Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 14

நாம் ஏன் மன்னிக்க வேண்டும்

நாம் ஏன் மன்னிக்க வேண்டும்

உனக்கு யாராவது கெடுதல் செய்திருக்கிறார்களா?— எதையாவது சொல்லியோ செய்தோ உன்னைக் கஷ்டப்படுத்தி இருக்கிறார்களா?— நீயும் பதிலுக்கு அதேபோல் அவர்களை நடத்த வேண்டுமா?—

யாராவது கெடுதல் செய்யும்போது பதிலுக்கு கெடுதல் செய்வதே நிறைய பேரின் பழக்கம். ஆனால் கெடுதல் செய்பவர்களை நாம் மன்னிக்க வேண்டும் என்று இயேசு கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:12) ஒருவர் திரும்பத் திரும்ப நமக்கு கஷ்டம் கொடுத்தால் என்ன செய்வது? எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்?—

இதைத்தான் பேதுருவும் தெரிந்துகொள்ள விரும்பினார். ஆகவே ‘நான் ஏழு தடவை மன்னிக்கலாமா?’ என்று ஒருநாள் இயேசுவிடம் கேட்டார். ஆனால் ஏழு தடவை மட்டும் மன்னிப்பது போதாது என்பதால் ‘நீ எழுபத்தி ஏழு தடவைகூட மன்னிக்க வேண்டும்’ என்று இயேசு கூறினார். அத்தனை தடவை யாராவது கெடுதல் செய்தாலும் மன்னிக்க வேண்டும் என்றார்.

மன்னிப்பது பற்றி பேதுரு என்ன தெரிந்துகொள்ள விரும்பினார்?

அது மிக அதிகம் இல்லையா? ஒருவர் அத்தனை முறை கெட்ட காரியங்களை செய்தது நமக்கு ஞாபகம்கூட இருக்காதே. ஆகவே இயேசு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்: மற்றவர்கள் செய்யும் கெடுதல்களை நாம் கணக்கு வைக்கக் கூடாது. அவர்கள் மன்னிப்பு கேட்கும்போதெல்லாம் நாம் மன்னிக்க வேண்டும்.

மன்னிக்கும் குணம் ரொம்ப முக்கியம் என்று இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்பினார். ஆகவே பேதுருவின் கேள்விக்கு பதில் சொன்ன பிறகு அவர் தன் சீஷர்களுக்கு ஒரு கதை சொன்னார். அந்தக் கதையை கேட்க உனக்கு ஆசையா?—

ஓர் ஊரில் ஒரு நல்ல ராஜா இருந்தார். அவர் ரொம்ப அன்பானவர். அவருடைய வேலைக்காரர்களுக்கு பணம் தேவைப்பட்டபோது கடன் கொடுத்தார். ஆனால் ஒருநாள், கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்கும்படி தன் வேலைக்காரர்களிடம் சொன்னார். ஒரு வேலைக்காரன் ராஜாவுக்கு முன் கொண்டு வரப்பட்டான். அவன் ராஜாவுக்கு 6 கோடி வெள்ளிக் காசுகளை தர வேண்டியிருந்தது. அது எவ்வளவு பெரிய தொகை!

வேலைக்காரன் அவகாசம் கேட்டு கெஞ்சியபோது ராஜா என்ன செய்தார்?

ஆனால் அவன் அந்தக் காசையெல்லாம் செலவு செய்துவிட்டதால் திருப்பித் தர முடியவில்லை. ஆகவே அவனை விற்றுவிடும்படி ராஜா ஆணையிட்டார். அவனுடைய மனைவி பிள்ளைகளையும் சொத்துக்களையும்கூட விற்றுவிடும்படி ராஜா ஆணையிட்டார். விற்ற அந்தப் பணத்தால் ராஜாவின் கடன் அடைக்கப்படும். அதைக் கேட்ட அந்த வேலைக்காரனுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறாய்?—

அவன் ராஜாவுக்கு முன் மண்டியிட்டு கெஞ்சினான். ‘தயவுசெய்து எனக்கு இன்னும் கொஞ்சம் நாள் கொடுங்கள், நான் எல்லா பணத்தையும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’ என்றான். நீ ராஜாவாக இருந்திருந்தால் அந்த வேலைக்காரனை என்ன செய்திருப்பாய்?— ராஜா வேலைக்காரனைப் பார்த்து பரிதாபப்பட்டார். ஆகவே அவனை மன்னித்தார். அந்த 6 கோடி வெள்ளிக் காசுகளில் ஒன்றைக்கூட இனி திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அந்த வேலைக்காரனுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!

அதன் பிறகு அவன் என்ன செய்தான் தெரியுமா? தன்னிடமிருந்து வெறும் நூறு வெள்ளிக் காசுகளை கடன் வாங்கியிருந்த இன்னொரு வேலைக்காரனைத் தேடிப் போனான். அவன் கழுத்தைப் பிடித்து நெரித்து, ‘என்னிடமிருந்து வாங்கிய நூறு வெள்ளிக் காசுகளை உடனே திருப்பிக் கொடு!’ என்று கத்தினான். கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் ராஜா அவ்வளவு தாராளமாக அவனை மன்னித்திருந்தார், ஆனாலும் இப்போது எப்படி கேவலமாக நடந்துகொண்டான் பார்த்தாயா?—

மன்னிக்காத வேலைக்காரனை ராஜா என்ன செய்தார்?

நூறு வெள்ளிக் காசுகள் மட்டுமே கடன்பட்டிருந்த வேலைக்காரன் ஏழையாக இருந்தான். அதனால் உடனடியாக காசை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. ஆகவே அவன் தனக்கு கடன் கொடுத்த வேலைக்காரனின் காலில் விழுந்து கெஞ்சினான்; ‘தயவுசெய்து எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், நான் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்றான். அவனுக்கு அவகாசம் கொடுத்திருக்க வேண்டுமா?— நீ என்ன செய்திருப்பாய்?—

கடன் கொடுத்த வேலைக்காரன் ராஜாவைப் போல் அன்பாக நடக்கவில்லை. பணத்தை அந்த நிமிஷமே தரும்படி கேட்டான். கடன் வாங்கிய வேலைக்காரனால் அதைத் திருப்பித் தர முடியாததால் அவனை சிறையில் போட்டான். மற்ற வேலைக்காரர்கள் அதையெல்லாம் பார்த்தார்கள். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. சிறையில் இருந்த வேலைக்காரன்மேல் பரிதாபப்பட்டார்கள். ஆகவே ராஜாவிடம் போய் நடந்ததை சொன்னார்கள்.

அந்த வேலைக்காரன் நடந்துகொண்ட விதம் ராஜாவுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. மன்னிக்காத அவன் மீது ராஜாவுக்கு கெட்டகோபம் வந்தது. ஆகவே அவனைக் கூப்பிட்டு, ‘மோசமான வேலைக்காரனே, நான் உன்னை மன்னிக்கவில்லையா? அதேபோல் நீயும் உன்னோடு வேலை செய்பவனை மன்னிக்க வேண்டாமா?’ என்று கேட்டார்.

மன்னிக்கப்பட்ட வேலைக்காரன் தன்னிடம் கடன்பட்ட இன்னொரு வேலைக்காரனை எப்படி நடத்தினான்?

நல்ல ராஜாவைப் பார்த்து அந்த வேலைக்காரன் பாடம் கற்றிருக்க வேண்டும். ஆனால் அவன் கற்றுக்கொள்ளவில்லை. ஆகவே ராஜா அவனை சிறையில் போட்டார். அந்த 6 கோடி வெள்ளிக் காசுகளை திருப்பிக் கொடுக்கும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்றார். சிறையில் இருந்து கொண்டு அவனால் அவ்வளவு பணத்தை சம்பாதிக்கவே முடியாது. ஆகவே சாகும்வரை சிறையே கதி என்று இருக்க வேண்டியதுதான்.

இயேசு இந்தக் கதையை சொல்லி முடித்த பிறகு தன் சீஷர்களிடம் இப்படிச் சொன்னார்: ‘நீங்களும் ஒருவரையொருவர் மனப்பூர்வமாக மன்னிக்காவிட்டால் என் பரலோக தந்தையும் உங்களுக்கு இப்படித்தான் செய்வார்.’—மத்தேயு 18:21-35.

நாம் கடவுளுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறோம் என்று நீ புரிந்துகொள்ள வேண்டும். நம் உயிரைக்கூட கடவுள்தான் கொடுத்திருக்கிறார்! ஆகவே நாம் கடவுளுக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறோம் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் மற்றவர்கள் நமக்கு கடன்பட்டிருப்பது ரொம்பவும் குறைவு. அவர்கள் நமக்கு கொடுக்க வேண்டியது எவ்வளவு தெரியுமா? ஒரு வேலைக்காரன் மற்றொருவனுக்கு கொடுக்க வேண்டியிருந்த வெறும் நூறு வெள்ளிக் காசுகளைப் போல சிறிதுதான். ஆனால் தவறான காரியங்கள் செய்வதால் நாம் கடவுளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் தெரியுமா? ஒரு வேலைக்காரன் ராஜாவுக்கு கொடுக்க வேண்டியிருந்த 6 கோடி வெள்ளிக் காசுகளைப் போல அது பெரியது.

கடவுள் மிகவும் அன்பானவர். நாம் தவறுகள் செய்தாலும் நம்மை மன்னிக்கிறார். நம்முடைய உயிரை ஒரேயடியாக எடுத்துவிடுவதன் மூலம் அவர் கடனை தீர்த்துக்கொள்வதில்லை. ஆனால் ஒரு விஷயத்தை நாம் மறக்கக்கூடாது: நமக்கு கெடுதல் செய்பவர்களை நாம் மன்னித்தால் மட்டுமே கடவுள் நம்மை மன்னிப்பார். அது முக்கியமான பாடம் அல்லவா?—

உன்னிடம் யாராவது மன்னிப்பு கேட்டால் நீ என்ன செய்வாய்?

ஆகவே யாராவது உனக்கு கெடுதல் செய்துவிட்டு பிறகு மன்னிப்பு கேட்டால் நீ என்ன செய்வாய்? நீ அவரை மன்னிப்பாயா?— திரும்பத் திரும்ப அவர் அப்படி செய்தால்? அப்போதும் அவரை மன்னிப்பாயா?—

நாம் யாரிடமாவது மன்னிப்பு கேட்டால், அவர் மன்னிக்க வேண்டும் என்றுதானே எதிர்பார்ப்போம்?— ஆகவே நாமும் மற்றவர்களுக்கு அதையே செய்ய வேண்டும். மன்னித்துவிட்டேன் என்று வெறுமனே சொன்னால் மட்டும் போதாது, உண்மையிலேயே மனதார மன்னிக்க வேண்டும். நாம் அப்படிச் செய்தால்தான், பெரிய போதகரின் சீஷர்களாக இருக்க விரும்புகிறோம் என்று அர்த்தம்.

மன்னிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ள சில வசனங்களை வாசிக்கலாமா? நீதிமொழிகள் 19:11; மத்தேயு 6:14, 15; லூக்கா 17:3, 4.