Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 23

நோய்நொடி வருவது ஏன்?

நோய்நொடி வருவது ஏன்?

வியாதியாக இருக்கும் யாரையாவது உனக்குத் தெரியுமா?—சிலசமயம் உனக்குக்கூட உடம்பு சரியில்லாமல் போயிருக்கலாம். உனக்கு சளி பிடித்திருக்கலாம் அல்லது வயிற்று வலி வந்திருக்கலாம். சிலர் ரொம்பவும் முடியாமல் இருக்கிறார்கள். எழுந்து நிற்பதற்குக்கூட அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. வயது ஆக ஆக இப்படித்தான் ஆகும்.

எல்லாருக்குமே எப்போதாவது நோய்நொடி வருகிறது. மக்கள் ஏன் வியாதிப்பட்டு, வயதாகி, சாகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?— நடக்க முடியாத ஒரு மனிதன் ஒருமுறை இயேசுவிடம் கொண்டு வரப்பட்டான். மக்கள் ஏன் வியாதிப்பட்டு சாகிறார்கள் என்பதை அப்போது இயேசு காட்டினார். அதை இன்னும் விளக்கமாக சொல்கிறேன்.

கலிலேயாக் கடலுக்குப் பக்கத்திலிருந்த பட்டணத்தில் ஒரு வீட்டில் இயேசு தங்கியிருந்தார். ஒரு பெரிய கூட்டம் அவரை பார்க்க வந்தது. அவ்வளவு நிறைய பேர் வந்ததால் வீட்டிற்குள் நுழையவே இடமில்லாமல் போயிற்று. கதவுக்குப் பக்கத்தில் போகக்கூட யாராலும் முடியவில்லை. போதாததற்கு இன்னும் நிறைய பேர் வந்து கொண்டே இருந்தார்கள்! நடக்க முடியாத ஒரு மனிதனை ஒரு சின்னக் கட்டிலில் நான்கு பேர் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.

வியாதிப்பட்ட அந்த மனிதனை ஏன் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள் தெரியுமா?— அவனுக்கு உதவ இயேசுவினால் முடியும் என்று நம்பினார்கள். அதாவது அவனுடைய வியாதியை அவரால் குணப்படுத்த முடியும் என்று விசுவாசித்தார்கள். வீட்டிற்குள் அத்தனை பேர் கூடியிருந்ததால் அவர்கள் அவனை எப்படி இயேசுவிடம் கொண்டு போனார்கள் தெரியுமா?—

இந்தப் படத்தை பார்த்தால் உனக்குப் புரியும். முதலில் அந்த மனிதனை கூரையின்மேல் தூக்கிச் சென்றார்கள். பிறகு அந்தத் தட்டையான கூரையில் ஒரு பெரிய ஓட்டை போட்டார்கள். ஓட்டை வழியாக அந்த மனிதனை கட்டிலோடு சேர்த்து கீழே வீட்டிற்குள் இறக்கினார்கள். அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட உறுதியான நம்பிக்கை இருந்தது!

வீட்டிற்குள் இருந்த எல்லாரும் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். நடக்க முடியாமல் இருந்த அந்த மனிதன் அவர்கள் நடுவில் கட்டிலோடு சேர்த்து இறக்கப்பட்டான். அவனை கீழே இறக்கிய ஆட்கள்மேல் இயேசு கோபப்பட்டாரா?— இல்லவே இல்லை! அவர்களது நம்பிக்கையைப் பார்த்து சந்தோஷப்பட்டார். நடக்க முடியாதவனைப் பார்த்து, “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்று கூறினார்.

நடக்க முடியாத மனிதனிடம் இயேசு என்ன செய்யும்படி சொன்னார்?

இயேசு அப்படிச் சொன்னது சரியல்ல என்று சிலர் நினைத்தார்கள். அவரால் பாவங்களை மன்னிக்க முடியும் என்று அவர்கள் நம்பவில்லை. ஆகவே தன்னால் உண்மையிலேயே பாவங்களை மன்னிக்க முடியும் என்பதைக் காட்ட இயேசு விரும்பினார். அதனால் அவனிடம், “நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ” என்று கூறினார்.

இயேசு அப்படிச் சொன்னவுடனே அவன் குணமடைந்தான்! அவனுடைய நோய் மறைந்தது. அவனாகவே எழுந்து நடக்கவும் ஆரம்பித்தான். இந்த அதிசயத்தைப் பார்த்த மக்கள் அப்படியே ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இதுபோன்ற ஒரு அற்புதத்தை அவர்கள் அதுவரை பார்த்ததே கிடையாது! நோய்நொடிகளைக்கூட குணப்படுத்த முடிந்த பெரிய போதகரை தங்களுக்குக் கொடுத்ததற்காக அவர்கள் யெகோவாவை புகழ்ந்தார்கள்.—மாற்கு 2:1-12.

இந்த அற்புதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

இந்த அற்புதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?— பாவங்களை மன்னித்து நோய்களை நீக்க இயேசுவுக்கு சக்தி இருக்கிறது என்பதை கற்றுக்கொள்கிறோம். அதேசமயத்தில் இன்னொரு மிக முக்கியமான விஷயத்தையும் கற்றுக்கொள்கிறோம். அதாவது மக்களுக்கு நோய்நொடி வருவதற்கான காரணம் பாவமே என்பதையும் கற்றுக்கொள்கிறோம்.

நம் எல்லாருக்குமே சிலசமயம் நோய் வருவதால் நாம் அனைவரும் பாவிகள் என்று அர்த்தமா?— ஆமாம், நாம் அனைவரும் பாவிகளாக பிறந்திருக்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. பாவிகளாக பிறப்பது என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா?— நாம் அபூரணர்களாக பிறக்கிறோம் என்று அர்த்தம். தவறுகளை செய்ய விரும்பாவிட்டாலும் சிலசமயம் நாம் அவற்றை செய்துவிடுகிறோம். நம் எல்லாருக்குமே எப்படி பாவம் வந்தது என்று தெரியுமா?—

முதல் மனிதனான ஆதாம் கடவுள் பேச்சை கேட்காததால்தான் பாவம் வந்தது. அவருடைய சட்டத்தை மீறியபோது அவன் பாவம் செய்தான். அவனிடமிருந்து நம் எல்லாருக்கும் பாவம் வந்தது. அது எப்படி என்று உனக்குத் தெரியுமா? உனக்கு புரிகிற விதத்தில் இப்போது நான் விளக்குகிறேன்.

நாம் எல்லாருமே எப்படி பாவிகளானோம்?

ஒரு பிரெட் அல்லது கேக் செய்யப்படுவதை நீ பார்த்திருக்கலாம். அதை செய்யும் பாத்திரத்தில் ஒடுக்கு விழுந்தால் என்னாகும் என்று நினைக்கிறாய்?— அதில் செய்யப்படும் எல்லா பிரெட்டிலும் கேக்கிலும் அதே ஒடுக்கு வரும் இல்லையா?—

ஆதாம் அந்தப் பாத்திரத்தைப் போல் இருந்தான். நாம் அந்தப் பிரெட்டை போன்றவர்கள். கடவுளுடைய சட்டத்தை மீறியபோது ஆதாம் அபூரணன் ஆனான். அவனிடம் ஒரு ஒடுக்கு அல்லது அபூரணம் என்ற குறை ஏற்பட்டது. ஆகவே அவனுக்கு பிள்ளைகள் பிறக்கும்போது அவர்கள் எப்படி இருப்பார்கள்?— அவர்கள் எல்லாரும் அபூரணம் என்ற அதே குறையோடுதான் இருப்பார்கள்.

பெரும்பாலான பிள்ளைகள் பெரிய குறையோடு பிறப்பதில்லை. அதாவது ஒரு கையோ காலோ இல்லாமல் அவர்கள் பிறப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு கண்டிப்பாக அபூரணம் இருப்பதால்தான் வியாதி வருகிறது, கடைசியில் சாவும் வருகிறது.

சிலருக்கு மற்றவர்களைவிட அதிகமாக நோய்நொடி வருகிறது. அது ஏன்? அவர்கள் இன்னும் அதிக பாவத்தோடு பிறந்திருப்பதாலா?— இல்லை, எல்லாருமே ஒரே அளவான பாவத்தோடுதான் பிறந்திருக்கிறோம். ஒரேமாதிரி அபூரணர்களாக இருக்கிறோம். ஆகவே எல்லாருக்குமே ஏதாவது ஒரு சமயத்தில் நோய் வரும். மோசமான காரியங்களை செய்யாமல், கடவுளுடைய எல்லா சட்டங்களுக்கும் கீழ்ப்படிய முயற்சி செய்பவர்களுக்குக்கூட நோய் வரலாம்.

பாவம் நீங்கிய பிறகு நமக்கு எப்படிப்பட்ட ஆரோக்கியம் கிடைக்கும்?

அப்படியென்றால் சிலருக்கு மட்டும் ஏன் அடிக்கடி வியாதி வருகிறது?— அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒருவேளை சாப்பிடுவதற்கு போதிய உணவு கிடைக்காமல் இருக்கலாம். அல்லது சத்துள்ள உணவு வகைகளை அவர்கள் சாப்பிடாமல் இருக்கலாம். கேக்கையோ சாக்லேட்டையோ அளவுக்கதிகமாக சாப்பிடலாம். இன்னொரு காரணம் தூக்கம் குறைவுபடுவது. ராத்திரி வெகு நேரம் தூங்காமல் முழித்திருக்கலாம். அல்லது மழையும் குளிருமாக இருக்கும்போது ரெயின் கோட் போடாமலோ ஸ்கார்ஃப் கட்டாமலோ இருக்கலாம். சிலருக்கு உடம்பில் பலமே இல்லாததால் எவ்வளவுதான் தங்களை கவனித்துக் கொண்டாலும் வியாதியை தடுக்க முடிவதில்லை.

நோய்நொடியே இல்லாத ஒரு காலம் வருமா? பாவத்திலிருந்து நாம் எப்போதாவது விடுபடுவோமா?— நடக்க முடியாத அந்த மனிதனுக்கு இயேசு என்ன செய்தார்?— அவனது பாவங்களை மன்னித்து வியாதியை குணப்படுத்தினார். அதன் மூலம், சரியானதை செய்ய கடினமாக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் செய்யப் போவதை சிறிய அளவில் காட்டினார்.

நாம் பாவம் செய்ய விரும்புவதில்லை என்பதையும் கெட்டதை வெறுக்கிறோம் என்பதையும் நடத்தையில் காட்டினால் இயேசு நம்மை குணப்படுத்துவார். இப்போது நமக்கிருக்கும் அபூரணத்தை எதிர்காலத்தில் நீக்கிவிடுவார். கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக அதைச் செய்வார். அவரது ஆட்சியில் நம்முடைய பாவம் ஒரேயடியாக நீக்கப்படாது. ஆனால் படிப்படியாக நீக்கப்படும். இறுதியில் பாவம் முழுமையாக நீங்கிய பிறகு நமக்கு மறுபடியும் நோய்நொடியே வராது. எல்லாருக்குமே பரிபூரண ஆரோக்கியம் இருக்கும். அது எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தைத் தரும்!

பாவம் எப்படி எல்லாரையும் பாதிக்கிறது என்பதை சில வசனங்களில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். யோபு 14:4; சங்கீதம் 51:5; ரோமர் 3:23; 5:12; 6:23.