Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 17

‘ஆ! கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானவை!’

‘ஆ! கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானவை!’

1, 2. ஏழாம் நாளுக்கான யெகோவாவின் நோக்கம் என்ன, இந்நாளின் ஆரம்பத்தில் தெய்வீக ஞானத்திற்கு எவ்வாறு சோதனை வந்தது?

 வீழ்ச்சி! படைப்பின் ஆறாவது நாளின் மணிமகுடமாகிய மனிதவர்க்கம், திடீரென சிறப்பெனும் உச்சியிலிருந்து தாழ்வெனும் பாதாளத்திற்குள் விழுந்தது. யெகோவா, மனிதன் உட்பட “தான் படைத்த எல்லாவற்றையும்” பார்த்து, “மிகவும் நன்றாக இருந்தன” என சொல்லியிருந்தார். (ஆதியாகமம் 1:31) ஆனால் ஏழாம் நாளின் ஆரம்பத்தில் ஆதாமும் ஏவாளும் சாத்தானைப் பின்பற்றி கலகம் செய்ய தெரிவு செய்தனர். அதன் விளைவாக அவர்கள் பாவத்திலும் மரணத்திலும் அகப்பட்டனர்.

2 ஏழாம் நாளுக்கான யெகோவாவின் நோக்கம் எந்த நம்பிக்கையுமின்றி குலைக்கப்பட்டதாக தோன்றியிருக்கலாம். அந்த நாள், முந்தின ஆறு நாட்களைப் போலவே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்க வேண்டியிருந்தது. யெகோவா அதை பரிசுத்தமானதாக அறிவித்திருந்தார்; அந்நாளின் இறுதியில் பூமி முழுவதும் பரதீஸாகி, பரிபூரண மனிதவர்க்க குடும்பத்தால் நிரப்பப்பட்டிருக்கும். (ஆதியாகமம் 1:28; 2:3) ஆனால் நாசகரமான கலகத்திற்குப் பிறகு அது எப்படித்தான் நிறைவேறும்? கடவுள் என்ன செய்வார்? இது யெகோவாவின் ஞானத்திற்கு கடும் சோதனை—உச்சக்கட்ட சோதனை என்றே சொல்லலாம்.

3, 4. (அ) ஏதேனில் நடந்த கலகத்தை யெகோவா கையாண்ட விதம், பயபக்தியும் பிரமிப்பும் ஏற்படுத்தும் அவரது ஞானத்திற்கு ஏன் தலைசிறந்த உதாரணம்? (ஆ) யெகோவாவின் ஞானத்தைக் குறித்து படிக்கையில் என்ன முக்கிய சத்தியத்தை மனதில் வைக்கும்படி மனத்தாழ்மை நம்மை தூண்ட வேண்டும்?

3 யெகோவா உடனடியாக செயல்பட்டார். ஏதேனில் கலகக்காரர்களுக்கு தீர்ப்பு வழங்கினார்; அதேசமயத்தில் அருமையான ஒன்றை—அப்போதுதானே அவர்களால் துவங்கியிருந்த துயரங்களுக்கு நிவாரணமளிப்பதற்கான தம் நோக்கத்தை—பற்றியும் சுருக்கமாக குறிப்பிட்டார். (ஆதியாகமம் 3:15) தொலைநோக்குள்ள யெகோவாவின் நோக்கம் ஏதேன் துவங்கி மனித சரித்திரத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவும் அதற்குப் பின் பற்பல ஆண்டுகளாகவும் நீடிக்கிறது. அது அவ்வளவு எளிமையாகவும், அதேசமயத்தில் அவ்வளவு கருத்தாழமிக்கதாகவும் இருப்பதால், ஒரு பைபிள் வாசகர் அதை படிக்கவும் ஆழ்ந்து தியானிக்கவும் தன் வாழ்நாள் முழுவதையும் பயன்தரும் விதத்தில் செலவிடலாம். மேலும், யெகோவாவின் நோக்கம் நிறைவேறப்போவது உறுதியிலும் உறுதி. அது எல்லா துன்மார்க்கத்திற்கும் பாவத்திற்கும் மரணத்திற்கும் முடிவு கட்டும். அது விசுவாசமுள்ள மனிதவர்க்கத்தை பரிபூரண நிலைக்கு உயர்த்தும். இவை அனைத்தும் ஏழாம் நாளின் முடிவிற்கு முன்பு நிகழும்; ஆகவே என்ன நடந்தாலும்சரி, இந்தப் பூமிக்கும் மனிதவர்க்கத்திற்குமான நோக்கத்தை யெகோவா தம் கால அட்டவணைப்படியே நிறைவேற்றி முடிப்பார்!

4 அப்படிப்பட்ட ஞானம் பயபக்தியையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது அல்லவா? ‘ஆ! கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானவை!’ என வியந்துரைக்கும்படி அப்போஸ்தலன் பவுல் தூண்டப்பட்டார். (ரோமர் 11:33) இந்தத் தெய்வீக பண்பின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி நாம் சிந்திக்கையில், ஒரு முக்கிய சத்தியத்தை மனதில் வைக்கும்படி மனத்தாழ்மை நம்மை தூண்ட வேண்டும்; அதாவது நாம் எவ்வளவு முயன்றாலும் யெகோவாவின் அளவிட முடியாத ஞானத்தின் ஒரு துளியை மட்டுமே அறிய முடியும் என்பதை மனதில் வைக்க வேண்டும். (யோபு 26:14) முதலில், பிரமிக்க வைக்கும் இந்தப் பண்பின் அர்த்தத்தைப் பார்க்கலாம்.

தெய்வீக ஞானம் என்பது என்ன?

5, 6. அறிவுக்கும் ஞானத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன, யெகோவாவின் அறிவு எவ்வளவு பரந்தது?

5 ஞானமும் அறிவும் வேறு வேறு. கம்ப்யூட்டர்களால் எக்கச்சக்கமான அறிவுப்பூர்வ தகவல்களை சேமித்து வைக்க முடியும், ஆனால் அவற்றிற்கு ஞானம் உண்டு என சொல்வது அபத்தமானது. இருந்தாலும் அறிவுக்கும் ஞானத்திற்கும் சம்பந்தமுண்டு. (நீதிமொழிகள் 10:14) உதாரணத்திற்கு, ஏதோவொரு தீராத உடல்நல பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவது சம்பந்தமாக ஞானமான ஆலோசனை தேவைப்பட்டால் மருத்துவத்தைப் பற்றி அதிகம் தெரியாத அல்லது ஒன்றுமே தெரியாத ஒருவரை அணுகுவீர்களா? நிச்சயம் அணுக மாட்டீர்கள்! ஆகவே உண்மையான ஞானத்திற்கு திருத்தமான அறிவு அவசியம்.

6 யெகோவா அபரிமிதமான அறிவின் களஞ்சியம். ‘என்றென்றுமுள்ள ராஜாவாக’ அவர் மட்டுமே என்றென்றும் வாழ்ந்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 15:3) அந்த எண்ணற்ற ஆண்டுகளாக அவர் சகலத்தையும் அறிந்திருக்கிறார். “எந்தப் படைப்பும் அவருடைய பார்வைக்கு மறைவாக இல்லை; எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. அவருக்குத்தான் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்” என பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 4:13; நீதிமொழிகள் 15:3) படைப்பாளராக, தாம் படைத்திருப்பவற்றைக் குறித்து யெகோவா முழுமையாக அறிந்திருக்கிறார்; ஆரம்பத்திலிருந்தே மனித நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்திருக்கிறார். மனித இதயங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்கிறார், அவற்றில் ஒன்றையும் கவனியாது விட்டுவிடுவதில்லை. (1 நாளாகமம் 28:9) தெரிவு செய்யும் சுதந்திரத்தோடு நம்மை அவர் படைத்திருப்பதால், நாம் வாழ்க்கையில் ஞானமுள்ள தீர்மானங்கள் எடுப்பதைப் பார்த்து மகிழ்கிறார். ‘ஜெபத்தைக் கேட்கிறவராக’ எண்ணற்ற ஜெபங்களை ஒரேசமயத்தில் கேட்கிறார்! (சங்கீதம் 65:2) யெகோவாவிற்கு பரிபூரண ஞாபக சக்தி இருப்பதில் சந்தேகமே இல்லை.

7, 8. யெகோவா எவ்வாறு புரிந்துகொள்ளுதலையும் பகுத்துணர்வையும் ஞானத்தையும் வெளிக்காட்டுகிறார்?

7 யெகோவா அறிவை மட்டுமே பெற்றிருக்கவில்லை. உண்மைகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன என்றும் அவர் பார்க்கிறார்; எண்ணற்ற நுட்பவிவரங்களைக் கொண்ட முழு காட்சியையும் அவர் பகுத்துணருகிறார். நன்மையையும் தீமையையும், முக்கியமானதையும் முக்கியமற்றதையும் வேறுபடுத்திப் பார்த்து மதிப்பிடுகிறார், நியாயந்தீர்க்கிறார். அதுமட்டுமின்றி, மேலோட்டமாக பார்க்காமல் இதயத்தின் ஆழத்தையே ஆராய்ந்து பார்க்கிறார். (1 சாமுவேல் 16:7) ஆகவே யெகோவாவிற்கு புரிந்துகொள்ளுதலும் பகுத்துணர்வும் உண்டு; இவை அறிவைவிட மேன்மையான குணங்கள். ஆனால் ஞானமோ இவை அனைத்தையும் மிஞ்சிவிடுகிறது.

8 ஞானமானது, அறிவையும் பகுத்துணர்வையும் புரிந்துகொள்ளுதலையும் உபயோகித்து விரும்புகிற பலனை பெறுவதைக் குறிக்கிறது. சொல்லப்போனால், “ஞானம்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பைபிள் வேர் சொற்கள், “திறம்பட செயல்படுதல்,” அல்லது “நடைமுறை ஞானம்” என சொல்லர்த்தமாக அர்த்தப்படுத்துகின்றன. ஆகவே யெகோவாவின் ஞானம் வெறும் கோட்பாட்டளவிலானது அல்ல. அது நடைமுறையானது, வெற்றியும் பெறுகிறது. யெகோவா எப்போதுமே தமது பேரளவான அறிவையும் ஆழமான புரிந்துகொள்ளுதலையும் பயன்படுத்தி மிகச் சிறந்த தீர்மானங்களை எடுக்கிறார்; பிறகு தலைசிறந்த விதத்தில் அவற்றை செயல்படுத்துகிறார். இதுவே மெய் ஞானம்! “ஒருவர் செய்கிற நீதியான செயல்கள் அவர் ஞானமுள்ளவர் என்பதை நிரூபிக்கும்” என்ற இயேசுவின் வார்த்தைகளிலுள்ள சத்தியத்தை யெகோவா மெய்ப்பித்துக் காட்டுகிறார். (மத்தேயு 11:19) பிரபஞ்சமெங்கும் உள்ள யெகோவாவின் கிரியைகள் அவரது ஞானத்திற்கு வலுவான சாட்சி பகருகின்றன.

தெய்வீக ஞானத்தின் அத்தாட்சிகள்

9, 10. (அ) யெகோவாவிற்கு எவ்விதமான ஞானம் உண்டு, அதை எவ்வாறு வெளிக்காட்டியிருக்கிறார்? (ஆ) செல் எவ்வாறு யெகோவாவின் ஞானத்தை பறைசாற்றுகிறது?

9 நன்கு வேலை செய்கிற அழகிய பொருட்களை உண்டாக்கும் கலைஞனின் படைப்பாற்றலைக் கண்டு நீங்கள் அசந்துபோனதுண்டா? இந்த வகையான ஞானம் மனங்கவரத்தக்கது. (யாத்திராகமம் 31:1-3, 5) யெகோவாதாமே அப்படிப்பட்ட ஞானத்தின் பிறப்பிடம், ஞானத்தின் பெருங்களஞ்சியம். தாவீது ராஜா அவரைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “பிரமிக்க வைக்கும் விதத்தில் என்னை அற்புதமாகப் படைத்திருக்கிறீர்கள்! அதனால் உங்களைப் புகழ்கிறேன். உங்கள் செயல்கள் எல்லாமே அற்புதமானவை. அது எனக்கு மிக நன்றாகத் தெரியும்.” (சங்கீதம் 139:14) சொல்லப்போனால், நாம் மனித உடலைப் பற்றி எவ்வளவு அதிகமாக கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு அதிகமாக யெகோவாவின் ஞானத்தைக் குறித்து பிரமித்துப் போகிறோம்.

10 உதாரணத்திற்கு: நீங்கள் ஒரே உயிரணுவாக தோன்றினீர்கள். தாயின் கரு அணுவும் தகப்பனின் விந்துவும் இணைந்து ஒரு செல்லாக உருவானீர்கள். பின்பு செல் பிரிவுற ஆரம்பித்தது. இறுதியில் சுமார் ஒரு கோடி கோடி செல்களுடன் நீங்கள் உருவானீர்கள். இந்த செல்கள் மிக நுணுக்கமானவை. சராசரி அளவுள்ள சுமார் 10,000 செல்கள் ஒரே குண்டூசித்தலையில் அடங்கிவிடும். இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் மலைக்க வைக்கும் அளவுக்கு சிக்கலான சிருஷ்டிப்பு ஆகும். மனிதன் உண்டாக்கியிருக்கும் எந்த இயந்திரத்தையும் தொழிற்சாலையையும்விட செல் அதிக சிக்கலானது. செல் என்பது மதிலுள்ள ஒரு நகரத்தைப் போன்றது என விஞ்ஞானிகள் சொல்கின்றனர்; கட்டுப்பாடுள்ள நுழையும் வழிகள் மற்றும் வெளியேறும் வழிகள், போக்குவரத்து அமைப்பு, தகவல்தொடர்பு வலைப்பின்னல், மின்னாற்றல் நிலையங்கள், தொழிற்சாலைகள், கழிவை அப்புறப்படுத்தி மறுசுழற்சி செய்யும் வசதிகள், தற்காப்பு முறைகள் ஆகியவை உள்ளன; நியூக்ளியஸில் ஒருவித மத்திய அரசாங்கமும்கூட உண்டு. அதுமட்டுமல்ல, ஒரு செல் தன்னைப் போன்றே இன்னொரு செல்லை சில மணிநேரத்தில் உற்பத்தி செய்துவிடும்!

11, 12. (அ) வளரும் கருவின் செல்கள் வேறுபாடு அடைய காரணம் என்ன, இது எவ்வாறு சங்கீதம் 139:16-க்கு இசைவாக இருக்கிறது? (ஆ)நாம் ‘அற்புதமாகப் படைக்கப்பட்டிருக்கிறோம்’ என்பதை மனித மூளை எவ்விதங்களில் காட்டுகிறது?

11 நிச்சயமாகவே எல்லா செல்களும் ஒரேவிதமானவை அல்ல. கருவின் செல்கள் தொடர்ந்து பிரிவுறும்போது அவை வெகு வித்தியாசமான பணிகளை நிறைவேற்றுகின்றன. அவற்றில் சில நரம்பு செல்களாகின்றன; மற்றவை எலும்பு, தசை, இரத்தம், அல்லது கண் செல்களாகின்றன. இந்த அனைத்து வேறுபாடுகளும் செல்களின் “லைப்ரரியில்,” அதாவது மரபணு புளூப்ரின்ட்டாகிய டிஎன்ஏ-யில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன. தாவீது யெகோவாவிடம் இவ்வாறு சொல்லும்படி ஏவப்பட்டது சுவாரஸ்யமானது: “நான் கருவாக இருந்தபோதே உங்கள் கண்கள் என்னைப் பார்த்தன. என்னுடைய உறுப்புகள் . . . ஒவ்வொன்றைப் பற்றியும் . . . உங்களுடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது.”—சங்கீதம் 139:16.

12 சில உடல் அங்கங்கள் மிக மிக சிக்கலானவை. உதாரணத்திற்கு மனித மூளையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த சர்வலோகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு இருப்பவற்றிலேயே மிக சிக்கல் வாய்ந்த ஒன்று இதுதான் என சிலர் சொல்கின்றனர். அதில் சுமார் 10,000 கோடி நரம்பு செல்கள் இருக்கின்றன; இது, நம் நட்சத்திர மண்டலத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட சமமாக இருக்கலாம். அந்த செல்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான கிளைகளாக பிரிந்து மற்ற செல்களோடு இணைகின்றன. மனித மூளையினால் உலகிலுள்ள நூலகங்கள் அனைத்திலும் உள்ள தகவல்களை சேமிக்க முடியும் என்றும் அதன் சேமிப்பு திறன் அளவிடப்பட முடியாதது என்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். ‘அற்புதமாகப் படைக்கப்பட்டிருக்கும்’ இந்த உறுப்பை பல ஆண்டுகளாக ஆராய்ந்த பிறகும், அது எப்படி வேலை செய்கிறது என்பதை ஒருபோதும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் போகலாம் என விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றனர்.

13, 14. (அ) எறும்புகளும் மற்ற ஜீவராசிகளும் “இயல்பாகவே ஞானமுள்ளவை” என்பதை எப்படி காட்டுகின்றன, இதிலிருந்து அவற்றின் படைப்பாளரைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) சிலந்திவலை போன்றவை “ஞானமாகப்” படைக்கப்பட்டிருப்பதாக ஏன் சொல்லலாம்?

13 ஆனால் மனிதர்கள், யெகோவாவின் படைக்கும் ஞானத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. “யெகோவாவே, உங்களுடைய படைப்புகள்தான் எத்தனை எத்தனை! அவை எல்லாவற்றையும் ஞானமாகப் படைத்திருக்கிறீர்கள். பூமி உங்களுடைய படைப்புகளால் நிறைந்திருக்கிறது” என சங்கீதம் 104:24 சொல்கிறது. நம்மை சூழ்ந்திருக்கும் படைப்புகள் ஒவ்வொன்றும் யெகோவாவின் ஞானத்தை பறைசாற்றுகின்றன. உதாரணத்திற்கு எறும்பு ‘இயல்பாகவே ஞானமுள்ளது.’ (நீதிமொழிகள் 30:24) சொல்லப்போனால் எறும்புக்கூட்டங்கள் மிக அருமையாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன. சில எறும்புக்கூட்டங்கள் ஆஃபிட் என்ற பூச்சிகளுக்கு புகலிடம் கொடுத்து, கால்நடைகளைப் போல் பேணிப் பாதுகாத்து, அவற்றிலிருந்து சத்துணவை கறந்தெடுக்கின்றன. மற்ற சில எறும்புகள் விவசாயிகள் போல், காளான் “பயிர்களை” வளர்க்கின்றன. இன்னுமநேக ஜீவராசிகள் இயல்புணர்வால் குறிப்பிடத்தக்க காரியங்களைச் செய்யும்படி புரோகிராம் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு வீட்டு-ஈ வானில் செய்யும் சாகசங்களை மனிதனின் அதிநவீன விமானங்களாலும் காப்பியடிக்க முடியாது. நட்சத்திரங்கள், பூமியினுடைய காந்தப்புலத்தின் திசை, அல்லது உள்ளூர இருக்கும் ஏதோவொரு வகையான வரைபடம் ஆகியவற்றின் அடிப்படையில் பறவைகள் இடப்பெயர்ச்சி செய்கின்றன. இந்த ஜீவராசிகளில் புரோகிராம் செய்யப்பட்டிருக்கும் சிக்கலான நடத்தைப் போக்குகளை உயிரியல் நிபுணர்கள் வருடக்கணக்காக ஆராய்கின்றனர். அப்படியென்றால் அவற்றை புரோகிராம் செய்த கடவுள் எப்பேர்ப்பட்ட ஞானமுள்ளவராக இருப்பார்!

14 யெகோவாவின் படைக்கும் ஞானத்திலிருந்து விஞ்ஞானிகள் ஏராளமான விஷயங்களைக் கற்றிருக்கின்றனர். இயற்கையிலுள்ள வடிவமைப்புகளை செயற்கையில் உருவாக்குவதற்கு பையோமிமெடிக்ஸ் என்ற ஒரு அறிவியல் துறையே இருக்கிறது. உதாரணத்திற்கு சிலந்திவலையின் அழகைக் கண்டு நீங்கள் அதிசயித்துப் போயிருப்பீர்கள். ஆனால் ஒரு எஞ்சினியர் அதன் அற்புத வடிவமைப்பில் மனதை பறிகொடுக்கிறார். மெல்லியதாக காட்சியளிக்கும் சிலந்திநூல்களில் சில, விகிதப்படி ஸ்டீலைவிட உறுதியானவை; குண்டுதுளைக்காத மேலாடையின் நார்களைவிட பலமானவை. எந்தளவு பலமானவை? மீன்பிடி வலையின் அளவுக்கு பெரிதாக்கப்பட்ட ஒரு சிலந்திவலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். அது பறந்துகொண்டிருக்கும் ஒரு பாஸஞ்சர் விமானத்தையே தடுத்துவிடும்! ஆம், யெகோவா இப்படிப்பட்ட அனைத்தையும் “ஞானமாகப்” படைத்திருக்கிறார்.

பூமியின் ஜீவராசிகளுக்கு ‘இயல்பாகவே இருக்கும் ஞானத்தை’ தந்தவர் யார்?

இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட ஞானம்

15, 16. (அ) நட்சத்திரங்கள் நிறைந்த வானம் யெகோவாவின் ஞானத்தை எவ்வாறு பறைசாற்றுகிறது? (ஆ) திரளான தேவதூதர்களின் மகத்தான படைத் தலைவராக யெகோவா வகிக்கும் ஸ்தானம், நிர்வாகியாக அவரது ஞானத்திற்கு எவ்வாறு சாட்சி பகருகிறது?

15 யெகோவாவின் ஞானம், சர்வலோகமெங்கும் உள்ள அவரது படைப்புகளில் வெளிப்படுகிறது. 5-ஆம் அதிகாரத்தில் சற்று விவரமாக நாம் கலந்தாலோசித்த நட்சத்திரங்கள் வானில் இங்கேயும் அங்கேயுமாக ஏனோதானோவென்று சிதறியிருப்பதில்லை. யெகோவாவின் ‘வான் சட்டங்களில்’ பொதிந்திருக்கும் ஞானத்தால், வானத்தில் நட்சத்திர மண்டலங்கள் அழகாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன; இவை கொத்துக்களாகவும் மாபெரும் கொத்துக்களாகவும் அமைந்திருக்கின்றன. (யோபு 38:33, த நியூ ஜெரூசலேம் பைபிள்) வான் கோள்களை யெகோவா “படை” என அழைப்பதில் ஆச்சரியமில்லை! (ஏசாயா 40:26) ஆனால் யெகோவாவின் ஞானத்தை இன்னும் தத்ரூபமாக வெளிக்காட்டும் மற்றொரு சேனையும் உண்டு.

16 அதிகாரம் 4-ல் நாம் பார்த்தபடி, கடவுள் “பரலோகப் படைகளின் யெகோவா” என்ற பட்டப்பெயரைப் பெற்றிருக்கிறார்; ஏனெனில் பல்லாயிரக்கணக்கான ஆவி சிருஷ்டிகள் அடங்கிய திரளான படைக்கு அவரே மகத்தான தலைவராக இருக்கிறார். இது யெகோவாவின் வல்லமைக்கு ஓர் அத்தாட்சியாகும். ஆனால் அவரது ஞானம் எப்படி இதில் வெளிக்காட்டப்படுகிறது? இதை சிந்தித்துப் பாருங்கள்: யெகோவாவும் இயேசுவும் ஒருபோதும் வேலையின்றி இருப்பதில்லை. (யோவான் 5:17) அப்படியென்றால் உன்னதக் கடவுளின் தேவதூத ஊழியர்களும் அதேவிதமாக எப்போதும் வேலையில் மும்முரமாக இருப்பார்களென நியாயமாகவே எதிர்பார்க்கலாம். அதோடு அவர்கள் அறிவாற்றலிலும் வல்லமையிலும் மனிதரைவிட மிக மேலானவர்கள் என்பதை நினைவில் வையுங்கள். (எபிரெயர் 1:7; 2:7) இருந்தாலும் அந்த அனைத்து தேவதூதர்களையும் யெகோவா கோடிக்கணக்கான ஆண்டுகளாக திருப்தியான வேலையில் சந்தோஷமாக ஈடுபட வைத்திருக்கிறார்; ‘அவருடைய வார்த்தையை நிறைவேற்றுவதிலும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதிலும்’ அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்திருக்கின்றனர். (சங்கீதம் 103:20, 21) இந்த நிர்வாகியின் ஞானத்தை என்னவென்பது!

யெகோவா “ஒருவர்தான் ஞானமுள்ளவர்”

17, 18. யெகோவா “ஒருவர்தான் ஞானமுள்ளவர்” என பைபிள் ஏன் சொல்கிறது, இந்த ஞானம் நமக்கு ஏன் பயபக்தியையும் பிரமிப்பையும் ஏற்படுத்த வேண்டும்?

17 இந்த அத்தாட்சியைக் கருத்தில் கொள்கையில், யெகோவாவின் ஞானம் ஈடிணையற்றது என பைபிள் காட்டுவதில் ஏதேனும் ஆச்சரியம் உண்டா? உதாரணத்திற்கு யெகோவா “ஒருவர்தான் ஞானமுள்ளவர்” என அது சொல்கிறது. (ரோமர் 16:27) யெகோவா மட்டுமே முழுமையான கருத்தில் ஞானமுள்ளவர். மெய் ஞானம் அனைத்திற்கும் அவரே ஊற்றுமூலர். (நீதிமொழிகள் 2:6) ஆகவேதான் யெகோவாவின் சிருஷ்டிகளிலேயே மிகுந்தளவு ஞானம் படைத்த இயேசுவும் தம் சொந்த ஞானத்தின் மீது சார்ந்திராமல் தம் தகப்பன் கற்பித்தபடியே பேசினார்.—யோவான் 12:48-50.

18 யெகோவாவின் ஞானம் தனித்தன்மை பெற்றது என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் தெரிவித்த விதத்தைக் கவனியுங்கள்: “ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள் எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!” என்றார். (ரோமர் 11:33) “ஆ!” என்று சொல்லி ஆரம்பிப்பதன் மூலம் பவுல் ஆழ்ந்த உணர்ச்சியை வெளிக்காட்டினார்—இந்த சந்தர்ப்பத்தில் மிகுந்த பயபக்தியையும் பிரமிப்பையும் வெளிக்காட்டினார். “ஆழம்” என்பதற்கு அவர் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை, “பாதாளம்” என்பதற்கான வார்த்தையோடு நெருங்கிய தொடர்புடையது. ஆகவே அவரது வார்த்தைகள் தத்ரூபமான காட்சியை மனக்கண் முன் நிறுத்துகின்றன. யெகோவாவின் ஞானத்தைக் குறித்து சிந்தித்துப் பார்க்கையில், ஆழம் காண முடியாத அதலபாதாளத்திற்குள் எட்டிப் பார்ப்பதைப் போன்று இருக்கும்; எப்பேர்ப்பட்ட ஆழமான பள்ளம், எத்தகைய அகண்ட பள்ளம், ஒருபோதும் அதன் அளவை கிரகிக்கவே முடியாது; அப்படியிருக்க, அதை விவரிப்பது அல்லது நுணுக்கமான வரைபடமாக வரைவது என்ற பேச்சிற்கே இடமில்லை. (சங்கீதம் 92:5) நமக்கு பணிவை கற்பிக்கும் உண்மையல்லவா இது?

19, 20. (அ) கழுகு ஏன் தெய்வீக ஞானத்திற்கு பொருத்தமான அடையாளம்? (ஆ) எதிர்காலத்தை உற்று நோக்கும் தமது திறமையை யெகோவா எவ்வாறு வெளிக்காட்டியிருக்கிறார்?

19 இன்னொரு கருத்திலும் யெகோவா “ஒருவர்தான் ஞானமுள்ளவர்.” அவர் மட்டுமே எதிர்காலத்தை உற்று நோக்கும் திறன் பெற்றவர். கூர்மையான பார்வையுள்ள கழுகை தெய்வீக ஞானத்திற்கு அடையாளமாக யெகோவா பயன்படுத்துகிறார் என்பதை ஞாபகம் வையுங்கள். பொன் கழுகு (golden eagle), வெறும் 5 கிலோதான் இருக்கும், ஆனால் அதன் கண்கள் முழுமையாக வளர்ச்சியடைந்த மனிதனின் கண்களைவிட பெரியவை. கழுகின் கூர்மையான பார்வை அதிசயிக்கத்தக்கது; நூற்றுக்கணக்கான மீட்டர் தூரத்தில் அல்லது ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் பறந்துகொண்டிருந்தாலும் கீழே இருக்கும் சின்னஞ்சிறு இரைகூட அதன் கண்களில் சிக்கிவிடும்! “தொலைவிலிருந்து அதன் கண்கள் நோட்டமிடுகின்றன” என யெகோவாவே ஒருமுறை சொன்னார். (யோபு 39:29) அதேவிதமாக யெகோவா காலத்தை—எதிர்காலத்தை—“தொலைவிலிருந்து” பார்க்கும் திறன் பெற்றவர்!

20 இதை உண்மையென காட்டும் அத்தாட்சிகள் பைபிளில் ஏராளம் உள்ளன. அதில் நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் உள்ளன, அதாவது சரித்திர நிகழ்ச்சிகள் முன்கூட்டியே எழுதப்பட்டிருக்கின்றன. போர்களின் விளைவும் உலக வல்லரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் படைத்தலைவர்கள் கையாளவிருந்த குறிப்பிட்ட தந்திரங்களும்கூட பைபிளில் முன்னறிவிக்கப்பட்டன; சிலசமயங்களில் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டன.—ஏசாயா 44:25–45:4; தானியேல் 8:2-8, 20-22.

21, 22. (அ) நீங்கள் வாழ்க்கையில் செய்யப்போகும் அனைத்து தெரிவுகளையும் யெகோவா முன்கூட்டியே அறிந்திருக்கிறார் என ஏன் நினைக்க முடியாது? உதாரணம் தருக. (ஆ) யெகோவாவின் ஞானம் ஈவிரக்கமற்றது அல்ல என்பது நமக்கு எப்படி தெரியும்?

21 அப்படியென்றால் நீங்கள் வாழ்க்கையில் செய்யப்போகும் தெரிவுகளை கடவுள் ஏற்கெனவே அறிந்திருக்கிறார் என அர்த்தமா? அப்படித்தான் அர்த்தம் என விதிக் கோட்பாட்டை நம்புவோர் சொல்கிறார்கள். இருந்தாலும் அந்தக் கருத்து யெகோவாவின் ஞானத்தினுடைய மதிப்பை உண்மையில் குறைக்கிறது; ஏனெனில் எதிர்காலத்தை நோக்கும் தம் திறமையை கட்டுப்படுத்த அவரால் முடியாது என்று அது அர்த்தப்படுத்தும். உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒப்பற்ற இனிய குரல் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்; அதற்காக சதா சர்வகாலமும் பாடிக்கொண்டே இருக்க வேண்டிய நிலையிலா இருப்பீர்கள்? இது கேட்பதற்கே அபத்தமாக இருக்கிறதல்லவா? அதேவிதமாக எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் திறமை யெகோவாவிற்கு இருக்கிறது என்றாலும் அதை அவர் சதா சர்வகாலமும் பயன்படுத்துவதில்லை. அவர் அப்படி செய்வது உங்கள் தெரிவு செய்யும் சுதந்திரத்துக்கு இடையூறாக இருக்கலாம்; அந்த சுதந்திரம் யெகோவா அளித்திருக்கும் மதிப்புமிக்க பரிசு, அதை அவர் ஒருபோதும் பறிக்க மாட்டார்.—உபாகமம் 30:19, 20.

22 அதைவிட, முன்விதிக்கப்படுதல் என்ற கருத்துதானே யெகோவாவின் ஞானத்தை ஈவிரக்கமற்ற, தயவுதாட்சண்யமற்ற ஒன்றாக காட்டுகிறது. ஆனால் இது கடுகளவும் உண்மையல்ல! யெகோவா ‘இருதயத்தில் ஞானமுள்ளவர்’ என பைபிள் கற்பிக்கிறது. (யோபு 9:4, தமிழ் O.V [BSI]) அவருக்கு சொல்லர்த்தமான இதயம் இருக்கிறது என அர்த்தமல்ல, ஆனால் பைபிள் இந்தப் பதத்தை, அன்பு போன்ற உணர்ச்சிகளையும் உள்நோக்கங்களையும் உட்படுத்தும் உள்ளான குணம் சம்பந்தமாக பெரும்பாலும் பயன்படுத்துகிறது. ஆகவே யெகோவாவின் ஞானம், அவரது மற்ற குணங்களைப் போலவே அன்பால் கட்டுப்படுத்தப்படுகிறது.—1 யோவான் 4:8.

23. யெகோவாவுடைய ஞானத்தின் மேன்மை நம்மை என்ன செய்யும்படி தூண்ட வேண்டும்?

23 யெகோவாவின் ஞானம் முற்றுமுழுக்க நம்பத்தக்கது என்பதில் சந்தேகமில்லை. அது நம் சொந்த ஞானத்தைவிட மிக மேன்மையானது என்பதால் கடவுளுடைய வார்த்தை இவ்வாறு அன்போடு அறிவுறுத்துகிறது: “யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு. உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே. எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய். அப்போது, உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.” (நீதிமொழிகள் 3:5, 6) இப்போது யெகோவாவின் ஞானத்தை சற்று ஊடுருவிப் பார்க்கலாம், அப்போது சர்வஞானமுள்ள கடவுளாகிய அவரிடம் நெருங்கி வருவோம்.