Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிபதிகளுக்கெல்லாம் அதிபதிக்கு முன்பாக நிற்க துணிந்தவர் யார்?

அதிபதிகளுக்கெல்லாம் அதிபதிக்கு முன்பாக நிற்க துணிந்தவர் யார்?

அதிகாரம் பத்து

அதிபதிகளுக்கெல்லாம் அதிபதிக்கு முன்பாக நிற்க துணிந்தவர் யார்?

எருசலேமில் யெகோவாவின் ஆலயம் அழிக்கப்பட்டு 57 வருடங்கள் ஓடிவிட்டன. பெல்ஷாத்சாரும் அவரது தகப்பன் நபோனிடஸும் சேர்ந்து, பைபிள் சரித்திரத்தின் மூன்றாம் உலக வல்லரசான பாபிலோனிய சாம்ராஜ்யத்தை ஆளுகின்றனர் a கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய தானியேல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருக்கிறார். “ராஜாவாகிய பெல்ஷாத்சார் ராஜ்யபாரம்பண்ணின மூன்றாம் வருஷத்திலே” யெகோவா தானியேலுக்கு ஒரு தரிசனத்தைக் காட்டுகிறார். உண்மை வணக்கம் மீண்டும் ஸ்தாபிக்கப்படுவதைப் பற்றிய சில விவரங்களை அத்தரிசனம் வெளிப்படுத்துகிறது.​—தானியேல் 8:⁠1.

2தானியேல் பார்த்த தீர்க்கதரிசன காட்சி அவரை ஆழமாக பாதித்தது. ‘முடிவுகாலத்தில்’ வாழும் நமக்கும் இது பெரும் அக்கறைக்குரியது. காபிரியேல் தூதன் தானியேலிடம் இவ்வாறு சொல்கிறார்: “இதோ, கோபத்தின் முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்; இது குறிக்கப்பட்ட முடிவுகாலத்துக்குரியது.” (தானியேல் 8:16, 17, 19, 27, தி.மொ.) ஆக, தானியேல் பார்த்தவற்றையும் இன்று அவை நமக்கு அர்த்தப்படுத்துபவற்றையும் இப்போது ஆர்வம்பொங்க சிந்திப்போமாக.

இரண்டு கொம்புகளுள்ள செம்மறியாட்டுக் கடா

3“தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன்” என தானியேல் எழுதுகிறார். (தானியேல் 8:2) பாபிலோனுக்கு கிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த ஏலாம் தேசத்து தலைநகரான சூசானில் (சூஸா) தானியேல் உண்மையில் இருந்தாரா, அல்லது வெறுமனே தரிசனத்தில் தான் அங்கு இருப்பதுபோல் உணர்ந்தாரா என்பது தெளிவாயில்லை.

4தானியேல் தொடர்ந்து சொல்கிறார்: “நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, ஒரு செம்மறியாட்டுக் கடா ஆற்றிற்கு முன்பாக நின்றுகொண்டிருந்தது, அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன.” (தானியேல் 8:3அ, NW) இந்த செம்மறியாட்டுக் கடாவின் அடையாளம் தானியேலுக்கு ஒரு புதிராகவே இருந்துவிடவில்லை. ஏனெனில், “நீ கண்ட இரண்டு கொம்புள்ள செம்மறியாட்டுக் கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்களைக் குறிக்கிறது” என காபிரியேல் தூதன் பிற்பாடு விளக்கினார். (தானியேல் 8:20, NW) மேதியர்கள் அசீரியாவிற்கு கிழக்கேயிருந்த பீடபூமியைச் சேர்ந்தவர்கள். பெர்சியர்களோ பாரசீக வளைகுடாவின் வட பகுதியில் பெரும்பாலும் நாடோடிகளாய் வாழ்ந்தவர்கள். இருந்தாலும் மேதிய-பெர்சிய சாம்ராஜ்யம் வளர வளர, ஆடம்பர வாழ்க்கைக்கான நாட்டமும் குடிமக்களிடையே தலைதூக்கியது.

5“அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது; ஆகிலும் அவைகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது; உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று” என்கிறார் தானியேல். (தானியேல் 8:3ஆ) பிந்தி முளைத்தெழும்பிய கொம்பு பெர்சியர்களைக் குறிக்கிறது, முதல் கொம்பு மேதியர்களைக் குறிக்கிறது. முதலில் மேதியர்களின் கை ஓங்கியிருந்தது. ஆனால் பொ.ச.மு. 550-⁠ல் பெர்சிய ராஜாவான கோரேசு மேதிய ராஜாவான ஆஸ்டைஜிஸை எளிதில் தோற்கடித்தார். இரு தரப்பு மக்களது பழக்கவழக்கங்களையும் சட்டங்களையும் இணைத்து, அவர்களது ராஜ்யங்களை ஒன்றுபடுத்தி, இன்னும் பல பகுதிகளை வென்று எல்லையை விரிவுபடுத்தினார் கோரேசு. அது முதற்கொண்டு இது இரட்டை உலக வல்லரசானது.

மகா கர்வங்கொண்ட செம்மறியாட்டுக் கடா

6செம்மறியாட்டுக் கடாவை விவரிப்பவராய் தானியேல் தொடர்ந்து குறிப்பிடுகிறார்: “அந்த செம்மறியாட்டுக் கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதை நான் கண்டேன்; எந்த மூர்க்க மிருகமும் அதன் எதிரே நிற்க முடியாதிருந்தது; அதன் கைக்குத் தப்புவிப்பவர் எவருமில்லை; அது தன் இஷ்டப்படியே செய்து மகா கர்வங்கொண்டது.”​—தானியேல் 8:⁠4, NW.

7தானியேல் கண்ட முந்தின தரிசனத்தில், சமுத்திரத்திலிருந்து எழும்பிய மூர்க்க மிருகமாக பாபிலோன் காட்டப்பட்டது. அம்மிருகம் கழுகுகளின் செட்டைகளுள்ள சிங்கம் போன்றிருந்தது. (தானியேல் 7:4, 17) அந்த அடையாளப்பூர்வ மிருகம் இந்தப் புதிய தரிசனத்தின் ‘செம்மறியாட்டுக் கடாவிற்கு’ எதிரே நிற்கமுடியாமல் போனது. பொ.ச.மு. 539-⁠ல் மகா கோரேசு பாபிலோனைக் கைப்பற்றினார். அதன்பின் சுமார் 50 வருடங்களுக்கு, எந்த ‘மூர்க்க மிருகத்தாலும்,’ அதாவது எந்த அரசாங்கத்தாலும் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நான்காம் உலக வல்லரசான மேதிய-பெர்சிய சாம்ராஜ்யத்திற்கு எதிரே நிற்க முடியவில்லை.

8‘கிழக்கிலிருந்து’ வந்த மேதிய-பெர்சிய உலக வல்லரசு தன் இஷ்டப்படியெல்லாம், ‘மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்ந்தது.’ (ஏசாயா 46:11) மகா கோரேசுக்கு அடுத்ததாய் அரசரான இரண்டாம் காம்பைஸஸ் எகிப்தை வென்றார். அடுத்து அரியணை ஏறியவர், பெர்சிய ராஜாவான முதலாம் தரியு. இவர் பொ.ச.மு. 513-⁠ல் பாஸ்பெரஸ் ஜலசந்தியைக் கடந்து மேற்கே சென்று, ஐரோப்பிய பகுதியான த்ரேஸ் மீது படையெடுத்தார். பைஸான்டியம் (தற்போதைய இஸ்தான்புல்) அதன் தலைநகரமாய் இருந்தது. பொ.ச.மு. 508-⁠ல் த்ரேஸையும் அதன்பின் பொ.ச.மு. 496-⁠ல் மக்கெதோனியாவையும் அவர் கைப்பற்றினார். இவ்வாறு தரியுவின் காலத்திற்குள் மேதிய-பெர்சிய ‘செம்மறியாட்டுக் கடா’ மூன்று முக்கிய திசைகளில் அமைந்திருந்த பகுதிகளை கைப்பற்றியிருந்தது: வடக்கே பாபிலோனும் அசீரியாவும், மேற்கே ஆசியா மைனர், தெற்கே எகிப்து.

9மேதிய-பெர்சிய சாம்ராஜ்யம் எந்தளவு பிரமாண்டமாயிருந்தது என்பதற்கு பைபிள் சான்றளிக்கிறது. ‘இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேரு’ என தரியுவுக்கு பின் வந்த முதலாம் சஷ்டாவைப் பற்றி அது குறிப்பிடுகிறது. (எஸ்தர் 1:1) ஆனால் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்திற்கு வீழ்ச்சி காத்திருந்தது. இதைக் குறித்து தானியேலின் தரிசனம் சுவாரஸ்யமான சில விவரங்களை அளிக்கிறது. இவை, கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தையில் நம் விசுவாசத்தை பலப்படுத்தும்.

செம்மறியாட்டுக் கடாவை வீழ்த்துகிறது வெள்ளாட்டுக்கடா

10இப்போது தரிசனத்தில் கண்ட காட்சியால் தானியேல் அடைந்த ஆச்சரியத்தை நினைத்துப் பாருங்கள். பதிவு சொல்கிறது: “நான் என் பங்கில் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, சூரிய அஸ்தமனத்திலிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் ஊன்றாமல் பூமிமீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே எடுப்பான ஒரு கொம்பு இருந்தது. நான் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள செம்மறியாட்டுக் கடாவினிடமட்டும் அது வந்து, தன் பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராக விரைந்து பாய்ந்தது. அது செம்மறியாட்டுக் கடாவின் கிட்டச் சேரக்கண்டேன்; அது செம்மறியாட்டுக் கடாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அதை முட்டி, அதன் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது; அதன் முன் நிற்க செம்மறியாட்டுக் கடாவுக்குப் பலமில்லாமல் போனது. ஆகவே வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது; அதின் கைக்கு செம்மறியாட்டுக் கடாவைத் தப்புவிப்பார் இல்லை.” (தானியேல் 8:5-7, NW) இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?

11தானியேலுக்கும் சரி நமக்கும் சரி, இந்தத் தரிசனத்தின் அர்த்தத்தை ஊகிப்பதற்கு அவசியமில்லை. “ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா” என காபிரியேல் தூதன் தானியேலிடம் சொல்கிறார். (தானியேல் 8:21) பொ.ச.மு. 336-⁠ல் பெர்சிய சாம்ராஜ்யத்தின் கடைசி ராஜாவாக மூன்றாம் தரியு (காடோமானஸ்) முடிசூட்டப்பட்டார். அதே வருடத்தில் அலெக்ஸாந்தர் மக்கெதோனிய ராஜாவானார். முன்னறிவிக்கப்பட்ட “கிரேக்கு தேசத்தின்” முதல் “ராஜா” மகா அலெக்ஸாந்தர் என சரித்திரம் காட்டுகிறது. பொ.ச.மு. 334-⁠ல் “சூரிய அஸ்தமனத்திலிருந்து,” அதாவது மேற்கேயிருந்து விரைந்தார் அலெக்ஸாந்தர். ‘நிலத்திலே கால் ஊன்றாததுபோல்’ அவ்வளவு வேகமாக பிராந்தியங்களைக் கைப்பற்றி ‘செம்மறியாட்டுக் கடாவை’ வீழ்த்தினார். இவ்வாறு சுமார் இரண்டு நூற்றாண்டுகள் நீடித்த மேதிய-பெர்சிய ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவே, கிரீஸ் பைபிள் சரித்திரத்தின் ஐந்தாம் உலக வல்லரசானது. தெய்வீக தீர்க்கதரிசனத்தின் என்னே மகத்தான நிறைவேற்றம்!

12ஆனாலும் அலெக்ஸாந்தரது ஆட்சி கொஞ்ச காலத்திற்கே நீடிக்கவிருந்தது. மேலும் தரிசனம் வெளிப்படுத்தியதாவது: “அப்பொழுது வெள்ளாட்டுக்கடா, தன் பங்கில் மிதமிஞ்சிய கர்வங்கொண்டது; ஆனால் அது பலங்கொண்ட உடனேயே அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலு திசைகளை நோக்கி எடுப்பான நாலு கொம்புகள் முளைத்தெழும்பின.” (தானியேல் 8:8, NW) இத்தீர்க்கதரிசனத்தை விளக்குபவராய் காபிரியேல் சொல்கிறார்: “அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே [“தேசத்திலே,” NW] நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.” (தானியேல் 8:22) முன்னறிவிக்கப்பட்டபடியே, அலெக்ஸாந்தர் வெற்றியின் பூரிப்பில் மிதக்கையிலேயே ‘முறிந்துபோனார்,’ அதாவது 32 வயதிலேயே இறந்துபோனார். அவரது மாபெரும் சாம்ராஜ்யம் இறுதியில் பிளவுற்று, அவரது நான்கு தளபதிகளால் ஆளப்பட்டது.

சின்ன கொம்பின் மர்மம்

13தரிசனத்தின் அடுத்த பாகம், 2,200 வருடங்களுக்கு மேல் நீடிக்கும்; அதன் நிறைவேற்றம் நவீன காலம்வரை தொடரும். தானியேல் எழுதுகிறார்: “அவைகளில் [நான்கு கொம்புகளில்] ஒன்றிலிருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும், சிங்காரமான தேசத்துக்கு நேராகவும் மிகவும் பெரியதாயிற்று. அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழப்பண்ணி, அவைகளை மிதித்தது. அது சேனையினுடைய அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று; அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது. பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது; அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது.”​—தானியேல் 8:9-12.

14மேற்கண்ட வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்குமுன், தேவதூதன் சொல்வதை கவனமாய் கேட்கவேண்டும். அலெக்ஸாந்தரின் சாம்ராஜ்யத்திலிருந்து நான்கு ராஜ்யங்கள் எழும்பும் என்பதைக் குறிப்பிட்ட பிற்பாடு, காபிரியேல் தேவதூதன் சொல்கிறார்: “அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான். அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினால் அல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான். அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான்; ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான்.”​—தானியேல் 8:23-25.

15“இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும்” என தேவதூதன் தானியேலிடம் சொல்கிறார். (தானியேல் 8:26) தரிசனத்தின் இப்பகுதி நிறைவேற “அநேகநாள்” எடுக்கும். ஆகவே தானியேல் ‘இந்தத் தரிசனத்தை மறைத்துவைக்க’ வேண்டியிருந்தது. அப்படியென்றால் அதன் அர்த்தம் தானியேலுக்கு ஒரு புதிராகவே இருந்திருக்கும். இப்போதோ அந்த ‘அநேக நாட்கள்’ கண்டிப்பாக முடிந்திருக்க வேண்டும். அப்படியென்றால், ‘இந்தத் தீர்க்கதரிசன காட்சியின் நிறைவேற்றத்தைக் குறித்து உலக சரித்திரம் என்ன காட்டுகிறது?’ என்ற கேள்வி எழும்புகிறது.

சின்ன கொம்பு மகா வல்லமை பெறுகிறது

16சரித்திரத்தின்படி, அடையாளப்பூர்வ நான்கு கொம்புகளில் ஒன்றிலிருந்து முளைத்ததே இந்தச் சின்ன கொம்பு. இது மேற்கில் கடைக்கோடியில் இருந்தது. மக்கெதோனியாவையும் கிரீஸையும் ஆண்ட தளபதி கஸாண்டரின் கிரேக்க ராஜ்யத்திலிருந்து உருவானதே இது. பிற்பாடு, த்ரேஸையும் ஆசியா மைனரையும் ஆண்ட தளபதி லைசிமாக்கஸ் இந்த ராஜ்யத்தையும் வென்றார். பொது சகாப்தத்திற்கு முன் இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க பேரரசின் இந்த மேற்கத்திய பகுதிகளை ரோம் வென்றது. பொ.ச.மு. 30-⁠ம் ஆண்டிற்குள், ரோம் எல்லா கிரேக்க ராஜ்யங்களையும் வென்று, பைபிள் சரித்திரத்தின் ஆறாம் உலக வல்லரசானது. ஆனால் தானியேல் தரிசனத்தின் சின்ன கொம்பு ரோம சாம்ராஜ்யமாக இருக்க முடியாது, ஏனெனில் அதன் ஆட்சி ‘குறிக்கப்பட்ட முடிவுகாலம்வரை’ நீடிக்கவில்லை.​—தானியேல் 8:⁠19.

17அப்படியென்றால், ‘மூர்க்க முகம்கொண்ட’ அந்த சண்டைக்கார “ராஜா” யாரென சரித்திரம் காட்டுகிறது? பிரிட்டன் உண்மையில் ரோம சாம்ராஜ்யத்தின் வடமேற்கிலிருந்து முளைத்தது. பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம்வரை, தற்போதைய பிரிட்டனின் பகுதியில் ரோம மாகாணங்கள் இருந்தன. காலப்போக்கில் ரோம சாம்ராஜ்யம் சரிந்தது. ஆனால் பிரிட்டனிலும் ரோம ஆதிக்கத்தின் கீழிருந்த ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலும் கிரேக்க-ரோம நாகரிகத்தின் செல்வாக்கு தொடர்ந்திருந்தது. “ரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்தபோது அதன் இடத்தை சர்ச் எடுத்துக்கொண்டது” என நோபல் பரிசுபெற்ற மெக்ஸிகன் கவிஞரும் ஆசிரியருமான ஆக்டாவ்யோ பாஸ் எழுதினார். “சர்ச்சின் அதிகாரப்பூர்வ எழுத்தாளர்களும் பிற்பாடு வந்த அறிஞர்களும் சர்ச் போதகங்களில் கிரேக்க தத்துவங்களை புகுத்தினர்” என்றும் அவர் சொன்னார். 20-ஆம் நூற்றாண்டு தத்துவஞானியும் கணித மேதையுமான பர்ட்ரென்ட் ரஸல் குறிப்பிட்டதாவது: “2,500 ஆண்டுகளுக்கு முன் மிலெட்டிஸில் [ஆசியா மைனரைச் சேர்ந்த கிரேக்க நகரத்தில்] தோன்றிய தத்துவ மற்றும் விஞ்ஞான நம்பிக்கையே, கிரீஸிலிருந்து பிறந்த மேற்கத்திய நாகரிகத்திற்கு அஸ்திவாரம்.” அப்படியென்றால் பிரிட்டிஷ் பேரரசின் கலாச்சாரம், கிரேக்க ராஜ்யங்களான மக்கெதோனியா மற்றும் கிரீஸில் வேர்கொண்டிருந்தது என சொல்லலாம்.

181763-⁠ம் ஆண்டிற்குள், வலிமைமிக்க எதிரிகளான ஸ்பெயினையும் பிரான்ஸையும் பிரிட்டன் தோற்கடித்தது. அது முதற்கொண்டு பிரிட்டிஷ் பேரரசு கடல்களுக்கெல்லாம் ராணியாகவும் பைபிள் தீர்க்கதரிசனத்தில் ஏழாவது உலக வல்லரசாகவும் நிரூபித்தது. 1776-⁠ல் 13 அமெரிக்க குடியேற்றங்கள் பிரிட்டனிலிருந்து சுதந்திரம்பெற்று அமெரிக்க ஐக்கிய மாகாணங்களாக உருவாயின. அதன் பின்னரும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பூமியின் ஜனத்தொகையில் கால்பங்கையும், அதன் பரப்பளவில் கால்பகுதியையும் ஆளும் அளவுக்கு வளர்ச்சிபெற்றது. அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் பிரிட்டனோடு கூட்டுசேர்ந்து, ஆங்கிலோ-அமெரிக்க இரட்டை உலக வல்லரசாய் உருவானபோது இந்த ஏழாம் உலக வல்லரசு இன்னுமதிக பலம்பெற்றது. பொருளாதார ரீதியிலும் ராணுவத்திலும் இந்த வல்லரசு ‘மூர்க்க முகங்கொண்ட ராஜாவானது’ உண்மையே. ஆக, ‘முடிவுகாலத்தில்’ மூர்க்க பேரரசாக ஆன சின்ன கொம்பு ஆங்கிலோ-அமெரிக்க இரட்டை உலக வல்லரசு.

19அந்தச் சின்ன கொம்பு ‘சிங்காரமான தேசத்துக்கு நேராக மிகவும் பெரியதானதை’ தானியேல் கண்டார். (தானியேல் 8:9) யெகோவா தமது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனத்தாருக்கு கொடுத்த வாக்குப்பண்ணப்பட்ட தேசம் அவ்வளவு அழகாக இருந்ததால் ‘எல்லா தேசங்களின்,’ அதாவது முழு பூமியின் ‘சிங்காரமான தேசம்’ என அழைக்கப்பட்டது. (எசேக்கியேல் 20:6, 16) டிசம்பர் 9, 1917-⁠ல் பிரிட்டன் எருசலேமைக் கைப்பற்றியதும், 1920-⁠ல் சர்வதேச சங்கம் பலஸ்தீனாவை ஆளும் உரிமையை பிரிட்டனுக்கு வழங்கியதும் உண்மைதான். அந்த உரிமை மே 14, 1948 வரை நீடித்தது. ஆனாலும் தீர்க்கதரிசன அர்த்தம்நிறைந்த இத்தரிசனத்திலுள்ள அநேக விஷயங்கள் அடையாளப்பூர்வமானவை. ஆக, தரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சிங்காரமான தேசம்’ எருசலேமை குறிப்பதில்லை. மாறாக, ஏழாம் உலக வல்லரசின் காலத்தில் கடவுள் பரிசுத்தவான்களாய் கருதும் மக்களின் பூமிக்குரிய நிலையையே அடையாளப்படுத்துகிறது. ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு எவ்வாறு இந்தப் பரிசுத்தவான்களை அச்சுறுத்த முயலுகிறது என இப்போது பார்க்கலாம்.

‘பரிசுத்த ஸ்தலம்’ தள்ளப்படுகிறது

20இந்தச் சின்ன கொம்பு “வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றை பூமியிலே விழப்பண்ணி, அவைகளை மிதித்தது” என்பதாக தரிசனம் காட்டுகிறது. தேவதூதன் தந்த விளக்கத்தின்படி அந்தச் சின்ன கொம்பு விழப்பண்ணி மிதிக்க முயலும் ‘வானத்தின் சேனையும்,’ ‘நட்சத்திரங்களும்’ ‘பரிசுத்த ஜனங்களாவர்.’ (தானியேல் 8:10, 24) இந்தப் ‘பரிசுத்த ஜனங்கள்’ ஆவியால் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள். புதிய உடன்படிக்கையால் கடவுளோடு சுமூகமான உறவுக்குள் கொண்டுவரப்படுவதால், இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் அடிப்படையில் அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, கடவுளது புனித சேவைக்காக ஒதுக்கப்படுகின்றனர். (எபிரெயர் 10:10; 13:20) பரலோகத்தில் தமது மகனோடு அரசாளும் உரிமையை அவர்களுக்கு அளித்திருக்கும் யெகோவா அவர்களை பரிசுத்தவான்களாய் கருதுகிறார். (எபேசியர் 1:3, 12, 18, 19) ஆகவே தானியேலின் தரிசனத்தில் ‘வானத்தின் சேனை’ என்பது, 1,44,000 ‘பரிசுத்த ஜனங்களில்’ பூமியில் மீந்திருப்பவர்களைக் குறிக்கிறது. இவர்கள் பரலோகத்தில் ஆட்டுக்குட்டியானவருடன் ஆளுகை செய்வார்கள்.​—வெளிப்படுத்துதல் 14:1-5.

21இன்று 1,44,000 பேரில் மீதியானோர், கடவுளது நகரம்போன்ற ராஜ்யமான ‘பரம எருசலேமுக்கும்’ அதன் ஆலய ஏற்பாட்டிற்கும் பூமிக்குரிய பிரதிநிதிகளாக செயல்படுகின்றனர். (எபிரெயர் 12:22, 28; 13:14) இந்த அர்த்தத்தில் அவர்கள் ‘பரிசுத்த ஸ்தலத்தில்’ குடியிருக்கின்றனர். இதையே ஏழாம் உலக வல்லரசு மிதித்து அழிக்க முயலுகிறது. (தானியேல் 8:13) “அவருடைய [யெகோவாவுடைய] ஸ்தாபிக்கப்பட்ட புனித இடம்” என்றும் அழைக்கப்படும் இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைக் குறித்து தானியேல் சொல்கிறார்: “அவரிடத்திலிருந்து [யெகோவாவிடமிருந்து] அன்றாட பலி நீக்கப்பட்டது; அவருடைய ஸ்தாபிக்கப்பட்ட புனித இடம் தள்ளப்பட்டது. பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது; அது சத்தியத்தைத் தரையிலே தள்ளியது; அது கிரியைசெய்து வெற்றிகண்டது.” (தானியேல் 8:11, 12, NW) இது எவ்வாறு நிறைவேறியது?

22இரண்டாம் உலகப் போரின்போது யெகோவாவின் சாட்சிகளுக்கு என்ன ஏற்பட்டது? அவர்கள் பயங்கரமான துன்புறுத்துதலைச் சந்தித்தார்கள்! நாஸிச, பாஸிச நாடுகளிலேயே இந்தத் துன்புறுத்துதல் ஆரம்பமானது. ஆனால் விரைவில் ‘மகா வல்லமை பெற்ற சின்ன கொம்பின்’ பேரரசு எங்கும் ‘சத்தியம் தரையிலே தள்ளப்பட்டது.’ ராஜ்ய பிரசங்கிப்பாளர்களின் ‘சேனையும்,’ அவர்களது ‘சுவிசேஷ’ பிரசங்கிப்பு வேலையும் கிட்டத்தட்ட எல்லா பிரிட்டிஷ் குடியரசு நாடுகளிலும் தடை செய்யப்பட்டன. (மாற்கு 13:10) இந்தத் தேசங்கள் கட்டாய ராணுவ சேவைக்கு ஆளெடுத்தபோது யெகோவாவின் சாட்சிகளுக்கு மத ஊழியர்களுக்கான விலக்களிக்கவில்லை. இவ்வாறு கடவுளது ஊழியர்களாக சாட்சிகள் பெற்றிருக்கும் தேவராஜ்ய நியமிப்பிற்கு அவை சிறிதும் மரியாதை காட்டவில்லை. ஐக்கிய மாகாணங்களிலிருந்த யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் ரௌடிக் கும்பல்களால் தாக்கப்பட்டனர், இன்னும் அநேக விதங்களில் மதிப்புக் குறைவாய் நடத்தப்பட்டனர். ஏழாம் உலக வல்லரசு, யெகோவாவிற்கு அவரது மக்கள் இடைவிடாமல் செலுத்தும் ‘அன்றாட பலியை’​—⁠“உதடுகளின் கனியாகிய” ஸ்தோத்திர பலியை​—⁠செலுத்தவிடாமல் செய்ய முயன்றது. (எபிரெயர் 13:15) இவ்வாறு அந்த உலக வல்லரசு உன்னதக் கடவுளுக்கே சொந்தமான எல்லைப்பகுதிக்குள்​—⁠‘அவரது ஸ்தாபிக்கப்பட்ட புனித இடத்திற்குள்’—அத்துமீறி நுழைந்து, ‘பாதகம்’ செய்தது.

23இரண்டாம் உலகப் போரின்போது இந்தச் சின்ன கொம்பு ‘பரிசுத்த ஜனங்களை’ துன்புறுத்தி, ‘சேனையினுடைய அதிபதி பரியந்தமும்’ பெருமையடித்துக்கொண்டது. அல்லது, காபிரியேல் தூதன் சொல்லும் விதமாக, அது “அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய்” எழும்பிற்று. (தானியேல் 8:11, 25) ‘அதிபதிகளுக்கெல்லாம் அதிபதி’ என்ற பதம் யெகோவா தேவனுக்கு மட்டுமே உரியது. ‘அதிபதி’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தையான சார் (sar), “அதிகாரம் செலுத்து” என அர்த்தப்படுத்தும் வினைச்சொல்லோடு சம்பந்தப்பட்டது. இந்த வார்த்தை ராஜ குமாரரையும் அரச குலத்தவரையும் மட்டுமல்ல, தலைவரை அல்லது முதன்மையானவரையும் குறிக்கிறது. தானியேல் புத்தகம் மற்ற தேவதூதர்களையும் அதிபதியென அழைக்கிறது​—⁠உதாரணத்திற்கு, மிகாவேல். நிச்சயமாகவே சிருஷ்டிகரே இப்படிப்பட்ட அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியானவர், முதன்மையானவர். (தானியேல் 10:13, 21; ஒப்பிடுக: சங்கீதம் 83:17.) ஆனால் அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியான யெகோவாவிற்கு விரோதமாக எவராவது நிற்கத் துணிவதை கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?

‘பரிசுத்த ஸ்தலம்’ சரியான நிலைமைக்கு வரும்

24அதிபதிகளுக்கெல்லாம் அதிபதிக்கு விரோதமாய் எவராலும் நிற்க முடியாது. ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுபோன்ற ‘மூர்க்க முகங்கொண்ட’ ராஜாவாலும்கூட முடியாது! கடவுளது ஸ்தலத்தை அழிக்க இந்த ராஜா எடுத்த முயற்சிகள் வீணாயின. ‘இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகலுக்குப்பின்’ ‘பரிசுத்த ஸ்தலம் அதற்குரிய சரியான நிலைமைக்கு வரும்,’ அல்லது “ஜெயங்கொண்டு எழும்” (த நியூ இங்லிஷ் பைபிள்) என தேவதூதர் சொல்கிறார்.​—தானியேல் 8:13, 14, தி.மொ.

25இந்த 2,300 நாட்கள் என்பது ஒரு தீர்க்கதரிசன காலப்பகுதி. ஆகவே 360 நாட்கள் அடங்கிய தீர்க்கதரிசன ஆண்டு இதில் உட்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:2, 3; 12:6, 14) ஆகவே இந்த 2,300 நாட்களில், ஆறு ஆண்டுகளும் நான்கு மாதங்களும் இருபது நாட்களும் உள்ளன. இது எந்தக் காலப்பகுதி? 1930-களில் கடவுளுடைய மக்களுக்கு எதிராக அநேக நாடுகளில் துன்புறுத்துதல் அதிகரிக்க ஆரம்பித்தது. இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலோ-அமெரிக்க இரட்டை உலக வல்லரசின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் கடுமையாய் துன்புறுத்தப்பட்டனர். ஏன்? ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதில்’ அவர்கள் உறுதியாக இருந்ததால். (அப்போஸ்தலர் 5:29) ஆகவே 2,300 நாட்கள் அந்தப் போரோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் b ஆனால் இந்தத் தீர்க்கதரிசன காலப்பகுதி எப்போது ஆரம்பித்து எப்போது முடிந்தது?

262,300 நாட்களுக்குப் பின், யெகோவாவின் ‘பரிசுத்த ஸ்தலம்’ அதன் சரியான நிலைக்கு “வரும்” அல்லது திரும்ப நிலைநாட்டப்படும் என சொல்லப்படுகிறது. அப்படியென்றால், 2,300 நாட்கள் என்ற காலப்பகுதி, முன்பு அந்த ஸ்தலம் யெகோவாவின் நோக்குநிலைப்படி ‘சரியான நிலைமையில்’ இருந்த சமயத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இது ஜூன் 1, 1938-ஆக இருந்திருக்க வேண்டும். அத்தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரம், “அமைப்பு” என தலைப்பிடப்பட்ட கட்டுரையின் முதலாம் பாகத்தை பிரசுரித்தது. ஜூன் 15, 1938 ஆங்கில காவற்கோபுரம் இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தை பிரசுரித்தது. ஜூன் 1 அல்லது 15, 1938-லிருந்து 2,300 நாட்களை (எபிரெய காலண்டர்படி 6 வருடங்கள், 4 மாதங்கள், 20 நாட்கள்) கூட்டினால், அக்டோபர் 8 அல்லது 22, 1944-⁠க்கு வருகிறோம். 1944, செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 அன்று அ.ஐ.மா., பென்ஸில்வேனியா, பிட்ஸ்பர்கில் நடத்தப்பட்ட விசேஷ அசெம்பிளியின் முதல் நாள், உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவர், “இன்று தேவராஜ்ய ஒழுங்கு” என்ற தலைப்பில் பேசினார். அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற்ற வருடாந்தர கூட்டத்தின்போது (corporate meeting) சங்கத்தின் உரிமை ஆவணம் திருத்தப்பட்டது. சட்டத்தின் வரையறைக்குள் எவ்வளவுக்கு எவ்வளவு தேவராஜ்ய முறைகளுக்கு இசைவாக செயல்பட முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு செயல்படும் முயற்சியிலேயே இந்த ஆவணம் திருத்தப்பட்டது. விரைவில், பைபிள் தேவைப்படுத்துபவற்றைத் தெளிவாகக் காட்டிய பிரசுரத்தின் உதவியால், யெகோவாவின் சாட்சிகளது சபைகளில் தேவராஜ்ய ஒழுங்கு முழுமையாய் ஸ்தாபிக்கப்பட்டது.

271939-⁠ல் ஆரம்பமான இரண்டாம் உலகப் போரின்போது அந்த 2,300 நாட்களின் காலப்பகுதி தொடர்ந்தது. அச்சமயத்தில், துன்புறுத்துதலின் காரணமாக யெகோவாவின் பிரகாரத்தில் ‘அன்றாட பலி’ செலுத்தப்படுவது பெருமளவு குறைந்தது. 1938-⁠ல் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு 39 கிளைக்காரியாலயங்கள் இருந்தன. உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகளது வேலையை மேற்பார்வையிட அவை நிறுவப்பட்டன. 1943-⁠க்குள் இந்த எண்ணிக்கை 21-ஆக குறைந்தது. இந்தக் காலத்தில் ராஜ்ய பிரசங்கிப்பாளர்களின் எண்ணிக்கை சிறிதளவே அதிகரித்தது.

28நாம் பார்த்த விதமாகவே, இரண்டாம் உலகப்போர் முடியும் தறுவாயில், யெகோவாவின் சாட்சிகள், ஒரு தேவராஜ்ய அமைப்பாய் செயல்படுவதன் மூலம் யெகோவா தேவனின் அரசதிகாரத்தை மகிமைப்படுத்த தாங்கள் எடுத்திருந்த தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்த நோக்கத்திற்காகவே 1944-⁠ல் யெகோவாவின் சாட்சிகளது ஊழியத்திலும் அமைப்புமுறையிலும் சீரமைத்தல் ஆரம்பமானது. உதாரணத்திற்கு, அக்டோபர் 15, 1944, ஆங்கில காவற்கோபுரம், “இறுதி ஊழியத்திற்காக ஒழுங்கமைக்கப்படுதல்” என்ற தலைப்பில் கட்டுரையை வெளியிட்டது. இதுவும் அதே காலப்பகுதியில் வெளிவந்த ஊழியம் சம்பந்தமான மற்ற கட்டுரைகளும், அந்த 2,300 நாட்கள் முடிந்துவிட்டதையும் ‘பரிசுத்த ஸ்தலம்’ மீண்டும் ‘சரியான நிலைமைக்குத்’ திரும்பிவிட்டதையும் காட்டின.

29இந்தப் ‘பரிசுத்த ஸ்தலத்தை’ பாழாக்கி அழிக்க எதிரி எடுத்த கொடூர முயற்சி படுதோல்வியடைந்தது. பூமியில் மீந்திருக்கும் ‘பரிசுத்த ஜனங்களும்’ அவர்களது கூட்டாளிகளான ‘திரள் கூட்டத்தாரும்’ ஜெயங்கொண்டதில் சந்தேகமேயில்லை. (வெளிப்படுத்துதல் 7:9) இப்போது பரிசுத்த ஸ்தலம், அதன் சரியான தேவராஜ்ய நிலைமையில் யெகோவாவிற்கு தொடர்ந்து பரிசுத்த சேவை செய்துவருகிறது.

30ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு இன்னமும் அதிகாரத்தில் இருக்கிறது. “ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான்” என காபிரியேல் தூதன் சொன்னார். (தானியேல் 8:25) வெகு விரைவில், ‘மூர்க்க முகங்கொண்ட ராஜா,’ அதாவது பைபிள் தீர்க்கதரிசனத்தின் இந்த ஏழாம் உலக வல்லரசு முறிக்கப்படும். ஆனால் மனித கைகளால் அல்ல, அர்மகெதோனில் தெய்வீக சக்தியால் அழிக்கப்படும். (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 16:14, 16) அப்போது அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியான யெகோவா தேவனின் பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படும் என்பதை அறிவது எந்தளவு சந்தோஷப் பூரிப்பளிக்கிறது!

[அடிக்குறிப்புகள்]

a பைபிளின்படி விசேஷ முக்கியத்துவம் வாய்ந்த ஏழு உலக வல்லரசுகள் எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ், ரோம், ஆங்கிலோ-அமெரிக்க இரட்டை உலக வல்லரசு ஆகியவையே. இவை அனைத்தும் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் யெகோவாவின் மக்களோடு இவற்றிற்கு தொடர்பு இருந்திருக்கிறது.

b தானியேல் 7:25 (NW), ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படும்’ காலப்பகுதியைப் பற்றியும் பேசுகிறது. முந்தைய அதிகாரத்தில் விளக்கப்பட்டபடி, இது முதல் உலகப் போரோடு சம்பந்தப்பட்டிருந்தது.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• இவை எதை அடையாளப்படுத்துகின்றன:

‘இரண்டு கொம்புகளுள்ள செம்மறியாட்டுக்கடா’?

‘ரோமமுள்ள வெள்ளாட்டுக்கடாவும்’ அதன் ‘பெரிய கொம்பும்’?

‘பெரிய கொம்பின்’ இடத்தில் எழும்பும் நான்கு கொம்புகள்?

நான்கு கொம்புகளில் ஒன்றிலிருந்து முளைத்த சின்ன கொம்பு?

• இரண்டாம் உலகப்போரின்போது எவ்வாறு ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு ‘பரிசுத்த ஸ்தலத்தை’ பாழாக்க முயன்றது, அது வெற்றிகண்டதா?

[கேள்விகள்]

1, 2. பெல்ஷாத்சாருடைய ஆட்சிக்காலத்தின் மூன்றாம் வருடத்தில் தானியேல் கண்ட தரிசனம் நமக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

3, 4. தானியேல், ஆற்றிற்கு முன்பாக எந்த மிருகம் நிற்பதைக் கண்டார், அது எதை அடையாளப்படுத்துகிறது?

5. ‘பிந்தி முளைத்தெழும்பிய’ கொம்பு எவ்வாறு உயர்ந்தது?

6, 7. செம்மறியாட்டுக் கடாவிற்கு எதிரே ‘எந்த மூர்க்க மிருகத்தாலும் நிற்க முடியாதிருந்தது’ ஏன்?

8, 9. (அ) “செம்மறியாட்டுக் கடா” எவ்வாறு ‘மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்ந்தது’? (ஆ) பெர்சிய ராஜாவான முதலாம் தரியுவிற்கு அடுத்துவந்த அரசரைப் பற்றி எஸ்தர் புத்தகம் என்ன சொல்கிறது?

10. தானியேல் தரிசனத்தில் ‘செம்மறியாட்டுக் கடாவை’ வீழ்த்திய மிருகம் எது?

11. (அ) ‘ரோமமுள்ள வெள்ளாட்டுக்கடாவையும்’ அதன் ‘பெரிய கொம்பையும்’ பற்றி காபிரியேல் தூதன் என்ன சொன்னார்? (ஆ) அந்த எடுப்பான கொம்பு யாரை அடையாளப்படுத்தியது?

12. அடையாளப்பூர்வ வெள்ளாட்டுக்கடாவின் “பெரிய கொம்பு” எவ்வாறு ‘முறிந்தது,’ அதன் இடத்தில் எவ்வாறு நான்கு கொம்புகள் முளைத்தன?

13. நான்கு கொம்புகளில் ஒன்றிலிருந்து என்ன முளைத்தது, அது எவ்வாறு நடந்துகொண்டது?

14. அடையாளப்பூர்வ சின்ன கொம்பின் நடவடிக்கைகளைக் குறித்தும் அந்தக் கொம்பிற்கு நிகழவிருந்ததைக் குறித்தும் காபிரியேல் தூதன் என்ன சொன்னார்?

15. தரிசனம் சம்பந்தமாக எதைச் செய்யும்படி தூதன் தானியேலிடம் சொன்னார்?

16. (அ) சின்ன கொம்பு எந்த அடையாளப்பூர்வ கொம்பிலிருந்து முளைத்தது? (ஆ) ரோம் எவ்வாறு பைபிள் சரித்திரத்தின் ஆறாம் உலக வல்லரசானது, ஆனால் அது ஏன் அடையாளப்பூர்வ சின்ன கொம்பாய் இருக்க முடியாது?

17. (அ) பிரிட்டனுக்கும் ரோம சாம்ராஜ்யத்திற்கும் இருந்த சம்பந்தம் என்ன? (ஆ) பிரிட்டிஷ் பேரரசு எவ்வாறு கிரேக்க ராஜ்யங்களான மக்கெதோனியா மற்றும் கிரீஸோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?

18. ‘முடிவுகாலத்தில்’ ‘மூர்க்க முகங்கொண்ட ராஜாவாக’ ஆன சின்ன கொம்பு எது? விளக்குக.

19. தரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சிங்காரமான தேசம்’ எது?

20. சின்ன கொம்பு வீழ்த்த முயலும் ‘வானத்தின் சேனையும்’ ‘நட்சத்திரங்களும்’ யார்?

21. ஏழாம் உலக வல்லரசு அழிக்க முற்படும் ‘பரிசுத்த ஸ்தலத்தில்’ குடியிருப்பவர்கள் யார்?

22. இரண்டாம் உலகப் போரின்போது ஏழாம் உலக வல்லரசு என்ன குறிப்பிடத்தக்க ‘பாதகம்’ செய்தது?

23. (அ) இரண்டாம் உலகப் போரின்போது எவ்வாறு ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு ‘அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய்’ எழும்பிற்று? (ஆ) ‘அதிபதிகளுக்கெல்லாம் அதிபதி’ யார்?

24. தானியேல் 8:14 நமக்கு என்ன உறுதியை அளிக்கிறது?

25. 2,300 நாட்கள்கொண்ட தீர்க்கதரிசன காலப்பகுதி எவ்வளவு, அது எந்தச் சம்பவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?

26. (அ) எப்போது முதற்கொண்டு 2,300 நாட்கள் ஆரம்பமாகியிருக்க வேண்டும்? (ஆ) 2,300 நாட்கள்கொண்ட காலப்பகுதி எப்போது முடிவடைந்தது?

27. இரண்டாம் உலகப் போரின் துன்புறுத்துதல் நிறைந்த காலத்தில், ‘அன்றாட பலி’ செலுத்துதல் குறைவுபட்டது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

28, 29. (அ) இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த சமயம் யெகோவாவின் அமைப்பில் என்ன வளர்ச்சி ஏற்பட்டது? (ஆ) ‘பரிசுத்த ஸ்தலத்தை’ பாழாக்கி அழிக்க எதிரி எடுத்த கொடூர முயற்சியைப் பற்றி என்ன சொல்லலாம்?

30. ‘மூர்க்க முகங்கொண்ட ராஜாவுக்கு’ விரைவில் என்ன நடக்கும்?

[பக்கம் 166-ன் வரைப்படம்/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

மேதிய-பெர்சிய சாம்ராஜ்யம்

மக்கெதோனியா

எகிப்து

மெம்ஃபஸ்

எத்தியோப்பியா

எருசலேம்

பாபிலோன்

சூஸா

பர்செபலஸ்

இந்து தேசம்

அக்மேதா

[பக்கம் 169-ன் வரைப்படம்/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கிரேக்க சாம்ராஜ்யம்

மக்கெதோனியா

எகிப்து

பாபிலோன்

சிந்து நதி

[பக்கம் 172-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ரோம சாம்ராஜ்யம்

பிரிட்டானியா

இத்தாலி

ரோம்

எருசலேம்

எகிப்து

[பக்கம் 164-ன் முழுபடம்]

[பக்கம் 174-ன் படங்கள்]

ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின் சில முக்கிய பிரமுகர்கள்:

1. ஜார்ஜ் வாஷிங்டன், முதல் அமெரிக்க ஜனாதிபதி (1789-97)

2. பிரிட்டனின் விக்டோரியா ராணி (1837-1901)

3. உட்ரோ வில்சன், அமெரிக்க ஜனாதிபதி (1913-21)

4. டேவிட் லாயிட் ஜார்ஜ், பிரிட்டன் பிரதமர் (1916-22)

5. வின்ஸ்டன் சர்ச்சில், பிரிட்டன் பிரதமர் (1940-45, 1951-55)

6. ஃப்ரான்க்லின் டி. ரூஸ்வெல்ட், அமெரிக்க ஜனாதிபதி (1933-45)