Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 13

திருமணம் முறிவுறும் நிலையில் இருக்கிறதென்றால்

திருமணம் முறிவுறும் நிலையில் இருக்கிறதென்றால்

1, 2. திருமணம் மன அழுத்தத்தின்கீழ் இருந்தால், என்ன கேள்வி கேட்கப்பட வேண்டும்?

 லூசியா என்ற பெயருடைய இத்தாலிய பெண் 1988-ல் மிகவும் மனச்சோர்வுற்றிருந்தாள். * பத்து வருடங்களுக்குப் பிறகு அவளுடைய திருமணம் முடிவடைந்துகொண்டிருந்தது. அவள் தன் கணவனோடு கொண்டிருந்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு சமாதானமாவதற்கு பல தடவை முயற்சி செய்திருந்தாள், ஆனால் அது நடைபெறவில்லை. ஆகையால் அவள் அவரோடு ஒத்து வாழ முடியாததன் காரணத்தால் பிரிந்து வாழ ஆரம்பித்தாள், இப்போது தன் சொந்த முயற்சியில் இரண்டு மகள்களையும் வளர்த்து பெரியவர்களாக்கும் பொறுப்பை எதிர்ப்பட்டாள். அந்தச் சமயத்தை மறுபடியும் நினைவுக்கு கொண்டுவந்து லூசியா சொல்கிறாள்: “எங்கள் திருமணத்தை எதுவும் மீட்கவே முடியாது என்று நான் நிச்சயமாயிருந்தேன்.”

2 நீங்கள் திருமண பிரச்சினைகளை உடையவர்களாய் இருந்தால், லூசியா எவ்வாறு உணருகிறாள் என்பதை உங்களால் புரிந்துகொள்ளமுடியும். உங்கள் திருமணம் இக்கட்டான நிலையில் இருக்கலாம், அதை இனியும் அந்நிலையிலிருந்து விடுவிக்கமுடியுமா என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். நிலைமை அப்படி இருக்கிறதென்றால், இந்தக் கேள்வியை சிந்தித்துப்பார்ப்பதை நீங்கள் பயனுள்ளதாக காண்பீர்கள்: திருமணம் வெற்றிபெற உதவுவதற்கென்று பைபிளில் கடவுள் அளித்திருக்கும் எல்லா நல்ல புத்திமதியையும் நான் பின்பற்றி நடந்திருக்கிறேனா?—சங்கீதம் 119:105.

3. மணவிலக்கு பிரபலமானதாக ஆகியிருந்தாலும், மணவிலக்கு செய்துகொண்டவர்கள் மத்தியிலும் அவர்களுடைய குடும்பங்கள் மத்தியிலும் என்ன பிரதிபலிப்பு அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது?

3 கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மனத்தாங்கல்கள் கடுமையாயிருந்தால், திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே அதிக சுலபமான நடவடிக்கையாக இருப்பதாக தோன்றலாம். ஆனால் முறிவுற்ற குடும்பங்களின் எண்ணிக்கையில் அதிர்ச்சியூட்டும் அதிகரிப்பு அநேக தேசங்களில் இருந்தபோதிலும், மணவிலக்கு செய்துகொண்ட பெரும் சதவீதமான ஆண்களும் பெண்களும் முறிவுற்றதைக் குறித்து வருந்துகின்றனர் என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் திருமணமான நிலையில் இருப்பவர்களைக் காட்டிலும் அதிகப்படியான உடல்நல மற்றும் மனநல பிரச்சினைகளால் கஷ்டப்படுகின்றனர். மணவிலக்கு செய்துகொண்டதால் பிள்ளைகளுக்கு ஏற்படும் குழப்பமும் மகிழ்ச்சியற்ற நிலையும் பெரும்பாலும் பல வருடங்களாக நீடித்திருக்கின்றன. முறிவுற்ற குடும்பத்தின் பெற்றோரும் நண்பர்களும்கூட கஷ்டப்படுகின்றனர். திருமணத்தை ஆரம்பித்து வைத்தவராகிய கடவுள் எவ்வாறு அந்த நிலையை நோக்குகிறார்?

4. திருமணத்தில் உள்ள பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்பட வேண்டும்?

4 முந்தின அதிகாரங்களில் கவனித்தபடி, திருமணம் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்க வேண்டிய பிணைப்பாக இருக்க வேண்டும் என்று கடவுள் நோக்கம்கொண்டிருந்தார். (ஆதியாகமம் 2:24) அப்படியென்றால் அநேக திருமணங்கள் ஏன் முறிவுறுகின்றன? அது திடீரென்று நடந்துவிடாமல் இருக்கலாம். எச்சரிப்பு தரும் அடையாளங்கள் பொதுவாக இருக்கின்றன. திருமணத்தில் உள்ள சிறு பிரச்சினைகள் சிறிது சிறிதாக வளர்ந்து வளர்ந்து இறுதியில் சமாளிக்கமுடியாததாய் தோன்றலாம். ஆனால் பைபிளின் உதவியைக்கொண்டு இப்படிப்பட்ட பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைத்தால், அநேக திருமண முறிவுகள் தவிர்க்கப்படக்கூடும்.

உண்மைகளை எதிர்ப்பட்டு நம்பிக்கையோடு இருங்கள்

5. எந்த ஒரு திருமணத்திலும் என்ன மெய்யான நிலையை எதிர்ப்பட வேண்டும்?

5 சில சமயங்களில் பிரச்சினைகளுக்கு வழிநடத்தக்கூடிய ஒரு அடிப்படைக் காரணம், திருமணமான துணைவர்களில் ஒருவர் அல்லது இருவருமே மெய்வாழ்க்கையில் நிகழாத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதாகும். காதல் காவியங்கள், பிரபலமான பத்திரிகைகள், டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஆகியவை மெய்வாழ்க்கையிலிருந்து மிகவும் வித்தியாசமாயிருக்கும் நம்பிக்கைகளையும் கனவுகளையும் தோற்றுவிக்கலாம். இந்தக் கனவுகள் நனவாகவில்லையென்றால், ஒரு நபர் ஏமாற்றப்பட்டவராகவும், அதிருப்தியடைந்தவராகவும், கசப்படைந்தவராகவும்கூட உணரலாம். ஆனாலும் இரண்டு அபூரணமான நபர்கள் எவ்வாறு திருமணத்தில் மகிழ்ச்சியைக் கண்டடையலாம்? ஒரு வெற்றிகரமான உறவைப் பெறுவதற்கு முயற்சி தேவைப்படுகிறது.

6. (அ) திருமணத்தைக் குறித்து என்ன சமநிலையான எண்ணத்தை பைபிள் அளிக்கிறது? (ஆ) திருமணத்தில் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளுக்கான சில காரணங்கள் யாவை?

6 பைபிள் நடைமுறையானது. அது திருமணத்தில் கிடைக்கும் மகிழ்ச்சிகளை அங்கீகரிக்கிறது, ஆனால் திருமணம் செய்துகொள்வோர் “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” என்றும்கூட அது எச்சரிக்கிறது. (1 கொரிந்தியர் 7:28) ஏற்கெனவே கவனித்தபடி, துணைவர்கள் இருவரும் அபூரணர்கள், பாவம் செய்யும் இயல்புள்ளவர்களாய் இருக்கின்றனர். ஒவ்வொரு துணைவரின் மன சம்பந்தமான அமைப்பும், உணர்ச்சி சம்பந்தமான அமைப்பும், வளர்ப்பு முறையும் வித்தியாசமானவையாய் இருக்கின்றன. பணம், பிள்ளைகள், துணைவரின் உடன்பிறந்தார் போன்ற விஷயங்களில் தம்பதிகள் சில சமயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றனர். ஒன்றுசேர்ந்து காரியங்களைச் செய்வதற்கு போதிய நேரம் இல்லாமல் இருப்பது, பாலின பிரச்சினைகள் ஆகியவையும்கூட சச்சரவுகளுக்கு காரணங்களாய் இருக்கலாம். * அப்படிப்பட்ட விஷயங்களைக் கையாளுவதற்கு நேரம் எடுக்கிறது, ஆனால் தைரியம்கொண்டு உற்சாகமாயிருங்கள்! பெரும்பாலான திருமணமான தம்பதிகள் அப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்ப்பட்டு, ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வுகளைக் கண்டிருக்கின்றனர்.

வேறுபாடுகளைக் கலந்து பேசுங்கள்

7, 8. திருமணமான துணைவர்களுக்கிடையே புண்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் அல்லது தவறான புரிந்துகொள்ளுதல்கள் இருந்தால், அவற்றை கையாளுவதற்கு வேதப்பூர்வமான வழி என்ன?

7 புண்பட்ட உணர்ச்சிகள், தவறான புரிந்துகொள்ளுதல்கள், அல்லது தனிப்பட்ட குறைபாடுகள் போன்றவற்றை அமைதியாய் கலந்து பேசுவதை அநேகர் கடினமாய்க் காண்கின்றனர். “நான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாக உணருகிறேன்” என்று ஒளிவுமறைவின்றி சொல்வதற்குப் பதிலாக, துணைவர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு பிரச்சினையைப் பெரிதாக்கலாம். “நீங்கள் உங்களைப் பற்றி மட்டும்தான் அக்கறையாயிருப்பீர்கள்,” அல்லது “நீங்கள் என்னை நேசிப்பதில்லை” என்று அநேகர் சொல்வர். தர்க்கத்தில் உட்பட்டுவிடாமலிருக்க விரும்புவதால் மற்ற துணைவர் உள்ளுணர்ச்சியை வெளிக்காட்டாமலிருக்க விரும்பலாம்.

8 பைபிளின் புத்திமதியைப் பின்பற்றுவதே மேலான போக்கு: “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.” (எபேசியர் 4:26) சந்தோஷமாய் மனநிறைவோடு திருமணமாகியிருந்த ஒரு தம்பதியினர் தங்கள் 60-வது திருமண ஆண்டு நிறைவுநாளை எட்டினர். அப்போது அவர்களுடைய திருமணம் வெற்றிகரமாய் இருப்பதற்கான இரகசியம் என்ன என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. கணவன் சொன்னார்: “வேறுபாடுகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அவற்றைத் தீர்த்துக்கொள்ளாமல் படுக்கைக்குச் செல்லக்கூடாது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம்.”

9. (அ) வேதாகமத்தில் எது கருத்து பரிமாற்றத்தின் ஒரு முக்கியமான பகுதியாக அடையாளம் காண்பிக்கப்பட்டிருக்கிறது? (ஆ) மனத்தாழ்மையும் தைரியமும் தேவைப்பட்டாலும்கூட திருமணமான தம்பதிகள் பெரும்பாலும் என்ன செய்ய வேண்டிய தேவை இருக்கிறது?

9 ஒரு கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தால், இருவரில் ஒவ்வொருவரும் “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும்” இருக்க வேண்டும். (யாக்கோபு 1:19) கவனமாக செவிகொடுத்துக் கேட்டபிறகு, துணைவர் இருவருமே மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையை உணரலாம். (யாக்கோபு 5:16) “உங்களைப் புண்படுத்தியதற்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று கபடமில்லாமல் மனமார சொல்வதற்கு மனத்தாழ்மையும் தைரியமும் தேவைப்படுகிறது. திருமணமான தம்பதியினர் இந்த விதத்தில் கருத்து வேறுபாடுகளைக் கையாளுவது தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு மட்டுமல்லாமல் இருவரும் ஒன்றாக கூடிவாழ்வதில் பெரும் இன்பம் காண்பதற்கு உதவக்கூடிய மனமார்ந்த அன்பையும் நெருக்கத்தையும் வளர்த்துக்கொள்வதற்கும்கூட உதவும்.

திருமண கடமையை செலுத்துதல்

10. கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் சிபாரிசு செய்த என்ன பாதுகாப்பு ஒரு கிறிஸ்தவருக்கு இன்று பொருந்தக்கூடும்?

10 ‘வேசித்தனம் பரவலாக இருந்தபடியால்’ அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதியபோது திருமணத்தை சிபாரிசு செய்தார். (1 கொரிந்தியர் 7:2) இன்று உலகம் பண்டைய கொரிந்து பட்டணத்தைப் போல அல்லது அதற்கும் மேல் படுமோசமாக இருக்கிறது. உலகிலுள்ள ஜனங்கள் வெளிப்படையாக கலந்து பேசும் ஒழுக்கக்கேடான விஷயங்கள், அவர்கள் அடக்கமற்ற விதத்தில் உடுத்தும் விதம், பத்திரிகைகள், புத்தகங்கள், டிவி, திரைப்படங்கள் ஆகியவற்றில் புலன்களுக்கு இன்பம்தரும் விதத்தில் சிறப்பித்துக் காண்பிக்கப்படும் இழிவான கதைகள் ஆகிய இவையனைத்தும் சேர்ந்து கள்ளத்தனமான பாலின ஆசைகளைத் தூண்டுவிப்பதாய் இருக்கின்றன. அதேபோன்ற சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த கொரிந்தியர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “வேகிறதைப் பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம்.”—1 கொரிந்தியர் 7:9.

11, 12. (அ) கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எதைச் செலுத்த கடமைப்பட்டிருக்கின்றனர், அதை எந்த மனநிலையோடு செலுத்த வேண்டும்? (ஆ) திருமண கடமை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட வேண்டியிருந்தால், அந்த நிலைமை எவ்வாறு கையாளப்பட வேண்டும்?

11 ஆகையால், திருமணமான கிறிஸ்தவர்களுக்கு பைபிள் இவ்வாறு கட்டளையிடுகிறது: “புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.” (1 கொரிந்தியர் 7:3) வற்புறுத்திக் கேட்பதன் பேரில் அல்ல, ஆனால் கொடுப்பதன் பேரில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். துணைவர் இருவரும் ஒருவர் நலனின் பேரில் ஒருவர் அக்கறை காண்பித்தால் மட்டுமே திருமணத்தில் நிலவும் உடல்சம்பந்தமான நெருக்கம் மெய்யாகவே திருப்தியளிக்கக்கூடியதாய் இருக்கும். உதாரணமாக, தங்கள் மனைவிகளிடம் “விவேகத்தோடு” நடந்துகொள்ள வேண்டும் என்று பைபிள் கணவர்களுக்கு கட்டளையிடுகிறது. (1 பேதுரு 3:7) இது குறிப்பாக திருமண கடமையை செலுத்துவதிலும் பெற்றுக்கொள்வதிலும் உண்மையாய் இருக்கிறது. மனைவி மென்மையாக நடத்தப்படவில்லையென்றால், திருமணத்திலுள்ள இந்த அம்சத்தை அனுபவித்து மகிழ்வதை அவள் கடினமாகக் காணலாம்.

12 திருமணமான துணைவர்கள் தங்கள் திருமண கடமைகளை ஒருவருக்கொருவர் செலுத்திக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டிய சமயங்கள் இருக்கின்றன. மனைவி மாதத்தின் குறிப்பிட்ட சில சமயங்களிலோ அல்லது அதிக களைப்பாக உணரும்போதோ இது அவ்வாறு இருக்கலாம். (லேவியராகமம் 18:19-ஐ ஒப்பிடுக.) கணவன் வேலை செய்யுமிடத்தில் கடினமான பிரச்சினையை சமாளித்துக்கொண்டிருக்கையிலும் உணர்ச்சிப்பூர்வமான ஆற்றலை இழந்து விட்டதாக உணரும்போதும் அவ்வாறே இருக்கலாம். அப்படி திருமண கடமையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் சமயங்களைக் குறித்து துணைவர்கள் இருவருமே ஒளிவுமறைவின்றி கலந்து பேசி ‘பரஸ்பர சம்மதத்தின்’ மூலம் ஒத்துக்கொண்டால் அப்படிப்பட்ட சூழ்நிலைகள் சிறந்த விதத்தில் கையாளப்படுகின்றன. (1 கொரிந்தியர் 7:5) இது துணைவர்கள் இருவரும் தவறான முடிவுகளுக்கு வருவதைத் தவிர்க்கும். ஆனால், மனைவி வேண்டுமென்றே தன் கணவனுக்கு செலுத்த வேண்டிய திருமணக் கடமையை செலுத்தாமலிருந்தாலோ அல்லது கணவன் வேண்டுமென்றே திருமணக் கடமையை அன்பான விதத்தில் செலுத்தத் தவறினாலோ, துணைவர் சோதனைக்கு ஆளாகிவிடலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமணத்தில் பிரச்சினைகள் எழும்பலாம்.

13. கிறிஸ்தவர்கள் எவ்வாறு தங்கள் சிந்தனையை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு உழைக்கலாம்?

13 எல்லா கிறிஸ்தவர்களைப் போலவும், கடவுளுடைய திருமணமான ஊழியர்கள், அசுத்தமான விருப்பங்களையும், இயற்கைக்கு மாறான விருப்பங்களை தூண்டும் ஆபாசங்களையும் தவிர்க்க வேண்டும். (கொலோசெயர் 3:5) எதிர்பாலாரைச் சேர்ந்த எல்லா அங்கத்தினர்களிடமும் தொடர்புகொள்கையில் அவர்கள் தங்கள் எண்ணங்களையும் செயல்களையும்கூட காத்துக்கொள்ள வேண்டும். இயேசு எச்சரித்தார்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” (மத்தேயு 5:28) பாலினத்தைக் குறித்து பைபிள் அளிக்கும் புத்திமதியைப் பொருத்துவதன்மூலம் தம்பதிகள் சோதனையில் விழுந்து, விபசாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியான நெருக்கத்தைத் திருமணத்தில் தொடர்ந்து அனுபவிக்கலாம், அதில் பாலினம், திருமணத்தை ஆரம்பித்து வைத்தவராகிய யெகோவாவிடமிருந்து வரும் பூரணமான வெகுமதி என்று மிகவும் மதிப்புடையதாய் போற்றப்பட்டிருக்கிறது.—நீதிமொழிகள் 5:15-19.

மணவிலக்குக்கான பைபிள் அடிப்படை

14. என்ன விசனகரமான சூழ்நிலை சில சமயங்களில் ஏற்படுகிறது, ஏன்?

14 மகிழ்ச்சிகரமாக, பெரும்பாலான கிறிஸ்தவ திருமணங்களில் எழும்பும் எந்தப் பிரச்சினையும் கையாளப்படலாம். ஆனால், சில சமயங்களில், விஷயங்கள் அவ்வாறு கையாளப்படமுடியாமல் இருக்கின்றன. மானிடர்கள் அபூரணராய் இருப்பதாலும் சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பாவமுள்ள உலகில் வாழ்ந்துகொண்டிருப்பதாலும், சில திருமணங்கள் முறிவுறும் நிலையை எட்டுகின்றன. (1 யோவான் 5:19) கிறிஸ்தவர்கள் எவ்வாறு அந்தத் தாங்கமுடியாத கடுஞ்சோதனையான நிலையைக் கையாள வேண்டும்?

15. (அ) மறுபடியும் திருமணம் செய்துகொள்வதற்கான சாத்தியத்தையுடைய மணவிலக்குக்கு எது மட்டுமே வேதப்பூர்வமான அடிப்படையாய் இருக்கிறது? (ஆ) உண்மையாய் நடந்துகொள்ளாத திருமண துணைவரை மணவிலக்கு செய்ய வேண்டாம் என்று சிலர் ஏன் தீர்மானித்திருக்கின்றனர்?

15 இந்தப் புத்தகத்தின் 2-ஆம் அதிகாரத்தில் குறிப்பிட்டபடி, மணவிலக்கு செய்துவிட்டு திரும்பவும் திருமணம் செய்துகொள்வதற்கான ஒரே வேதப்பூர்வமான அடிப்படை வேசித்தனம் மட்டுமே. * (மத்தேயு 19:9) உங்கள் திருமண துணைவர் உண்மையற்றவராய் இருந்திருக்கிறார் என்று உங்களுக்கு நிச்சயமான அத்தாட்சி இருந்தால், நீங்கள் ஒரு கடினமான தீர்மானத்தை எதிர்ப்படுகிறீர்கள். நீங்கள் அந்தத் திருமணத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பீர்களா அல்லது மணவிலக்கு செய்துகொள்வீர்களா? சட்டங்கள் எதுவுமில்லை. உண்மையாய் மனந்திரும்பியிருக்கும் துணைவரை சில கிறிஸ்தவர்கள் முழுவதுமாக மன்னித்துவிட்டிருக்கின்றனர், அவ்வாறு பாதுகாக்கப்பட்ட திருமணம் திரும்பவும் நல்ல நிலைக்கு வந்திருக்கிறது. இன்னும் சிலர் பிள்ளைகள் இருப்பதன் காரணத்தால் மணவிலக்கு செய்துகொள்ளாமல் இருக்க தீர்மானித்திருக்கின்றனர்.

16. (அ) தவறுசெய்யும் தங்கள் திருமண துணைவரை மணவிலக்கு செய்துவிடும்படி சிலரை உந்துவித்திருக்கும் சில காரணக்கூறுகள் யாவை? (ஆ) குற்றமற்ற துணைவர் மணவிலக்கு செய்துகொள்ள அல்லது செய்துகொள்ளாமலிருக்க தீர்மானம் எடுக்கையில், அந்த நபரின் தீர்மானத்தை ஏன் எவரும் குறைகூறக்கூடாது?

16 மறுபட்சத்தில், அந்தப் பாவச்செயல் கருத்தரித்தல் அல்லது பாலின உறவால் கடத்தப்படும் நோய்கள் ஆகியவற்றில் விளைவடைந்திருக்கக்கூடும். அல்லது பிள்ளைகளை பாலின துர்ப்பிரயோகம் செய்யும் ஒரு பெற்றோரிடமிருந்து ஒருவேளை பாதுகாக்க வேண்டியிருக்கும். தெளிவாகவே, தீர்மானத்தை எடுக்கும் முன் சிந்தித்துப் பார்ப்பதற்கு அதிகம் உள்ளது. இருப்பினும், உங்கள் திருமண துணைவர் உண்மையாக நடந்துகொள்ளாததைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்ட பின்னர் பாலின உறவுகளை மீண்டும் தொடர்ந்தால், நீங்கள் அவரை மன்னித்துவிட்டீர்கள் என்பதையும் அந்தத் திருமணத்தில் தொடர்ந்து இருக்க விரும்புகிறீர்கள் என்பதையும் காண்பிக்கிறீர்கள். மறுபடியும் திருமணம் செய்துகொள்வதற்கான வேதப்பூர்வமான சாத்தியத்தோடுகூட மணவிலக்கு செய்வதற்கான அடிப்படைக் காரணங்கள் இனிமேலும் இருப்பதில்லை. நீங்கள் எடுக்கும் தீர்மானத்தில் மற்றவர்கள் தலையிட்டு அதை மாற்றுவதற்கு முயற்சிசெய்யக்கூடாது, நீங்கள் அந்தத் தீர்மானத்தை எடுக்கையில் எவரும் அதைக் குறைகூறக்கூடாது. தீர்மானத்தின் விளைவுகளை நீங்களே அனுபவிக்க வேண்டும். “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.”—கலாத்தியர் 6:5.

பிரிந்துசெல்வதற்கான அடிப்படைக் காரணங்கள்

17. வேசித்தனம் இல்லையென்றால், பிரிந்து செல்லுதல் அல்லது மணவிலக்கு செய்தல் ஆகியவற்றின் பேரில் வேதாகமம் என்ன வரம்புகளை வைக்கிறது?

17 திருமணமான துணைவர் வேசித்தனம் செய்யாவிட்டாலும்கூட பிரிந்துசெல்வதை அல்லது ஒருவேளை அவரை மணவிலக்கு செய்வதை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றனவா? ஆம், ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஒரு கிறிஸ்தவர் மறுபடியும் திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தோடு மூன்றாவது ஆள் ஒருவரோடு தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது. (மத்தேயு 5:32) அப்படி பிரிந்து செல்வதற்கு பைபிள் இணக்கம் தெரிவித்தபோதிலும், பிரிந்துசெல்பவர் ‘விவாகம் செய்துகொள்ளாமலிருக்க வேண்டும் அல்லது மறுபடியும் ஒப்புரவாக வேண்டும்’ என்று அது வரையறுக்கிறது. (1 கொரிந்தியர் 7:11) பிரிந்துசெல்வது நல்லதென்பதாகத் தோன்றும் அளவுக்கு கடுமையானதாக்கும் சில சூழ்நிலைகள் யாவை?

18, 19. மறுபடியும் திருமணம் செய்துகொள்வது சாத்தியமில்லையென்றாலும், சட்டப்பூர்வமான பிரிவு அல்லது மணவிலக்கு செய்துகொள்வதற்கான ஆலோசனையை சீர்தூக்கிப்பார்க்கும்படி ஒரு துணைவரை வழிநடத்தக்கூடிய கடுமையான சூழ்நிலைகள் சில யாவை?

18 கணவனின் படுமோசமான சோம்பேறித்தனத்தினாலும் கெட்ட பழக்கங்களினாலும் குடும்பம் ஆதரவற்ற ஏழ்மையான நிலைக்கு வரலாம். * அவர் குடும்பத்தின் வருவாயை சூதாடி முற்றிலும் இழந்துவிடலாம் அல்லது போதைப்பொருள் அல்லது மதுபானம் போன்றவற்றுக்கு அடிமையாகிவிட்டதால் அவற்றை ஆதரிப்பதற்கு அதைப் பயன்படுத்தலாம். பைபிள் குறிப்பிடுகிறது: “ஒருவன் . . . விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1 தீமோத்தேயு 5:8) அப்படிப்பட்ட மனிதன் தன் வழிகளை மாற்றிக்கொள்ள மறுத்து, தீய பழக்கங்களுக்கு செலவழிப்பதற்காக தன் மனைவி சம்பாதிக்கும் பணத்தையும்கூட ஒருவேளை எடுத்துக்கொண்டால், மனைவி தன் நலனையும் தன் பிள்ளைகளின் நலனையும் பாதுகாப்பதற்கென்று சட்டப்பூர்வமான பிரிவைப் பெற்றுக்கொள்ள தெரிந்துகொள்ளலாம்.

19 தன் துணையை மிகவும் வன்மையாய் நடத்தி, ஒருவேளை அவருடைய [அவளுடைய] ஆரோக்கியமும் உயிரும்கூட ஆபத்துக்குள்ளாகும் அளவுக்கு அடிக்கடி அடித்தால் அப்படிப்பட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கை சிந்திக்கப்படலாம். கூடுதலாக, தன் திருமண துணைவர் கடவுளுடைய சட்டங்களை ஏதாவது ஒருவிதத்தில் மீறுவதற்கு எப்போதும் முயற்சிசெய்தால், விசேஷமாக ஆவிக்குரிய வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகும் நிலைவரை விஷயங்கள் சென்றால், பயமுறுத்தப்படும் துணைவர் பிரிந்து செல்வதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கலாம். சட்டப்படியான பிரிவை பெற்றுக்கொள்வதே ‘மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படியும்’ ஒரே வழி என்று கஷ்டத்துக்கு ஆளாகும் துணைவர் முடிவுக்கு வரலாம்.—அப்போஸ்தலர் 5:29.

20. (அ) குடும்ப முறிவு ஏற்படுகையில், முதிர்ச்சிவாய்ந்த நண்பர்களும் மூப்பர்களும் எதை அளிக்கலாம், எதை அளிக்கக்கூடாது? (ஆ) திருமணமான நபர்கள் பைபிளில் பிரிவின் பேரிலும், மணவிலக்கின் பேரிலும் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புரைகளை எதைச் செய்வதற்கு சாக்குப்போக்காக பயன்படுத்தக்கூடாது?

20 துணைவர் படுமோசமாக நடப்பதால் பாதிக்கப்பட்டிருப்போர் அனைவரின் விஷயங்களிலும், குற்றமற்ற துணைவர் பிரிந்துசெல்ல வேண்டும் என்றோ அல்லது சேர்ந்து வாழவேண்டும் என்றோ எவருமே வற்புறுத்தக்கூடாது. முதிர்ச்சிவாய்ந்த நண்பர்களும் மூப்பர்களும் ஆதரவையும் பைபிளை-அடிப்படையாகக்கொண்ட புத்திமதியையும் அளித்தாலும், ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் எல்லா விவரங்களையும் அவர்களால் அறிந்துகொள்ள முடியாது. யெகோவா மட்டுமே அதைக் காணமுடியும். நிச்சயமாகவே ஒரு கிறிஸ்தவ மனைவி திருமணமான நிலையிலிருந்து வெளியேறுவதற்காக அற்பமான சாக்குப்போக்குகளைப் பயன்படுத்தினால் அவள் கடவுளின் திருமண ஏற்பாட்டை கனம்பண்ணுகிறவளாய் இருக்கமாட்டாள். ஆனால் கடும் ஆபத்தான சூழ்நிலை தொடர்ந்து இருந்தால் அவள் பிரிந்துசெல்ல தெரிந்துகொள்கையில் ஒருவரும் அவளை குறைகூறக்கூடாது. பிரிந்துசெல்ல விரும்பும் கணவனுடைய விஷயத்திலும் அதையே சொல்லலாம். “நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.”—ரோமர் 14:10.

முறிவுற்ற திருமணம் ஒன்று எவ்வாறு பாதுகாக்கப்பட்டது

21. திருமணத்தின் பேரில் பைபிள் அளிக்கும் புத்திமதி நடைமுறையானது என்பதை எந்த அனுபவம் காண்பிக்கிறது?

21 ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் லூசியா தன் கணவனிடமிருந்து பிரிந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்து அவர்களோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். “பைபிள் என் பிரச்சினைக்கு நடைமுறையான தீர்வுகளை அளித்தது எனக்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. வெறும் ஒரு வார படிப்பு முடிந்தவுடனேயே நான் என் கணவனோடு கொண்டிருந்த பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டு சமாதானமாக விரும்பினேன். இக்கட்டான நிலையிலுள்ள திருமணங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை யெகோவா அறிந்திருக்கிறார் என்று இன்று என்னால் சொல்லமுடியும். ஏனென்றால் துணைவர்கள் எவ்வாறு ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என்பதை அவருடைய போதனைகள் கற்றுக்கொள்ள உதவுகின்றன. யெகோவாவின் சாட்சிகள் குடும்பங்களைப் பிரிப்பவர்கள் என்று சிலர் உறுதியாக சொல்வது உண்மையல்ல. என்னுடைய விஷயத்தில் அதற்கு நேர் எதிர்மாறான காரியம் உண்மையாய் இருந்தது.” லூசியா தன் வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்த கற்றுக்கொண்டாள்.

22. எல்லா திருமணமான தம்பதிகளும் எதில் தங்கள் நம்பிக்கையை வைத்திருக்க வேண்டும்?

22 லூசியா இதற்கு விதிவிலக்கல்ல. திருமணம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும், ஒரு பாரமாக அல்ல. அவ்வாறு இருப்பதற்காக எழுதப்பட்டிருப்பவற்றிலேயே மிகச் சிறந்த புத்திமதியை யெகோவா அவருடைய பெருமதிப்புவாய்ந்த வார்த்தையில் தந்துள்ளார். பைபிள் “பேதையை ஞானியாக்கவும்” முடியும். (சங்கீதம் 19:7-11) முறிவுறும் நிலையில் இருந்த அநேக திருமணங்களை அது பாதுகாத்திருக்கிறது, மேலும் மிகவும் ஆபத்தான பிரச்சினைகளோடிருந்த மற்ற அநேக திருமணங்களை அது மேம்பட்டவையாய் ஆக்கியிருக்கிறது. யெகோவா தேவன் அளிக்கும் திருமண புத்திமதியின் பேரில் எல்லா திருமணமான தம்பதியினரும் முழு நம்பிக்கை வைப்பீர்களாக. அது உண்மையிலேயே நடைமுறையானது!

^ பெயர் மாற்றப்பட்டுள்ளது.

^ இந்த விஷயங்களில் சில, முந்தின அதிகாரங்களில் கலந்தாலோசிக்கப்பட்டன.

^ “வேசித்தனம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பைபிள் பதம், விபசாரம், ஒத்த பாலினம், மிருகப்புணர்ச்சி, வேண்டுமென்றே பாலின உறுப்புகளைப் பயன்படுத்துவதை உட்படுத்தியிருக்கும் மற்ற கள்ளச்செயல்கள் ஆகியவற்றை உட்படுத்தும்.

^ நல்ல உள்நோக்கமுள்ள கணவன் நோய் அல்லது வேலை வாய்ப்பின்மை போன்ற தன் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால், தன் குடும்பத்துக்கு தேவையானவற்றை அளிக்கமுடியாமல் இருக்கும் சூழ்நிலைகளை இது உட்படுத்துவதில்லை.