Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 16

கடவுளோடு நடக்கையில் ‘நியாயத்தைக் கடைப்பிடியுங்கள்’

கடவுளோடு நடக்கையில் ‘நியாயத்தைக் கடைப்பிடியுங்கள்’

1-3. (அ) நாம் ஏன் யெகோவாவிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்? (ஆ) நம்மை அன்பாக காப்பாற்றியவர் நம்மிடம் எதைக் கேட்கிறார்?

 மூழ்கும் கப்பலில் நீங்கள் சிக்கியிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் நம்பிக்கையெல்லாம் இழக்கும் சமயம் பார்த்து ஒருவர் வந்து உங்களைக் காப்பாற்றி கரைசேர்த்துவிடுகிறார். அந்த நபர் உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றி, “நீங்கள் தப்பித்துவிட்டீர்கள்” என சொல்லும்போது எவ்வளவு நிம்மதியடைவீர்கள்! அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக உணர மாட்டீர்களா? உண்மையில் உங்கள் உயிருக்காக அவருக்கு கடன்பட்டிருப்பீர்கள்.

2 இந்த உதாரணம், யெகோவா நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை சில விதங்களில் எடுத்துக் காட்டுகிறது. நிச்சயமாகவே நாம் அவருக்குக் கடன்பட்டிருக்கிறோம். அவர் நமக்காக மீட்புவிலையை அளித்து, பாவம் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவித்திருக்கிறாரே! அந்த மதிப்புமிக்க பலியில் நாம் விசுவாசம் வைக்கும் வரை நம் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் நம் நித்திய எதிர்காலம் பாதுகாப்பாயிருக்கும் என்றும் நாம் அறிந்து நிம்மதியாக உணருகிறோம். (1 யோவான் 1:7; 4:9) அதிகாரம் 14-ல் நாம் பார்த்தபடி மீட்புவிலை என்பது யெகோவாவின் அன்பு மற்றும் நீதியின் தலைசிறந்த வெளிப்பாடு ஆகும். நம் பங்கில் என்ன செய்ய வேண்டும்?

3 நம்மை அன்போடு காப்பாற்றியவரே நம்மிடமிருந்து எதைக் கேட்கிறார் என்பதை கவனிப்பது பொருத்தமானது. தீர்க்கதரிசியாகிய மீகாவின் மூலம் யெகோவா இப்படி சொல்கிறார்: “மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார். யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்? நியாயத்தைக் கடைப்பிடித்து, உண்மைத்தன்மையை நெஞ்சார நேசித்து, அடக்கத்தோடு உன் கடவுளுடைய வழியில் நடக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்!” (மீகா 6:8) நாம் ‘நியாயத்தைக் கடைப்பிடிக்க’ வேண்டும் என்பது யெகோவா நம்மிடமிருந்து கேட்கும் ஒன்று என்பதை கவனியுங்கள். நாம் இதை எவ்வாறு செய்யலாம்?

‘உண்மையான நீதியை’ நாடுங்கள்

4. யெகோவா தமது நீதியான தராதரங்களின்படி நாம் வாழ வேண்டுமென எதிர்பார்ப்பது நமக்கு எப்படி தெரியும்?

4 சரி எது தவறு எது என்பதன் பேரிலான தமது தராதரங்களின்படி நாம் வாழ வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். அவரது தராதரங்கள் நீதியும் நியாயமுமானவை என்பதால் அவற்றின்படி நாம் நடக்கும்போது நீதியையும் நியாயத்தையும் நாடுகிறோம். “நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்” என ஏசாயா 1:17 சொல்கிறது. கடவுளுடைய வார்த்தை ‘நீதிநெறிகளைத் தேடும்படி’ நம்மை அறிவுறுத்துகிறது. (செப்பனியா 2:3) ‘கடவுளுடைய விருப்பத்தின்படி, உண்மையான நீதிக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளும்படி’ அது நம்மை உற்சாகப்படுத்துகிறது. (எபேசியர் 4:24) உண்மையான நீதி—மெய் நியாயம்—வன்முறைக்கும் அசுத்தத்திற்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் இடமளிப்பதில்லை; ஏனெனில் இவை பரிசுத்தமானதைக் கெடுக்கின்றன.—சங்கீதம் 11:5; எபேசியர் 5:3-5.

5, 6. (அ) யெகோவாவின் தராதரங்களுக்கு இசைவாக வாழ்வது ஏன் பாரமான ஒன்றல்ல? (ஆ) நியாயத்தைத் தேடுவது தொடர்ச்சியான செயல் என்பதை பைபிள் எப்படி காட்டுகிறது?

5 யெகோவாவின் நியாயமான தராதரங்களுக்கு இசைவாக வாழ்வது பாரமான ஒன்றா? இல்லை. யெகோவாவிடம் ஈர்க்கப்படும் இதயம் அவரது தேவைகளை பாரமாக கருதாது. கடவுளையும் அவர் இயல்பையும் நாம் நேசிப்பதால் அவருக்குப் பிரியமான விதத்தில் வாழ விரும்புகிறோம். (1 யோவான் 5:3) யெகோவா “நீதியான செயல்களை விரும்புகிறவர்” என்பதை நினைவுகூருங்கள். (சங்கீதம் 11:7) நாம் உண்மையில் கடவுளுடைய நீதியை அல்லது நியாயத்தை பின்பற்ற வேண்டுமானால், யெகோவா நேசிப்பதை நேசிக்கவும் அவர் வெறுப்பதை வெறுக்கவும் வேண்டும்.—சங்கீதம் 97:10.

6 நியாயத்தைத் தேடுவது பாவமுள்ள மனிதர்களுக்கு சுலபமல்ல. நாம் பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டு புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள வேண்டும். புதிய சுபாவம் திருத்தமான அறிவினால் ‘புதிதாகிக்கொண்டே’ வருகிறது என பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:9, 10) ‘புதிதாகிக்கொண்டே’ என்ற வார்த்தை, புதிய சுபாவத்தை அணிந்துகொள்வது தொடர்ச்சியான ஒன்று என்பதையும் அதற்கு ஊக்கமான முயற்சி தேவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. நாம் சரியானதை செய்ய எவ்வளவுதான் கஷ்டப்பட்டு முயன்றாலும், நம் பாவத்தன்மை சிலசமயங்களில் எண்ணத்தில், வார்த்தையில், அல்லது செயலில் நம்மை இடறச்செய்கிறது.—ரோமர் 7:14-20; யாக்கோபு 3:2.

7. நியாயத்தைத் தேடும் நம் முயற்சிகளில் ஏற்படும் பின்னடைவுகளை நாம் எப்படி கருத வேண்டும்?

7 நியாயத்தைத் தேடும் முயற்சியில் ஏற்படும் பின்னடைவுகளை நாம் எப்படி கருத வேண்டும்? நிச்சயமாகவே பாவத்தின் வினைமையைக் குறைக்க நாம் விரும்பவில்லை. அதேசமயத்தில் நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது; நமக்கிருக்கும் குறைகளால் யெகோவாவை சேவிக்க நமக்கு தகுதியில்லை என நினைக்கக்கூடாது. கிருபையுள்ள நம் கடவுள், உண்மையிலேயே மனந்திரும்புவோர் தமது தயவை மீண்டும் பெறுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். “நீங்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்காக இந்த விஷயங்களை நான் உங்களுக்கு எழுதுகிறேன்” என்ற நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை அப்போஸ்தலன் யோவான் சொன்னார். ஆனால் அதன்பின் இந்த எதார்த்தமான வார்த்தைகளையும் கூறினார்: “ஆனாலும், நம்மில் யாராவது [சுதந்தரிக்கப்பட்ட பாவத்தினால்] ஏதாவது பாவம் செய்துவிட்டால், பரலோகத் தகப்பனோடு இருக்கிற . . . இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக இருப்பார்.” (1 யோவான் 2:1) ஆம், இயேசுவின் மீட்புப் பலியை யெகோவா நமக்கு அளித்திருக்கிறார்; இவ்வாறு, நம் பாவத்தன்மையின் மத்தியிலும் அவரை ஏற்கத்தகுந்த விதத்தில் சேவிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். யெகோவாவை பிரியப்படுத்த நம்மால் முடிந்த சிறந்ததை செய்யும்படி இது நம்மை தூண்டவில்லையா?

நற்செய்தியும் கடவுளின் நீதியும்

8, 9. நற்செய்தி அறிவிக்கப்படுவது யெகோவாவின் நீதியை எவ்வாறு வெளிக்காட்டுகிறது?

8 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிப்பதில் முழுமையாக பங்குபெறுவதன் மூலம் நாம் நீதியை கடைப்பிடிக்கலாம், சொல்லப்போனால் கடவுளின் நீதியை பின்பற்றலாம். யெகோவாவின் நீதிக்கும் நற்செய்திக்கும் உள்ள தொடர்பு என்ன?

9 யெகோவா, இந்தப் பொல்லாத உலகை முதலில் எச்சரித்த பிறகே அதை அழிப்பார். முடிவு காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனத்தில், “எல்லா தேசத்தாருக்கும் நல்ல செய்தி முதலாவது பிரசங்கிக்கப்பட வேண்டும்” என இயேசு கூறினார். (மாற்கு 13:10; மத்தேயு 24:3) “முதலாவது” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது, உலகளாவிய பிரசங்க வேலைக்குப் பிறகு மற்ற சம்பவங்கள் தொடரும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அந்த சம்பவங்களில் ஒன்று மிகுந்த உபத்திரவம்; அப்போது துன்மார்க்கர் அழிக்கப்பட்டு, நீதியுள்ள புதிய உலகிற்கான வழி திறக்கப்படும். (மத்தேயு 24:14, 21, 22) பொல்லாதவர்களை அநியாயமாக நடத்தியதாக யெகோவாவை உண்மையில் யாரும் குற்றப்படுத்த முடியாது. எச்சரிப்பதன் மூலம் அப்படிப்பட்டவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவும் அதன் மூலம் அழிவிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் போதிய வாய்ப்பை அவர் அளிக்கிறார்.—யோனா 3:1-10.

10, 11. நற்செய்தியை பிரசங்கிப்பதில் நாம் பங்குபெறுவது எவ்வாறு கடவுளின் நீதியை பிரதிபலிக்கிறது?

10 நாம் நற்செய்தியைப் பிரசங்கிப்பது எவ்வாறு தெய்வீக நீதியின் வெளிக்காட்டாக இருக்கிறது? முதலாவதாக, மற்றவர்கள் காப்பாற்றப்படுவதற்கு நம்மாலான உதவியை செய்வது நியாயமானதே. மூழ்கும் கப்பலிலிருந்து காப்பாற்றப்படும் உதாரணத்தை மறுபடியும் சிந்தித்துப் பாருங்கள். உயிர்காக்கும் படகில் ஏறியவுடன், இன்னும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்போருக்கு உதவ நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். அதேவிதமாக இந்தப் பொல்லாத உலகின் “தண்ணீர்களில்” தத்தளித்துக் கொண்டிருப்போருக்கு உதவ வேண்டிய கடமை நம்முடையது. நம் செய்தியை அநேகர் புறக்கணிப்பது உண்மைதான். ஆனால் யெகோவா பொறுமையோடு இருக்கும் வரை, ‘மனந்திருந்தி’ காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்பை அவர்களுக்குக் கொடுக்க வேண்டியது நம் பொறுப்பாகும்.—2 பேதுரு 3:9.

11 சந்திக்கும் அனைவரிடமும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மற்றொரு முக்கியமான வழியில் நாம் நீதியைக் காட்டுகிறோம்: நாம் பாரபட்சமின்றி நடந்துகொள்கிறோம். “கடவுள் பாரபட்சம் காட்டாதவர், . . . அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்” என்பதை நினைவுகூருங்கள். (அப்போஸ்தலர் 10:34, 35) நாம் அவரது நீதியைப் பின்பற்ற வேண்டுமானால், மக்களை முன்னதாகவே தவறாக எடைபோடக் கூடாது. மாறாக, இனம், சமூக அந்தஸ்து, பொருளாதார பின்னணி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் நற்செய்தியை பகிர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு நற்செய்தியைக் கேட்டு அதற்கு பிரதிபலிக்கும் வாய்ப்பை செவிகொடுக்கும் அனைவருக்கும் நாம் அளிக்கிறோம்.—ரோமர் 10:11-13.

மற்றவர்களை நடத்தும் விதம்

12, 13. (அ) நாம் ஏன் அவசரப்பட்டு மற்றவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது? (ஆ) “நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்,” “கண்டனம் செய்வதை நிறுத்துங்கள்” என்று இயேசு கூறிய ஆலோசனைகளின் அர்த்தம் என்ன? (அடிக்குறிப்பையும் காண்க.)

12 யெகோவா நம்மை நடத்தும் விதமாக நாம் மற்றவர்களை நடத்துவதன் மூலமும் நீதியை கடைப்பிடிக்கிறோம். மற்றவர்களை குறைகூறி, அவர்கள் உள்நோக்கத்தை சந்தேகித்து, அவர்களை நியாயந்தீர்ப்பது மிக எளிது. ஆனால் யெகோவா நம் உள்நோக்கங்களையும் குறைகளையும் இரக்கமற்ற விதத்தில் கூர்ந்து பார்க்க வேண்டுமென நம்மில் யார்தான் விரும்புவோம்? யெகோவா நம்மை அப்படி நடத்துவதில்லை. “‘யா’வே, நீங்கள் குற்றங்களைக் கவனிக்க ஆரம்பித்தால், யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?” என்றார் சங்கீதக்காரர். (சங்கீதம் 130:3) நீதியும் இரக்கமும் உள்ள கடவுள் நம் தவறுகளையே கவனித்துக்கொண்டிருக்க விரும்பாததற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இல்லையா? (சங்கீதம் 103:8-10) அப்படியென்றால் நாம் மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும்?

13 கடவுளுடைய நீதியில் கலந்திருக்கும் இரக்கத்தன்மையை நாம் புரிந்துகொண்டால், நமக்கு உண்மையிலேயே சம்பந்தமில்லாத காரியங்களில் அல்லது முக்கியத்துவம் இல்லாத காரியங்களில் மற்றவர்களை அவசரப்பட்டு நியாயந்தீர்க்க மாட்டோம். “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்” என இயேசு மலைப்பிரசங்கத்தில் எச்சரித்தார். (மத்தேயு 7:1) “மற்றவர்களைக் கண்டனம் செய்வதை நிறுத்துங்கள், அப்போது நீங்களும் கண்டனம் செய்யப்பட மாட்டீர்கள்” என இயேசு தொடர்ந்து கூறியதாக லூக்காவின் பதிவு காட்டுகிறது. a (லூக்கா 6:37) பாவமுள்ள மனிதர்கள் நியாயந்தீர்க்கும் மனப்போக்கு உள்ளவர்கள் என்று அறிந்திருந்ததை இயேசு காட்டினார். அவருக்கு செவிகொடுத்தவர்களில் எவருக்கேனும் மற்றவர்களை கொடூரமாக நியாயந்தீர்க்கும் பழக்கம் இருந்தால் அதை விட்டொழிக்க வேண்டியிருந்தது.

பாரபட்சமின்றி அனைவரோடும் நற்செய்தியை பகிர்ந்துகொள்ளும்போது நாம் கடவுளின் நீதியை வெளிக்காட்டுகிறோம்

14. என்ன காரணங்களால் நாம் மற்றவர்களை ‘நியாயந்தீர்ப்பதை நிறுத்த’ வேண்டும்?

14 நாம் ஏன் மற்றவர்களை ‘நியாயந்தீர்ப்பதை நிறுத்த’ வேண்டும்? ஒன்று, நம் அதிகாரம் வரம்புக்கு உட்பட்டது. “சட்டத்தைக் கொடுப்பவராகவும் நீதிபதியாகவும் இருப்பவர் ஒருவர்தான்,” அதாவது யெகோவாவே என சீஷனாகிய யாக்கோபு நமக்கு நினைவுபடுத்துகிறார். ஆகவே “மற்றவர்களை நியாயந்தீர்க்க நீங்கள் யார்?” என யாக்கோபு குறிப்பாக கேட்கிறார். (யாக்கோபு 4:12; ரோமர் 14:1-4) அதோடு, பாவத்தன்மையினால் நாம் எளிதில் தவறான முடிவுகளுக்கு வரலாம். தப்பெண்ணம், அநியாயமாக நடத்தப்பட்டுவிட்ட உணர்வு, பொறாமை, சுயநீதி போன்ற அநேக மனப்பான்மைகளும் உள்நோக்கங்களும் சக மனிதர்களை நாம் காணும் விதத்தை உருக்குலைக்கலாம். நமக்கு மற்ற பல வரம்புகளும் உண்டு; இவற்றைக் குறித்து சிந்திப்பது, மற்றவர்களிடம் அவசரப்பட்டு குறைகாணாதபடி நம்மை தடுக்கும். நம்மால் இதயங்களில் உள்ளவற்றை அறிய முடியாது; மற்றவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகள் அனைத்தையும்கூட நம்மால் அறிய முடியாது. அப்படியிருக்க, சக விசுவாசிகளின் உள்நோக்கங்களை தவறென தீர்க்க அல்லது கடவுளின் சேவையில் அவர்கள் எடுக்கும் முயற்சிகளை குறைகூற நாம் யார்? நம் சகோதர சகோதரிகளின் தவறுகளையே பார்த்துக்கொண்டிராமல் யெகோவாவைப் போல் அவர்களது நல்ல குணங்களை காண்பது எவ்வளவு மேலானது!

15. கடவுளுடைய வணக்கத்தாரிடையே எப்படிப்பட்ட பேச்சிற்கும் நடத்தைக்கும் இடமில்லை, ஏன்?

15 நம் குடும்ப அங்கத்தினர்களை நியாயந்தீர்ப்பதை பற்றி என்ன சொல்லலாம்? வருத்தகரமாக இன்றைய உலகில் சமாதானம் நிலவ வேண்டிய இடமாகிய வீட்டில்தான் மிகக் கொடூரமான நியாயத்தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. கொடுமைக்கார கணவர்கள், மனைவிகள், அல்லது பெற்றோர்கள் தங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு சரமாரியான திட்டை அல்லது அடி உதையை “தண்டனையாக” வழங்குவதைக் குறித்து கேள்விப்படுவது இன்று சர்வசாதாரணம். ஆனால் கடவுளுடைய வணக்கத்தாரிடையே தூஷண வார்த்தைகளுக்கும் குத்தலான பேச்சிற்கும் கொடுமைக்கும் இடமே இல்லை. (எபேசியர் 4:29, 31; 5:33; 6:4) ‘நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்’ என்றும் ‘கண்டனம் செய்வதை நிறுத்துங்கள்’ என்றும் இயேசு கொடுத்த அறிவுரை குடும்பத்திற்கும் பொருந்தும். நீதியைக் கடைப்பிடிப்பதில், யெகோவா நம்மை நடத்துவதுபோல் நாம் மற்றவர்களை நடத்துவது உட்பட்டிருக்கிறது என்பதை நினைவுகூருங்கள். நம் கடவுள் நம்மை ஒருபோதும் கொடுமையாக அல்லது கொடூரமாக நடத்துவதில்லை. மாறாக, தம்மை நேசிப்பவர்கள்மீது அவர் “கனிவான பாசத்தைக்” காட்டுகிறார். (யாக்கோபு 5:11) நாம் பின்பற்றுவதற்கு எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி!

“நியாயமாக” சேவை செய்யும் மூப்பர்கள்

16, 17. (அ) மூப்பர்களிடம் யெகோவா எதை எதிர்பார்க்கிறார்? (ஆ) ஒரு பாவி உண்மையான மனந்திரும்புதலை காட்டத் தவறும்போது என்ன செய்ய வேண்டும், ஏன்?

16 நீதியைக் கடைப்பிடிக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு; ஆனால் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த மூப்பர்களுக்கு இதற்கான விசேஷ பொறுப்பு உண்டு. ‘அதிபதிகள்’ அல்லது மூப்பர்களைப் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசன விவரிப்பைக் கவனியுங்கள்: “இதோ, ஒரு ராஜா நீதியாக ஆட்சி செய்வார். அதிபதிகளும் நியாயமாக ஆட்சி செய்வார்கள்.” (ஏசாயா 32:1) ஆம், மூப்பர்கள் நீதிக்கு இசைவாக சேவிக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். அவர்கள் அதை எப்படி செய்யலாம்?

17 ஆவிக்குரிய விதத்தில் தகுதி பெற்ற இந்த ஆண்கள், சபை சுத்தமாக இருப்பது நீதியின்படி அல்லது நியாயத்தின்படி அத்தியாவசியம் என நன்கு அறிந்திருக்கின்றனர். சிலசமயங்களில் மூப்பர்கள் பெரும் குற்றங்களை நியாயந்தீர்க்க வேண்டியதாக இருக்கிறது. அவ்வாறு செய்கையில், கடவுளின் நீதியானது சாத்தியப்படுகையில் இரக்கத்தைக் காட்ட நாடுகிறது என்பதை மனதில் வைக்கின்றனர். இவ்வாறு, மனந்திரும்ப பாவிக்கு உதவ அவர்கள் முயல்கின்றனர். ஆனால் பாவிக்கு உதவ முயற்சிகள் எடுத்தும் அவர் உண்மையான மனந்திரும்புதலை காட்ட மறுத்தால் என்ன செய்வது? முழுமையான நீதிக்கு இசைய, கண்டிப்பான நடவடிக்கை எடுக்கும்படி யெகோவாவின் வார்த்தை கட்டளையிடுகிறது; “அந்தப் பொல்லாத மனிதனை உங்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என அது சொல்கிறது. அப்படியென்றால் அவரை சபையிலிருந்து நீக்க வேண்டும். (1 கொரிந்தியர் 5:11-13; 2 யோவான் 9-11) அப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பது மூப்பர்களுக்கு வருத்தமளிக்கிறது; ஆனால் சபையை ஒழுக்க சம்பந்தமாகவும் ஆன்மீக சம்பந்தமாகவும் சுத்தமாக காப்பதற்கு அது அவசியம் என்பதை அவர்கள் உணருகின்றனர். அதேசமயத்தில், அந்தப் பாவி என்றாவது ஒருநாள் புத்தி தெளிந்து மீண்டும் சபைக்கு திரும்புவார் என அவர்கள் நம்புகின்றனர்.—லூக்கா 15:17, 18.

18. மற்றவர்களுக்கு பைபிள் அடிப்படையிலான அறிவுரையை வழங்கும்போது மூப்பர்கள் எதை நினைவில் வைக்கின்றனர்?

18 நீதிக்கு இசைவாக சேவிப்பது, தேவைப்படுகையில் பைபிள் அடிப்படையிலான ஆலோசனை வழங்குவதையும் உட்படுத்துகிறது. நிச்சயமாகவே மூப்பர்கள் மற்றவர்களிடம் குற்றங்குறைகளை கண்டுபிடிக்க முயல்வதில்லை. கண்டிப்பதற்கு சமயம் பார்த்து காத்திருப்பதும் இல்லை. ஆனால் உடன் விசுவாசி ஒருவர் ‘தவறான பாதையில் தெரியாமல் அடியெடுத்து வைத்துவிடலாம்.’ தெய்வீக நீதியானது கொடூரமானதோ உணர்ச்சிகளற்றதோ இல்லை என்பதை நினைவில் வைப்பது, ‘அப்படிப்பட்டவனைச் சாந்தமாகச் சரிப்படுத்துவதற்கு முயற்சி செய்ய’ மூப்பர்களை தூண்டுவிக்கும். (கலாத்தியர் 6:1) ஆகவே மூப்பர்கள் தவறுசெய்பவரை திட்ட மாட்டார்கள் அல்லது கடுமையான வார்த்தைகளால் புண்படுத்த மாட்டார்கள். மாறாக, அன்போடு கொடுக்கப்படும் புத்திமதி அதைப் பெறுபவரை உற்சாகப்படுத்துகிறது. நேரடியாக கடிந்துகொள்ளும்போதுகூட—ஞானமற்ற போக்கின் விளைவுகளை நேரடியாக எடுத்துச்சொல்லும்போதுகூட—தவறுசெய்த அந்த நபர் யெகோவாவின் மந்தையிலுள்ள ஒரு ஆடு என்பதை மூப்பர்கள் நினைவில் வைக்கின்றனர். b (லூக்கா 15:7) அறிவுரையோ புத்திமதியோ அன்பினால் தூண்டப்பட்டு, அன்போடு கொடுக்கப்படும்போது தவறு செய்தவரை திருத்த அதிக வாய்ப்புண்டு.

19. மூப்பர்கள் என்ன தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது, எதன் அடிப்படையில் அவர்கள் அப்படிப்பட்ட தீர்மானங்களை எடுக்க வேண்டும்?

19 உடன் விசுவாசிகள் சம்பந்தப்பட்ட தீர்மானங்களை மூப்பர்கள் அடிக்கடி எடுக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, சபையிலுள்ள மற்ற சகோதரர்கள் மூப்பர்களாகவோ உதவி ஊழியர்களாகவோ சிபாரிசு செய்யப்படுவதற்கு தகுதி பெற்றிருக்கிறார்களா என்பதை தீர்மானிக்க மூப்பர்கள் அவ்வப்போது ஒன்றுகூடுகிறார்கள். பாரபட்சமின்றி இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மூப்பர்கள் அறிந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நியமிப்புகளுக்கான கடவுளுடைய தராதரங்களின்படியே அவர்கள் தீர்மானமெடுக்கிறார்கள், தங்கள் சொந்த விருப்புவெறுப்புகளுக்கு இடம் கொடுப்பதில்லை. இவ்வாறு அவர்கள், “எந்தவித தப்பெண்ணமோ பாரபட்சமோ இல்லாமல்” இருக்கிறார்கள்.—1 தீமோத்தேயு 5:21.

20, 21. (அ) மூப்பர்கள் என்ன செய்ய முயல்கிறார்கள், ஏன்? (ஆ) ‘மனச்சோர்வால் வாடுகிறவர்களுக்கு’ உதவ மூப்பர்கள் என்ன செய்யலாம்?

20 மூப்பர்கள் மற்ற விதங்களிலும் தெய்வீக நீதியை வெளிக்காட்டுகிறார்கள். மூப்பர்கள் “நியாயமாக” சேவிப்பார்கள் என சொன்ன பிற்பாடு, ஏசாயா இவ்வாறு தொடர்ந்து சொன்னார்: “அவர்கள் ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுங்கும் இடமாக இருப்பார்கள். புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக இருப்பார்கள். தண்ணீரில்லாத தேசத்தில் பாயும் நீரோடைகளாக இருப்பார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் நிழல் தரும் பெரிய கற்பாறையாக இருப்பார்கள்.” (ஏசாயா 32:1, 2) ஆகவே மூப்பர்கள் தங்கள் உடன் வணக்கத்தாருக்கு ஆறுதலையும் புத்துணர்ச்சியையும் அளிக்க முயல்கிறார்கள்.

21 இன்று பல பிரச்சினைகளால் சோர்ந்திருக்கும் அநேகருக்கு உற்சாகம் தேவைப்படுகிறது. மூப்பர்களே, ‘மனச்சோர்வால் வாடுகிறவர்களுக்கு’ உதவ நீங்கள் என்ன செய்யலாம்? (1 தெசலோனிக்கேயர் 5:14) அவர்கள் சொல்வதை அனுதாப உணர்வோடு கேளுங்கள். (யாக்கோபு 1:19) இதயத்திலுள்ள கவலையை தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரோடு அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கலாம். (நீதிமொழிகள் 12:25) அவர்களை யெகோவாவும் மற்ற சகோதர சகோதரிகளும்கூட விரும்புகிறார்கள், மதிக்கிறார்கள், நேசிக்கிறார்கள் என்று உறுதியளியுங்கள். (1 பேதுரு 1:22; 5:6, 7) அதோடு, அவர்களோடும் அவர்களுக்காகவும் நீங்கள் ஜெபம் செய்யலாம். மூப்பர் தங்களுக்காக செய்யும் இதயப்பூர்வமான ஜெபத்தைக் கேட்பது அவர்களுக்கு மிகுந்த ஆறுதலளிக்கலாம். (யாக்கோபு 5:14, 15) சோர்வுற்றிருப்போருக்கு உதவ நீங்கள் எடுக்கும் அன்பான முயற்சிகளை நீதியின் கடவுள் கவனிக்காமல் இருக்கமாட்டார்.

சோர்வுற்றிருப்போரை உற்சாகப்படுத்தும்போது மூப்பர்கள் யெகோவாவின் நீதியை வெளிக்காட்டுகிறார்கள்

22. யெகோவாவின் நீதியை நாம் எந்தெந்த விதங்களில் பின்பற்றலாம், அதனால் என்ன பலன்?

22 யெகோவாவின் நீதியைப் பின்பற்றுவதன் மூலம் நிச்சயமாகவே நாம் அவரிடம் அதிகமதிகமாக நெருங்கி வருகிறோம்! அவரது நீதியான தராதரங்களை காக்கும்போதும், உயிர்காக்கும் நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போதும், மற்றவர்களிடமுள்ள குறைகளைப் பார்க்காமல் நிறைகளைப் பார்க்கும்போதும் நாம் கடவுளின் நீதியை வெளிக்காட்டுகிறோம். மூப்பர்களே, நீங்கள் சபையை சுத்தமாக காத்துக்கொள்ளும்போதும், உற்சாகமளிக்கும் வேதப்பூர்வ ஆலோசனையை அளிக்கும்போதும், பட்சபாதமற்ற தீர்மானங்களை எடுக்கும்போதும், சோர்வுற்றிருப்பவர்களை உற்சாகப்படுத்தும்போதும் தெய்வீக நீதியை வெளிக்காட்டுகிறீர்கள். யெகோவா, தம்மோடு நடக்கும் தம் மக்கள் ‘நியாயத்தைக் கடைப்பிடிக்க’ முடிந்தளவு முயல்வதை பரலோகத்திலிருந்து காண்கையில் எவ்வளவு சந்தோஷப்படுவார்!

a “நியாயந்தீர்க்காதீர்கள்” என்றும் “கண்டனம் செய்யாதீர்கள்” என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பதங்கள், ‘குற்றவாளிகளென்று தீர்க்க ஆரம்பிக்காதீர்கள்,’ ‘கண்டனம் செய்ய ஆரம்பிக்காதீர்கள்’ என்பதைத்தான் அர்த்தப்படுத்தும். ஆனால் மூல மொழியிலோ பைபிள் எழுத்தாளர்கள் ‘நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள்’ என்றும் ‘கண்டனம் செய்வதை நிறுத்துங்கள்’ என்றும் தொடர் நிகழ்காலத்தில் குறிப்பிட்டார்கள். ஆகவே அந்த செயல்கள் அப்போது நடந்துகொண்டு இருந்தன, ஆனால் அவற்றை நிறுத்த வேண்டியிருந்தது.

b மூப்பர்கள் சிலசமயம் ‘கண்டித்துப் பேச, கடுமையாக எச்சரிக்க, அறிவுரை சொல்ல’ வேண்டுமென பைபிள் 2 தீமோத்தேயு 4:2-ல் சொல்கிறது. ‘அறிவுரை சொல்ல’ என்பதற்கான கிரேக்க வார்த்தை (பாராக்காலியா) “உற்சாகப்படுத்த” என அர்த்தப்படுத்தலாம். அதோடு சம்பந்தப்பட்ட இன்னொரு கிரேக்க வார்த்தையாகிய பாராக்ளிடாஸ், சட்ட வழக்கறிஞரை குறிக்கலாம். ஆகவே மூப்பர்கள் கடுமையாக சிட்சிக்கையில்கூட ஆன்மீக உதவி தேவைப்படுவோருக்கு கைகொடுக்க வேண்டியிருக்கிறது.