Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 29

பார்ட்டிகளுக்கு போவது கடவுளுக்குப் பிடிக்குமா?

பார்ட்டிகளுக்கு போவது கடவுளுக்குப் பிடிக்குமா?

இந்தப் பார்ட்டியைக் குறித்து கடவுள் ஏன் சந்தோஷப்பட்டார்?

பார்ட்டிகளுக்கு போக உனக்குப் பிடிக்குமா?— அது ரொம்ப ஜாலியாக இருக்கும். நாம் பார்ட்டிகளுக்கு போவதை பெரிய போதகர் விரும்புவார் என்று நீ நினைக்கிறாயா?— அவரும்கூட ஒரு கல்யாண விழாவுக்கு போயிருந்தார், அதுவும் ஒருவித பார்ட்டியாகத்தான் இருந்தது. அவருடன் சில சீஷர்களும் போயிருந்தார்கள். யெகோவா ‘சந்தோஷமுள்ள கடவுள்.’ ஆகவே நல்ல விதமான பார்ட்டிகளில் நாம் சிரித்து மகிழுவதை பார்த்து அவரும் சந்தோஷப்படுகிறார்.—1 தீமோத்தேயு 1:11; யோவான் 2:1-11.

இஸ்ரவேலர்கள் சிவந்த சமுத்திரத்தை தாண்டுவதற்காக யெகோவா அதை பிளந்தார் என்று இந்தப் புத்தகத்தில் 29-ஆம் பக்கத்தில் படித்தோம். அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?— அதன்பிறகு மக்கள் ஆடிப்பாடி யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள். அது ஒரு பார்ட்டி போல இருந்தது. அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். அதைப் பார்த்து கடவுளும் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார் என்பது நிச்சயம்.—யாத்திராகமம் 15:1, 20, 21.

கிட்டத்தட்ட 40 வருஷங்களுக்குப் பிற்பாடு இஸ்ரவேலர்கள் இன்னொரு பெரிய பார்ட்டிக்கு போனார்கள். ஆனால் இந்த முறை அவர்களை பார்ட்டிக்கு அழைத்தவர்கள் யெகோவாவை வணங்காதவர்கள். அவர்கள் மற்ற கடவுட்களை வணங்கி வந்தவர்கள், தாங்கள் கல்யாணம் செய்யாதவர்களோடு உடலுறவு கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களுடைய பார்ட்டிக்கு போவது சரி என்று நீ நினைக்கிறாயா?— யெகோவாவுக்கு அது பிடிக்கவில்லை, ஆகவே இஸ்ரவேலர்களை அவர் தண்டித்தார்.—எண்ணாகமம் 25:1-9; 1 கொரிந்தியர் 10:8.

இரண்டு பர்த்டே பார்ட்டிகளைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. பெரிய போதகரின் பிறந்த நாள் கொண்டாட்டம் அதில் ஒன்றா?— இல்லை. அந்த இரண்டுமே யெகோவாவை வணங்காதவர்களுடைய பர்த்டே பார்ட்டிகள். ஒருவர் ஏரோது அந்திப்பா என்ற ராஜா. அவர் இயேசு வாழ்ந்த சமயத்தில் கலிலேயா மாவட்டத்தை ஆட்சி செய்து வந்தார்.

ஏரோது ராஜா நிறைய கெட்ட காரியங்களைச் செய்தார். தன் சகோதரருடைய மனைவியான ஏரோதியாள் என்பவளை தன் மனைவியாக்கிக் கொண்டார். அது தவறான செயல் என்று கடவுளுடைய ஊழியரான யோவான் ஸ்நானன் ஏரோதிடம் சொன்னார். ஏரோதுக்கு அது பிடிக்கவில்லை. ஆகவே யோவானை ஜெயிலில் போட்டார்.—லூக்கா 3:19, 20.

யோவான் ஜெயிலில் இருந்தபோது ஏரோதின் பிறந்த நாள் வந்தது. ஏரோது ஒரு பெரிய பார்ட்டியை ஏற்பாடு செய்தார். முக்கியமான ஆட்கள் நிறைய பேரை அவர் அழைத்தார். அவர்கள் எல்லாரும் சாப்பிட்டு, குடித்து, ஜாலியாக இருந்தார்கள். பிறகு ஏரோதியாளின் மகள் அவர்கள் முன் வந்து நடனம் ஆடினாள். எல்லாருக்குமே அவளுடைய நடனம் ரொம்ப பிடித்துவிட்டது. ஆகவே அவளுக்கு சிறந்த பரிசை கொடுக்க ஏரோது ராஜா விரும்பினார். “நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன்” என்று கூறினார்.

அவள் எதைக் கேட்டிருப்பாள்? பணத்தையா? அழகான ஆடைகளையா? ஒரு தனி மாளிகையையா? அவளுக்கே என்ன கேட்பது என்று தெரியவில்லை. ஆகவே தன் அம்மாவிடம் சென்று, “நான் என்ன கேட்க வேண்டும்?” என்று கேட்டாள்.

ஏரோதியாள் யோவான் ஸ்நானனை அடியோடு வெறுத்தாள். அதனால் அவருடைய தலையைக் கேட்கும்படி தன் மகளிடம் சொன்னாள். அந்த மகளும் ராஜாவிடம் சென்று, ‘நீங்கள் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான் ஸ்நானனுடைய தலையைத் தர வேண்டும்’ என்று சொன்னாள்.

யோவான் நல்லவர் என்பது ஏரோது ராஜாவுக்கு தெரியும். அதனால் அவரைக் கொல்ல ஏரோது விரும்பவில்லை. இருந்தாலும் அவர் சத்தியம் செய்திருந்ததால், இப்போது தன் முடிவை மாற்றினால் பார்ட்டிக்கு வந்திருந்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்தார். ஆகவே யோவானின் தலையை வெட்டிக் கொண்டு வரும்படி ஒரு ஆளை சிறைக்கு அனுப்பினார். அவன் ஒரு தட்டில் அந்தத் தலையோடு சீக்கிரத்தில் திரும்பினான். அதை ஏரோதியாளின் மகளிடம் கொடுத்தான். அவள் அதை தன் அம்மாவிடம் கொடுத்தாள்.—மாற்கு 6:17-29.

பைபிள் குறிப்பிடுகிற இன்னொரு பர்த்டே பார்ட்டியும் மோசமாகத்தான் இருந்தது. அது எகிப்து ராஜாவின் பிறந்த நாள் கொண்டாட்டம். அந்தப் பார்ட்டியின்போதும் ஒருவருடைய தலையை வெட்டும்படி ராஜா கட்டளையிட்டார். அதன்பின் பறவைகள் தின்பதற்காக அந்த மனிதனின் உடல் தொங்கவிடப்பட்டது! (ஆதியாகமம் 40:19-22) அந்த இரண்டு பார்ட்டிகளையும் கடவுள் விரும்பியிருப்பார் என்று நினைக்கிறாயா?— நீ அங்கு இருந்திருக்க ஆசைப்பட்டிருப்பாயா?—

ஏரோதின் பர்த்டே பார்ட்டியின்போது என்ன நடந்தது?

பைபிளில் இருக்கும் எல்லா விஷயங்களுமே ஏதோவொரு காரணத்திற்காகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும். அது இரண்டே இரண்டு பர்த்டே பார்ட்டிகளைப் பற்றித்தான் சொல்கிறது. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே கொண்டாட்டத்தின் பாகமாக கெட்ட செயல்கள் நடந்தன. ஆகவே பர்த்டே பார்ட்டிகளைப் பற்றி கடவுள் என்ன சொல்கிறார் என்று நினைக்கிறாய்? நாம் பிறந்த நாட்களைக் கொண்டாட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரா?—

இன்று அப்படிப்பட்ட பார்ட்டிகளில் ஜனங்கள் ஒருவருடைய தலையை வெட்டுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் உண்மைக் கடவுளை வணங்காதவர்களே பிறந்த நாள் கொண்டாடும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தனர். பைபிள் குறிப்பிடும் பர்த்டே பார்ட்டிகளைப் பற்றி ஒரு புத்தகம் இப்படி சொல்கிறது: “பாவங்கள் செய்பவர்கள் மட்டும்தான் . . . தங்கள் பிறந்த நாட்களை ரொம்ப சந்தோஷத்தோடு கொண்டாடுகிறார்கள்.” (த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா) நாம் அவர்களைப் போல் இருக்க விரும்புகிறோமா?

பெரிய போதகர் தன் பிறந்த நாளைக் கொண்டாடினாரா?— இல்லை, இயேசுவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டதாக பைபிள் சொல்வதே இல்லை. சொல்லப்போனால் இயேசுவின் ஆரம்ப கால சீஷர்களும் அவருடைய பிறந்த நாளை கொண்டாடவில்லை. மக்கள் ஏன் பிற்பாடு டிசம்பர் 25-ஆம் தேதியில் இயேசுவின் பிறந்த நாளைக் கொண்டாட ஆரம்பித்தார்கள் தெரியுமா?—

“ரோமில் இருந்தவர்கள் அந்தத் தேதியில் சாட்டர்ன் பண்டிகையை, அதாவது சூரியனின் பிறந்த நாளை ஏற்கெனவே கொண்டாடி வந்ததால்” அதே தேதியைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று ஒரு புத்தகம் சொல்கிறது. (த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா) ஆகவே பொய்க் கடவுட்களை வணங்கியவர்களுக்கு ஏற்கெனவே விடுமுறையாக இருந்த ஒரு நாளில் இயேசுவின் பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது!

ஆனால் இயேசு டிசம்பர் மாதத்தில் பிறந்திருக்க முடியாது. ஏன் தெரியுமா?— ஏனென்றால் இயேசு பிறந்தபோது மேய்ப்பர்கள் ராத்திரியில் வயல்களில் இருந்ததாக பைபிள் சொல்கிறது. (லூக்கா 2:8-12) ஆனால் டிசம்பர் மாதத்தில் அந்தப் பகுதியில் மழையும் குளிருமாக இருக்கும். ஆகவே அவர்கள் வெளியே இருந்திருக்க முடியாது.

இயேசு ஏன் டிசம்பர் 25-ம் தேதியில் பிறந்திருக்க முடியாது?

கிறிஸ்மஸ் கொண்டாடப்படும் நாளில் இயேசு பிறக்கவில்லை என்பது நிறைய பேருக்குத் தெரியும். பொய்க் கடவுட்களை வணங்கியவர்கள் அதே தேதியில் யெகோவாவுக்குப் பிடிக்காத பார்ட்டியை கொண்டாடி வந்தார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள். கடவுள் அதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொள்வதைவிட பார்ட்டி கொண்டாடுவதுதான் அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. ஆனால் நாம் யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புகிறோம், இல்லையா?—

ஆகவே நாம் பார்ட்டிகள் கொண்டாடும்போது யெகோவாவுக்கு பிரியமான விதத்தில் கொண்டாட வேண்டியது அவசியம். அதை எந்தத் தேதியிலும் கொண்டாடலாம். ஒரு விசேஷ நாளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. ருசியான உணவு செய்து சாப்பிட்டு, விளையாடி மகிழலாம். உனக்கு அதில் விருப்பமா?— உன் அப்பா அம்மாவிடம் பேசி அவர்களோடு சேர்ந்து ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்யலாம். அது ஜாலியாக இருக்கும் அல்லவா?— ஆனால் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வதற்கு முன்பு அது கடவுளுக்குப் பிடித்த விதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கடவுளுக்குப் பிடித்த விதத்தில் பார்ட்டிகள் இருக்குமாறு எப்படி பார்த்துக்கொள்ளலாம்?

கடவுளுக்குப் பிடித்ததை மட்டுமே எப்போதும் செய்வதன் அவசியத்தை சில வசனங்கள் காட்டுகின்றன. அவற்றை இப்போது படிக்கலாம். நீதிமொழிகள் 12:2; யோவான் 8:29; ரோமர் 12:2; 1 யோவான் 3:22.