Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 31

ஆறுதல் எங்கே கிடைக்கும்

ஆறுதல் எங்கே கிடைக்கும்

என்றாவது நீ சோகமாக இருந்திருக்கிறாயா? தனியாக இருப்பது போல் உணர்ந்திருக்கிறாயா?— என்மேல் அன்பு காட்ட யார் இருக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறாயா?— சில பிள்ளைகள் அப்படியெல்லாம் நினைக்கிறார்கள். ஆனால் ‘நான் உன்னை மறக்க மாட்டேன்’ என்று கடவுள் வாக்குறுதி தருகிறார். (ஏசாயா 49:15) நினைத்துப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது அல்லவா?— ஆமாம், யெகோவா தேவன் உண்மையிலேயே நம்மேல் அன்பு வைத்திருக்கிறார்!

தொலைந்துபோன இந்த ஆட்டுக்குட்டிக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறாய்?

‘என் அப்பாவும் என் அம்மாவும் என்னை கைவிட்டால்கூட யெகோவா என்னை ஏற்றுக் கொள்வார்’ என்று ஒரு பைபிள் எழுத்தாளர் எழுதினார். (சங்கீதம் 27:10) இதை அறிவது மனதிற்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது அல்லவா?— ஆமாம், யெகோவாவே நமக்கு இப்படி சொல்கிறார்: ‘நீ பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன். . . . நிஜமாகவே நான் உனக்கு உதவி செய்வேன்.’ஏசாயா 41:10.

என்றாலும் சிலசமயங்களில் சாத்தான் நமக்குப் பிரச்சினைகளைக் கொடுக்க யெகோவா அனுமதிக்கிறார். தன் ஊழியர்களை சோதிக்கவும் சாத்தானை அனுமதிக்கிறார். ஒருமுறை சாத்தான் இயேசுவுக்கு ரொம்பவே கஷ்டம் கொடுத்தான்; ஆகவே அவர் யெகோவாவை சப்தமாகக் கூப்பிட்டு, ‘என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னை கைவிட்டீர்கள்?’ என்று கேட்டார். (மத்தேயு 27:46) இயேசு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போதிலும், யெகோவா தன்னை நேசித்ததை அறிந்திருந்தார். (யோவான் 10:17) அதேசமயத்தில், தன் ஊழியர்களை சோதிக்கவும் அவர்களுக்கு துன்பம் தரவும் சாத்தானை யெகோவா அனுமதிக்கிறார் என்பதைக்கூட இயேசு அறிந்திருந்தார். யெகோவா ஏன் அதை அனுமதிக்கிறார் என்பதை இன்னொரு அதிகாரத்தில் படிப்போம்.

சின்னப் பிள்ளைகள் சிலசமயங்களில் பயப்படுவது சகஜம்தான். உதாரணத்திற்கு, நீ எப்போதாவது தொலைந்து போயிருக்கிறாயா?— அப்போது உனக்கு பயமாக இருந்ததா?— நிறைய பிள்ளைகள் பயப்படுவார்கள். தொலைந்து போவதைப் பற்றி ஒருமுறை பெரிய போதகர் ஒரு கதை சொன்னார். அந்தக் கதையில் தொலைந்து போனது ஒரு பிள்ளை அல்ல. ஆனால் ஒரு ஆடு.

சில விதங்களில் நீ ஒரு ஆட்டைப் போல இருக்கிறாய். எப்படி தெரியுமா? ஆடுகள் சிறியவை, அதிக பலமும் இல்லாதவை. அவற்றை பார்த்துக்கொள்வதற்கும் பாதுகாப்பதற்கும் யாராவது வேண்டும். ஆடுகளை கவனிப்பவர்தான் மேய்ப்பர்.

இயேசு சொன்ன கதையில் ஒரு மேய்ப்பருக்கு நூறு ஆடுகள் இருந்தன. ஆனால் ஒரு ஆடு தொலைந்துபோனது. மலையின் இன்னொரு பக்கத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க அது ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால் கொஞ்ச நேரத்திற்குள் தனியாக எங்கோ போய்விட்டது. சுற்றுமுற்றும் பார்த்தபோது ஒருவருமே இல்லை. அப்போது அந்த ஆட்டிற்கு எப்படி இருந்திருக்கும்?—

அந்த ஆடு தொலைந்துபோனதை மேய்ப்பர் அறிந்தபோது என்ன செய்தார்? தனியாகப் போனது அந்த ஆட்டின் தப்பு, நான் எதற்காக கவலைப்பட வேண்டும் என்று சொன்னாரா? அல்லது 99 ஆடுகளை பாதுகாப்பான ஒரு இடத்தில் விட்டுவிட்டு, தொலைந்துபோன அந்த ஒரு ஆட்டைத் தேடிச் சென்றாரா? ஒரேவொரு ஆட்டிற்காக அந்தளவு சிரமப்படுவது தேவைதானா?— தொலைந்துபோன அந்த ஆடாக நீ இருந்திருந்தால், மேய்ப்பர் உன்னைத் தேடி வர வேண்டும் என்று விரும்பியிருப்பாயா?—

ஆட்டைக் காப்பாற்றிய மேய்ப்பனைப் போல் இருப்பது யார்?

மேய்ப்பர் தன்னுடைய எல்லா ஆடுகளையுமே மிகவும் நேசித்தார், தொலைந்துபோன ஆட்டைக்கூட ரொம்ப நேசித்தார். ஆகவே அதைத் தேடிச் சென்றார். மேய்ப்பர் வருவதைப் பார்த்ததும் அந்த தொலைந்துபோன ஆட்டிற்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! ஆட்டைக் கண்டுபிடித்ததால் மேய்ப்பர் மிகவும் சந்தோஷப்பட்டதாக இயேசு சொன்னார். தொலைந்து போகாத மற்ற 99 ஆடுகளைவிட இந்த ஒரு ஆட்டைக் குறித்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். ஆக, இயேசு சொன்ன கதையில் வந்த அந்த மேய்ப்பரைப் போல் உண்மையில் இருப்பது யார்? அந்த மேய்ப்பர் தன் ஆட்டின் மீது கரிசனை காட்டிய அளவிற்கு நம் மீது கரிசனை காட்டுவது யார்?— பரலோகத்தில் இருக்கும் தன் தகப்பனே என்று இயேசு கூறினார். அவரது தகப்பன் யெகோவாவே.

யெகோவா தேவன் தன் ஜனங்களுக்கு பெரிய மேய்ப்பராக இருக்கிறார். தன்னை சேவிக்கிற எல்லாரையும் அவர் விரும்புகிறார். உன்னைப் போன்ற சிறு பிள்ளைகளையும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். நாம் யாரும் காயப்படுவதை அல்லது செத்துப்போவதை பார்க்க அவர் விரும்புவதில்லை. கடவுள் நம்மீது அந்தளவு அக்கறை காட்டுவதை அறிவது நிச்சயம் ஆறுதலாக இருக்கிறது அல்லவா?—மத்தேயு 18:12-14.

உன் அப்பாவோ வேறு யாராவதோ உனக்கு எந்தளவுக்கு நிஜமானவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு யெகோவாவும் நிஜமானவராக இருக்கிறாரா?

நீ உண்மையிலேயே யெகோவா தேவனை நம்புகிறாயா?— அவரை நிஜமான ஒருவராக கருதுகிறாயா?— உண்மைதான், நம்மால் யெகோவாவை பார்க்க முடியாது. ஏனென்றால் நம் கண்களுக்குத் தெரியாத ஆவி உடல் அவருக்கு இருக்கிறது. ஆனாலும் அவர் நிஜமானவர். அவரால் நம்மைப் பார்க்க முடியும். நமக்கு எப்போது உதவி தேவை என்பது அவருக்குத் தெரியும். அவரிடம் நாம் ஜெபத்தில் பேசலாம். பூமியில் உள்ள யாரிடமாவது நாம் பேசும் விதமாகவே அவரிடம் பேசலாம். நாம் அப்படி பேச வேண்டும் என்றே யெகோவா விரும்புகிறார்.

ஆகவே நீ எப்போதாவது சோகமாக இருக்கும்போது அல்லது தன்னந்தனியாக இருப்பதைப் போல் உணரும்போது என்ன செய்ய வேண்டும்?— யெகோவாவிடம் பேச வேண்டும். அவரிடம் நெருங்கிச் சென்றால் அவர் உனக்கு ஆறுதல் தந்து உதவி செய்வார். தன்னந்தனியாக இருப்பதைப் போல் உணரும்போதும் யெகோவா உன்னை நேசிக்கிறார் என்பதை மறந்துவிடாதே. இப்போது நம் பைபிளை எடுக்கலாம். 23-ஆம் சங்கீதத்தில் முதல் வசனத்திலிருந்து வாசிக்கலாம்: “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.”

இப்போது 4-ஆம் வசனத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது பார்; “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. யெகோவாவை கடவுளாக வணங்கும் மக்கள் இப்படித்தான் உணருகிறார்கள். பிரச்சினைகள் வந்தாலும் ஆறுதலைப் பெறுகிறார்கள். நீயும் அப்படி உணருகிறாயா?—

அன்பான மேய்ப்பர் தன் ஆடுகளை கவனிக்கும் விதமாகவே யெகோவா தன் மக்களை அக்கறையோடு கவனிக்கிறார். அவர்களுக்கு சரியான வழி காட்டுகிறார். அவர் காட்டும் அந்த வழியில் அவர்கள் சந்தோஷமாக செல்கிறார்கள். அவர்களைச் சுற்றிலும் பிரச்சினைகள் இருந்தாலும் அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. மேய்ப்பர் கொடிய விலங்குகளிடமிருந்து தன் ஆடுகளைப் பாதுகாப்பதற்கு ஒரு கோலை அல்லது தடியை பயன்படுத்துகிறார். இளம் மேய்ப்பராக இருந்த தாவீது எவ்வாறு தன் ஆடுகளை சிங்கத்திடமிருந்தும் கரடியிடமிருந்தும் காப்பாற்றினார் என பைபிள் சொல்கிறது. (1 சாமுவேல் 17:34-36) யெகோவா தங்களை காப்பாற்றுவார் என்று அவருடைய மக்களுக்கு நன்றாகவே தெரியும். கடவுள் அவர்களோடு இருப்பதால் அவர்கள் பாதுகாப்பாக உணரலாம்.

மேய்ப்பர் தன் ஆடுகளை பாதுகாப்பதுபோல், பிரச்சினைகளிலிருந்து யார் நம்மை பாதுகாப்பார்?

யெகோவா தன் ஆடுகளை உண்மையிலேயே நேசிக்கிறார். அவர்களை கரிசனையோடு கவனிக்கிறார். பைபிள் இப்படி சொல்கிறது: ‘ஒரு மேய்ப்பரைப் போல் அவர் தன் ஆடுகளை மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளை தன் கைகளால் ஒன்று சேர்ப்பார்.’—ஏசாயா 40:11.

யெகோவா அப்படிப்பட்டவர் என்பதை தெரிந்துகொள்ளும்போது சந்தோஷமாக இருக்கிறது அல்லவா?— நீ அவருடைய ஆடாக இருக்க விரும்புகிறாயா?— ஆடுகள் தங்கள் மேய்ப்பரின் குரலுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன. அவருக்குப் பக்கத்திலேயே இருக்கின்றன. நீ யெகோவாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கிறாயா?— நீ அவரிடம் நெருங்கி இருக்கிறாயா?— அப்படியென்றால் நீ ஒருபோதும் பயப்பட வேண்டியதில்லை. யெகோவா உன்னோடு இருப்பார்.

தன்னை சேவிப்பவர்களை யெகோவா அக்கறையோடு கவனிக்கிறார். இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இப்போது வாசிக்கலாம். சங்கீதம் 37:25; 55:22; லூக்கா 12:29-31.