Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 47

அர்மகெதோன் சீக்கிரம் வருமென எப்படி சொல்லலாம்

அர்மகெதோன் சீக்கிரம் வருமென எப்படி சொல்லலாம்

அடையாளம் என்பது என்னவென்று உனக்குத் தெரியும் அல்லவா?—மறுபடியும் இந்த உலகத்தை வெள்ளத்தால் அழிக்கப் போவதில்லை என்பதற்கு கடவுள் ஒரு அடையாளத்தைக் கொடுத்ததைப் பற்றி 46-ஆம் அதிகாரத்தில் படித்தோம். அப்போஸ்தலர்களும் ஒரு அடையாளத்தைக் கேட்டார்கள். இயேசு எப்போது வருவார் என்பதையும் உலகம் எப்போது முடியும் என்பதையும் தெரிந்துகொள்ள அவர்கள் அடையாளத்தைக் கேட்டார்கள்.—மத்தேயு 24:3.

இயேசு பரலோகத்தில் ஆட்சி செய்வதை பார்க்க முடியாது என்பதால், அவர் ஆட்சி செய்ய துவங்கிவிட்டதை மக்கள் புரிந்துகொள்வதற்கு பார்க்க முடிகிற ஒரு அடையாளம் தேவைப்பட்டது. ஆகவே பூமியில் சில சம்பவங்களை கவனிக்கும்படி இயேசு தன் சீஷர்களுக்கு சொன்னார். அந்தச் சம்பவங்கள் நடக்கும்போது, அவர் பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்ய வந்துவிட்டார் என்று புரிந்துகொள்ளலாம்.

விழிப்புடன் கவனிக்க வேண்டிய அவசியத்தை சீஷர்களுக்கு கற்பிக்க இயேசு இப்படி சொன்னார்: ‘அத்திமரத்தையும் மற்ற எல்லா மரங்களையும் பாருங்கள். அவை துளிர் விடுகிறதை நீங்கள் காணும்போது வசந்த காலம் சீக்கிரத்தில் வரப்போவதை அறிகிறீர்கள்.’ வசந்த காலம் சீக்கிரத்தில் வரப்போவதை எப்படி அறிந்துகொள்வது என்று உனக்கு தெரியும். அதேபோல் இயேசு சொன்ன காரியங்கள் நடப்பதைப் பார்க்கும்போது அர்மகெதோன் சீக்கிரத்தில் வரப்போவதை தெரிந்துகொள்ளலாம்.—லூக்கா 21:29, 30.

அத்திமரத்தைப் பற்றி பேசியபோது இயேசு என்ன பாடம் கற்பித்தார்?

கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்தில் வரப்போவதற்கு இயேசு கொடுத்த அடையாளத்தின் அம்சங்களை இந்தப் பக்கத்திலும் அடுத்த பக்கத்திலும் உள்ள படங்களில் பார்க்கலாம். இவை எல்லாம் நடக்கும்போது, கிறிஸ்துவை ராஜாவாக கொண்ட கடவுளுடைய ராஜ்யம் மற்ற மனித அரசாங்கங்கள் எல்லாவற்றையும் அழித்துவிடும். இதை நாம் 46-ஆம் அதிகாரத்தில் படித்தோம்.

ஆகவே முந்தின இரு பக்கங்களில் உள்ள படங்களை கவனமாக பார். அதைப் பற்றி இப்போது பேசலாம். இந்தப் படங்களில் உள்ளவை மத்தேயு 24:6-14-லும் லூக்கா 21:9-11-லும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் ஒரு சிறிய எண் கொடுக்கப்பட்டிருப்பதையும் கவனி. அதே எண், அந்தப் படத்தை விளக்கும் பாராவின் ஆரம்பத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது, இயேசு சொன்ன அடையாளத்தின் பல்வேறு அம்சங்கள் இன்று நடக்கிறதா என்று பார்க்கலாம்.

(1) இயேசு இவ்வாறு சொன்னார்: ‘போர்களையும் போர்களைப் பற்றிய செய்திகளையும் கேட்பீர்கள். . . . நாட்டிற்கு எதிராக நாடும், அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கமும் எழும்பும்.’ போர்களைப் பற்றிய செய்திகளை நீ கேட்டிருக்கிறாயா?— முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை நடந்தது. இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை நடந்தது. அதற்கு முன்பு உலகப் போர்கள் நடந்ததே இல்லை! இப்போது உலகம் முழுவதும் போர்கள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், டிவியிலும் ரேடியோவிலும் பேப்பரிலும் போர்களைப் பற்றி கேட்கிறோம் அல்லது வாசிக்கிறோம்.

(2) ‘பல இடங்களில் பஞ்சங்கள் உண்டாகும்’ என்றும் இயேசு சொன்னார். எல்லாருக்கும் போதிய உணவு இல்லாதது உனக்குத் தெரிந்திருக்கலாம். சாப்பாடு இல்லாததால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சாகிறார்கள்.

(3) ‘பல இடங்களில் கொள்ளைநோய்களும் உண்டாகும்’ என்றுகூட இயேசு கூறினார். கொள்ளைநோய் என்றால் என்ன தெரியுமா?— அது நிறைய பேரை கொல்லும் வியாதி அல்லது நோய். ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற ஒரு கொடிய கொள்ளைநோய் கிட்டத்தட்ட ஒரே வருஷத்தில் ஏறக்குறைய 2 கோடி மக்களை கொன்றுவிட்டது. நம் காலத்தில் இன்னும் அதிகமானவர்கள் எய்ட்ஸ் நோயால் இறப்பார்கள். அதோடு கேன்ஸர், இதய நோய் போன்ற மற்ற வியாதிகளும் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானவர்களை கொல்கின்றன.

(4) அடையாளத்தின் இன்னொரு அம்சமாக, ‘பூமி அதிர்ச்சிகள் பல இடங்களில் உண்டாகும்’ என்று இயேசு குறிப்பிட்டார். பூமி அதிர்ச்சி என்றால் என்ன தெரியுமா?— பூமி அதிர்ச்சியின்போது நிலம் கிடுகிடுவென ஆடும். வீடுகள் இடிந்து விழுந்து, மக்கள் செத்துப்போவார்கள். 1914-ஆம் வருடம் முதல், ஒவ்வொரு ஆண்டும் பூமி அதிர்ச்சிகள் பல ஏற்பட்டிருக்கின்றன. நீ அவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?—

(5) ‘அக்கிரமம் அதிகமாகும்’ என்ற இன்னொரு அம்சத்தையும் இயேசு சொன்னார். அதனால்தான் இன்று திருட்டும் அடிதடி சண்டையும் அவ்வளவு அதிகமாக இருக்கிறது. திருடர்கள் வீட்டிற்குள் புகுந்துவிடுவார்களோ என்று எல்லா இடங்களிலும் மக்கள் பயப்படுகிறார்கள். உலகம் முழுவதிலும் இந்தளவுக்கு அக்கிரமமும் வன்முறையும் முன்பு இருந்ததில்லை.

(6) இன்னொரு மிக முக்கியமான அம்சத்தை இயேசு கொடுத்தார்; ‘ராஜ்யத்தைப் பற்றிய நல்ல செய்தி பூமியிலுள்ள எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்படும்; அப்போது முடிவு வரும்’ என்றார். (மத்தேயு 24:14) நீ இந்த ‘நல்ல செய்தியை’ நம்பினால் அதைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டும். அப்படி செய்வதன் மூலம், அடையாளத்தின் இந்த அம்சத்தை நிறைவேற்றுவதில் நீயும் பங்கு கொள்ளலாம்.

இயேசு சொன்ன அம்சங்கள் எப்போதுமே நடந்து வந்திருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் உலகிலுள்ள இத்தனை அநேக இடங்களில் அந்த அடையாளத்தின் எல்லா அம்சங்களும் ஒரே சமயத்தில் ஒருபோதும் நடந்ததில்லை. ஆகவே அந்த அடையாளத்தின் அர்த்தம் உனக்குப் புரிகிறதா?— இவை எல்லாம் நடப்பதை நாம் பார்க்கும்போது, சீக்கிரத்தில் இந்தக் கெட்ட உலகம் அழிந்து கடவுளுடைய புதிய உலகம் வரும் என்று புரிந்துகொள்ளலாம்.

இயேசு அந்த அடையாளத்தை சொன்னபோது ஒரு பருவகாலத்தைப் பற்றியும் சொன்னார். ‘குளிர்காலத்தில் நீங்கள் ஓட வேண்டிய நிலை ஏற்படாதிருக்க தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டார். (மத்தேயு 24:20) அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்று நினைக்கிறாய்?—

குளிர்காலத்தில் பயணம் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும் அல்லது ஆபத்தாகக்கூட இருக்கும்; அப்படிப்பட்ட காலத்தில் ஒருவர் ஏதோவொரு அழிவிலிருந்து தப்பிக்க முயன்றால் என்ன நடக்கும்?— அவர் ஒருவேளை தப்பித்தால்கூட மிகுந்த கஷ்டப்பட்டுத்தான் தப்பிக்க முடியும். சீக்கிரமாக புறப்பட்டுப் போகாமல் வேறு காரியங்களையே செய்துகொண்டிருந்தால் அந்தக் கடும் குளிரில் சாக வேண்டியிருக்கும். இது எவ்வளவு வருத்தமானது அல்லவா?—

ஓடிப்போவதற்கு குளிர்காலம் வரை காத்திருக்கக் கூடாது என்று பேசியபோது இயேசு என்ன குறிப்பை சொல்ல வந்தார் என்று புரிகிறதா?— அர்மகெதோன் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாததால், அவரிடம் அன்பு இருப்பதைக் காட்ட நாம் காலம் தாழ்த்தக் கூடாது என்று சொன்னார்; அந்த அன்பைக் காட்டுவதற்கான வழி, கடவுளை சேவிப்பதே. நாம் தாமதித்தால் அதற்கான காலம் முடிந்துவிடும். பிறகு, பெரிய வெள்ளம் வந்த சமயத்தில் நோவாவின் எச்சரிப்பைக் கேட்டும் பேழைக்குள் செல்லாத மக்களின் கதிதான் நமக்கும் ஏற்படும்.

When Jesus spoke of trying to escape during wintertime, what lesson was he teaching?

அடுத்ததாக, அர்மகெதோன் என்ற மிகப் பெரிய போருக்குப் பின் நிலைமைகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம். இப்போது கடவுளை நேசித்து அவரை சேவிக்கும் அனைவருக்கும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை கற்றுக்கொள்ளலாம்.

அர்மகெதோன் சீக்கிரம் வரும் என்பதை காட்டும் இன்னும் சில வசனங்களை இப்போது வாசிக்கலாம். 2 தீமோத்தேயு 3:1-5; 2 பேதுரு 3:3, 4.