாறு யோபுவின் உத்தமத்தன்மையை முறித்துப்போடுவதற்கு சாத்தான் கடுந்துயரங்களையும் நோயையும் பயன்படுத்த எண்ணினான்.—யோபு 2:6, 7.

3. யோபுவின் நோய் அறிகுறிகள் யாவை?

3 யோபுவுக்கு வந்த நோயின் மருத்துவ பெயரை பைபிள் குறிப்பிடுவதில்லை. ஆனால் அது நோயின் அறிகுறிகளைக் குறித்து நமக்கு சொல்கிறது. அவருடைய உடல் புழுக்களால் மூடியிருந்தது, அவருடைய தோல் வெடித்து அருவருப்பாயிற்று. யோபுவின் சுவாசம் வேறுபட்டிருந்தது, அவருடைய உடலிலிருந்து துர்நாற்றம் வீசியது. அவர் கடும்நோவினால் படுவேதனை அடைந்தார். (யோபு 7:5; 19:17; 30:17, 30) பொறுக்கமுடியாத வேதனையில் யோபு ஒரு ஓட்டுச்சில்லை எடுத்து, தன்னைச் சுரண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தார். (யோபு 2:8) உண்மையில் என்னே ஒரு வருந்தத்தக்க காட்சி!

4. ஒவ்வொரு குடும்பமும் அவ்வப்போது என்ன அனுபவத்தைக் கொண்டிருக்கிறது?

4 அப்படிப்பட்ட கடும் நோயினால் நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்? சாத்தான் யோபுவை நோயால் தாக்கியதுபோல் இன்று கடவுளுடைய ஊழியர்களை நோயினால் தாக்குவதில்லை. இருப்பினும், மானிட அபூரணத்தின் காரணமாகவும், அனுதின வாழ்க்கையினுடைய அழுத்தங்களின் காரணமாகவும், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சுற்றுச்சூழல் படுமோசமாகிக் கொண்டே செல்வதன் காரணமாகவும் குடும்ப அங்கத்தினர்கள் அவ்வப்போது நோயுறுவர் என்பதை நாம் எதிர்பார்க்க வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நாம் அனைவரும் நோயினால் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறோம், ஆனால் வெகு சிலரே யோபு அனுபவித்த அளவுக்கு வேதனையை அனுபவிப்பர். நோய் நம் குடும்பத்தைத் தாக்கும்போது, அது உண்மையிலேயே ஒரு சவாலாக இருக்கக்கூடும். ஆகையால் எப்போதும் வியாபித்திருக்கும் மனிதவர்க்கத்தின் இந்த விரோதியை சமாளிப்பதற்கு பைபிள் நமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை நாம் காண்போம்.—பிரசங்கி 9:11; 2 தீமோத்தேயு 3:16, 17.

அதைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?

5. சிறிதுகாலம் நோய்ப்பட்டிருக்கும் சமயங்களில் குடும்ப அங்கத்தினர்கள் பொதுவாக எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?

5 வாழ்க்கையில் வழக்கமாக செய்யப்படும் வேலைகளுக்கு தடை எதுவும் ஏற்பட்டால், அதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது எப்போதும் கடினமானதாய் இருக்கிறது. அந்தத் தடை நீண்டகாலமாக இருக்கும் நோயினால் ஏற்பட்டிருந்தால் இது விசேஷமாய் உண்மையாய் இருக்கும். கொஞ்ச நாட்களுக்கு இருக்கும் நோயே சரிப்படுத்துதல்கள், விட்டுக்கொடுத்தல்கள், தியாகங்கள் ஆகியவற்றைத் தேவைப்படுத்துகிறது. நோயுற்றிருப்பவர் ஓய்வெடுப்பதற்காக, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் அமைதியாய் இருக்க வேண்டியிருக்கலாம். அவர்கள் சில நடவடிக்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம். இருப்பினும், பெரும்பாலான குடும்பங்களில் இளம் பிள்ளைகள் பிறர் நலனை எண்ணிப்பார்க்கும்படி அவ்வப்போது நினைப்பூட்டப்பட வேண்டியிருந்தாலும்கூட, நோயுற்றிருக்கும் உடன்பிறப்புக்களின் பேரிலோ அல்லது பெற்றோரின் பேரிலோ பிள்ளைகளும்கூட இரக்கம் காண்பிக்கின்றனர். (கொலோசெயர் 3:12) சிறிதுகாலமே நோயுற்றிருந்தால், தேவைப்படும் எல்லாவற்றையும் செய்வதற்கு குடும்பம் பொதுவாக தயாராயிருக்கிறது. அதுமட்டுமன்றி, ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் நோயுறுகையில் அதேபோன்ற கரிசனையை மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பர்.—மத்தேயு 7:12.

6. குடும்ப அங்கத்தினர் ஒருவர் நிரந்தரமான கடும் நோயால் பீடிக்கப்பட்டிருக்கையில் என்ன பிரதிபலிப்புகள் சில சமயங்களில் காணப்படுகின்றன?

6 ஆனால் நோய் அதிக கடுமையாகவும் இடையூறுகள் மிகுந்தும் நீடித்தும் இருந்தால் அப்போது என்ன செய்வது? உதாரணமாக, குடும்பத்தில் யாராவது ஒருவர் பாரிசவாயு நோயினால் ஆற்றலிழந்து, அல்ஷீமர் நோயினால் முடமாக்கப்பட்டு, அல்லது வேறு ஏதாவது நோயினால் தளர்ச்சி அடைந்திருந்தால் அப்போது என்ன? அல்லது குடும்ப அங்கத்தினர் ஒருவர் ஷிஸோப்ரெனியா போன்ற மனநோயினால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தால் அப்போது என்ன? ஆரம்பத்தில் பொதுவாக ஏற்படும் பிரதிபலிப்பு இரக்கம்—அன்பானவர் ஒருவர் அதிகமாக கஷ்டப்படுவதனால் துக்கம் ஏற்படுகிறது. இருப்பினும், இரக்கத்தைப் பின்தொடர்ந்து மற்ற பிரதிபலிப்புகளும் ஏற்படக்கூடும். ஒரு நபர் நோயுற்றிருப்பதால் மற்ற குடும்ப அங்கத்தினர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு அவர்களுடைய சுயாதீனம் கட்டுப்படுத்தப்படும்போது அவர்கள் கோப உணர்வு கொள்ளலாம். அவர்கள், “இது ஏன் எனக்கு ஏற்பட வேண்டும்?” என்று யோசிக்கலாம்.

7. யோபுவின் மனைவி அவருடைய நோய்க்கு எவ்வாறு பிரதிபலித்தாள், அவள் எதைத் தெளிவாக உணர மறந்துவிட்டாள்?

7 அதைப் போன்ற எண்ணம் ஒன்று யோபுவினுடைய மனைவியின் மனதில் இருந்ததாக தோன்றுகிறது. அவள் ஏற்கெனவே தன் பிள்ளைகளை இழந்துவிட்டிருந்தாள். அந்த மனதை உருக்கும் சம்பவங்கள் படிப்படியாக நடந்தேறுகையில், அவள் அதிகமதிகமாக மிகவும் கலக்கமடைந்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. இறுதியில், ஒருசமயம் சுறுசுறுப்பாயும் உறுதிவாய்ந்தவராயும் இருந்த தன் கணவன் வலியுண்டாக்கும் அருவருப்பான நோயினால் துன்பப்பட்டுக்கொண்டிருந்ததை அவள் பார்த்தபோது, எல்லா துன்ப நிகழ்ச்சிகளையும் மறைத்துப்போட்ட ஒரு முக்கியமான காரணத்தை அவள் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது—அவளும் அவளுடைய கணவனும் யெகோவா தேவனோடு கொண்டிருந்த உறவு. பைபிள் சொல்கிறது: “அப்பொழுது அவன் [யோபுவின்] மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” என்றாள்!—யோபு 2:9.

8. குடும்ப அங்கத்தினர் ஒருவர் கடுமையாய் நோயுற்றிருக்கையில், ஒரு சரியான நோக்குநிலையை வைத்துக்கொள்ள எந்த வேதவசனம் மற்ற குடும்ப அங்கத்தினர்களுக்கு உதவிசெய்யும்?

8 தங்கள் வாழ்க்கை வேறு ஒருவருடைய நோயின் காரணத்தால் முழுவதுமாக மாற்றமடையும்போது அநேகர் ஏமாற்றமடைகின்றனர், கோபித்தும்கொள்கின்றனர். இருப்பினும், அந்தச் சூழ்நிலையை சீர்தூக்கிப் பார்க்கிற ஒரு கிறிஸ்தவன் இது தன்னுடைய அன்பின் உண்மைத்தன்மையை வெளிக்காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது என்பதை இறுதியில் உணர்ந்துகொள்ள வேண்டும், ஏனென்றால், மெய்யான அன்பு “நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்பு தற்பொழிவை நாடாது, . . . சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.” (1 கொரிந்தியர் 13:4-7) ஆகையால், அந்த எதிர்மறையான உணர்ச்சிகளை செல்வாக்கு செலுத்த அனுமதிப்பதற்கு பதிலாக, அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு நம்மால் ஆனதைச் செய்வது இன்றியமையாதது.—நீதிமொழிகள் 3:21.

9. ஒரு அங்கத்தினர் மிகவும் நோய்ப்பட்டிருக்கையில், என்ன உறுதிப்பாடுகள் ஒரு குடும்பத்துக்கு ஆவிக்குரியப்பிரகாரமாகவும் உணர்ச்சிப்பிரகாரமாகவும் உதவலாம்?

9 குடும்ப அங்கத்தினர் ஒருவர் கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கையில், ஒரு குடும்பத்தின் ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நலனை பாதுகாப்பதற்கு என்ன செய்யப்படலாம்? ஒவ்வொரு நோய்க்கும் அதற்கே உரித்தான குறிப்பிட்ட கவனிப்பும் சிகிச்சையும் தேவை, இந்தப் பிரசுரத்தில் எந்த மருத்துவ சிகிச்சைமுறைகளையோ அல்லது வீட்டு-கவனிப்பு முறைகளையோ சிபாரிசு செய்வது பொருத்தமானதாய் இருக்காது. இருப்பினும், ஆவிக்குரிய அர்த்தத்தில், யெகோவா “மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.” (சங்கீதம் 145:14) தாவீது ராஜா எழுதினார்: “சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; . . . படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்.” (சங்கீதம் 41:1-3) தங்கள் சொந்த சக்திக்கும் மேலாக உணர்ச்சிப்பூர்வமாய் சோதனைக்குட்பட்டாலும்கூட, யெகோவா தம் ஊழியர்களை ஆவிக்குரியப்பிரகாரமாய் உயிரோடே பாதுகாக்கிறார். (2 கொரிந்தியர் 4:7) தங்கள் குடும்பத்தில் கடும் வியாதியை எதிர்ப்பட்டுக்கொண்டிருக்கும் அநேக குடும்ப அங்கத்தினர்கள் சங்கீதக்காரனின் வார்த்தைகளை எதிரொலித்திருக்கின்றனர்: “நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.”—சங்கீதம் 119:107.

குணப்படுத்தும் மனப்பான்மை

10, 11. (அ) ஒரு குடும்பம் நோயை வெற்றிகரமாய் சமாளிப்பதற்கு எது முக்கியம்? (ஆ) ஒரு பெண் எவ்வாறு தன் கணவனுக்கிருந்த நோயை சமாளித்தாள்?

10 “மனுஷனுடைய ஆவி [“மனப்பான்மை,” NW] அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?” என்று பைபிள் நீதிமொழி ஒன்று சொல்கிறது. (நீதிமொழிகள் 18:14) மன அதிர்ச்சி குடும்பத்தின் மனப்பான்மையையும் அதோடுகூட ‘மனுஷனுடைய மனப்பான்மையையும்’ அல்லற்படுத்தக்கூடும். இருப்பினும், “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்.” (நீதிமொழிகள் 14:30) ஒரு குடும்பம் கடும் வியாதியை வெற்றிகரமாக சமாளிக்கிறதா இல்லையா என்பது, அதன் அங்கத்தினர்களின் மனநிலை அல்லது மனப்பான்மையின் பேரில் பெரும்பாலும் சார்ந்துள்ளது.—ஒப்பிடுக: நீதிமொழிகள் 17:22.

11 ஒரு கிறிஸ்தவ பெண் திருமணமாகி ஆறே வருடங்கள் ஆனவுடன் தன் கணவன் பாரிசவாயு நோயால் பலம் இழந்திருப்பதைக் கண்டு சகித்துக்கொள்ள வேண்டியதாய் இருந்தது. “என் கணவனின் பேச்சு மிகவும் மோசமாய் பாதிக்கப்பட்டிருந்தது, அவரோடு பேசுவது கிட்டத்தட்ட முடியாதகாரியமாகி விட்டது,” என்று அவள் நினைவுபடுத்தி சொன்னாள். “அவர் சொல்வதற்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்த மனபாரம் மிகவும் பெரிதாய் இருந்தது.” அவளுடைய கணவன் அனுபவித்த கடும் துயரத்தையும் ஏமாற்றத்தையும்கூட கற்பனை செய்து பாருங்கள். அத்தம்பதியினர் என்ன செய்தனர்? கிறிஸ்தவ சபையிலிருந்து வெகு தொலைவில் அவர்கள் வாழ்ந்துவந்தபோதிலும், அமைப்பு சம்பந்தமாக சமீபத்தில் வெளிவந்த புதிய தகவலையும் அதோடுகூட காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்த ஆவிக்குரிய உணவையும் வைத்து ஆவிக்குரியப்பிரகாரமாய் பலத்தோடு நிலைத்திருப்பதற்காக அந்தச் சகோதரி தன்னால் முடிந்ததைச் செய்தாள். நான்கு வருடங்கள் கழித்து தன் அன்பான கணவன் மரிக்கும்வரை அவரை கவனித்துக்கொள்வதற்கு இது அவளுக்கு ஆவிக்குரிய பலத்தைத் தந்தது.

12. யோபுவின் விஷயத்தில் பார்த்தபடி, நோயுற்றிருப்பவர் சில சமயங்களில் என்ன உதவி அளிக்கிறார்?

12 யோபுவின் விஷயத்தில், துன்பப்பட்டுக்கொண்டிருந்த அவர்தானே பலமாக நிலைத்திருந்தார். “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ” என்று தன் மனைவியைக் கேட்டார். (யோபு 2:10) சீஷனாகிய யாக்கோபு பின்னர் யோபுவை பொறுமைக்கும் அருளிரக்கத்துக்கும் தலைசிறந்த முன்மாதிரி என்று கூறியது ஆச்சரியமாயில்லை! யாக்கோபு 5:11-ல் நாம் வாசிக்கிறோம்: “யோபின் பொறுமையைக் குறித்துக்கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” அதேபோல் இன்று அநேகருடைய விஷயங்களில், நோயுற்றிருக்கும் குடும்ப அங்கத்தினரின் தைரியமான மனநிலை குடும்பத்திலுள்ள மற்றவர்கள் நம்பிக்கையான மனநிலையை காத்துக்கொள்வதற்கு உதவியிருக்கிறது.

13. கடும் நோயை அனுபவித்துக்கொண்டிருக்கும் குடும்பம் என்ன ஒப்பீட்டை செய்யக்கூடாது?

13 ஆரம்பத்தில் உண்மைகளை எதிர்ப்படுகையில் குடும்ப அங்கத்தினர்கள் அதைக் கடினமாய் காண்பது வழக்கத்திற்கு மாறானதல்ல என்பதை குடும்பத்தில் ஏற்பட்ட வியாதியை சமாளிக்க வேண்டியிருந்த அநேகர் ஒப்புக்கொள்கின்றனர். ஒருவர் சூழ்நிலையை நோக்கும் விதமும் மிகவும் முக்கியம் என்பதையும் அவர்கள் சுட்டிக்காண்பிக்கின்றனர். வழக்கமாக செய்யப்படும் வீட்டு வேலைகளில் மாற்றங்களும் சரிப்படுத்துதல்களும் ஆரம்பத்தில் கடினமாய் இருக்கலாம். ஆனால் ஒருவர் உண்மையிலேயே முயற்சி எடுத்தால், அவர் புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக்கொள்ளலாம். அவ்வாறு செய்கையில், மற்ற நபர்களுடைய வாழ்க்கை சுலபமானதாய் இருப்பதால் ‘அது நியாயமில்லை!’ என்று நினைத்துக்கொண்டு தன்னுடைய சூழ்நிலைகளை, குடும்பத்தில் நோய் இல்லாதவர்களின் சூழ்நிலையோடு ஒப்பிடாமல் இருப்பது முக்கியம். மற்றவர்கள் என்ன பாரங்களை சுமக்க வேண்டியிருக்கிறது என்பது ஒருவருக்குமே உண்மையில் தெரியாது. எல்லா கிறிஸ்தவர்களும் இயேசுவின் வார்த்தைகளில் ஆறுதலை கண்டடைகின்றனர்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”—மத்தேயு 11:28.

முன்னுரிமைகளை வைத்தல்

14. சரியான முன்னுரிமைகளை எவ்வாறு வைக்கலாம்?

14 கடும் நோய் ஏற்படுகையில், ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தைகளை நினைவில் வைப்பது குடும்பத்தாருக்கு பயனுள்ளதாய் இருக்கும்: “ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அங்கே சாதனை இருக்கும்.” (நீதிமொழிகள் 15:22, NW) நோயினால் ஏற்பட்ட நிலையைக் குறித்து கலந்துபேசுவதற்கு குடும்ப அங்கத்தினர்கள் ஒன்றுகூடி வரமுடியுமா? அதை ஜெபசிந்தையோடு செய்து வழிநடத்துதலுக்காக கடவுளுடைய வார்த்தையை நோக்கியிருப்பது நிச்சயமாகவே பொருத்தமானதாய் இருக்கும். (சங்கீதம் 25:4) அப்படிப்பட்ட கலந்தாலோசிப்பில் என்ன சிந்திக்கப்பட வேண்டும்? மருத்துவம், பணம், குடும்பம் ஆகியவை சம்பந்தமான தீர்மானங்கள் செய்யப்பட வேண்டும். யார் முக்கியமான கவனிப்பைக் கொடுப்பது? அந்தக் கவனிப்பை கொடுப்பதற்கு குடும்பம் எவ்வாறு ஒத்துழைக்கலாம்? செய்யப்பட்ட ஏற்பாடுகள் குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரையும் எவ்வாறு பாதிக்கும்? முக்கியமாய் கவனிப்புக்கொடுப்பவரின் ஆவிக்குரிய தேவைகளும் மற்ற தேவைகளும் எவ்வாறு கவனித்துக்கொள்ளப்படும்?

15. கடும் நோயை அனுபவித்துக்கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு யெகோவா என்ன ஆதரவு தருகிறார்?

15 யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஊக்கத்தோடு ஜெபிப்பது, அவருடைய வார்த்தையின் பேரில் தியானிப்பது, பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழியை தைரியத்தோடு பின்பற்றுவது ஆகியவை நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகுதியான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதில் விளைவடையும். நோயுற்றிருக்கும் குடும்ப அங்கத்தினரின் நோய் எப்போதுமே தணிந்துவிடாமல் இருக்கலாம். ஆனால் யெகோவாவின் பேரில் சார்ந்திருப்பது எந்தச் சூழ்நிலையிலும் மிகச் சிறந்த விளைவுகள் ஏற்படுவதற்கு வழிநடத்துகிறது. (சங்கீதம் 55:22) சங்கீதக்காரன் எழுதினார்: “கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.”—சங்கீதம் 94:18, 19; சங்கீதம் 63:6-8-ஐக் காண்க.

பிள்ளைகளுக்கு உதவுதல்

குடும்பம் ஒன்றாக சேர்ந்து உழைக்கையில், பிரச்சினைகள் கையாளப்படலாம்

16, 17. இளம் பிள்ளைகளிடம் உடன்பிறப்பின் நோயைக் குறித்து கலந்து பேசுகையில் என்ன குறிப்புகள் சொல்லப்படலாம்?

16 கடும் நோய்கள் குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கு பிரச்சினைகளை உண்டுபண்ணக்கூடும். நோயின் காரணமாக ஏற்பட்டிருக்கும் தேவைகளையும், உதவிசெய்வதற்கு பிள்ளைகள் என்ன செய்யலாம் என்பதையும் பெற்றோர் பிள்ளைகள் புரிந்துகொள்ளும்படி செய்வது முக்கியம். நோயுற்றிருப்பவர் பிள்ளையாக இருந்து, நோயுற்றிருக்கும் அந்தப் பிள்ளை கூடுதலான கவனமும் அக்கறையும் பெற்றுக்கொண்டிருப்பதால் மற்ற பிள்ளைகள் குறைவாக நேசிக்கப்படுகின்றனர் என்பதை இது எவ்விதத்திலும் அர்த்தப்படுத்துவதில்லை என்பதை உடன்பிறப்புக்கள் புரிந்துகொள்ள உதவ வேண்டும். கோபதாபம் அல்லது போட்டி மனப்பான்மை வளர அனுமதிப்பதற்குப் பதிலாக, நோயினால் ஏற்பட்டிருக்கும் நிலையை சமாளிப்பதற்கு ஒத்துழைக்கையில், பிள்ளைகள் ஒருவரோடொருவர் மிக நெருங்கிய பிணைப்பையும் மெய்யான பாசத்தையும் உருவாக்கிக்கொள்வதற்கு பெற்றோர் மற்ற பிள்ளைகளுக்கு உதவலாம்.

17 பெற்றோர் மருத்துவ சம்பந்தமான தேகநிலையைக் குறித்து நீண்ட அல்லது சிக்கலான விளக்கங்கள் கொடுப்பதைக் காட்டிலும் அவர்களுடைய உணர்ச்சிகளை தொடும்வகையில் விடுக்கும் வேண்டுகோள்களுக்கு இளம் பிள்ளைகள் பொதுவாக உடனடியாக பிரதிபலிப்பர். நோயுற்றிருக்கும் குடும்ப அங்கத்தினர் அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலைமைகளைப் பற்றி அவர்களுக்கு ஓரளவு சொல்லலாம். ஆரோக்கியமான பிள்ளைகள் ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளும் அநேக காரியங்களை நோயுற்றிருக்கும் பிள்ளைகள் செய்யமுடியாததை அவர்கள் காண்கையில், அவர்கள் கூடுதலான ‘சகோதரசிநேகமும், மன உருக்கமும்’ உடையவர்களாய் இருப்பதற்கு சாத்தியம் அதிகம் உண்டு.—1 பேதுரு 3:8.

18. வயதில் பெரியவர்களாயிருக்கும் பிள்ளைகள் நோயினால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு எவ்வாறு உதவப்படலாம், இது அவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்?

18 ஒரு கடினமான சூழ்நிலை இருக்கிறது என்பதையும் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் பங்கிலும் அது தியாகத்தை உட்படுத்துகிறது என்பதையும் வயதில் பெரியவர்களாய் இருக்கும் பிள்ளைகள் உணர உதவிசெய்ய வேண்டும். மருத்துவரின் கட்டணமும் மருத்துவ செலவுகளும் இருப்பதால், தாங்கள் விரும்பும் அளவிற்கு மற்ற பிள்ளைகளுக்கு பெற்றோரால் கொடுக்க முடியாமல் இருக்கலாம். இதனால் பிள்ளைகள் கோபித்துக்கொண்டு அவர்கள் இழந்துவிட்டதைப் போல் உணருவார்களா? அல்லது அவர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு தேவையான தியாகங்களைச் செய்ய விருப்பமுள்ளவர்களாய் இருப்பார்களா? விஷயம் கலந்தாலோசிக்கப்படும் விதத்திலும் குடும்பத்தில் தோற்றுவிக்கப்படும் மனநிலையின் பேரிலுமே அதிகம் சார்ந்துள்ளது. உண்மையில், அநேக குடும்பங்களில், குடும்ப அங்கத்தினர் ஒருவரின் நோய் பவுலின் புத்திமதியைப் பின்பற்றும்படி பிள்ளைகளைப் பயிற்றுவிக்க உதவியிருக்கிறது: “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.”—பிலிப்பியர் 2:3, 4.

மருத்துவ சிகிச்சைமுறையை எவ்வாறு நோக்குவது

19, 20. (அ) குடும்ப அங்கத்தினர் ஒருவர் நோயுற்றிருக்கையில் குடும்பத்தலைவர் என்ன பொறுப்புகளைத் தாங்குகிறார்? (ஆ) பைபிள் மருத்துவ பாடநூலாக இல்லாவிட்டாலும், நோயை கையாளுவதில் எந்த விதத்தில் அது வழிநடத்துதலை அளிக்கிறது?

19 கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமாக செல்லாதவரை சமநிலையுள்ள கிறிஸ்தவர்கள் மருத்துவ சிகிச்சைமுறைக்கு மறுப்புத் தெரிவிப்பதில்லை. தங்கள் குடும்ப அங்கத்தினர் ஒருவர் நோய்ப்பட்டால், துன்பப்பட்டுக் கொண்டிருப்பவரின் வேதனையைத் தணிப்பதற்கு அவர்கள் உதவியை நாட ஆர்வமுள்ளவர்களாய் இருக்கின்றனர். இருப்பினும், சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய முரண்படும் மருத்துவ கருத்துக்கள் இருக்கலாம். கூடுதலாக, சமீப ஆண்டுகளில் புதிய நோய்களும் உடல்நிலைக்கோளாறுகளும் திடீரென்று எதிர்பாராதவிதமாய் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன, இவற்றில் பலவற்றுக்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் சிகிச்சைமுறை எதுவும் இல்லை. நோய் இதுதான் என்று சரியாக நிர்ணயிப்பதே சில சமயங்களில் கடினமாயிருக்கிறது. அப்போது ஒரு கிறிஸ்தவன் என்ன செய்ய வேண்டும்?

20 ஒரு பைபிள் எழுத்தாளர்தானே மருத்துவராய் இருந்தபோதிலும், அப்போஸ்தலனாகிய பவுல் தன் நண்பனாகிய தீமோத்தேயுவுக்கு உதவியளிக்கும் மருத்துவ ஆலோசனையைக் கொடுத்தபோதிலும், பைபிள் ஒழுக்க சம்பந்தமாகவும் ஆவிக்குரியப்பிரகாரமாகவும் ஒரு வழிகாட்டியாயிருக்கிறது, அது ஒரு மருத்துவ பாடநூல் அல்ல. (கொலோசெயர் 4:14; 1 தீமோத்தேயு 5:23) எனவே, மருத்துவ சிகிச்சைமுறை அளிக்கும் விஷயங்களில், கிறிஸ்தவ குடும்பத் தலைவர்கள் தாங்களே தங்கள் சொந்த சமநிலையான தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஒரு மருத்துவரின் கருத்தைப் பெறுவதைக் காட்டிலும் கூடுதலான மருத்துவர்களின் கருத்துக்களைப் பெற வேண்டும் என்று அவர்கள் ஒருவேளை உணரலாம். (ஒப்பிடுக: நீதிமொழிகள் 18:17.) நோயுற்றிருக்கும் தங்கள் குடும்ப அங்கத்தினருக்கு கிடைக்கும் மிகச் சிறந்த உதவியை பெற்றுக்கொள்ள அவர்கள் நிச்சயமாகவே விரும்புவர், இதைப் பெரும்பாலானோர் வழக்கமான மருத்துவர்களிடமிருந்து நாடுகின்றனர். சிலர் வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் மருத்துவ சிகிச்சைமுறைகளுக்குப் பதிலாக வேறு சிகிச்சைமுறைகளைக் கடைப்பிடிப்பதை வசதியாக காண்கின்றனர். இதுவும்கூட ஒரு தனிப்பட்ட தீர்மானமே. இருப்பினும், உடல்நலப் பிரச்சினைகளை கையாளுகையில் கிறிஸ்தவர்கள் ‘கடவுளுடைய வசனம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்க’ அனுமதிப்பதை நிறுத்திவிடுவதில்லை. (சங்கீதம் 119:105) அவர்கள் பைபிளில் பதிவுசெய்து வைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டும் அறிவுரைகளைத் தொடர்ந்து பின்பற்றுகின்றனர். (ஏசாயா 55:8, 9) இவ்வாறு, அவர்கள் ஆவிக்கொள்கையின் தடம்கொண்டுள்ள நோய்க் கண்டுபிடிப்புமுறைகளை வெறுத்து ஒதுக்குகின்றனர், மேலும் பைபிள் நியமங்களை மீறும் சிகிச்சைமுறைகளையும் தவிர்க்கின்றனர்.—சங்கீதம் 36:9; அப்போஸ்தலர் 15:28, 29; வெளிப்படுத்துதல் 21:8.

21, 22. ஆசியாவைச் சேர்ந்த ஒரு பெண் எவ்வாறு பைபிள் நியமம் ஒன்றை சீர்தூக்கிப் பார்த்தாள், அவள் எடுத்த தீர்மானம் அவளுடைய சூழ்நிலையில் எவ்வாறு சரியானதாக நிரூபித்தது?

21 ஆசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் விஷயத்தைச் சிந்தித்துப் பாருங்கள். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோடு படிக்க ஆரம்பித்ததன் விளைவாக பைபிளைப்பற்றி அறிந்துகொள்ளத் தொடங்கிய சிறிது காலத்துக்குள்ளாகவே, அவள் குறைப்பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள், அக்குழந்தையின் எடை வெறும் 1,470 கிராம் மட்டுமே இருந்தது. அக்குழந்தை வளர்ச்சி குன்றிய பிள்ளையாக நடக்கவே முடியாமல் இருக்கும் என்று ஒரு மருத்துவர் அவளிடம் சொன்னபோது, அவள் அதிக மனக்கவலை அடைந்தாள். மருத்துவர் அக்குழந்தையை ஒரு காப்பகத்தில் ஒப்படைத்துவிடும்படி அவளிடம் ஆலோசனை கூறினார். அவளுடைய கணவன் அவ்விஷயத்தைக் குறித்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார். அவள் யாரிடம் செல்வாள்?

22 அவள் சொல்கிறாள்: “‘பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்’ என்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது.” (சங்கீதம் 127:4) அவள் இந்தச் ‘சுதந்தரத்தை’ வீட்டுக்கு எடுத்துச்சென்று அதைக் கவனித்துக்கொள்ள தீர்மானித்தாள். நிலைமைகள் முதலில் கடினமாய் இருந்தன, ஆனால் யெகோவாவின் சாட்சிகளின் உள்ளூர் சபையிலிருந்த கிறிஸ்தவ நண்பர்களின் உதவியோடு அதை சமாளித்து, பிள்ளைக்குத் தேவைப்பட்ட விசேஷ ஆதரவை அந்தப் பெண் அளித்தாள். பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு, அந்தப் பிள்ளை ராஜ்ய மன்றத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்கு சென்றுகொண்டிருந்தது, அங்கிருந்த இளைஞர்களின் கூட்டுறவை மகிழ்ந்து அனுபவித்துக்கொண்டிருந்தது. தாய் குறிப்பிடுகிறாள்: “சரியானதைச் செய்வதற்கு பைபிள் நியமங்கள் என்னை உந்துவித்ததற்காக நான் அதிக நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். என் வாழ்க்கையின் மீதமாயிருக்கும் காலமெல்லாம் அதைக் குறித்து வருத்தப்படாமல் இருக்கவும் யெகோவா தேவனுக்கு முன்பு ஒரு சுத்தமான மனச்சாட்சியைக் காத்துக்கொள்ளவும் பைபிள் எனக்கு உதவிசெய்தது.”

23. நோயுற்றிருப்போருக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்வோருக்கும் பைபிள் என்ன ஆறுதலை அளிக்கிறது?

23 நோய் என்றென்றைக்கும் நம்மோடு இருக்கப்போவதில்லை. “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை” என்ற காலத்தைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிட்டார். (ஏசாயா 33:24) விரைந்து வந்துகொண்டிருக்கும் புதிய உலகில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும். இருப்பினும், அந்தக் காலம் வரும்வரை, நாம் நோயோடும் மரணத்தோடும் போராட வேண்டியிருக்கும். மகிழ்ச்சிகரமாக, கடவுளுடைய வார்த்தை நமக்கு வழிநடத்துதலையும் உதவியையும் அளிக்கிறது. பைபிள் அளிக்கும் நடத்தை சம்பந்தமான அடிப்படை சட்டங்கள் நிரந்தரமானவை, அது அபூரண மானிடர்களின் எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் கருத்துக்களையும் கடந்து அப்பால் செல்கிறது. எனவே, ஒரு ஞானமான நபர் சங்கீதக்காரன் எழுதியதை ஒப்புக்கொள்கிறார்: “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. . . . கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது . . . அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.”—சங்கீதம் 19:7, 9, 11.