Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அறிமுக வார்த்தைகள்

அறிமுக வார்த்தைகள்

அன்புள்ள வாசகருக்கு:

நீங்கள் கடவுளிடம் நெருக்கத்தை உணருகிறீர்களா? இது முடியவே முடியாத ஒன்று என அநேகர் நினைக்கின்றனர். அவர் யாரிடமும் ஒட்டாமல் ஒதுங்கியிருப்பவர் என யோசித்து அவரிடம் நெருங்க சிலர் அஞ்சுகின்றனர்; வேறு சிலரோ அவரிடம் நெருங்கிச் செல்வதற்கு தங்களுக்கு அருகதையே இல்லையென நினைக்கின்றனர். என்றாலும், “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என பைபிள் நமக்கு அன்பாக அறிவுறுத்துகிறது. (யாக்கோபு 4:8) கடவுள் தம்மை வணங்குபவர்களுக்கு இந்த உறுதியையும் அளிக்கிறார்: “யெகோவாவாகிய நான் உன்னுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன். ‘பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன்’ என்று சொல்கிறேன்.”—ஏசாயா 41:13.

கடவுளோடு இத்தகைய நெருங்கிய உறவை நாம் எப்படி முயன்று பெற முடியும்? நாம் யாரிடம் நட்பை வளர்த்துக்கொண்டாலும், அவரைப் பற்றி அறிகையிலும் அவருக்கே உரிய குணாதிசயங்களை போற்றுகையிலும் மதிக்கையிலும்தான் அவரோடு பிணைப்பு ஏற்படுகிறது. ஆகவே, பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுளுடைய பண்புகளும் வழிகளும் நாம் ஆராய்ந்து அறிந்துகொள்வதற்கு ஏற்ற முக்கிய விஷயங்களாகும். யெகோவா தம்முடைய பண்புகள் ஒவ்வொன்றையும் வெளிக்காட்டும் விதத்தை ஆழ்ந்து சிந்திப்பதும், இயேசு கிறிஸ்து அவற்றை பூரணமாக வெளிக்காட்டிய விதத்தை அறிவதும், அவற்றை நாமும் எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பதை புரிந்துகொள்வதும் கடவுளிடம் நெருங்கிச் செல்ல உதவும். அப்போது, யெகோவாவே இந்த அண்டத்தின் பரிபூரணமான, உரிமையுள்ள பேரரசர் என்பதை உணருவோம். மேலும், நம் அனைவருக்கும் தேவையான தகப்பனும் அவரே; வல்லமையும் நீதியும் ஞானமும் அன்பும் நிறைந்த அவர், உண்மையுள்ள தம்முடைய பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை.

யெகோவா தேவனிடம் அதிகமதிகமாக நெருங்கிச் செல்லவும், ஒருபோதும் முறியாத பிணைப்பை அவருடன் ஏற்படுத்திக் கொள்ளவும் இப்புத்தகம் உங்களுக்கு உதவுவதாக. இவ்வாறு நீங்கள் என்றென்றும் வாழ்ந்து அவரை துதிக்க வழிகாட்டுவதாக.

பிரசுரிப்போர்