Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 31

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”

1-3. (அ) பெற்றோரையும் குழந்தையையும் கவனிப்பதிலிருந்து மனித இயல்பைக் குறித்து என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) நம்மிடம் அன்பு காட்டப்படும்போது இயல்பாகவே என்ன நடக்கிறது, என்ன முக்கியமான கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்?

 பச்சிளம் குழந்தையின் இனிய புன்முறுவலைப் பார்த்து தாய் தந்தை பூரித்துப் போகிறார்கள். சிரித்த முகத்தோடு குழந்தையை ஆசை ஆசையாக முத்தமிட்டு கொஞ்சி மகிழ்கிறார்கள். இந்தக் கொஞ்சலில் குழந்தை குதூகலிப்பதைப் பார்க்கவும் அவர்களுக்கு ஆவல். பிறகு என்ன, அம்மழலையின் பஞ்சுக் கன்னங்களில் குழி விழ, உதடுகள் மெல்ல விரிய, பூவாக மலரும் அந்த சிரிப்பு அவர்களை மகிழ்விக்கிறது. பாசத்தை சிந்தும் இந்தப் புன்சிரிப்பின் அழகே தனி அழகு; தாய் தந்தையின் அன்புச் சாரலில் பாப்பாவின் பாசப் புஷ்பம் மலர ஆரம்பிப்பதன் அடையாளமே இது.

2 குழந்தையின் புன்சிரிப்பு, மனித இயல்பைப் பற்றிய முக்கியமான ஒரு விஷயத்தை நமக்கு நினைவூட்டுகிறது. யாராவது அன்பு காட்டினால் பதிலுக்கு அன்பு காட்டுவதே நம் இயல்பு. நாம் படைக்கப்பட்டிருக்கும் விதமே அப்படித்தான். (சங்கீதம் 22:9) நாம் வளர வளர, அன்பு காட்டுவதிலும் வளருகிறோம். சிறுவயது முதல் பெற்றோரும் உற்றார் உறவினரும் உங்கள் மீது பாச மழை பொழிந்த விதங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். உங்கள் இதயத்தில் கனிவான உணர்ச்சி வேர்விட்டு, வளர்ந்து, செயலாக மலர்ந்தது. பதிலுக்கு நீங்களும் அன்பு காட்டினீர்கள். யெகோவா அப்பாவுடன் உள்ள உங்கள் உறவிலும் இதே போன்ற முன்னேற்றம் ஏற்படுகிறதா?

3 “கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டியதால் நாமும் அன்பு காட்டுகிறோம்” என பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:19) யெகோவா உங்கள் நன்மைக்காக தமது வல்லமையையும் நீதியையும் ஞானத்தையும் அன்போடு வெளிக்காட்டியிருக்கிறார் என்பதை இப்புத்தகத்தில் 1-3 வரையான பகுதிகள் நினைவூட்டின. அவர் குறிப்பிடத்தக்க வழிகளில் மனிதவர்க்கத்திற்கும், தனிப்பட்ட விதமாக உங்களுக்கும்கூட நேரடியாக அன்பு காட்டியிருக்கிறார் என்பதை பகுதி 4-ல் படித்தீர்கள். இப்போது ஒரு கேள்வி எழுகிறது. ‘யெகோவாவின் அன்பிற்கு நான் எப்படி பிரதிபலிப்பேன்?’ என்ற கேள்வி, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி என சொல்லலாம்.

கடவுளை நேசிப்பதன் அர்த்தம்

4. கடவுளை நேசிப்பதன் அர்த்தத்தைக் குறித்து மக்கள் எவ்விதமாக குழம்பிப் போயிருக்கிறார்கள்?

4 யெகோவாவே அன்பின் பிறப்பிடம்; மற்றவர்களிடம் உள்ள நற்குணங்களை வெளிக்கொணரும் சக்தி அன்புக்கு பெருமளவு உண்டு என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார். ஆகவே கீழ்ப்படியாத மனிதர்கள் தொடர்ந்து கலகத்தனம் செய்கிறபோதிலும், சிலராவது தம் அன்பை ஏற்று நன்றியோடு நடப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்திருக்கிறார். லட்சக்கணக்கானோர் அதைத்தான் செய்திருக்கிறார்கள். இருந்தாலும் சீர்கெட்ட இந்த உலகின் மதங்கள், கடவுளை நேசிப்பதன் அர்த்தத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடியாதபடி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பது வருத்தமான விஷயம். எண்ணற்றவர்கள் கடவுளை நேசிப்பதாக சொல்கிறார்கள், ஆனால் அவர் மீதுள்ள அன்பை வார்த்தையில் தெரிவித்தால் போதுமென அவர்கள் நினைப்பதாக தெரிகிறது. குழந்தை தன் பெற்றோர் மீதுள்ள அன்பை முதலில் புன்னகையால் காட்டுவதைப் போல்தான் கடவுள்மீது அன்பு துளிர்விட ஆரம்பிப்பதும் இருக்கலாம். ஆனால் பெரியவர்களைப் பொறுத்தமட்டில் அன்புக்கு இன்னும் அதிக அர்த்தம் உண்டு.

5. கடவுள் மீதான அன்பை பைபிள் எவ்வாறு விளக்குகிறது, இந்த விளக்கம் ஏன் நம் மனதை கவர வேண்டும்?

5 யெகோவா மீது அன்பு காட்டுவதன் அர்த்தத்தை அவரே விளக்குகிறார். “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும்” என அவருடைய வார்த்தையாகிய பைபிள் சொல்கிறது. ஆக, கடவுள் மீதான அன்பு செயலில் காட்டப்படுவது அவசியம். கீழ்ப்படிய வேண்டும் என்ற எண்ணமே அநேகருக்கு பிடிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் அதே வசனம், “அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என அன்பாக சொல்லி முடிக்கிறது. (1 யோவான் 5:3) யெகோவாவின் சட்டங்களும் நியமங்களும் நம் நன்மைக்கானவை, நம்மை பாரப்படுத்துவதற்கானவை அல்ல. (ஏசாயா 48:17, 18) கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் நியமங்கள் மலிந்து கிடக்கின்றன; கடவுளிடம் நெருங்கிச் செல்ல அவை நமக்கு உதவுகின்றன. எவ்வாறு? கடவுளோடு உள்ள நம் உறவின் மூன்று அம்சங்களை இப்போது நாம் சிந்திக்கலாம். உரையாடுவது, வணங்குவது, பின்பற்றுவது ஆகியவையே அவை.

யெகோவாவுடன் உரையாடுவது

6-8. (அ) நாம் எவ்விதத்தில் யெகோவா பேசுவதைக் கேட்கலாம்? (ஆ) வசனங்கள் உயிர் பெறும் விதத்தில் நாம் எவ்வாறு வாசிக்கலாம்?

6 “கடவுளோடு நீங்கள் உரையாடுவதாக கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?” என்ற கேள்வியோடு அதிகாரம் 1 துவங்கியது. இது வெறும் கற்பனை அல்ல என்பதையும் நாம் பார்த்தோம். மோசே உண்மையில் கடவுளோடு உரையாடினார். நாம் உரையாடுகிறோமா? இன்று யெகோவா தமது தூதர்கள் மூலமாக மனிதரோடு பேசுவதில்லை. ஆனால் வேறு சிறந்த வழிகளில் நம்மோடு இன்று பேசுகிறார். யெகோவா பேசுகையில் நாம் எவ்வாறு கேட்கலாம்?

7 “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.” ஆகவே யெகோவாவின் வார்த்தையாகிய பைபிளை வாசிக்கும்போது அவர் பேசுவதை நாம் கேட்கிறோம். (2 தீமோத்தேயு 3:16) இதனால்தான் பைபிளை “ராத்திரியும் பகலும்” வாசிக்கும்படி யெகோவாவின் ஊழியர்களை சங்கீதக்காரன் உற்சாகப்படுத்தினார். (சங்கீதம் 1:1, 2) அவ்வாறு செய்ய நம் பங்கில் கணிசமான முயற்சி தேவை. ஆனால் இப்படிப்பட்ட முயற்சி அனைத்தும் வீண் போகாது. 18-ஆம் அதிகாரத்தில் படித்த பிரகாரம், பைபிள் நம் பரலோக தந்தையிடமிருந்து வந்திருக்கும் மதிப்புமிக்க கடிதமாகும். ஆகவே அதை வாசிப்பதற்கு அலுத்துக்கொள்ளக் கூடாது. வசனங்கள் உயிர் பெறும் விதத்தில் அவற்றை வாசிக்க வேண்டும். அதை எப்படி செய்யலாம்?

8 பைபிள் பதிவுகளை வாசிக்கும்போது அவற்றை மனத் திரையில் ஓட விடுங்கள். பைபிள் கதாபாத்திரங்களை நிஜ ஆட்களாக பார்க்க முயலுங்கள். அவர்களுடைய பின்னணியையும் சூழ்நிலைகளையும் உள்நோக்கங்களையும் கிரகிக்க தவறாதீர்கள். பிறகு வாசித்ததைக் குறித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். அவ்வாறு சிந்திக்கையில் இதுபோன்ற கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்தப் பதிவு யெகோவாவைப் பற்றி எனக்கு எதை கற்பிக்கிறது? அவருடைய எந்தக் குணங்களை விசேஷமாக இங்கே கவனித்தேன்? எந்த நியமத்தை நான் கற்றுக்கொள்ள வேண்டுமென யெகோவா நினைக்கிறார்? அந்த நியமத்தை நான் எப்படி வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம்?’ இவ்வாறு, கடவுளுடைய வார்த்தையை வாசித்து, தியானித்து, கடைப்பிடிக்கும்போது அது உயிர் பெறுவதை காண்பீர்கள்.—சங்கீதம் 77:12; யாக்கோபு 1:23-25.

9. “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” யார், இவர்கள் பேசுவதை நாம் ஏன் கூர்ந்து கவனிக்க வேண்டும்?

9உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” மூலமாகவும் யெகோவா நம்மிடம் பேசுகிறார். இயேசு முன்னறிவித்த விதமாக, பிரச்சினைகள் நிறைந்த இந்தக் கடைசி நாட்களில் ஆன்மீக உணவை “ஏற்ற வேளையில்” அளிப்பதற்கு அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் ஒரு சிறிய தொகுதி நியமிக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 24:45-47) பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவை பெற நமக்கு உதவுவதற்காக தயாரிக்கப்படும் பிரசுரங்களை நாம் வாசித்து, கிறிஸ்தவ கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொள்ளும்போது அந்த அடிமை அளிக்கும் ஆன்மீக உணவை அருந்துகிறோம். அவர்கள் கிறிஸ்துவின் அடிமை என்பதால் “நீங்கள் கேட்கிற விதத்துக்குக் கவனம் செலுத்துங்கள்” என்ற இயேசுவின் அறிவுரைக்கு செவிசாய்ப்பது ஞானமானது. (லூக்கா 8:18) யெகோவா நம்மிடம் பேசுவதற்கு உண்மையுள்ள அடிமையையும் பயன்படுத்துகிறார் என புரிந்துகொண்டு அவர்கள் பேசுவதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

10-12. (அ) ஜெபம் யெகோவா தந்திருக்கும் அருமையான பரிசு என ஏன் சொல்லலாம்? (ஆ) யெகோவாவை மகிழ்விக்கும் விதத்தில் நாம் எவ்வாறு ஜெபிக்கலாம், நம் ஜெபங்களை அவர் மதிக்கிறார் என ஏன் நிச்சயமாக இருக்கலாம்?

10 ஆனால் கடவுளிடம் உரையாடுவதைப் பற்றி என்ன சொல்லலாம்? நம்மால் யெகோவாவிடம் பேச முடியுமா? அதை நினைத்தாலே உடல் புல்லரிக்கிறது அல்லவா? உங்கள் நாட்டிலேயே மிகப் பெரிய தலைவரை சந்தித்து உங்கள் சொந்த பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கு நீங்கள் முயற்சி செய்தால், எந்தளவு வெற்றி பெறுவீர்கள்? சிலசமயம் அவ்வாறு முயற்சி செய்வதே ஆபத்தாகிவிடலாம்! எஸ்தரும் மொர்தெகாயும் வாழ்ந்த காலத்தில், முறைப்படியான அழைப்பின்றி பெர்சிய அரசரை சந்திக்க சென்றவர்கள் மரண தண்டனை பெறும் வாய்ப்பிருந்தது. (எஸ்தர் 4:10, 11) ஆக, இந்த பிரபஞ்சத்தின் பேரரசருக்கு முன்பு செல்வதை கற்பனை செய்து பாருங்கள்; மிகுந்த அதிகாரம் படைத்த மனிதர்கள்கூட இவருக்கு வெறும் “வெட்டுக்கிளிகள்போல்” இருக்கிறார்கள்! (ஏசாயா 40:22) அப்படியென்றால் அவரை அணுக நாம் பயந்து நடுங்க வேண்டுமா? வேண்டியதே இல்லை!

11 யெகோவா தம்மை அணுகுவதற்கு ஓர் எளிய முறையை அனைவருக்குமே அளித்திருக்கிறார், அதுதான் ஜெபம். சின்னஞ்சிறு பிள்ளைகூட இயேசுவின் பெயரில் யெகோவாவிடம் விசுவாசத்தோடு ஜெபிக்க முடியும். (யோவான் 14:6; எபிரெயர் 11:6) அதேசமயத்தில் உள்ளூர இருக்கும் இனம்புரியாத எண்ணங்களையும் உணர்வுகளையும்—வார்த்தைகளால் விவரிக்க இயலாத வேதனை உணர்வுகளையும்கூட—யெகோவாவிடம் தெரிவிக்க ஜெபம் நமக்கு உதவுகிறது. (ரோமர் 8:26) சொல் நயத்தோடும் வார்த்தை ஜாலத்தோடும் ஜெபம் செய்து யெகோவாவை கவர முயல்வதில் பிரயோஜனமே இல்லை; அதேபோல் மிகுதியான சொற்களை நெடுநேரம் அடுக்கிக்கொண்டே போவதும் பயனற்றது. (மத்தேயு 6:7, 8) மறுபட்சத்தில், எவ்வளவு நேரம் அல்லது எவ்வளவு அடிக்கடி தம்மிடம் பேசலாம் என்ற விஷயத்தில் யெகோவா எந்த வரம்புகளையும் வைப்பதில்லை. “எப்போதும் ஜெபம் செய்யுங்கள்” என்று அவருடைய வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துகிறது.—1 தெசலோனிக்கேயர் 5:17.

12 யெகோவா மட்டும்தான் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என அழைக்கப்படுகிறார் என்பதை நினைவில் வையுங்கள்; அவர் நாம் சொல்வதை உள்ளப்பூர்வமான அனுதாபத்தோடு கேட்கிறார். (சங்கீதம் 65:2) தம் உண்மை ஊழியர்களின் ஜெபங்களை அவர் வெறுமனே சகித்துக்கொள்கிறாரா? இல்லை, அவற்றில் இன்பங்காண்கிறார். அப்படிப்பட்ட ஜெபங்களை தூபப்பொருளுக்கு பைபிள் ஒப்பிடுகிறது; தூபப்பொருள் எரிக்கப்படுகையில் இனிய சுகந்த வாசனை கமகமவென மேல்நோக்கி எழுகிறது. (சங்கீதம் 141:2; வெளிப்படுத்துதல் 5:8; 8:4) நம் உள்ளப்பூர்வ ஜெபங்களும் அதே விதமாக மேலே போய் உன்னதப் பேரரசரின் மனதை மகிழ்விப்பதை அறிவது அதிக ஆறுதலளிக்கிறது அல்லவா? ஆகவே யெகோவாவிடம் நெருங்கிச் செல்ல நீங்கள் விரும்பினால் தினமும் பலமுறை அவரிடம் மனத்தாழ்மையோடு ஜெபம் செய்யுங்கள். உங்கள் இதயத்தை அவரிடம் ஊற்றிவிடுங்கள்; எதையுமே மனதில் போட்டு அமுக்கி வைக்காதீர்கள். (சங்கீதம் 62:8) உங்கள் கவலைகள், சந்தோஷங்கள், நன்றிகள், துதிகள் என அனைத்தையுமே உங்கள் பரலோக தந்தைக்கு தெரியப்படுத்துங்கள். அப்படிச் செய்தால் உங்களுக்கும் அவருக்கும் இருக்கும் பிணைப்பு மேன்மேலும் உறுதியாகும்.

யெகோவாவை வணங்குவது

13, 14. யெகோவாவை வணங்குவதன் அர்த்தம் என்ன, அவரை வணங்குவது ஏன் தகுந்தது?

13 நாம் யெகோவாவிடம் உரையாடுவது ஒரு நண்பரிடமோ உறவினரிடமோ உரையாடுவதைப் போன்றது அல்ல; நாம் ஏதோ கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இல்லை. உண்மையில் நாம் யெகோவாவை வணங்குகிறோம். அவருக்கே உரிய மதிப்பையும் பயபக்தியையும் காட்டுகிறோம். உண்மை வணக்கம் நம் முழு வாழ்க்கை முறையையும் கட்டுப்படுத்துகிறது. யெகோவாவிற்கு நம் இதயப்பூர்வ அன்பையும் பக்தியையும் காட்டுவதற்குரிய வழி அதுவே. அந்த வணக்கம் யெகோவாவின் உண்மையுள்ள சிருஷ்டிகள் அனைவரையும்—பரலோகத்தில் இருந்தாலும் சரி பூமியிலும் இருந்தாலும் சரி—ஒன்றுபடுத்துகிறது. ஒரு தேவதூதர் இந்தக் கட்டளையை அறிவிப்பதாக அப்போஸ்தலனாகிய யோவான் தரிசனத்தில் கேட்டார்: “வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் படைத்தவரை வணங்குங்கள்.”—வெளிப்படுத்துதல் 14:7.

14 நாம் ஏன் யெகோவாவை வணங்க வேண்டும்? இந்தப் புத்தகத்தில் நாம் கலந்தாராய்ந்த குணங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்; பரிசுத்தம், வல்லமை, சுயக்கட்டுப்பாடு, நீதி, தைரியம், இரக்கம், ஞானம், மனத்தாழ்மை, அன்பு, கரிசனை, பற்றுமாறாமல் நடப்பது, நல்மனம் என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த ஒவ்வொரு அரும்பெரும் குணத்தின் சிகரமாக, தராதரத்தின் மணிமகுடமாக யெகோவா நிகரற்று விளங்குவதைப் பற்றி படித்தோம். இந்த எல்லா குணங்களும் ஒருசேர அமைந்த யெகோவாவின் குணாதிசயத்தை கிரகிக்க முயலுகையில், அபிமானத்திற்குரிய எந்த மாமனிதரைக் காட்டிலும் அவர் விஞ்சி நிற்கிறார் என புரிந்துகொள்கிறோம். அவர் மகிமையில் மட்டற்றவர், அளவிட முடியாதளவு உயர்ந்தவர். (ஏசாயா 55:9) கேள்விக்கிடமின்றி, யெகோவாவே நமது உரிமையுள்ள பேரரசர், நம் வணக்கத்தைப் பெற நிச்சயமாகவே தகுந்தவர். ஆகவே நாம் எப்படி யெகோவாவை வணங்குவது?

15. நாம் எவ்வாறு யெகோவாவை “அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்” வணங்கலாம், கிறிஸ்தவ கூட்டங்கள் நமக்கு என்ன வாய்ப்புக்களை அளிக்கின்றன?

15 “கடவுள் பார்க்க முடியாத உருவத்தில் இருக்கிறார். அவரை வணங்குகிறவர்கள் அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க வேண்டும்” என இயேசு குறிப்பிட்டார். (யோவான் 4:24) விசுவாசமும் அன்பும் நிறைந்த உள்ளத்தோடு, பரிசுத்த சக்தியின் உதவியோடு யெகோவாவை வணங்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். சத்தியத்திற்கு, அதாவது கடவுளுடைய வார்த்தையில் உள்ள திருத்தமான அறிவுக்கு இசைவாக வணங்குவதையும் அது அர்த்தப்படுத்துகிறது. உடன் வணக்கத்தாருடன் கூடிவரும் போதெல்லாம் யெகோவாவை “அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்” வணங்கும் அரிய வாய்ப்பு நமக்கு உண்டு. (எபிரெயர் 10:24, 25) யெகோவாவிற்கு துதிப்பாடல்களை பாடி, ஒன்றுசேர்ந்து ஜெபித்து, அவருடைய வார்த்தையாகிய பைபிள் சார்ந்த கலந்தாலோசிப்புகளுக்கு செவிசாய்க்கவும் அதில் பங்கேற்கவும் செய்தால், உண்மை வணக்கத்தின் வாயிலாக அவரிடம் அன்பு காட்டுவோம்.

கிறிஸ்தவ கூட்டங்கள், யெகோவாவை வணங்குவதற்கான இனிய சந்தர்ப்பங்கள்

16. உண்மை கிறிஸ்தவர்களின் மிகப் பெரிய பொறுப்புகளில் ஒன்று என்ன, அந்தப் பொறுப்பை நிறைவேற்ற நாம் ஏன் தூண்டப்படுகிறோம்?

16 நாம் யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசி, அவரை வெளிப்படையாக துதிக்கும்போதும் அவரை வணங்குகிறோம். (எபிரெயர் 13:15) சொல்லப்போனால், யெகோவாவின் அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிப்பது உண்மை கிறிஸ்தவர்களின் மிகப் பெரிய பொறுப்புகளில் ஒன்று. (மத்தேயு 24:14) நாம் யெகோவாவை நேசிப்பதால் மிகுந்த ஆர்வத்தோடு இந்தப் பொறுப்பை நிறைவேற்றுகிறோம். ‘இந்த உலகத்தின் கடவுளான’ பிசாசாகிய சாத்தான் யெகோவாவைப் பற்றி விஷமமான பொய்களை பரப்புவதன் மூலம் ‘விசுவாசிகளாக இல்லாதவர்களுடைய மனக்கண்களை குருடாக்கியிருக்கும்’ விதத்தை நாம் எண்ணிப் பார்க்கையில், நமது கடவுள் சார்பாக சாட்சி கொடுக்க ஏங்குகிறோம் அல்லவா? அவனது பழியை பொய்யென நிரூபிக்க துடிக்கிறோம் அல்லவா? (2 கொரிந்தியர் 4:4; ஏசாயா 43:10-12) யெகோவாவின் மணி மணியான குணங்களை சிந்திக்கையில், மற்றவர்களிடம் அவரைப் பற்றி பேச வேண்டுமென்ற ஆவல் உள்ளத்தில் பெருக்கெடுக்கிறது அல்லவா? நமது பரலோகத் தந்தையைப் பற்றி அறிந்துகொள்ளவும் நம்மைப் போலவே அவரை நேசிக்கவும் மற்றவர்களுக்கு உதவுவதைக் காட்டிலும் சிறந்ததோர் பாக்கியம் வேறு எதுவும் இல்லை.

17. யெகோவாவை வணங்குவதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது, நாம் ஏன் உத்தமத்தோடு அவரை வணங்க வேண்டும்?

17 யெகோவாவை வணங்குவதில் இன்னும் அதிக காரியங்கள் உட்பட்டிருக்கின்றன. அவை நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கின்றன. (கொலோசெயர் 3:23) யெகோவாவை நம் உன்னத பேரரசராக உண்மையிலேயே ஏற்றுக்கொண்டால், எல்லாவற்றிலும் அவரது விருப்பத்தை செய்ய முயல்வோம்; குடும்பத்தில், வேலை செய்யும் இடத்தில், மற்றவர்களை நடத்தும் விதத்தில், ஓய்வுநேரத்தில் என எங்கும் எதிலும் அவரது விருப்பத்திற்கே முதலிடம் தருவோம். யெகோவாவை “முழு இதயத்தோடு” சேவிக்க முயல்வோம். (1 நாளாகமம் 28:9) அப்படிப்பட்ட வணக்கத்தில், அரைமனதோடு சேவிப்பதற்கும் இடமில்லை, இரட்டை வேடம் போடுவதற்கும் இடமில்லை; அதாவது யெகோவாவை சேவிப்பதாக மாய்மாலம் செய்துகொண்டு பெரும் பாவங்களை ரகசியமாக செய்வதற்கு இடம் இல்லை. உத்தமமும் மாய்மாலமும் இரு துருவங்கள்; அன்புக்கு மாய்மாலம் எட்டிக்காய். தெய்வீக பயம் மாய்மாலத்தை அண்டவிடாது. அப்படிப்பட்ட பயமும் பக்தியும் இருந்தால் யெகோவாவுடன் நெருங்கிய நட்பை தொடர்ந்து அனுபவித்து மகிழலாம் என பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 25:14.

யெகோவாவை பின்பற்றுவது

18, 19. குறையுள்ள மனிதர்களால் யெகோவாவை பின்பற்ற முடியுமென நினைப்பது ஏன் எதார்த்தமானது?

18 இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும், ‘அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுவது’ எப்படி என ஒரு அதிகாரம் விளக்கியது. (எபேசியர் 5:1) நாம் பாவ இயல்புள்ளவர்கள் என்பது உண்மைதான்; ஆனால் வல்லமையை பயன்படுத்துவதிலும் நீதியை வெளிக்காட்டுவதிலும் ஞானமாக செயல்படுவதிலும் அன்பைப் பொழிவதிலும் யெகோவாவின் பரிபூரண உதாரணத்தை நம்மால் கண்டிப்பாக பின்பற்ற முடியும் என்பதை நினைவில் வைப்பது அவசியம். சர்வவல்லமையுள்ள கடவுளை உண்மையிலேயே நம்மால் பின்பற்ற முடியும் என எப்படி தெரியும்? யெகோவா என்ற பெயரின் அர்த்தத்தை நினைத்துப் பாருங்கள்; அவர் தமது நோக்கங்களை நிறைவேற்ற எவ்வாறெல்லாம் ஆக வேண்டுமென விரும்புகிறாரோ அவ்வாறெல்லாம் ஆகிறார் என அது நமக்கு கற்பிக்கிறது. அந்தத் திறன் நம்மை மலைக்க வைப்பது உண்மையே, ஆனால் அவரை பின்பற்றுவது நம் சக்திக்கு அப்பாற்பட்டதா? இல்லவே இல்லை.

19 நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 1:26) ஆகவே மனிதர்களாகிய நாம் பூமியில் உள்ள மற்ற எந்த உயிரினங்களைக் காட்டிலும் விசேஷித்தவர்கள். இயல்புணர்ச்சியால், மரபியல் அமைப்பால், அல்லது சுற்றுச்சூழலால் மட்டுமே நாம் கட்டுப்படுத்தப்படுவதில்லை. முடிவு எடுக்கும் சுதந்திரம் எனும் மதிப்புமிக்க பரிசாக யெகோவா நமக்கு வழங்கியிருக்கிறார். நம் வரம்புகள் மற்றும் குறைகள் மத்தியிலும், எப்படிப்பட்ட நபராக ஆவது என்பதை தெரிவுசெய்ய நமக்கு சுதந்திரம் உண்டு. அதோடு, தன்னுடைய ஊழியர்கள் எப்படியெல்லாம் ஆக வேண்டுமென கடவுள் விரும்புகிறாரோ, அப்படியெல்லாம் அவரால் அவர்களை மாற்ற முடியும். இதுவும் அவருடைய பெயரின் அர்த்தம். அப்படியென்றால், அதிகாரத்தை சரியாக பயன்படுத்தும், அன்பான, ஞானமான, நியாயமான நபராக ஆவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? யெகோவாவுடைய சக்தியின் உதவியோடு உங்களால் அப்படியே ஆக முடியும்! அதனால் எப்பேர்ப்பட்ட நன்மைகளை அடையலாம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

20. யெகோவாவை பின்பற்றுகையில் என்ன நன்மைகளை பெறலாம்?

20 நீங்கள் பரலோக தந்தைக்கு பிரியமாக நடந்து, அவரது மனதை மகிழ்விப்பீர்கள். (நீதிமொழிகள் 27:11) யெகோவாவை ‘முழுமையாகப் பிரியப்படுத்தவும்’ உங்களால் முடியும், ஏனெனில் அவர் உங்கள் வரம்புகளை புரிந்துகொள்கிறார். (கொலோசெயர் 1:9, 10) உங்கள் பிரியத்திற்குரிய தகப்பனைப் பின்பற்றி தங்கமான குணங்களை தொடர்ந்து வளர்த்துக்கொள்கையில், பெரும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். கடவுளிடமிருந்து விலகியிருக்கும் இந்த இருண்ட உலகிற்கு நீங்கள் ஒளி கொண்டு செல்வீர்கள். (மத்தேயு 5:1, 2, 14) யெகோவாவின் அற்புத குணாதிசயத்தின் சில பிரதிபலிப்புகளை பூமியெங்கும் பிரஸ்தாபம் செய்ய உதவிக்கரம் நீட்டுவீர்கள். எப்பேர்ப்பட்ட மதிப்பான பங்கு!

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”

நீங்கள் எப்போதும் யெகோவாவிடம் நெருங்கி வருவீர்களாக

21, 22. யெகோவாவை நேசிக்கும் அனைவருக்கும் என்ன முடிவில்லா பயணம் காத்திருக்கிறது?

21 யாக்கோபு 4:8-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் எளிய அறிவுரை ஒரு லட்சியம் மட்டுமல்ல. அது ஒரு பயணம். நாம் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்கும் வரை அந்த பயணத்திற்கு முடிவே இல்லை. யெகோவாவிடம் மேன்மேலும் நெருங்கிச் சென்று கொண்டே இருப்போம். உண்மையில் அவரைப் பற்றி கற்றுக்கொள்ள எப்போதுமே ஏராளம் இருக்கும். யெகோவாவைப் பற்றிய எல்லா விஷயங்களையும் இந்தப் புத்தகம் நமக்கு கற்றுத் தந்துவிட்டதாக நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. சொல்லப்போனால், கடவுளைப் பற்றி பைபிள் சொல்லும் அனைத்தையும் கலந்தாலோசிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்றுகூட சொல்ல முடியாது! யெகோவாவைப் பற்றிய எல்லா விவரங்களும் பைபிளில்கூட இல்லை. இயேசு பூமிக்குரிய ஊழியத்தின்போது செய்த அனைத்தையும் எழுதினால், “எழுதப்படும் சுருள்களை உலகமே கொள்ளாது” என தான் நினைப்பதாக அப்போஸ்தலன் யோவான் கூறினார். (யோவான் 21:25) மகனைப் பற்றியே இப்படி சொன்னால், தகப்பனைப் பற்றி என்னவென்பது!

22 என்றென்றைக்கும் வாழும்போதுகூட யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு முடிவே இருக்காது. (பிரசங்கி 3:11) நமக்கு முன் இருக்கும் வாய்ப்பை சற்று சிந்தித்துப் பாருங்கள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கான ஆண்டுகள்கூட வாழ்ந்த பிறகு யெகோவாவைப் பற்றி இப்போதைவிட மிக அதிகம் அறிந்திருப்போம். ஆனாலும் கற்றுக்கொள்வதற்கு எண்ணற்ற அருமையான காரியங்கள் இன்னும் உண்டு என்பதை உணர்ந்திருப்போம். அதிகமதிகமாக கற்றுக்கொள்ள ஆர்வத்தோடு இருப்போம்; ஏனென்றால் “கடவுளிடம் நெருங்கிப் போவதுதான் எனக்கு நல்லது” என்று பாடிய சங்கீதக்காரனைப் போலவே உணர நமக்கு எப்போதும் தகுந்த காரணம் இருக்கும். (சங்கீதம் 73:28) முடிவில்லாத வாழ்வு நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு சுவாரஸ்யமாகவும் பல்சுவையூட்டுவதாகவும் இருக்கும்; யெகோவாவிடம் நெருங்கிச் செல்வதே எப்போதும் அதன் சிறப்பம்சமாக இருக்கும்.

23. என்ன செய்யும்படி நீங்கள் உற்சாகப்படுத்தப்படுகிறீர்கள்?

23 யெகோவா உங்கள் மீது அன்பு காட்டுவதால், பதிலுக்கு நீங்களும் முழு இதயத்தோடும் மூச்சோடும் மனதோடும் பலத்தோடும் இப்போதே அவரிடம் அன்பு காட்டுவீர்களாக. (மாற்கு 12:29, 30) பற்றுமாறாத, நிலையான அன்பைக் காட்டுவீர்களாக. தினம் தினம் நீங்கள் செய்யும் சின்ன தீர்மானங்கள் முதல் பெரிய தீர்மானங்கள் வரை அனைத்தும் ஒரே குறிக்கோளுக்கு கைகொடுப்பதாக; அதாவது, பரலோக தந்தையுடன் உள்ள உங்கள் உறவை மேன்மேலும் பலப்படுத்தும் வழியையே எப்போதும் தேர்ந்தெடுப்பீர்கள் என்ற குறிக்கோளுக்கு துணைபோவதாக. எல்லாவற்றிற்கும் மேலாக, நித்திய காலமெல்லாம் யெகோவாவிடம் மேன்மேலும் நெருங்கி வருவீர்களாக, அவரும் உங்களிடம் மேன்மேலும் நெருங்கி வருவாராக!