Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 25

கெட்டவர்கள் திருந்த முடியுமா?

கெட்டவர்கள் திருந்த முடியுமா?

எல்லாருமே நல்லது செய்தால் அருமையாக இருக்கும் அல்லவா?— ஆனால் எல்லாரும் எப்போதும் நல்லது மட்டும் செய்வதில்லை. நாம் எல்லாரும், நல்லது செய்ய விரும்பினாலும் சிலசமயங்களில் கெட்ட காரியங்கள் செய்வது ஏன் என்று உனக்குத் தெரியுமா?— ஏனென்றால் நாம் எல்லாரும் பாவத்தோடு பிறந்திருக்கிறோம். ஆனால் சிலர் மிக மோசமான காரியங்களை அடுக்கடுக்காக செய்கின்றனர். அவர்கள் மற்றவர்களை வெறுத்து, வேண்டுமென்றே அடித்துக் காயப்படுத்துகின்றனர். இப்படிப்பட்டவர்கள் நல்லவர்களாக திருந்தி வாழ முடியும் என்று நினைக்கிறாயா?—

இந்தப் படத்தில் சிலர் ஸ்தேவான் மீது கல் எறிவதைப் பார்த்தாயா? அவர்களது துணிகளை காவல் காத்துக் கொண்டிருப்பவரைப் பார். எபிரெய மொழியில் அவரது பெயர் சவுல். அவரது ரோம பெயர் பவுல். பெரிய போதகரின் சீஷரான ஸ்தேவான் கொல்லப்படுவதைப் பார்த்து சவுல் சந்தோஷப்பட்டார். அவர் ஏன் இப்படிப்பட்ட பொல்லாத காரியங்களை செய்தார் என்று பார்க்கலாம்.

சவுல் ஒரு யூத மதப் பிரிவை சேர்ந்தவர். அந்த மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பரிசேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பரிசேயர்களிடம் கடவுளுடைய வார்த்தை இருந்தது. ஆனால் தங்கள் மதத் தலைவர்களில் சிலர் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்குத்தான் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். இதன் காரணமாகவே சவுல் கெட்ட காரியங்களைச் செய்தார்.

ஸ்தேவான் எருசலேமில் கைது செய்யப்பட்டபோது சவுல் அங்கு இருந்தார். ஸ்தேவான் நீதிமன்றத்திற்கு கொண்டு போகப்பட்டார். அங்கே சில பரிசேயர்கள் நீதிபதிகளாக இருந்தார்கள். ஸ்தேவானைப் பற்றி தவறான காரியங்கள் பேசப்பட்டன. இருந்தாலும் அவர் பயப்படாமல் உடனடியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டார். நீதிபதிகளுக்கு முன்பாக யெகோவா தேவனையும் இயேசுவையும் பற்றி சிறந்த சாட்சி கொடுத்தார்.

ஆனால் அவர் சொன்ன விஷயங்கள் அந்த நீதிபதிகளுக்குப் பிடிக்கவில்லை. இயேசுவைப் பற்றி அவர்களுக்கு ஏற்கெனவே நிறைய தெரியும். சொல்லப்போனால், கொஞ்ச காலத்திற்கு முன்புதான் அவர்கள் இயேசுவை கொலை செய்திருந்தார்கள்! ஆனால் யெகோவா மறுபடியும் இயேசுவை பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பினார். அதற்குப் பிறகும்கூட அந்த நீதிபதிகள் திருந்தவில்லை. இயேசுவின் சீஷர்களோடு சண்டைதான் போட்டார்கள்.

அவர்கள் ஸ்தேவானை பிடித்து நகரத்திற்கு வெளியே இழுத்துச் சென்றார்கள். அங்கே அவரை கீழே தள்ளி அவர்மேல் கற்களை எறிந்தார்கள். சவுல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதைத்தான் இந்தப் படத்தில் பார்க்கிறோம். ஸ்தேவானை கொல்வது சரி என்று அவர் நினைத்தார்.

ஸ்தேவானை கொலை செய்வது சரியென்று சவுல் ஏன் நினைக்கிறார்?

சவுல் ஏன் அப்படி நினைத்தார் தெரியுமா?— சவுல் பரிசேயர்களின் மதத்திலேயே பிறந்து வளர்ந்திருந்தார். பரிசேயர்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களே சரி என்று நம்பினார். அவர்களை முன்மாதிரியாகவும் கருதினார், ஆகவே அவர்களைப் போலவே நடந்துகொண்டார்.—அப்போஸ்தலர் 7:54-60.

ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு சவுல் என்ன செய்தார் தெரியுமா?— இயேசுவின் மற்ற சீஷர்கள் எல்லாரையும் ஒழித்துக்கட்ட முயற்சி செய்தார்! அவர்களுடைய வீடுகளுக்குள் புகுந்து ஆண்களையும் பெண்களையும் வெளியே தரதரவென்று இழுத்தார். பிறகு அவர்களை சிறையில் போட்டு அடைத்தார். அதனால் நிறைய சீஷர்கள் எருசலேமை விட்டே போக வேண்டியிருந்தது. ஆனாலும் அவர்கள் இயேசுவைப் பற்றி பிரசங்கிப்பதை நிறுத்தவில்லை.—அப்போஸ்தலர் 8:1-4.

இதன் காரணமாக இயேசுவின் சீஷர்களை சவுல் இன்னுமதிகமாக வெறுத்தார். ஆகவே பிரதான ஆசாரியரான காய்பாவிடம் சென்றார். தமஸ்கு நகரில் இருந்த கிறிஸ்தவர்களை கைது செய்ய அனுமதி பெற்றார். அவர்களை எருசலேமுக்கு கைதிகளாக கொண்டு வந்து தண்டிக்க வேண்டுமென சவுல் நினைத்தார். ஆனால் தமஸ்குவுக்கு போகும் வழியில் ஒரு அதிசயம் நடந்தது.

சவுலிடம் பேசுவது யார், என்ன செய்வதற்காக சவுலை அனுப்புகிறார்?

வானத்திலிருந்து திடீரென ஒரு வெளிச்சம் உண்டானது. ‘சவுலே, சவுலே, ஏன் எனக்கு கஷ்டம் கொடுக்கிறாய்?’ என்ற குரல் கேட்டது. இயேசுதான் வானத்திலிருந்து பேசினார்! அந்த வெளிச்சம் அவ்வளவு பிரகாசமாக இருந்ததால் சவுலின் கண்களே குருடாகிவிட்டன. சவுலுடன் இருந்த மற்றவர்கள்தான் அவரை தமஸ்குவுக்கு கூட்டிக்கொண்டு போனார்கள்.

மூன்று நாட்களுக்குப் பிறகு இயேசு தன் சீஷர் ஒருவர் முன் தோன்றினார். தமஸ்குவில் இருந்த அனனியாவே அவர். சவுலை போய்ப் பார்த்து, மீண்டும் பார்வை கொடுத்து, அவரிடம் பேசும்படி இயேசு அனனியாவிடம் சொன்னார். அதன்படி அனனியா பேசியபோது சவுல் இயேசுவைப் பற்றிய உண்மையை ஏற்றுக்கொண்டார். அவருக்கு மறுபடியும் பார்வை வந்தது. அதுமுதல் அவருடைய வாழ்க்கையே அடியோடு மாறியது. அவர் கடவுளை உண்மையுடன் சேவிக்க ஆரம்பித்தார்.—அப்போஸ்தலர் 9:1-22.

முன்பு சவுல் ஏன் கெட்ட காரியங்களை செய்துவந்தார் என்று இப்போது புரிகிறதா?— ஏனென்றால் அவருக்கு தவறான விஷயங்கள் கற்பிக்கப்பட்டிருந்தன. கடவுளுக்கு உண்மையாக இல்லாதவர்களை அவர் பின்பற்றி வந்தார். மேலும், கடவுளுடைய வார்த்தையைவிட மனிதர்களின் கருத்துக்களுக்கு அதிக மதிப்பு கொடுத்தவர்கள் மத்தியில் இருந்தார். ஆனால் அவர் ஏன் திருந்தி நல்லவராக மாறினார்? அதுவும் மற்ற பரிசேயர்கள் தொடர்ந்து கடவுளுக்கு எதிராக நடந்து வந்தபோதிலும் அவர் மட்டும் ஏன் மாறினார்?— ஏனென்றால் சவுல் சத்தியத்தை உண்மையிலேயே வெறுக்கவில்லை. ஆகவே சரியானது எது என்று காட்டப்பட்டபோது அதை உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

சவுல் பிற்பாடு யாராக ஆனார் தெரியுமா?— ஆமாம், அப்போஸ்தலனாகிய பவுல் ஆனார். அதாவது இயேசுவின் அப்போஸ்தலனாக மாறினார். அவரே மற்றவர்களைவிட அதிக பைபிள் புத்தகங்களை எழுதினார் என்பதை மறந்துவிடாதே.

சவுலைப் போலவே அநேகரால் தங்களை திருத்திக்கொள்ள முடியும். ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனென்றால் மக்களை கெட்டது செய்ய வைக்க ஒருவன் கடுமையாக முயற்சி செய்கிறான். அவன் யார் தெரியுமா?— தமஸ்குவுக்கு போகும் வழியில் சவுலுக்கு முன் தோன்றியபோது, அவன் யாரென்று இயேசு குறிப்பிட்டார். ‘நீ மக்களின் கண்களைத் திறந்து, அவர்களை இருளிலிருந்து வெளிச்சத்திடமும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து கடவுளிடமும் திருப்புவதற்காக நான் உன்னை அனுப்புகிறேன்’ என்று அவர் வானத்திலிருந்து சொன்னார்.—அப்போஸ்தலர் 26:17, 18.

ஆமாம் கெட்ட காரியங்கள் செய்ய எல்லாரையும் தூண்டுவது சாத்தானே. சரியானதை செய்வது சிலசமயம் உனக்கு கஷ்டமாக இருக்கிறதா?— எல்லாருக்குமே அப்படித்தான் இருக்கிறது. சாத்தான் அதைக் கஷ்டமாக்குகிறான். ஆனால் சரியானதைச் செய்வது எப்போதுமே சுலபமாக இல்லாததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது உனக்குத் தெரியுமா?— நாம் பாவத்தோடு பிறந்திருப்பதுதான் அந்தக் காரணம்.

சரியானதைவிட தவறானதை செய்வது சுலபமாக இருப்பதற்குக் காரணம் இந்தப் பாவம்தான். ஆகவே நாம் என்ன செய்ய வேண்டும்?— ஆமாம், சரியானதைச் செய்ய நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது நம்மை நேசிக்கும் இயேசு நமக்கு உதவுவார் என்று நிச்சயமாக இருக்கலாம்.

இயேசு பூமியில் இருந்தபோது, கெட்டதை விட்டுவிட்டு நல்லவர்களாக திருந்தியவர்களை நேசித்தார். அப்படி மாறுவது அவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை புரிந்துகொண்டார். உதாரணத்திற்கு, சில பெண்கள் நிறைய ஆண்களோடு உடலுறவு கொண்டார்கள். அது மிகவும் தவறு. அந்தப் பெண்களை வேசிகள் என்று பைபிள் அழைக்கிறது.

தவறு செய்திருந்த இந்தப் பெண்ணை இயேசு ஏன் மன்னிக்கிறார்?

அப்படிப்பட்ட ஒரு பெண் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டாள். ஆகவே அவர் ஒரு பரிசேயனின் வீட்டில் இருந்தபோது அங்கே சென்றாள். இயேசுவின் பாதத்தில் வாசனைத் தைலத்தை ஊற்றினாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடி, இயேசுவின் பாதத்தில் விழுந்தது. அதை தன் முடியால் துடைத்தாள். தன் பாவங்களுக்காக மிகவும் வருத்தப்பட்டாள். ஆகவே இயேசு அவளை மன்னித்தார். ஆனால் அவளை மன்னிப்பது சரியல்ல என்று அந்தப் பரிசேயன் நினைத்தான்.—லூக்கா 7:36-50.

இன்னொரு சந்தர்ப்பத்தில், இயேசு சில பரிசேயர்களிடம் என்ன சொன்னார் தெரியுமா?— ‘வேசிகள் உங்களுக்கு முன்னே கடவுளுடைய ராஜ்யத்திற்கு போகிறார்கள்’ என்று சொன்னார். (மத்தேயு 21:31) வேசிகள் சிலர் அவர் மீது விசுவாசம் வைத்து திருந்தி வாழ்ந்ததால்தான் இயேசு அப்படிச் சொன்னார். ஆனால் பரிசேயர்களோ திருந்துவதற்குப் பதிலாக இயேசுவின் சீஷர்களுக்கு தொடர்ந்து கஷ்டம் கொடுத்து வந்தார்கள்.

ஆகவே நாம் செய்வது தவறு என்று பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளும்போது நம்மையே மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் என்ன செய்யும்படி யெகோவா விரும்புகிறாரோ அதை ஆர்வமாக செய்ய வேண்டும். அப்போது யெகோவா நம்மைக் குறித்து சந்தோஷப்படுவார். நமக்கு நித்திய ஜீவனையும் தருவார்.

கெட்டதை செய்யாமல் இருக்க நமக்கு சில வசனங்கள் உதவும். அதை இப்போது வாசிக்கலாமா? சங்கீதம் 119:9-11; நீதிமொழிகள் 3:5-7; 12:15.