Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 38

நாம் ஏன் இயேசுவை நேசிக்க வேண்டும்?

நாம் ஏன் இயேசுவை நேசிக்க வேண்டும்?

மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பலில் நீ இருப்பதாக வைத்துக் கொள். உன்னை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பாய் அல்லவா?— ஒருவர் தன் உயிரையே கொடுத்து உன்னைக் காப்பாற்றினால் எப்படி இருக்கும்?— அதைத்தான் இயேசு கிறிஸ்து செய்தார். 37-ஆம் அதிகாரத்தில் நாம் கற்றபடி, அவர் நம்மை காப்பாற்றுவதற்காக தன் உயிரை மீட்கும்பொருளாக கொடுத்தார்.

நாம் உண்மையில் தண்ணீருக்குள் மூழ்கும்போது இயேசு நம்மை காப்பாற்றுகிறார் என்று அர்த்தமில்லை. அப்படியென்றால் வேறு எதிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறார்? உனக்கு ஞாபகம் இருக்கிறதா?— ஆதாமிடமிருந்து நாம் எல்லாருமே பெற்றிருக்கும் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் அவர் நம்மைக் காப்பாற்றுகிறார். சிலர் மிகவும் கெட்ட காரியங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்காகவும் இயேசு இறந்தார். அப்படிப்பட்ட மக்களை காப்பாற்ற நீ உன் உயிரைக் கொடுத்திருப்பாயா?—

‘நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் இறக்கத் துணியலாம்’ என்று பைபிள் சொல்கிறது. இருந்தாலும் இயேசு ‘அக்கிரமக்காரருக்காக இறந்தார்’ என அது விளக்குகிறது. கடவுளை சேவிக்காதவர்கள்கூட அவர்களில் அடங்குவர்! ‘நாம் பாவிகளாக இருக்கும்போதே [கெட்ட காரியங்களை செய்து கொண்டிருக்கும்போதே] கிறிஸ்து நமக்காக இறந்தார்’ என்றும் பைபிள் சொல்கிறது.—ரோமர் 5:6-8.

முன்பு மிகவும் கெட்டவனாக இருந்த ஒரு அப்போஸ்தலன் யார் என்று உனக்குத் தெரியுமா?— அந்த அப்போஸ்தலன் இப்படி எழுதினார்: ‘பாவிகளைக் காப்பாற்ற இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். அந்தப் பாவிகளில் முதன்மையான பாவி நான்.’ இப்படிச் சொன்னவர் அப்போஸ்தலன் பவுல். தான் ‘ஒருகாலத்தில் புத்தியில்லாமல்’ இருந்ததாகவும் ‘தீமை’ மட்டுமே செய்துவந்ததாகவும் அவர் சொன்னார்.—1 தீமோத்தேயு 1:15; தீத்து 3:3.

அப்படிப்பட்ட கெட்டவர்களுக்காக இறப்பதற்கு தன் மகனை அனுப்பிய கடவுளுக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை நினைத்துப் பார்! இப்போது உன் பைபிளை எடுத்து யோவான் 3-ஆம் அதிகாரத்திற்கு திருப்புகிறாயா? அதில் 16-ஆம் வசனம் இப்படி சொல்கிறது: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் [அதாவது, பூமியில் வாழும் மக்களிடத்தில்] அன்புகூர்ந்தார்.”

இயேசு நமக்காக உயிரைக் கொடுத்தபோது எப்படியெல்லாம் பாடுபட்டார்?

தன் அப்பாவுக்கு நம்மேல் இருக்கும் அதே அன்பு தனக்கும் இருப்பதை இயேசு நிரூபித்தார். இயேசு கைது செய்யப்பட்ட இரவில் எப்படிப்பட்ட கஷ்டங்கள் அனுபவித்தார் என்பதை இந்தப் புத்தகத்தில் 30-ஆம் அதிகாரத்தில் படித்தோம் இல்லையா? அவர் பிரதான ஆசாரியரான காய்பாவின் வீட்டிற்கு கொண்டு போகப்பட்டார். அங்கே விசாரணை நடத்தப்பட்டது. பொய் சாட்சிகள் வரவழைக்கப்பட்டார்கள். இயேசுவைப் பற்றி அவர்கள் பொய் சொன்னார்கள். ஜனங்கள் அவரை கையால் குத்தினார்கள். அந்த சமயத்தில்தான் தனக்கு இயேசுவை தெரியவே தெரியாது என்று பேதுரு சொன்னார். நாம் அங்கே இருப்பதாக இப்போது கற்பனை செய்து கொள்ளலாம். என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.

பொழுது விடிகிறது. ராத்திரி முழுவதும் இயேசு தூங்கவில்லை. ராத்திரி நேரத்தில் விசாரணை நடத்துவது தவறு என்பதால் ஆசாரியர்கள் சீக்கிரமாக காலையில் இன்னொரு விசாரணை நடத்துகிறார்கள். யூத நீதிமன்றத்தைக் கூட்டுகிறார்கள். அப்போது, கடவுளுக்கு எதிராக பாவங்கள் செய்ததாக மறுபடியும் இயேசுவை குற்றப்படுத்துகிறார்கள்.

அடுத்ததாக ஆசாரியர்கள் இயேசுவின் கைகளைக் கட்டி ரோம ஆளுநரான பிலாத்துவிடம் கொண்டு செல்கிறார்கள். ‘இயேசு அரசாங்கத்தை எதிர்க்கிறார், அவரை கொல்ல வேண்டும்’ என அவர்கள் பிலாத்துவிடம் சொல்கிறார்கள். ஆனால் அந்த ஆசாரியர்கள் பொய் சொல்வது பிலாத்துவுக்கு புரிகிறது. ஆகவே, ‘நான் இந்த மனிதனிடம் எந்தக் குற்றத்தையும் பார்க்கவில்லை. அவரை விடுதலை செய்துவிடுகிறேன்’ என்கிறார். ஆனால் ஆசாரியர்களும் மற்றவர்களும், ‘வேண்டாம்! அவனை கொல்ல வேண்டும்!’ என்று கத்துகிறார்கள்.

பிற்பாடு இயேசுவை விடுதலை செய்யப்போவதாக மறுபடியும் மக்களிடம் சொல்ல பிலாத்து முயற்சி செய்கிறார். ஆனால் ஆசாரியர்கள் கூட்டத்தாரை தூண்டிவிடுகிறார்கள். ஆகவே அவர்கள், ‘நீங்கள் அவனை விடுதலை செய்தால், நீங்களும் அரசாங்கத்தை எதிர்ப்பதாக அர்த்தம்! அவனைக் கொல்ல வேண்டும்!’ என்று கத்துகிறார்கள். அவர்கள் பயங்கர கூச்சல் போட்டு ரகளை செய்கிறார்கள். பிலாத்து என்ன செய்கிறார் தெரியுமா?—

அவர் கூட்டத்தாரின் பேச்சைக் கேட்கிறார். முதலில் இயேசுவை சாட்டையால் அடிக்க ஏற்பாடு செய்கிறார். பிறகு அவரை கொல்லும்படி வீரர்களிடம் ஒப்படைக்கிறார். அவர்கள் இயேசுவின் தலைமேல் முள் கிரீடத்தை வைக்கிறார்கள்; கிண்டலாக அவருக்கு முன் தலைவணங்கி கேலி செய்கிறார்கள். பிறகு ஒரு பெரிய கழுமரத்தை அதாவது கம்பத்தைக் கொடுத்து நகருக்கு வெளியே கபாலஸ்தலம் என்ற இடத்திற்கு தூக்கிக்கொண்டு போகும்படி அவரிடம் சொல்கிறார்கள். அங்கே இயேசுவின் கைகளையும் கால்களையும் கம்பத்தோடு சேர்த்து ஆணியடிக்கிறார்கள். பிறகு அதை நேராக தூக்கி நிறுத்துகிறார்கள். இயேசு அதில் தொங்கிக்கொண்டு இருக்கிறார். ரத்தம் கொட்டுகிறது. பயங்கர வலியில் துடிக்கிறார்.

இயேசு உடனடியாக இறப்பதில்லை. அந்தக் கம்பத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறார். பிரதான ஆசாரியர்கள் அவரை கேலி செய்கிறார்கள். அந்த வழியே செல்கிறவர்கள், ‘நீ கடவுளுடைய மகன் என்றால், கழுமரத்திலிருந்து இறங்கி வா பார்க்கலாம்!’ என்கிறார்கள். ஆனால் தன் தகப்பன் எதற்காக தன்னை அனுப்பியிருக்கிறார் என்பது இயேசுவுக்கு தெரியும். அதாவது, தன் பரிபூரண உயிரை தியாகம் செய்ய வேண்டும், அப்போதுதான் நித்திய ஜீவனை பெறும் வாய்ப்பு மனிதருக்கு கிடைக்கும் என்பது அவருக்கு தெரியும். கடைசியில், மதியம் சுமார் மூன்று மணிக்கு இயேசு சத்தமாக தன் அப்பாவை கூப்பிட்டு உயிரை விடுகிறார்.—மத்தேயு 26:36–27:50; மாற்கு 15:1; லூக்கா 22:39–23:46; யோவான் 18:1–19:30.

ஆதாமிலிருந்து இயேசு எவ்வளவு வித்தியாசமாக இருந்தார்! ஆதாம் கடவுளிடம் அன்பு காட்டவில்லை. அவருக்குக் கீழ்ப்படியவில்லை. நம்மிடமும் அன்பு காட்டவில்லை. அவன் பாவம் செய்ததால்தான் நாம் எல்லாரும் பாவத்தோடு பிறந்திருக்கிறோம். ஆனால் இயேசு, கடவுள் மீதும் நம் மீதும் அன்பு காட்டினார். அவர் எப்போதுமே கடவுளுக்கு கீழ்ப்படிந்தார். ஆதாம் நமக்கு செய்திருக்கும் தீங்கை நீக்க அவர் தன் உயிரையே கொடுத்தார்.

இயேசுவை நேசிப்பதை நாம் எப்படி காட்டலாம்?

இயேசு இப்படிப்பட்ட அருமையான காரியத்தை செய்ததற்காக நீ நன்றியோடு இருக்கிறாயா?— நீ கடவுளிடம் ஜெபம் செய்யும்போது, தன் மகனை நமக்காக கொடுத்ததற்கு நன்றி சொல்கிறாயா?— கிறிஸ்து தனக்காக செய்த காரியத்தை அப்போஸ்தலன் பவுல் மதித்தார். கடவுளுடைய மகன் ‘என்மேல் அன்பு வைத்து எனக்காக தன்னையே ஒப்புக்கொடுத்தார்’ என பவுல் எழுதினார். (கலாத்தியர் 2:20) இயேசு உனக்காகவும் எனக்காகவும்கூட இறந்தார். நாம் நித்திய ஜீவனை பெறுவதற்காக அவர் தன் பரிபூரண உயிரைக் கொடுத்தார்! நாம் இயேசுவை நேசிக்க வேண்டியதற்கு இது கண்டிப்பாகவே சிறந்த காரணம்.

‘கிறிஸ்துவின் அன்பு நம்மை செயல்பட வைக்கிறது’ என கொரிந்து நகரில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். கிறிஸ்துவின் அன்பு நம்மை எவ்வாறு செயல்பட வைக்க வேண்டும்? நீ என்ன நினைக்கிறாய்?— பவுல் சொல்வதைக் கவனி: ‘எல்லாரும் அவருக்காக வாழும்படி கிறிஸ்து எல்லாருக்காகவும் இறந்தார். அவர்கள் தங்களைத் தாங்களே பிரியப்படுத்தும் விதத்தில் வாழக்கூடாது.’2 கொரிந்தியர் 5:14, 15, நியூ லைஃப் வர்ஷன்.

நீ கிறிஸ்துவைப் பிரியப்படுத்தவே வாழ்கிறாய் என்பதை எந்த வழிகளில் காட்டலாம் என்று நினைக்கிறாய்?— அவரைப் பற்றி நீ கற்றிருக்கும் விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்வது ஒரு வழியாகும். அல்லது, இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்: நீ தனியாக இருக்கலாம். ஆகவே நீ என்ன செய்கிறாய் அல்லது என்ன பார்க்கிறாய் என்பதெல்லாம் உன் அப்பா அம்மாவுக்குத் தெரியாது. வேறு யாராலும்கூட உன்னை பார்க்க முடியாது. அந்த சந்தர்ப்பத்தில் இயேசுவுக்கு பிரியமில்லாத காரியங்களை நீ டிவியில் அல்லது இன்டர்நெட்டில் பார்ப்பாயா?— இயேசு இப்போது உயிரோடு இருக்கிறார் என்பதை மறந்து விடாதே. நீ செய்யும் எல்லாவற்றையும் அவரால் பார்க்க முடியும்!

நாம் செய்யும் எல்லாவற்றையும் யாரால் பார்க்க முடியும்?

நாம் இயேசுவை நேசிக்க வேண்டியதற்கு இன்னொரு காரணம், நாம் யெகோவாவை பின்பற்ற ஆசைப்படுவதாகும். “பிதா என்னில் அன்பாயிருக்கிறார்” என்று இயேசு சொன்னார். அவர் ஏன் இயேசுவில் அன்பாயிருக்கிறார், நாமும் ஏன் அவரில் அன்பாயிருக்க வேண்டும் என்றெல்லாம் உனக்குத் தெரியுமா?— ஏனென்றால் கடவுளுடைய விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதற்காக உயிரையும் கொடுக்க இயேசு முன்வந்தாரே. (யோவான் 10:17) ஆகவே பைபிள் சொல்வதை நாம் செய்வோமாக: ‘நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல கடவுளைப் பின்பற்றுங்கள், கிறிஸ்து உங்கள் மீது அன்பு வைத்து உங்களுக்காகத் தன்னை கொடுத்தது போல் நீங்களும் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.’—எபேசியர் 5:1, 2.

இயேசுவுக்கும் அவர் நமக்காக செய்த தியாகத்திற்கும் நன்றியை வளர்த்துக்கொள்ள சில வசனங்களை நாம் வாசிக்கலாம். யோவான் 3:35; 15:9, 10; 1 யோவான் 5:11, 12.