Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பதிமூன்று

உயிரைக் கடவுளுடைய கண்ணோட்டத்தில் பாருங்கள்

உயிரைக் கடவுளுடைய கண்ணோட்டத்தில் பாருங்கள்
  • உயிரைக் கடவுள் எப்படிக் கருதுகிறார்?

  • கருக்கலைப்பைக் கடவுள் எப்படிக் கருதுகிறார்?

  • உயிருக்கு நாம் எப்படி மதிப்புக் காண்பிக்கலாம்?

1. எல்லா உயிரினங்களையும் படைத்தது யார்?

‘யெகோவாவே உண்மையான தேவன், ஜீவனுள்ள தேவன்’ என்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னார். (எரேமியா 10:10, NW) அதுமட்டுமல்ல, எல்லா உயிரினங்களைப் படைத்தவரும் அவர்தான். பரலோக சிருஷ்டிகள் அவரை நோக்கி இவ்வாறு கூறின: ‘நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கின்றன, சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன.’ (வெளிப்படுத்துதல் 4:11) தாவீது ராஜா கடவுளைத் துதித்துப் பாடுகையில், “ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டார். (சங்கீதம் 36:9) அப்படியானால், உயிர் என்பது கடவுளிடமிருந்து வந்துள்ள பரிசு என்பதில் சந்தேகமேயில்லை.

2. நாம் தொடர்ந்து உயிர் வாழ கடவுள் என்ன செய்கிறார்?

2 அதோடு, நாம் தொடர்ந்து உயிர் வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா கொடுத்து வருகிறார். (அப்போஸ்தலர் 17:28) உண்ண உணவு, குடிக்க தண்ணீர், சுவாசிக்க காற்று, குடியிருக்க நிலம் என சகலத்தையும் அவர் நமக்கு அளிக்கிறார். (அப்போஸ்தலர் 14:15-17) வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிக்கும் விதத்தில் இவற்றை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதற்கு, அவருடைய கட்டளைகளைக் கற்றுக்கொண்டு அவற்றிற்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்.​—⁠ஏசாயா 48:17, 18.

உயிருக்கு மதிப்புக் காண்பித்தல்

3. ஆபேல் கொலை செய்யப்பட்டதைக் கடவுள் எப்படிக் கருதினார்?

3 உயிருக்கு​—⁠நம்முடைய உயிருக்கும் சரி, மற்றவர்களுடைய உயிருக்கும் சரி​—⁠நாம் மதிப்புக் காண்பிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். உதாரணமாக, ஆதாம் ஏவாளின் மகனான காயீன் தன் தம்பி ஆபேலின் மீது வன்மம் வைத்தான். அந்த வன்மம் கொடிய பாவத்திற்கு அவனை வழிநடத்தும் என யெகோவா எச்சரித்தார். அந்த எச்சரிப்பைக் காயீன் அசட்டை செய்தான். “தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலை செய்தான்.” (ஆதியாகமம் 4:3-8) தம்பியைக் கொலை செய்ததற்காகக் காயீனை யெகோவா தண்டித்தார்.​—⁠ஆதியாகமம் 4:9-11.

4. உயிரைப் பற்றிய சரியான கருத்தை நியாயப்பிரமாணத்தில் கடவுள் எப்படி வலியுறுத்திக் காண்பித்தார்?

4 சுமார் 2,400 வருடங்களுக்குப் பிறகு, இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா நிறைய சட்டங்களைக் கொடுத்தார்; தமக்குப் பிடித்தமான விதத்தில் அவர்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அவற்றைக் கொடுத்தார். அந்தச் சட்டங்கள் தீர்க்கதரிசியான மோசே மூலம் கொடுக்கப்பட்டதால், அவை சிலசமயம் மோசேயின் நியாயப்பிரமாணம் என அழைக்கப்படுகின்றன. அதில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சட்டம், “கொலை செய்யாதிருப்பாயாக” என்று சொன்னது. (உபாகமம் 5:17) மனித உயிரைக் கடவுள் உயர்வாக மதிக்கிறார் என்பதையும், ஜனங்கள்கூட மற்றவர்களுடைய உயிரை உயர்வாக மதிக்க வேண்டும் என்பதையும் அச்சட்டம் காண்பித்தது.

5. கருக்கலைப்பை நாம் எவ்வாறு கருத வேண்டும்?

5 வயிற்றிலுள்ள குழந்தையின் உயிரைப் பற்றியென்ன? நியாயப்பிரமாணத்தின்படி, தாயின் வயிற்றிலுள்ள குழந்தையைச் சாகடிப்பது தவறாக இருந்தது. ஆம், பிறவாத குழந்தையின் உயிரையும்கூட யெகோவா அருமையானதாகக் கருதுகிறார். (யாத்திராகமம் 21:22, 23; சங்கீதம் 127:4) ஆகவே, கருக்கலைப்பு செய்வது தவறு.

6. நாம் ஏன் சக மனிதர்களை வெறுக்கக் கூடாது?

6 உயிருக்கு மதிப்புக் காண்பிக்க, சக மனிதர்களைப் பற்றிய சரியான கண்ணோட்டமும் நமக்கு அவசியம். “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலை பாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்” என பைபிள் சொல்கிறது. (1 யோவான் 3:15) நமக்கு நித்திய ஜீவன் வேண்டுமானால், சக மனிதர்கள் மீது எத்தகைய வெறுப்பு இருந்தாலும் அதை வேரோடு பிடுங்கிப்போட வேண்டும், ஏனெனில் பெரும்பாலான வன்முறைச் சம்பவங்களுக்கு வெறுப்பே அடிப்படை காரணமாக இருக்கிறது. (1 யோவான் 3:11, 12) அதனால், நாம் ஒருவரிலொருவர் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்வது மிக மிக முக்கியமாகும்.

7. உயிரை அவமதிக்கும் பழக்கங்கள் சில யாவை?

7 நம்முடைய சொந்த உயிருக்கு மதிப்புக் காண்பிப்பது பற்றியென்ன? சாக வேண்டுமென்று பொதுவாக ஜனங்கள் விரும்புவதில்லை, ஆனால் ஒரு ‘த்ரில்’லுக்காக சிலர் தங்கள் உயிரையே பணயம் வைக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஏராளமானோர் புகையிலை பயன்படுத்துகிறார்கள், வெற்றிலைப் பாக்கு போட்டுக்கொள்கிறார்கள், அல்லது போதைப் பொருள்களை எடுத்துக்கொள்கிறார்கள். அத்தகைய பொருள்கள் உடம்புக்குக் கேடு விளைவிக்கின்றன, அதுமட்டுமல்ல, அதற்கு அடிமையாவோரின் உயிரைக்கூட பெரும்பாலும் அவை சூறையாடி விடுகின்றன. அத்தகைய போதைப் பொருள்களை உபயோகிக்கும் பழக்கமுள்ள ஒரு நபர் உயிரைப் புனிதமாகக் கருதுவதில்லை. கடவுளுடைய பார்வையில் இப்பழக்கங்கள் அசுத்தமானவையாக இருக்கின்றன. (ரோமர் 6:19; 12:1; 2 கொரிந்தியர் 7:1) கடவுளுக்குப் பிடித்தமான விதத்தில் அவரைச் சேவிக்க வேண்டுமானால், அத்தகைய பழக்கங்களை நாம் விட்டுவிடுவது அவசியம். அப்படிச் செய்வது ஒருவேளை வெகு கடினமாக இருக்கலாம், ஆனாலும் நமக்குத் தேவையான உதவியை யெகோவாவால் அளிக்க முடியும். நம்முடைய உயிரை அவர் தந்த அரும்பெரும் பரிசாகக் கருதி, அதைப் பேணிக்காக்க நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் உயர்வாய் மதிக்கிறார்.

8. பாதுகாப்புக்கு நாம் ஏன் எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

8 உயிரை மதித்தோமானால், பாதுகாப்புக்கு நாம் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்போம். அசட்டையாக இருந்துவிட மாட்டோம், அதோடு குஷிக்காக அல்லது ‘த்ரில்’லுக்காக துணிந்து எவ்வித ஆபத்துகளிலும் இறங்க மாட்டோம். கண்மூடித்தனமாக வண்டி ஓட்டுவதையும் வன்முறைமிக்க அல்லது ஆபத்துமிக்க போட்டி விளையாட்டுகளில் கலந்துகொள்வதையும் தவிர்ப்போம். (சங்கீதம் 11:5) பூர்வ இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டம் இவ்வாறு குறிப்பிட்டது: “நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்ட வேண்டும்.” (உபாகமம் 22:8) எனவே இந்தச் சட்டத்திலுள்ள நியமத்திற்கு ஏற்ப, உங்கள் வீட்டு மாடிப்படிகளில் யாராவது கால்தவறி விழுந்து பலத்த காயம் அடைந்துவிடாதபடிக்கு அவற்றை நல்ல நிலையில் வைத்திருங்கள். அதேபோல, உங்களுக்குக் கார் இருந்தால், எந்தக் கோளாறுமின்றி நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் வீடு அல்லது கார் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ ஆபத்து உண்டாக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

9. உயிரை மதித்தோமானால், மிருகங்களை எவ்வாறு நடத்துவோம்?

9 ஒரு மிருகத்தின் உயிரைப் பற்றியென்ன? படைப்பாளருக்கு அதன் உயிரும் புனிதமானதுதான். உணவுக்காகவும், உடைக்காகவும், மனித உயிரை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காகவும் மிருகங்களைக் கொல்வதற்குக் கடவுள் அனுமதிக்கிறார். (ஆதியாகமம் 3:21; 9:3; யாத்திராகமம் 21:28) ஆனால், மிருகங்களைக் கொடூரமாக நடத்துவதோ விளையாட்டுக்காக அவற்றைக் கொலை செய்வதோ தவறு; அப்படிச் செய்வது உயிரின் புனிதத்தன்மைக்குப் பெருத்த அவமரியாதை காட்டுவதாக இருக்கும்.​—⁠நீதிமொழிகள் 12:10.

இரத்தத்திற்கு மதிப்புக் காண்பித்தல்

10. உயிருக்கும் இரத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை யெகோவா எப்படிக் காண்பித்தார்?

10 காயீன் தன் தம்பி ஆபேலைக் கொன்ற பிறகு, “உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது” என அவனிடம் யெகோவா கூறினார். (ஆதியாகமம் 4:10) ஆபேலின் இரத்தம் என்று யெகோவா கூறியபோது, ஆபேலின் உயிரைத்தான் அவர் அர்த்தப்படுத்தினார். ஆபேலின் உயிரைக் காயீன் பறித்துவிட்டான், அதற்காக அவனுக்குத் தண்டனை கொடுக்கப்பட வேண்டியிருந்தது. ஏனென்றால் ஆபேலின் இரத்தம், அதாவது உயிர், நீதிகேட்டு யெகோவாவிடம் அழுதது போல் இருந்தது. நோவாவின் நாளில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்திற்குப் பின்னர், உயிருக்கும் இரத்தத்திற்கும் இடையே உள்ள தொடர்பு மீண்டும் காண்பிக்கப்பட்டது. ஜலப்பிரளயத்திற்கு முன் மனிதர்கள் வெறும் பழங்களையும், காய்கறிகளையும், தானியங்களையும், கொட்டைப் பருப்புகளையுமே சாப்பிட்டு வந்தார்கள். ஆனால், ஜலப்பிரளயத்திற்குப் பின், நோவாவிடமும் அவருடைய மகன்களிடமும் யெகோவா இவ்வாறு சொன்னார்: “நடமாடுகிற ஜீவ ஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல், அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.” என்றாலும், அவர் ஒரு கட்டுப்பாட்டை விதித்தார், அதாவது “மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்க வேண்டாம்” என்று தடைவிதித்தார். (ஆதியாகமம் 1:29; 9:3, 4) தெளிவாகவே, உயிருக்கும் இரத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை யெகோவா காண்பித்தார்.

11. நோவாவின் காலம் முதற்கொண்டு, இரத்தத்தை என்ன செய்யக்கூடாதென்று கடவுள் தடை விதித்திருக்கிறார்?

11 இரத்தத்தைப் புசிக்காதிருப்பதன் மூலம் நாம் அதற்கு மதிப்புக் காண்பிக்கிறோம். இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட சட்டத்தில் யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: “எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன். . . . எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்க வேண்டாம் . . . என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.” (லேவியராகமம் 17:13, 14) எனவே, மிருகத்தின் இரத்தத்தைப் புசிக்கக் கூடாதென்று சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் நோவாவுக்குக் கடவுள் கொடுத்த சட்டம் இஸ்ரவேலர் காலத்திலும் அமலில் இருந்தது. யெகோவாவின் கட்டளை தெள்ளத் தெளிவாக இருந்தது: அவருடைய ஊழியர்கள் மிருக மாம்சத்தைப் புசிக்கலாம், ஆனால் இரத்தத்தைப் புசிக்கக் கூடாது. இரத்தத்தை அவர்கள் தரையிலே ஊற்றிவிட வேண்டும்; இப்படிச் செய்வது, அந்த உயிரைக் கடவுளுக்குத் திருப்பிக் கொடுப்பது போல இருந்தது.

12. இரத்தத்தைப் பற்றி முதல் நூற்றாண்டில் பரிசுத்த ஆவியால் கொடுக்கப்பட்ட என்ன கட்டளை இன்றுவரை அமலில் இருக்கிறது?

12 அதுபோன்ற ஒரு கட்டளை கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவ சபையிலுள்ள எல்லாரும் என்னென்ன கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, அப்போஸ்தலர்களும் இயேசுவின் சீஷர்களை வழிநடத்திய மற்ற ஆண்களும் கூடிவந்தார்கள். அவர்கள் எடுத்த முடிவு இதுதான்: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும் [இரத்தம் வெளியேற்றப்படாத மாமிசத்திற்கும்], வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டும். அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது.” (அப்போஸ்தலர் 15:28, 29; 21:25) எனவே, நாம் தொடர்ந்து ‘இரத்தத்திற்கு விலகியிருக்க’ வேண்டும். விக்கிரக ஆராதனையையும் பாலியல் ஒழுக்கக்கேட்டையும் தவிர்ப்பதைக் கடவுள் எந்தளவுக்கு முக்கியமாகக் கருதுகிறாரோ அந்தளவுக்கு இரத்தத்திற்கு விலகியிருப்பதையும் முக்கியமாகக் கருதுகிறார்.

மதுபானம் அருந்தக் கூடாதென்று டாக்டர் உங்களிடம் சொன்னால், அதை நரம்பு வழியாக ஏற்றிக்கொள்வீர்களா?

13. இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டுமென்ற கட்டளையில் இரத்தம் ஏற்றிக்கொள்வதும் ஏன் உட்பட்டுள்ளது என்பதை உதாரணத்துடன் விளக்கவும்.

13 இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டுமென்ற கட்டளையில் இரத்தம் ஏற்றிக்கொள்வதும் உட்படுகிறதா? ஆம், உட்படுகிறது. உதாரணத்திற்கு: மதுபானம் அருந்தக் கூடாதென டாக்டர் உங்களிடம் சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால், மதுபானத்தை வாய் வழியாகத்தான் அருந்தக் கூடாது, நரம்பு வழியாக அதை ஏற்றிக்கொள்ளலாம் என்று அர்த்தமாகுமா? இல்லவே இல்லை! அதேபோல, இரத்தத்திலிருந்து விலகியிருப்பது எவ்விதத்திலும் அதை நம் உடம்பில் செலுத்திக்கொள்ளக் கூடாது என்பதை அர்த்தப்படுத்துகிறது. எனவே இந்தக் கட்டளை, நரம்பு வழியாக நம் உடம்பில் இரத்தத்தைச் செலுத்த யாரையும் அனுமதிக்காதிருப்பதைக் குறிக்கிறது.

14, 15. இரத்தம் செலுத்தியே ஆக வேண்டுமென்று டாக்டர்கள் சொல்கையில் ஒரு கிறிஸ்தவர் என்ன செய்வார், ஏன்?

14 ஒரு கிறிஸ்தவர் படுகாயமடைந்தால், அல்லது அவருக்கு ஒரு பெரிய ஆபரேஷன் தேவைப்பட்டால், அப்போது என்ன செய்வது? அவருக்கு இரத்தம் செலுத்தியே ஆக வேண்டுமென்றும், இல்லையென்றால் அவர் இறந்துவிடுவார் என்றும் டாக்டர்கள் சொல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அத்தகைய நிலையிலுள்ள ஒரு கிறிஸ்தவர் நிச்சயமாகவே சாக விரும்ப மாட்டார். கடவுள் கொடுத்துள்ள உயிர் எனும் அரும்பெரும் பரிசைப் பாதுகாப்பதற்காக இரத்தம் உட்படாத சிகிச்சைகளை அவர் ஏற்றுக்கொள்வார். எனவே, இரத்தமில்லா மாற்று சிகிச்சை முறைகள் இருந்தால் அவற்றை அளிக்குமாறு கேட்டுக்கொள்வார்.

15 சாத்தானுடைய இந்த உலகில் தன் வாழ்நாளைச் சற்றுக் கூட்டிக்கொள்வதற்காக ஒரு கிறிஸ்தவர் கடவுளுடைய சட்டத்தையே மீறுவாரா என்ன? இயேசு இவ்வாறு சொன்னார்: “தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.” (மத்தேயு 16:25) நாம் சாக விரும்புவதில்லை. ஆனால், நம் உயிரைக் காப்பாற்றுவதற்காக கடவுளுடைய சட்டத்தை மீறினால், நமக்கு நித்திய ஜீவனே கிடைக்காமல் போய்விடலாம். ஆக, கடவுளுடைய சட்டம் எப்போதுமே சரியாகத்தான் இருக்கும் என்று நம்புவது ஞானமாகும்; எந்தவொரு காரணத்தினால் நாம் மரிக்க நேரிட்டாலும் உயிர்த்தெழுதலின்போது நம் படைப்பாளர் நம்மை நினைவுகூர்ந்து, மதிப்புமிக்க பரிசான உயிரை நமக்கு மீண்டும் கொடுப்பார் என்பதில் நாம் முழு நம்பிக்கையோடு இருக்கலாம்.​—⁠யோவான் 5:28, 29; எபிரெயர் 11:6.

16. இரத்தம் சம்பந்தமாக கடவுளுடைய ஊழியர்களின் திடத்தீர்மானம் என்ன?

16 இன்று, கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் இரத்தம் சம்பந்தமான அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய திடத்தீர்மானத்துடன் இருக்கிறார்கள். எந்த வகையிலும் இரத்தத்தை அவர்கள் புசிக்க மாட்டார்கள். அதோடு, மருத்துவக் காரணங்களுக்காகவும் அதை ஏற்றிக்கொள்ள மாட்டார்கள். * தங்களுக்கு எது சிறந்ததென்று இரத்தத்தை உருவாக்கிய கடவுளுக்கு நன்றாகவே தெரியுமென அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதை நீங்கள் நம்புகிறீர்களா?

இரத்தத்தைப் பயன்படுத்துவதற்குரிய ஒரே சரியான வழி

17. பூர்வ இஸ்ரவேலில், இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கு யெகோவா தேவன் அங்கீகரித்த ஒரே வழி எது?

17 மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டம் இரத்தத்தைப் பயன்படுத்துவதற்குரிய ஒரே சரியான வழியை வலியுறுத்திக் காட்டியது. வழிபாடு சம்பந்தமான ஒரு காரியத்தைப் பற்றி பூர்வ இஸ்ரவேலருக்கு யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.” (லேவியராகமம் 17:11) இஸ்ரவேலர் ஏதாவது பாவம் செய்தால், ஒரு மிருகத்தைப் பலியிட்டு அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து ஆசரிப்புக் கூடாரத்திலிருந்த—பிற்பாடு, கடவுளுடைய ஆலயத்திலிருந்த—பலிபீடத்தின் மீது செலுத்தி பாவ மன்னிப்பைப் பெற முடிந்தது. இந்த விதத்தில் இரத்தத்தைப் பயன்படுத்துவதுதான் ஒரே சரியான வழியாக இருந்தது.

18. இயேசு சிந்திய இரத்தத்தின் மூலம் என்ன நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் நாம் பெற்றுக்கொள்ளலாம்?

18 மெய்க் கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை, எனவே அவர்கள் மிருகங்களைப் பலி கொடுத்து அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மீது செலுத்துவதில்லை. (எபிரெயர் 10:1) என்றாலும் பூர்வ இஸ்ரவேலில், பலிபீடத்தின் மீது இரத்தம் செலுத்தப்பட்டதானது, கடவுளுடைய குமாரனான இயேசு கிறிஸ்து அளித்த விலையேறப்பெற்ற பலிக்கு முன்நிழலாக இருந்தது. இப்புத்தகத்தின் 5-ம் அதிகாரத்தில் நாம் கற்றுக்கொண்டபடி, தமது இரத்தத்தைப் பலியாகச் செலுத்துவதன் மூலம் இயேசு தம்முடைய மனித உயிரை நமக்காக அளித்தார். பிறகு, பரலோகத்திற்குச் சென்று, தாம் சிந்திய இரத்தத்தின் மதிப்பை ஒரேதரமாகக் கடவுளுக்கு முன் அர்ப்பணித்தார். (எபிரெயர் 9:11, 12) நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அது அடிப்படையாக அமைந்தது, அதோடு நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் நமக்குத் திறந்து வைத்தது. (மத்தேயு 20:28; யோவான் 3:16) அப்படியானால் அவருடைய இரத்தத்தின் இந்தப் பயன் எந்தளவு முக்கியத்துவமுடையது! (1 பேதுரு 1:18, 19) இயேசு சிந்திய விலையேறப்பெற்ற இரத்தத்தில் விசுவாசம் வைப்பதன் மூலம் மட்டுமே நமக்கு இரட்சிப்பு கிடைக்கும்.

உயிருக்கும் இரத்தத்திற்கும் எவ்வழிகளில் நீங்கள் மதிப்புக் காண்பிக்கலாம்?

19. ‘எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி சுத்தமாயிருக்க’ நாம் என்ன செய்ய வேண்டும்?

19 உயிர் என்ற அன்பான பரிசை யெகோவா தேவன் நமக்குக் கொடுத்ததற்காக நாம் மிகுந்த நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம். அப்படியானால், இயேசுவின் பலியில் விசுவாசம் வைப்பது நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் என்பதை மற்றவர்களுக்குச் சொல்ல நாம் தூண்டப்பட வேண்டும் அல்லவா? சக மனிதர்களின் வாழ்க்கையைக் குறித்து கடவுளுக்கு இருக்கும் அதே அக்கறை நமக்கு இருந்தால், நாம் முழு ஆர்வத்தோடும் பக்தி வைராக்கியத்தோடும் அதை அவர்களிடம் சொல்லத் தூண்டப்படுவோம். (எசேக்கியேல் 3:17-21) இந்தப் பொறுப்பை ஊக்கந்தளராமல் நிறைவேற்றுவோமானால், ‘தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னதைப் போலவே நாமும் சொல்ல முடியும். (அப்போஸ்தலர் 20:26, 27) உயிரையும் இரத்தத்தையும் நாம் மிக மிக உயர்வாக மதிக்கிறோம் என்பதைக் காண்பிப்பதற்கு அருமையான வழி, கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி ஜனங்களிடம் சொல்வதாகும்.

^ பாரா. 16 இரத்தத்தை ஏற்றிக்கொள்வதற்குப் பதிலாக என்னென்ன மாற்று சிகிச்சை முறைகளைப் பெறலாம் என்பது பற்றிய தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற சிற்றேட்டில், பக்கங்கள் 13-17-ஐக் காண்க.