Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 11

“அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை”

“அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை”

1, 2. (அ) யோசேப்பு என்ன கொடிய அநீதிகளை எதிர்ப்பட்டார்? (ஆ) அநீதிகளை யெகோவா எவ்வாறு சரி செய்தார்?

 அநீதியிலும் அநீதி. அந்த அழகிய இளைஞர் ஒரு குற்றமும் செய்யவில்லை, இருந்தாலும் கற்பழிக்க முயன்றதாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அநீதிக்கு ஆளானது இது முதன்முறையும் அல்ல. 17 வயதாக இருக்கும்போது உடன்பிறந்த சகோதரர்களே அவருக்கு துரோகம் செய்தார்கள்; அவரை கொல்லவும் துணிந்தார்கள். பிறகு அந்த இளைஞராகிய யோசேப்பை வேறு நாட்டவருக்கு அடிமையாக விற்றுவிட்டார்கள். அங்கோ, அவரது எஜமானின் மனைவியுடைய தவறான ஆசைக்கு இணங்காததால் அவள் ஆத்திரமடைந்து அவர் மீது பொய்க் குற்றம் சுமத்தினாள். இதனால்தான் யோசேப்பு சிறையில் போடப்பட்டார். யோசேப்புக்காக பரிந்துபேச ஒருவரும் இல்லாததுபோல் தோன்றியது வருத்தத்திற்குரியது.

2 இருந்தாலும் ‘நீதியையும் நியாயத்தையும் நேசிக்கிற’ கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார். (சங்கீதம் 33:5) யெகோவா, அநீதிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து சம்பவங்களை வழிநடத்தினார்; இதனால் யோசேப்பு இறுதியாக விடுதலை செய்யப்பட்டார். அதுமட்டுமல்ல, சிறைச்சாலையில் தள்ளப்பட்ட இதே யோசேப்பு மிகுந்த பொறுப்பும் அளவுகடந்த மதிப்பும் வாய்ந்த உயர் பதவியில் பிற்பாடு அமர்த்தப்பட்டார். (ஆதியாகமம் 40:15; 41:41-43; சங்கீதம் 105:17, 18) முடிவில் யோசேப்பு நிரபராதி என்பது வெளியரங்கமானது; அவர் தன் உயர் பதவியை கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்திற்காக பயன்படுத்தினார்.—ஆதியாகமம் 45:5-8.

யோசேப்பு “சிறைச்சாலையில்” அநியாயமாக துன்பப்பட்டார்

3. நாம் அனைவரும் நியாயமாக நடத்தப்பட விரும்புவதில் ஏன் வியப்பேதும் இல்லை?

3 அப்படிப்பட்ட பதிவு நம் இதயத்தை தொடுகிறது அல்லவா? நம்மில் யார்தான் அநீதியை பார்த்ததில்லை அல்லது அநீதிக்கு ஆளானதில்லை? சொல்லப்போனால் நாம் அனைவருமே நியாயமாகவும் பட்சபாதமில்லாமலும் நடத்தப்பட ஏங்குகிறோம். இதில் வியப்பேதும் இல்லை, ஏனெனில் யெகோவா தமது குணங்களையே நமக்கும் கொடுத்திருக்கிறார்; அவற்றில் முக்கியமான ஒன்றே நீதி. (ஆதியாகமம் 1:27) யெகோவாவை நன்கு அறிந்துகொள்ள, அவரது நீதியுணர்வை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போது அவருடைய அற்புத வழிகளை இன்னுமதிகமாக மதிப்போம், அவரிடம் நெருங்கிச் செல்லவும் தூண்டப்படுவோம்.

நீதி என்றால் என்ன?

4. மனித நோக்குநிலையில் நீதி எவ்வாறு பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படுகிறது?

4 மனித நோக்குநிலையில், சட்டங்களை நடுநிலையோடு கடைப்பிடிப்பதே நீதி என்பதாக பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படுகிறது. “நீதி என்பது சட்டம், கடமை, உரிமை, பொறுப்பு ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்கிறது; சமத்துவத்தை அல்லது செயலை அடிப்படையாக வைத்து அது தீர்ப்புகளை வழங்குகிறது” என நியாயமும் பகுத்தறிவும்—கோட்பாட்டிலும் நடைமுறையிலும் நெறிமுறைகள் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. இருந்தாலும் யெகோவாவின் நீதியோ, வெறுமனே கடமையுணர்ச்சியால் அல்லது பொறுப்புணர்ச்சியால் சட்டதிட்டங்களை இயந்திரத்தனமாக கடைப்பிடிப்பதை குறிப்பதில்லை.

5, 6. (அ) “நீதி,” “நியாயம்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வேர் சொற்களின் அர்த்தம் என்ன? (ஆ) கடவுள் நீதியுள்ளவர் என்பதன் அர்த்தமென்ன?

5 யெகோவாவுடைய நீதியின் முழு பரப்பெல்லையை இன்னும் தெளிவாக புரிந்துகொள்வதற்கு பைபிளில் பயன்படுத்தப்பட்ட வேர் சொற்களைக் குறித்து சிந்திக்க வேண்டும். எபிரெய வேதாகமத்தில் மூன்று முக்கிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. “நீதி” என்று பெரும்பாலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு வார்த்தை “சரியானது” என்றும் மொழிபெயர்க்கப்படலாம். மற்ற இரு வார்த்தைகள் பொதுவாக “நியாயம்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் “நியாயம்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை, “நேர்மையாக அல்லது நீதியாக நடந்துகொள்ளும் பண்பு” என விளக்கப்படுகிறது. அப்படியென்றால் அடிப்படையில் நியாயத்திற்கும் நீதிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என தெரிகிறது.—ஆமோஸ் 5:24.

6 ஆகவே கடவுள் நீதியுள்ளவர் என பைபிள் சொல்கையில், அவர் நேர்மையான, நியாயமான காரியங்களை செய்கிறார் என்றும் எப்போதும் அவ்வாறே பாரபட்சம் காட்டாமல் நடந்துகொள்கிறார் என்றும் அர்த்தப்படுத்துகிறது. (ரோமர் 2:11) அவர் வேறு விதமாக நடந்துகொள்வார் என நினைத்தும் பார்க்க முடியாது. “உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்” என விசுவாசியாகிய எலிகூ கூறினார். (யோபு 34:10) உண்மையில் யெகோவா அநியாயமாக நடந்துகொள்வதற்கு சாத்தியமே இல்லை. ஏன்? இதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன.

7, 8. (அ) யெகோவாவால் அநீதியாக செயல்பட முடியாதது ஏன்? (ஆ) நியாயமாக அல்லது நீதியாக செயல்பட யெகோவாவை தூண்டுவது எது?

7 முதலில், அவர் பரிசுத்தராக இருக்கிறார். அதிகாரம் 3-ல் நாம் பார்த்தபடி யெகோவா எல்லையில்லா தூய்மையும் நேர்மையும் உடையவர். ஆகவே அவரால் அநீதியாக அல்லது அநியாயமாக நடக்கவே முடியாது. இது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை கவனியுங்கள். நம் பரலோக தந்தையின் பரிசுத்தத்தன்மை, அவர் தமது பிள்ளைகளை ஒருபோதும் மோசமாக நடத்தமாட்டார் என நம்புவதற்கு வலுவான காரணத்தை அளிக்கிறது. இயேசுவிற்கு அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தது. இயேசு பூமியில் கழித்த கடைசி இரவின்போது, “பரிசுத்த தகப்பனே, . . . உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைக் [சீஷர்களை] காத்துக்கொள்ளுங்கள்” என ஜெபித்தார். (யோவான் 17:11) வேதாகமத்தில் “பரிசுத்த தகப்பன்” என்ற பதம் யெகோவாவிற்கு மட்டுமே பொருந்துகிறது. இது மிகப் பொருத்தமானது, ஏனெனில் பரிசுத்தத்தைப் பொருத்ததில் எந்த மனித தகப்பனும் அவருக்கு ஈடாக முடியாது. முற்று முழுக்க தூய்மையாகவும் பாவத்திலிருந்து அறவே விலகியும் இருக்கும் தந்தையின் கைகளில் தம் சீஷர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என இயேசு உறுதியாக நம்பினார்.—மத்தேயு 23:9.

8 இரண்டாவதாக, சுயநலமற்ற அன்பு கடவுளுடைய இயல்பின் அடிப்படை அம்சமாக இருக்கிறது. அப்படிப்பட்ட அன்பு, மற்றவர்களை நியாயமாக அல்லது நீதியாக நடத்தும்படி அவரை தூண்டுகிறது. ஆனால் இன வெறி, பாகுபாடு, பட்சபாதம் என பல்வகைப்படும் அநீதியோ, அன்புக்கு நேரெதிரான பேராசையிலிருந்தும் சுயநலத்திலிருந்துமே பெரும்பாலும் பிறக்கிறது. அன்பின் தேவனைப் பற்றி பைபிள் இவ்வாறு உறுதியளிக்கிறது: “யெகோவா நீதியுள்ளவர்; நீதியான செயல்களை விரும்புகிறவர்.” (சங்கீதம் 11:7) “யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன்” என அவரே சொல்கிறார். (ஏசாயா 61:8) நீதியும் நியாயமுமானதை செய்வதில் நம் கடவுள் மகிழ்கிறார் என அறிவது ஆறுதலளிக்கிறது அல்லவா?—எரேமியா 9:24.

இரக்கமும் யெகோவாவின் பரிபூரண நீதியும்

9-11. (அ) யெகோவாவின் நீதிக்கும் அவரது இரக்கத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? (ஆ) யெகோவா பாவிகளான மனிதர்களை நடத்தும் விதத்திலிருந்து அவரது நீதியும் இரக்கமும் எவ்வாறு வெளிப்படுகின்றன?

9 யெகோவாவின் நீதி, அவரது நிகரற்ற மற்ற எல்லா குணங்களையும் போன்றே பரிபூரணமானது, குறைவற்றது. யெகோவாவை புகழ்ந்து மோசே இவ்வாறு எழுதினார்: “அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை. அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை. அவர் நம்பகமான கடவுள், அநியாயமே செய்யாதவர். அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.” (உபாகமம் 32:3, 4) யெகோவாவுடைய நீதியின் வெளிக்காட்டுகள் ஒவ்வொன்றும் குறையற்றவை—அவை ஒருபோதும் மட்டுக்குமீறி கண்டிப்பாக இருப்பதில்லை, மட்டுக்குமீறி கண்டிப்பற்றும் இருப்பதில்லை.

10 யெகோவாவின் நீதிக்கும் அவரது இரக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சங்கீதம் 116:5 சொல்கிறபடி, “யெகோவா கரிசனையுள்ளவர், நீதியுள்ளவர். நம் கடவுள் இரக்கமுள்ளவர்.” ஆம், யெகோவாவிடம் இரக்கமும் உண்டு நீதியும் உண்டு. இந்த இரு குணங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. அவர் இரக்கம் காட்டுவது அவரது நீதியை தணிப்பதில்லை; அந்த இரக்கம் இல்லாவிட்டால் நீதி மிகக் கடுமையாக இருக்கும் என்று அர்த்தமல்ல. மாறாக, அந்த இரு குணங்களையும் அவர் பெரும்பாலும் ஒரே சமயத்தில், ஒரே செயலில்கூட வெளிக்காட்டுகிறார். ஓர் உதாரணத்தை கவனியுங்கள்.

11 மனிதர் அனைவரும் பாவத்தை சுதந்தரித்திருக்கின்றனர், இவ்வாறு பாவத்தின் தண்டனையாகிய மரணத்திற்குப் பாத்திரராக இருக்கின்றனர். (ரோமர் 5:12) ஆனால் பாவிகள் இறப்பதைக் குறித்து யெகோவா மகிழ்வதே இல்லை. அவர் “மன்னிக்கிறவர், கரிசனையும் இரக்கமும் உள்ளவர்.” (நெகேமியா 9:17) இருந்தாலும் அவர் பரிசுத்தராக இருப்பதால் அநீதியை கண்டும் காணாதவராக இருக்க முடியாது. அப்படியென்றால் பாவத்தை சுதந்தரித்திருக்கும் மனிதர்களுக்கு அவர் எவ்வாறு இரக்கம் காட்ட முடியும்? கடவுளுடைய வார்த்தையிலுள்ள மிக மதிப்புமிக்க சத்தியங்களில் ஒன்று இதற்கு விடையளிக்கிறது; அதாவது, மனிதவர்க்கத்தின் இரட்சிப்பிற்கான மீட்புவிலை ஏற்பாட்டின் மூலம் யெகோவாவால் இரக்கம் காட்ட முடியும். இந்த அன்பான ஏற்பாட்டைக் குறித்து 14-ம் அதிகாரத்தில் நாம் அதிகம் கற்றுக்கொள்வோம். அது நீதியிலும் நீதியான செயல், அதேசமயத்தில் இரக்கத்திலும் இரக்கமான செயல். அதன் மூலம், மனந்திரும்பும் பாவிகளுக்கு யெகோவா கனிவான இரக்கத்தை காட்ட முடியும், அதேசமயத்தில் தமது பரிபூரண நீதியின் தராதரங்களையும் காத்துக்கொள்ள முடியும்.—ரோமர் 3:21-26.

யெகோவாவின் நீதி மனதைத் தொடுகிறது

12, 13. (அ) யெகோவாவின் நீதி நம்மை அவரிடம் ஏன் ஈர்க்கிறது? (ஆ) யெகோவாவின் நீதியைக் குறித்து தாவீது என்ன முடிவுக்கு வந்தார், இது எவ்வாறு நமக்கு ஆறுதலளிக்கலாம்?

12 யெகோவாவின் நீதி, நமக்கு வெறுப்பளிக்கும் இரக்கமற்ற குணமல்ல, ஆனால் அவரிடம் நம்மை ஈர்க்கும் பிரியத்திற்குரிய குணம். யெகோவாவின் நீதி அல்லது நியாயத்தின் பரிவிரக்கமிக்க இயல்பை பைபிள் தெளிவாக விவரிக்கிறது. யெகோவா, மனதைத் தொடும் வகையில் தமது நீதியை வெளிக்காட்டும் சில வழிகளை நாம் கவனிக்கலாம்.

13 யெகோவாவின் பரிபூரண நீதி, தமது ஊழியர்களிடம் உண்மையையும் பற்றுறுதியையும் காட்டும்படி அவரை தூண்டுவிக்கிறது. யெகோவாவுடைய நீதியின் இந்த அம்சத்தை சங்கீதக்காரனாகிய தாவீது புரிந்து போற்றினார். சொந்த அனுபவத்திலிருந்தும் கடவுளுடைய வழிகளை படித்து ஆராய்ந்ததிலிருந்தும் தாவீது என்ன முடிவுக்கு வந்தார்? “யெகோவா நியாயத்தை நேசிக்கிறார். அவருக்கு உண்மையாக இருப்பவர்களைக் கைவிட மாட்டார். அவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவார்கள்” என அவர் அறிவித்தார். (சங்கீதம் 37:28) எத்தகைய ஆறுதலளிக்கும் உறுதி! நம் கடவுள் தம்மிடம் விசுவாசமாக இருப்பவர்களை ஒரு நொடிகூட கைவிட மாட்டார். ஆகவே நாம் அவரது பாசத்தையும் கரிசனையான நேசத்தையும் சார்ந்திருக்கலாம். அவரது நீதி இதற்கு உத்தரவாதம் அளிக்கிறது!—நீதிமொழிகள் 2:7, 8.

14. யெகோவா இஸ்ரவேலருக்கு அளித்த திருச்சட்டம், தேவையிலிருப்போர் மீது அவருக்கு அக்கறை இருப்பதை எவ்வாறு காட்டுகிறது?

14 தெய்வீக நீதி, துன்பத்திலிருப்போரின் தேவைகளைக் கருத்தில் எடுத்துக்கொள்கிறது. தேவையிலிருப்போர் மீது யெகோவாவுக்கு அக்கறை இருப்பது, இஸ்ரவேலருக்கு அவர் அளித்த திருச்சட்டத்தில் தெளிவாக தெரிகிறது. உதாரணத்திற்கு, அநாதைகளையும் விதவைகளையும் பராமரிப்பதற்கு திருச்சட்டத்தில் விசேஷ ஏற்பாடுகள் இருந்தன. (உபாகமம் 24:17-21) அப்படிப்பட்ட குடும்பத்தினர் எவ்வளவு சிரமப்பட்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பதை அறிந்து யெகோவா அவர்களுக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்கும் தகப்பனாக ஆனார்; ‘அப்பா இல்லாத பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம் செய்கிறவராக’ ஆனார். (உபாகமம் 10:18; சங்கீதம் 68:5) தற்காப்பற்ற பெண்களையும் பிள்ளைகளையும் ஒடுக்கினால், அப்படிப்பட்டவர்களின் கூக்குரலை நிச்சயம் கேட்கப்போவதாக யெகோவா இஸ்ரவேலரிடம் எச்சரித்தார். “என் கோபம் பற்றியெரியும்” என்றும் குறிப்பிட்டார். (யாத்திராகமம் 22:22-24) கோபம் யெகோவாவின் பிரதான குணங்களில் ஒன்றாக இல்லாவிட்டாலும், வேண்டுமென்றே நடப்பிக்கப்படும் அநீதியான செயல்களைக் கண்டு அவர் நியாயமான கோபம் கொள்கிறார்; அதுவும் உதவியற்ற எளியோருக்கு எதிராக அநீதி இழைக்கப்படுகையில் கொதித்தெழுகிறார்.—சங்கீதம் 103:6.

15, 16. யெகோவாவுடைய பாரபட்சமற்ற தன்மைக்கு எது மிகக் குறிப்பிடத்தக்க அத்தாட்சி அளிக்கிறது?

15 யெகோவா “யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர், லஞ்சம் வாங்காதவர்” என்றும் நமக்கு உறுதியளிக்கிறார். (உபாகமம் 10:17) அதிகாரமும் செல்வாக்கும் மிக்க அநேக மனிதர்களைப் போல் யெகோவா செல்வத்தை அல்லது வெளித்தோற்றத்தைக் கண்டு மசிவதில்லை. அவரிடம் பேதமோ ஒருதலைப்பட்சமோ துளியும் இல்லை. யெகோவாவுடைய பாரபட்சமற்ற தன்மைக்கு மிகக் குறிப்பிடத்தக்க ஓர் அத்தாட்சியை கவனியுங்கள். முடிவில்லாத வாழ்வை பெறும் எதிர்பார்ப்போடு தமது உண்மை வணக்கத்தாராகும் வாய்ப்பை அவர் ஒருசிலருக்கு மட்டுமே கொடுப்பதில்லை. மாறாக, “அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.” (அப்போஸ்தலர் 10:34, 35) சமூக அந்தஸ்து, நிறம், நாடு என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் இந்த அருமையான எதிர்பார்ப்பு அளிக்கப்படுகிறது. மெய்யான நீதிக்கு இதுவல்லவோ தலைசிறந்த அத்தாட்சி!

16 யெகோவாவுடைய பரிபூரண நீதிக்கு மற்றுமொரு அம்சமும் உண்டு; அது, அவரது நீதியுள்ள தராதரங்களை மீறுவோரை அவர் நடத்தும் விதமேயாகும். இந்த அம்சம் நம் கவனத்தையும் மதிப்பையும் பெறுவதற்கு தகுந்தது.

குற்றவாளியை தண்டிக்காமல் விடமாட்டார்

17. இந்த உலகில் நடக்கும் அநீதிகள் ஏன் யெகோவாவின் நீதியை ஒருகாலும் கேள்விக்கிடமாக்குவது இல்லை என விளக்குக.

17 ‘யெகோவா அநியாயத்தை பொறுத்துக்கொள்வதில்லை என்றால், இன்று ஊழல்களும் அநீதியால் துன்பங்களும் சர்வசாதாரணமாக காணப்படுவது ஏன்?’ என சிலர் கேட்கலாம். இந்த அநீதிகள் யெகோவாவின் நீதியை ஒருகாலும் கேள்விக்கிடமாக்குவது இல்லை. இந்தப் பொல்லாத உலகில் நடக்கும் அநீதிகள், ஆதாமிலிருந்து மனிதர் சுதந்தரித்திருக்கும் பாவத்தின் விளைவே. அபூரண மனிதர் பாவமுள்ள வழிகளை தாங்களே தேர்ந்தெடுக்கும் இந்த உலகில் அநீதிகள் பெருகுகின்றன, ஆனால் இந்நிலை இப்படியே தொடராது.—உபாகமம் 32:5.

18, 19. யெகோவா தமது நீதியுள்ள சட்டதிட்டங்களை வேண்டுமென்றே மீறுவோரை என்றென்றும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என எது காட்டுகிறது?

18 யெகோவா, தம்மிடம் உள்ளப்பூர்வமாக நெருங்கி வருவோர்மீது மிகுந்த இரக்கத்தை காண்பிக்கிறபோதிலும், தமது பரிசுத்த பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை என்றென்றைக்கும் பொறுத்துக்கொள்ள மாட்டார். (சங்கீதம் 74:10, 22, 23) நீதியின் தேவனை பரிகாசம் செய்யலாகாது; அவர் கடும் தண்டனையிலிருந்து பாவிகளை பாதுகாக்க மாட்டார், அத்தண்டனை அவர்களுக்கு ஏற்றது. யெகோவா “இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர், . . . ஆனால், குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விடமாட்டார்.” (யாத்திராகமம் 34:6, 7) இதற்கு இசைவாக, தமது நீதியுள்ள சட்டதிட்டங்களை வேண்டுமென்றே மீறுவோருக்கு தண்டனை வழங்குவதை யெகோவா சிலசமயங்களில் அவசியமாக கண்டிருக்கிறார்.

19 உதாரணத்திற்கு, பூர்வ இஸ்ரவேலர்களை கடவுள் நடத்திய விதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடியேறிய பின்பும், அவர்கள் தொடர்ந்து கடவுள்மீது நம்பிக்கை அற்றவர்களாக நடந்துகொண்டார்கள். அவர்களது சீர்கேடான வழிகள் யெகோவாவின் ‘மனதைப் புண்படுத்தியது’ என்றாலும் அவர் அவர்களை உடனடியாக ஒதுக்கித் தள்ளவில்லை. (சங்கீதம் 78:38-41) மாறாக, அவர்கள் வழிகளை விட்டு திரும்பும்படி இரக்கத்தோடு வாய்ப்புகளை அளித்தார். “பொல்லாதவன் சாக வேண்டும் என்று நான் ஆசைப்படுவதே இல்லை. அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி உயிர்வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். அதனால் இஸ்ரவேல் ஜனங்களே, திருந்தி வாழுங்கள். கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி வாழுங்கள். நீங்கள் ஏன் சாக வேண்டும்?” என கெஞ்சினார். (எசேக்கியேல் 33:11) யெகோவா உயிரை மதிப்புள்ளதாக கருதியதால், இஸ்ரவேலர்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பும்படி தம் தீர்க்கதரிசிகளை மறுபடியும் மறுபடியும் அனுப்பினார். ஆனால் ஒரு தொகுதியாக, இதயம் கடினப்பட்டுப்போன அந்த மக்களோ எச்சரிக்கைகளை ஏற்று மனம் திருந்த மறுத்தனர். இறுதியில், யெகோவா தமது பரிசுத்த பெயரின் நிமித்தமும் அது பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்தின் நிமித்தமும் அவர்களை எதிரிகளின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.—நெகேமியா 9:26-30.

20. (அ) யெகோவா இஸ்ரவேலர்களை நடத்திய விதம், அவரைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது? (ஆ) சிங்கம் ஏன் யெகோவாவின் பிரசன்னத்துக்கும் அவருடைய சிம்மாசனத்துக்கும் பொருத்தமான அடையாளமாக இருக்கிறது?

20 யெகோவா இஸ்ரவேலர்களை நடத்திய விதம், அவரைப் பற்றி அதிகத்தை நமக்குக் கற்பிக்கிறது. அனைத்தையும் பார்க்கும் அவரது கண்களிலிருந்து அநீதி தப்புவதில்லை என்றும், பார்க்கும் காரியங்களால் அவர் பெரிதும் பாதிக்கப்படுகிறார் என்றும் நாம் கற்றுக்கொள்கிறோம். (நீதிமொழிகள் 15:3) மேலும், இரக்கம் காட்ட காரணம் இருந்தால் அதைக் காட்ட விரும்புகிறார் என்பதை அறிவது நம்பிக்கையளிக்கிறது. அதுமட்டுமல்ல, அவர் ஒருபோதும் அவசரப்பட்டு நியாயந்தீர்ப்பதில்லை என்றும் கற்றுக்கொள்கிறோம். யெகோவா பொறுமையாக இருப்பதால், அவர் பொல்லாதவர்களை ஒருபோதும் நியாயந்தீர்க்க மாட்டார் என அநேகர் தவறாக நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு நினைப்பது முற்றிலும் தவறு; ஏனெனில் கடவுள் இஸ்ரவேலர்களை நடத்திய விதம், தெய்வீக பொறுமைக்கு ஓர் எல்லையுண்டு என்பதையும் நமக்கு கற்பிக்கிறது. யெகோவா நியாயத்தை உறுதியாக ஆதரிப்பவர். நீதியாக செயல்பட அடிக்கடி தவறும் மனிதர்களைப் போல் அவரில்லை; நியாயத்தின் சார்பாக செயல்படுவதற்கு தேவையான தைரியத்தில் அவர் ஒருபோதும் குறைவுபடுவதில்லை. ஆகவே, தைரியமிக்க நீதிக்கு அடையாளமான சிங்கம், கடவுளுடைய பிரசன்னத்தோடும் சிங்காசனத்தோடும் சம்பந்தப்படுத்தப்படுவது பொருத்தமாக இருக்கிறது. a (எசேக்கியேல் 1:10; வெளிப்படுத்துதல் 4:7) எனவே, அவர் இந்தப் பூமியிலிருந்து அநீதியை ஒழித்துக்கட்டி தமது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம். அவர் நியாயந்தீர்க்கும் விதத்தை இரத்தின சுருக்கமாக குறிப்பிட வேண்டுமென்றால், தேவைப்படுகையில் உறுதியையும் சாத்தியப்படுகையில் இரக்கத்தையும் காட்டுகிறார் என்று சொல்லலாம்.—2 பேதுரு 3:9.

நீதியின் கடவுளிடம் நெருங்குதல்

21. யெகோவாவின் நீதியைக் குறித்து நாம் தியானிக்கையில், அவரை எவ்வாறு கருத வேண்டும், ஏன்?

21 யெகோவா எவ்வாறு நீதியை நடப்பிக்கிறார் என்பதைக் குறித்து தியானிக்கையில், அவரை கண்டிப்புமிக்க ஒரு நியாயாதிபதியாக பாவிக்கக்கூடாது; தவறு செய்பவர்களை தண்டிப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் இறுகிய மனம்படைத்த ஒருவராக கருதக்கூடாது. மாறாக, பிள்ளைகளை மிகச் சிறந்த விதத்தில் நடத்தும் அன்பான, ஆனால் உறுதியான ஒரு தகப்பனாக நாம் அவரை எண்ண வேண்டும். யெகோவா நீதியுள்ள தகப்பனாக, நியாயத்திற்காக உறுதியாக இருக்கும் அதேசமயத்தில், தமது உதவியையும் மன்னிப்பையும் பெற வேண்டிய தேவையில் உள்ள பூமிக்குரிய பிள்ளைகளிடம் கனிவான இரக்கத்தை காட்டுகிறார்.—சங்கீதம் 103:10, 13.

22. யெகோவா தமது நீதியுணர்வால் தூண்டப்பட்டு என்ன வாய்ப்பை நமக்கு அளித்திருக்கிறார், அவர் இவ்விதமாக நம்மை நடத்துவதற்கு காரணம் என்ன?

22 ஆகவே தெய்வீக நீதி என்பது தவறுசெய்பவர்களுக்கு தண்டனை வழங்குவதை மட்டுமே குறிக்காததற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! யெகோவா தமது நீதியுணர்வால் தூண்டப்பட்டு, பூரிப்பளிக்கும் எதிர்காலத்தை பெறும் வாய்ப்பை நமக்கு அளித்திருக்கிறார்; அதாவது “நீதி குடியிருக்கிற” உலகில் பரிபூரணமாக என்றென்றும் வாழும் வாய்ப்பை அளித்திருக்கிறார். (2 பேதுரு 3:13) நம் கடவுள் நம்மை ஏன் இவ்வாறு நடத்துகிறார் தெரியுமா? அவரது நீதி, கடுமையாக தண்டனை அளிப்பதைவிட இரட்சிப்பளிக்க வகை தேடுவதாலேயே. நிச்சயமாக, யெகோவாவுடைய நீதியின் பரப்பெல்லையை முழுமையாக புரிந்துகொள்வது நம்மை அவரிடம் ஈர்க்கிறது! அடுத்துவரும் அதிகாரங்களில், யெகோவா இந்த அருமையான பண்பை எவ்வாறு வெளிக்காட்டுகிறார் என இன்னும் உன்னிப்பாக பார்க்கலாம்.

a விசுவாசமற்ற இஸ்ரவேலர்களை நியாயந்தீர்ப்பது சம்பந்தமாக யெகோவா தம்மை ஒரு சிங்கத்திற்கு ஒப்பிடுவது ஆர்வத்திற்குரிய விஷயம்.—எரேமியா 25:38; ஓசியா 5:14.