Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரு ராஜாக்களின் அடையாளம் மாறுகிறது

இரு ராஜாக்களின் அடையாளம் மாறுகிறது

அதிகாரம் பதினான்கு

இரு ராஜாக்களின் அடையாளம் மாறுகிறது

சிரியா தேசத்து ராஜா நான்காம் ஆண்டியோகஸ் எகிப்தின்மீது படையெடுத்து, தன்னை ராஜாவாக முடிசூட்டிக்கொள்கிறார். எகிப்திய ராஜாவான ஆறாம் தாலமியின் வேண்டுகோளின் பேரில், ரோம் அதன் தூதுவரான கயஸ் பாபிலியஸ் லைனாஸை எகிப்திற்கு அனுப்புகிறது. அவர் மாபெரும் கப்பற்படையோடு செல்கிறார். நான்காம் ஆண்டியோகஸ் எகிப்தில் ஆட்சிசெய்வதை கைவிட்டு, தன் நாட்டிற்குத் திரும்ப வேண்டுமென ரோம பேரவை சார்பாக அவர் கட்டளையிடுகிறார். அலெக்சாண்டிரியாவின் புறநகர் பகுதியான இலூசஸில், சிரியாவின் ராஜாவும் ரோம தூதுவரும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். நான்காம் ஆண்டியோகஸ் தன் ஆலோசகர்களோடு கலந்துபேசி முடிவெடுக்க அவகாசம் கேட்கிறார். ஆனால் லைனாஸ் அவரைச் சுற்றி தரையில் ஒரு வட்டம் வரைந்து, அக்கோட்டை தாண்டுவதற்குள் பதிலளிக்க வேண்டுமென்கிறார். அவமானத்தில் தலைகுனிந்த நான்காம் ஆண்டியோகஸுக்கு, ரோம கோரிக்கைகளுக்கு இணங்குவதைத் தவிர வேறுவழியின்று போகிறது. பொ.ச.மு. 168-⁠ல் அவர் சிரியாவுக்குத் திரும்புகிறார். இப்படி ஒருவழியாக முடிந்தது, சிரியா தேசத்து வடதிசை ராஜாவுக்கும் எகிப்திய தென்றிசை ராஜாவுக்குமான மோதல்.

2மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்களில் செல்வாக்கு செலுத்திய ரோம், சிரியாவின்மீது ஆதிக்கம்செய்ய ஆரம்பித்தது. ஆகவே பொ.ச.மு. 163-⁠ல் நான்காம் ஆண்டியோகஸ் இறந்த பின்னர் செலூக்கிய வம்சத்தைச் சேர்ந்த மற்ற ராஜாக்கள் சிரியாவை ஆண்டபோதிலும், அவர்கள் எவரும் ‘வடதிசை ராஜாவின்’ ஸ்தானத்தை ஏற்கவில்லை. (தானியேல் 11:15) இறுதியாக பொ.ச.மு. 64-⁠ல் சிரியா ரோம மாகாணமானது.

3நான்காம் ஆண்டியோகஸ் இறந்து 130 வருடங்களுக்கும் மேல், எகிப்தின் தாலமிய அரச வம்சம், ‘தென்றிசை ராஜாவின்’ ஸ்தானத்தில் நீடித்தது. (தானியேல் 11:14) பொ.ச.மு. 31-⁠ல், ஆக்டியம் யுத்தத்தின்போது, தாலமிய வம்சத்தின் கடைசி ராணியான ஏழாம் க்ளியோபாட்ரா, அவளது ரோம காதலன் மார்க் ஆன்டனி ஆகிய இருவரது ஒன்றிணைந்த படைகளையும் ரோம அரசரான ஆக்டேவியன் வீழ்த்தினார். அதற்கடுத்த வருடம் க்ளியோபாட்ரா தற்கொலை செய்துகொள்ளவே, எகிப்தும் ரோமோடு இணைந்தது. அதன்பின் அது தென்றிசை ராஜாவின் ஸ்தானத்தை ஏற்கவேயில்லை. பொ.ச.மு. 30-⁠ம் ஆண்டிற்குள் சிரியா, எகிப்து ஆகியவற்றைக் காட்டிலும் ரோம் மேலோங்கியது. இப்போது வடதிசை ராஜா, தென்றிசை ராஜாவின் ஸ்தானங்களை வேறே ஆட்சியாளர்கள் ஏற்பார்களா?

‘வரிவசூலிப்பவனை’ அனுப்புகிறார் புதிய அரசர்

4பொ.ச. 33, இளவேனிற்காலத்தில், இயேசு கிறிஸ்து தம் சீஷர்களிடம் பின்வருமாறு கூறினார்: “பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. . . . நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.” (மத்தேயு 24:15, 16) தானியேல் 11:31-ஐ மேற்கோள் காட்டுபவராக இயேசு, எதிர்காலத்தில் வரவிருந்த ‘பாழாக்கும் அருவருப்பைக்’ குறித்து தம் சீஷர்களை எச்சரித்தார். வடதிசை ராஜா சம்பந்தமான இந்த தீர்க்கதரிசனம், அந்த ஸ்தானத்தை வகித்த சிரியாவின் கடைசி ராஜாவான நான்காம் ஆண்டியோகஸ் இறந்து சுமார் 195 வருடங்களுக்குப் பிற்பாடு அளிக்கப்பட்டது. அப்படியென்றால் நிச்சயமாகவே, வடதிசை ராஜாவின் ஸ்தானத்தை வேறொரு ஆட்சியாளர் ஏற்கவேண்டும். அவர் யாராக இருப்பார்?

5யெகோவா தேவனின் தூதர் இவ்வாறு முன்னறிவித்தார்: “சிறப்பான ராஜ்யத்தில் வரிவசூலிப்பவனை அனுப்பும் ஒரு ராஜா அவன் [நான்காம் ஆண்டியோகஸ்] இடத்தில் தோன்றுவான், அவன் சில நாட்களில் முறிந்துபோவான், ஆனால் கோபத்தாலும் அல்ல போரினாலும் அல்ல.” (தானியேல் 11:20, NW) இவ்வாறு ‘எழும்பியவர்’ முதல் ரோம பேரரசரான ஆக்டேவியன் ஆவார். இவரே சீசர் அகஸ்டஸ் (அகஸ்து இராயன்) என அழைக்கப்பட்டார்.​—⁠பக்கம் 248-⁠ல், “ஒருவர் கௌரவிக்கப்பட, இன்னொருவர் அவமதிக்கப்படுகிறார்” என்ற தலைப்பைப் பார்க்கவும்.

6அகஸ்டஸின் ‘சிறப்பான ராஜ்யம்,’ ‘சிங்காரமான தேசமான’ யூதேயாவை (ரோம மாகாணங்களில் ஒன்று) உள்ளடக்கியது. (தானியேல் 11:16) பொ.ச.மு. 2-⁠ல் அகஸ்டஸ் ‘வரிவசூலிப்பவனை’ அனுப்பி, குடிமதிப்பு எழுதும்படி ஆணையிட்டார். வரி வசூலிப்பதற்கும் ராணுவ சேவைக்கு ஆளெடுப்பதற்கும் குடிமதிப்பு தேவைப்பட்டிருக்கலாம். இந்த ஆணையாலேயே, யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்குப் பயணம் செய்தனர். முன்னறிவிக்கப்பட்டபடியே இயேசு அவ்விடத்தில் பிறந்தார். (மீகா 5:2; மத்தேயு 2:1-12) ‘சில நாட்களில்,’ அதாவது குடிமதிப்பு எழுதுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்ட கொஞ்ச காலத்திற்குள்​—⁠பொ.ச. 14, ஆகஸ்ட் மாதத்தில்​—⁠76 வயதான அகஸ்டஸ் காலமானார். அவர் கொலையாளிகளின் ‘கோபத்திற்கும்’ பலியாகவில்லை, ‘போரிலும்’ இறக்கவில்லை, ஆனால் வியாதியுற்று மரித்தார். வடதிசை ராஜாவின் அடையாளம் மாறிவிட்டதில் சந்தேகமேயில்லை! இப்போது வடதிசை ராஜாவின் ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டது ரோம சாம்ராஜ்யம், அதாவது அதன் மன்னர்கள்.

‘அவமதிக்கப்பட்டவர் எழும்புகிறார்’

7தீர்க்கதரிசனத்தை தொடர்பவராய் தூதன் இவ்வாறு சொன்னார்: “அவன் [ஆண்டியோகஸ்] ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்ளுவான் [“அபகரிப்பான்,” NW]. பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான்.”​—தானியேல் 11:21, 22.

8‘அவமதிக்கப்பட்டவர்’ டைபீரியஸ் சீசர் (திபேரியு இராயன்) ஆவார். இவர், அகஸ்டஸின் மூன்றாம் மனைவி லிவியாவின் மகன். (பக்கம் 248-⁠ல் “ஒருவர் கௌரவிக்கப்பட, இன்னொருவர் அவமதிக்கப்படுகிறார்” என்ற தலைப்பைப் பார்க்கவும்.) கெட்ட குணங்களால் இவர் தன் மாற்றான் தந்தையான அகஸ்டஸின் வெறுப்புக்கு ஆளானார். இவர் அடுத்த அரசராவதை அகஸ்டஸ் விரும்பவில்லை. தன் வாரிசுகள் எல்லாம் இறந்துவிட்டதால், வேறுவழியின்றி ‘ராஜ்யபாரத்தின் மேன்மையை’ அவருக்கு வேண்டாவெறுப்போடு கொடுத்தார். அகஸ்டஸ், பொ.ச. 4-⁠ல் டைபீரியஸை தன் வாரிசாக தத்தெடுத்தார். அகஸ்டஸ் இறந்த பிற்பாடு, 54 வயதான டைபீரியஸ்​—⁠அவமதிக்கப்பட்டவர்​—⁠ரோம பேரரசராக அதிகாரம் பெற்று, வடதிசை ராஜாவாக ‘எழும்பினார்.’

9“டைபீரியஸ் ரோம பேரவையோடு சாதுரியமாக செயல்பட்டார். [அகஸ்டஸ் இறந்து] கிட்டத்தட்ட ஒரு மாதமளவும் தன்னை மன்னராக்க அவர் பேரவையை அனுமதிக்கவில்லை” என த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. ரோம பேரரசை கட்டிக்காக்கும் மாபெரும் பொறுப்பை அகஸ்டஸைத் தவிர வேறெவராலும் நிறைவேற்ற முடியாதென அவர் பேரவையிடம் தெரிவித்தார். ஆகவே ஒரே ஆளிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்குப் பதிலாக ஒரு குழுவிடம் ஒப்படைத்து, முன்னிருந்ததைப் போலவே குடியரசை ஸ்தாபிக்கும்படி பேரவையினரைக் கேட்டுக்கொண்டார். சரித்திராசிரியர் வில் டூரன்ட் எழுதினார்: “அவர் கூறியதை ஏற்க துணியாத பேரவை, அவர் கடைசியில் பதவி ஏற்றுக்கொள்ளும் வரை தலைவணங்கியது. அவரும் பேரவைக்கு தலைவணங்கினார்.” மேலும் டூரன்ட் எழுதினார்: “இரு தரப்பினரும் வெகு தந்திரமாக செயல்பட்டனர். உண்மையில் டைபீரியஸ் மன்னர்-குடியரசையே (principate) விரும்பினார். அப்படி விரும்பாதிருந்தால், எப்படியாவது பதவியை ஏற்காமல் நழுவியிருப்பாரே. அரசவை அவரைக் கண்டு பயந்தது, அவரை வெறுக்கவும் செய்தது. ஆனாலும் முந்தியிருந்ததுபோலவே, நடைமுறைக்கு ஒத்துவராத குடியரசை நிறுவவில்லை.” இவ்வாறு டைபீரியஸ் ‘இச்சகம் பேசி ராஜ்யத்தை அபகரித்தார்.’

10‘பிரவாகமாய் வருகிற சேனைகள்,’ அதாவது சுற்றுவட்டார ராஜ்யங்களின் சேனைகள் “பிரவாகமாய் முறிக்கப்படும்” என தூதன் சொன்னார். டைபீரியஸ் வடதிசை ராஜாவானபோது, அவரது தம்பி மகனான ஜெர்மானிகஸ் சீசர், ரைன் நதியருகே அமைந்திருந்த ரோம படையின் தலைவராய் செயலாற்றிவந்தார். பொ.ச. 15-⁠ல், ஜெர்மானிய மாவீரர் ஆர்மினியஸுக்கு எதிராக ஜெர்மானிகஸ் படையெடுத்துச் சென்றார், ஆனால் முழுமையாக வெற்றிபெறவில்லை. சில இடங்களையே கைப்பற்றினாலும், பெரும் சேதம் ஏற்பட்டது. ஆகவே டைபீரியஸ் ஜெர்மனியில் போரை நிறுத்தினார். அதற்குப் பதிலாக, ஜெர்மானிய இனங்கள் ஒன்றுபடுவதைத் தடுக்க அங்கே உள்நாட்டு கலகத்தை தூண்டிவிட்டார். டைபீரியஸ் தற்காப்பளிக்கும் அயல்நாட்டுக் கொள்கையை ஆதரித்து, எல்லைகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். இந்தக் கொள்கை கணிசமான வெற்றியைத் தேடித்தந்தது. இவ்வாறு ‘பிரவாகமாய் வந்த சேனைகள்’ அடக்கப்பட்டு, ‘முறிக்கப்பட்டன.’

11பூமியிலுள்ள சகல ஜனத்தாரையும் ஆசீர்வதிப்பதற்காக யெகோவா தேவன் ஆபிரகாமோடு செய்த ‘உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்பட்டார்.’ அந்த உடன்படிக்கையில் வாக்குப்பண்ணப்பட்ட ஆபிரகாமின் வித்து இயேசு கிறிஸ்துவே. (ஆதியாகமம் 22:18; கலாத்தியர் 3:16) பொ.ச. 33, நிசான் 14 அன்று, இயேசு எருசலேமில் ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்துவிற்கு முன் நின்றார். யூத ஆசாரியர்கள், இயேசுவை ராஜதுரோகி என குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் பிலாத்துவிடம் இயேசு சொன்னார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, . . . என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.” எங்கே குற்றமற்ற இயேசுவை ரோம ஆளுநர் விடுதலை செய்துவிடப்போகிறாரோ என்று யூதர்கள் இவ்வாறு உரக்கமாக சப்தமிட்டார்கள்: “இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல. தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி.” இயேசுவைக் கொல்ல வேண்டுமென கோரிய பிறகு, “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை” என்றார்கள். “ராஜ துரோகம்” (injured majesty) என்ற சட்டத்தை டைபீரியஸ் கெடுபிடியாக்கி, இராயனுக்கு விரோதமாக ஒரு சொல் சொல்லிவிட்டாலே தண்டனை வழங்கினார். இச்சட்டத்தின் அடிப்படையிலேயே பிலாத்து இயேசுவை ‘முறிக்கப்படுவதற்கு,’ அதாவது கழுமரத்தில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தார்.​—யோவான் 18:36; 19:12-16; மாற்கு 15:14-20.

‘உபாயங்களை யோசிக்கிறான்’ கொடுங்கோலன்

12டைபீரியஸைப் பற்றி தொடர்ந்து தூதன் இவ்வாறு முன்னுரைத்தார்: “அவர்கள் அவனோடே கூட்டு சேர்ந்ததால் அவன் வஞ்சகம் செய்து, ஒரு சிறிய தேசத்தின் மூலம் வல்லமையடைவான்.” (தானியேல் 11:23, NW) ரோம பேரவையின் அங்கத்தினர்கள் டைபீரியஸோடு அரசியல்ரீதியில் ‘கூட்டுசேர்ந்திருந்தார்கள்,’ அவரும் ஒப்புக்கு இவர்கள்மீது சார்ந்திருந்தார். ஆனால் இவர் வஞ்சகமாக, “ஒரு சிறிய தேசத்தின்மூலம் வல்லமை” பெற்றார். அச்சிறிய தேசம், ரோமின் மதில்களுக்கருகே அமைக்கப்பட்டிருந்த ரோம மெய்க்காவல் படையாகும். அது அவ்வளவு அண்மையில் அமைந்திருந்ததால், பேரவைக்கு அச்சுறுத்தலாய் இருந்தது. அதுமட்டுமின்றி, பொது மக்கள் டைபீரியஸுக்கு எதிராக கலகம் செய்யாதபடியும் அது பார்த்துக்கொண்டதால் அவருக்கு பலமளித்தது. ஆகவே சுமார் 10,000 மெய்க்காவலர்களின் மூலம் டைபீரியஸ் வல்லமையோடு திகழ்ந்தார்.

13தூதன் தொடர்ந்து இவ்வாறு முன்னறிவித்தார்: “தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கையில், அவன் உட்பிரவேசித்து, தன் பிதாக்களும் தன் பிதாக்களின் பிதாக்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச் சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, அரண்களுக்கு விரோதமாகத் தனக்குள் உபாயங்களை யோசிப்பான்; சிலகாலமட்டும் இப்படியிருக்கும்.” (தானியேல் 11:24) டைபீரியஸ் பயங்கரமான சந்தேகப் பேர்வழி. அவரது ஆட்சிக்காலத்தில் எண்ணற்றோர் திட்டமிட்டு கொல்லப்பட்டனர். முக்கியமாய் மெய்க்காவல் படைத்தலைவரான செஜானஸினால், அவரது ஆட்சியின் பிற்பகுதி கொடூரம் நிறைந்ததாய் இருந்தது. இறுதியில் செஜானஸே சந்தேகத்திற்கு ஆளாகி, கொல்லப்பட்டார். கொடுங்கோலாட்சி புரிவதில் டைபீரியஸ் தன் முன்னோரையெல்லாம் மிஞ்சிவிட்டார்.

14இருந்தாலும் டைபீரியஸ் தான் ‘கொள்ளையிட்டுச் சூறையாடிய பொருட்களை’ ரோம மாகாணங்கள் முழுவதும் வாரி இறைத்தார். அவர் இறக்கும் சமயத்திற்குள் குடிமக்கள் அனைவரும் சீரும் சிறப்பும் பெற்றார்கள். வரிகள் குறைவாக இருந்தன. மேலும் பிரச்சினைகள் நிலவிய பகுதிகளில் வசித்தவர்களுக்கு டைபீரியஸ் வாரி வழங்கினார். படைவீரர்களோ அதிகாரிகளோ எவரையாவது ஒடுக்கினால் அல்லது நாணயமற்று நடந்துகொண்டால், பேரரசரிடமிருந்து தண்டனை பெறுவது நிச்சயம். உறுதியான அதிகாரப் பிடியால் ராஜ்யத்தில் பாதுகாப்பு நிலவியது. மேம்பட்ட தகவல்தொடர்பு முறையால் வர்த்தகம் செழித்தது. ரோமின் உள்நாட்டு, அயல்நாட்டு விவகாரங்கள் அனைத்தும் பட்சபாதமில்லாமல் சீராக நடக்குமாறு டைபீரியஸ் பார்த்துக்கொண்டார். சட்டங்கள் திருத்தப்பட்டன, அகஸ்டஸ் சீசர் செய்த சீர்திருத்தங்களை முன்னேற்றுவிப்பதன் மூலம் சமூக மற்றும் ஒழுக்க நெறிகள் மேம்படுத்தப்பட்டன. இருந்தாலும் டைபீரியஸ் ‘உபாயங்களை யோசித்தார்.’ ஆகவே ரோம சரித்திராசிரியரான டாசிடஸ், வெளிவேஷம் போட்டு ஏமாற்றுவதில் பலே கில்லாடி என இவரை வர்ணித்தார். டைபீரியஸ் கொடுங்கோலன் என பெயரெடுத்து, பொ.ச. 37, மார்ச் மாதம் உயிர்நீத்தார்.

15டைபீரியஸுக்குப் பின் வடதிசை ராஜாவின் ஸ்தானத்தை வகித்தவர்கள் கயஸ் சீசர் (காலிகுலா), முதலாம் க்ளாடியஸ், நீரோ, வெஸ்பேஸியன், டைட்டஸ், டாமிஷியன், நெர்வா, டிராஜன், ஹாட்ரியன் ஆகியோர். “அகஸ்டஸுக்குப் பின் அரசரானவர்கள் பெரும்பாலும் அவரது நிர்வாகக் கொள்கைகளையும், கட்டுமான திட்டங்களையுமே பின்பற்றினர். இருந்தாலும் புதுமை புகுத்துவதைக் குறைத்துக்கொண்டு, பகட்டாரவாரத்திற்கு அதிக கவனம் செலுத்தினர்” என த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. அதே புத்தகம் சொல்கிறது: “முதல் நூற்றாண்டின் இறுதியிலும் இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ரோம் கம்பீரத்திலும் ஜனத்தொகையிலும் நிகரற்று திகழ்ந்தது.” இச்சமயத்தில் ரோம பேரரசின் எல்லைப்பகுதியில் சில பிரச்சினைகள் இருந்ததென்றாலும், முன்னறிவிக்கப்பட்டபடி தென்றிசை ராஜாவோடு முதலில் யுத்தம் செய்தது பொ.ச. மூன்றாம் நூற்றாண்டிலேயே.

தென்றிசை ராஜாவுக்கு எதிராக எழும்புதல்

16தேவதூதர் தீர்க்கதரிசனத்தை இவ்வாறு தொடர்ந்தார்: “பின்னும் [வடதிசை ராஜா] தென்தேச ராஜாவுக்கு விரோதமாகப் பெரிய சேனையோடே போர்செய்யத் தன் வல்லமையோடும் மன உறுதியோடும் எழும்புவான்; அப்பொழுது தென்தேச ராஜா மிகவும் பலத்த பெரிய சேனையோடே போய் யுத்தங்கலப்பான்; அவனுக்கு [வடதிசை ராஜாவுக்கு] விரோதமாகச் செய்யப்பட்ட சதியோசனைகளினிமித்தம் அவன் நிலைநிற்கமாட்டான். அவனோடு போஜனம்பண்ணினவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; அவன் சேனை அடித்துக்கொண்டு போகப்படும், அநேகர் கொல்லப்பட்டு விழுவார்கள்.”​—தானியேல் 11:25, 26, தி.மொ.

17ஆக்டேவியன் எகிப்தை ரோம மாகாணமாக்கி சுமார் 300 வருடங்களுக்குப் பிற்பாடு, ரோம பேரரசரான ஆரேலியன் வடதிசை ராஜாவின் ஸ்தானத்தை ஏற்றார். இதற்கிடையே, ரோம குடியேற்றங்களில் ஒன்றான பால்மைராவின் ராணி செப்டிமியா ஸெனோபியா, தென்றிசை ராஜாவின் ஸ்தானத்தை ஏற்றாள் a (பக்கம் 252-⁠ல், “ஸெனோபியா​—⁠பால்மைராவின் வீர மகா ராணி” என்ற தலைப்பைக் காண்க.) பொ.ச. 269-⁠ல், பால்மைராவின் சேனை, ரோமின் சார்பில் செயல்படும் சாக்கில் எகிப்தை ஆக்கிரமித்தது. கிழக்கில் பால்மைராவை முக்கிய நகரமாக்கி, ரோமின் கிழக்கத்திய மாகாணங்களையும் ஆள விரும்பினாள் ஸெனோபியா. அவளது லட்சியத்தை உணர்ந்து உஷாரான ஆரேலியன், ஸெனோபியாவுக்கு எதிராக “வல்லமையோடும் மன உறுதியோடும்” எழும்பினார்.

18‘தென்றிசை ராஜாவின்’ ஸ்தானத்தை ஏற்ற ஸெனோபியா, வடதிசை ராஜாவுக்கு எதிராக “மிகவும் பலத்த பெரிய சேனையோடே போய்” ‘யுத்தம் செய்தாள்.’ சாம்டாஸ், சாப்பை ஆகிய இரண்டு தளபதிகளின் தலைமையில் சென்றது இப்படை. ஆனால் ஆரேலியன் எகிப்தை வென்று, அதன்பின் ஆசியா மைனர் மீதும் சிரியா மீதும் படையெடுத்தார். ஸெனோபியா எமஸாவில் (தற்போதைய ஹம்ஸ்) தோல்விகண்டு, பால்மைராவிற்குத் திரும்பினாள். ஆரேலியன் அந்நகரை முற்றுகையிட்டபோது ஸெனோபியா துணிந்து எதிர்த்தாள், ஆனாலும் தோல்வியே மிஞ்சியது. அவளும் அவளது மகனும் பெர்சியாவுக்குத் தப்பியோட முயன்றும், ஐப்பிராத்து நதியருகில் ரோமர்களால் சிறைபிடிக்கப்பட்டனர். பால்மைரா நகரம் பொ.ச. 272-⁠ல் சரணடைந்தது. ஆரேலியன் ஸெனோபியாவை கொல்லவில்லை. ஆனால் பொ.ச. 274-⁠ல் ரோமில் வெற்றி பவனி வந்தபோது அவளை முக்கிய காட்சிப்பொருளாக்கினார். அதன்பின் அவள் ரோம சீமாட்டியாகவே வாழ்நாளைக் கழித்தாள்.

19ஆரேலியன் ‘தனக்கு விரோதமாகச் செய்யப்பட்ட சதியோசனைகளினிமித்தம் நிலைநிற்கவில்லை.’ பொ.ச. 275-⁠ல், அவர் பெர்சியர்களுக்கு எதிராக படையெடுத்துச் சென்றார். த்ரேஸில், ஜலசந்தி வழியாய் ஆசியா மைனருக்குள் நுழையும் வாய்ப்பிற்காக அவர் காத்திருந்தார். அப்போது, ‘அவரோடு போஜனம்பண்ணினவர்கள்’ அவருக்கு எதிராக சதிசெய்து, அவரை ‘நாசப்படுத்தினார்கள்.’ நாணயமற்ற நடத்தைக்காக தனது செயலரான ஈரோஸுக்கு அவர் தண்டனை வழங்கவிருந்தார். ஆனால் ஈரோஸ், ஒரு பொய் பட்டியலை தயாரித்து சில குறிப்பிட்ட அதிகாரிகள் கொலைசெய்யப்படப் போவதாக சொன்னார். இப்பட்டியலில் தங்கள் பெயர்களை கண்ட அதிகாரிகள் ஆரேலியனைத் தீர்த்துக்கட்ட சதிசெய்து, அவ்வாறே கொன்றும் போட்டார்கள்.

20பேரரசரான ஆரேலியன் இறந்ததோடு வடதிசை ராஜாவின் சரித்திரம் முடிந்துவிடவில்லை. மற்ற ரோம அரசர்கள் இந்த ஸ்தானத்தை ஏற்றார்கள். கொஞ்ச காலத்திற்கு, மேற்கத்திய பகுதியை ஒரு பேரரசரும் கிழக்கத்திய பகுதியை மற்றொரு பேரரசரும் ஆண்டனர். இவர்களின்கீழ் வடதிசை ராஜாவின் ‘சேனை அடித்துக்கொண்டு போகப்பட்டது’ அல்லது ‘சிதறடிக்கப்பட்டது.’  b வடக்கேயிருந்து படையெடுத்து வந்த பல்வேறு ஜெர்மானிய இனத்தவரால் அநேகர் ‘கொல்லப்பட்டு விழுந்தார்கள்.’ காத் இனத்தவர்கள் பொ.ச. நான்காம் நூற்றாண்டில் ரோம எல்லைக்குள் நுழைந்தனர். ஒன்றன்பின் ஒன்றாக படையெடுப்புகள் தொடர்ந்தன. பொ.ச. 476-⁠ல், ஜெர்மானிய தலைவரான ஓடோயேசர் ரோமின் கடைசி பேரரசரை வீழ்த்தினார். ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள், மேற்கிலிருந்த ரோம சாம்ராஜ்யம் சிதைவுற்றது. ஜெர்மானிய ராஜாக்கள் பிரிட்டானியா, கௌல், இத்தாலி, வட ஆப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளை ஆண்டார்கள். இப்பேரரசின் கிழக்கத்திய பகுதி 15-ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.

மாபெரும் சாம்ராஜ்யம் பிளவுறுகிறது

21மெல்லமெல்ல பல நூற்றாண்டுகளாய் எவ்வாறு ரோம சாம்ராஜ்யம் சிதைந்தது என்பதைக் குறித்த தேவையில்லாத விவரங்களைத் தருவதற்கு பதிலாக, யெகோவாவின் தூதன் வடதிசை, தென்றிசை ராஜாக்களின் கூடுதலான சாகசங்களை தொடர்ந்து முன்னறிவித்தார். இருந்தாலும், ரோம சாம்ராஜ்யத்தில் நடைபெற்ற சில குறிப்பிட்ட வளர்ச்சிகளை சுருக்கமாக சிந்திப்பது, பிற்காலத்தில் இந்த இரு ராஜாக்களின் ஸ்தானத்தை வகித்தவர்களை அடையாளங்காண நமக்கு உதவும்.

22நான்காம் நூற்றாண்டில் ரோம பேரரசரான கான்ஸ்டன்டைன், விசுவாசத் துரோக கிறிஸ்தவத்திற்கு அரசு அங்கீகாரம் அளித்தார். அவர் பொ.ச. 325-⁠ல் ஆசியா மைனரிலுள்ள, நைசியாவில் சர்ச் ஆலோசனை சங்கத்தை கூட்டி, அதற்கு அவரே தலைமை தாங்கினார். பிற்பாடு, ரோமிலிருந்த தன் அரண்மனையை பைஸான்டியம் என்ற கான்ஸ்டன்டிநோபிளுக்கு மாற்றி, இதை தனது புதிய தலைநகராக்கினார். பொ.ச. 395, ஜனவரி 17-⁠ம் தேதியன்று பேரரசரான முதலாம் தியோடோசியஸ் இறக்கும்வரை, ரோம சாம்ராஜ்யம் ஒரே மன்னர் ஆட்சியின்கீழ் இருந்தது.

23தியோடோசியஸ் இறந்த பிற்பாடு, ரோம சாம்ராஜ்யம் அவரது மகன்களுக்கிடையே பிரிக்கப்பட்டது. ஹொனோரியஸ் மேற்கத்திய பகுதியைப் பெற்றார், ஆர்கேடியஸ் கான்ஸ்டன்டிநோபிளை தலைநகராகக் கொண்ட கிழக்கத்திய பகுதியைப் பெற்றார். பிரிட்டானியா, கௌல், இத்தாலி, ஸ்பெயின், வட ஆப்பிரிக்கா ஆகியவை மேற்கத்திய மாகாணங்கள். மக்கெதோனியா, த்ரேஸ், ஆசியா மைனர், சிரியா, எகிப்து ஆகியவை கிழக்கத்திய மாகாணங்கள். பொ.ச. 642-⁠ல் எகிப்திய தலைநகரான அலெக்சாண்டிரியா, சாரசென்களிடம் (அரபியர்களிடம்) தோல்விகண்டது, எகிப்து கலீபாக்களின் (caliphs) மாகாணமானது. ஜனவரி 1449-⁠ல், பதினொன்றாம் கான்ஸ்டன்டைன் கிழக்கு சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னரானார். இரண்டாம் மெமெட் சுல்தான் தலைமையில் ஒட்டோமன் துருக்கியர்கள் மே 29, 1453-⁠ல் கான்ஸ்டன்டிநோபிளைக் கைப்பற்றவே, கிழக்கு ரோம சாம்ராஜ்யம் அழிந்தது. 1517-⁠ல் எகிப்து துருக்கிய மாகாணமானது. ஆனால், பூர்வ தென்றிசை ராஜாவின் இந்தப் பகுதி, மேற்கத்திய பகுதியில் உருவாகவிருந்த மற்றொரு சாம்ராஜ்யத்தினுடைய அதிகாரத்தின்கீழ் வரவிருந்தது.

24ரோம சாம்ராஜ்யத்தின் மேற்குப் பகுதியில் ரோம கத்தோலிக்க பிஷப், குறிப்பாக முதலாம் போப் லியோ எழும்பினார். இவர் பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டில் போப்பாதிக்கத்திற்கு ஆதரவாளராய் பெயர்பெற்றார். காலப்போக்கில், மேற்கத்திய ராஜ்யத்தின் பேரரசரை முடிசூட்டும் அதிகாரத்தை போப் தன் கையில் எடுத்துக்கொண்டார். பொ.ச. 800-⁠ல், கிறிஸ்துமஸ் தினத்தன்று, மூன்றாம் போப் லியோ, புதிய மேற்கத்திய ரோம சாம்ராஜ்யத்தின் பேரரசராய் ஃப்ரான்க் இனத்தவரான ராஜா சார்ல்ஸை (சார்லிமேனை) முடிசூட்டினார். இவ்வாறு ரோமில் மீண்டும் முடியாட்சி துவங்கியது. சில சரித்திராசிரியர்களின்படி இது புனித ரோமப் பேரரசிற்கு அடிகோலியது. அது முதற்கொண்டு கிழக்கத்திய சாம்ராஜ்யமும் மேற்கே புனித ரோம சாம்ராஜ்யமும் இயங்கின. இரண்டுமே கிறிஸ்தவ ராஜ்யங்களாய் உரிமைபாராட்டின.

25காலம் செல்லச்செல்ல, சார்லிமேனின் வாரிசுகள் லாயக்கற்ற ஆட்சியாளர்களானார்கள். அரியணையில் அமர ஆளில்லாத சமயமும் இருந்தது. இதற்கிடையில், ஜெர்மானிய ராஜாவான முதலாம் ஓட்டோ, வட மற்றும் மத்திய இத்தாலியின் பெரும்பாலான பகுதியைக் கைப்பற்றி, தன்னை இத்தாலியின் ராஜாவாக அறிவித்துக்கொண்டார். பிப்ரவரி 2, பொ.ச. 962-⁠ல், பன்னிரண்டாம் போப் ஜான், முதலாம் ஓட்டோவை புனித ரோம பேரரசின் ராஜாவாக முடிசூட்டினார். அதன் தலைநகரம் ஜெர்மனியில் இருந்தது; அதன் மன்னர்களும் பெரும்பாலான குடிமக்களும் ஜெர்மானியர்களே. ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடு, ஆஸ்திரிய ஹாப்ஸ்பர்க் அரசவை, “மன்னர்” என்ற பட்டத்தை ஏற்று, புனித ரோம பேரரசு அழியும்வரை பெரும்பாலான வருடங்கள் அதை தக்கவைத்துக்கொண்டது.

மீண்டும் தெளிவாகிறது இரு ராஜாக்களின் அடையாளம்

26முதலாம் நெப்போலியன் புனித ரோமப் பேரரசுக்கு மரண அடி கொடுத்தார். எப்படியெனில் 1805-⁠ல் அவர் ஜெர்மனியில் வெற்றிகளைக் குவித்ததைத் தொடர்ந்து அதற்கு அதிகாரமளிக்க மறுத்தார். பேரரசரான இரண்டாம் பிரான்ஸிஸ் தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாதவராய், ஆகஸ்ட் 6, 1806-⁠ல் புனித ரோமப் பேரரசர் பதவியை ராஜினாமா செய்து, தன் தேசத்திற்கே திரும்பி, ஆஸ்திரிய மன்னராய் ஆளுகை செய்தார். ரோமின் கத்தோலிக்க போப் மூன்றாம் லியோவும் ஃப்ரான்க் இன ராஜாவான சார்லிமேனும் சேர்ந்து உருவாக்கிய புனித ரோமப் பேரரசு 1,006 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. 1870-⁠ல் ரோம், வாடிகனிலிருந்து சுதந்திரம் பெற்று இத்தாலியின் தலைநகரானது. இதற்கடுத்த வருடம் ஜெர்மானிய பேரரசு தோன்றியது. சீசர் அல்லது கெய்சர் என பெயரிடப்பட்ட முதலாம் வில்ஹெல்மின் ஆட்சியோடு இது துவங்கியது. இவ்வாறு நவீன நாளைய வடதிசை ராஜாவான ஜெர்மனி உலக காட்சியில் தோன்றியது.

27ஆனால் நவீன நாளைய தென்றிசை ராஜாவின் அடையாளம் என்ன? கிரேட் பிரிட்டன் 17-ஆம் நூற்றாண்டில் பேரரசு நிலைக்கு உயர்ந்ததாய் சரித்திரம் காட்டுகிறது. பிரிட்டிஷ் வர்த்தக தொடர்புகளுக்கு இடைஞ்சல் உண்டாக்குவதற்காக, முதலாம் நெப்போலியன் 1798-⁠ல் எகிப்தைக் கைப்பற்றினார். இதன் காரணமாய் போர் மூண்டது. பிரிட்டிஷ்-ஒட்டோமன் கூட்டணி, பிரான்ஸை எகிப்திலிருந்து பின்வாங்குமாறு வற்புறுத்தியது. இதுவே யுத்தத்தின் ஆரம்பத்தில் தென்றிசை ராஜாவாக செயல்பட்டது. அதற்கடுத்த நூற்றாண்டில் எகிப்தில் பிரிட்டிஷ் ஆதிக்கம் அதிகரித்தது. 1882-⁠ற்கு பிற்பாடு எகிப்து, பிரிட்டனை சார்ந்த நாடானது. 1914-⁠ல் முதல் உலகப் போர் மூண்டபோது, எகிப்து துருக்கியின் கீழிருந்தது. அது துருக்கிய அரசு பிரதிநிதியால் (khedive) அல்லது ராஜபிரதிநிதியால் (viceroy) ஆளப்பட்டது. இருந்தாலும் துருக்கி இப்போரில் ஜெர்மனியோடு கூட்டுசேர்ந்தவுடன், பிரிட்டன் அந்த ராஜபிரதிநிதியை நீக்கிவிட்டு எகிப்தை பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட நாடாக அறிவித்தது. மெதுமெதுவாக பிரிட்டனும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களும் இணைய, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு உருவானது. இதுவே தென்றிசை ராஜாவின் ஸ்தானத்தை ஏற்றது.

[அடிக்குறிப்புகள்]

a ‘வடதிசை ராஜா,’ ‘தென்றிசை ராஜா’ என்பவை வெறுமனே பட்டப்பெயர்கள் என்பதால், ராஜா, ராணி, தேசங்களின் கூட்டமைப்பு என எவ்வித ஆளும் அதிகாரத்தையும் இவை குறிக்கலாம்.

b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு​—⁠துணைக் குறிப்புகளுடன் என்ற ஆங்கில பைபிளில் தானியேல் 11:26-⁠ன் அடிக்குறிப்பைக் காண்க.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• எந்த ரோமப் பேரரசர் முதல் வடதிசை ராஜாவாக எழும்பினார், அவர் எப்போது ‘வரிவசூலிப்பவரை’ அனுப்பினார்?

• அகஸ்டஸுக்குப் பிறகு வடதிசை ராஜாவின் ஸ்தானத்தை ஏற்றது யார், எவ்வாறு ‘உடன்படிக்கையின் தலைவன் முறிக்கப்பட்டார்’?

• வடதிசை ராஜாவான ஆரேலியனுக்கும் தென்றிசை ராஜாவின் ஸ்தானத்தை ஏற்ற ஸெனோபியாவுக்கும் நடந்த யுத்தத்தின் விளைவென்ன?

• ரோம சாம்ராஜ்யத்திற்கு என்ன நடந்தது, 19-ஆம் நூற்றாண்டின் முடிவில் இரண்டு ராஜாக்களின் ஸ்தானங்களை எந்த வல்லரசுகள் ஏற்றன?

[கேள்விகள்]

1, 2. (அ) நான்காம் ஆண்டியோகஸ் ரோம கோரிக்கைகளுக்கு இணங்கக் காரணமென்ன? (ஆ) சிரியா எப்போது ரோம மாகாணமானது?

3. எப்போது, எவ்வாறு ரோம் எகிப்தைக் காட்டிலும் மேலோங்கியது?

4. வடதிசை ராஜாவின் ஸ்தானத்தை வேறொரு ஆட்சியாளர் ஏற்கவேண்டுமென ஏன் எதிர்பார்க்கலாம்?

5. வடதிசை ராஜாவாக, நான்காம் ஆண்டியோகஸின் இடத்தில் எழும்பியது யார்?

6. (அ) ‘சிறப்பான ராஜ்யத்தில்’ எப்போது ‘வரிவசூலிப்பவர்’ அனுப்பப்பட்டார், இதன் முக்கியத்துவம் என்ன? (ஆ) அகஸ்டஸ் ‘கோபத்தாலும் போராலும்’ இறக்கவில்லை என எப்படிச் சொல்லலாம்? (இ) வடதிசை ராஜாவின் அடையாளத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டது?

7, 8. (அ) வடதிசை ராஜாவாக அகஸ்டஸின் இடத்தில் எழும்பியவர் யார்? (ஆ) அகஸ்டஸ் சீசரின் வாரிசுக்கு ‘ராஜ்யத்தின் மேன்மை’ ஏன் வேண்டாவெறுப்போடு கொடுக்கப்பட்டது?

9. டைபீரியஸ் எவ்வாறு ‘இச்சகம் பேசி ராஜ்யத்தை அபகரித்தார்’?

10. எவ்வாறு ‘பிரவாகமாய் வந்த சேனைகள் முறிக்கப்பட்டன’?

11. எவ்வாறு ‘உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்பட்டார்’?

12. (அ) டைபீரியஸோடு கூட்டுசேர்ந்தவர்கள் யார்? (ஆ) டைபீரியஸ் எவ்வாறு ‘ஒரு சிறிய தேசத்தின் மூலம் வல்லமையடைந்தார்’?

13. எந்த விதத்தில் டைபீரியஸ் தன் முன்னோரையெல்லாம் மிஞ்சிவிட்டார்?

14. (அ) டைபீரியஸ் எவ்வாறு தான் ‘கொள்ளையிட்டுச் சூறையாடிய பொருட்களை’ ரோம மாகாணங்கள் முழுவதும் வாரி இறைத்தார்? (ஆ) டைபீரியஸ் இறக்கும் சமயத்தில் என்ன பெயர் எடுத்திருந்தார்?

15. பொ.ச. முதல் நூற்றாண்டின் இறுதியிலும், இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ரோமின் நிலைமை என்ன?

16, 17. (அ) தானியேல் 11:25-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள வடதிசை ராஜாவின் ஸ்தானத்தை வகித்தவர் யார்? (ஆ) தென்றிசை ராஜாவின் ஸ்தானத்தை வகித்தவர் யார், இது எவ்வாறு நடந்தது?

18. வடதிசை ராஜாவான ஆரேலியனுக்கும் தென்றிசை ராஜாவின் ஸ்தானத்தை ஏற்ற ஸெனோபியா ராணிக்கும் நடந்த யுத்தத்தின் விளைவென்ன?

19. ஆரேலியன் எவ்வாறு ‘தனக்கு விரோதமாகச் செய்யப்பட்ட சதியோசனைகளினிமித்தம்’ வீழ்ந்தார்?

20. எவ்வாறு வடதிசை ராஜாவின் ‘சேனை அடித்துக்கொண்டு போகப்பட்டது’?

21, 22. பொ.ச. நான்காம் நூற்றாண்டில் கான்ஸ்டன்டைன் என்னென்ன மாற்றங்களை செய்தார்?

23. (அ) தியோடோசியஸ் இறந்தபின் ரோம சாம்ராஜ்யம் எவ்வாறு பிளவுற்றது? (ஆ) கிழக்கத்திய சாம்ராஜ்யம் எப்போது முடிவுக்கு வந்தது? (இ) 1517-⁠ல் எகிப்தை ஆண்டது யார்?

24, 25. (அ) சில சரித்திராசிரியர்களின்படி, புனித ரோமப் பேரரசுக்கு அடிகோலியது எது? (ஆ) புனித ரோம பேரரசின் “மன்னர்” பட்டத்திற்கு இறுதியில் என்னவானது?

26. (அ) புனித ரோமப் பேரரசின் முடிவைக் குறித்து என்ன சொல்லலாம்? (ஆ) வடதிசை ராஜாவாக எழும்பியது யார்?

27. (அ) எகிப்து எவ்வாறு பிரிட்டிஷ் நாடானது? (ஆ) தென்றிசை ராஜாவின் ஸ்தானத்தை ஏற்றது எது?

[பக்கம் 248-251-ன் பெட்டி/படம்]

ஒருவர் கௌரவிக்கப்பட, இன்னொருவர் அவமதிக்கப்படுகிறார்

ஒருவர், சச்சரவு நிறைந்த குடியரசை உலக வல்லரசாக்கினார். இன்னொருவர், 23 வருடங்களில் அதன் செல்வத்தை 20 மடங்கு அதிகமாக்கினார். இறக்கையில், ஒருவர் கௌரவிக்கப்பட்டார், இன்னொருவர் அவமதிக்கப்பட்டார். இயேசு பூமியில் இருந்த சமயத்தில் அரசாண்டவர்களே இந்த இரு ரோம பேரரசர்கள். இவர்கள் யார்? ஏன் ஒருவர் மட்டும் கௌரவிக்கப்பட, இன்னொருவர் அவமதிக்கப்பட்டார்?

‘செங்கலாய் கிடந்த ரோமை பளிங்காக்கியவர்’

பொ.ச.மு. 44-⁠ல் ஜூலியஸ் சீசர் கொலைசெய்யப்பட்ட போது, அவரது சகோதரியின் பேரனான கயஸ் ஆக்டேவியனுக்கு 18 வயதுதான். ஜூலியஸ் சீசரின் தத்துப்பிள்ளையும் ஒரே வாரிசுமான இளம் ஆக்டேவியன் தன் சொத்தை சொந்தம்கொண்டாட உடனடியாக ரோமுக்கு விரைந்தார். அங்கே மகா எதிரி ஒருவரை எதிர்ப்பட்டார். முக்கிய வாரிசாகும் கனவில் மிதந்த, சீசரின் முக்கிய உதவியாளரான மார்க் ஆன்டனியே அவர். இதைப் பின்தொடர்ந்த அரசியல் சதியும் அதிகாரத்திற்கான போராட்டமும் 13 வருடங்கள் நீடித்தன.

எகிப்திய ராணியான க்ளியோபாட்ரா, அவளது காதலன் மார்க் ஆன்டனி ஆகிய இருவரது ஒன்றிணைந்த சேனைகளையும் (பொ.ச.மு. 31-⁠ல்) வீழ்த்திய பிறகுதான் ஆக்டேவியன் ரோம சாம்ராஜ்யத்தின் மறுக்கமுடியாத அரசரானார். அதற்கடுத்த வருடம் ஆன்டனியும் க்ளியோபாட்ராவும் தற்கொலை செய்துகொள்ள, ஆக்டேவியன் எகிப்தைக் கைப்பற்றினார். இவ்வாறு கிரேக்க சாம்ராஜ்யத்தின் கடைசி தடயமும் இல்லாமல் போகவே, ரோம் உலக வல்லரசானது.

ஜூலியஸ் சீசர் கொடுங்கோலாட்சி செய்ததாலேயே கொல்லப்பட்டார் என்பதை நினைவில்கொண்ட ஆக்டேவியன், அதே தவறை தானும் செய்யாதவாறு பார்த்துக்கொண்டார். குடியரசை விரும்பிய ரோமர்களின் உணர்ச்சியைப் புண்படுத்தாமலிருக்க, குடியரசுப் போர்வையில் அவர் தன் முடியாட்சியை நடத்தினார். “ராஜா,” “சர்வாதிகாரி” என்ற பட்டங்களை அவர் ஏற்க மறுத்தார். அதுமட்டுமின்றி, தன் அதிகாரத்திலிருக்கும் எல்லா மாகாணங்களையும் ரோம பேரவையிடம் ஒப்படைத்துவிட்டு, தன் பதவிகளிலிருந்து விலக விரும்புவதாய் அறிவித்தார். இந்தத் தந்திரம் பலனளித்தது. அகம்குளிர்ந்த பேரவை, ஆக்டேவியனை ராஜினாமா செய்யவேண்டாமென்றும் சில மாகாணங்களை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டது.

மேலும், பொ.ச.மு. 27, ஜனவரி 16 அன்று, பேரவை ஆக்டேவியனுக்கு “அகஸ்டஸ்” என்ற பட்டப்பெயர் சூட்டியது. இதன் அர்த்தம், “உயர்ந்தவர், புனிதர்.” ஆக்டேவியன் பட்டப்பெயரை ஏற்றுக்கொண்டதோடு, மாதங்களில் ஒன்றிற்கு தன் பெயரையும் சூட்டினார். ஜூலியஸ் சீசரின் பெயரைக்கொண்ட ஜூலை மாதத்தைப் போலவே 31 நாட்களைக் கொண்டிருப்பதற்காக அவர் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை கடன்வாங்கி ஆகஸ்டோடு சேர்த்தார். இவ்வாறு ஆக்டேவியன் ரோமின் முதல் மன்னரானார். பிற்பாடு சீசர் அகஸ்டஸ் அல்லது “கனம் பொருந்தியவர்” என அழைக்கப்படலானார். அதன்பின் “பான்டிஃபெக்ஸ் மாக்ஸிமஸ்” (பிரதான ஆசாரியர்) என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டார். பொ.ச.மு. 2-⁠ல், அதாவது இயேசு பிறந்த வருடத்தில், பேரவை அவருக்கு “தன் நாட்டின் தந்தை” என அர்த்தப்படுத்தும் பாடர் பாட்ரியை என்ற பட்டம் சூட்டியது.

அதே வருடம், “அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. . . . அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.” (லூக்கா 2:1-3) இந்தக் கட்டளையின் விளைவாய், இயேசு பெத்லகேமில் பிறந்தார். பைபிள் தீர்க்கதரிசனமும் நிறைவேறியது.​—⁠தானியேல் 11:20; மீகா 5:⁠2.

அகஸ்டஸின் அரசாங்கத்தில் நேர்மை ஓரளவு வியாபித்திருந்தது; நாணயத்தின் மதிப்பும் நிலையானதாய் இருந்தது. அகஸ்டஸ் திறம்பட்ட அஞ்சல் சேவையை ஏற்படுத்தி, சாலைகளையும் பாலங்களையும் நிர்மாணித்தார். அவர் ராணுவத்தை சீரமைத்து, நிரந்தர கப்பற்படையை உருவாக்கி, தலைசிறந்த காவலர்கள் அடங்கிய ராஜாங்க மெய்க்காவல் படையையும் அமைத்தார். (பிலிப்பியர் 1:13, NW) அவரது ஆதரவில், வர்ஜில், ஹொரேஸ் போன்ற எழுத்தாளர்கள் சிறப்புற்றனர். மேலும் சிற்பக் கலைஞர்கள், இப்போது க்ளாஸிகல் ஸ்டைல் என அழைக்கப்படும் கலைப்பாணியில் அழகிய சிற்பங்களை வடித்தனர். ஜூலியஸ் சீசர் கட்டி முடிக்காமல் விட்டிருந்த கட்டடங்களை அகஸ்டஸ் கட்டி முடித்தார், அநேக ஆலயங்களைப் புதுப்பிக்கவும் செய்தார். அவர் ஏற்படுத்திய பாக்ஸ் ரொமானா (“ரோம சமாதானம்”) 200 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்தது. பொ.ச. 14, ஆகஸ்ட் 19 அன்று, 76 வயதில் அகஸ்டஸ் காலமானார். அதன்பின் அவர் தெய்வமாக்கப்பட்டார்.

‘செங்கலாய் கிடந்த ரோமை பளிங்காக்கியதாய்’ அகஸ்டஸ் பெருமையடித்துக்கொண்டார். ரோம் மீண்டும் குடியரசாகி, அதே சச்சரவுமிக்க நிலைக்கு திரும்பாமலிருக்க, அவர் அடுத்த ராஜாவை தயாராக்க விரும்பினார். ஆனால் விருப்பப்படி வாரிசை தெரிவுசெய்ய வாய்ப்பில்லாமல் போயிற்று. ஏனெனில் அவரது சகோதரர் மகன், இரண்டு பேரன்கள், ஒரு மருமகன், ஒரு மாற்றான்மகன் ஆகிய எல்லாரும் இறந்துவிட்டிருந்தார்கள். இப்போது மிஞ்சியிருந்ததெல்லாம் மற்றொரு மாற்றான்மகனான டைபீரியஸ்தான்.

‘அவமதிக்கப்பட்டவர்’

அகஸ்டஸ் இறந்து ஒரு மாதத்திற்குள், ரோம பேரவை 54 வயதான டைபீரியஸை மன்னராக அறிவித்தது. டைபீரியஸ் பொ.ச. 37, மார்ச் மாதத்தில் சாகும்வரை அரசாண்டார். அப்படியென்றால் இயேசு ஊழியம் செய்த சமயத்தில் இவரே ரோம மன்னராயிருந்தார்.

மன்னராக டைபீரியஸுக்கு நற்குணங்களும் இருந்தன, துர்குணங்களும் இருந்தன. சொகுசான வாழ்க்கைக்கு பணத்தை வாரி இரைக்காதது அவருக்கிருந்த ஒரு நல்ல குணம். இதனால் அவரது சாம்ராஜ்யம் தழைத்தோங்கியது, இயற்கைச் சேதங்களின்போதும் மற்ற கொடிய காலங்களிலும் நிவாரணப் பணிகளுக்கு செலவிட அவரிடம் போதிய நிதி இருந்தது. போற்றுதலுக்குரிய விஷயம், டைபீரியஸ் தன்னை ஒரு சாதாரண மனிதராகவே கருதி, கனத்திற்குரிய பட்டப்பெயர்களை எல்லாம் மறுத்து, மன்னர் வணக்கத்தை அகஸ்டஸுக்கே செலுத்துமாறு உற்சாகப்படுத்தினார். ஜூலியஸ் சீசரும் அகஸ்டஸும் செய்ததுபோல் தன் பெயர் விளங்க மாதங்களில் ஒன்றிற்கு புதிய பெயர் சூட்டவில்லை, அவ்வாறு செய்து தன்னை கௌரவிக்க மற்றவர்களையும் அனுமதிக்கவில்லை.

இருந்தாலும் டைபீரியஸின் துர்குணங்கள் அவரது நற்குணங்களை மிஞ்சிவிட்டன. அவர் பயங்கர சந்தேகப் பேர்வழி. உள்ளொன்றும் புறமொன்றும் வைத்து செயல்பட்டார். அவரது ஆட்சியில் எண்ணற்றோர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். அவரது முன்னாளைய நண்பர்களில் அநேகருக்கும் இதே கதிதான். லெசி-மெஜெஸ்டி (ராஜ துரோகம்) என்ற சட்டத்தை அவர் கெடுபிடியாக்கினார். ராஜ துரோக செயல்களுக்கு மட்டுமல்ல, ராஜாவுக்கு விரோதமாக ஒரு சொல் சொல்லிவிட்டாலே தண்டனை வழங்கினார். இந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே, யூதர்கள் இயேசுவைக் கொல்லும்படி ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்துவை வற்புறுத்தியிருக்க வேண்டும்.​—⁠யோவான் 19:12-16.

ரோம எல்லைக்கருகே இருந்த மெய்க்காவல் படைமீது முழு கவனம் செலுத்தி, நகரின் மதில்களுக்கு வடக்கே அப்படைக்காக அரணுள்ள பாசறைகளை அமைத்தார். இப்படை, இவரது பதவிக்கு அச்சுறுத்தலாயிருந்த ரோம பேரவைக்கு பீதி உண்டாக்கியது. மேலும் குடிமக்களிடையே எழும் கலகத்தையும் கட்டுப்படுத்தியது. டைபீரியஸ், குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்கும் முறையையும் (informer system) ஊக்குவித்தார். அவரது ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி கொடூரம் நிறைந்ததாய் இருந்தது.

டைபீரியஸ், கொடுங்கோலன் என்ற பெயருடனேயே இறந்தார். அவர் இறப்பு ரோமர்களுக்கு களிப்பளித்தது; பேரவையும் அவரை தெய்வமாக்க மறுத்தது. இந்த காரணங்களுக்காகவும் மற்ற காரணங்களுக்காகவும், “அவமதிக்கப்பட்டவன் ஒருவன்” ‘வடதிசை ராஜாவாக’ எழும்புவான் என்ற தீர்க்கதரிசனம் டைபீரியஸில் நிறைவேறியதைக் காண்கிறோம்.​—⁠தானியேல் 11:15, 21.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• எவ்வாறு ஆக்டேவியன் ரோமின் முதல் மன்னரானார்?

• அகஸ்டஸின் அரசாங்கம் சாதித்தவற்றைப் பற்றி என்ன சொல்லலாம்?

• டைபீரியஸின் நற்குணங்களும் துர்குணங்களும் யாவை?

• ‘அவமதிக்கப்பட்டவரை’ பற்றிய தீர்க்கதரிசனம் எவ்வாறு டைபீரியஸில் நிறைவேறியது?

[படம்]

டைபீரியஸ்

[பக்கம் 252-255-ன் பெட்டி/படங்கள்]

ஸெனோபியா—பால்மைராவின் வீர மகா ராணி

“கார்வண்ண அழகி அவள். . . . அவளது பற்களோ வெண்மையான முத்துக்கள். அவளது ஜொலிக்கும் அகன்ற கருவிழிகளின் காந்தப் பார்வையில் சொக்கிப்போகாதவர்கள் உண்டோ? அவளது கணீர் குரலில் இனிமைக்கேது பஞ்சம். அறிவில் ஆடவருக்கு நிகரானவள். அதைக் கூர்மையாக்க, மெருகூட்டிய படிப்பு வேறு. லத்தீன் அவளுக்கு அத்துப்படி. அதோடு கிரேக்க, சிரிய, எகிப்திய மொழிகளிலும் தேர்ந்தவள்.” சரித்திராசிரியர் எட்வார்ட் கிப்போன் இவ்வாறு புகழாரம் சூட்டியது ஸெனோபியாவிற்கு. இவள் சிரியாவின் நகரமான பால்மைராவின் வீர மகா ராணி.

ஸெனோபியாவின் கணவர், பால்மைரா நகர சீமான் ஆடினேதஸ். இவர் பொ.ச. 258-⁠ல் பதவி உயர்வு பெற்று, ரோம உதவித்தூதரானார். ஏனெனில் அவர் ரோம சாம்ராஜ்யத்தின் சார்பாக பெர்சியாவை வெற்றிகரமாய் கைப்பற்றியிருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிற்பாடு, ரோம பேரரசரான காலினஸ், கரெக்டோர் டோடியுஸ் ஆர்யன்டிஸ் (கிழக்குப் பகுதிகளுக்கெல்லாம் ஆளுநர்) என்ற பட்டப்பெயரை ஆடினேதஸுக்கு சூட்டினார். பெர்சிய ராஜாவான முதலாம் ஷேபூரை வென்றதை முன்னிட்டு இப்பட்டம் வழங்கப்பட்டது. பிற்பாடு, “மன்னாதி மன்னர்” என்ற பட்டப்பெயரை ஆடினேதஸ் தனக்கு சூட்டிக்கொண்டார். ஆடினேதஸின் இந்த வெற்றிகளுக்கு பெருமளவு காரணமாயிருந்தது ஸெனோபியாவின் தைரியமும் விவேகமுமே.

ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க லட்சியங்கொள்கிறார் ஸெனோபியா

பொ.ச. 267-⁠ல், ஆடினேதஸ் கொடிகட்டிப் பறந்த சமயத்தில் அவரும் அவரது பட்டத்து இளவரசனும் கொல்லப்பட்டார்கள். ஸெனோபியாவின் மகன் மிகவும் சிறியவனாய் இருக்க, அவளே தன் கணவன் அரியணையில் ஏறினாள். பேரழகு, லட்சிய துடிப்பு, நிர்வாக தனித்திறமை, கணவனோடு போர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவம், பல்வேறு மொழிகளில் தேர்ச்சி​—⁠இந்த சர்வ லட்சணங்களும் அவளிடம் ஒருசேர அமைந்தமையால் தன் ஜனங்களின் பெருமதிப்பையும் ஆதரவையும் பெற்றாள். அறிவுப் பசியுள்ளவளாய், ஸெனோபியா எப்போதும் அறிஞர்களின் புடைசூழவிருந்தாள். அவளது ஆலோசகர்களில் ஒருவர், தத்துவஞானியும் அணியிலக்கண வல்லுநருமான கேஸியஸ் லாங்கினஸ். இவர், “உயிருள்ள நூலகம், நடமாடும் பல்கலைக்கழகம்” என்றெல்லாம் புகழப்பட்டவர். “ஆடினேதஸ் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குள் . . . ஸெனோபியா கிழக்கத்திய ராணியாக மக்களின் மனதில் இடம்பிடித்தாள்” என்பதாய் பால்மைராவும் அதன் சாம்ராஜ்யமும்​—⁠ரோமை எதிர்த்து ஸெனோபியா செய்த கலகம் என்ற ஆங்கில புத்தகத்தில் ரிச்சர்ட் ஸ்டோன்மென் குறிப்பிட்டார்.

ஸெனோபியாவின் ஆட்சிப்பகுதிக்கு ஒரு புறத்தில் பெர்சியா; இதை அவளும் அவளது கணவரும் வலிமையிழக்கச் செய்திருந்தார்கள். மறுபக்கத்திலோ, மெதுவாக பலமிழந்துகொண்டிருந்த ரோம். ரோமப் பேரரசின் அப்போதைய நிலைமையைப் பற்றி சரித்திராசிரியர் ஜே. எம். ராபர்ட்ஸ் சொல்கிறார்: “மூன்றாம் நூற்றாண்டு, . . . ரோமின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைப்பகுதிகளுக்கு கேடுகாலமாய் இருந்தது. போதாததற்கு, உள்நாட்டுப் போரும், வாரிசுரிமை சண்டைகளும் முன்னெப்போதும் இல்லாதளவு தலைதூக்கின. இருபத்திரண்டு பேரரசர்கள் (உண்மையில் வாரிசல்லாதவர்கள் நீங்கலாக) தோன்றினார்கள், தோன்றிய வேகத்தில் மறைந்தார்கள்.” மறுபட்சத்தில், இந்த சிரியா தேசத்து அரசி, அசைக்கமுடியாத வீர மகா ராணியாய் தன் ராஜ்யத்தை ஆண்டாள். “இரண்டு சாம்ராஜ்யங்களையும் [பெர்சியா மற்றும் ரோம்] தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவள், இவ்விரண்டையும் ஆதிக்கம் செலுத்தும் மூன்றாம் சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக்க லட்சியங்கொண்டாள்” என ஸ்டோன்மென் கூறுகிறார்.

தனது எல்லையை விரிவாக்க காத்திருந்த ஸெனோபியாவிற்கு தன் கனவை நனவாக்கும் சந்தர்ப்பம் பொ.ச. 269-⁠ல் கிடைத்தது. அப்போது உண்மையில் அரசகுலத்தில் தோன்றாத ஒரு அரசன், எகிப்தில் ரோம ஆட்சியை எதிர்த்தான். ஸெனோபியாவின் ராணுவம் எகிப்தை நோக்கி விரைந்து, கலகக்காரனை கொன்று வீழ்த்தி, நாட்டைக் கைப்பற்றியது. எகிப்து தேசத்து ராணியென அறிவித்து, அவள் தன் பெயரை நாணயங்களில் பொறித்தாள். இப்போதோ அவளது ராஜ்யம் நைல் நதி தொடங்கி ஐப்பிராத்து நதி வரை பரந்து விரிந்தது. அவளுடைய வாழ்நாளின் இக்காலக்கட்டத்திலேயே ஸெனோபியா ‘தென்றிசை ராஜா’வின் ஸ்தானத்தை ஏற்றாள்.​—⁠தானியேல் 11:25, 26.

ஸெனோபியாவின் தலைநகர்

ஸெனோபியா தன் தலைநகரான பால்மைராவை அந்தளவு பலப்படுத்தி, சிங்காரித்ததால் அது ரோம உலகின் மிகப் பெரிய நகரங்களுக்கு சமமாக விளங்கியது. அதன் மக்கட்தொகை 1,50,000-⁠க்கும் அதிகத்தை எட்டியதாய் சொல்லப்படுகிறது. அருமையான அரசு கட்டடங்களும், ஆலயங்களும், தோட்டங்களும், தூண்களும், நினைவுச்சின்னங்களும் பால்மைராவில் ஏராளம் ஏராளம். இந்நகரின் மதிற்சுவரின் சுற்றளவு 21 கிலோமீட்டர் என்று சொல்லப்படுகிறது. முக்கிய வீதியில், கொரிந்திய பாணியில் கட்டப்பட்ட, 15 மீட்டருக்கும் அதிக உயரமான சுமார் 1,500 தூண்கள் வரிசையாக நின்றன. நகரில் திரும்பிய பக்கமெல்லாம் ஆள் உயர சிலைகளும் மார்பளவு சிலைகளும், மாவீரர்களையும் செல்வந்தக் கொடையாளர்களையும் பறைசாற்றின. பொ.ச. 271-⁠ல், ஸெனோபியா தனக்கும் காலமான தன் கணவருக்கும் சிலை வைத்தாள்.

பால்மைராவின் எழில்மிக்க கட்டடங்களில் ஒன்று, சூரியக் கோயில் ஆகும். இது அந்நகரின் முக்கிய வழிபாட்டு ஸ்தலம் என்பதில் ஐயமேயில்லை. ஸெனோபியாதானே சூரிய கடவுளோடு சம்பந்தப்பட்ட தெய்வத்தை வணங்கியிருக்கலாம். இருந்தாலும் மூன்றாம் நூற்றாண்டில் சிரியாவில் அநேக மதங்கள் இருந்தன. ஸெனோபியாவின் ராஜ்யத்தில் கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டோரும், யூதர்களும், சூரிய சந்திர வணக்கத்தாரும் இருந்தனர். இந்த வெவ்வேறு வணக்க முறைகளைக் குறித்து அவளது அபிப்பிராயம் என்ன? ஆசிரியர் ஸ்டோன்மென் குறிப்பிடுகிறார்: “தன் ஜனங்களுக்கு ஏற்றதாய் தோன்றும் எந்தப் பழக்கவழக்கத்தையும் ஒரு புத்திசாலியான அரசி புறக்கணிக்க மாட்டாள். . . . தெய்வங்களே . . . பால்மைராவின் பக்கம் ஒருசேர அணிவகுத்து நிற்க அழைக்கப்பட்டதாய் நம்பப்பட்டது.” ஆகவே ஸெனோபியா மத சகிப்புத்தன்மை காட்டினாள் என்பதில் சந்தேகமில்லை.

அக அழகாலும் புற அழகாலும் ஸெனோபியா அநேகரது இதய நாயகியானாள். எல்லாவற்றைக் காட்டிலும் விசேஷமானது, தானியேல் தீர்க்கதரிசனத்தில் முன்னறிவிக்கப்பட்ட ஆட்சியாளரை அவள் பிரதிநிதித்துவம் செய்ததே. இருந்தாலும் அவளது ஆட்சி ஐந்து வருடங்களே நீடித்தது. ரோமப் பேரரசரான ஆரேலியன் பொ.ச. 272-⁠ல் ஸெனோபியாவை தோற்கடித்து, பால்மைராவை பழுதுபார்க்க முடியாதளவு பாழாக்கி, சூறையாடினார். ஸெனோபியாவிற்கோ தயவுகாட்டப்பட்டது. ஒரு ரோம அவை அங்கத்தினரை மணந்த அவள், அதன்பின் அரசியல் வாழ்வுக்கு முழுக்கு போட்டிருக்க வேண்டும்.

நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?

• ஸெனோபியா எவ்வாறு விவரிக்கப்பட்டிருக்கிறாள்?

• ஸெனோபியாவின் சில வீரச்செயல்கள் யாவை?

• மதத்தைப் பற்றி ஸெனோபியாவின் அபிப்பிராயம் என்ன?

[படம்]

ராணுவ வீரர்களிடம் உரையாற்றும் ஸெனோபியா ராணி

[பக்கம் 246-ன் அட்டவணை/படங்கள்]

தானியேல் 11:20-26-ல் உள்ள ராஜாக்களின் பட்டியல்

வடதிசை தென்றிசை

ராஜா ராஜா

தானியேல் 11:20 அகஸ்டஸ்

தானியேல் 11:21-24 டைபீரியஸ்

தானியேல் 11:25, 26 ஆரேலியன் ஸெனோபியா ராணி

முன்னறிவிக்கப்பட்ட ஜெர்மானிய பிரிட்டன்,

ரோம சாம்ராஜ்யத்தின் சாம்ராஜ்யம் அதற்கடுத்து

அழிவினால் ஆங்கிலோ-அமெரிக்க

உருவாகின்றன: உலக வல்லரசு

[படம்]

டைபீரியஸ்

[படம்]

ஆரேலியன்

[படம்]

சார்லிமேனின் சிலை

[படம்]

அகஸ்டஸ்

[படம்]

17-ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் போர்க்கப்பல்

[பக்கம் 230-ன் முழுபடம்]

[பக்கம் 233-ன் படம்]

அகஸ்டஸ்

[பக்கம் 234-ன் படம்]

டைபீரியஸ்

[பக்கம் 235-ன் படம்]

அகஸ்டஸின் ஆணை நிமித்தம் யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்கு சென்றனர்

[பக்கம் 237-ன் படம்]

முன்னறிவித்தபடியே, இயேசு மரணத்தில் ‘முறிக்கப்பட்டார்’

[பக்கம் 245-ன் படங்கள்]

1. சார்லிமேன் 2. முதலாம் நெப்போலியன் 3. முதலாம் வில்ஹெல்ம் 4. ஜெர்மானிய வீரர்கள், முதல் உலகப் போர்