Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 16

எது ரொம்ப முக்கியம்

எது ரொம்ப முக்கியம்

இந்த மனிதனுக்கு என்ன பிரச்சினை இருந்தது?

ஒருமுறை இயேசுவைப் பார்க்க ஒரு மனிதன் வந்தான். இயேசு நல்ல அறிவாளி என்று அவனுக்குத் தெரியும். ஆகவே, ‘போதகரே, என் அண்ணனிடம் அவன் சொத்தில் கொஞ்சத்தை எனக்குத் தருமாறு சொல்லுங்கள்’ என்றான். சொத்தில் கொஞ்சம் தனக்கும் கிடைக்க வேண்டுமென்று நினைத்தான்.

நீ இயேசுவாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாய்?— அந்த மனிதனுக்கு ஒரு பிரச்சினை இருந்ததை இயேசு புரிந்துகொண்டார். அண்ணன் வைத்திருந்த சொத்தை அவன் பெறுவது உண்மையில் பிரச்சினையாக இல்லை. ஆனால் வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியம் என்பதை அவன் அறியாமல் இருந்ததுதான் பிரச்சினை.

இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். நமக்கு எது ரொம்ப முக்கியமானதாக இருக்க வேண்டும்? நல்ல நல்ல பொம்மைகளையும் புதுத் துணிமணிகளையும் வைத்திருப்பதா?— இல்லை, இதைவிட ரொம்ப முக்கியமான ஒன்று இருக்கிறது. அதைக் கற்றுக்கொடுக்க இயேசு விரும்பினார். ஆகவே கடவுளை மறந்துவிட்ட ஒரு மனிதனின் கதையை சொன்னார். அதைக் கேட்க உனக்கு ஆசையா?—

அந்த மனிதன் பெரிய பணக்காரன். அவனுக்கு நிலங்களும் களஞ்சியங்களும் இருந்தன. அவனுடைய பயிர்கள் நன்றாக விளைந்தன. ஆனால் அவற்றை எல்லாம் வைக்க அவனது களஞ்சியங்களில் இடமே இல்லாமல் போனது. ஆகவே என்ன செய்ய நினைத்தான் தெரியுமா? ‘நான் என்னுடைய களஞ்சியங்களை இடித்துவிட்டு இன்னும் பெரிதாக கட்டப்போகிறேன். அந்தப் புதிய களஞ்சியங்களில் எல்லா விளைச்சலையும் நல்ல பொருட்களையும் சேர்த்து வைப்பேன்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

அதுதான் ரொம்ப புத்திசாலித்தனமான காரியம் என்று அந்தப் பணக்காரன் நினைத்தான். நிறைய சேமித்து வைப்பதால் தான் ஒரு கெட்டிக்காரன் என்று நினைத்தான். ‘பல வருஷங்களுக்கு தேவையான நல்ல பொருட்களை நான் சேர்த்து வைத்திருக்கிறேன். அதனால் இப்போது நான் ஓய்வெடுக்கலாம். நன்றாக சாப்பிட்டு, குடித்து, மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்று தன் மனதில் சொல்லிக்கொண்டான். ஆனால் அந்தப் பணக்காரன் இப்படி யோசித்ததில் ஏதோ தவறு இருந்தது. அது என்னவென்று உனக்குத் தெரியுமா?— அவன் தன்னையும் தன் சந்தோஷத்தையும் மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான். கடவுளையோ மறந்தேவிட்டான்.

இந்தப் பணக்காரன் எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான்?

ஆகவே அந்தப் பணக்காரனிடம் கடவுள் பேசினார். ‘முட்டாளே, இன்று இரவு நீ சாகப்போகிறாய். நீ சேர்த்து வைத்திருப்பதையெல்லாம் யார் அனுபவிக்கப் போகிறார்கள்?’ என்று கேட்டார். செத்த பிறகு அந்தப் பணக்காரன் அதையெல்லாம் பயன்படுத்த முடியுமா?— முடியாது, அதெல்லாம் வேறு யாருக்கோ போய் சேரும். ‘தங்களுக்காக பொக்கிஷங்களை சேர்த்து வைத்தாலும் கடவுள் பார்வையில் பணக்காரர்களாக இல்லாதவர்கள் இவனைப் போலவே இருக்கிறார்கள்’ என இயேசு சொன்னார்.—லூக்கா 12:13-21.

நீ அந்தப் பணக்காரனைப் போல் இருக்க விரும்புவதில்லைதானே?— சொத்துக்களை சேர்ப்பதே அவனுடைய வாழ்க்கையில் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஆனால் அது தவறான குறிக்கோள். எப்போதும் அதிகமதிகமாக சொத்து சேர்க்க ஆசைப்பட்ட அவன், ‘கடவுள் பார்வையில் பணக்காரனாக’ இல்லை.

இன்று அநேகர் அந்தப் பணக்காரனைப் போல் இருக்கிறார்கள். எப்போதுமே அதிகம் சேர்த்து வைக்க ஆசைப்படுகிறார்கள். இதனால் பெரிய பிரச்சினைகள் வரலாம். உதாரணத்திற்கு, உன்னிடம் விளையாட்டுச் சாமான்கள் இருக்கிறது அல்லவா?— என்னென்ன விளையாட்டுச் சாமான்களை நீ வைத்திருக்கிறாய் சொல்.— உன்னிடம் இல்லாத ஒரு பொம்மையோ பந்தோ அல்லது வேறு சாமானமோ உன் ஃபிரெண்டிடம் இருந்தால் என்ன செய்வாய்? அதே மாதிரி உனக்கும் வேண்டும் என்று அப்பா அம்மாவிடம் அடம் பிடிப்பது சரியா?—

சிலசமயம் விளையாட்டுச் சாமான் ரொம்ப முக்கியமாக தோன்றலாம். ஆனால் கொஞ்சம் நாள் கழித்து அது என்னாகிவிடுகிறது?— அது பழசாகிவிடுகிறது. உடைந்தும் போகிறது. அதன் பிறகு அது ஒரு வேண்டாத பொருளாகிவிடுகிறது. இப்படிப்பட்ட விளையாட்டு சாமான்களைவிட ரொம்ப மதிப்புள்ள ஒன்று உன்னிடம் இருக்கிறது. அது என்னவென்று உனக்குத் தெரியுமா?—

விளையாட்டுச் சாமான்களைவிட மதிப்புள்ள எது உன்னிடம் இருக்கிறது?

அதுதான் உன் உயிர். உன் உயிர் ரொம்ப முக்கியமானது. ஏனென்றால் உயிர் இல்லாமல் நீ ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் கடவுளைப் பிரியப்படுத்தும்போது மட்டுமே தொடர்ந்து உயிர் வாழ முடியும் இல்லையா?— ஆகவே கடவுளை மறந்துவிட்ட அந்த முட்டாள்தனமான பணக்காரனைப் போல் நாம் இருக்கக் கூடாது.

அந்தப் பணக்காரனைப் போல் முட்டாள்தனமான காரியங்களை செய்வது பிள்ளைகள் மட்டும் அல்ல. பெரியவர்கள் நிறைய பேரும் அப்படியே செய்கிறார்கள். சிலருக்கு, இன்னும் நிறைய வேண்டும் என்ற பேராசை எப்போதும் உண்டு. அவர்களுக்கு உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருக்கும். ஆனாலும் இன்னுமதிகம் வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இன்னும் நிறைய துணிமணி வேண்டும், இன்னும் பெரிய வீடுகள் வேண்டும் என்றெல்லாம் விரும்புகிறார்கள். அதற்காக நிறைய காசு தேவை. ஆகவே நிறைய காசு சம்பாதிப்பதற்கு நிறைய நேரம் வேலையும் செய்கிறார்கள். காசு கிடைக்கக் கிடைக்க, இன்னும் நிறைய பொருட்களை சேர்க்க விரும்புகிறார்கள்.

சிலர் பணம் சம்பாதிப்பதிலேயே மும்முரமாக இருப்பதால் தங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிட முடிவதில்லை. கடவுளுக்காகவும் அவர்கள் நேரம் செலவிடுவதில்லை. அவர்களது பணம் அவர்கள் உயிரை காப்பாற்றுமா?— காப்பாற்றாது. இறந்த பிறகு அவர்கள் தங்கள் பணத்தை அனுபவிக்க முடியுமா?— முடியாது. ஏனென்றால் இறந்தவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது.—பிரசங்கி 9:5, 10.

அப்படியென்றால் பணம் வைத்திருப்பதே தவறா?— இல்லை. பணத்தை வைத்து நாம் உணவும் உடையும் வாங்கலாம். பணம் நமக்கு பாதுகாப்பு தரும் என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 7:12) ஆனால் பண ஆசை வந்துவிட்டால் நமக்கு பெரிய பிரச்சினைகளும் வந்துவிடும். தனக்கென்று சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தும் கடவுள் பார்வையில் பணக்காரனாக இல்லாத அந்த முட்டாள்தனமான மனிதனை போல் ஆகிவிடுவோம்.

கடவுள் பார்வையில் பணக்காரர்களாக இருப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?— நம் வாழ்க்கையில் கடவுளுக்கு முதல் இடம் தருவதே அதன் அர்த்தம். சிலர் கடவுளை நம்புவதாக சொல்கின்றனர். நம்புவது மட்டுமே போதும் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் உண்மையிலேயே கடவுள் பார்வையில் பணக்காரர்களா?— இல்லை, கடவுளை மறந்துவிட்ட பணக்காரனைப் போல் இருக்கின்றனர்.

இயேசு ஒருபோதும் தன் பரலோக தந்தையை மறக்கவில்லை. அவர் நிறைய பணம் சம்பாதிக்க முயற்சி செய்யவில்லை. அதிக பொருட்களும் அவரிடம் இல்லை. வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியம் என்பதை இயேசு அறிந்திருந்தார். அது என்னவென்று உனக்குத் தெரியுமா?— கடவுள் பார்வையில் பணக்காரர்களாக இருப்பதே முக்கியம்.

இவள் ரொம்ப முக்கியமான எதை செய்கிறாள்?

எப்படி கடவுள் பார்வையில் பணக்காரர்களாக இருக்க முடியும் என்று நீ நினைக்கிறாய்?— அவருக்குப் பிரியமாக நடந்துகொள்வதன் மூலம் நாம் அவர் பார்வையில் பணக்காரர்களாக இருக்க முடியும். ‘நான் எப்போதுமே அவருக்கு பிரியமாக நடந்துகொள்கிறேன்’ என்று இயேசு சொன்னார். (யோவான் 8:29) கடவுள் சொல்கிறபடி நாம் நடக்கும்போது அவர் சந்தோஷப்படுகிறார். சரி, கடவுளை பிரியப்படுத்த நீ என்னென்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்?— ஆமாம், நீ பைபிள் படிக்கலாம், கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போகலாம், கடவுளிடம் ஜெபம் செய்யலாம், மற்றவர்களுக்கு அவரைப் பற்றி கற்றுக்கொடுக்கலாம். இவைதான் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான காரியங்கள்.

யெகோவாவின் பார்வையில் இயேசு பணக்காரராக இருந்தார்; ஆகவே யெகோவா அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். என்றென்றும் வாழும் வாழ்க்கையை அவருக்கு பரிசாக கொடுத்தார். நாமும் இயேசுவைப் போல் நடந்துகொண்டால், யெகோவா நம்மையும் நேசிப்பார், நம்மையும் கவனித்துக் கொள்வார். ஆகவே கடவுளை மறந்துவிட்ட பணக்காரனைப் போல் இல்லாமல் இயேசுவைப் போல் நாம் இருப்போமாக.

இப்போது நாம் சில பைபிள் வசனங்களைப் படிக்கலாம். பணத்தையும் பொருளையும் சரியாக கருதுவது எப்படி என்று அவை காட்டுகின்றன. நீதிமொழிகள் 23:4; 28:20; 1 தீமோத்தேயு 6:6-10; எபிரெயர் 13:5.