Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 9

ஆசையாக இருந்தாலும் தவறு செய்யக்கூடாது

ஆசையாக இருந்தாலும் தவறு செய்யக்கூடாது

தவறான காரியத்தை செய்யும்படி யாராவது உன்னிடம் சொல்லியிருக்கிறார்களா?— ‘எங்கே செய்து காட்டு பார்க்கலாம்’ என்று சவால் விட்டிருக்கிறார்களா? அல்லது அதை செய்தால் ஜாலியாக இருக்கும், அதில் தவறே இல்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்களா?— அப்படிப்பட்டவர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள் தெரியுமா? ஆசைகாட்டுகிறார்கள்.

நமக்கு யாராவது ஆசைகாட்டும்போது என்ன செய்ய வேண்டும்? அவர்கள் பேச்சை நம்பி தவறு செய்யலாமா?— செய்யக்கூடாது. ஏனென்றால் அது யெகோவா தேவனுக்குப் பிடிக்காது. ஆனால் அது யாருக்குப் பிடிக்கும் தெரியுமா?— பிசாசாகிய சாத்தானுக்குப் பிடிக்கும்.

சாத்தான் கடவுளுக்கு எதிரி. அவன் நமக்கும் எதிரிதான். அவன் ஆவி ரூபத்தில் இருக்கிறான். அதனால் நாம் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவன் நம்மை பார்க்க முடியும். ஒருமுறை பெரிய போதகரான இயேசுவிடம் சாத்தான் பேசினான். அவருக்கு ஆசைகாட்ட முயற்சி செய்தான். இயேசு என்ன செய்தார் என்று பார்க்கலாம். அப்போதுதான் நமக்கும் யாராவது ஆசைகாட்டும்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள முடியும்.

இயேசு முழுக்காட்டுதல் பெற்றபோது எதெல்லாம் அவருக்கு ஞாபகம் வந்திருக்கலாம்?

இயேசு எப்போதுமே கடவுளுடைய விருப்பப்படி நடக்க ஆசைப்பட்டார். யோர்தான் நதியில் முழுக்காட்டுதல் பெற்றதன் மூலம், அந்த ஆசையை வெளிப்படையாகவும் காட்டினார். இயேசு முழுக்காட்டப்பட்டு சில நாட்களிலேயே சாத்தான் அவருக்கு ஆசைகாட்ட முயற்சி செய்தான். இயேசுவின் முழுக்காட்டுதல் சமயத்தில் ‘பரலோகம் அவருக்கு திறக்கப்பட்டது’ என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 3:16) இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பரலோகத்தில் கடவுளோடு வாழ்ந்த அனுபவம் எல்லாம் இயேசுவின் ஞாபகத்திற்கு வர ஆரம்பித்தது என்று அர்த்தம்.

முழுக்காட்டுதல் பெற்ற பிறகு இயேசு ஒரு பொட்டல் காட்டிற்கு போனார். அங்கே, தனக்கு ஞாபகம் வந்த விஷயங்களைப் பற்றி ஆழமாக யோசிக்க தொடங்கினார். ராத்திரி பகலாக நாற்பது நாட்கள் அங்கேயே இருந்தார். அப்போது அவர் சாப்பிடவே இல்லை. அதனால் அந்த நாற்பது நாட்கள் முடிந்த பிறகு மிகவும் பசியாக இருந்தார். இந்த சமயம் பார்த்து சாத்தான் இயேசுவுக்கு ஆசைகாட்ட முயற்சி செய்தான்.

சாத்தான் எவ்வாறு கல்லுகளை பயன்படுத்தி இயேசுவுக்கு ஆசைகாட்டினான்?

‘நீ கடவுளுடைய மகன் என்றால் இந்தக் கல்லுகளை அப்பமாக மாற்று பார்க்கலாம்’ என்று சாத்தான் சொன்னான். பசிநேரத்தில் அந்த அப்பங்கள் எவ்வளவு ருசியாக இருந்திருக்கும்! ஆனால் கல்லுகளை அப்பங்களாக மாற்ற இயேசுவினால் முடிந்திருக்குமா?— அவரால் முடிந்திருக்கும். ஏன் தெரியுமா? ஏனென்றால் அவர் கடவுளுடைய மகன். ஆகவே அற்புதங்கள் செய்ய அவருக்கு சக்தி இருந்தது.

ஒரு கல்லை அப்பமாக மாற்றும்படி பிசாசு உன்னிடம் சொல்லியிருந்தால் நீ அதை செய்திருப்பாயா?— இயேசு பசியாக இருந்தார். அதனால் ஒரேவொரு முறை இந்த அற்புதத்தை செய்வது தவறா?— தன் சக்திகளை இந்த மாதிரி பயன்படுத்துவது தவறு என்று இயேசு அறிந்திருந்தார். ஏனென்றால் மக்களை கடவுளிடம் நெருங்கி வர செய்வதற்காகத்தான் அவருக்கு அந்த சக்திகள் கொடுக்கப்பட்டன. அவரது சொந்த ஆசைகளை தீர்த்துக்கொள்வதற்காக கொடுக்கப்படவில்லை.

ஆகவே பிசாசு கேட்டபடி இயேசு செய்யவில்லை. அதற்குப் பதிலாக பைபிளில் எழுதப்பட்டிருப்பதை அவனிடம் சொன்னார். ‘மனிதன் வெறும் அப்பத்தை சாப்பிட்டு வாழக்கூடாது, யெகோவாவின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையாலும் வாழ வேண்டும்’ என்று கூறினார். யெகோவாவுக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்வதுதான் சாப்பிடுவதைவிட முக்கியம் என்று இயேசுவுக்கு தெரியும்.

ஆனால் பிசாசு மறுபடியும் முயற்சி செய்தான். இயேசுவை எருசலேமுக்கு கூட்டிக்கொண்டு போனான். அங்கே ஆலயத்தின் உயர்ந்த பகுதியில் அவரை நிற்க வைத்தான். பிறகு, ‘நீ கடவுளுடைய மகன் என்றால், இங்கிருந்து கீழே குதி. உனக்கு காயம் ஏற்படாதபடி கடவுளுடைய தூதர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே’ என்றான்.

சாத்தான் ஏன் இப்படிச் சொன்னான் தெரியுமா?— இயேசுவுக்கு ஆசைகாட்டி முட்டாள்தனமான ஒன்றை செய்ய வைப்பதற்காகவே இப்படிச் சொன்னான். ஆனால் இயேசு இந்த முறையும் சாத்தான் பேச்சைக் கேட்கவில்லை. ‘“உன் கடவுளாகிய யெகோவாவை சோதிக்கக்கூடாது” என்று எழுதியிருக்கிறதே’ என்றார். தன் உயிருக்கு ஆபத்தை வரவழைப்பதன் மூலம் யெகோவாவை சோதிக்கக் கூடாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆனாலும் சாத்தான் விடுவதாக இல்லை. இப்போது இயேசுவை மிக உயரமான ஒரு மலைக்கு கூட்டிக்கொண்டு போனான். அங்கிருந்து, உலகிலுள்ள எல்லா ராஜ்யங்களையும், அதாவது அரசாங்கங்களையும் அவற்றின் மகிமையையும் காட்டினான். பிறகு, ‘ஒரேவொரு முறை நீ என் காலில் விழுந்து என்னை வணங்கினால் இந்த எல்லாவற்றையும் உனக்கே கொடுத்துவிடுவேன்’ என்றான்.

சாத்தான் என்ன கொடுப்பதாக சொன்னான் என்று யோசித்துப் பார். இந்த எல்லா ராஜ்யங்களும், அதாவது மனிதனுடைய எல்லா அரசாங்கங்களும் உண்மையில் சாத்தானுக்கா சொந்தம்?— அது சாத்தானுடையது என்பதை இயேசு மறுக்கவில்லை. அது அவனுக்கு சொந்தமாக இல்லையென்றால் இயேசு அதை சொல்லியிருப்பார். ஆகவே இந்த உலகிலுள்ள தேசங்கள் எல்லாவற்றையும் உண்மையில் சாத்தானே ஆட்சி செய்கிறான். பைபிள் அவனை “இந்த உலகத்தின் அதிபதி” என்றுகூட அழைக்கிறது.—யோவான் 12:31.

சாத்தானால் எப்படி எல்லா ராஜ்யங்களையும் கொடுப்பதாக இயேசுவிடம் சொல்ல முடிந்தது?

சாத்தான் உனக்கு ஏதாவது தருவதாக சொன்னால் நீ அவனை வணங்கிவிடுவாயா?— சாத்தான் எதைக் கொடுத்தாலும் அவனை வணங்குவது தவறு என்பது இயேசுவுக்கு தெரியும். ஆகவே, ‘அப்பாலே போ சாத்தானே! யெகோவாவை மட்டும்தான் வணங்க வேண்டும், அவரை மட்டும்தான் சேவிக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறதே’ என்றார்.—மத்தேயு 4:1-10; லூக்கா 4:1-13.

உனக்கு யாராவது ஆசைகாட்டினால் என்ன செய்வாய்?

தவறான ஆசைகள் நமக்கும் வரலாம். இதற்கு சில உதாரணங்களை உன்னால் சொல்ல முடியுமா?— நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். உன்னுடைய அம்மா ரொம்ப ருசியான குளோப் ஜாமூனை அல்லது கேக்கை செய்கிறார்கள் என வைத்துக்கொள். ஆனால் சாப்பாடு சாப்பிட்ட பிறகுதான் இதைத் தொட வேண்டும் என்று ஒருவேளை உன்னிடம் சொல்லலாம். உனக்கோ ஒரே பசி. ஆகவே அதை முதலில் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆசை வரலாம். அப்போது அம்மா பேச்சைக் கேட்பாயா?— அம்மா பேச்சை நீ மீற வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான்.

இயேசுவை நினைத்துக்கொள். அவரும் ரொம்ப பசியாக இருந்தார். ஆனால் சாப்பிடுவதைவிட கடவுளுக்கு பிரியமானதை செய்வதுதான் மிகவும் முக்கியம் என்று அவருக்கு தெரிந்திருந்தது. உன் அம்மா பேச்சைக் கேட்டால் நீயும் இயேசுவைப் போல் நடந்துகொள்வாய்.

இப்போது இன்னொரு உதாரணம் சொல்கிறேன். மற்ற பிள்ளைகள் உன்னிடம் சில மாத்திரைகளைக் கொடுத்து சாப்பிடச் சொல்லலாம். அதை சாப்பிட்டால் காற்றில் மிதப்பதுபோல் ஜாலியாக இருக்கும் என்றும் சொல்லலாம். ஆனால் அந்த மாத்திரைகள் போதைப்பொருளாக இருக்கலாம். அதை சாப்பிட்டால் உன் உடம்பு ரொம்ப கெட்டுப்போகும். நீ செத்தும் போகலாம். ஒரு சிகரெட்டைக்கூட யாராவது உன்னிடம் கொடுக்கலாம். அதிலும் போதைப்பொருள் இருக்கும். இந்த சிகரெட்டை குடிச்சுக் காட்டு பார்க்கலாம் என்று அவர் சொல்லலாம். அப்போது நீ என்ன செய்வாய்?—

இயேசுவை நினைத்துக்கொள். அவருடைய உயிருக்கு அவரே ஆபத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும் என்று சாத்தான் விரும்பினான். ஆகவே ஆலயத்திலிருந்து கீழே குதிக்கும்படி சொன்னான். ஆனால் இயேசு குதிக்கவில்லை. ஆபத்தான எதையாவது செய்து காட்டு பார்க்கலாம் என யாராவது உன்னிடம் சவால் விட்டால் நீ என்ன செய்வாய்?— சாத்தான் பேச்சை இயேசு கேட்கவில்லை. அதேபோல், தவறு செய்யச் சொல்லும் யாருடைய பேச்சையும் நீ கேட்கக்கூடாது.

உருவங்களை வணங்குவது ஏன் தவறு?

ஒரு உருவத்தை வணங்க வேண்டும் என்று யாராவது உன்னிடம் சொல்லலாம். ஆனால் அது தவறு என்று பைபிள் சொல்கிறது. (யாத்திராகமம் 20:4, 5) ஸ்கூலில் ஏதாவது விழா நடக்கும்போது உனக்கு இந்தப் பிரச்சினை வரலாம். உருவத்தை வணங்கவில்லை என்றால் இனிமேல் ஸ்கூலுக்கே வரக்கூடாது என்றுகூட டீச்சர் சொல்லலாம். அப்போது நீ என்ன செய்வாய்?—

எல்லாருமே சரியானதை செய்யும்போது நாமும் சரியானதை செய்வது சுலபம். ஆனால் தவறானதை செய்யும்படி மற்றவர்கள் நம்மை வற்புறுத்தும்போது நாம் சரியானதை செய்வது ரொம்ப கஷ்டம். தாங்கள் செய்வது அவ்வளவு மோசமான காரியம் ஒன்றும் இல்லை என்று மற்றவர்கள் சொல்லலாம். ஆனால் ‘கடவுள் அதைப் பற்றி என்ன சொல்கிறார்?’ என்பதுதான் முக்கியமான கேள்வி. அவருக்குத்தான் எல்லாமே நன்றாக தெரியும்.

ஆகவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் சரி, கடவுளுக்கு பிடிக்காததை நாம் செய்யவே கூடாது. அப்போதுதான் கடவுளை எப்போதும் சந்தோஷப்படுத்துவோம். ஒருபோதும் சாத்தானை பிரியப்படுத்த மாட்டோம்.

தவறு செய்யும் ஆசையை எப்படி தவிர்க்கலாம் என்று சில வசனங்களில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்: சங்கீதம் 1:1, 2; நீதிமொழிகள் 1:10, 11; மத்தேயு 26:41; 2 தீமோத்தேயு 2:22.