Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 10

வல்லமையை பயன்படுத்துவதில் “கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்”

வல்லமையை பயன்படுத்துவதில் “கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்”

1. என்ன மறைவான கண்ணிக்கு பாவமுள்ள மனிதர்கள் எளிதில் இரையாகிவிடுகிறார்கள்?

 “அதிகாரம் இருக்கும் இடத்திலெல்லாம் ஒரு மறைவான கண்ணியும் நிச்சயம் உண்டு.” 19-ம் நூற்றாண்டை சேர்ந்த கவிஞர் ஒருவரின் இந்த வார்த்தைகள் மறைவான ஓர் ஆபத்திற்கு கவனத்தை திருப்புகின்றன; அதிகார துர்ப்பிரயோகமே அந்த ஆபத்தாகும். பாவமுள்ள மனிதர்கள் இந்தக் கண்ணியில் வெகு எளிதாக சிக்கிக்கொள்கிறார்கள். சரித்திரம் முழுவதும் “மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது.” (பிரசங்கி 8:9) அன்பில்லாமல் அதிகாரம் செலுத்துவது மனிதரின் மாளாத் துயரத்திற்கு வழிநடத்தியிருக்கிறது.

2, 3. (அ) யெகோவா தமது வல்லமையை பயன்படுத்தும் விதம் ஏன் குறிப்பிடத்தக்கது? (ஆ) நம் வல்லமையில் எது அடங்கலாம், நாம் அனைவரும் அப்படிப்பட்ட வல்லமையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

2 இருந்தாலும் எல்லையற்ற அதிகாரம் படைத்த யெகோவா தேவன் ஒருபோதும் தம் வல்லமையை தவறாக பயன்படுத்தாதது குறிப்பிடத்தக்க விஷயமல்லவா? முந்தைய அதிகாரங்களில் நாம் கவனித்த பிரகாரம், அவர் எப்போதும் தம் வல்லமையை—படைக்கும் வல்லமை, அழிக்கும் வல்லமை, காக்கும் வல்லமை, புதுப்பிக்கும் வல்லமை என எந்த வல்லமையையும்—தம் அன்பான நோக்கங்களுக்கு இசைவாகவே பயன்படுத்துகிறார். அவர் தமது வல்லமையை வெளிக்காட்டும் விதத்தை நாம் புரிந்துகொள்கையில், அவரிடம் நெருங்கிச் செல்ல தூண்டப்படுகிறோம். இது, நம் வல்லமையை பயன்படுத்துவதில் ‘கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்ற’ நம்மை உந்துவிக்கும். (எபேசியர் 5:1) ஆனால் அற்ப மனிதனுக்கு என்ன வல்லமை இருக்கிறது?

3 மனிதன் ‘கடவுளுடைய சாயலிலும்’ ரூபத்திலும் படைக்கப்பட்டான் என்பதை நினைவில் வையுங்கள். (ஆதியாகமம் 1:26, 27) ஆகவே நமக்கும் ஓரளவுக்காவது வல்லமை உண்டு. நமது வல்லமையில் பின்வருபவை அடங்கலாம்: செயலாற்றுவதற்கும் காரியங்களை செய்து முடிப்பதற்குமான திறன்; மற்றவர்கள்மீது உள்ள கட்டுப்பாடு அல்லது அதிகாரம்; மற்றவர்கள்மீது, முக்கியமாக நம்மை நேசிப்பவர்கள்மீது செல்வாக்கு செலுத்துவதற்கான திறமை; சரீர பலம் (ஆற்றல்); அல்லது பொருளாதார வளங்கள். “உயிரின் ஊற்று நீங்கள்தான்” என யெகோவாவிடம் சங்கீதக்காரன் சொன்னார். (சங்கீதம் 36:9) நமக்கிருக்கும் எந்த நியாயமான வல்லமைக்கும் கடவுளே நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊற்றாக இருக்கிறார். ஆகவே, அவருக்குப் பிரியமான விதங்களில் அதைப் பயன்படுத்த நாம் விரும்புகிறோம். இதை எவ்வாறு செய்யலாம்?

அன்பே திறவுகோல்

4, 5. (அ) வல்லமையை சரியாக பயன்படுத்துவதற்கான திறவுகோல் என்ன, கடவுளுடைய முன்மாதிரி இதை எப்படி வெளிக்காட்டுகிறது? (ஆ) நம் வல்லமையை சரியாக பயன்படுத்த அன்பு எவ்வாறு உதவும்?

4 வல்லமையை சரியாக பயன்படுத்துவதற்கான திறவுகோல் அன்பே. கடவுளுடைய முன்மாதிரியே இதை வெளிக்காட்டவில்லையா? அதிகாரம் 1-ல் கடவுளுடைய நான்கு முக்கிய பண்புகளான வல்லமை, நீதி, ஞானம், அன்பு ஆகியவற்றை சிந்தித்துப் பார்த்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த நான்கு பண்புகளில் தலையாயது எது? அன்பே. “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என 1 யோவான் 4:8 சொல்கிறது. ஆம், யெகோவா அன்பின் பிரதிபிம்பம்; அவர் செய்யும் அனைத்தின்மீதும் அது செல்வாக்கு செலுத்துகிறது. ஆகவே அவரது வல்லமையின் வெளிக்காட்டு ஒவ்வொன்றும் அன்பினால் தூண்டப்படுகிறது, இறுதியில் அவரை நேசிப்போருக்கு நலனையே விளைவிக்கிறது.

5 நம் வல்லமையை சரியாக பயன்படுத்துவதற்கும் அன்பு உதவும். அன்பு ‘கருணையுள்ளது’ என்றும் “சுயநலமாக நடந்துகொள்ளாது” என்றும் பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 13:4, 5) ஆகவே நம் அதிகாரத்தின்கீழ் இருப்பவர்களை கடுமையாக அல்லது கொடூரமாக நடத்த அன்பு நம்மை அனுமதிக்காது. மாறாக மற்றவர்களை கண்ணியத்தோடு நடத்தவும், நம்முடையதைவிட அவர்களுடைய தேவைகளுக்கும் உணர்ச்சிகளுக்குமே முதலிடம் தரவும் அன்பு தூண்டும்.—பிலிப்பியர் 2:3, 4.

6, 7. (அ) தேவபயம் என்பது என்ன, வல்லமையை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க இந்தக் குணம் நமக்கு எப்படி உதவும்? (ஆ) கடவுளுக்கு பிரியமில்லாதபடி நடக்க பயப்படுவதற்கும் கடவுளை நேசிப்பதற்கும் உள்ள சம்பந்தத்தை உதாரணத்தோடு விளக்குக.

6 வல்லமையை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க உதவும் மற்றொரு குணத்தோடு அன்பு சம்பந்தப்பட்டிருக்கிறது. அதுவே தேவபயமாகும். இந்தக் குணத்தின் முக்கியத்துவம் என்ன? “யெகோவாவுக்குப் பயப்படுகிறவன் கெட்டதைவிட்டு விலகுகிறான்” என நீதிமொழிகள் 16:6 சொல்கிறது. வல்லமையை தவறாக பயன்படுத்துவது, விட்டுவிலக வேண்டிய கெட்ட வழிகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. நம் அதிகாரத்தின் கீழிருப்பவர்களை மோசமாக நடத்தாதவாறு தேவபயம் நம்மை காக்கும். ஏன்? ஒரு காரணம், நாம் அப்படிப்பட்டவர்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பதற்கு கடவுளிடம் கணக்கு கொடுக்க வேண்டுமென அறிந்திருக்கிறோம். (நெகேமியா 5:1-7, 15) ஆனால் தேவபயத்தில் உட்பட்டிருப்பது இது மட்டுமே அல்ல. “பயம்” என்பதற்கான வேர் சொற்கள், கடவுள்மீது காட்டும் ஆழ்ந்த பயபக்தியை பெரும்பாலும் குறிக்கின்றன. இவ்வாறு பைபிள், கடவுள் மீதுள்ள அன்போடு பயத்தை சம்பந்தப்படுத்துகிறது. (உபாகமம் 10:12, 13) இந்த பயபக்தி, கடவுளுக்கு பிரியமில்லாமல் நடந்துவிடுவோமோ என நியாயமாக பயப்படுவதை உட்படுத்துகிறது; விளைவுகளுக்கு அஞ்சுவதால் மட்டுமல்ல, ஆனால் உண்மையிலேயே அவரை நேசிப்பதால் பயப்படுவதைக் குறிக்கிறது.

7 உதாரணத்திற்கு: ஒரு சிறுவனுக்கும் அவன் அப்பாவுக்கும் இடையே உள்ள அருமையான உறவை பற்றி யோசித்துப் பாருங்கள். அப்பா அன்பையும் பாசத்தையும் பொழிந்து தன்மீது அக்கறை காட்டுவதை மகன் உணருகிறான். அதேசமயம் தான் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென அப்பா எதிர்பார்க்கிறார் என்பது மகனுக்கு தெரியும், குறும்பு செய்தால் தண்டிப்பார் என்பதும் தெரியும். அப்பாவைக் கண்டு தேவையில்லாத பயத்தோடு அவன் வாழ்வதில்லை. மாறாக, அவரை நெஞ்சார நேசிக்கிறான். அப்பாவுக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்வதில் அந்த சிறுவனுக்கு வெகு சந்தோஷம். தேவபயத்தை பொருத்ததிலும் இதுவே உண்மை. நம் பரலோக தகப்பனாகிய யெகோவாவை நாம் நேசிப்பதால் அவரை வேதனைப்படுத்தும் எதையும் செய்ய அஞ்சுகிறோம். (ஆதியாகமம் 6:6) மாறாக, அவரது இதயத்தை சந்தோஷப்படுத்த ஏங்குகிறோம். (நீதிமொழிகள் 27:11) அதனால்தான் நம் வல்லமையை சரியாக பயன்படுத்த விரும்புகிறோம். அதை எவ்வாறு செய்யலாம் என சற்று அலசிப் பார்க்கலாம்.

குடும்பத்தில்

8. (அ) குடும்பத்தில் கணவன்மாருக்கு என்ன அதிகாரம் உண்டு, அதை அவர்கள் எப்படி செலுத்த வேண்டும்? (ஆ) கணவன் தன் மனைவியை கனப்படுத்துவதை எப்படி காட்டலாம்?

8 முதலில் குடும்ப வட்டாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ‘கணவன் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்’ என எபேசியர் 5:23 சொல்கிறது. கடவுள் தந்திருக்கும் இந்த அதிகாரத்தை கணவன் எப்படி செலுத்த வேண்டும்? கணவன்மார் தங்கள் மனைவிகளை ‘நன்றாகப் புரிந்துகொள்ள’ வேண்டுமென்றும் அவள் ‘பலவீனமாக இருப்பதால், . . . அவளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்க’ வேண்டுமென்றும் பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 3:7) ‘மதிப்பு’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க பெயர்ச்சொல்லிற்கு, “உயர்வாக நினை, அருமையாக கருது, . . . மரியாதை செலுத்து” என அர்த்தம். அவ்வார்த்தையின் சில வடிவங்கள், ‘அன்பளிப்புகள்’ என்றும் ‘மதிப்புள்ளது’ என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (அப்போஸ்தலர் 28:10; 1 பேதுரு 2:7) மனைவியை கனப்படுத்தும் கணவன் அவளை ஒருபோதும் அடித்து உதைக்க மாட்டார்; அவளை அவமானப்படுத்தி அல்லது கேவலப்படுத்தி, லாயக்கற்றவள்போல் உணரவைக்க மாட்டார். மாறாக அவளது மதிப்பை உணர்ந்து மரியாதையோடு நடத்துவார். சொல்லிலும் செயலிலும்—மற்றவர்கள் முன்பாகவும் சரி அந்தரங்கத்திலும் சரி—அவள் தனக்கு விலையேறப்பெற்றவள் என்பதை காட்டுவார். (நீதிமொழிகள் 31:28) அப்படிப்பட்ட கணவன் தன் மனைவியின் அன்பையும் மரியாதையையும் மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக கடவுளுடைய அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்கிறார்.

கணவன்மாரும் மனைவிமாரும் ஒருவரையொருவர் அன்போடும் மரியாதையோடும் நடத்துவதன் மூலம் தங்கள் அதிகாரத்தை சரியாக பயன்படுத்துகின்றனர்

9. (அ) மனைவிகளுக்கு குடும்பத்தில் என்ன அதிகாரம் உண்டு? (ஆ) மனைவி தன் திறமைகளைப் பயன்படுத்தி கணவனுக்கு ஆதரவளிக்க எது உதவும், அதன் விளைவு என்னவாக இருக்கும்?

9 மனைவிகளுக்கும் குடும்பத்தில் ஓரளவு அதிகாரம் உண்டு. தேவபக்தியுள்ள பெண்கள் சிலர் தலைமைத்துவத்தின் நியமத்தை மீறாமலேயே தங்கள் கணவர்கள் மீது நல்ல செல்வாக்கு செலுத்துவதற்கு அல்லது தவறான முடிவெடுப்பதை தவிர்க்க அவர்களுக்கு உதவுவதற்கு முன்முயற்சி எடுத்ததைப் பற்றி பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 21:9-12; 27:46–28:2) கணவனைவிட மனைவிக்கு அறிவுக்கூர்மை அதிகமாக இருக்கலாம் அல்லது கணவனுக்கு இல்லாத திறமைகள் மனைவிக்கு இருக்கலாம். இருந்தாலும் அவள் கணவனுக்கு “ஆழ்ந்த மரியாதை” காட்ட வேண்டும்; ‘எஜமானுக்கு கட்டுப்பட்டு நடப்பதுபோல், கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க’ வேண்டும். (எபேசியர் 5:22, 33) கடவுளை பிரியப்படுத்த வேண்டுமென்ற நினைவாகவே மனைவி இருக்கும்போது, தன் திறமைகளை பயன்படுத்தி கணவனுக்கு ஆதரவளிப்பது எளிதாக இருக்கும்; அவரை மட்டம்தட்டாமல் இருப்பதற்கு அல்லது அவர்மீது ஆதிக்கம் செலுத்தாமலிருப்பதற்குக்கூட உதவும். இப்படிப்பட்ட “ஞானமுள்ள பெண்” குடும்பத்தைக் கட்டியெழுப்ப தன் கணவனோடு முழுமையாக ஒத்துழைக்கிறாள். இவ்வாறு கடவுளுடன் சமாதானத்தைக் காத்துக்கொள்கிறாள்.—நீதிமொழிகள் 14:1.

10. (அ) பெற்றோருக்கு என்ன அதிகாரத்தை கடவுள் அளித்திருக்கிறார்? (ஆ) “கண்டிப்பு” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன, அது எவ்வாறு அளிக்கப்பட வேண்டும்? (அடிக்குறிப்பையும் காண்க.)

10 பெற்றோருக்கும் கடவுள் அதிகாரம் அளித்திருக்கிறார். “அப்பாக்களே, உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள். அதற்குப் பதிலாக, யெகோவா சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி வளர்த்து வாருங்கள்” என பைபிள் அறிவுறுத்துகிறது. (எபேசியர் 6:4) பைபிளில் “கண்டித்து” என்ற வார்த்தை “வளர்த்தல், பயிற்றுவித்தல், போதித்தல்” ஆகியவற்றை அர்த்தப்படுத்தலாம். பிள்ளைகளுக்கு கண்டிப்பு தேவை; தெள்ளத்தெளிவான அறிவுரைகளோடும் வரம்புகளோடும் கட்டுப்பாடுகளோடும் வளர்கையில் அவர்கள் செழிப்பார்கள். பைபிள் இப்படிப்பட்ட சிட்சையை அல்லது போதனையை, அன்பு என்னும் பண்புடன் இணைத்துப் பேசுகிறது. (நீதிமொழிகள் 13:24) ஆகவே “தண்டனையின் பிரம்பு” உணர்ச்சி ரீதியிலும் சரி உடல் ரீதியிலும் சரி, ஒருபோதும் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது. a (நீதிமொழிகள் 22:15; 29:15) பெற்றோர் கொஞ்சமும் அன்பில்லாமல் கடுமையாக அல்லது கண்டிப்பாக சிட்சை கொடுப்பது தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக இருக்கும், அது பிள்ளைகளின் மனதையும் நொறுக்கிவிடும். (கொலோசெயர் 3:21) மறுபட்சத்தில், சரியான விதத்திலும் சரியான அளவிலும் சிட்சை கொடுக்கப்படும்போது, பெற்றோர் தங்களை நேசிப்பதை பிள்ளைகள் உணர்ந்துகொள்வர்; தாங்கள் நல்லபடியாக வளர்ந்து ஆளாவதில் பெற்றோருக்கு அக்கறை இருப்பதையும் புரிந்துகொள்வர்.

11. பிள்ளைகள் எவ்வாறு தங்கள் வல்லமையை சரியாக பயன்படுத்தலாம்?

11 பிள்ளைகளை பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் எப்படி தங்கள் வல்லமையை சரியாக பயன்படுத்தலாம்? “இளைஞர்களுடைய அழகு அவர்களுடைய பலம்” என நீதிமொழிகள் 20:29 சொல்கிறது. இளைஞர் தங்கள் பலத்தையும் சக்தியையும் பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழி “மகத்தான படைப்பாளரை” சேவிப்பதே என்பது நிச்சயம். (பிரசங்கி 12:1) தங்கள் நடத்தை தங்கள் பெற்றோரின் உணர்ச்சிகளை பாதிக்கலாம் என்பதை இளைஞர்கள் ஞாபகம் வைக்க வேண்டும். (நீதிமொழிகள் 23:24, 25) பிள்ளைகள் தேவபயமுள்ள பெற்றோருக்கு கீழ்ப்படிந்து சரியான பாதையில் நடக்கும்போது பெற்றோரின் இதயத்தை மகிழ்விக்கிறார்கள். (எபேசியர் 6:1) இப்படிப்பட்ட நடத்தை “எஜமானுக்குப் பிரியமானது.”—கொலோசெயர் 3:20.

சபையில்

12, 13. (அ) மூப்பர்கள் சபையில் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை எவ்வாறு கருத வேண்டும்? (ஆ) மூப்பர்கள் ஏன் மந்தையை கனிவோடு நடத்த வேண்டும் என்பதை உதாரணத்தோடு விளக்குக.

12 கிறிஸ்தவ சபையை தலைமைதாங்கி நடத்துவதற்கு யெகோவா கண்காணிகளை அளித்திருக்கிறார். (எபிரெயர் 13:17) இந்தக் கண்காணிகள் கடவுள் தந்திருக்கும் அதிகாரத்தை மந்தையின் நலனுக்காக, அதற்கு தேவையான உதவியளிக்க பயன்படுத்த வேண்டும். மூப்பர்களின் ஸ்தானம், உடன் விசுவாசிகள்மீது ஆதிக்கம் செலுத்த அவர்களுக்கு உரிமை அளிக்கிறதா? இல்லவே இல்லை! சபையில் தாங்கள் வகிக்கும் பங்கை மூப்பர்கள் சமநிலையோடும் பணிவோடும் கருத வேண்டும். (1 பேதுரு 5:2, 3) ‘கடவுளுடைய சபையாகிய அந்த மந்தையை மேய்க்கும்படி’ பைபிள் கண்காணிகளுக்கு சொல்கிறது. “கடவுள் தன்னுடைய சொந்த மகனின் இரத்தத்தால் வாங்கிய சபை அது.” (அப்போஸ்தலர் 20:28) மந்தையிலுள்ள ஒவ்வொருவரையும் கனிவோடு நடத்த வேண்டியதற்கு இதுவே மிக முக்கியமான காரணம்.

13 உதாரணத்திற்கு, உங்கள் நெருங்கிய நண்பர் தான் பொக்கிஷமாக கருதும் ஒன்றை உங்களிடம் ஒப்படைத்து அதை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறார். அப்பொருளை உங்கள் நண்பர் மிகுந்த விலை கொடுத்து வாங்கியிருப்பது உங்களுக்கு தெரியும். அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள மாட்டீர்களா? அதேவிதமாக கடவுள் தாம் பொக்கிஷமாக கருதும் உடைமையாகிய சபையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை மூப்பர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்; இச்சபையின் அங்கத்தினர்கள் செம்மறியாடுகளுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். (யோவான் 21:16, 17) யெகோவாவின் ஆடுகள் அவருக்கு பிரியமானவை; சொல்லப்போனால் அவை அவருக்கு அவ்வளவு பிரியமானவை என்பதால் தமது ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவின் மதிப்புமிக்க இரத்தத்தால் அவற்றை வாங்கியிருக்கிறார். யெகோவா தமது ஆடுகளுக்கு இதைக் காட்டிலும் உயர்ந்த விலையை செலுத்தியிருக்க முடியாது. மனத்தாழ்மையுள்ள மூப்பர்கள் இதை மனதில் வைத்து அதற்கேற்ப யெகோவாவின் ஆடுகளை நடத்துகிறார்கள்.

‘நாவின் அதிகாரம்’

14. நாவுக்கு என்ன வல்லமை உண்டு?

14 “சாவும் வாழ்வும் நாவின் அதிகாரத்தில் இருக்கின்றன” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 18:21) சொல்லப்போனால் நாவு மிகுந்த தீங்கு விளைவிக்கலாம். முன்யோசனையின்றி அல்லது இழிவாக சொல்லப்பட்ட வார்த்தைகள் ஏதேனும் மனதை ஈட்டிபோல் குத்திய அனுபவம் யாருக்குத்தான் இல்லை? ஆனால் குணமாக்கும் வல்லமையும் நாவுக்கு உண்டு. “ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்” என நீதிமொழிகள் 12:18 சொல்கிறது. ஆம், உற்சாகமூட்டும் நலமான வார்த்தைகள் இதயத்திற்கு குணமளிக்கும் இதமான மருந்தை போல் இருக்கும். சில உதாரணங்களை கவனியுங்கள்.

15, 16. மற்றவர்களை உற்சாகப்படுத்த நம் நாவை எவ்விதங்களில் பயன்படுத்தலாம்?

15 “மனச்சோர்வால் வாடுகிறவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள்” என 1 தெசலோனிக்கேயர் 5:14 சொல்கிறது. ஆம், யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களும்கூட சிலசமயங்களில் மனச்சோர்வோடு போராடலாம். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்? யெகோவாவுக்கு அவர்கள் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை உணர்த்தும் விதத்தில் அவர்களை குறிப்பாகவும் மனதாரவும் பாராட்டுங்கள். ‘உள்ளம் உடைந்துபோனவர்கள்’ மீதும் ‘மனம் நொந்துபோனவர்கள்’ மீதும் யெகோவாவுக்கு உண்மையான கரிசனையும் அன்பும் இருப்பதைக் காட்டும் பைபிளின் வல்லமைமிக்க வார்த்தைகளை அவர்களோடு சேர்ந்து வாசியுங்கள். (சங்கீதம் 34:18) மற்றவர்களை தேற்றுவதற்கு நம் நாவின் வல்லமையை பயன்படுத்துகையில், “மனச்சோர்வுற்றோருக்கு ஆறுதல் அளிக்கும்” இரக்கமுள்ள நம் கடவுளை பின்பற்றுவதை நிரூபிக்கிறோம்.—2 கொரிந்தியர் 7:6, நியூ அமெரிக்கன் ஸ்டான்டர்டு பைபிள்.

16 மற்றவர்களுக்கு மிகவும் தேவைப்படும் உற்சாகத்தை அளிப்பதற்கும் நம் நாவின் வல்லமையை பயன்படுத்தலாம். உடன் கிறிஸ்தவர் தன் நேசத்திற்குரிய ஒருவரை மரணத்தில் பறிகொடுத்துவிட்டாரா? கரிசனையை வெளிக்காட்டும் அனுதாப வார்த்தைகள் துக்கத்தில் ஆழ்ந்த இதயத்தை ஆறுதல்படுத்தலாம். வயதான ஒரு சகோதரர் அல்லது சகோதரி எதற்கும் பிரயோஜனமற்றவராக உணருகிறாரா? முன்யோசனையோடு பேசுவது, வயதானவர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்றும் போற்றப்படுகிறார்கள் என்றும் அவருக்கு நம்பிக்கையூட்டலாம். எவராவது தீராத வியாதியால் அவதிப்படுகிறாரா? போன் செய்து அல்லது ஆறுதலான வார்த்தைகளை எழுதி கொடுப்பது அல்லது நேரில் சென்று அன்பாக பேசுவது அவருக்கு அதிக உற்சாகமளிக்கும். “பலப்படுத்துகிற நல்ல” வார்த்தைகளை சொல்ல நம் பேச்சு வல்லமையை பயன்படுத்துகையில் நம் படைப்பாளர் எவ்வளவு சந்தோஷப்படுவார்!—எபேசியர் 4:29.

17. மற்றவர்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் நம் நாவை பயன்படுத்துவதற்கான முக்கிய வழியென்ன, நாம் ஏன் அதைச் செய்ய வேண்டும்?

17 நம் நாவின் வல்லமையை பயன்படுத்துவதற்கு, கடவுளுடைய அரசாங்கத்தின் நல்ல செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதைக் காட்டிலும் முக்கியமான வழி வேறில்லை. “நல்லது செய்ய வேண்டியவர்களுக்கு நீ அதைச் செய்யாமல் இருந்துவிடாதே. அதுவும், உதவி செய்ய சக்தி இருக்கும்போது அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.” என நீதிமொழிகள் 3:27 சொல்கிறது. உயிர்காக்கும் நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் கடமை நமக்கு இருக்கிறது. யெகோவா அவ்வளவு தாராளமாக நமக்கு அருளியிருக்கும் இந்த அவசர செய்தியை நம்மிடமே வைத்துக்கொள்வது சரியாக இருக்காது. (1 கொரிந்தியர் 9:16, 22) ஆனால் எந்தளவுக்கு இவ்வேலையில் நாம் ஈடுபட வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார்?

நற்செய்தியை சொல்வதே நம் வல்லமையை பயன்படுத்துவதற்கான தலைசிறந்த வழி

யெகோவாவை “முழு பலத்தோடு” சேவித்தல்

18. யெகோவா நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்?

18 யெகோவாவின் மீதுள்ள நம் அன்பு, கிறிஸ்தவ ஊழியத்தில் முழுமையாக பங்குகொள்ள நம்மை தூண்டுகிறது. இந்த விஷயத்தில் யெகோவா நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்? வாழ்க்கை நிலைமை எப்படிப்பட்டதாக இருந்தாலும் நம் அனைவராலும் செய்ய முடிந்த ஒன்றையே எதிர்பார்க்கிறார்: “நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதர்களுக்காகச் செய்யாமல், யெகோவாவுக்காக முழு மூச்சோடு செய்யுங்கள்.” (கொலோசெயர் 3:23) பிரதான கட்டளையை இயேசு குறிப்பிட்டபோது, “உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்” என்றார். (மாற்கு 12:30) ஆம், நாம் ஒவ்வொருவரும் முழு மூச்சோடு தம்மை நேசிக்க வேண்டுமென்றும் சேவிக்க வேண்டுமென்றும் யெகோவா எதிர்பார்க்கிறார்.

19, 20. (அ) முழு மூச்சு என்பது இதயத்தையும் மனதையும் பலத்தையும் உட்படுத்துவதாக இருந்தாலும் மாற்கு 12:30 இவற்றை ஏன் தனித்தனியாக குறிப்பிடுகிறது? (ஆ) யெகோவாவை முழு மூச்சோடு சேவிப்பதன் அர்த்தம் என்ன?

19 கடவுளை முழு மூச்சோடு சேவிக்க வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன? முழு மூச்சோடு என்பதை முழூ ஜீவனோடு என்றும் சொல்லலாம். இந்த வார்த்தைகள் முழு நபரையும் குறிக்கிறது; அவரது சரீர மற்றும் மனத் திறன்கள் அனைத்தையும் உட்படுத்துகிறது. அதோடு, இருதயத்தையும் மனதையும் பலத்தையும்கூட உட்படுத்துகிறது. அப்படியிருக்கும்போது, மாற்கு 12:30 இவற்றை ஏன் தனித்தனியாக குறிப்பிடுகிறது? ஓர் உதாரணத்தை கவனியுங்கள். பைபிள் காலங்களில் ஒரு நபர் தன்னையே (தன் ஜீவனையே) அடிமைத்தனத்துக்கு விற்க முடிந்தது. இருந்தாலும், அந்த அடிமை தன் எஜமானுக்கு முழு இதயத்தோடு சேவை செய்யாமல் இருந்திருக்கலாம்; எஜமானின் அக்கறைகளை முன்னேற்றுவிக்க தன் முழு பலத்தை அல்லது மனத் திறன்களை பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். (கொலோசெயர் 3:22) ஆகவேதான் இயேசு மற்ற திறன்களையும் குறிப்பிட்டார்; இவ்வாறு, கடவுளுடைய சேவைக்காக நம்மிடமுள்ள அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கடவுளை முழு மூச்சோடு அல்லது முழு ஜீவனோடு சேவிப்பது என்பது நம்மையே அளிப்பதை, அவரது சேவையில் நம் பலத்தையும் சக்தியையும் முடிந்தளவு முழுமையாக பயன்படுத்துவதை குறிக்கிறது.

20 முழு மூச்சோடு சேவிப்பது என்பது நாம் அனைவரும் ஊழியத்தில் ஒரே அளவு நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டுமென அர்த்தப்படுத்துகிறதா? அது முடியாத காரியம், ஏனெனில் சூழ்நிலைகளும் திறமைகளும் நபருக்கு நபர் வித்தியாசப்படுகின்றன. ஆரோக்கியமும் தெம்பும் உள்ள இளைஞர், முதுமையால் பலம் இழந்திருக்கும் ஒருவரைவிட அதிக நேரத்தை ஊழியத்தில் செலவழிக்க முடியும். குடும்ப உத்தரவாதங்கள் இல்லாத திருமணமாகாத ஒருவர், அப்படிப்பட்ட உத்தரவாதங்களுள்ள ஒருவரைவிட அதிகம் செய்ய முடியும். ஊழியத்தில் அதிகத்தை செய்வதற்கு உகந்த பலமும் சூழ்நிலைகளும் நமக்கு இருந்தால் அதற்காக எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! நிச்சயமாகவே இந்த விஷயத்தில் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து குறைகூறும் மனப்பான்மையை நாம் எப்போதும் தவிர்க்க வேண்டும். (ரோமர் 14:10-12) மாறாக, மற்றவர்களை உற்சாகப்படுத்த நம் பலத்தை பயன்படுத்த வேண்டும்.

21. நம் வல்லமையை பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த, மிக முக்கிய வழி என்ன?

21 யெகோவா தம் வல்லமையை சரியான விதமாக பயன்படுத்துவதில் பரிபூரண மாதிரியை வைத்திருக்கிறார். பாவமுள்ள மனிதர்களாக நம்மால் முடிந்தளவு அவரை பின்பற்ற விரும்புகிறோம். நம் அதிகாரத்தின் கீழிருப்பவர்களை கண்ணியத்தோடு நடத்துவதன் மூலம் நம் வல்லமையை சரியாக பயன்படுத்தலாம். மேலும், யெகோவா நமக்கு நியமித்திருக்கிற பிரசங்க வேலையை முழு மூச்சோடு நிறைவேற்ற விரும்புகிறோம். (ரோமர் 10:13, 14) உங்கள் முழு மூச்சோடு, முடிந்தளவுக்கு சிறந்ததை அளிக்கும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். புரிந்துகொள்ளுதலும் அன்பும் மிக்க இப்படிப்பட்ட கடவுளை சேவிக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும்படி உங்கள் இதயம் தூண்டவில்லையா? உங்கள் வல்லமையை பயன்படுத்துவதற்கு இதைக் காட்டிலும் மேம்பட்ட அல்லது முக்கிய வழி வேறில்லை.

a பைபிள் காலங்களில் “கோல்” என்பதற்கான எபிரெய வார்த்தை, மேய்ப்பர் தன் ஆடுகளை ஓட்டிச் செல்ல பயன்படுத்திய கோலை அல்லது தடியை அர்த்தப்படுத்தியது. (சங்கீதம் 23:4) அதேவிதமாக பெற்றோரின் அதிகாரப் “கோல்” அன்பான வழிகாட்டுதலையே குறிக்கிறது, கடுமையான அல்லது கொடூரமான தண்டனையை அல்ல.