Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பதினொன்று

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?
  • உலகிலுள்ள துன்பங்களுக்குக் கடவுள்தான் காரணமா?

  • ஏதேன் தோட்டத்தில் என்ன விவாதம் எழுப்பப்பட்டது?

  • துன்பத்தின் பாதிப்புகளைக் கடவுள் எப்படிச் சரிசெய்வார்?

1, 2. எப்படிப்பட்ட துன்பங்களை ஜனங்கள் இன்று எதிர்ப்படுகிறார்கள், இதனால் அநேகர் என்ன கேள்விகளைக் கேட்கிறார்கள்?

அடிக்கடி சண்டை நடக்கும் ஒரு நாட்டில் பயங்கர போர் மூண்டது; அதில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய பிரேதக்குழியில் புதைக்கப்பட்டார்கள்; அதைச் சுற்றிலும் சிறிய சிறிய சிலுவைகள் நாட்டி வைக்கப்பட்டன. ஒவ்வொரு சிலுவையிலும் “ஏன்?” என்ற கேள்வி பொறிக்கப்பட்டிருந்தது. சில சமயம், இந்தக் கேள்வியை ஜனங்கள் மிக வேதனையோடு கேட்கிறார்கள். போரோ, பேரழிவோ, நோயோ, குற்றச்செயலோ தங்கள் அன்பானவர்களின் உயிரைப் பறித்துவிடுகையில், தங்கள் வீட்டை நாசப்படுத்துகையில், அல்லது தாங்க முடியாத வேறெதாவது துயரத்தை ஏற்படுத்துகையில் இந்தக் கேள்வியைப் பரிதாபமாகக் கேட்கிறார்கள். அத்தகைய துயரங்கள் தங்களுக்கு ஏன் நேரிடுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.

2 கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? யெகோவா தேவன் சர்வவல்லவராக, அன்புள்ளவராக, ஞானமுள்ளவராக, நீதியுள்ளவராக இருக்கிறார் என்றால், இந்த உலகில் ஏன் இவ்வளவு பகையும் அநியாயமும் தலைவிரித்தாடுகின்றன? இந்தக் கேள்விகளை நீங்கள் எப்போதாவது கேட்டுக்கொண்டது உண்டா?

3, 4. (அ) கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்று கேட்பது தவறல்ல என்பதை எது காட்டுகிறது? (ஆ) அக்கிரமத்தையும் துன்பத்தையும் பற்றி யெகோவா எப்படி உணருகிறார்?

3 கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்று கேட்பது தவறா? அப்படிக் கேட்டால் கடவுள் மீது தங்களுக்கு அந்தளவு நம்பிக்கையில்லை என அர்த்தமாகிவிடுமோ, அவரை அவமதிப்பதாக ஆகிவிடுமோ என்றெல்லாம் நினைத்து சிலர் கவலைப்படுகிறார்கள். ஆனால், விசுவாசத்தோடும் தேவபயத்தோடும் வாழ்ந்த ஆட்களும்கூட ஒரு காலத்தில் அதேபோன்ற கேள்விகளைக் கேட்டிருந்தார்கள்; பைபிளை வாசிக்கும்போது நீங்களே அதைக் கவனிப்பீர்கள். உதாரணத்திற்கு, யெகோவாவிடம் ஆபகூக் தீர்க்கதரிசி இவ்வாறு கேட்டார்: “கொடுமையான காரியங்களை நான் காணும்படி ஏன் செய்கிறீர், பிரச்சினைகளை ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்? கொள்ளையும் வன்முறையும் ஏன் என் முன்னே நிகழ்கின்றன, தகராறுகள் ஏன் நடக்கின்றன, சண்டை சச்சரவுகள் ஏன் ஏற்படுகின்றன?”—ஆபகூக் 1:3, NW.

எல்லாத் துன்பங்களுக்கும் யெகோவா முடிவுகட்டுவார்

4 இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டதற்காக விசுவாசமிக்க ஆபகூக் தீர்க்கதரிசியை யெகோவா திட்டினாரா? இல்லை. மாறாக, ஆபகூக் மனம்விட்டுக் கேட்ட அந்தக் கேள்விகளைத் தம்முடைய வார்த்தையான பைபிளில் பதிவு செய்தார். அதுமட்டுமல்ல, விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கும் விசுவாசத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் ஆபகூக்கிற்கு அவர் உதவினார். அதுபோலவே உங்களுக்கும் உதவ யெகோவா விரும்புகிறார். மறந்துவிடாதீர்கள், ‘அவர் உங்களை விசாரிக்கிறார்,’ அதாவது உங்கள் மீது அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்று பைபிள் கற்பிக்கிறது. (1 பேதுரு 5:7) அக்கிரமத்தையும் துன்பத்தையும் எந்தவொரு மனிதனைக் காட்டிலும் யெகோவா மிக அதிகமாக வெறுக்கிறார். (ஏசாயா 55:8, 9) அப்படியானால், இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு துன்பம் இருக்கிறது?

ஏன் இவ்வளவு துன்பம்?

5. மனிதர்களின் துன்பத்திற்குச் சில சமயம் என்ன காரணங்கள் சொல்லப்படுகின்றன, ஆனால் பைபிள் என்ன கற்பிக்கிறது?

5 அநேகர் தங்கள் தங்கள் மதத் தலைவர்களிடமும் போதகர்களிடமும் சென்று ஏன் இந்தளவு துன்பம் இருக்கிறதென கேட்கிறார்கள். அப்படித் துன்பப்படுவது கடவுளுடைய சித்தமென்றும், துயர சம்பவங்கள் போன்ற எல்லாக் காரியங்களையும் வெகு காலத்திற்கு முன்னரே கடவுள் தீர்மானித்துவிட்டார் என்றும் அவர்கள் பெரும்பாலும் பதிலளிக்கிறார்கள். மேலும், கடவுளுடைய வழிகள் புதிரானவை என்று கற்பிக்கிறார்கள், அல்லது தம்மோடு பரலோகத்தில் இருப்பதற்காக ஜனங்களுக்கு, ஏன், குழந்தைகளுக்குக்கூட மரணத்தை வருவிக்கிறார் என்று கற்பிக்கிறார்கள். ஆனால், யெகோவா தேவன் ஒருபோதும் பொல்லாத காரியங்களை நடப்பிப்பதில்லை என்பதை நீங்கள் ஏற்கெனவே கற்றுக்கொண்டீர்கள். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.”—யோபு 34:10.

6. இந்த உலகிலுள்ள துன்பங்களுக்கு அநேகர் ஏன் கடவுளைத் தவறாகக் குற்றம்சாட்டுகிறார்கள்?

6 இந்த உலகிலுள்ள எல்லாத் துன்பங்களுக்கும் கடவுளே காரணமென்று மக்கள் ஏன் தவறாகக் குற்றம்சாட்டுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் கடவுள்தான் இவ்வுலகை இப்போது ஆட்சிசெய்து வருகிறார் என அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். பைபிள் கற்பிக்கிற எளிய, ஆனால் முக்கியமான ஓர் உண்மை அவர்களுக்குத் தெரிவதில்லை. அந்த உண்மையை இப்புத்தகத்தின் 3-ம் அதிகாரத்தில் நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். இப்போது இந்த உலகை ஆட்சி செய்துவருவது பிசாசாகிய சாத்தானே.

7, 8. (அ) இவ்வுலகெங்கும் அதன் ஆட்சியாளனுடைய சுபாவத்தை நாம் எப்படிக் காண்கிறோம்? (ஆ) மனித அபூரணமும், “சமயமும் எதிர்பாரா சம்பவங்களும்” துன்பத்திற்கு எப்படிக் காரணமாய் இருந்திருக்கின்றன?

7 “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் [அதாவது, பொல்லாங்கனுடைய ஆதிக்கத்திற்குள்] கிடக்கிறதென்று” பைபிள் தெளிவாகக் குறிப்பிடுகிறது. (1 யோவான் 5:19) நன்கு சிந்தித்துப் பார்க்கையில், இது அர்த்தமுள்ள விளக்கமென உங்களுக்குத் தோன்றவில்லையா? காணமுடியாத அந்த ஆவி சிருஷ்டியின் சுபாவத்தையே இவ்வுலகெங்கும் நாம் பார்க்கிறோம், அவன் ‘உலகமனைத்தையும் மோசம்போக்கிக் கொண்டிருக்கிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:9) சாத்தான் பகைமைமிக்கவன், பித்தலாட்டக்காரன், மூர்க்கமானவன். அதனால்தான் அவனுடைய செல்வாக்கின் கீழுள்ள இந்த உலகிலும்கூட பகைமையும், பித்தலாட்டமும், மூர்க்கத்தனமும் நிறைந்திருக்கின்றன. இவ்வுலகில் இந்தளவு துன்பம் இருப்பதற்கு இது முதல் காரணம்.

8 ஏதேன் தோட்டத்தில் கலகம் ஆரம்பித்ததிலிருந்து மனிதகுலம் அபூரணமாயும் பாவமுள்ளதாயும் ஆகியிருப்பது இரண்டாவது காரணம்; இதை 3-ம் அதிகாரத்தில் ஏற்கெனவே கலந்தாலோசித்தோம். பாவத்தன்மையுள்ள மனிதர்கள் பிறர் மீது ஆதிக்கம் செலுத்த துடியாய்த் துடிக்கிறார்கள். அதன் விளைவுதான் போர், ஒடுக்குதல், துன்பம் ஆகியவை. (பிரசங்கி 4:1; 8:9) துன்பத்திற்கான மூன்றாவது காரணம், “சமயமும் எதிர்பாரா சம்பவங்களும்” ஆகும். (பிரசங்கி 9:11, NW) யெகோவாவின் ஆட்சியும் பாதுகாப்பும் இல்லாத இவ்வுலகில், எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத நேரத்தில் இருப்பதன் காரணமாக ஒருவேளை மக்கள் துன்பத்தைச் சந்திக்க நேரிடலாம்.

9. துன்பத்தை நல்ல காரணத்திற்காகவே யெகோவா தொடர்ந்து அனுமதிக்கிறார் என்பதில் நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?

9 துன்பத்திற்குக் காரணம் கடவுளல்ல என்று அறிவது மனதிற்கு ஆறுதலளிக்கிறது. ஆம், போர்கள், குற்றச்செயல்கள், ஒடுக்குதல்கள் ஆகியவற்றிற்குக் கடவுள் பொறுப்பாளி அல்ல; மக்களைத் துன்பக்கடலில் ஆழ்த்துகிற இயற்கைப் பேரழிவுகளுக்கும்கூட கடவுள் பொறுப்பாளி அல்ல. என்றாலும், யெகோவா எதற்காக இந்த எல்லாத் துன்பங்களையும் அனுமதிக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் சர்வவல்லவர் என்றால் இதையெல்லாம் தடுத்து நிறுத்த அவருக்கு வல்லமை இருக்கிறது அல்லவா? அப்படியானால், அவர் ஏன் அந்த வல்லமையை இன்னும் பயன்படுத்தாமல் இருக்கிறார்? நாம் அறிந்திருக்கிற நம்முடைய அன்பான கடவுள் நல்ல காரணத்திற்காகவே அப்படிச் செய்யாமல் இருக்கிறார்.—1 யோவான் 4:8.

ஒரு முக்கிய விவாதம் எழுப்பப்படுகிறது

10. சாத்தான் எதன் பேரில் கேள்வி எழுப்பினான், எப்படி?

10 கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க, துன்பம் ஆரம்பமான சமயத்திற்கு நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். ஆதாமையும் ஏவாளையும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி சாத்தான் செய்தபோது, முக்கியமான ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. யெகோவாவின் வல்லமையைக் குறித்து சாத்தான் கேள்வி எழுப்பவில்லை. யெகோவாவின் வல்லமைக்கு அளவே இல்லையென்பது அவனுக்கும்கூட நன்றாகத் தெரியும். எனவே, யெகோவாவின் ஆட்சியுரிமையைப் பற்றித்தான் அவன் கேள்வி எழுப்பினான். அவர் ஒரு பொய்யர் என்றும், அவருடைய மக்களுக்கு நன்மைகளை வழங்காதவர் என்றும் சொன்னான், இவ்வாறு யெகோவாவை ஒரு கெட்ட ஆட்சியாளர் எனக் குற்றம்சாட்டினான். (ஆதியாகமம் 3:2-5) கடவுளுடைய ஆட்சி இல்லாமலேயே மனிதர்களால் சந்தோஷமாக வாழ முடியுமென அவன் குறிப்பாகச் சொன்னான். இது யெகோவாவுடைய பேரரசுரிமையின் மீதான, அதாவது அவருடைய ஆட்சியுரிமையின் மீதான ஒரு தாக்குதலாக இருந்தது.

11. ஏதேனிலிருந்த கலகக்காரர்களை யெகோவா ஏன் உடனடியாக அழித்துவிடவில்லை?

11 ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் செய்தார்கள். “யெகோவா எங்களுடைய ஆட்சியாளராக இருக்க வேண்டியதில்லை. எது சரி, எது தவறு என்பதை நாங்களே தீர்மானித்துக்கொள்வோம்” என்று தங்கள் செயல்களின் மூலம் சொன்னார்கள். இந்த விவாதத்தை யெகோவா எப்படித் தீர்த்து வைப்பார்? அந்தக் கலகக்காரர்களுடைய எண்ணம் தவறு என்பதையும் தம்முடைய வழியே மிகச் சிறந்தது என்பதையும் புத்திக்கூர்மையுள்ள எல்லாச் சிருஷ்டிகளுக்கும் அவர் எப்படிக் கற்பிப்பார்? கடவுள் அந்தக் கலகக்காரர்களை உடனடியாக அழித்துவிட்டு, எல்லாவற்றையும் திரும்ப புதிதாகப் படைத்திருக்கலாமே என யாராவது சொல்லலாம். ஆனால், இந்தப் பூமி முழுவதும் ஆதாம் ஏவாளின் சந்ததியால் நிரம்பியிருக்க வேண்டுமென்பதும், பரதீஸாக்கப்பட்ட பூமியில் அவர்கள் வாழ வேண்டுமென்பதும் தம்முடைய நோக்கம் என யெகோவா தெரிவித்திருந்தார். (ஆதியாகமம் 1:28) யெகோவா தம்முடைய நோக்கங்களை எப்போதுமே நிறைவேற்றுகிறவர். (ஏசாயா 55:10, 11) அது தவிர, ஏதேனிலிருந்த அந்தக் கலகக்காரர்களை அழிப்பது யெகோவாவுடைய ஆட்சியுரிமை பற்றிய கேள்விக்குப் பதிலளித்திருக்காது.

12, 13. சாத்தானை உலக ஆட்சியாளனாக யெகோவா அனுமதித்திருப்பதற்கும், மனிதர்களே தங்களை ஆட்சி செய்துகொள்ள அனுமதித்திருப்பதற்கும் காரணத்தை உவமையுடன் விளக்குங்கள்.

12 இப்போது ஓர் உவமையைப் பார்க்கலாம். ரொம்பக் கஷ்டமான ஒரு கணக்கை எப்படிப் போடுவதென்று ஓர் ஆசிரியர் தன் மாணவர்களுக்குச் சொல்லித் தருவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். புத்திசாலியான, ஆனால் கலகக்கார மாணவன் ஒருவன் எழுந்து, அந்த ஆசிரியர் சொல்லித் தருகிற விதம் தவறு எனக் கூறுகிறான். அந்த ஆசிரியருக்குத் திறமையில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக, ஆசிரியர் சொல்லித் தந்ததைவிட மிகச் சிறந்த ஒரு வழி தனக்குத் தெரியுமென வாதிடுகிறான். அவன் சொல்வது சரியாக இருக்குமென சில மாணவர்கள் நினைக்கிறார்கள், அதனால் அவர்களும் அவனோடு சேர்ந்து கொள்கிறார்கள். இப்போது அந்த ஆசிரியர் என்ன செய்ய வேண்டும்? அந்தக் கலகக்கார மாணவர்களை வகுப்பிலிருந்து அவர் வெளியேற்றிவிட்டால் மற்ற எல்லா மாணவர்களும் என்ன நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள்? வெளியேற்றப்பட்ட அந்த மாணவர்கள் சரியாகத்தான் சொல்லியிருப்பார்களோ என நினைக்க மாட்டார்களா? அதுமட்டுமல்ல, தான் கணக்குப் போட்ட விதம் தவறு என எங்கே அந்த மாணவன் நிரூபித்து விடுவானோ என்று பயந்துதான் ஆசிரியர் அப்படிச் செய்தாரென்றும் அவர்கள் நினைக்க ஆரம்பித்துவிடலாம், பிறகு ஆசிரியர் மீதுள்ள மரியாதையையே அவர்கள் இழந்துவிடலாம். ஆனால், வகுப்பாருக்கு முன் அந்தக் கணக்கைப் போட்டுக்காட்டுமாறு அந்தக் கலகக்கார மாணவனிடமே ஆசிரியர் சொல்கிறார் என்றால் எப்படியிருக்கும்?

ஆசிரியரைவிட மாணவனுக்கு அதிக திறமை இருக்கிறதா?

13 அந்த ஆசிரியர் செய்வதைப் போன்ற ஒரு காரியத்தையே யெகோவா செய்திருக்கிறார். விவாதத்தில் உட்பட்டிருந்தது ஏதேனிலிருந்த கலகக்காரர்கள் மட்டுமே அல்ல என்பதை நினைவில் வையுங்கள். கோடிக்கணக்கான தேவதூதர்கள்கூட நடந்ததையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். (யோபு 38:7; தானியேல் 7:10) அந்தக் கலகத்தை யெகோவா கையாளவிருந்த விதம் மற்ற எல்லாத் தேவதூதர்களையும், பிறகு காலப்போக்கில் புத்திக்கூர்மையுள்ள மற்ற எல்லாச் சிருஷ்டிகளையும் பெருமளவு பாதிக்கவிருந்தது. ஆகவே, யெகோவா என்ன செய்தார்? மனிதகுலத்தை சாத்தான் எப்படி ஆளப்போகிறான் என்பதைக் காண்பிக்க அவனை அனுமதித்தார். சாத்தானுடைய தலைமையில் மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளவும் அனுமதித்தார்.

14. மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ள யெகோவா அனுமதித்திருப்பதால் என்ன நன்மை விளையும்?

14 உவமையில் வரும் கலகக்கார மாணவனும் அவனோடு சேர்ந்துகொண்ட மற்ற மாணவர்களும் நினைப்பது தவறென்பது அந்த ஆசிரியருக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, தங்களுடைய வாதத்தை நிரூபிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் முழு வகுப்புமே நன்மை அடையும் என்பதுகூட அவருக்குத் தெரியும். கலகக்காரர்களால் அதை நிரூபிக்க முடியாத பட்சத்தில், ஆசிரியர் மட்டுமே வகுப்பை நடத்த தகுதிபெற்றவர் என்பதை நேர்மையுள்ள மற்ற மாணவர்கள் காண்பார்கள். அதன் பிறகு அந்தக் கலகக்காரர்கள் வகுப்பிலிருந்து நீக்கப்பட்டால், அதற்கான காரணத்தை மற்ற மாணவர்கள் புரிந்துகொள்வார்கள். அதேவிதமாக, சாத்தானும் அவனைச் சேர்ந்த கலகக்காரர்களும் தோல்வி அடைவதையும், மனிதர்கள் வெற்றிகரமாக ஆட்சி செய்துகொள்ள முடியாததையும் கண்கூடாகப் பார்ப்பதன் மூலம் நேர்மையுள்ளவர்களும் தேவதூதர்களும் நன்மையடைவார்கள் என்பது யெகோவாவுக்குத் தெரியும். அக்காலத்தில் வாழ்ந்த எரேமியாவைப் போல பின்வரும் முக்கிய உண்மையை அப்போது அவர்கள் புரிந்துகொள்வார்கள்: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.”—எரேமியா 10:23.

ஏன் இத்தனை காலம்?

15, 16. (அ) யெகோவா இத்தனை காலத்திற்குத் துன்பத்தை ஏன் அனுமதித்திருக்கிறார்? (ஆ) படுபயங்கர குற்றச்செயல்கள் போன்றவற்றை யெகோவா ஏன் தடுத்து நிறுத்துவதில்லை?

15 ஆனால் யெகோவா ஏன் இத்தனை காலம் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்? கெட்ட காரியங்களை அவர் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? உவமையில் சொல்லப்பட்டுள்ள ஆசிரியர் என்ன இரண்டு காரியங்களைச் செய்யவில்லை என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். முதலாவது, கணக்கை எப்படிப் போடுவதென்று அந்தக் கலகக்கார மாணவன் வகுப்பாருக்கு விளக்கமளிக்க ஆரம்பித்தவுடன் அவனைத் தடுத்து நிறுத்தவில்லை. இரண்டாவது, அந்தக் கணக்கைப் போடுவதில் அவனுக்கு உதவவில்லை. அதேபோல, யெகோவா என்ன இரண்டு காரியங்களைச் செய்யாதிருக்கத் தீர்மானித்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். முதலாவது, சாத்தானும் அவனைச் சேர்ந்தவர்களும் தாங்கள் சொல்வதே சரி என நிரூபிப்பதற்காக எடுத்திருக்கும் முயற்சிகளை அவர் தடுத்து நிறுத்தவில்லை. இதனால் காலத்தை அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனித சரித்திரத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், மனிதன் எல்லா விதமான சுயாட்சி முறைகளையும், அதாவது மனித அரசாங்கங்களையும் முயன்று பார்த்திருக்கிறான். விஞ்ஞானத்திலும் மற்ற துறைகளிலும் சில முன்னேற்றங்களைக் கண்டிருந்தாலும், அநியாயமும், வறுமையும், குற்றச்செயலும், போரும் முன்பைவிட இப்போது படு மோசமாகியிருக்கின்றன. மனித ஆட்சி தோல்வியடைந்திருப்பது இன்று பகிரங்கமாகத் தெரிகிறது.

16 இரண்டாவது, இவ்வுலகத்தை ஆள சாத்தானுக்கு யெகோவா உதவுவதில்லை. உதாரணமாக, படுபயங்கர குற்றச்செயல்களைக் கடவுள் தடுத்து நிறுத்துவாரேயானால், அவர் அந்தக் கலகக்காரர்களுடைய விவாதம் சரியென நிரூபிப்பதற்கு உதவி செய்வதைப் போல் அல்லவா ஆகிவிடும்? எவ்வித விபரீத விளைவுகளும் ஏற்படாத விதத்தில் மனிதர்களால் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ள முடியும் என ஜனங்களை அவர் நினைக்க வைத்துவிடுவார் அல்லவா? அப்படி மட்டும் யெகோவா செய்வாரானால், பொய்க்குத் துணைபோகிறவராக ஆகிவிடுவார். ஆனால், ‘பொய்யுரைக்க தேவனால் முடியவே முடியாது.’—எபிரெயர் 6:18, NW.

17, 18. மனித ஆட்சியினாலும் சாத்தானின் செல்வாக்கினாலும் விளைந்த எல்லாத் தீங்குகளையும் யெகோவா என்ன செய்யப் போகிறார்?

17 அப்படியானால், கடவுளுக்கு எதிரான இந்த நீண்ட கலகத்தின்போது விளைந்த எல்லாத் தீங்குகளையும் பற்றி என்ன? யெகோவா சர்வவல்லவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, துன்பத்தின் மோசமான பாதிப்புகளைச் சரிசெய்ய அவரால் முடியும், அதைக் கண்டிப்பாகச் செய்யவும் போகிறார். நாம் முன்னமே கற்றுக்கொண்டபடி, பாழாக்கப்பட்ட இந்தக் கிரகம் ஒரு பரதீஸாக மாற்றப்படும். இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம் பாவத்தின் பாதிப்புகள் நீக்கப்படும், அதுமட்டுமல்ல, உயிர்த்தெழுதல் மூலம் மரணத்தின் பாதிப்புகளும் நீக்கப்படும். இவ்வாறு ‘பிசாசினுடைய கிரியைகளை அழிக்க’ இயேசுவைக் கடவுள் பயன்படுத்துவார். (1 யோவான் 3:8) இந்த எல்லாக் காரியங்களையும் யெகோவா மிகச் சரியான வேளையில் நிறைவேற்றுவார். அவர் சீக்கிரமாகவே நடவடிக்கை எடுக்காததைக் குறித்து நாம் சந்தோஷப்படலாம், ஏனெனில் அவருடைய பொறுமையினால்தான் இப்போது நாம் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு அவருக்குச் சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். (2 பேதுரு 3:9, 10) இதற்கிடையே, தம்மை வணங்குவதற்காக நல்மனமுள்ள ஆட்களைக் கடவுள் மும்முரமாகத் தேடி வருகிறார்; அதோடு, கஷ்டம் நிறைந்த இவ்வுலகில் எத்தகைய துன்பத்தின் மத்தியிலும் சகித்து நிற்க அவர்களுக்கு உதவிசெய்தும் வருகிறார்.—யோவான் 4:23; 1 கொரிந்தியர் 10:13.

18 கலகமே செய்ய முடியாத விதத்தில் ஆதாமையும் ஏவாளையும் கடவுள் படைத்திருந்தால் இந்த எல்லாத் துன்பங்களையும் தடுத்திருக்கலாமோ என்று சிலர் நினைக்கலாம். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, யெகோவா உங்களுக்குக் கொடுத்துள்ள அரும்பெரும் பரிசு ஒன்றை நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும்.

கடவுள் தந்துள்ள பரிசை எப்படிப் பயன்படுத்துவீர்கள்?

துன்பத்தின்போது சகித்திருக்க கடவுள் உங்களுக்கு உதவுவார்

19. என்ன அரும்பெரும் பரிசை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார், நாம் ஏன் அதை மதிப்பானதாகக் கருத வேண்டும்?

19 அதிகாரம் 5-⁠ல் பார்த்தபடி, சுயமாகத் தெரிவுசெய்யும் சுதந்திரத்துடன் மனிதர்கள் படைக்கப்பட்டார்கள். அது எப்பேர்ப்பட்ட அரும்பெரும் பரிசு என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? எண்ணற்ற மிருக ஜீவன்களைக் கடவுள் படைத்திருக்கிறார், இவை பெரும்பாலும் உள்ளுணர்வினால் இயங்குகின்றன. (நீதிமொழிகள் 30:24, NW) கொடுக்கிற கட்டளைகளின்படியே செய்கிற சில ரோபாட்டுகளை மனிதன் வடிவமைத்திருக்கிறான். அந்த ரோபாட்டுகளைப் போல கடவுள் நம்மைப் படைத்திருந்தால் நாம் சந்தோஷப்பட்டிருப்போமா? இல்லை, நாம் எப்படிப்பட்டவர்களாக ஆக வேண்டும், எவ்விதமான வாழ்க்கை வாழ வேண்டும், எத்தகைய நண்பர்களை வைத்துக்கொள்ள வேண்டும் போன்ற அநேக தெரிவுகளைச் செய்கிற சுதந்திரம் நமக்கு இருப்பதை எண்ணி நாம் மனம் மகிழவே செய்கிறோம். இப்படி ஓரளவுக்காவது சுதந்திரம் இருப்பதை நாம் விரும்புகிறோம், அத்தகைய சுதந்திரம் நமக்கு இருக்க வேண்டுமென்றுதான் கடவுளும் விரும்புகிறார்.

20, 21. தெரிவுசெய்யும் சுதந்திரம் என்ற பரிசை மிகச் சிறந்த விதத்தில் நாம் எப்படிப் பயன்படுத்தலாம், நாம் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?

20 கட்டாயத்தின் பேரில் செய்யப்படுகிற எந்தச் சேவையையும் யெகோவா ஏற்றுக்கொள்வதில்லை. (2 கொரிந்தியர் 9:7) ஓர் உதாரணம்: எது ஒரு பெற்றோரைச் சந்தோஷப்படுத்தும்​—⁠ஏதோவொன்றிற்காக “தேங்க் யூ” என்று தன் பிள்ளை தன்னிடம் வந்து உள்ளப்பூர்வமாய் சொல்வதா அல்லது அப்படிச் சொல்ல வேண்டுமென்று மற்றவர்கள் வற்புறுத்திய பின் வந்து சொல்வதா? ஆக, இப்போது கேள்வி என்னவென்றால், யெகோவா உங்களுக்குக் கொடுத்துள்ள தெரிவுசெய்யும் சுதந்திரத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள்? சாத்தானும், ஆதாம் ஏவாளும் அதை எந்தளவுக்கு மோசமாகப் பயன்படுத்த முடியுமோ அந்தளவுக்கு மோசமாகப் பயன்படுத்தினார்கள். யெகோவா தேவனை ஒதுக்கித் தள்ளினார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்?

21 தெரிவுசெய்யும் சுதந்திரம் என்ற அரும்பெரும் பரிசை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. ஆம், யெகோவாவின் பக்கம் உறுதியாக நிற்கிற லட்சோபலட்சம் ஆட்களோடு நீங்களும் சேர்ந்துகொள்ளலாம். சாத்தான் ஒரு பொய்யன் என்றும், ஓர் ஆட்சியாளனாக படுதோல்வி அடைந்திருக்கிறான் என்றும் நிரூபிப்பதில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு கடவுளைச் சந்தோஷப்படுத்தி வருகிறார்கள். (நீதிமொழிகள் 27:11) சரியான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்களும்கூட அவரைச் சந்தோஷப்படுத்தலாம். இதைக் குறித்து அடுத்த அதிகாரத்தில் விளக்கமாகப் பார்ப்போம்.