Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பத்து

ஆவி சிருஷ்டிகள்—நம்மீது அவற்றின் செல்வாக்கு

ஆவி சிருஷ்டிகள்—நம்மீது அவற்றின் செல்வாக்கு
  • தேவதூதர்கள் மக்களுக்கு உதவுகிறார்களா?

  • பொல்லாத ஆவிகள் மனிதர்கள் மீது எவ்வாறு செல்வாக்கு செலுத்தி வந்திருக்கின்றன?

  • பொல்லாத ஆவிகளைக் கண்டு நாம் பயப்பட வேண்டுமா?

1. தேவதூதர்களைப் பற்றி நாம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?

ஒருவரோடு நன்கு அறிமுகமாவதற்கு, பொதுவாக அவருடைய குடும்பத்தைப் பற்றி நாம் ஓரளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல, யெகோவா தேவனோடு அறிமுகமாவதற்கு, தேவதூதர்கள் அடங்கிய அவருடைய பரலோகக் குடும்பத்தைப் பற்றி நாம் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்தத் தேவதூதர்களைத் “தேவபுத்திரர்” என பைபிள் அழைக்கிறது. (யோபு 38:7) அப்படியானால், கடவுளுடைய நோக்கத்தில் அவர்கள் என்ன பங்கு வகிக்கிறார்கள்? மனித விவகாரங்களில் எப்போதாவது அவர்கள் தலையிட்டிருக்கிறார்களா? உங்களுடைய வாழ்க்கையில் அவர்கள் செல்வாக்கு செலுத்துகிறார்களா? ஆம் என்றால், எப்படி?

2. தேவதூதர்கள் எப்படி வந்தார்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள்?

2 தேவதூதர்களைப் பற்றி பைபிளில் நூற்றுக்கணக்கான குறிப்புகள் உள்ளன. எனவே, அவர்களைப் பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ள அந்தக் குறிப்புகளில் சிலவற்றை இப்போது நாம் கலந்தாராயலாம். தேவதூதர்கள் எப்படி வந்தார்கள்? “பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய . . . சகலமும் அவரைக் கொண்டு [இயேசு கிறிஸ்துவைக் கொண்டு] . . . சிருஷ்டிக்கப்பட்டது” என்று கொலோசெயர் 1:16 சொல்கிறது. தேவதூதர்கள் எனப்படுகிறவர்கள் ஆவி சிருஷ்டிகள்; இவர்களை யெகோவா தம்முடைய முதற்பேறான குமாரன் மூலம் தனித்தனியாகப் படைத்தார். எத்தனை தேவதூதர்கள் இருக்கிறார்கள்? கோடிக்கணக்கான தேவதூதர்கள் இருப்பதாக பைபிள் காண்பிக்கிறது, அவர்கள் எல்லாருமே பலமிக்கவர்கள்.—சங்கீதம் 103:20. *

3. யோபு 38:4-7 வசனங்கள் தேவதூதர்களைப் பற்றி என்ன சொல்கின்றன?

3 பூமி படைக்கப்பட்டபோது ‘தேவபுத்திரர் எல்லாரும் துதித்து ஆர்ப்பரித்தார்கள்’ என பைபிள் சொல்கிறது. (யோபு 38:4-7, NW) ஆக, மனிதர்கள் படைக்கப்படுவதற்கு முன்னரே, ஏன், இந்தப் பூமி படைக்கப்படுவதற்கு முன்னரே தேவதூதர்கள் இருந்தார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு உணர்ச்சிகள் இருப்பதாகவும் அந்த வசனம் காண்பிக்கிறது; ஏனெனில், அவர்கள் ‘மகிழ்ச்சியாக ஒன்றுகூடிப் பாடினார்கள்’ என்று அது சொல்கிறது. ‘தேவபுத்திரர் எல்லாரும்’ ஒன்றுகூடி மகிழ்ந்தார்கள் என்பதைக் கவனியுங்கள். அந்தச் சமயத்தில், எல்லாத் தேவதூதர்களும் யெகோவா தேவனுக்குச் சேவை செய்கிற ஐக்கியப்பட்ட குடும்பமாக இருந்தார்கள்.

தேவதூதர்களின் ஆதரவும் பாதுகாப்பும்

4. உண்மையுள்ள தேவதூதர்கள் மனித விவகாரங்களில் அக்கறையுடையவர்களாக இருப்பதை பைபிள் எப்படிக் காட்டுகிறது?

4 முதல் மனிதத் தம்பதி படைக்கப்பட்டதைக் கண்ணாரப் பார்த்த சமயத்திலிருந்தே உண்மையுள்ள ஆவி சிருஷ்டிகளுக்கு மனிதக் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை இருந்து வந்திருக்கிறது, கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதைக் காணவும் மிகுந்த ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. (நீதிமொழிகள் 8:30, 31; 1 பேதுரு 1:11, 12) காலம் செல்லச் செல்ல மனித குடும்பத்திலிருந்து பெரும்பாலோர் தங்களுடைய அன்பான படைப்பாளரைவிட்டு விலகிப் போவதை அந்தத் தேவதூதர்கள் கண்டார்கள். இது நிச்சயமாகவே அவர்களை விசனப்படுத்தியிருக்கும். ஆனால், எப்பொழுதாவது ஒரேவொரு மனிதன் யெகோவாவிடம் மனந்திரும்பி வந்தால்கூட அந்தத் ‘தேவதூதர்களுக்கு சந்தோஷம் உண்டாகிறது.’ (லூக்கா 15:10) கடவுளுக்குச் சேவை செய்பவர்களின் நலனில் தேவதூதர்களுக்கு அந்தளவு அக்கறை இருப்பதால்தான் பூமியிலுள்ள விசுவாசமிக்க ஊழியர்களைப் பலப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அவர்களை யெகோவா பல முறை பயன்படுத்தியிருக்கிறார். (எபிரெயர் 1:7, 14) சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

‘தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார்.’​—⁠தானியேல் 6:22

5. தேவதூதர்கள் அளித்த ஆதரவுக்கு பைபிளில் என்ன உதாரணங்கள் இருக்கின்றன?

5 கெட்ட ஜனங்கள் நிறைந்த சோதோம் கொமோரா நகரங்கள் அழிக்கப்பட்டபோது, நீதிமானான லோத்துவையும் அவருடைய மகள்களையும் தப்புவிப்பதற்கு இரண்டு தேவதூதர்கள் உதவினார்கள். (ஆதியாகமம் 19:15, 16) நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சிங்கங்களின் குகையில் தானியேல் தீர்க்கதரிசி தூக்கியெறியப்பட்டார், ஆனால் எந்த ஆபத்துமில்லாமல் உயிர்தப்பினார்; அவர் இவ்வாறு சொன்னார்: “சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்.” (தானியேல் 6:22) பொ.ச. முதல் நூற்றாண்டில், அப்போஸ்தலன் பேதுருவை ஒரு தேவதூதன் சிறையிலிருந்து விடுவித்தார். (அப்போஸ்தலர் 12:6-11) மேலும், இயேசு பூமியில் ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது தேவதூதர்கள் அவருக்குப் பக்கபலமாக இருந்தார்கள். (மாற்கு 1:13) அதோடு, அவர் இறப்பதற்குச் சில மணிநேரத்திற்கு முன், ஒரு தேவதூதன் அவருக்கு முன்பாகத் தோன்றி, ‘அவரைப் பலப்படுத்தினார்.’ (லூக்கா 22:43) அவருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான அத்தகைய கட்டங்களில் தேவதூதர்கள் ஆதரவளித்தது இயேசுவுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்!

6. (அ) கடவுளுடைய மக்களை இன்று தேவதூதர்கள் எவ்வாறு பாதுகாக்கிறார்கள்? (ஆ) என்ன கேள்விகளை இப்போது நாம் சிந்திக்கப் போகிறோம்?

6 இன்று, தேவதூதர்கள் பூமியிலுள்ள கடவுளுடைய மக்களுக்குக் காட்சி அளிப்பதில்லை. வல்லமைமிக்க அந்தத் தூதர்கள் மனித கண்களுக்குத் தென்படாவிட்டாலும் கடவுளுடைய மக்களை அவர்கள் பாதுகாக்கவே செய்கிறார்கள், முக்கியமாக, ஆன்மீக ரீதியில் கேடுண்டாக்குகிற காரியங்களிலிருந்து பாதுகாக்கிறார்கள். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.” (சங்கீதம் 34:7) இந்த வார்த்தைகள் நமக்கு ஏன் மிகுந்த ஆறுதலை அளிக்கின்றன? ஏனென்றால் நம்மை அழித்துப்போடத் துடிக்கும் ஆபத்தான பொல்லாத ஆவிகள் இருக்கின்றன! அந்த ஆவி சிருஷ்டிகள் யாவை? அவை எப்படி வந்தன? நமக்குத் தீங்கு செய்ய அவை எப்படி முயலுகின்றன? இதற்கான பதில்களைக் கண்டுபிடிக்க, மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில் என்ன நடந்ததென்று நாம் சுருக்கமாகப் பார்க்கலாம்.

நம்மை எதிர்க்கும் சில ஆவி சிருஷ்டிகள்

7. மனிதர்களைக் கடவுளிடமிருந்து விலகிப்போகச் செய்வதில் சாத்தான் எந்தளவு வெற்றி பெற்றான்?

7 அதிகாரம் 3-ல் நாம் பார்த்தபடி, தேவதூதர்களில் ஒருவன் மற்றவர்கள் மீது ஆட்சி செய்ய ஆசைப்பட்டான், இதனால் கடவுளுக்கு விரோதமாக அவன் செயல்பட ஆரம்பித்தான். பிற்பாடு இந்தத் தூதன் பிசாசாகிய சாத்தான் என அழைக்கப்பட்டான். (வெளிப்படுத்துதல் 12:9) அவன் ஏவாளை வஞ்சித்தது முதற்கொண்டு சுமார் 1,600 ஆண்டுகளில் ஆபேல், ஏனோக்கு, நோவா போன்ற விசுவாசமிக்க சிலரைத் தவிர ஏறக்குறைய எல்லா மனிதர்களையுமே கடவுளைவிட்டு விலகிப்போக செய்திருக்கிறான்.​—⁠எபிரெயர் 11:4, 5, 7.

8. (அ) தேவதூதர்கள் சிலர் பேய்களாக ஆனது எப்படி? (ஆ) நோவாவின் நாளிலே ஏற்பட்ட ஜலப்பிரளயத்தில் தப்பிப்பிழைக்க பேய்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?

8 நோவாவின் காலத்தில், வேறு சில தேவதூதர்களும் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் செய்தார்கள். பரலோகத்திலுள்ள கடவுளுடைய குடும்பத்தை விட்டுவிட்டு, மாம்ச உடலெடுத்து கீழே பூமிக்கு வந்தார்கள். ஏன்? ஆதியாகமம் 6:2 இவ்வாறு சொல்கிறது: “தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.” ஆனால் இந்தத் தேவதூதர்களின் கெட்ட நடத்தையையும் அதனால் உண்டான சீர்கேட்டையும் யெகோவா தேவன் அப்படியே விட்டுவிடவில்லை. விசுவாசமிக்க தம்முடைய ஊழியர்களை மட்டும் காப்பாற்றி, பொல்லாத ஆட்கள் அனைவரையும் ஜலப்பிரளயத்தில் பூண்டோடு அழித்தார். (ஆதியாகமம் 7:17, 23) இதன் காரணமாக அந்தப் பொல்லாத தூதர்கள், அதாவது பேய்கள், தங்களுடைய மாம்ச உடல்களை விட்டுவிட்டு, ஆவி சிருஷ்டிகளாகப் பரலோகத்திற்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அதுமுதல், சாத்தானை அந்தப் பேய்கள் ஆதரிக்கத் தொடங்கின, இவ்வாறு சாத்தான் ‘பேய்களின் தலைவனாக’ ஆனான்.—மத்தேயு 9:34.

9. (அ) பரலோகத்திற்குத் திரும்பிச் சென்ற பேய்களுக்கு என்ன ஆனது? (ஆ) பேய்களைக் குறித்து என்ன விஷயங்களை நாம் பார்க்கப் போகிறோம்?

9 பரலோகத்திற்குத் திரும்பிச் சென்ற அந்தப் பேய்கள், சாத்தானைப் போலவே ஒதுக்கி வைக்கப்பட்டன. (யூதா 6) இப்போது அவற்றால் மனித உடலெடுக்க முடியாவிட்டாலும், மனிதர்கள் மீது அவை இன்னமும் பயங்கரமாகச் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. சொல்லப்போனால், இந்தப் பேய்களின் உதவியோடுதான், சாத்தான் ‘உலகமனைத்தையும் மோசம்போக்கி வருகிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:9; 1 யோவான் 5:19) எப்படி? முக்கியமாக, இந்தப் பேய்கள் மக்களை மோசம்போக்குவதற்கென்றே, அதாவது ஏமாற்றுவதற்கென்றே, சில வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. (2 கொரிந்தியர் 2:11) அத்தகைய சில வழிமுறைகளை இப்போது நாம் பார்க்கலாம்.

பேய்கள் எப்படி ஏமாற்றுகின்றன

10. ஆவியுலகத் தொடர்பு என்றால் என்ன?

10 ஜனங்களை ஏமாற்றுவதற்காக, பேய்கள் ஆவியுலகத் தொடர்பைப் பயன்படுத்துகின்றன. ஆவியுலகத் தொடர்பு என்பது பேய்களோடு நேரடியாக அல்லது ஒரு மத்தியஸ்தர் மூலமாகத் தொடர்பு கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. அத்தகைய ஆவியுலகத் தொடர்பை பைபிள் கண்டனம் செய்கிறது, அதனுடன் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களிலிருந்தும் விலகியிருக்கும்படி நம்மை எச்சரிக்கிறது. (கலாத்தியர் 5:19-21) மீன் பிடிப்பவர்கள் எப்படித் தூண்டிலில் இரையைப் பயன்படுத்துகிறார்களோ, அப்படியே பேய்கள் ஆவியுலகத் தொடர்பு பழக்கத்தைப் பயன்படுத்துகின்றன. எப்படியெனில், வெவ்வேறு மீன்களைப் பிடிக்க வெவ்வேறு இரைகளை மீன் பிடிப்பவர்கள் அந்தத் தூண்டிலில் வைக்கிறார்கள். அதேபோல, எல்லாத் தரப்பு மக்களையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெவ்வேறு வகையான ஆவியுலகத் தொடர்பு பழக்கங்களை அந்தப் பொல்லாத ஆவிகள் கண்ணியாகப் பயன்படுத்துகின்றன.

11. குறிசொல்லுதல் என்றால் என்ன, நாம் ஏன் அதைத் தவிர்க்க வேண்டும்?

11 பேய்கள் பயன்படுத்துகிற ஒரு கண்ணி குறிசொல்லுதல் ஆகும். குறிசொல்லுதல் என்றால் என்ன? எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான முயற்சியே அது. ஜாதகம், கிளி ஜோசியம், கைரேகை ஆகியவற்றைப் பார்ப்பது, அதோடு கனவுகளுக்கு அர்த்தம் தேடுவது போன்றவை குறிசொல்லுதலில் உட்படுகின்றன. குறிசொல்லும் பழக்கம் தீங்கற்றது என அநேகர் நினைத்தாலும், குறிசொல்பவர்கள் உண்மையில் பொல்லாத ஆவிகளுடன் சேர்ந்துதான் செயல்படுகிறார்கள் என்பதை பைபிள் காண்பிக்கிறது. உதாரணத்திற்கு, ‘குறிசொல்ல ஏவுகிற ஆவியைக் கொண்டிருந்த’ ஒரு பெண்ணைப் பற்றி அப்போஸ்தலர் 16:16-18 சொல்கிறது. அந்தக் கெட்ட ஆவி அவளிடமிருந்து துரத்தப்பட்ட பிறகோ குறிசொல்கிற திறமையை அவள் இழந்துபோனாள்.

ஜனங்களை ஏமாற்றுவதற்காகப் பேய்கள் பல வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன

12. செத்தவர்களுடன் தொடர்புகொள்ள முயலுவது ஏன் ஆபத்தானது?

12 ஜனங்களைப் பேய்கள் ஏமாற்றுகிற மற்றொரு வழி, செத்தவர்களிடம் குறிகேட்கத் தூண்டுவதாகும். பிரியமான ஒருவர் இறந்துவிட்ட துக்கத்தில் இருப்பவர்கள், செத்தவர்களைப் பற்றிய தவறான கருத்துகளால் பெரும்பாலும் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆவி மத்தியஸ்தர் ஒருவர் செத்தவரைப் பற்றி ஏதாவது விசேஷ அடையாளத்தைச் சொல்லலாம் அல்லது செத்தவருடைய குரல் என்றே நினைக்க வைக்கிற ஒரு குரலில் பேசலாம். இதை வைத்து, செத்தவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்களென்று அநேகர் நம்பிவிடுகிறார்கள். எனவே செத்துப்போன தங்கள் பிரியமானவர்களுடன் தொடர்புகொண்டு பேசினால் தங்களுக்கு ஆறுதலாக இருக்குமென்று நினைக்கிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட எந்த “ஆறுதலும்” பொய்யானது, சொல்லப்போனால் ஆபத்தானது. ஏன்? ஏனென்றால், செத்தவரைப் போலவே பேய்களால் பேசவும் முடியும், செத்தவரைப் பற்றிய அடையாளங்களை ஆவி மத்தியஸ்தர்களுக்குக் கொடுக்கவும் முடியும். (1 சாமுவேல் 28:3-19) அதுமட்டுமல்ல, 6-ம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, செத்தவர்கள் எங்கேயும் உயிர் வாழ்வதில்லை. (சங்கீதம் 115:17) ஆகவே, ‘செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவர்கள்’ பொல்லாத ஆவிகளால் ஏமாற்றப்படுகிறார்கள், கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக நடக்கிறார்கள். (உபாகமம் 18:10, 11; ஏசாயா 8:19) ஆகையால், பேய்கள் உபயோகிக்கும் ஆபத்தான இந்தக் கண்ணியிலிருந்து விலகியிருக்க விழிப்போடு இருங்கள்.

13. முன்பு பேய்களைப் பற்றிய பயத்திலிருந்த பலரால் இப்போது என்ன செய்ய முடிந்திருக்கிறது?

13 பொல்லாத ஆவிகள் ஜனங்களை ஏமாற்றுவது மட்டுமல்லாமல் அவர்களைப் பயமுறுத்தவும் செய்கின்றன. இன்னும் ‘கொஞ்சக் காலத்திற்குள்’ செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படப் போவது சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் தெரியும், அதனால் முன்பைவிட இப்போது அதிகப்படியாகக் கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 12:12, 17) என்றபோதிலும், பொல்லாத ஆவிகளைப் பற்றிய பயத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் அத்தகைய பயத்திலிருந்து இன்று விடுபட்டிருக்கிறார்கள். அவர்களால் எப்படி முடிந்தது? ஒரு நபர் ஆவியுலகத் தொடர்பு பழக்கத்தில் ஏற்கெனவே ஈடுபட்டு வந்தால்கூட, அவர் என்ன செய்யலாம்?

பொல்லாத ஆவிகளை எதிர்ப்பது எப்படி

14. எபேசுவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல, நாம் எப்படிப் பொல்லாத ஆவிகளிடமிருந்து விடுபட முடியும்?

14 பொல்லாத ஆவிகளை எப்படி எதிர்ப்பதென்றும் அவற்றுடன் நமக்குள்ள தொடர்பை எப்படித் துண்டிப்பதென்றும் பைபிள் நமக்குச் சொல்கிறது. எபேசு பட்டணத்திலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன் அவர்களில் சிலர் ஆவியுலகத் தொடர்பு பழக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அதிலிருந்து விடுபட அவர்கள் தீர்மானித்தபோது, என்ன செய்தார்கள்? பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மாய வித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்.” (அப்போஸ்தலர் 19:19) மாயமந்திரப் புத்தகங்களை இப்படிச் சுட்டெரித்ததன் மூலம் பொல்லாத ஆவிகளை எதிர்க்க விரும்புகிறவர்களுக்கு இன்று அந்தப் புதிய கிறிஸ்தவர்கள் முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள். யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்புகிறவர்கள் ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும். அதாவது, அந்தப் பழக்கத்தை வசீகரமிக்கதாகவும் ஆர்வமிக்கதாகவும் தோன்றச் செய்கிற புத்தகங்கள், பத்திரிகைகள், சினிமாப் படங்கள், போஸ்டர்கள், மியூஸிக் டேப்புகள் ஆகியவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும். அதோடு, தீங்கிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அணியப்படுகிற தாயத்துகளையும் வேறு பொருள்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும்.—1 கொரிந்தியர் 10:21.

15. பொல்லாத ஆவி சேனைகளை எதிர்த்துப் போராட நாம் என்ன செய்ய வேண்டும்?

15 எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய மாயமந்திரப் புத்தகங்களைச் சுட்டெரித்த சில வருடங்களுக்குப் பின்னர் அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: ‘பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்குப் போராட்டம் உண்டு.’ (எபேசியர் 6:12) ஆம், ஜனங்கள் மீது அந்தப் பேய்கள் தீவிர செல்வாக்கு செலுத்த தொடர்ந்து முயன்று கொண்டிருந்தன. அப்படியானால், அந்தக் கிறிஸ்தவர்கள் வேறு என்னவும்கூட செய்ய வேண்டியிருந்தது? “பொல்லாங்கன் [சாத்தான்] எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள்” என பவுல் சொன்னார். (எபேசியர் 6:16) விசுவாசமெனும் நம்முடைய கேடகம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறதோ அந்தளவுக்கு அதிகமாகப் பொல்லாத ஆவி சேனைகளை நம்மால் எதிர்த்துப் போராட முடியும்.—மத்தேயு 17:20.

16. நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவது எப்படி?

16 அப்படியானால், நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்துவது எப்படி? பைபிளைப் படிப்பதன் மூலமே. ஒரு சுவர் எந்தளவு உறுதியானது என்பது பெருமளவு அதன் அஸ்திவாரத்தைப் பொறுத்தே இருக்கிறது. அதேபோல, நம்முடைய விசுவாசம் எந்தளவு பலமானது என்பது பெருமளவு அதன் அஸ்திவாரத்தைப் பொறுத்தே இருக்கிறது, அதாவது கடவுளுடைய வார்த்தையான பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பொறுத்தே இருக்கிறது. தினந்தோறும் பைபிளை வாசித்து, அதை ஆராய்ந்தால், நம்முடைய விசுவாசம் மேலும் பலப்படும். அத்தகைய விசுவாசம் உறுதியான சுவரைப் போல, பொல்லாத ஆவிகளின் செல்வாக்கிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.—1 யோவான் 5:5.

17. பொல்லாத ஆவிகளை எதிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

17 எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் வேறு என்னவும் செய்ய வேண்டியிருந்தது? பேய் வணக்கம் நிறைந்த அந்த நகரத்தில் வாழ்ந்து வந்ததால் அவர்களுக்கு மேலுமான பாதுகாப்பு அவசியப்பட்டது. எனவே அவர்களிடம் பவுல் இவ்வாறு சொன்னார்: ‘எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் . . . ஜெபம் பண்ணுங்கள்.’ (எபேசியர் 6:18) நாமும்கூட பேய் வணக்கம் நிறைந்த ஓர் உலகில் வாழ்ந்து வருகிறோம், அதனால் பொல்லாத ஆவிகளை எதிர்ப்பதற்குப் பாதுகாப்பு கேட்டு யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபிப்பது அவசியம். அதேசமயத்தில், நம்முடைய ஜெபங்களில் யெகோவாவுடைய பெயரைக் கண்டிப்பாக உபயோகிக்க வேண்டும். (நீதிமொழிகள் 18:10) ஆகவே, ‘பொல்லாங்கனிடமிருந்து [அதாவது, பிசாசாகிய சாத்தானிடமிருந்து] நம்மை இரட்சிக்கும்படி’ நாம் தொடர்ந்து அவரிடம் ஜெபிக்க வேண்டும். (மத்தேயு 6:13, NW) அத்தகைய ஊக்கமான ஜெபங்களை யெகோவா கேட்பார்.—சங்கீதம் 145:19.

18, 19. (அ) பொல்லாத ஆவி சிருஷ்டிகளுக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு வெற்றி நிச்சயம் என ஏன் சொல்லலாம்? (ஆ) அடுத்த அதிகாரத்தில் எந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளலாம்?

18 பொல்லாத ஆவிகள் ஆபத்தானவை; ஆனால் அவற்றிற்கு நாம் பயப்படத் தேவையில்லை. அவ்வாறு பயப்படாதிருக்க, நாம் பிசாசை எதிர்த்து நிற்க வேண்டும்; கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் மூலம் அவரிடமாக நெருங்கி வர வேண்டும். (யாக்கோபு 4:7, 8) அந்தப் பொல்லாத ஆவிகளுக்கு ஓரளவுதான் வல்லமை இருக்கிறது. நோவாவின் நாளில் அவை தண்டிக்கப்பட்டன; அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் தங்களுடைய இறுதி நியாயத்தீர்ப்பையும் சந்திக்கப் போகின்றன. (யூதா 6) யெகோவாவின் வல்லமைமிக்க தூதர்களின் பாதுகாப்பு நமக்கு இருக்கிறது என்பதையும் நினைவில் வையுங்கள். (2 இராஜாக்கள் 6:15-17) பொல்லாத ஆவிகளை நாம் எதிர்த்துப் போராடி வெற்றிபெற வேண்டுமென்று உண்மையுள்ள தேவதூதர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அதற்காக நம்மை அவர்கள் உற்சாகமூட்டிக் கொண்டே இருக்கிறார்கள் என்று சொல்லலாம். எனவே, யெகோவாவுடனும் உண்மையுள்ள ஆவி சிருஷ்டிகளாலான அவருடைய குடும்பத்துடனும் நாம் நெருங்கி இருப்போமாக. ஆவியுலகத் தொடர்பு சம்பந்தமான எல்லாப் பழக்கங்களையும் தவிர்த்துவிட்டு, கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆலோசனைகளை எப்போதும் கடைப்பிடிப்போமாக. (1 பேதுரு 5:6, 7; 2 பேதுரு 2:9) அப்படிச் செய்வோமானால், பொல்லாத ஆவி சிருஷ்டிகளுக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு வெற்றி நிச்சயம்.

19 ஆனால், இந்தத் தீய ஆவிகளையும், மக்களுக்கு இந்தளவு துயரங்களை உண்டாக்குகிற அக்கிரமச் செயல்களையும் கடவுள் ஏன் அனுமதித்திருக்கிறார்? இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்த அதிகாரத்தில் தெரிந்துகொள்ளலாம்.

^ பாரா. 2 நீதியுள்ள தேவதூதர்களைக் குறித்து வெளிப்படுத்துதல் 5:11 இவ்வாறு சொல்கிறது: “அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாக” இருக்கிறது. எனவே கோடிக்கணக்கான தேவதூதர்கள் படைக்கப்பட்டதாக பைபிள் சுட்டிக்காட்டுகிறது.