Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 4

“யெகோவா . . . மகா வல்லமை உள்ளவர்”

“யெகோவா . . . மகா வல்லமை உள்ளவர்”

1, 2. எலியா தன் வாழ்க்கையில் என்னென்ன அற்புதங்களை பார்த்திருந்தார், ஆனால் ஓரேப் மலையில் என்ன அதியற்புத நிகழ்ச்சிகளை கண்டார்?

 எலியா ஏற்கெனவே பல அற்புதங்களை பார்த்திருந்தார். அவர் தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் தினமும் இருமுறை காகங்கள் உணவு எடுத்து வந்து தந்ததை பார்த்திருந்தார். பானையின் மாவும் கலசத்தின் எண்ணெய்யும் பஞ்சகாலம் முழுவதும் தீர்ந்து போகாமல் இருந்ததை பார்த்திருந்தார். தன் ஜெபத்திற்கு பதிலளிக்கும் விதத்தில் வானத்திலிருந்து அக்கினி இறங்கியதையும் பார்த்திருந்தார். (1 ராஜாக்கள், அதிகாரங்கள் 17, 18) இருந்தாலும், பின்வருவதைப் போன்ற எதையுமே எலியா முன்பு பார்த்ததில்லை.

2 ஓரேப் மலையில் ஒரு கெபியின் வாசலில் குறுகிக்கொண்டு நின்றபடி அவர் தொடர்ச்சியான சில அதியற்புத நிகழ்ச்சிகளை கண்டார். முதலில் காற்று வீசியது. காதைப் பிளக்கும் பெரும் சப்தத்தோடு அக்காற்று அடித்திருக்க வேண்டும், ஏனெனில் அதன் பலத்தால் பர்வதங்களே பிளந்தன, கன்மலைகளும் உடைந்தன. அடுத்ததாக பூமியதிர்ச்சி உண்டாகி, புவியோட்டின் கீழ் அடைப்பட்டிருந்த அளவில்லா சக்தி வெடித்தெழுந்தது. பிறகு அக்கினி உண்டானது. அங்கு ஜூவாலையாக கடந்து சென்ற அக்கினியின் தகிக்கும் வெப்பக் கனலை எலியாவால் உணர முடிந்திருக்கும்.—1 ராஜாக்கள் 19:8-12.

3. எந்தத் தெய்வீக பண்பிற்கான அத்தாட்சியை எலியா கண்டார், அதே பண்பின் அத்தாட்சியை நாம் எங்கே காணலாம்?

3 எலியா கண்ட இந்த வெவ்வேறுபட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு விஷயத்தில் ஒன்றுபட்டிருந்தன; அவை அனைத்தும் யெகோவா தேவனுடைய மகா வல்லமையின் வெளிக்காட்டுகளாக இருந்தன. கடவுளுக்கு இப்பண்பு இருப்பதை புரிந்துகொள்ள நாம் ஓர் அற்புதத்தை காண வேண்டுமென்ற அவசியம் நிச்சயமாகவே இல்லை. அப்பண்பு வெளிப்படையாக தெரிகிறது. யெகோவாவுடைய படைப்புகள் அவரது ‘நித்திய வல்லமைக்கும் கடவுள்தன்மைக்கும்’ அத்தாட்சி அளிப்பதாக பைபிள் சொல்கிறது. (ரோமர் 1:20) கண்ணை குருடாக்கும் அளவுக்கு ஒளிவீசும் மின்னலையும், காதைத் துளைக்கும் அளவுக்கு உறுமும் இடியையும், அருவியாக கொட்டும் பிரமாண்டமான நீர்வீழ்ச்சியையும், நட்சத்திரங்கள் நிறைந்த வெகு விஸ்தாரமான வானத்தையும் பற்றி சிறிது யோசித்து பாருங்கள்! இவற்றில் கடவுளுடைய வல்லமையை நீங்கள் காணவில்லையா? ஆனால், இன்றைய உலகில் வெகு சிலரே கடவுளுடைய வல்லமையை உண்மையில் கண்டுணர்கின்றனர். இன்னும் குறைந்த எண்ணிக்கையினரே அதை சரியாக நோக்குகின்றனர். என்றாலும் இந்தத் தெய்வீக பண்பை புரிந்துகொள்வது, யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல அநேக காரணங்களை அளிக்கிறது. இந்தப் பகுதியில் யெகோவாவின் நிகரற்ற வல்லமையைப் பற்றி விவரமாக படிப்போமாக.

“யெகோவா கடந்துபோனார்”

யெகோவாவின் அடிப்படை பண்பு

4, 5. (அ) யெகோவாவின் பெயர் எப்படி விவரிக்கப்படுகிறது? (ஆ) யெகோவா தமது வல்லமைக்கு அடையாளமாக எருதை குறிப்பிட்டது ஏன் பொருத்தமானது?

4 யெகோவா நிகரற்ற வல்லமை படைத்தவர். “யெகோவாவே, உங்களைப் போல யாருமே இல்லை. நீங்கள் மகத்தானவர்; உங்கள் பெயர் மகத்தானது, மிகுந்த வல்லமை உள்ளது” என எரேமியா 10:6 சொல்கிறது. இங்கே யெகோவாவின் பெயர் மகத்தானது என்றும் மிகுந்த வல்லமை உள்ளது என்றும் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள். “ஆகும்படி செய்கிறவர்” என்பதே அவருடைய பெயரின் அர்த்தம் என்பதையும் ஞாபகம் வையுங்கள். விரும்புகிறதைப் படைப்பதற்கும் எவ்வாறு ஆக விரும்புகிறாரோ அவ்வாறு ஆவதற்கும் யெகோவாவால் எப்படி முடிகிறது? அதற்கு ஒரு காரணம் அவரது வல்லமை. ஆம், செயல்படுவதற்கும் தமது சித்தத்தை நிறைவேற்றுவதற்கும் யெகோவாவிற்கு இருக்கும் திறன் எல்லையற்றது. இந்த வல்லமை அவரது அடிப்படை பண்புகளில் ஒன்றாகும்.

5 யெகோவாவின் வல்லமையை முழுமையாக புரிந்துகொள்ளும் திறன் நமக்கு இல்லாததால் அவர் உதாரணங்களை பயன்படுத்தி உதவியளிக்கிறார். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, தமது வல்லமைக்கு அடையாளமாக எருதை பயன்படுத்துகிறார். (எசேக்கியேல் 1:4-10) அது பொருத்தமான ஒப்புமை, ஏனெனில் வீட்டில் வளர்க்கப்படும் எருதும்கூட மிகப் பெரிய, வல்லமைமிக்க பிராணியாகும். பைபிள் காலங்களில் பலஸ்தீனாவிலிருந்த மக்கள் இதைவிட பலம்பொருந்திய மிருகத்தை எதிர்ப்பட்டது வெகு அரிதே. ஆனால் மிகப் பயங்கரமான அரோக்ஸ் என்ற காட்டு எருதைப் பற்றி அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள்; இந்த இன எருதுகள் இப்போது அழிந்துவிட்டன. (யோபு 39:9-12) இந்த எருதுகள் கிட்டத்தட்ட யானைகளின் அளவுக்கு இருந்ததாக ரோம அரசரான ஜூலியஸ் சீசர் ஒருமுறை குறிப்பிட்டார். அவை “அசுர பலம் படைத்தவை, அசுர வேகம் கொண்டவை” என அவர் எழுதினார். அப்படிப்பட்ட ஒரு மிருகத்திற்கு பக்கத்தில் நீங்கள் எந்தளவு சின்னவர்களாக தெரிவீர்கள், எந்தளவு பலவீனமாகவும் உணருவீர்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!

6. ஏன் யெகோவா மட்டுமே ‘சர்வவல்லமையுள்ளவர்’ என அழைக்கப்படுகிறார்?

6 அதேவிதமாக, வல்லமையின் கடவுளாகிய யெகோவாவோடு ஒப்பிட மனிதன் அற்பமானவன், வல்லமையற்றவன். பலம்படைத்த தேசங்களும்கூட அவரது பார்வையில் தராசில் படிந்த வெறும் தூசிபோலவே இருக்கின்றன. (ஏசாயா 40:15) எந்த ஜீவராசிக்கும் இல்லாத எல்லையற்ற வல்லமை யெகோவாவுக்கு உண்டு; ஏனெனில் அவர் மட்டுமே ‘சர்வவல்லமையுள்ளவர்’ என அழைக்கப்படுகிறார். a (வெளிப்படுத்துதல் 15:3) யெகோவாவிடம் ‘அபாரமான ஆற்றலும் பிரமிக்க வைக்கிற பலமும்’ உள்ளது. (ஏசாயா 40:26) அவர் அபரிமிதமான வல்லமையின் பிறப்பிடம், வல்லமையின் வற்றாத ஊற்றுமூலம். சக்திக்காக அவர் வேறு எந்த ஊற்றுமூலத்தையும் சார்ந்திருப்பதில்லை, ஏனெனில் “பலம் கடவுளுடையது.” (சங்கீதம் 62:11) எனினும் யெகோவா எவ்விதத்தில் தமது வல்லமையை வெளிக்காட்டுகிறார்?

யெகோவா வல்லமையை வெளிக்காட்டும் விதம்

7. யெகோவாவுடைய பரிசுத்த சக்தி என்பது என்ன, பைபிளின் மூலமொழி வார்த்தைகள் என்ன காட்டுகின்றன?

7 பரிசுத்த சக்தி யெகோவாவிடமிருந்து அளவில்லாமல் ஊற்றெடுக்கிறது. கடவுளுடைய செயல் நடப்பிக்கும் ஆற்றலே பரிசுத்த சக்தி. சொல்லப்போனால், ஆதியாகமம் 1:2-ல் (அடிக்குறிப்பு) பைபிள் அதை கடவுளுடைய “செயல் நடப்பிக்கும் ஆற்றல்” என குறிப்பிடுகிறது. “சக்தி” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூல எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள், வேறு சூழமைவுகளில், “காற்று,” “சுவாசம்,” “கொடுங்காற்று” என்றும் மொழிபெயர்க்கப்படலாம். செயல் நடப்பிக்கும் காணக்கூடாத சக்தியையே மூலமொழி வார்த்தைகள் குறிப்பதாக அகராதி ஆசிரியர்கள் கூறுகின்றனர். காற்றைப் போல் கடவுளுடைய சக்தி நம் கண்களுக்கு புலப்படாது, ஆனால் அதன் விளைவுகள் நிஜமானவை, பார்க்க முடிந்தவை.

8. பைபிளில் பரிசுத்த சக்தி அடையாளப்பூர்வமாக எவ்வாறு குறிப்பிடப்படுகிறது, இந்த ஒப்புமைகள் ஏன் பொருத்தமானவை?

8 கடவுளுடைய பரிசுத்த சக்தி எண்ணற்ற விதங்களில் செயல்படுகிறது. யெகோவா தம் மனதிலுள்ள எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும் அதை பயன்படுத்த முடியும். ஆகவே பைபிளில் அது பொருத்தமாகவே கடவுளுடைய ‘விரல்,’ அவரது ‘கைபலம்’ என அடையாளப்பூர்வமாக குறிப்பிடப்படுகிறது. (லூக்கா 11:20, அடிக்குறிப்பு; உபாகமம் 5:15; சங்கீதம் 8:3) ஒரு மனிதன் தன் கையை பயன்படுத்தி, வெவ்வேறு அளவில் பலமும் திறனும் தேவைப்படும் பலதரப்பட்ட வேலைகளை செய்ய முடியும்; அதேபோல், கடவுள் எவ்விதமான தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் தமது சக்தியை பயன்படுத்த முடியும்; மிக நுண்ணிய அணுவை படைப்பதற்கும் சரி, செங்கடலை பிளப்பதற்கும் சரி, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை அந்நிய பாஷைகளில் பேச வைப்பதற்கும் சரி அதையே அவர் பயன்படுத்தினார்.

9. யெகோவா எந்தளவுக்கு ஆளும் அதிகாரத்தை செலுத்துகிறார்?

9 சர்வலோக பேரரசர் என்ற தமது அதிகாரத்தின் மூலமும் யெகோவா வல்லமை செலுத்துகிறார். புத்திக்கூர்மையும் திறமையும் உள்ள லட்சக்கணக்கான பிரஜைகள் உங்கள் கட்டளைக்காக காத்திருப்பதை கற்பனை செய்ய முடிகிறதா? அப்படிப்பட்ட ஆளும் அதிகாரத்தை யெகோவா செலுத்துகிறார். அவருக்கு மனித ஊழியர்கள் இருக்கிறார்கள், வேதவசனங்களில் அவர்கள் பெரும்பாலும் ஒரு படைக்கு ஒப்பிடப்படுகிறார்கள். (சங்கீதம் 68:11; 110:3) ஆனாலும் தேவதூதரோடு ஒப்பிட மனிதன் பலவீனமான சிருஷ்டி. அசீரிய சேனை கடவுளுடைய மக்களை தாக்கியபோது ஒரு தேவதூதன் 1,85,000 வீரர்களை ஒரே இரவில் கொன்றுவிட்டாரே! (2 ராஜாக்கள் 19:35) தேவதூதர்கள் ‘பலம்படைத்தவர்கள்.’—சங்கீதம் 103:19, 20.

10. (அ) சர்வவல்லமையுள்ளவர் ஏன் பரலோகப் படைகளின் யெகோவா என அழைக்கப்படுகிறார்? (ஆ) யெகோவாவின் படைப்புகள் அனைத்திலும் மிகுந்த வல்லமை படைத்தவர் யார்?

10 எத்தனை தேவதூதர்கள் இருக்கிறார்கள்? தீர்க்கதரிசியாகிய தானியேல் ஒரு பரலோக தரிசனத்தில் யெகோவாவின் சிங்காசனத்திற்கு முன்பாக பத்து கோடிக்கும் அதிகமான தேவதூதர்களை கண்டார், ஆனால் படைக்கப்பட்ட அனைத்து தேவதூதர்களையும் அவர் பார்த்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. (தானியேல் 7:10) ஆகவே கோடானு கோடி தேவதூதர்கள் படைக்கப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக கடவுள் பரலோகப் படைகளின் யெகோவா என அழைக்கப்படுகிறார். பலம்படைத்த திரளான தேவதூதர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட படைக்கு தலைவராக இருக்கும் அவரது வல்லமைமிக்க ஸ்தானத்தை இந்தப் பட்டப்பெயர் விவரிக்கிறது. இந்த அனைத்து ஆவி சிருஷ்டிகளையும் தலைமை தாங்கி நடத்த ஒரு சிருஷ்டியை, அதாவது ‘படைப்புகளிலேயே முதல் படைப்பான’ தமது சொந்த அருமை குமாரனை நியமித்திருக்கிறார். (கொலோசெயர் 1:15) தேவதூதர்கள், சேராபீன்கள், கேருபீன்கள் ஆகிய அனைவருக்கும் தலைவராகிய, பிரதான தூதனாகிய இயேசு, யெகோவாவின் படைப்புகள் எவற்றையும்விட மிகுந்த வல்லமை படைத்தவர்.

11, 12. (அ) கடவுளுடைய வார்த்தை எந்த விதங்களில் வல்லமை செலுத்துகிறது? (ஆ) யெகோவாவிற்கு எந்தளவு வல்லமை இருப்பதாக இயேசு கூறினார்?

11 யெகோவா மற்றொரு விதத்திலும் வல்லமையை வெளிக்காட்டுகிறார். எபிரெயர் 4:12 சொல்கிறபடி, “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது.” பைபிளில் பாதுகாக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய வார்த்தையின் அல்லது சக்தியால் ஏவப்பட்ட செய்தியின் வியக்கத்தக்க வல்லமையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அது நம்மை பலப்படுத்த முடியும், நம் விசுவாசத்தை கட்டியெழுப்ப முடியும், பெருத்த மாற்றங்களை செய்ய நமக்கு உதவ முடியும். படுமோசமான ஒழுக்கக்கேட்டில் வாழ்ந்த மக்களைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் உடன் விசுவாசிகளை எச்சரித்தார். அதன்பின், “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள்” என்றார். (1 கொரிந்தியர் 6:9-11) ஆம், “கடவுளுடைய வார்த்தை” அவர்கள்மீது வல்லமை செலுத்தியிருந்தது, தங்களை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு உதவியது.

12 யெகோவாவின் வல்லமை அளவிட முடியாதது என்பதாலும் அவர் வல்லமையை வெளிக்காட்டும் விதங்கள் அவ்வளவு திறம்பட்டவை என்பதாலும் எதுவும் குறுக்கே நிற்க முடியாது. “கடவுளால் எல்லாமே செய்ய முடியும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 19:26) என்னென்ன நோக்கங்களுக்காக யெகோவா தம் வல்லமையை பயன்படுத்துகிறார்?

நோக்கத்தோடு வெளிக்காட்டப்படும் வல்லமை

13, 14. (அ) யெகோவா ஆளுமையில்லாத, வல்லமையின் பிறப்பிடம் மட்டுமே அல்ல என ஏன் சொல்லலாம்? (ஆ) யெகோவா என்ன விதங்களில் தமது வல்லமையை பயன்படுத்துகிறார்?

13 யெகோவாவின் சக்தி எந்த இயற்கை சக்தியைக் காட்டிலும் மிக உயர்ந்தது; யெகோவா ஆளுமை இல்லாத வெறும் சக்தியல்ல, வல்லமையின் பிறப்பிடம் மட்டுமே அல்ல. அவர் தமது வல்லமையின் மீது முழு கட்டுப்பாடு பெற்றிருக்கும் ஆளுமையுள்ள கடவுள். எனினும் தம் வல்லமையை பயன்படுத்த எது அவரை தூண்டுகிறது?

14 நாம் பார்க்கப்போகும் விதமாக, கடவுள் தம் வல்லமையைப் பயன்படுத்தி படைக்கிறார், அழிக்கிறார், பாதுகாக்கிறார், புதுப்பிக்கிறார்—சுருங்க சொன்னால் தம் பரிபூரண நோக்கங்களுக்கு இசைவான எதையும் செய்கிறார். (ஏசாயா 46:10) சில சந்தர்ப்பங்களில் தம் ஆளுமை மற்றும் தராதரங்களின் முக்கியமான அம்சங்களை வெளிப்படுத்த அவர் தமது வல்லமையை பயன்படுத்துகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தம் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு—மேசியானிய அரசாங்கத்தின் மூலம் தமது பரிசுத்த பெயரை பரிசுத்தப்படுத்துவதற்கு—தம் வல்லமையை பயன்படுத்துகிறார். இதன்மூலமாக, தான் ஆட்சி செய்கிற விதமே சிறந்தது என்பதை நிரூபிக்கிறார். இந்த நோக்கத்தை எதுவும் ஒருபோதும் குலைக்க முடியாது.

15. யெகோவா தம் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட என்ன நோக்கத்திற்காக தமது வல்லமையை பயன்படுத்துகிறார், இது எவ்வாறு எலியாவின் விஷயத்தில் மெய்ப்பித்துக் காட்டப்பட்டது?

15 யெகோவா தனிப்பட்ட நபர்களாகிய நமக்கு பயனளிக்கவும் தமது வல்லமையை பயன்படுத்துகிறார். 2 நாளாகமம் 16:9 சொல்வதை கவனியுங்கள்: “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக யெகோவாவுடைய கண்கள் இந்தப் பூமி முழுவதையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.” ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட எலியாவின் அனுபவம் இதற்கு ஓர் உதாரணமாகும். யெகோவா தமது வல்லமையை பிரமிக்கத்தக்க விதத்தில் அவருக்கு வெளிக்காட்டியது ஏன்? பொல்லாத ராணி யேசபேல் எலியாவை கொல்லப்போவதாக கங்கணம் கட்டியிருந்தாள். தீர்க்கதரிசி தன் உயிருக்கு பயந்து தப்பியோடினார். அவர் தனிமையில் தவித்தார், பயந்து நடுங்கினார், உற்சாகமிழந்து துவண்டுபோனார்; அவ்வளவு காலம் பட்ட பாடெல்லாம் வீண் என்பதுபோல் உணர்ந்தார். கலக்கமுற்றிருந்த எலியாவை தேற்றுவதற்காக, யெகோவா தெய்வீக வல்லமையை பற்றி அவருக்கு தத்ரூபமாக நினைவூட்டினார். அந்தக் காற்றும் நிலநடுக்கமும் நெருப்பும், சர்வலோகத்திலேயே மிகுந்த வல்லமை படைத்தவர் எலியாவோடு இருப்பதை காட்டின. சர்வவல்லமையுள்ள கடவுளே அவர் பக்கம் இருக்க, யேசபேலைக் கண்டு அவர் பயப்பட வேண்டிய அவசியமென்ன?—1 ராஜாக்கள் 19:1-12. b

16. யெகோவாவின் மகத்தான வல்லமையை புரிந்துகொள்வது நமக்கு ஏன் ஆறுதல் அளிக்கிறது?

16 யெகோவா எலியாவின் காலத்தில் செய்தது போல் இப்போது அற்புதங்களை நிகழ்த்துவதில்லை என்பது உண்மைதான்; ஆனால் அன்றிருந்த யெகோவா இன்றும் மாறவில்லை. (1 கொரிந்தியர் 13:8) தம்மை நேசிப்பவர்களின் சார்பாக தமது வல்லமையை பயன்படுத்த அவர் இன்றும் ஆர்வமாகவே இருக்கிறார். அவர் உன்னதமான பரலோகத்தில் வாழ்கிறார் என்பது உண்மைதான், ஆனால் அவர் நம்மிலிருந்து வெகு தூரமானவர் அல்ல. அவர் வல்லமை எல்லையற்றது, ஆகவே தூரம் ஒரு இடையூறே அல்ல. மாறாக, “தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்.” (சங்கீதம் 145:18) ஒருமுறை தீர்க்கதரிசியாகிய தானியேல் உதவிக்காக யெகோவாவை அழைத்தபோது, அவர் ஜெபித்து முடிப்பதற்கு முன்னரே ஒரு தேவதூதன் தோன்றினார்! (தானியேல் 9:20-23) தம்மை நேசிப்போருக்கு யெகோவா உதவியளிப்பதையும் பலமளிப்பதையும் எதுவுமே தடுக்க முடியாது.—சங்கீதம் 118:6.

கடவுளுடைய வல்லமை அவரை அணுகத்தகாதவராக ஆக்குகிறதா?

17. யெகோவாவின் வல்லமை நம்மில் எவ்விதமான பயத்தை ஏற்படுத்த வேண்டும், ஆனால் எவ்விதமான பயத்தை ஏற்படுத்தக் கூடாது?

17 கடவுளுடைய வல்லமை அவர்மீது பயத்தை ஏற்படுத்த வேண்டுமா? வேண்டும், வேண்டியதில்லை என்ற இரண்டுமே சரியான பதில்தான். வேண்டும் என சொல்வதற்கு காரணம், முந்திய அதிகாரத்தில் சுருக்கமாக சிந்தித்தபடி கடவுளிடம் தேவபயத்தையும் ஆழ்ந்த பயபக்தியையும் காட்டுவதற்கு அவரது வல்லமை போதிய அடிப்படையை அளிக்கிறது. பைபிள் சொல்கிறபடி அப்படிப்பட்ட பயம் “ஞானத்தைப் பெறுவதற்கான முதல் படி.” (சங்கீதம் 111:10) வேண்டியதில்லை என சொல்வதற்கு காரணம், கடவுளுடைய வல்லமை அவரைக் கண்டு அஞ்சி நடுங்குவதற்கோ அவரை அணுகாமல் விலகியிருப்பதற்கோ எவ்வித அடிப்படையையும் அளிப்பதில்லை என்பதாகும்.

18. (அ) அதிகாரத்தில் உள்ளவர்களை ஏன் அநேகர் நம்புவதில்லை? (ஆ) யெகோவாவின் வல்லமை அவரை முறைகேட்டில் ஈடுபட வைப்பதில்லை என்பது நமக்கு எப்படி தெரியும்?

18 அபூரண மனிதர்கள் பெரும்பாலும் தங்கள் அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்கிறார்கள்; இதை சரித்திரம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதிகாரம் மக்களை ஊழல் செய்ய தூண்டுவதாக தெரிகிறது; அதிகாரம் கூடும்போது சில ஆட்சியாளர்களின் ஊழலும் கூடுவதாக தெரிகிறது. (பிரசங்கி 4:1; 8:9) இந்தக் காரணத்திற்காகத்தான் அநேகர் அதிகாரத்தில் உள்ளவர்களை நம்பாமல் அவர்களிடமிருந்து விலகுகிறார்கள். யெகோவாவிற்கோ முழு அதிகாரம் அல்லது வல்லமை இருக்கிறது. அது அவரை எவ்விதத்திலாவது முறைகேடாக நடக்க வைத்திருக்கிறதா? நிச்சயமாகவே இல்லை! நாம் ஏற்கெனவே பார்த்தபடி அவர் பரிசுத்தராக, முறைகேட்டில் ஈடுபட முடியாதவராக இருக்கிறார். ஊழல் மிகுந்த இந்த உலகிலிருக்கும் அதிகாரமுள்ள அபூரண ஆண்களையும் பெண்களையும் போல் யெகோவா இல்லை. அவர் தம் வல்லமையை ஒருபோதும் துர்ப்பிரயோகம் செய்ததில்லை, இனி ஒருபோதும் செய்யப்போவதும் இல்லை.

19, 20. (அ) யெகோவா தம் வல்லமையை வேறு எந்த பண்புகளுக்கு இசைவாக எப்போதும் வெளிக்காட்டுகிறார், இது ஏன் நம்பிக்கையளிக்கிறது? (ஆ) யெகோவாவின் சுயக்கட்டுப்பாட்டை எவ்வாறு உதாரணத்தோடு விளக்குவீர்கள், அது ஏன் உங்களை கவர்கிறது?

19 யெகோவாவிற்கு இருக்கும் பண்புகளில் ஒன்று மட்டுமே வல்லமை என்பதை ஞாபகம் வையுங்கள். அவரது மற்ற பண்புகளாகிய நீதி, ஞானம், அன்பு ஆகியவற்றை பற்றி நாம் இனி படிக்கப் போகிறோம். ஆனால் யெகோவா ஒரு சமயத்தில் ஒரு பண்பை மட்டுமே கறாராக, இயந்திரத்தனமாக வெளிக்காட்டுவதாக நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, யெகோவா தம் வல்லமையை எப்போதும் தம் நீதிக்கும் ஞானத்திற்கும் அன்பிற்கும் இசைவாகவே வெளிக்காட்டுவதைப் பற்றி இனிவரும் அதிகாரங்களில் நாம் பார்க்கப் போகிறோம். இப்போது கடவுளுடைய மற்றொரு பண்பை எடுத்துக்கொள்ளுங்கள், அதை உலக தலைவர்களிடையே காண்பது வெகு அரிது; அதுதான் சுயக்கட்டுப்பாடு.

20 மாம்ச மலைபோல் தோன்றும் மிகுந்த பலம்படைத்த ஒருவரை பார்ப்பதாக கற்பனை செய்து பாருங்கள்; அவரைக் கண்டவுடன் உங்களை பயம் கவ்விக்கொள்ளுகிறது. என்றாலும் காலப்போக்கில் அவர் மென்மையானவராக தோன்றுவதை கவனிக்கிறீர்கள். மக்களுக்கு, அதுவும் ஆதரவற்ற பலவீனமான மக்களுக்கு உதவிசெய்யவும் பாதுகாப்பு தரவும் தன் பலத்தை பயன்படுத்த அவர் எப்போதும் தயாராகவும் விருப்பமுள்ளவராகவும் இருக்கிறார். அவர் தம் பலத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்துவதில்லை. காரணமில்லாமல் அவர்மீது பழி சுமத்தப்படுகிறது, ஆனாலும் உறுதியாக, அதேசமயத்தில் சாந்தமாக, கண்ணியமாக, அன்பாகக்கூட நடந்துகொள்கிறார். அதேவிதமான மென்மையையும் சுயக்கட்டுப்பாட்டையும் உங்களால் காண்பிக்க முடியுமா என நீங்கள் யோசிக்கிறீர்கள், அதுவும் அந்தளவு பலம் பெற்றிருக்கும்போது! அப்படிப்பட்டவரை அறிந்துகொள்ளும்போது, அவரிடம் கவர்ந்திழுக்கப்பட மாட்டீர்களா? சர்வவல்லமையுள்ள யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல இன்னும் அதிக காரணம் நமக்கு இருக்கிறது. இந்த அதிகாரத்தின் தலைப்பிற்கு அடிப்படையான வாக்கியத்தை முழுமையாக வாசியுங்கள்: “யெகோவா சீக்கிரத்தில் கோபப்படாதவர், மகா வல்லமை உள்ளவர்.” (நாகூம் 1:3) மக்களுக்கு எதிராக, ஏன் பொல்லாதவர்களுக்கு எதிராகக்கூட யெகோவா தம் வல்லமையை அவசரப்பட்டு வெளிக்காட்டுவதில்லை. அவர் சாந்தகுணமுள்ளவர், கனிவானவர். பல சந்தர்ப்பங்களில் கோபமூட்டப்பட்ட போதும் அவர் ‘சீக்கிரத்தில் கோபப்படாமல்’ இருந்திருக்கிறார்.—சங்கீதம் 78:37-41.

21. யெகோவா தம் சித்தத்தை செய்யும்படி ஏன் மக்களை வற்புறுத்துவதில்லை, இது அவரை பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது?

21 யெகோவாவின் சுயக்கட்டுப்பாட்டை வேறொரு கோணத்தில் கவனியுங்கள். உங்களுக்கு எல்லையில்லா அதிகாரம் இருந்தால், மற்றவர்களை உங்கள் வழிக்கு கொண்டு வரவேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படலாம், இல்லையா? யெகோவாவுக்கு சர்வ வல்லமை இருந்தாலும் தம்மை சேவிக்கும்படி மக்களை வற்புறுத்துவதே கிடையாது. அவரை சேவிப்பது மட்டுமே முடிவில்லாத வாழ்வுக்கு வழி என்றாலும் அப்படி சேவிக்கும்படி அவர் நம்மை வற்புறுத்துவது கிடையாது. மாறாக, சுதந்திரத்தை நமக்கு அளிப்பதன் மூலம் தயவோடு நம்மை கண்ணியப்படுத்துகிறார். தவறான தெரிவுகளை குறித்து எச்சரித்து, நல்ல தெரிவுகளால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் சொல்கிறார். ஆனால் தெரிவு செய்வதையோ நம் கையில் விட்டுவிடுகிறார். (உபாகமம் 30:19, 20) வற்புறுத்துதலால் செய்யப்படும் சேவையை அல்லது தமது மகா வல்லமையைக் கண்டு பயந்து செய்யப்படும் சேவையை யெகோவா விரும்புவதில்லை. அன்பினால் தூண்டப்பட்டு சேவை செய்ய மனமுள்ளவர்களையே அவர் தேடுகிறார்.—2 கொரிந்தியர் 9:7.

22, 23. (அ) மற்றவர்களுக்கு அதிகாரமளிப்பதில் யெகோவா சந்தோஷப்படுகிறார் என்பதை எது காட்டுகிறது? (ஆ) அடுத்த அதிகாரத்தில் நாம் என்ன சிந்திப்போம்?

22 நாம் சர்வவல்லமையுள்ளவரை கண்டு அஞ்சி நடுங்கி வாழ வேண்டிய அவசியமில்லாததற்கான கடைசி காரணத்தை பார்க்கலாம். அதிகாரம் படைத்த மனிதர்கள் தங்கள் அதிகாரத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள அஞ்சுகிறார்கள். எனினும் யெகோவா தம் உண்மையுள்ள வணக்கத்தாருக்கு அதிகாரமளிப்பதில் சந்தோஷம் காண்கிறார். அவர் தம் குமாரனுக்கும் மற்றவர்களுக்கும் அதிகாரத்தை அளிக்கிறார். (மத்தேயு 28:18) யெகோவா தம் ஊழியர்களுக்கு பலமளிக்கிறார். பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “யெகோவாவே, நீங்கள் மகத்துவமும் வல்லமையும் அழகும் மாண்பும் கம்பீரமும் உள்ளவர். பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாமே உங்களுக்குத்தான் சொந்தம் . . . உங்கள் கையில் பலமும் மகா வல்லமையும் இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் உங்களால் உயர்த்த முடியும்; யாருக்கு வேண்டுமானாலும் பலம் தர முடியும்.”—1 நாளாகமம் 29:11, 12.

23 ஆம், உங்களுக்கு பலமளிப்பதில் யெகோவா சந்தோஷப்படுவார். அவரை சேவிக்க விரும்புவோருக்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியையும்’ அளிக்கிறார். (2 கொரிந்தியர் 4:7) இவ்வாறு கனிவோடும் உயர்ந்த தராதரங்களின்படியும் தம் வல்லமையை பயன்படுத்தும் மகா சக்தி படைத்த இந்தக் கடவுளிடம் நீங்கள் சுண்டி இழுக்கப்படவில்லையா? அடுத்த அதிகாரத்தில், படைப்பதற்கு யெகோவா தம் வல்லமையை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைக் குறித்து சிந்திப்போம்.

a ‘சர்வவல்லமையுள்ளவர்’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை, “அனைத்தையும் ஆளுபவர்; சர்வ வல்லமையும் பெற்றவர்” என சொல்லர்த்தமாக அர்த்தப்படுத்துகிறது.

b யெகோவா “அந்தக் காற்றில் இருக்கவில்லை . . . நிலநடுக்கத்திலும் இருக்கவில்லை . . . நெருப்பிலும் இருக்கவில்லை” என பைபிள் குறிப்பிடுகிறது. புராணத்தில் வரும் இயற்கை தெய்வங்களை வழிபடுபவர்களைப் போல் யெகோவாவின் ஊழியர்கள் அவரை இயற்கை சக்திகளில் காண்பதில்லை. படைக்கப்பட்ட எதிலும் அடங்க முடியாதளவுக்கு அவர் மிகப் பெரியவராக இருக்கிறார்.—1 ராஜாக்கள் 8:27.