Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 25

‘நம் கடவுள் காட்டுகிற கரிசனை’

‘நம் கடவுள் காட்டுகிற கரிசனை’

1, 2. (அ) ஒரு தாய் தன் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் இயல்பாகவே என்ன செய்வாள்? (ஆ) ஒரு தாயின் கரிசனையைவிட வலிமையான உணர்ச்சி எது?

 குழந்தை நடு ராத்திரியில் வீரிட்டு அழுகிறது. சட்டென்று அந்தத் தாய் விழித்துக் கொள்கிறாள். குழந்தை பிறந்தது முதல், இப்படித்தான் அவளது தூக்கம் கெடுகிறது. குழந்தையின் அழுகுரலை வைத்தே அது எதற்காக அழுகிறது என்பதை தாய் கண்டுபிடித்து விடுகிறாள். ஆகவே, குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டுமா, அதை தாலாட்ட வேண்டுமா, அல்லது வேறெதாவது செய்ய வேண்டுமா என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் குழந்தையின் அழுகைக்கு காரணம் எதுவாக இருந்தாலும், அந்தத் தாய் உடனடியாக அதன் தேவையை கவனிக்கிறாள். குழந்தை அழுதால் அழட்டும் என அப்படியே விட்டுவிட அவள் மனம் இடங்கொடுக்காது.

2 பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை மீது தாய் காட்டும் கரிசனையே மனிதர் அறிந்த மிக மென்மையான உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதைவிட பன்மடங்கு வலிமை வாய்ந்த உணர்ச்சி இருக்கிறது, அதுதான் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் கரிசனை. அருமையான இந்த குணத்தைப் பற்றி சிந்திப்பது யெகோவாவிடம் நெருங்கி வர நமக்கு உதவும். அப்படியானால், கரிசனை என்றால் என்ன, அதை எவ்வாறு நம்முடைய கடவுள் காட்டுகிறார் என்பதை ஆராயலாம்.

கரிசனை என்றால் என்ன?

3. “கரிசனை காட்டு” அல்லது “இரக்கம் காட்டு” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வினைச்சொல்லின் அர்த்தம் என்ன?

3 பைபிளில் பல எபிரெய வார்த்தைகளும் கிரேக்க வார்த்தைகளும், கரிசனை என்ற கருத்தை தருகின்றன. உதாரணமாக, ராக்காம் என்ற எபிரெய வினைச்சொல் “கரிசனை காட்டு” அல்லது “இரக்கம் காட்டு” என பெரும்பாலும் மொழிபெயர்க்கப்படுகிறது. இந்த வினைச்சொல், “ஆழமான, கனிவான இரக்கவுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது, அதாவது நமக்குப் பிரியமானவர்களின் அல்லது நம்முடைய உதவி தேவைப்படுகிறவர்களின் பலவீனத்தையோ கஷ்டத்தையோ பார்த்ததும் எழுகிற உணர்ச்சிக்கு ஒத்தது” என ஒரு நூல் விளக்குகிறது. யெகோவா தமக்கு பயன்படுத்தும் இந்த எபிரெய வார்த்தை “கருப்பை” என்ற வார்த்தையுடன் தொடர்புடையது, “தாய்க்குரிய கரிசனை” என்றும் அதை விவரிக்கலாம். aயாத்திராகமம் 33:19; எரேமியா 33:26.

“ஒரு தாய் தன் வயிற்றில் சுமந்த . . . குழந்தையை மறப்பாளா?”

4, 5. யெகோவாவின் கரிசனையைப் பற்றி நமக்கு கற்பிப்பதற்கு, ஒரு தாய் தன் குழந்தை மீது காண்பிக்கும் உணர்ச்சிகளை பைபிள் எவ்வாறு உதாரணமாக பயன்படுத்துகிறது?

4 யெகோவா காண்பிக்கும் கரிசனையின் அர்த்தத்தை நமக்கு கற்பிப்பதற்கு, குழந்தை மீது தாய் காட்டும் உணர்ச்சிகளை பைபிள் உதாரணமாக பயன்படுத்துகிறது. “ஒரு தாய் தன் வயிற்றில் சுமந்த பிள்ளைக்குக் கரிசனை காட்டாமல் இருப்பாளா? பால் குடிக்கும் தன் குழந்தையை மறப்பாளா? அவள் மறந்தாலும், நான் ஒருபோதும் உன்னை மறக்க மாட்டேன்” என ஏசாயா 49:15-ல் நாம் வாசிக்கிறோம். நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த விவரிப்பு, தம்முடைய ஜனங்கள் மீது யெகோவா காட்டும் கரிசனையின் ஆழத்தை வலியுறுத்துகிறது. எப்படி?

5 பால்குடிக்கும் குழந்தைக்கு உணவூட்டி, சீராட்டி பாராட்ட ஒரு தாய் மறந்துவிடுவதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. சொல்லப்போனால், எதையுமே சுயமாக செய்ய முடியாத பச்சிளம் குழந்தைக்கு இராப்பகலாக தாயின் கவனிப்பும் பாசமும் தேவை. ஆனால், பிள்ளைகளை கவனிக்காமல் விடுகிற தாய்மார்களைப் பற்றி நாம் கேள்விப்படாமல் இல்லை. வருந்தத்தக்க இந்தச் செயல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. “நிலைமை படுமோசமாக இருக்கும்” இந்த காலத்தில், மக்கள் “பந்தபாசம் இல்லாதவர்களாக” இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, 3) என்றாலும், “நான் ஒருபோதும் உன்னை மறக்க மாட்டேன்” என யெகோவா சொல்கிறார். யெகோவா தமது ஊழியர்கள் மீது காண்பிக்கும் கரிசனை மாறாதது. நம் கற்பனைக்கு எட்டிய கனிவுமிக்க எந்தவொரு இயல்பான உணர்ச்சியைக் காட்டிலும்—பச்சிளம் குழந்தை மீது தாய் இயல்பாக காண்பிக்கும் கரிசனையைக் காட்டிலும்—பன்மடங்கு வலிமை வாய்ந்தது. ஏசாயா 49:15-ஐக் குறித்து உரையாசிரியர் ஒருவர் இவ்வாறு சொன்னதில் ஆச்சரியமே இல்லை: “பழைய ஏற்பாட்டில் கடவுளுடைய அன்பின் வலிமை வாய்ந்த வெளிப்பாடுகளில் இது ஒன்று, ஏன் இதுவே மிக வலிமை வாய்ந்த வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.”

6. கரிசனை பற்றி குறையுள்ள மனிதர்கள் பலர் என்ன நினைத்திருக்கிறார்கள், ஆனால் யெகோவா நமக்கு என்ன உறுதியளிக்கிறார்?

6 கரிசனை பலவீனத்தின் அறிகுறியா? குறையுள்ள மனிதர்கள் பலர் அப்படித்தான் நினைத்திருக்கிறார்கள். உதாரணமாக, இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவரும் ரோமில் பிரபல மேதையாக திகழ்ந்தவருமாகிய ரோம தத்துவஞானி செனிகா, “மனம் உருகுவது மனதின் பலவீனம்” என கற்பித்தார். ஸ்தோயிக் கோட்பாட்டை—உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காமல் நிம்மதியைக் காத்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திய ஒரு தத்துவத்தை—செனிகா பிரஸ்தாபப்படுத்தினார். துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஒரு ஞானி உதவலாம், ஆனால் பரிதாப உணர்ச்சிக்கு இடங்கொடுக்கக் கூடாது, ஏனென்றால் அப்படிப்பட்ட உணர்ச்சி அவருடைய நிம்மதியை பறித்துவிடும் என செனிகா கூறினார். வாழ்க்கையைப் பற்றிய இத்தகைய சுயநல நோக்கு, இதயப்பூர்வமான கரிசனைக்கு இடமளிக்கவில்லை. யெகோவாவின் குணம் அப்படிப்பட்டதே அல்ல! “யெகோவா மிகுந்த கரிசனையும் இரக்கமும் நிறைந்தவர்” என அவர் தமது வார்த்தையில் நமக்கு உறுதியளிக்கிறார். (யாக்கோபு 5:11, அடிக்குறிப்பு) நாம் பார்க்கப்போகிறபடி, கரிசனை என்பது ஒருவரின் பலவீனமல்ல, ஆனால் அவரது பலம், அவரது இன்றியமையாத பண்பு. ஓர் அன்பான தகப்பனைப் போல யெகோவா எவ்வாறு கரிசனையைக் காட்டுகிறார் என்பதை நாம் ஆராயலாம்.

ஒரு தேசத்திற்கு யெகோவா கரிசனை காட்டியபோது

7, 8. பூர்வ எகிப்தில் இஸ்ரவேலர் எந்த விதத்தில் துன்பப்பட்டார்கள், அவர்களுடைய துன்பத்தைக் கண்டு யெகோவா என்ன செய்தார்?

7 இஸ்ரவேல் தேசத்தாரை யெகோவா நடத்திய விதத்தில் அவருடைய கரிசனையை தெளிவாக காணலாம். கி.மு. 16-ம் நூற்றாண்டின் முடிவிற்குள், பூர்வ எகிப்தில் லட்சக்கணக்கான இஸ்ரவேலர் அடிமைகளாக்கப்பட்டார்கள்; அங்கே அவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். எகிப்தியர்கள் “வாழ்க்கையே வெறுத்துப்போகும் அளவுக்கு அவர்களை வேலை வாங்கினார்கள். களிமண் சாந்தும் செங்கலும் தயாரிக்கிற வேலைகளையும், எல்லாவித வயல் வேலைகளையும் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள்.” (யாத்திராகமம் 1:11, 14) வேதனையில் தத்தளிக்கையில் அவர்கள் உதவிக்காக யெகோவாவை நோக்கி கூக்குரலிட்டார்கள். கரிசனையுள்ள கடவுளை அது எவ்வாறு பாதித்தது?

8 அது யெகோவாவின் இதயத்தைத் தொட்டது. “எகிப்தில் என்னுடைய ஜனங்கள் படுகிற கஷ்டத்தை நான் பார்த்தேன். வேலை வாங்குகிறவர்களுடைய கொடுமை தாங்காமல் அவர்கள் கதறுவதைக் கேட்டேன். அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும்” என்று அவர் சொன்னார். (யாத்திராகமம் 3:7) தமது ஜனங்கள் படும் துன்பத்தை பார்த்தும், அவர்களுடைய கூக்குரலை கேட்டும் எந்தவித உணர்ச்சியுமின்றி இருப்பது யெகோவாவால் முடியாத காரியம். இந்தப் புத்தகத்தில் 24-ம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, யெகோவா அனுதாபமுள்ள கடவுள். அனுதாபம்—மற்றவர்களுடைய வேதனையை உணரும் திறமை—கரிசனையோடு நெருங்கிய தொடர்புடையது. ஆனால் யெகோவா தமது ஜனங்களுக்காக வெறுமனே இரக்கப்படவில்லை; அவர்களுடைய சார்பாக செயல்படுவதற்கு தூண்டப்பட்டார். “அன்போடும் கரிசனையோடும் அவர்களை மீட்டுக்கொண்டார்” என ஏசாயா 63:9 சொல்கிறது. தன்னுடைய ‘கைபலத்தால்’ எகிப்திலிருந்து இஸ்ரவேலரை யெகோவா காப்பாற்றினார். (உபாகமம் 4:34) அதற்குப்பின், அற்புதமாக அவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கு சொந்தமான செழிப்புமிக்க தேசத்தில் அவர்களை கொண்டு சேர்த்தார்.

9, 10. (அ) இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடியேறிய பிறகு ஏன் அவர்களை யெகோவா திரும்பத் திரும்ப மீட்டார்? (ஆ) யெப்தாவின் நாட்களில், எந்த ஒடுக்குதலிலிருந்து இஸ்ரவேலரை யெகோவா மீட்டார், அப்படி செய்ய எது அவரை தூண்டியது?

9 யெகோவாவின் கரிசனை அத்துடன் நின்றுவிடவில்லை. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடியேறியபோது, இஸ்ரவேலர் திரும்பத் திரும்ப உண்மையற்றவர்களாய் நடந்துகொண்டார்கள், அதனால் துன்பத்தையும் அனுபவித்தார்கள். ஆனால் புத்தி தெளிந்தபோதோ அந்த ஜனங்கள் யெகோவாவை நோக்கி கூப்பிட்டார்கள். அவர் திரும்பத் திரும்ப அவர்களை மீட்டார். ஏன்? ஏனெனில் ‘தன்னுடைய மக்களை . . . நினைத்து பரிதாபப்பட்டார்.’—2 நாளாகமம் 36:15; நியாயாதிபதிகள் 2:11-16.

10 யெப்தாவின் நாட்களில் நடந்ததை கவனியுங்கள். இஸ்ரவேலர் பொய் கடவுட்களை சேவிக்க ஆரம்பித்ததால், அவர்கள் 18 ஆண்டுகள் அம்மோனியர்களின் கைகளில் ஒடுக்கப்படுவதற்கு யெகோவா அனுமதித்தார். கடைசியில், இஸ்ரவேலர் மனந்திரும்பினார்கள். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “தங்களிடமிருந்த பொய் தெய்வங்கள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு யெகோவாவை வணங்கினார்கள். அதனால், அவர்கள் கஷ்டப்படுவதை அதற்கு மேலும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.” b (நியாயாதிபதிகள் 10:6-16) தம்முடைய ஜனங்கள் உள்ளப்பூர்வமான மனந்திரும்புதலை காட்டியவுடன், அவர்கள் படும் துன்பத்தை யெகோவாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, இஸ்ரவேலரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து மீட்பதற்கு கரிசனை நிறைந்த கடவுள் யெப்தாவுக்கு வல்லமை அளித்தார்.—நியாயாதிபதிகள் 11:30-33.

11. இஸ்ரவேலரை யெகோவா நடத்திய விதத்திலிருந்து இரக்கத்தைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

11 இஸ்ரவேல் தேசத்தாரை யெகோவா நடத்திய விதம் கரிசனையைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது? ஒரு விஷயம் என்னவென்றால், ஜனங்கள் படும் துன்பங்களைக் கண்டு வெறுமனே பரிதாபப்படுவதை அது குறிப்பதில்லை என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். குழந்தையின் அழுகையைக் கேட்டு கரிசனையோடு செயல்படும் ஒரு தாயின் உதாரணத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதைப் போலவே, தமது ஜனங்களின் கூக்குரலுக்கு யெகோவா செவியை அடைத்துக்கொள்வதில்லை. துன்பத்திலிருந்து அவர்களை மீட்க கரிசனை அவரை உந்துவிக்கிறது. அதோடு, இஸ்ரவேலரை யெகோவா நடத்திய விதம், கரிசனை என்பது ஒரு பலவீனமல்ல என்பதையும் நமக்கு கற்பிக்கிறது, ஏனென்றால் இந்த கனிவான குணம் தமது ஜனங்களின் சார்பாக உறுதியான, தீர்வான நடவடிக்கை எடுப்பதற்கு அவரைத் தூண்டியது. ஒரு தொகுதியாக மாத்திரமே தமது ஊழியர்களுக்கு யெகோவா கரிசனையைக் காண்பிக்கிறாரா?

தனிநபர்கள் மீது யெகோவாவின் கரிசனை

12. தனிநபர்கள் மீது யெகோவா காண்பித்த கரிசனையை திருச்சட்டம் எவ்வாறு காட்டியது?

12 தனிநபர்கள் மீது யெகோவா கரிசனை காட்டியதை இஸ்ரவேல் தேசத்தாருக்கு அவர் கொடுத்த திருச்சட்டம் காண்பித்தது. உதாரணமாக, ஏழைகள் மீது அவர் காட்டிய கரிசனையை சிந்தித்துப் பாருங்கள். எதிர்பாரா சூழ்நிலைகள் ஓர் இஸ்ரவேலனை வறுமையில் ஆழ்த்திவிடக்கூடும் என்பதை யெகோவா அறிந்திருந்தார். ஏழைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என சொன்னார்? இஸ்ரவேலருக்கு யெகோவா கண்டிப்பான இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “அவனிடம் கல்நெஞ்சத்தோடு நடந்துகொள்ளாதீர்கள். அந்த ஏழை சகோதரனிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள். நீங்கள் அவனுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும், வேண்டாவெறுப்போடு கொடுக்கக் கூடாது. அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.” (உபாகமம் 15:7, 10) அறுவடை செய்யும்போது வரப்பு ஓரத்தில் உள்ள கதிர்களை முழுமையாக அறுவடை செய்யக் கூடாது, சிந்திய கதிர்களை எடுக்க கூடாது என இஸ்ரவேலருக்கு யெகோவா மேலும் கட்டளையிட்டார். அவற்றை ஏழைகளுக்காக விட்டுவிட வேண்டும் என்றார். (லேவியராகமம் 23:22; ரூத் 2:2-7) தங்கள் மத்தியில் இருந்த ஏழைகளுக்காக கொடுக்கப்பட்ட இந்த கரிசனைமிக்க சட்டத்தை இஸ்ரவேலர் பின்பற்றியபோது, ஏழை எளியவர்கள் உணவுக்காக பிச்சையெடுக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. இது யெகோவாவின் கரிசனையை வெளிக்காட்டவில்லையா?

13, 14. (அ) தனிநபர்களாக யெகோவா நம்மீது ஆழ்ந்த அக்கறை காட்டுகிறார் என்பதை தாவீதின் வார்த்தைகள் எவ்வாறு நமக்கு உறுதியளிக்கின்றன? (ஆ) ‘உள்ளம் உடைந்துபோனவர்களுக்கு’ அல்லது ‘மனம் நொந்துபோனவர்களுக்கு’ பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார் என்பதை எப்படி உதாரணத்துடன் விளக்கலாம்?

13 இன்றும் நம்முடைய அன்பான கடவுள் தனிநபர்களாக நம்மைப் பற்றி ஆழ்ந்த அக்கறை கொள்கிறார். நாம் படும் எந்த துன்பத்தையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு எழுதினார்: “யெகோவாவின் கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்கின்றன. உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.” (சங்கீதம் 34:15, 18) இந்த வார்த்தைகளில் வர்ணிக்கப்படுகிறவர்களைப் பற்றி பைபிள் உரையாசிரியர் ஒருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அவர்கள் உள்ளம் உடைந்துபோனவர்கள், மனமொடிந்தவர்கள், அதாவது பாவத்தால் கூனிக்குறுகியவர்கள், தன்மானம் இல்லாதவர்கள்; சுயமரியாதை இழந்தவர்கள், தங்களுடைய சுயகெளரவத்தில் எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள்.” யெகோவா மிகத் தொலைவில் இருக்கிறார் என்றும், அவருக்கு தாங்கள் மிகவும் அற்பமானவர்கள் என்பதால் தங்களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை என்றும் இப்படிப்பட்டவர்கள் உணரலாம். ஆனால் அது உண்மையல்ல. ‘சுயமரியாதை இழந்தவர்களை’ யெகோவா கைவிட்டுவிட மாட்டார் என்பதை தாவீதின் வார்த்தைகள் நமக்கு உறுதியளிக்கின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களில் முன்னொருபோதையும்விட அவர் நமக்குத் தேவை என்பதை நம்முடைய கரிசனையுள்ள கடவுள் அறிந்திருக்கிறார், ஆகவே நம் அருகிலேயே இருக்கிறார்.

14 ஓர் அனுபவத்தை கவனியுங்கள். ஐக்கிய மாகாணங்களில், இரண்டு வயது சிறுவன் ஒருவனின் உடல்நலம் மிகவும் மோசமாகிவிட்டது; அவனுடைய தாய் அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள். சிறுவனை பரிசோதித்த பின்பு, ராத்திரி அவன் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டுமென தாயிடம் டாக்டர்கள் கூறினார்கள். அந்த ராத்திரி முழுவதும் தாய் எங்கே இருந்தாள்? மருத்துவமனையின் அறையிலிருந்த ஒரு இருக்கையில், அவளுடைய மகனின் படுக்கைக்கு அருகிலேயே! அவளுடைய சின்னஞ்சிறு மகன் சுகவீனமாக இருந்தான், ஆகவே அவனுக்கு அருகிலேயே அவள் இருக்க வேண்டியிருந்தது. நம்முடைய அன்பான பரம தகப்பனிடமிருந்து இன்னும் அதிகத்தை நிச்சயமாகவே நாம் எதிர்பார்க்கலாம்! நாம் அவருடைய சாயலில்தானே படைக்கப்பட்டிருக்கிறோம்! (ஆதியாகமம் 1:26) நாம் ‘உள்ளம் உடைந்துபோய்’ அல்லது ‘மனம் நொந்துபோய்’ இருக்கும்போது, அன்பான தகப்பனைப் போல யெகோவா ‘பக்கத்திலேயே’ இருக்கிறார்—கரிசனையோடு உதவ எப்பொழுதும் தயாராகவும் இருக்கிறார்—என சங்கீதம் 34:18-ல் உள்ள நெஞ்சைத் தொடும் வார்த்தைகள் நமக்கு சொல்கின்றன.

15. தனிநபர்களாக யெகோவா நமக்கு என்ன வழிகளில் உதவுகிறார்?

15 அப்படியானால், தனிநபர்களாக யெகோவா நமக்கு எவ்வாறு உதவுகிறார்? கண்டிப்பாக நம்முடைய துன்பத்திற்குரிய காரணத்தை அவர் நீக்குவதில்லை. ஆனால் உதவிக்காக கூக்குரலிடுகிறவர்களுக்கு யெகோவா அபரிமிதமான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அவருடைய வார்த்தையாகிய பைபிள் நடைமுறையில் பயனளிக்கும் அறிவுரைகளை வழங்குகிறது. சபையில் ஆவிக்குரிய முதிர்ச்சி வாய்ந்த கண்காணிகளை யெகோவா ஏற்படுத்தியிருக்கிறார், இவர்கள் சக வணக்கத்தாருக்கு உதவி செய்வதில் அவருடைய கரிசனையைப் பின்பற்ற கடினமாக முயலுகிறார்கள். (யாக்கோபு 5:14, 15) மேலும், “ஜெபத்தைக் கேட்கிற” யெகோவா, ‘தன்னிடம் கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை கொடுக்கிறார்.’ (சங்கீதம் 65:2; லூக்கா 11:13) மனவேதனைக்குரிய பிரச்சினைகள் அனைத்தையும் கடவுளுடைய அரசாங்கம் நீக்கும்வரை சகித்திருப்பதற்கு உதவியாக, அந்த சக்தி “இயல்புக்கு மிஞ்சிய” பலத்தை நமக்கு வழங்க முடியும். (2 கொரிந்தியர் 4:7) இந்த ஏற்பாடுகள் அனைத்திற்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இல்லையா? அவை யெகோவாவின் கரிசனையின் வெளிப்பாடுகள் என்பதை மறந்துவிடாதிருப்போமாக.

16. யெகோவாவின் கரிசனைக்கு மிகச் சிறந்த உதாரணம் எது, தனிநபர்களாக அது நம்மை எவ்வாறு பாதிக்கிறது?

16 யெகோவாவின் கரிசனைக்கு மிகச் சிறந்த உதாரணம் மிகுந்த அன்புக்குரிய தமது மகனையே நமக்கு மீட்புவிலையாக தந்ததாகும். யெகோவாவின் பாகத்தில் இது ஓர் அன்பான தியாகம், அது நம்முடைய மீட்புக்கு வழிதிறந்தது. அந்த மீட்புவிலை ஏற்பாடு தனிப்பட்ட விதமாக நமக்குப் பயனளிக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தப் பரிசு ‘நம் கடவுள் காட்டுகிற கரிசனையை’ மகிமைப்படுத்தியது என நல்ல காரணத்தோடுதான் யோவான் ஸ்நானகரின் தகப்பன் சகரியா முன்னுரைத்தார்.—லூக்கா 1:77.

யெகோவா கரிசனை காண்பிக்க மறுக்கும்போது

17-19. (அ) யெகோவாவின் கரிசனைக்கு எல்லை உண்டு என்பதை பைபிள் எவ்வாறு காட்டுகிறது? (ஆ) யெகோவா தமது ஜனங்களுக்கு காட்டிய கரிசனை எதன் காரணமாக எல்லையை எட்டியது?

17 யெகோவாவின் கரிசனைக்கு எல்லையே இல்லை என நினைக்க வேண்டுமா? வேண்டியதில்லை, தமது நீதியான வழிகளுக்கு எதிராக நடப்பவர்களுக்கு இரக்கம் காண்பிக்க யெகோவா நியாயமாகவே மறுத்துவிடுகிறார் என பைபிள் தெளிவாக காட்டுகிறது. (எபிரெயர் 10:28) அவர் ஏன் அப்படி செய்கிறார் என்பதை புரிந்துகொள்வதற்கு, இஸ்ரவேலருடைய உதாரணத்தை நினைவுபடுத்திப் பாருங்கள்.

18 யெகோவா இஸ்ரவேலரை சத்துருக்களிடமிருந்து திரும்பத் திரும்ப மீட்டபோதிலும், அவருடைய கரிசனை கடைசியில் அதன் எல்லையை எட்டியது. பிடிவாதமுள்ள இந்த ஜனங்கள் சிலை வழிபாட்டில் தொடர்ந்து ஈடுபட்டார்கள், அருவருக்கத்தக்க சிலைகளை யெகோவாவின் ஆலயத்திற்கே கொண்டு வந்தார்கள்! (எசேக்கியேல் 5:11; 8:17, 18) மேலும், “உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள். அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள், அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள். திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது” என்று நமக்கு சொல்லப்படுகிறது. (2 நாளாகமம் 36:16) இனியும் கரிசனையை அனுபவிக்க அருகதையற்ற ஒரு நிலைக்கு இஸ்ரவேலர் வந்துவிட்டார்கள்; அவர்கள் யெகோவாவின் நீதியான கோபத்தைக் கிளறினார்கள். விளைவு என்ன?

19 யெகோவாவால் அதன் பிறகும் தமது ஜனங்களிடம் கரிசனை காண்பிக்க முடியவில்லை. “நான் அவர்கள்மேல் இரக்கமோ கரிசனையோ காட்ட மாட்டேன், பரிதாபப்பட மாட்டேன். எந்தக் காரணத்துக்காகவும் அவர்களை அழிக்காமல் விட மாட்டேன்” என்று அவர் அறிவித்தார். (எரேமியா 13:14) ஆகவே, எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்பட்டன, இஸ்ரவேலர் பாபிலோனுக்கு கைதிகளாக கொண்டு செல்லப்பட்டார்கள். கடவுளுடைய கரிசனை அதன் எல்லையை எட்டும் அளவுக்கு பாவமுள்ள மனிதர்கள் கலகத்தனம் செய்வது எவ்வளவு வருந்தத்தக்கது!—புலம்பல் 2:21.

20, 21. (அ) கடவுளுடைய கரிசனை நம்முடைய நாளில் அதன் எல்லையை எட்டும்போது என்ன சம்பவிக்கும்? (ஆ) அடுத்த அதிகாரத்தில் யெகோவாவின் கரிசனையுள்ள என்ன ஏற்பாடு சிந்திக்கப்படும்?

20 நம்முடைய நாளைப் பற்றி என்ன சொல்லலாம்? யெகோவா மாறவில்லை. கரிசனையின் காரணமாக, பூமியில் குடியிருக்கும் மக்கள் அனைவருக்கும் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய . . . நல்ல செய்தியை’ பிரசங்கிப்பதற்கு தம்முடைய சாட்சிகளை நியமித்திருக்கிறார். (மத்தேயு 24:14) நல்மனமுடைய ஜனங்கள் இந்த செய்திக்கு செவிசாய்க்கும்போது, அரசாங்கத்தின் செய்தியை கிரகித்துக்கொள்வதற்கு யெகோவா அவர்களுக்கு உதவுகிறார். (அப்போஸ்தலர் 16:14) ஆனால் இந்த வேலை முடிவின்றி என்றும் தொடராது. துன்பங்களும் துயரங்களும் இந்தப் பொல்லாத உலகில் முடிவின்றி தொடருவதற்கு அனுமதிப்பது யெகோவாவின் பங்கில் கரிசனையான செயலாகவே இருக்காது. கடவுளுடைய கரிசனை அதன் எல்லையை எட்டும்போது, இந்த உலகத்தை நியாயந்தீர்க்க அவர் வருவார். அப்பொழுதும்கூட, அவர் கரிசனையினால்—தமது “பரிசுத்தமான பெயர்” மீதும் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்கள் மீதும் உள்ள கரிசனையினால்—செயல்படுவார். (எசேக்கியேல் 36:20-23) யெகோவா துன்மார்க்கத்தை நீக்கி நீதியுள்ள புதிய உலகிற்கு நம்மை வழிநடத்திச் செல்வார். துன்மார்க்கரைக் குறித்து அவர் இவ்வாறு அறிவிக்கிறார்: “அவர்களைப் பார்த்து நான் பரிதாபப்பட மாட்டேன். அவர்கள்மேல் கரிசனை காட்ட மாட்டேன். அவர்கள் செய்த குற்றங்களுக்கான விளைவுகளை அவர்களே அனுபவிக்கும்படி செய்வேன்” என்று சொன்னார்.”—எசேக்கியேல் 9:10.

21 அதுவரை ஜனங்களுக்காக, அழிவை எதிர்ப்படுகிறவர்களுக்காகவும்கூட யெகோவா கரிசனை காட்டுகிறார். உள்ளப்பூர்வமாய் மனந்திரும்புகிற பாவமுள்ள மனிதர் யெகோவாவின் மிகுந்த கரிசனையுள்ள ஏற்பாடுகளில் ஒன்றாகிய மன்னிப்பிலிருந்து பயனடையலாம். அடுத்த அதிகாரத்தில், யெகோவாவின் மன்னிப்பு எந்தளவு முழுமையானது என்பதை சித்தரிக்கும் அழகிய உதாரணங்கள் சிலவற்றை நாம் ஆராய்வோம்.

a என்றாலும் சங்கீதம் 103:13-ல் பயன்படுத்தப்பட்டுள்ள ராக்காம் என்ற எபிரெய வினைச்சொல், ஒரு அப்பா தன் பிள்ளைகளிடம் காண்பிக்கும் கருணையை அல்லது இரக்கத்தை அர்த்தப்படுத்துவது ஆர்வத்திற்குரிய விஷயம்.

b “அதற்கு மேலும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்ற சொற்றொடர் சொல்லர்த்தமாக ‘அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை; அவருடைய பொறுமை தீர்ந்துவிட்டது’ என அர்த்தப்படுத்துகிறது. த நியூ இங்லிஷ் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “இனிமேலும் இஸ்ரவேலருடைய கஷ்டத்தைப் பார்த்து சகித்துக்கொண்டிருக்க அவரால் முடியவில்லை.” டனக்—பரிசுத்த வேதாகமத்தின் புதிய மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) அதை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “இஸ்ரவேலரின் துன்பங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.”