Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 18

‘கடவுளுடைய வார்த்தையில்’ இருக்கும் ஞானம்

‘கடவுளுடைய வார்த்தையில்’ இருக்கும் ஞானம்

1, 2. யெகோவா நமக்கு என்ன “கடிதத்தை” எழுதியிருக்கிறார், ஏன்?

 தொலைதூரத்தில் வசிக்கும் பிரியமான ஒருவரிடமிருந்து சமீபத்தில் உங்களுக்கு கடிதம் வந்ததா? நமது பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய ஒருவரிடமிருந்து உள்ளப்பூர்வமான கடிதத்தைப் பெறுவதில் கிடைக்கும் சந்தோஷமே தனி. அவரது நலம் அறிவதிலும் அவரது அனுபவங்களையும் திட்டங்களையும் தெரிந்துகொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறோம். இப்படிப்பட்ட கடிதத் தொடர்பு, அன்பானவர்கள் தூரத்தில் வசித்தாலும் அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.

2 அப்படியென்றால் நாம் நேசிக்கும் கடவுளிடமிருந்து ஒரு கடிதத்தை பெறுவதைவிட அதிக சந்தோஷம் வேறெதிலாவது இருக்குமா? ஒரு கருத்தில் யெகோவா நமக்கு ஒரு “கடிதத்தை” எழுதியிருக்கிறார்; அது அவரது வார்த்தையாகிய பைபிள். அவர் யார், அவர் என்ன செய்திருக்கிறார், என்ன செய்ய நோக்கம் கொண்டிருக்கிறார் போன்ற பல விஷயங்களை அதில் நமக்குச் சொல்கிறார். நாம் அவரிடம் நெருங்கியிருக்க வேண்டுமென அவர் விரும்புவதாலேயே தமது வார்த்தையை நமக்குக் கொடுத்திருக்கிறார். சர்வஞானமும் படைத்த நம் கடவுள், நம்மோடு தொடர்புகொள்வதற்கு மிகச் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்தார். பைபிள் எழுதப்பட்ட விதமும் அதில் அடங்கியிருக்கும் விஷயங்களும் ஈடிணையற்ற ஞானத்தை வெளிக்காட்டுகின்றன.

எழுதப்பட்ட வார்த்தை எதற்கு?

3. யெகோவா எந்த விதத்தில் திருச்சட்டத்தை மோசேக்கு அறிவித்தார்?

3 ஆனால், ‘யெகோவா ஏன் இன்னுமதிக கவரத்தக்க விதத்தில், ஒருவேளை பரலோகத்திலிருந்து நேரடியாக பேசுவதன் மூலம் மனிதர்களோடு தொடர்புகொள்ளவில்லை?’ என சிலர் யோசிக்கலாம். சொல்லப்போனால், தேவதூத பிரதிநிதிகள் மூலம் யெகோவா சிலசமயங்களில் பரலோகத்திலிருந்து பேசத்தான் செய்தார். உதாரணமாக இஸ்ரவேலருக்கு திருச்சட்டத்தை அளித்தபோது அவர் அவ்விதமாக பேசினார். (கலாத்தியர் 3:19) பரலோகத்திலிருந்து கேட்கப்பட்ட குரல் மிகுந்த பயபக்தியையும் பிரமிப்பையும் அளித்தது—அது இஸ்ரவேலர்களுக்கு அந்தளவு திகிலூட்டியதால் தங்களுடன் இவ்விதமாக பேச வேண்டாம் என்றும் மோசேயின் மூலமாக பேச வேண்டும் என்றும் யெகோவாவிடம் கேட்டுக்கொண்டனர். (யாத்திராகமம் 20:18-20) சுமார் 600 சட்டதிட்டங்கள் அடங்கிய திருச்சட்டம் மோசேயிடம் வாய்மொழியாக வார்த்தைக்கு வார்த்தை சொல்லப்பட்டது.

4. கடவுளுடைய சட்டங்கள் வாய்மொழியாக கடத்தப்படுவது ஏன் நம்பகமான வழிமுறையாக இருந்திருக்காது என்பதை விளக்குக.

4 திருச்சட்டம் எழுத்தில் வடிக்கப்படவே இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்? மோசேயால் அந்த விலாவாரியான சட்டதிட்டங்களை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஞாபகம் வைத்து, தனது தேசத்தினருக்கு பிழையில்லாமல் சொல்லியிருக்க முடியுமா? எதிர்கால சந்ததிகளின் நிலை என்ன? அவர்கள் வாய் வார்த்தைகளைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருந்ததா? கடவுளுடைய சட்டங்களை வழிவழியாக கடத்துவதற்கு இது நம்பகமான வழிமுறையாக நிச்சயம் இருந்திருக்காது. நீண்ட வரிசையில் நிற்பவர்களில் முதல் நபரிடம் ஒரு கதையை நீங்கள் சொல்லி, அவர் அடுத்தவருக்கும் அந்த அடுத்தவர் அவருக்கு அடுத்தவருக்குமாய் இப்படியே மாறி மாறி அந்தக் கதையை சொன்னால் என்ன நடக்கும் என கற்பனை செய்து பாருங்கள். வரிசையில் கடைசியாக நிற்பவர் கேட்கும் கதை, முதல் நபர் கேட்ட கதையிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். கடவுளுடைய திருச்சட்ட வார்த்தைகளுக்கு இப்படிப்பட்ட எந்த ஆபத்தும் இருக்கவில்லை.

5, 6. யெகோவா தம் வார்த்தைகளை என்ன செய்யும்படி மோசேக்கு கட்டளையிட்டார், யெகோவாவின் வார்த்தை எழுத்தில் இருப்பது நமக்கு ஏன் ஓர் ஆசீர்வாதம்?

5 யெகோவா ஞானமாக தம் வார்த்தைகளை எழுத்தில் வடித்தார். “இந்த வார்த்தைகளை நீ எழுதி வைத்துக்கொள். ஏனென்றால், இந்த வார்த்தைகளின்படியே நான் உன்னோடும் இஸ்ரவேலர்களோடும் ஒப்பந்தம் செய்கிறேன்” என மோசேக்கு அவர் கட்டளையிட்டார். (யாத்திராகமம் 34:27) இப்படித்தான் கி.மு. 1513-ல் பைபிள் பதிவுகளின் சகாப்தம் ஆரம்பமானது. அடுத்த 1,610 ஆண்டுகளாக யெகோவா “பல சந்தர்ப்பங்களில் பல வழிகளில்” சுமார் 40 மனிதர்களிடம் “பேசினார்”; இவர்கள் பைபிளை எழுதினர். (எபிரெயர் 1:1) இதற்கிடையில், வேதவசனங்களை நகலெடுத்தவர்கள், அவற்றை பாதுகாப்பதற்காக மிகக் கவனமாகவும் திருத்தமாகவும் முழு ஈடுபாட்டுடனும் தங்கள் பணியை செய்தனர்.—எஸ்றா 7:6; சங்கீதம் 45:1.

6 யெகோவா நம்மோடு எழுத்தில் தொடர்பு கொள்வதன் மூலம் நம்மை உண்மையிலேயே ஆசீர்வதித்திருக்கிறார். ஒரு கடிதம் உங்களுக்கு தேவையான ஆறுதலைத் தந்ததால் அதை நீங்கள் பொக்கிஷம் போல் பத்திரமாக வைத்து மறுபடியும் மறுபடியும் எடுத்துப் படித்த அனுபவம் உண்டா? யெகோவா நமக்கு எழுதியிருக்கும் “கடிதம்” அதைப் போன்றதுதான். யெகோவா தமது வார்த்தைகளை எழுத்தில் வடித்திருப்பதால், நம்மால் அவற்றை தவறாமல் வாசிக்க முடிகிறது, அவற்றைக் குறித்து தியானிக்கவும் முடிகிறது. (சங்கீதம் 1:2) நமக்கு தேவைப்படும் போதெல்லாம் ‘வேதவசனங்களிலிருந்து ஆறுதலைப்’ பெற முடிகிறது.—ரோமர் 15:4.

ஏன் மனித எழுத்தாளர்கள்?

7. மனித எழுத்தாளர்களைப் பயன்படுத்தியதில் யெகோவாவின் ஞானம் எவ்வாறு வெளிப்படுகிறது?

7 யெகோவா தமது வார்த்தையை எழுத ஞானத்தோடு மனிதர்களைப் பயன்படுத்தினார். இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: பைபிளை எழுத தேவதூதர்களை யெகோவா பயன்படுத்தியிருந்தால், அதே அளவுக்கு மனதை ஈர்ப்பதாக இருந்திருக்குமா? தேவதூதர்கள் தங்கள் உயர்ந்த கண்ணோட்டத்திலிருந்து யெகோவாவை சித்தரித்திருக்கலாம், தங்கள் பக்தியை வெளிப்படுத்தியிருக்கலாம், கடவுளுடைய விசுவாசமுள்ள மனித ஊழியர்களைப் பற்றி அறிக்கை செய்திருக்கலாம் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அறிவிலும் அனுபவத்திலும் பலத்திலும் நம்மைவிட மிக உயர்ந்த நிலையிலிருக்கும் பரிபூரண ஆவி சிருஷ்டிகளின் கண்ணோட்டத்தை நம்மால் உண்மையிலேயே கிரகிக்க முடிந்திருக்குமா?—எபிரெயர் 2:6, 7.

8. பைபிள் எழுத்தாளர்கள் எந்த விதத்தில் தங்களுடைய மனத்திறன்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார்கள்? (அடிக்குறிப்பையும் காண்க.)

8 மனித எழுத்தாளர்களை பயன்படுத்தியதன் மூலம் நமக்கு உண்மையில் தேவைப்படுவது எதுவோ அதையே யெகோவா அளித்தார்; அதாவது, ‘கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்ட,’ அதேசமயம் மனித வாடையுள்ள ஒரு பதிவை அளித்தார். (2 தீமோத்தேயு 3:16) இதை அவர் எப்படி செய்தார்? அநேக சந்தர்ப்பங்களில், எழுத்தாளர்கள் தங்களுடைய மனத்திறன்களை பயன்படுத்தி “இனிமையான வார்த்தைகளைத்” தேடிக் கண்டுபிடித்து, “உண்மையான வார்த்தைகளைத்” திருத்தமாக எழுதுவதற்கு அவர் அனுமதித்தார். (பிரசங்கி 12:10, 11) பைபிளில் பல்வேறு எழுத்துப் பாணிகள் காணப்படுவது ஏன் என்பதை புரிந்துகொள்ள இது உதவுகிறது; தனிப்பட்ட எழுத்தாளர்களின் பின்னணியும் ஆளுமையும் இந்தப் பதிவுகளில் வெளிப்படுகின்றன. a இருந்தாலும் இம்மனிதர்கள் “கடவுளுடைய வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டுதான் சொன்னார்கள்.” (2 பேதுரு 1:21) ஆகவே அவர்கள் பதிவு செய்தது உண்மையில் ‘கடவுளுடைய வார்த்தைதான்.’—1 தெசலோனிக்கேயர் 2:13.

“வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன”

9, 10. பைபிளை எழுத மனித எழுத்தாளர்கள் பயன்படுத்தப்பட்டது ஏன் மனதை பெரிதும் கவர்ந்து ஈர்க்கிறது?

9 மனித எழுத்தாளர்கள் பயன்படுத்தப்பட்டதால் பைபிள் மனதை பெரிதும் கவர்ந்து ஈர்க்கிறது. அதன் எழுத்தாளர்கள் நம்மைப் போலவே உணர்ச்சிகளுள்ள மனிதர்களாக இருந்தனர். பாவமுள்ளவர்களாக நம்மைப் போலவே சோதனைகளையும் அழுத்தங்களையும் எதிர்ப்பட்டனர். சிலசமயங்களில் தங்கள் சொந்த உணர்ச்சிகளையும் போராட்டங்களையும் எழுதும்படி யெகோவாவின் சக்தி அவர்களை தூண்டியது. (2 கொரிந்தியர் 12:7-10) ஆகவே அவர்கள் தன்மை வடிவில் எழுதினார்கள், இவ்விதமாக எந்த தேவதூதராலும் தெரிவித்திருக்க முடியாது.

10 உதாரணத்திற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் சில வினைமையான பாவங்களை செய்த பிறகு, ஒரு சங்கீதத்தை இயற்றினார்; அதில் தன் மனதிலிருப்பதை எல்லாம் கொட்டி, கடவுளின் மன்னிப்பிற்காக மன்றாடினார். “என் பாவத்தை நீக்கி, என்னைச் சுத்தப்படுத்துங்கள். ஏனென்றால், என் குற்றங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். என் பாவம் எப்போதும் என் கண் முன்னால் இருக்கிறது. நான் குற்றம் குறையோடு பிறந்தேன். பாவத்தோடு என் தாயின் வயிற்றில் உருவானேன். உங்களுடைய சன்னிதியைவிட்டு என்னைத் துரத்திவிடாதீர்கள். உங்களுடைய சக்தியை என்னிடமிருந்து எடுத்துவிடாதீர்கள். உடைந்த மனம்தான் கடவுளுக்குப் பிரியமான பலியாக இருக்கிறது. கடவுளே, உடைந்த உள்ளத்தையும் நொறுங்கிய நெஞ்சத்தையும் நீங்கள் ஒதுக்கித்தள்ள மாட்டீர்கள்” என்று அவர் எழுதினார். (சங்கீதம் 51:2, 3, 5, 11, 17) எழுதியவரின் உள்ளக் குமுறலை உங்களால் உணர முடிகிறதல்லவா? இப்படிப்பட்ட உள்ளப்பூர்வ உணர்ச்சிகளை பாவமுள்ள மனிதனைத் தவிர வேறு யாரால் வெளிப்படுத்த முடியும்?

ஏன் மக்களைப் பற்றி ஒரு புத்தகம்?

11. பைபிளில், “நமக்கு அறிவுரை கொடுப்பதற்காக” என்ன நிஜ வாழ்க்கை உதாரணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன?

11 பைபிள் மனங்கவரும் விதத்தில் இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது பெரும்பாலும் மக்களை—உண்மையில் வாழ்ந்த மக்களை—பற்றிய புத்தகம்; கடவுளை சேவிப்போரையும் அவரை சேவிக்காதோரையும் பற்றிய புத்தகம். அவர்களது அனுபவங்கள், கஷ்டநஷ்டங்கள், சந்தோஷங்கள் ஆகியவற்றை அதில் வாசிக்கிறோம். வாழ்க்கையில் அவர்கள் செய்த தெரிவுகளின் விளைவைப் பற்றி வாசிக்கிறோம். அப்படிப்பட்ட பதிவுகள் “நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே” பதிவு செய்யப்பட்டன. (ரோமர் 15:4) இந்த நிஜ வாழ்க்கை உதாரணங்கள் வாயிலாக, நம் இதயத்தைத் தொடும் விதங்களில் யெகோவா கற்பிக்கிறார். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

12. அவிசுவாச மனிதர்களைப் பற்றிய பைபிள் பதிவுகள் நமக்கு எவ்விதத்தில் உதவுகின்றன?

12 அவிசுவாசமுள்ள, துன்மார்க்க மனிதர்களைப் பற்றியும் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றியும்கூட பைபிள் சொல்கிறது. இந்தப் பதிவுகளில், கெட்ட குணங்கள் செயல்களில் வெளிப்பட்ட விதத்தை பார்க்கிறோம்; இதனால் அவற்றை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, அவிசுவாசத்திற்கு எதிரான எந்தக் கட்டளையாவது, இயேசுவிற்கு எதிராக சதி செய்த யூதாஸின் உயிருள்ள உதாரணத்தைவிட வலிமைமிக்கதாக இருக்க முடியுமா? (மத்தேயு 26:14-16, 46-50; 27:3-10) இதுபோன்ற பதிவுகள் நம் இதயத்தை எளிதில் எட்டுகின்றன, அருவருப்பான குணங்களை அடையாளம் கண்டுகொள்ளவும் விட்டொழிக்கவும் உதவுகின்றன.

13. நற்குணங்களை புரிந்துகொள்ள பைபிள் நமக்கு எவ்விதத்தில் உதவுகிறது?

13 பைபிள், கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் அநேகரைப் பற்றியும் விவரிக்கிறது. அவர்களது பக்தியையும் பற்றுறுதியையும் பற்றி அதில் நாம் வாசிக்கிறோம். கடவுளிடம் நெருங்கிச் செல்வதற்காக நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய குணங்களுக்கு உயிருள்ள உதாரணங்களைக் காண்கிறோம். உதாரணமாக விசுவாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பைபிள் விசுவாசத்தை விளக்கி, கடவுளைப் பிரியப்படுத்த அது எவ்வளவு அவசியம் என சொல்கிறது. (எபிரெயர் 11:1, 6) ஆனால் செயலில் காட்டப்படும் விசுவாசத்திற்கு தத்ரூபமான உதாரணங்களையும் பைபிள் தருகிறது. ஈசாக்கை பலிகொடுக்க முயன்றபோது ஆபிரகாம் காட்டிய விசுவாசத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். (ஆதியாகமம், அதிகாரம் 22; எபிரெயர் 11:17-19) இப்படிப்பட்ட பதிவுகள் வாயிலாக, “விசுவாசம்” என்ற வார்த்தையின் அர்த்தம் கூடுகிறது, புரிந்துகொள்வதற்கும் அது எளிதாகிறது. விரும்பத்தக்க நற்குணங்களை வளர்த்துக்கொள்ளுமாறு நமக்கு அறிவுறுத்துவதோடு, அவற்றிற்கு நிஜ வாழ்க்கை உதாரணங்களையும் யெகோவா அளித்திருப்பது எப்பேர்ப்பட்ட ஞானமான செயல்!

14, 15. ஆலயத்திற்கு சென்றிருந்த ஒரு பெண்மணியைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, இந்தப் பதிவிலிருந்து நாம் யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?

14 பைபிளில் காணப்படும் நிஜ வாழ்க்கை பதிவுகள், யெகோவா எப்படிப்பட்ட நபர் என பெரும்பாலும் நமக்கு கற்பிக்கின்றன. ஆலயத்தில் இயேசு கவனித்த ஒரு பெண்மணியைப் பற்றிய பதிவை எடுத்துக்கொள்ளுங்கள். காணிக்கைப் பெட்டிகளுக்குப் பக்கத்தில் இயேசு அமர்ந்திருக்கையில், மக்கள் காணிக்கை போடுவதை கவனித்துக் கொண்டிருந்தார். அநேக செல்வந்தர்கள் “தங்கள் தேவைக்கு அதிகமாக இருந்ததைத்தான்” எடுத்துப் போட்டார்கள். ஆனால் இயேசுவின் கண்கள் ஒரு ஏழை விதவையின்மேல் பதிந்தன. அவள் காணிக்கையாக, “மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளை போட்டாள்.” b அவளிடம் இருந்ததெல்லாம் அவ்வளவுதான். யெகோவாவின் கண்ணோட்டத்தை அப்படியே பரிபூரணமாக பிரதிபலித்த இயேசு இப்படி சொன்னார்: “காணிக்கைப் பெட்டிகளில் மற்ற எல்லாரும் போட்டதைவிட இந்த ஏழை விதவைதான் அதிகமாகப் போட்டாள்.” அவரது வார்த்தைகளின்படி, மற்ற எல்லாரும் போட்ட காணிக்கைகளின் மொத்த தொகையைவிட அதிகமாக அவள் போட்டாள்.—மாற்கு 12:41-44; லூக்கா 21:1-4; யோவான் 8:28.

15 அன்று ஆலயத்திற்கு சென்ற எல்லாரிலும் அந்த விதவை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு பைபிளில் குறிப்பிடப்பட்டது விசேஷமானது அல்லவா? இந்த உதாரணத்தின் வாயிலாக, தாம் போற்றுதல் காண்பிக்கும் கடவுள் என்பதை யெகோவா நமக்கு கற்பிக்கிறார். இதயப்பூர்வமாக நாம் வழங்கும் காணிக்கைகள், மற்றவர்களுடையதைவிட எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதை அவர் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். மனதிற்கு இதமளிக்கும் இந்த சத்தியத்தை நமக்கு கற்பிக்க யெகோவாவால் இதைவிட சிறந்த வழியை நிச்சயம் தேர்ந்தெடுக்க முடிந்திருக்காது!

பைபிளில் இல்லாதது

16, 17. யெகோவா தம் வார்த்தையில் சில விஷயங்களை குறிப்பிடாமல் விட்டதுகூட அவரது ஞானத்தை எப்படி பறைசாற்றுகிறது?

16 பிரியமான ஒருவருக்கு நீங்கள் கடிதம் எழுதும்போது எதையெல்லாம் எழுதுவது என்பதற்கு ஒரு வரம்பு இருக்கும். ஆகவே எழுத வேண்டிய விஷயங்களை நீங்கள் விவேகமாக தேர்ந்தெடுப்பீர்கள். அதேவிதமாக, யெகோவா தமது வார்த்தையில் சில நபர்களையும் சம்பவங்களையும் பற்றி குறிப்பிட தீர்மானித்தார். ஆனால் இந்தப் பதிவுகளில் எல்லா நுணுக்க விவரங்களையும் பைபிள் எப்போதுமே தருவதில்லை. (யோவான் 21:25) உதாரணத்திற்கு கடவுளுடைய நியாயத்தீர்ப்பைப் பற்றி பைபிள் குறிப்பிடும் விஷயங்கள் நம் எல்லா கேள்விகளுக்கும் ஒருவேளை பதிலளிக்காது. யெகோவா தம் வார்த்தையில் சில விஷயங்களை குறிப்பிடாமல் விட்டதுகூட அவரது ஞானத்தை பறைசாற்றுகிறது. எப்படி?

17 பைபிள் எழுதப்பட்டிருக்கும் விதம், நம் இதயத்தில் இருப்பதை சோதித்துப் பார்க்க உதவுகிறது. “கடவுளுடைய வார்த்தைக்கு [அல்லது, செய்திக்கு] உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது. அது இரண்டு பக்கமும் கூர்மையான எந்த வாளையும்விட கூர்மையானது. அகத்தையும் புறத்தையும் . . . பிரிக்குமளவுக்கு ஊடுருவக்கூடியது. இதயத்தில் இருக்கிற எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறியும் சக்தி கொண்டது” என எபிரெயர் 4:12 சொல்கிறது. பைபிளின் செய்தி உருவக் குத்துவதாக, நம் உண்மையான எண்ணங்களையும் உள்நோக்கங்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. குறைகூறும் இதயநிலையோடு அதை வாசிப்பவர்கள், அவர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு போதிய தகவலளிக்காத பதிவுகளால் பெரும்பாலும் இடறலடைவார்கள். யெகோவா உண்மையிலேயே அன்பான, ஞானமான, நீதியான கடவுள்தானா என்றுகூட அப்படிப்பட்டவர்கள் கேள்வியெழுப்பலாம்.

18, 19. (அ) ஒரு குறிப்பிட்ட பதிவைக் குறித்து நமக்கு எழும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் கிடைக்காவிட்டால் நாம் ஏன் கலக்கமடையக் கூடாது? (ஆ) கடவுளுடைய வார்த்தையை புரிந்துகொள்வதற்கு என்ன தேவை, இது யெகோவாவின் மகா ஞானத்திற்கு எப்படி அத்தாட்சியாக இருக்கிறது?

18 இதற்கு மாறாக, நாம் நேர்மையான இதயத்தோடு பைபிளை கவனமாக படிக்கும்போது, முழு பைபிளும் யெகோவாவை சித்தரித்துக் காட்டும் விதத்தில் அவரைப் பற்றி கற்றுக்கொள்வோம். ஆகவே ஒரு குறிப்பிட்ட பதிவைக் குறித்து நமக்கு எழும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் கிடைக்காவிட்டால் கலக்கமடைய மாட்டோம். உதாரணத்திற்கு: ஜிக்ஸா புதிர் விளையாட்டில் படத் துண்டுகளை ஒன்றுசேர்க்கும்போது முதலில் ஒரு படத் துண்டை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் அல்லது ஒரு படத் துண்டு மட்டும் எங்கே பொருந்துகிறது என புரியாமல் குழம்பலாம். ஆனால் அந்த முழு படமும் என்ன என்பதை புரிந்துகொள்வதற்கு போதுமான படத் துண்டுகளை நாம் ஒன்று சேர்த்திருக்கலாம். அதேவிதமாக, நாம் பைபிளைப் படிக்கையில் யெகோவா எப்படிப்பட்ட கடவுள் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்கிறோம், இறுதியில் ஒரு தெளிவான படம் கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட பதிவை அல்லது அது எப்படி கடவுளின் ஆளுமையோடு பொருந்துகிறது என்பதை நம்மால் முதலில் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்; ஆனால், பைபிள் படிப்பு யெகோவாவைப் பற்றி நமக்கு ஏற்கெனவே போதியளவு கற்றுக்கொடுத்திருப்பதால் அவர் அன்பான, நியாயமான, நீதியான கடவுள் என்பதை நம்மால் தெளிவாக காண முடிகிறது.

19 அப்படியென்றால் கடவுளுடைய வார்த்தையை புரிந்துகொள்ள நாம் அதை நேர்மையான இதயத்தோடும் திறந்த மனதோடும் வாசிக்கவும் படிக்கவும் வேண்டும். இந்த உண்மை யெகோவாவின் மகா ஞானத்திற்கு அத்தாட்சி அல்லவா? புத்திசாலி மனிதர்களால் “ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும்” மட்டுமே புரியும் புத்தகங்களை எழுத முடியும். ஆனால் சரியான இதயநிலையோடு இருப்பவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்த ஒரு புத்தகத்தை எழுத கடவுளுடைய ஞானத்தால்தான் முடியும்!—மத்தேயு 11:25.

நடைமுறை ஞானத்தை” தரும் ஒரு புத்தகம்

20. மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கான வழியை ஏன் யெகோவாவால் மட்டுமே நமக்கு சொல்ல முடியும், நமக்கு உதவும் எது பைபிளில் இருக்கிறது?

20 மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கான வழியை யெகோவா தமது வார்த்தையில் நமக்கு சொல்கிறார். நம்மை படைத்தவராக, நமக்கு என்ன தேவை என்பதை நம்மைவிட அவர் நன்கு அறிந்திருக்கிறார். நேசிக்கப்படுவது, சந்தோஷமாக இருப்பது, நல்ல உறவுகளை அனுபவிப்பது போன்ற அடிப்படையான தேவைகள் மனிதனுக்கு எப்போதும் இருந்திருக்கின்றன. அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ உதவும் ‘நடைமுறை ஞானத்தின்’ பெருங்களஞ்சியமாக திகழ்கிறது பைபிள். (நீதிமொழிகள் 2:7, அடிக்குறிப்பு) இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், பைபிளின் ஞானமான ஆலோசனையை நாம் எப்படி பின்பற்றலாம் என்பதை விளக்கும் ஒரு அதிகாரம் இருக்கிறது; ஆனால் இப்போது ஒரேவொரு உதாரணத்தை மட்டும் கவனிக்கலாம்.

21-23. கோபத்தையும் மனக்கசப்பையும் வளர்த்துக்கொள்வதைத் தவிர்க்க என்ன ஞானமான ஆலோசனை நமக்கு உதவும்?

21 மனக்கசப்பையும் குரோதத்தையும் வளர்த்துக்கொண்டவர்கள் கடைசியில் தங்களையே புண்படுத்திக் கொண்டதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? மனக்கசப்பு வாழ்க்கையில் சுமப்பதற்கு பெரும் சுமை. அதை வளர்க்கும்போது, நம் சிந்தனையை ஆக்கிரமித்துவிடுகிறது, நிம்மதியைப் பறித்துவிடுகிறது, சந்தோஷத்தை குலைத்துவிடுகிறது. கோபத்தை மனதில் பேணி வளர்க்கையில் இதய நோயும் மற்ற பல தீராத நோய்களும் வர அதிக வாய்ப்புண்டு என விஞ்ஞான ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இந்த ஆராய்ச்சிகளுக்கு வெகு காலத்திற்கு முன்பே, “கோபத்தையும் ஆத்திரத்தையும் விட்டுவிடு” என பைபிள் ஞானமாக சொன்னது. (சங்கீதம் 37:8) ஆனால் நாம் எப்படி அதைச் செய்யலாம்?

22 கடவுளுடைய வார்த்தை இந்த ஞானமான ஆலோசனையை அளிக்கிறது: “விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக்கும். தன் மனதைப் புண்படுத்துகிறவர்களை மன்னிப்பது அவனுக்கு அழகு.” (நீதிமொழிகள் 19:11) விவேகம் என்பது மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக உற்று நோக்கும் திறனைக் குறிக்கிறது. விவேகம், புரிந்துகொள்ளுதலை வளர்க்கிறது; ஏனெனில், ஒரு நபர் ஏன் அப்படி பேசினார் அல்லது அப்படி நடந்துகொண்டார் என்பதை புரிந்துகொள்ள அது உதவும். அவருடைய உண்மையான உள்நோக்கங்களையும் உணர்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் புரிந்துகொள்ள முயல்வது, அவரைப் பற்றி தவறாக நினைப்பதையும் உணருவதையும் தவிர்க்க நமக்கு உதவும்.

23 “தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள்” என்ற ஆலோசனையையும் பைபிள் தருகிறது. (கொலோசெயர் 3:13) “தொடர்ந்து ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்ற வார்த்தைகள் மற்றவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்வதையும் நமக்கு எரிச்சல் உண்டாக்கும் அவர்களது நடத்தைகளை பொறுத்துக்கொள்வதையும் குறிக்கிறது. அப்படிப்பட்ட பொறுமை, சின்ன விஷயங்களுக்காக மனக்கசப்பை வளர்த்துக்கொள்வதைத் தவிர்க்க நமக்கு உதவுகிறது. “மன்னியுங்கள்” என்பது மனக்கசப்பை விட்டுவிடுவதைக் குறிக்கிறது. தகுந்த காரணம் இருக்கும்போது நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்பதை ஞானமுள்ள நம் கடவுள் அறிந்திருக்கிறார். இது அவர்களது நன்மைக்காக மட்டுமல்ல, நம் சொந்த மன சமாதானத்திற்காகவும்தான். (லூக்கா 17:3, 4) கடவுளுடைய வார்த்தையில் எப்பேர்ப்பட்ட ஞானம் பொதிந்துள்ளது!

24. தெய்வீக ஞானத்திற்கு இசைவாக நம் வாழ்க்கையை மாற்றியமைக்கும்போது என்ன விளையும்?

24 யெகோவா அளவற்ற அன்பினால் தூண்டப்பட்டு, நம்மோடு தொடர்புகொள்ள விரும்பினார். அதற்கு மிகச் சிறந்த வழியையும் தேர்ந்தெடுத்தார்; பரிசுத்த சக்தியினால் மனிதர்களை தூண்டி ஒரு “கடிதத்தை” எழுத வைத்தார். இதன் விளைவாக, யெகோவாவுடைய ஞானமே அந்தக் கடிதத்தில் காணப்படுகிறது. இந்த ஞானம் ‘மிகவும் நம்பகமானது.’ (சங்கீதம் 93:5) அதற்கு இசைவாக நம் வாழ்க்கையை மாற்றியமைத்து, அந்த ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, சர்வஞானமுள்ள நம் கடவுளிடம் இயல்பாகவே நெருங்கிச் செல்வோம். அடுத்த அதிகாரத்தில், யெகோவாவின் தொலைநோக்குள்ள ஞானத்திற்கு மற்றொரு தலைசிறந்த உதாரணத்தை சிந்திப்போம்: எதிர்காலத்தை முன்னறிவிப்பதற்கும் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்குமான அவரது திறனே அது.

a உதாரணத்திற்கு, மேய்ப்பராக இருந்த தாவீது, மேய்ப்பனின் வாழ்க்கையிலுள்ள அம்சங்களை உதாரணங்களாக பயன்படுத்தினார். (சங்கீதம் 23) வரி வசூலிப்பவராக இருந்த மத்தேயு, அநேகம் முறை எண்களையும் பண மதிப்புகளையும் குறிப்பிட்டார். (மத்தேயு 17:27; 26:15; 27:3) மருத்துவராக இருந்த லூக்கா, தனது மருத்துவ பின்னணிக்கு ஏற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.—லூக்கா 4:38; 14:2; 16:20.

b அவள் போட்ட காசு ஒவ்வொன்றும் ஒரு லெப்டன் ஆகும்; அது அப்போது புழக்கத்திலிருந்த மிகச் சிறிய யூத நாணயம். இரண்டு லெப்டன்கள், ஒரு நாள் கூலியில் அறுபத்து நான்கில் ஒரு பகுதிக்கு சமமாகும். இந்த இரண்டு காசுகள், ஒரேவொரு குருவியை வாங்குவதற்குக்கூட போதவில்லை; அதுவும் அக்குருவி மிக மலிவான விலையில் கிடைத்த பறவையாகவும் ஏழைகளின் உணவாகவும் இருந்தது.