Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் எட்டு

கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன?

கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன?
  • கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

  • கடவுளுடைய ராஜ்யம் என்னவெல்லாம் செய்யப் போகிறது?

  • அந்த ராஜ்யம் கடவுளுடைய சித்தத்தை எப்போது பூமியில் நிறைவேற்றப் போகிறது?

1. பிரபலமான எந்த ஜெபத்தைப் பற்றி இப்போது சிந்திக்கப் போகிறோம்?

பரமண்டல ஜெபம் அல்லது கர்த்தருடைய ஜெபம் என்று பலரால் அழைக்கப்படுகிற ஜெபம் உலகெங்குமுள்ள கோடிக்கணக்கானோர் நன்கு அறிந்த ஜெபமாகும். இயேசு கிறிஸ்துவே மாதிரியாக நமக்குச் சொல்லித் தந்த பிரபலமான ஜெபம் இது. அர்த்தம் நிறைந்த இந்த ஜெபத்திலுள்ள முதல் மூன்று விண்ணப்பங்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதை அதிகமாகத் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.

2. என்ன மூன்று காரியங்களுக்காக ஜெபிக்குமாறு இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தார்?

2 இந்த ஜெபத்தின் ஆரம்பத்தில், இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9-13) இந்த மூன்று விண்ணப்பங்களின் அர்த்தம் என்ன?

3. கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி நாம் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும்?

3 யெகோவா தேவனுடைய பெயரைப் பற்றி நாம் ஏற்கெனவே நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டோம். கடவுளுடைய சித்தத்தைப் பற்றியும், அதாவது மனிதகுலத்திற்காக அவர் என்ன செய்திருக்கிறார், என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றியும் ஓரளவு கலந்தாலோசித்தோம். ஆனால், “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என இயேசு நம்மை ஜெபிக்கச் சொன்னபோது, அவர் எதை அர்த்தப்படுத்தினார்? கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன? அதன் வருகை கடவுளுடைய பெயரை எப்படிப் பரிசுத்தமாக்கும், அதாவது புனிதமாக்கும்? அந்த ராஜ்யத்தின் வருகையும் கடவுளுடைய சித்தம் செய்யப்படுவதும் எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுள்ளன?

கடவுளுடைய ராஜ்யம் என்பது . . .

4. கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன, அதன் ராஜா யார்?

4 கடவுளுடைய ராஜ்யம் என்பது யெகோவா தேவனால் நிறுவப்பட்ட ஓர் அரசாங்கமாகும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே அதன் ராஜாவாக இருக்கிறார். அந்த ராஜா யார்? இயேசு கிறிஸ்துவே அவர். ஒரு ராஜாவாக இயேசு எந்த மனித ஆட்சியாளரையும்விட உயர்ந்தவராய் இருக்கிறார்; ‘கர்த்தாதி கர்த்தா’ என்றும், “ராஜாதி ராஜா” என்றும் அவர் அழைக்கப்படுகிறார். (வெளிப்படுத்துதல் 17:14) எந்த மனித ஆட்சியாளரையும்விட, ஏன் மிகச் சிறந்த ஆட்சியாளரையும்விட நல்ல நல்ல காரியங்கள் செய்ய அவருக்கு வல்லமை இருக்கிறது.

5. கடவுளுடைய ராஜ்யம் எங்கிருந்து ஆட்சி செய்யும், எதன் மீது ஆட்சி செய்யும்?

5 கடவுளுடைய ராஜ்யம் எங்கிருந்து ஆட்சி செய்யும்? அதற்கு விடை காண்பதற்கு முன், இயேசு இப்போது எங்கே இருக்கிறார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கழுமரத்தில் அவர் கொல்லப்பட்டதையும், பிறகு உயிர்த்தெழுப்பப்பட்டதையும் பற்றிக் கற்றுக்கொண்டது நிச்சயம் உங்களுக்கு ஞாபகமிருக்கும். அதன்பின் சீக்கிரத்திலே அவர் பரலோகத்திற்கு எழும்பிச் சென்றார். (அப்போஸ்தலர் 2:33) அப்படியானால், அங்குதான்—பரலோகத்தில்தான்​—⁠கடவுளுடைய ராஜ்யமும் இருக்கிறது. இதன் காரணமாகவே பைபிள் அதை ‘பரம ராஜ்யம்’ அல்லது பரலோக ராஜ்யம் என்று அழைக்கிறது. (2 தீமோத்தேயு 4:18) கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் இருந்தாலும், அது பூமியின் மீது ஆட்சி செய்யும்.—வெளிப்படுத்துதல் 11:15.

6, 7. இயேசு எப்படி நிகரற்ற ஒரு ராஜாவாக இருக்கிறார்?

6 இயேசு எப்படி நிகரற்ற ஒரு ராஜாவாக இருக்கிறார்? ஒன்று, அவர் சாகவே மாட்டார். மனித ராஜாக்களோடு ஒப்பிடும்போது, இயேசு ஒருவரே ‘அழியாத ஜீவனுக்குரியவர்’ என்று பைபிள் குறிப்பிடுகிறது. (எபிரெயர் 7:17) அப்படியானால், அவர் செய்கிற நன்மையான காரியங்கள் அனைத்தும் என்றென்றுமாக நிலைத்திருக்கும். ஆம், மகத்தான, நன்மையான காரியங்களை அவர் கண்டிப்பாகச் செய்யப் போகிறார்.

7 அதுமட்டுமல்ல, இயேசுவைக் குறித்த பின்வரும் பைபிள் தீர்க்கதரிசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: “ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு​—⁠இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார், கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்.” (ஏசாயா 11:2-4, பொ.மொ.) நீதியும் கரிசனையுமிக்க ஒரு ராஜாவாக இயேசு இந்தப் பூமியின் மீது அரசாளுவார் என்பதையே இந்த வார்த்தைகள் காண்பிக்கின்றன. இப்படிப்பட்ட நிகரற்ற ஒரு ராஜா வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களா?

8. இயேசுவோடு சேர்ந்து யார் ஆட்சி செய்வார்கள்?

8 கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய மற்றொரு உண்மை இதோ: இயேசு தனியாக ஆட்சி செய்ய மாட்டார். அவரோடு சேர்ந்து வேறு சிலரும் ஆட்சி செய்யப் போகிறார்கள். உதாரணத்திற்கு, “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” என தீமோத்தேயுவிடம் அப்போஸ்தலன் பவுல் கூறினார். (2 தீமோத்தேயு 2:12) ஆம், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பவுலும், தீமோத்தேயுவும், விசுவாசமிக்க வேறு சிலரும் அந்தப் பரலோக ராஜ்யத்தில் இயேசுவோடுகூட ஆட்சி செய்வார்கள். அந்த விசேஷ வாய்ப்பை எத்தனை பேர் பெறுவார்கள்?

9. எத்தனை பேர் இயேசுவோடு ஆட்சி செய்யப் போகிறார்கள், அவர்களை எப்போது கடவுள் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்?

9 ‘சீயோன் மலையின்மேல் [பரலோகத்தில் ராஜரீக நிலையில்] ஆட்டுக்குட்டியானவரும் [இயேசு கிறிஸ்துவும்] அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரும் நிற்பதை’ அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் கண்டதாக இந்தப் புத்தகத்தின் 7-ம் அதிகாரத்தில் பார்த்தோம். அந்த 1,44,000 பேர் யார்? “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.” (வெளிப்படுத்துதல் 14:1, 4) ஆம், இவர்கள் பரலோகத்தில் இயேசுவோடுகூட ஆட்சி செய்வதற்கென்று விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விசுவாசமிக்க சீஷர்கள் ஆவர். மரித்து பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, இவர்கள் இயேசுவோடுகூட ‘ராஜாக்களாக . . . பூமியிலே அரசாளுவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 5:10) 1,44,000 என்ற எண்ணிக்கையைப் பூர்த்தி செய்வதற்காக அப்போஸ்தலரின் காலந்தொடங்கி விசுவாசமிக்க கிறிஸ்தவர்களைக் கடவுள் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார்.

10. இயேசுவும் 1,44,000 பேரும் மனிதகுலத்தின் மீது ஆட்சி செய்யப்போவது ஏன் ஓர் அன்பான ஏற்பாடு?

10 இயேசுவும் 1,44,000 பேரும் மனிதகுலத்தின் மீது ஆட்சி செய்யப்போவது மிக அன்பான ஓர் ஏற்பாடாகும். அதற்கு ஒரு காரணம், மனிதனாக இருப்பதும் பாடுபடுவதும் எப்படியிருக்கும் என்பது இயேசுவுக்கு அனுபவப்பூர்வமாகத் தெரியும். ‘நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாதவர் நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிறவரே நமக்கிருக்கிறார்’ என இயேசுவைப் பற்றி பவுல் சொன்னார். (எபிரெயர் 4:15; 5:8) மற்றொரு காரணம், அவரோடு ஆட்சி செய்யப் போகிறவர்கள்கூட, மனிதர்களாகப் பாடுகளை அனுபவித்திருக்கிறார்கள், சகித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அபூரணத்தன்மையோடு போராடி, எல்லா விதமான வியாதிகளிலும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால், மனிதர்களுடைய பிரச்சினைகளை நிச்சயம் அவர்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும்!

கடவுளுடைய ராஜ்யம் என்னவெல்லாம் செய்யப் போகிறது?

11. கடவுளுடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதற்காக ஜெபிக்கும்படி இயேசு தம்முடைய சீஷர்களிடம் ஏன் சொன்னார்?

11 கடவுளுடைய ராஜ்யம் வர வேண்டுமென ஜெபிக்கும்படி இயேசு தம் சீஷர்களிடம் சொன்னபோது, கடவுளுடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்றும் ஜெபிக்கும்படி கூறினார். கடவுள் பரலோகத்தில் இருக்கிறார், அவருடைய சித்தத்தை விசுவாசமிக்க தேவதூதர்கள் அங்கு எப்பொழுதும் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு பொல்லாத தூதன் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதை நிறுத்திவிட்டு, ஆதாம் ஏவாளைப் பாவம் செய்ய வைத்தான்; அதைப் பற்றி இப்புத்தகத்தின் மூன்றாம் அதிகாரத்தில் நாம் பார்த்தோம். அந்தப் பொல்லாத தூதனை, அதாவது பிசாசாகிய சாத்தானைப் பற்றி பைபிள் கற்பிக்கிற மேலுமான விஷயங்களை 10-⁠ம் அதிகாரத்தில் நாம் தெரிந்துகொள்வோம். சாத்தானும் அவனைப் பின்பற்ற விரும்பிய தேவதூதர்களும் (பேய்கள் எனப்படுகிறவர்கள்) சிறிது காலத்திற்குப் பரலோகத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டார்கள். எனவே, பரலோகத்திலிருந்த எல்லாருமே அப்போது கடவுளுடைய சித்தத்தைச் செய்துகொண்டிருக்கவில்லை. ஆனால் கடவுளுடைய ராஜ்யம் ஆட்சி செய்யத் தொடங்கும்போது அந்த நிலை மாறவிருந்தது. புதிதாக முடிசூட்டப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்து சாத்தானோடு போர் புரியவிருந்தார்.—வெளிப்படுத்துதல் 12:7-9.

12. வெளிப்படுத்துதல் 12:10-⁠ல், என்ன முக்கியமான இரண்டு சம்பவங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன?

12 இந்தச் சம்பவங்களைப் பற்றி பின்வரும் தீர்க்கதரிசன வார்த்தைகள் விவரிக்கின்றன: “வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும் பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் [சாத்தான்] தாழத் தள்ளப்பட்டுப் போனான்.” (வெளிப்படுத்துதல் 12:10) இந்த வேதவசனத்தில், மிக முக்கியமான இரண்டு சம்பவங்கள் விவரிக்கப்பட்டிருப்பதைக் கவனித்தீர்களா? முதலாவது, இயேசு கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்ட கடவுளுடைய ராஜ்யம் ஆட்சியைத் தொடங்குகிறது. இரண்டாவது, பரலோகத்திலிருந்து சாத்தான் கீழே பூமிக்குத் தள்ளப்படுகிறான்.

13. சாத்தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதன் விளைவு என்ன?

13 அந்த இரண்டு சம்பவங்களின் விளைவுகள் என்ன? பரலோகத்தில் என்ன நடந்ததென்று பின்வருமாறு வாசிக்கிறோம்: “ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள்.” (வெளிப்படுத்துதல் 12:12) ஆம், அங்குள்ள விசுவாசமிக்க தேவதூதர்கள் மகிழ்ந்து களிகூருகிறார்கள், ஏனெனில் சாத்தானும் அவனுடைய பேய்களும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள், இப்போது பரலோகத்தில் உள்ள எல்லாருமே யெகோவா தேவனுக்கு உண்மையுடன் இருக்கிறார்கள். பூரண சமாதானமும் ஐக்கியமும் அங்கு தொடர்ந்து நிலவி வருகிறது. ஆம், கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் இப்போது செய்யப்பட்டு வருகிறது.

சாத்தானும் அவனது பேய்களும் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதால் பூமியில் துயரங்களும் தொல்லைகளும் உண்டாயின. சீக்கிரத்தில் இவையெல்லாம் முடிவுறும்

14. சாத்தான் தள்ளப்பட்டதால் பூமியில் என்ன நடந்திருக்கிறது?

14 ஆனால், பூமியைப் பற்றி என்ன? பைபிள் பின்வருமாறு சொல்கிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக் கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்.” (வெளிப்படுத்துதல் 12:12) பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதாலும், கொஞ்ச கால மாத்திரமே உண்டென்பதாலும் சாத்தான் பயங்கர கோபத்தோடு இருக்கிறான். அதனால் அவன் பல ‘ஆபத்துகளை,’ அதாவது துயரங்களைப் பூமியிலே உண்டாக்குகிறான். அந்தத் துயரங்களைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் நாம் அதிகமாகத் தெரிந்துகொள்வோம். ஆக, இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுளுடைய ராஜ்யத்தினால் எப்படி அவருடைய சித்தத்தைப் பூமியிலே நிறைவேற்ற முடியும் என நாம் கேட்கலாம்.

15. பூமிக்கான கடவுளுடைய சித்தம் என்ன?

15 பூமிக்கான கடவுளுடைய சித்தம் என்னவென்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? 3-ம் அதிகாரத்தில் அதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். இந்த முழு பூமியும் பரதீஸாக மாறி, அதில் நீதியுள்ள மனிதர்கள் சாவில்லாமல் வாழ வேண்டுமென்பதே தம்முடைய சித்தம் என்பதை ஏதேன் தோட்டத்தில் கடவுள் தெளிவுபடுத்தினார். ஆனால், ஆதாம் ஏவாளைச் சாத்தான் பாவம் செய்ய வைத்தான், அதன் காரணமாகப் பூமியைக் குறித்த கடவுளுடைய சித்தம் நிறைவேறுவது தள்ளிப்போனாலும் அந்தச் சித்தம் மாறவில்லை. ‘நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருக்க’ வேண்டுமென்பது இன்னமும் யெகோவாவுடைய நோக்கமாகவே இருக்கிறது. (சங்கீதம் 37:29) அந்த நோக்கத்தை அவருடைய ராஜ்யம் நிறைவேற்றும். எப்படி?

16, 17. கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி தானியேல் 2:44 என்ன சொல்கிறது?

16 தானியேல் 2:44-லுள்ள தீர்க்கதரிசனத்தைக் கவனியுங்கள். அது இவ்வாறு சொல்கிறது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி இந்த வசனம் என்ன சொல்கிறது?

17 முதலாவதாக, “அந்த ராஜாக்களின் நாட்களிலே,” அதாவது வேறு ராஜ்யங்கள் இன்னும் ஆட்சி செய்துகொண்டிருக்கிற வேளையிலே கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் என இந்த வசனம் சொல்கிறது. இரண்டாவதாக, அந்த ராஜ்யம் என்றென்றும் நிலைத்திருக்கும் எனச் சொல்கிறது. வேறெந்த அரசாங்கத்தாலும் அந்த ராஜ்யத்தைக் கவிழ்த்துப்போட்டு அதன் இடத்தைப் பிடிக்க முடியாது. மூன்றாவதாக, கடவுளுடைய ராஜ்யத்திற்கும் இவ்வுலக ராஜ்யங்களுக்கும் இடையே போர் மூளும் எனவும் அந்த வசனம் காண்பிக்கிறது. அந்தப் போரில் கடவுளுடைய ராஜ்யம் வெற்றி பெறும். கடைசியில், மனிதகுலம் முழுவதற்கும் ஒரேவொரு அரசாங்கமே இருக்கும். அச்சமயத்தில் மனிதர்கள் இதுவரை அனுபவித்திராத மிகச் சிறப்பான ஆட்சியின் கீழ் வாழ்வார்கள்.

18. கடவுளுடைய ராஜ்யத்திற்கும் இவ்வுலக அரசாங்கங்களுக்கும் இடையே நடக்கப்போகும் இறுதிப் போரின் பெயர் என்ன?

18 கடவுளுடைய ராஜ்யத்திற்கும் இவ்வுலக அரசாங்கங்களுக்கும் இடையே நடக்கப்போகும் அந்த இறுதிப் போரைப் பற்றி பைபிள் நிறைய விஷயங்களைச் சொல்கிறது. உதாரணத்திற்கு, அந்தப் போர் தொடங்குவதற்கான சமயம் நெருங்க நெருங்க பொல்லாத ஆவிகள் “பூலோகமெங்குமுள்ள ராஜாக்களை” ஏமாற்றுவதற்கு நிறைய பொய்களைப் பரப்பும் என அது கற்பிக்கிறது. என்ன நோக்கத்திற்காக? ‘தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு [ராஜாக்களை] கூட்டிச் சேர்ப்பதற்காகவே’ அவை பொய்களைப் பரப்பும். “எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே” பூமியின் ராஜாக்களை அவை கூட்டிச் சேர்க்கும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) இந்த இரண்டு வசனங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, மனித அரசாங்கங்களுக்கும் கடவுளுடைய ராஜ்யத்திற்கும் இடையே நடக்கப்போகும் இறுதிப் போர் அர்மகெதோன் என்று அழைக்கப்படுகிறது.

19, 20. கடவுளுடைய சித்தம் இப்போது பூமியில் நடைபெறாதபடி எவை தடுக்கின்றன?

19 அர்மகெதோனின் மூலம் கடவுளுடைய ராஜ்யம் எதைச் சாதிக்கப் போகிறது? பூமிக்கான கடவுளுடைய சித்தம் என்னவென்பதை மறுபடியும் சிந்தித்துப் பாருங்கள். பரதீஸாக்கப்பட்ட பூமி முழுவதிலும் நீதியுள்ள பரிபூரண மனிதர்கள் நிரம்பியிருக்க வேண்டும் என்பதும், அவர்கள் தமக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதும் யெகோவா தேவனின் நோக்கம். அந்த நோக்கம் இன்று நிறைவேறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? முதல் காரணம், நாம் பாவிகளாக இருப்பதால் வியாதிப்பட்டு, கடைசியில் இறந்து விடுகிறோம். ஆனால், நாம் சாவில்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவே இயேசு மரித்தார் என 5-ம் அதிகாரத்தில் நாம் கற்றுக்கொண்டோம். யோவான் சுவிசேஷத்திலுள்ள பின்வரும் இந்த வார்த்தைகள் உங்களுக்கு நினைவிருக்கும்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”—யோவான் 3:16.

20 மற்றொரு காரணம், ஏராளமானோர் பொல்லாத காரியங்களைச் செய்வதுதான். அவர்கள் பொய் பேசுகிறார்கள், ஏமாற்றுகிறார்கள், ஒழுக்கக்கேடாய் நடக்கிறார்கள். கடவுளுடைய சித்தத்தைச் செய்ய அவர்கள் விரும்புவதே கிடையாது. இப்படிப் பொல்லாத காரியங்களைச் செய்பவர்கள் கடவுளுடைய யுத்தமான அர்மகெதோனில் அழிக்கப்படுவார்கள். (சங்கீதம் 37:10) கடவுளுடைய சித்தம் இன்று பூமியில் நடைபெறாததற்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது; இன்றைய அரசாங்கங்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய ஜனங்களை ஊக்கப்படுத்தாததே அந்தக் காரணம். அநேக அரசாங்கங்கள் திறமையற்றவையாய் இருக்கின்றன, மூர்க்கத்தனமாய் நடந்துகொள்கின்றன, அல்லது ஊழல் நிறைந்தவையாய் உள்ளன. எனவே, பைபிள் வெளிப்படையாக இவ்வாறு சொல்கிறது: ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.’—பிரசங்கி 8:9.

21. அந்த ராஜ்யம் கடவுளுடைய சித்தத்தை எவ்வாறு பூமியில் நிறைவேற்றும்?

21 அர்மகெதோனுக்குப் பிறகு, மனிதகுலத்தை ஒரேவொரு அரசாங்கம் மட்டுமே, அதாவது கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே ஆட்சி செய்யும். அந்த ராஜ்யம் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றி அருமையான ஆசீர்வாதங்களைப் பொழியும். உதாரணமாக, சாத்தானையும் அவனுடைய பேய்களையும் அது நீக்கிப்போடும். (வெளிப்படுத்துதல் 20:1-3) உண்மையுள்ள மனிதர்கள் இனி நோயில்லாமலும் சாவில்லாமலும் வாழ்வதற்காக இயேசுவுடைய பலியின் இரட்சிக்கும் வல்லமை பயன்படுத்தப்படும். அப்போது அவர்களால் அந்த ராஜ்ய ஆட்சியின் கீழ் என்றென்றும் வாழ முடியும். (வெளிப்படுத்துதல் 22:1-3) இந்தப் பூமி ஒரு பரதீஸாக மாற்றப்படும். இவ்வாறு அந்த ராஜ்யம் கடவுளுடைய சித்தத்தைப் பூமியில் நிறைவேற்றும். அதோடு கடவுளுடைய பெயரையும் பரிசுத்தப்படுத்தும். இதன் அர்த்தம் என்ன? இறுதியில், யெகோவாவுடைய ராஜ்யத்திலுள்ள அனைவருமே அவருடைய பெயரைக் கனப்படுத்துவார்கள் என்பதே அதன் அர்த்தம்.

கடவுளுடைய ராஜ்யம் எப்போது செயல்படும்?

22. இயேசு பூமியிலிருந்தபோதும் சரி, உயிர்த்தெழுப்பப்பட்ட உடனேயும் சரி, கடவுளுடைய ராஜ்யம் வரவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?

22 “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என ஜெபிக்கும்படி இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த சமயத்தில், அந்த ராஜ்யம் வந்திருக்கவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. இயேசு பரலோகத்திற்குச் சென்றதும் அது வந்ததா? இல்லை, ஏனெனில் இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு சங்கீதம் 110:1 (திருத்திய மொழிபெயர்ப்பு) அவரில் நிறைவேற்றம் அடைந்ததென பேதுரு, பவுல் ஆகிய இருவருமே சொன்னார்கள். அந்த வசனம் சொல்வதாவது: “யெகோவா என் ஆண்டவரிடம்: நான் உமது சத்துருக்களை உமது பாதபடியாக்கிப் போடும் மட்டும், நீர் என் வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.” (அப்போஸ்தலர் 2:32-35; எபிரெயர் 10:12, 13) ஆக, குறிப்பிட்ட காலம்வரை இயேசு காத்திருக்க வேண்டியிருந்தது.

ராஜ்ய ஆட்சியின் கீழ், கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படும்

23. (அ) கடவுளுடைய ராஜ்யம் எப்போது ஆட்சி செய்யத் தொடங்கியது? (ஆ) அடுத்த அதிகாரம் எதைக் கலந்தாலோசிக்கும்?

23 எவ்வளவு காலத்திற்கு? அந்தக் காலம் 1914-⁠ல் முடிவடையும் என்பதை 19 மற்றும் 20-⁠ஆம் நூற்றாண்டிலிருந்த ஆர்வமிக்க பைபிள் மாணாக்கர்கள் சிலர் படிப்படியாகப் புரிந்துகொண்டார்கள். (இந்த ​வருடத்தைக் குறித்த விளக்கத்திற்கு, பக்கங்கள் 215-18-⁠ல் உள்ள பிற்சேர்க்கையைக் காண்க.) 1914-⁠ல் தொடங்கிய உலக சம்பவங்களை வைத்துப் பார்க்கையில், ஆர்வமிக்க அந்த பைபிள் மாணாக்கர்கள் புரிந்திருந்தது சரி என்பது தெளிவாகிறது. இயேசு 1914-⁠ல் ராஜா ஆனார் என்றும் கடவுளுடைய பரலோக ராஜ்யம் அந்த வருடத்தில் ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது என்றும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் காண்பிக்கிறது. அப்படியானால், சாத்தானுக்கு மீந்திருக்கிற ‘கொஞ்சக் காலத்திலே’ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 12:12; சங்கீதம் 110:2) அதுமட்டுமல்ல, கடவுளுடைய ராஜ்யம் இந்தப் பூமியில் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற வெகு சீக்கிரத்தில் செயல்படும் என்பதையும் நம்மால் உறுதியுடன் சொல்ல முடியும். இது இனிமையிலும் இனிமையான செய்தியாக உங்களுக்குத் தொனிக்கிறதா? இது நிஜமென்று நீங்கள் நம்புகிறீர்களா? பைபிள் உண்மையிலேயே இந்த விஷயங்களைத்தான் கற்பிக்கிறது என்பதை அடுத்த அதிகாரம் கலந்தாலோசிக்கும்.