Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் மூன்று

பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?

பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
  • மனிதருக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?

  • கடவுளுக்கு எதிராக எவ்வாறு சவால் விடப்பட்டது?

  • வருங்காலத்தில் பூமியில் எப்படிப்பட்ட வாழ்க்கை இருக்கும்?

1. பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?

பூமிக்கான கடவுளுடைய நோக்கம் மிகவும் அற்புதமான ஒரு நோக்கமாகும். இந்த முழு பூமியுமே சந்தோஷமும் ஆரோக்கியமுமான ஜனங்களால் நிறைந்திருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, . . . பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும் . . . முளைக்கப் பண்ணினார்.” முதல் மனிதனும் மனுஷியுமான ஆதாம் ஏவாளைக் கடவுள் படைத்த பின் அந்த அழகிய தோட்டத்தில் அவர்களைக் குடிவைத்தார்; பிறகு, ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று அவர்களிடம் சொன்னார். (ஆதியாகமம் 1:28; 2:8, 9, 15) எனவே, மனிதர்கள் குழந்தைகளைப் பெற்று, பூமி முழுவதையும் ஏதேன் தோட்டத்தைப் போல் ஆக்க வேண்டும் என்பது கடவுளுடைய நோக்கமாக இருந்தது; மிருக ஜீவன்களை அவர்கள் பராமரிக்க வேண்டும் என்பதும் அவருடைய நோக்கமாக இருந்தது.

2. (அ) பூமிக்கான கடவுளுடைய நோக்கம் நிச்சயமாகவே நிறைவேறும் என்று நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) எப்படிப்பட்ட ஆட்கள் என்றைக்கும் வாழ்வார்கள் என பைபிள் சொல்கிறது?

2 தோட்டம் போன்ற பரதீஸான பூமியில் மக்கள் வாழ வேண்டுமென்ற யெகோவா தேவனின் நோக்கம் என்றைக்காவது நிறைவேறுமென நீங்கள் நினைக்கிறீர்களா? அவர் இவ்வாறு அறிவிக்கிறார்: “அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்.” (ஏசாயா 46:9-11; 55:11) ஆம், கடவுள் என்ன நோக்கம் வைத்திருக்கிறாரோ அதை நிச்சயம் நிறைவேற்றுவார்! ‘பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவாக்கினேன்’ என்று அவர் சொல்கிறார். (ஏசாயா 45:18) எப்படிப்பட்ட ஜனங்கள் பூமியில் குடியிருக்க வேண்டுமென கடவுள் விரும்பினார்? எவ்வளவு காலத்திற்கு அவர்கள் அதில் குடியிருக்க வேண்டுமென விரும்பினார்? பைபிள் இப்படிப் பதிலளிக்கிறது: ‘நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.’—சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4.

3. பூமியில் நிலவும் வருத்தகரமான சூழ்நிலை என்ன, இது என்ன கேள்விகளை எழுப்புகிறது?

3 இது இன்னும் நிறைவேறவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஏனெனில் மக்கள் இன்றும் வியாதிப்பட்டுச் சாகிறார்கள்; ஒருவரோடு ஒருவர் சண்டைபோட்டு, கொலைகூட செய்து விடுகிறார்கள். ஆம், எங்கோ தவறு நேர்ந்துவிட்டது. பூமி இந்த நிலைமையில் இருக்க வேண்டுமென்பது நிச்சயமாகவே கடவுளுடைய நோக்கமல்ல! அப்படியானால், என்ன நடந்துவிட்டது? கடவுளுடைய நோக்கம் ஏன் இன்னமும் நிறைவேறாமல் இருக்கிறது? மனிதன் எழுதியுள்ள எந்தச் சரித்திரப் புத்தகத்திலும் அதற்கான பதில் கிடையாது, ஏனென்றால் பிரச்சினை பரலோகத்தில் ஆரம்பமானது.

ஓர் எதிரி தோன்றுகிறான்

4, 5. (அ) பாம்பைப் பயன்படுத்தி ஏவாளிடம் பேசியது யார்? (ஆ) கண்ணியமானவராக, நேர்மையானவராக இருக்கும் ஒரு நபர் எப்படி ஒரு திருடனாக மாறிவிடலாம்?

4 ஏதேன் தோட்டத்தில் தோன்றிய கடவுளுடைய எதிரியைப் பற்றி பைபிளின் முதல் புத்தகம் சொல்கிறது. அவனை ‘சர்ப்பம்’ என அது அழைக்கிறது, ஆனால் அவன் வெறுமனே ஒரு மிருகமல்ல. ‘உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்டவன்’ என பைபிளின் கடைசி புத்தகம் அவனை அடையாளம் காட்டுகிறது. ‘பழைய பாம்பு’ எனவும் அது அவனை அழைக்கிறது. (ஆதியாகமம் 3:1; வெளிப்படுத்துதல் 12:9) சக்தி வாய்ந்த இந்தத் தேவதூதன், அதாவது கண்களால் பார்க்க முடியாத ஆவி சிருஷ்டி, ஏவாளிடம் பேசுவதற்கு ஒரு பாம்பைப் பயன்படுத்தினான்; ஒரு பொம்மை பேசுகிறதென தோன்ற வைக்க திறமைசாலியான ஒருவர் தன் குரலை மாற்றிப் பேசுவது போல அவளிடம் பேசினான். கடவுள் இந்தப் பூமியை மனிதர்களுக்காகத் தயார்படுத்திய சமயத்தில் நிச்சயம் இந்த ஆவி ஆளும் இருந்திருப்பான்.—யோபு 38:4, 7.

5 யெகோவாவுடைய எல்லாச் சிருஷ்டிகளும் பரிபூரணமாயிருந்தன, அப்படியானால், இந்தப் ‘பிசாசாகிய சாத்தானை’ யார் படைத்தது? எளிய வார்த்தையில் சொன்னால், கடவுளுடைய சக்தி வாய்ந்த ஆவி குமாரர்களில் ஒருவன் தன்னைத் தானே பிசாசாக மாற்றிக் கொண்டான். அது எப்படி? உதாரணத்திற்கு, கண்ணியமானவராக, நேர்மையானவராக இருக்கும் ஒரு நபர் பின்பு திருடனாக மாறிவிடலாம். எவ்வாறு? ஒருவேளை அந்த நபர் தன் மனதுக்குள் ஒரு கெட்ட ஆசையை வளர்த்திருக்கலாம். அதைப் பற்றியே சதா யோசித்துக் கொண்டிருக்கும்போது, அந்த ஆசை அவருக்குள் மேலும் தீவிரமாகி விடலாம். பிறகு, தக்க தருணத்தில் அவர் அந்தக் கெட்ட ஆசையைச் செயலில் காண்பித்துவிடலாம்.—யாக்கோபு 1:13-15.

6. கடவுளுடைய சக்தி வாய்ந்த ஆவி குமாரர்களில் ஒருவன் எப்படிப் பிசாசாகிய சாத்தான் ஆனான்?

6 சாத்தானின் விஷயத்தில் இதுதான் நடந்தது. ஆதாமும் ஏவாளும் குழந்தைகளைப் பெற்று பூமி முழுவதையும் நிரப்பும்படி கடவுள் சொன்னபோது, சாத்தான் அதைக் கேட்டிருப்பான். (ஆதியாகமம் 1:27, 28) ‘இந்த மனிதர்களெல்லாம் கடவுளுக்குப் பதிலாக என்னை வணங்கினால் எப்படியிருக்கும்!’ என யோசித்திருப்பான். ஆக, ஒரு கெட்ட ஆசை அவன் மனதிற்குள் வேர்விடத் தொடங்கியது. இதனால் ஏவாளை ஏமாற்றுவதற்காகக் கடைசியில் கடவுளைப் பற்றிப் பொய் சொல்ல ஆரம்பித்தான். (ஆதியாகமம் 3:1-5) இவ்வாறு அவன் ‘பிசாசாக’ ஆனான், அதாவது ‘பழித்துப் பேசுபவனாக’ ஆனான். அதேசமயம், ‘சாத்தானாகவும்’ ஆனான்; சாத்தான் என்பதற்கு “எதிரி” என்று அர்த்தம்.

7. (அ) ஆதாம் ஏவாள் ஏன் இறந்து போனார்கள்? (ஆ) ஆதாமின் சந்ததியார் அனைவரும் ஏன் வயதாகி சாகிறார்கள்?

7 சாத்தான் பொய் சொல்லி, பித்தலாட்டம் பண்ணி ஆதாம் ஏவாளைக் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகச் செய்தான். (ஆதியாகமம் 2:17; 3:6) கீழ்ப்படியாமையின் விளைவு? கடவுள் சொல்லியிருந்தபடியே அவர்கள் கடைசியில் இறந்து போனார்கள். (ஆதியாகமம் 3:17-19) பாவம் செய்தபோது பரிபூரண ஆதாம் அபூரணன் ஆனான், அதனால் அந்தப் பாவம் அவனுடைய எல்லாப் பிள்ளைகளுக்கும் கடத்தப்பட்டது. (ரோமர் 5:12) இதை பிரெட் அல்லது கேக் செய்ய உபயோகிக்கப்படும் ஒரு பாத்திரத்திற்கு ஒப்பிடலாம். ஒருவேளை அந்தப் பாத்திரத்தில் ஒடுக்கு விழுந்துவிட்டதென்றால், அதில் செய்யப்படுகிற பிரெட்டோ, கேக்கோ எப்படி இருக்கும்? ஒவ்வொன்றிலும் அந்த ஒடுக்கு, அதாவது அந்தக் குறை தெரியும். அதேபோல, எல்லா மனிதர்களுமே ஆதாமிடமிருந்து அபூரணம் என்ற “ஒடுக்கைப்” பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வயதாகி சாகிறார்கள்.—ரோமர் 3:23.

8, 9. (அ) சாத்தான் என்ன சவால் விட்டிருந்தான்? (ஆ) அந்தக் கலகக்காரர்களைக் கடவுள் ஏன் உடனடியாக அழிக்காமல் விட்டு வைத்தார்?

8 ஆதாமையும் ஏவாளையும் கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்ய சாத்தான் தூண்டியபோது, உண்மையில் அவன் ஒரு கலகத்தையே கிளப்பிக் கொண்டிருந்தான். யெகோவா ஆட்சி செய்கிற விதத்திற்கு எதிராகச் சவால்விட்டுக் கொண்டிருந்தான். அதாவது, ‘கடவுள் ஒரு கெட்ட ஆட்சியாளர், அவர் நிறைய பொய் சொல்கிறார், தமது குடிமக்களுக்கு நன்மையானவற்றைக் கொடுக்காதிருக்கிறார், உண்மையில் மனிதர்களுக்குக் கடவுளுடைய ஆட்சியே தேவையில்லை, எது நல்லது எது கெட்டது என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்ள முடியும், என்னுடைய ஆட்சியில் அவர்கள் எவ்வளவோ நன்றாக இருப்பார்கள்’ என்றெல்லாம் அவன் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான். அவமானப்படுத்தும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குக் கடவுள் எப்படிப் பதிலளிப்பார்? இந்தக் கலகக்காரர்களைக் கடவுள் அப்போதே அழித்திருக்க வேண்டுமென சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது சாத்தானுடைய சவாலுக்குப் பதில் அளித்திருக்குமா? கடவுள் ஆட்சி செய்கிற விதம் சரியானதென நிரூபித்திருக்குமா?

9 யெகோவா துளியும் நீதி தவறாதவராக இருப்பதாலேயே அந்தக் கலகக்காரர்களை உடனடியாக அழிக்காமல் விட்டு வைத்தார். சாத்தானுடைய சவாலுக்குத் திருப்திகரமான பதிலளிப்பதற்கும் பிசாசை ஒரு பொய்யன் என நிரூபிப்பதற்கும் கால அவகாசம் தேவையென்று அவர் தீர்மானித்தார். அதனால் சாத்தானுடைய செல்வாக்கின் கீழ் மனிதர்கள் சில காலம் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளும்படி விட்டுவிட முடிவுசெய்தார். யெகோவா ஏன் அப்படிச் செய்தார், இந்த விவாதங்களைத் தீர்க்க ஏன் இத்தனை காலம் அனுமதித்திருக்கிறார் என்பதையெல்லாம் இப்புத்தகத்தின் 11-ம் அதிகாரத்தில் தெரிந்துகொள்வோம். என்றாலும், பின்வருபவற்றை இப்போது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்: தங்களுக்கு எந்த நன்மையுமே செய்திராத சாத்தானை ஆதாம் ஏவாள் நம்பியது சரியா? தங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்த யெகோவாவை ஈவிரக்கமற்ற ஒரு பொய்யர் என அவர்கள் நினைத்தது சரியா? அவர்களுடைய இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

10. சாத்தானுடைய சவாலுக்குப் பதிலளிப்பதில் யெகோவாவை ஆதரிக்கிறீர்கள் என்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்?

10 அந்தக் கேள்விகளைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது, ஏனென்றால் நாம் எல்லாரும் இதுபோன்ற விவாதங்களையே எதிர்ப்பட்டு வருகிறோம். ஆம், சாத்தானுடைய சவாலுக்குப் பதிலளிப்பதில் யெகோவாவை ஆதரிக்கிறீர்கள் என்று காட்டுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. யெகோவாவை உங்கள் ஆட்சியாளராக ஏற்றுக்கொண்டு சாத்தானை ஒரு பொய்யன் என்று நிரூபிக்க உங்களால் முடியும். (சங்கீதம் 73:28; நீதிமொழிகள் 27:11) ஆனால், வருத்தகரமாக இவ்வுலகிலுள்ள கோடிக்கணக்கானோரில் வெகு சிலரே அப்படிச் செய்கிறார்கள். இது மற்றொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: சாத்தான் இந்த உலகத்தை ஆளுகிறான் என்று பைபிள் உண்மையிலேயே கற்பிக்கிறதா?

இவ்வுலகத்தை ஆளுவது யார்?

எல்லா ராஜ்யங்களும் சாத்தானுடையவையே, அப்படி இல்லாதிருந்தால் அவற்றை இயேசுவுக்கு அளிக்க அவன் எப்படி முன்வந்திருப்பான்?

11, 12. (அ) சாத்தானே இந்த உலகத்தை ஆளுகிறவன் என்பதை இயேசு எதிர்ப்பட்ட சோதனைகளில் ஒன்று எப்படி வெளிப்படுத்துகிறது? (ஆ) சாத்தானே இந்த உலகத்தை ஆளுகிறவன் என்பதை வேறு எதுவும்கூட நிரூபிக்கிறது?

11 இந்த உலகத்தை ஆளுவது சாத்தானே என்பதில் இயேசுவுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஒருமுறை சாத்தான் ஏதோவொரு அற்புதகரமான விதத்தில் இயேசுவுக்கு “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” காண்பித்தான். பிறகு, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று அவருக்கு வாக்குக் கொடுத்தான். (மத்தேயு 4:8, 9; லூக்கா 4:5, 6) இதைச் சற்று யோசித்துப் பாருங்கள். இந்த ராஜ்யங்களையெல்லாம் சாத்தான் ஆட்சி செய்யாவிட்டால், அவற்றை அவன் அளிக்க முன்வந்தது இயேசுவுக்கு ஒரு சோதனையாக இருந்திருக்குமா? இந்த உலக அரசாங்கங்கள் எல்லாம் சாத்தானுடையவை என்பதை இயேசு மறுக்கவில்லை. அவையெல்லாம் சாத்தானுடையவையாக இல்லாதிருந்தால் இயேசு நிச்சயம் அதைச் சொல்லிக் காட்டியிருப்பார்.

12 யெகோவா தேவனே சர்வவல்லமையுள்ள கடவுள், பிரமாண்டமான இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரும் அவரே. (வெளிப்படுத்துதல் 4:11) என்றாலும், சாத்தானைத்தான் “இவ்வுலகத்தின் அதிபதி,” அதாவது இவ்வுலகத்தை ஆளுகிறவன் என்று இயேசு குறிப்பிட்டார். (யோவான் 12:31; 14:30; 16:11) பிசாசாகிய சாத்தானை ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்’ என்றும்கூட பைபிள் சொல்கிறது. (2 கொரிந்தியர் 4:3, 4) இந்த எதிரியை, அதாவது சாத்தானைக் குறித்து கிறிஸ்தவ அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’—1 யோவான் 5:19.

சாத்தானுடைய உலகம் எப்படி அழியும்

13. நமக்கு ஏன் இப்போது ஒரு புதிய உலகம் தேவை?

13 வருடங்கள் செல்லச் செல்ல, இவ்வுலகம் அதிக ஆபத்தான இடமாக மாறிக்கொண்டே வருகிறது. இவ்வுலகம் போர்வெறி பிடித்த வீரர்களாலும், நாணயமற்ற அரசியல்வாதிகளாலும், வெளிவேஷம் போடுகிற மதத் தலைவர்களாலும், மனசாட்சியே இல்லாத குற்றவாளிகளாலும் நிறைந்திருக்கிறது. இந்த முழு உலகையும் ஒட்டுமொத்தமாகச் சீர்படுத்துவது என்பது முடியாத காரியம். எனவே, இந்தப் பொல்லாத உலகை அர்மகெதோன் என்ற தமது யுத்தத்தில் கடவுள் அழித்துப் போடுவார்; அதற்கான வேளை சமீபித்துவிட்டதென்று பைபிள் வெளிப்படுத்துகிறது. அதன் பின், நீதியுள்ள ஒரு புதிய உலகம் உதயமாகும்.—வெளிப்படுத்துதல் 16:14-16.

14. கடவுள் தமது ராஜ்யத்திற்கு யாரை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார், இது எவ்வாறு முன்னறிவிக்கப்பட்டது?

14 யெகோவா தேவன் தமது பரலோக ராஜ்யத்திற்கு, அதாவது அரசாங்கத்திற்கு, இயேசு கிறிஸ்துவை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார். வெகு காலத்திற்கு முன்பே பைபிள் இவ்வாறு முன்னறிவித்தது: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் . . . சமாதானப் பிரபு என்னப்படும். . . . அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.” (ஏசாயா 9:6, 7) இந்த அரசாங்கத்திற்காக ஜெபிக்கும்படியே இயேசு தம் சீஷர்களுக்குப் பின்வருமாறு கற்றுக்கொடுத்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) இப்புத்தகத்தில் பிற்பாடு நாம் பார்க்கப் போகிறபடி, கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்தில் இவ்வுலகிலுள்ள எல்லா அரசாங்கங்களையும் நீக்கிவிட்டு, பூமியின் மீது ஆட்சி செலுத்த ஆரம்பிக்கும். (தானியேல் 2:44) அந்த அரசாங்கம் பூமி முழுவதையும் பரதீஸாக மாற்றிவிடும்.

புதிய உலகம் விரைவில்!

15. “புதிய பூமி” எதைக் குறிக்கிறது?

15 பைபிள் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: ‘கடவுளுடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.’ (2 பேதுரு 3:13; ஏசாயா 65:17) “பூமி” என்று பைபிள் சொல்லும்போது, சிலசமயம் அது பூமியில் வாழும் மக்களை அர்த்தப்படுத்துகிறது. (ஆதியாகமம் 11:1) எனவே, நீதி வாசமாயிருக்கிற “புதிய பூமி” என்பது கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்ற மனிதச் சமுதாயத்தைக் குறிக்கிறது.

16. தமக்குப் பிரியமானவர்களுக்குக் கடவுள் தரும் விலையேறப்பெற்ற பரிசு என்ன, அதைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

16 கடவுளுக்குப் பிரியமானவர்கள், வரவிருக்கிற புதிய உலகில் ‘நித்திய ஜீவன்’ என்ற பரிசைப் பெற்றுக்கொள்வார்கள் என்று இயேசு வாக்குறுதி அளித்தார். (மாற்கு 10:30) அந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்குத் தயவுசெய்து உங்கள் பைபிளைத் திறந்து யோவான் 3:16-ஐயும், 17:3-ஐயும் வாசியுங்கள். அந்த அருமையான பரிசைப் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் வரவிருக்கிற பரதீஸ் பூமியில் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்று இப்போது பைபிளிலிருந்தே கவனியுங்கள்.

17, 18. பூமியெங்கும் சமாதானமும் பாதுகாப்பும் நிலவுமென நாம் எப்படி நிச்சயமாய் இருக்கலாம்?

17 அக்கிரமம், போர், குற்றச்செயல், வன்முறை ஆகியவை ஒழிந்துபோயிருக்கும். ‘துன்மார்க்கன் இரான் . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.’ (சங்கீதம் 37:10, 11) சமாதானம் நிலவியிருக்கும், ஏனென்றால் “அவர் [கடவுள்] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.” (சங்கீதம் 46:9; ஏசாயா 2:4) அதன்பின், “நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ள வரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்,” அதாவது என்றென்றைக்கும் சமாதானம் இருக்கும்.—சங்கீதம் 72:7.

18 யெகோவாவின் வணக்கத்தார் பாதுகாப்புடன் வாழ்வார்கள். அக்காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர் கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருந்தவரையில் பாதுகாப்பாய் இருந்தார்கள். (லேவியராகமம் 25:18, 19) அதேபோன்ற பாதுகாப்பை பரதீஸில் அனுபவிப்பது எவ்வளவு அருமையாக இருக்கும்!—ஏசாயா 32:18; மீகா 4:4.

19. கடவுளுடைய புதிய உலகில் உணவு ஏராளமாக இருக்குமென்று நமக்கு எப்படித் தெரியும்?

19 பஞ்சம் இருக்காது. “வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும், மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 72:16, ERV) நீதிமான்களை யெகோவா தேவன் ஆசீர்வதிப்பார், அதோடு “பூமி தன் பலனைத் தரும்.”—சங்கீதம் 67:6.

20. இந்த முழு பூமியுமே ஒரு பரதீஸாக மாறுமென நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?

20 முழு பூமியும் பரதீஸாக மாறும். கெட்ட ஜனங்களால் பாழாக்கப்பட்டிருந்த இடங்களில் அழகிய புதுப்புது வீடுகள் கட்டப்படும், பூந்தோட்டங்கள் அமைக்கப்படும். (ஏசாயா 65:21-24; வெளிப்படுத்துதல் 11:18) காலம் செல்லச் செல்ல, இவ்வுலகின் ஒவ்வொரு பாகமும் இப்படி மாறிக்கொண்டே வந்து, கடைசியில் முழு பூமியும் ஏதேன் தோட்டத்தைப் போல அழகாக, செழிப்பாக ஆகிவிடும். அச்சமயத்தில், கடவுள் ‘தமது கையைத் திறந்து, சகல ஜீவராசிகளின் வாஞ்சையையும் திருப்திப்படுத்த’ ஒருபோதும் தவற மாட்டார்.—சங்கீதம் 145:16.

21. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே சமாதானம் இருக்கும் என்பதை எது காட்டுகிறது?

21 மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே சமாதானம் இருக்கும். காட்டு மிருகங்களும் வீட்டு மிருகங்களும் ஒன்றாகக் கூடி மேயும். இன்றுள்ள கொடிய மிருகங்களைப் பார்த்து, ஒரு சின்னப் பிள்ளைகூட அப்போது பயப்படாது.—ஏசாயா 11:6-9; 65:25.

22. வியாதியெல்லாம் என்னவாகும்?

22 வியாதியெல்லாம் பறந்துவிடும். இயேசு பூமியில் இருந்தபோது சுகப்படுத்தியதைக் காட்டிலும் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக வரும்போது மிகப் பெரிய அளவில் சுகப்படுத்தப் போகிறார். (மத்தேயு 9:35; மாற்கு 1:40-42; யோவான் 5:5-9) அப்போது, ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் யாரும் சொல்ல மாட்டார்கள்.’—ஏசாயா 33:24; 35:5, 6.

23. இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவது நமக்கு ஏன் சந்தோஷத்தை அளிக்கும்?

23 இறந்துபோன அன்பானவர்கள் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்புடன் திரும்ப உயிருக்குக் கொண்டு வரப்படுவார்கள். மரணத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள், குறிப்பாகக் கடவுளுடைய ஞாபகத்தில் இருப்பவர்கள் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். சொல்லப்போனால், ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.’—அப்போஸ்தலர் 24:15; யோவான் 5:28, 29.

24. பரதீஸ் பூமியில் வாழ்வது பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

24 நம்முடைய மகத்தான சிருஷ்டிகரான யெகோவா தேவனைப் பற்றிக் கற்றுக்கொண்டு, அவருக்குச் சேவை செய்ய தீர்மானிப்பவர்களுக்கு எப்பேர்ப்பட்ட அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது! தம்மோடு கழுமரத்தில் அறையப்பட்ட கள்வனிடம், “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” என்று இயேசு வாக்குக் கொடுத்தபோது, வரவிருக்கிற பரதீஸ் பூமியை மனதில் வைத்தே அவர் பேசினார். (லூக்கா 23:43) இந்த எல்லா ஆசீர்வாதங்களும் இயேசு கிறிஸ்து மூலம் கிடைக்கப் போகிறது என்பதால் நாம் அவரைப் பற்றி இன்னுமதிகமாகக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.