Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 28

யாருக்குக் கீழ்ப்படிவது என்று தீர்மானிப்பது எப்படி

யாருக்குக் கீழ்ப்படிவது என்று தீர்மானிப்பது எப்படி

சிலசமயம் யாருக்கு கீழ்ப்படிவது என தீர்மானிப்பது கஷ்டம். உன் அப்பா அல்லது அம்மா ஒன்றை செய்யச் சொல்வார்கள். ஆனால் ஸ்கூல் டீச்சர் அல்லது போலீஸ்காரர் வேறொன்றை செய்யச் சொல்வார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் யார் பேச்சைக் கேட்பாய்?—

இந்தப் புத்தகத்தில் 7-ஆம் அதிகாரத்தில் நாம் எபேசியர் 6:1-3 வசனங்களை பைபிளிலிருந்து படித்தோம். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ‘பிள்ளைகளே, கர்த்தரின் பொருட்டு உங்கள் அப்பா அம்மாவின் பேச்சைக் கேட்டு நடங்கள்’ என்று அது சொல்கிறது. ‘கர்த்தரின் பொருட்டு’ பெற்றோருக்குக் கீழ்ப்படிவது என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?— கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியும்படி பெற்றோர் கற்றுத்தரும்போது பிள்ளைகள் அவர்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று அர்த்தம்.

ஆனால் பெரியவர்கள் சிலர் யெகோவாவை நம்புவதில்லை. ஆகவே ஸ்கூல் பரீட்சையில் காப்பியடிப்பதோ, கடையிலிருந்து எதையாவது திருடுவதோ தவறில்லை என்று ஒருவர் சொன்னால் என்ன செய்வது? பெரியவர் சொல்வதால் பிள்ளை காப்பியடிப்பது அல்லது திருடுவது சரியா?

நேபுகாத்நேச்சார் ராஜா தான் செய்த தங்கச் சிலையை எல்லாரும் வணங்க வேண்டும் என்று ஒருமுறை கட்டளையிட்டது உனக்கு ஞாபகம் இருக்கும். ஆனால் சாத்ராக்கும் மேஷாக்கும் ஆபேத்நேகோவும் அதை வணங்கவில்லை. ஏன் என்று உனக்குத் தெரியுமா?— ஏனென்றால் யெகோவாவை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.—யாத்திராகமம் 20:3; மத்தேயு 4:10.

பேதுரு காய்பாவிடம் என்ன சொல்கிறார்?

இயேசு இறந்த பிறகு அவருடைய அப்போஸ்தலர்கள் நியாயசங்கத்திற்கு கொண்டு போகப்பட்டனர். அது யூதர்களின் மத சம்பந்தப்பட்ட முக்கிய நீதிமன்றமாக இருந்தது. பிரதான ஆசாரியரான காய்பா அவர்களிடம் இப்படி சொன்னார்: ‘நீங்கள் [இயேசுவின்] பெயரைக் குறித்து கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாக சொல்லியிருந்தோம். அப்படியிருந்தும் எருசலேம் முழுவதும் அதைக் கற்பித்து வந்திருக்கிறீர்கள்!’ அப்போஸ்தலர்கள் ஏன் நியாயசங்கத்திற்குக் கீழ்ப்படியவில்லை?— எல்லா அப்போஸ்தலர்களின் சார்பாகவும் பேதுரு பேசினார். ‘மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குக் கீழ்ப்படிவதே அவசியம்’ என்று அவர் காய்பாவிடம் சொன்னார்.—அப்போஸ்தலர் 5:27-29.

அந்தக் காலத்தில் யூத மதத் தலைவர்களுக்கு நிறைய அதிகாரம் இருந்தது. ஆனாலும் அவர்களது நாட்டை ரோம அரசாங்கம் ஆட்சி செய்தது. அந்த அரசாங்கத்தின் தலைவர் இராயன் என்று அழைக்கப்பட்டார். இராயன் தங்களை ஆட்சி செய்வதை யூதர்கள் விரும்பவில்லை. இருந்தாலும் ரோம அரசாங்கம் அவர்களுக்காக நிறைய நல்ல காரியங்களை செய்தது. இன்று இருக்கும் அரசாங்கங்களும் மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்கின்றன. அந்த நல்ல காரியங்களில் சில என்னவென்று உனக்குத் தெரியுமா?—

அரசாங்கங்கள் சாலைகளை அமைக்கின்றன, நம்மை பாதுகாப்பதற்காக போலீஸுக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் சம்பளம் தருகின்றன. பிள்ளைகள் படிப்பதற்காக ஸ்கூல்களை நடத்துகின்றன. வயதானவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்கின்றன. இந்த எல்லாவற்றிற்கும் அரசாங்கத்திற்கு பணம் வேண்டும். அரசாங்கத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது தெரியுமா?— மக்களிடமிருந்துதான் வருகிறது. அரசாங்கத்திற்கு மக்கள் செலுத்தும் பணம் வரி என்று அழைக்கப்படுகிறது.

பெரிய போதகர் பூமியில் வாழ்ந்த சமயத்தில், ரோம அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது நிறைய யூதர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, ஒரு கேள்வியைக் கேட்டு இயேசுவை மடக்கும்படி சிலரிடம் ஆசாரியர்கள் சொன்னார்கள். அதற்காக அவர்களுக்கு கூலியும் கொடுத்தார்கள். ‘இராயனுக்கு வரி செலுத்த வேண்டுமா இல்லையா?’ என்பதுதான் அந்தக் கேள்வி. அது ரொம்ப தந்திரமான கேள்வி. ஏனென்றால், ‘ஆமாம், வரி செலுத்த வேண்டும்’ என்று இயேசு சொல்லியிருந்தால் நிறைய யூதர்களுக்கு பிடிக்காமல் போயிருக்கும். ஆனால், ‘இல்லை, நீங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை’ என்று இயேசுவினால் சொல்ல முடியாது. ஏனென்றால் அப்படிச் சொல்வது தவறாக இருந்திருக்கும்.

ஆகவே இயேசு என்ன செய்தார் தெரியுமா? ‘என்னிடம் ஒரு காசை காண்பியுங்கள்’ என்று சொன்னார். அவர்கள் ஒரு காசை காட்டியபோது, ‘யாருடைய உருவமும் பெயரும் இதில் இருக்கிறது?’ என்று கேட்டார். “இராயனுடையது” என அவர்கள் சொன்னார்கள். “அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்று இயேசு சொன்னார்.—லூக்கா 20:19-26.

இந்த ஆட்கள் கேட்ட தந்திரமான கேள்விக்கு இயேசு எப்படி பதிலளித்தார்?

யாராலுமே அந்தப் பதிலில் எந்தக் குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இராயன் மக்களுக்காக நல்ல காரியங்கள் செய்கிறார் என்றால், அந்தக் காரியங்களுக்காக அவருக்கு காசு செலுத்துவது, அதுவும் அவர் அச்சிட்ட காசை செலுத்துவது சரியாகத்தான் இருக்கும். ஆகவே இந்த விதத்தில், அரசாங்கம் நமக்காக செய்யும் காரியங்களுக்காக வரி செலுத்துவது சரி என்பதை இயேசு காட்டினார்.

நீ சின்னப் பிள்ளை என்பதால் வரி கட்ட வேண்டியிருக்காது. ஆனால் நீ அரசாங்கத்திற்கு ஒன்று செய்ய வேண்டும். அது என்னவென்று உனக்குத் தெரியுமா?— நீ அரசாங்க சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ‘மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்படியுங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. அரசாங்கத்தில் அதிகாரம் பெற்றிருப்பவர்களே இந்த மேலான அதிகாரங்கள். ஆகவே அரசாங்க சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கடவுளே சொல்கிறார்.—ரோமர் 13:1, 2.

ரோடுகளில் பேப்பரோ மற்ற குப்பையோ போடக்கூடாது என்ற சட்டம் இருக்கலாம். நீ அந்தச் சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமா?— வேண்டும், நீ அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். போலீஸ்காரருக்கும் நீ கீழ்ப்படிய வேண்டுமா?— மக்களைப் பாதுகாக்க போலீஸ்காரருக்கு அரசாங்கம் சம்பளம் தருகிறது. ஆகவே போலீஸுக்கு கீழ்ப்படிவதும் அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிவதும் ஒன்று.

நீ ஒரு ரோட்டை தாண்டப் போகும்போது, “நில்!” என்று போலீஸ்காரர் சொன்னால் நீ என்ன செய்ய வேண்டும்?— மற்றவர்கள் கேட்காமல் அவசரமாக ரோட்டைத் தாண்டினாலும் நீ என்ன செய்ய வேண்டும்?— அவர் சொல்லும் வரை நீ நிற்க வேண்டும். நீ மட்டும்தான் நிற்கிறாய் என்றாலும் பரவாயில்லை. ஏனென்றால் கீழ்ப்படிய வேண்டும் என்று கடவுள் உனக்குச் சொல்கிறார்.

அக்கம்பக்கத்தில் ஏதாவது தகராறு நடந்து கொண்டிருக்கலாம். அப்போது, ‘உள்ளேயே இருங்கள், வெளியே வர வேண்டாம்’ என்று போலீஸ்காரர் சொல்லலாம். ஆனால் கூச்சல் கேட்பதால் என்ன நடக்கிறதோ ஏது நடக்கிறதோ என்று நீ யோசித்து, வெளியே போய் எட்டிப் பார்க்கலாமா?— அப்படிச் செய்வது ‘மேலான அதிகாரங்களுக்கு’ கீழ்ப்படிவதைக் காட்டுமா?—

நிறைய இடங்களில் அரசாங்கம் பள்ளிகளைக் கட்டி, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கிறது. அந்த ஆசிரியர்களுக்கு நீ கீழ்ப்படிய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரா? நீ என்ன நினைக்கிறாய்?— இதைக் கொஞ்சம் யோசித்துப் பார். அரசாங்கம், மக்களைப் பாதுகாக்க எப்படி போலீஸுக்கு சம்பளம் தருகிறதோ அப்படித்தான் கற்பிப்பதற்காக ஆசிரியருக்கும் சம்பளம் தருகிறது. ஆகவே போலீஸுக்கு அல்லது ஆசிரியருக்கு கீழ்ப்படிவது அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிவதைப் போன்றது.

நாம் ஏன் போலீஸ்காரருக்கு கீழ்ப்படிய வேண்டும்?

ஆனால் ஏதாவது ஒரு உருவத்தை நீ வணங்க வேண்டும் என்று ஒரு ஆசிரியர் சொன்னால்? அப்போது நீ என்ன செய்வாய்?— நேபுகாத்நேச்சார் ராஜாவே கட்டளையிட்ட போதுகூட அந்த மூன்று எபிரெயர்கள் சிலையை வணங்கவில்லை. ஏன் என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா?— ஏனென்றால் கடவுள் பேச்சை மீற அவர்கள் விரும்பவில்லை.

ஒரு சரித்திர எழுத்தாளர், ஆரம்பத்தில் இருந்த கிறிஸ்தவர்களைப் பற்றி எழுதினார். அவர்கள் ‘முக்கியமாக பக்தி [அல்லது உத்தமம்] காட்டியது இராயனுக்கு அல்ல’ என்று அவர் எழுதினார். ஆமாம், அவர்கள் யெகோவாவிற்கே பக்தி காட்டினார்கள்! ஆகவே கடவுளுக்குத்தான் நம் வாழ்க்கையில் முதல் இடம் தர வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்.

நாம் அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்ப்பதால் நாம் அவ்வாறு கீழ்ப்படிகிறோம். ஆனால் எதை செய்யக் கூடாது என்று கடவுள் சொல்கிறாரோ அதைச் செய்யும்படி அரசாங்கம் சொன்னால் நாம் என்ன சொல்ல வேண்டும்?— பிரதான ஆசாரியரிடம் அப்போஸ்தலர்கள் சொன்னது போலவே ‘மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குக் கீழ்ப்படிவதே அவசியம்’ என்று சொல்ல வேண்டும்.—அப்போஸ்தலர் 5:29.

சட்டத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்று பைபிள் கற்பிக்கிறது. இது சம்பந்தமாக இப்போது சில வசனங்களை வாசிக்கலாம். மத்தேயு 5:41; தீத்து 3:1; 1 பேதுரு 2:12-14.