Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பதினான்கு

சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு வழி

சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு வழி
  • நல்ல கணவனாக இருப்பது எப்படி?

  • அருமையான மனைவியாக இருப்பது எப்படி?

  • சிறந்த பெற்றோராக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்குப் பிள்ளைகள் என்ன செய்யலாம்?

1. சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு எது முக்கியம்?

உங்கள் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டுமென யெகோவா தேவன் விரும்புகிறார். குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் பின்பற்ற வேண்டிய சில நியமங்கள் அவருடைய வார்த்தையான பைபிளில் இருக்கின்றன. கடவுள் விரும்புகிற விதத்தில் ஒவ்வொருவரும் எப்படித் தங்கள் பங்கை நிறைவேற்றலாம் என்று அவை விவரிக்கின்றன. கடவுளுடைய ஆலோசனைப்படி குடும்பத்திலுள்ள எல்லாரும் அவரவர் பங்கை நிறைவேற்றும்போது கிடைக்கும் பலன்கள் மிகுந்த திருப்தி அளிக்கின்றன. இயேசு இவ்வாறு சொன்னார்: “தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் [அதாவது, சந்தோஷமுள்ளவர்கள்].”​—⁠லூக்கா 11:28.

2. சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு எதை அறிந்திருப்பது அவசியம்?

2 யெகோவா தேவன்தான் குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவர் என்பதை முதலாவது அறிந்திருப்பது சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு அவசியம்; அவரை “எங்கள் பிதாவே” என இயேசு அழைத்தார். (மத்தேயு 6:9) குடும்பங்கள் பூமியில் இருப்பதற்கு நம் பரலோகப் பிதாவான அவர்தான் காரணம், அதனால் ஒரு குடும்பத்தின் சந்தோஷத்திற்கு எது தேவை என்பது நிச்சயமாகவே அவருக்குத் தெரியும். (எபேசியர் 3:14, 15) அப்படியானால், குடும்ப அங்கத்தினர்களுடைய பொறுப்புகளைப் பற்றி பைபிளில் அவர் என்ன கற்பிக்கிறார்?

கடவுள் ஆரம்பித்து வைத்த குடும்ப ஏற்பாடு

3. குடும்ப வாழ்க்கையின் ஆரம்பத்தை பைபிள் எப்படி விவரிக்கிறது, அதில் சொல்லப்பட்டிருப்பது உண்மை என்பது நமக்கு எப்படித் தெரியும்?

3 முதல் மானிடரான ஆதாம் ஏவாளைப் படைத்த பின்னர், அவர்களை கணவன் மனைவியாக யெகோவா இணைத்து வைத்தார். பூமியிலிருந்த அழகிய பரதீஸ் வீடான ஏதேன் தோட்டத்தில் அவர்களைக் குடிவைத்து, பிள்ளைகளைப் பெற்று வாழும்படி ஆசீர்வதித்தார். ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்’ என அவர்களிடம் சொன்னார். (ஆதியாகமம் 1:26-28; 2:18, 21-24) இது வெறும் ஒரு கற்பனைக்கதையோ கட்டுக்கதையோ அல்ல, ஏனெனில் ஆதியாகமப் புத்தகத்தில் குடும்ப வாழ்க்கையின் ஆரம்பத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பது உண்மையென்று இயேசுவே காண்பித்தார். (மத்தேயு 19:4, 5) ஆனால் நாம் இன்று ஏராளமான பிரச்சினைகளை எதிர்ப்பட்டு வருகிறோம், கடவுள் ஆரம்பத்தில் நினைத்தது போல் நம்முடைய வாழ்க்கை இல்லை. என்றாலும், சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை நம்மால் அனுபவிக்க முடியும், எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

4. (அ) குடும்பத்தின் சந்தோஷத்திற்குக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் எப்படி உதவலாம்? (ஆ) இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிப் படிப்பது சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு ஏன் மிக அவசியம்?

4 அன்பைப் பொழிவதில் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் கடவுளைப் போல நடந்துகொள்ளும்போது குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். (எபேசியர் 5:1, 2) ஆனால், கடவுளை நாம் பார்க்கக்கூட முடியாதிருக்கையில், நம்மால் எப்படி அவரைப் போல நடந்துகொள்ள முடியும்? யெகோவா தம்முடைய முதற்பேறான குமாரனைப் பரலோகத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைத்ததால், அவர் செயல்படும் விதத்தை அந்தக் குமாரனின் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. (யோவான் 1:14, 18) அந்தக் குமாரனான இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது தம்முடைய பரலோகப் பிதாவைப் போலவே நடந்துகொண்டதால், அவரைப் பார்த்ததும் அவர் பேசுவதைக் கேட்டதும் யெகோவா தேவனோடு இருந்ததைப் போலவும் அவர் பேசுவதைக் கேட்டதைப் போலவுமே இருந்தது. (யோவான் 14:9) ஆகையால், இயேசு காண்பித்த அன்பைப் பற்றிக் கற்றுக்கொள்வதன் மூலமும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலமும் நாம் ஒவ்வொருவருமே குடும்ப வாழ்க்கையைச் சந்தோஷமாக ஆக்கலாம்.

கணவர்களுக்கு ஒரு முன்மாதிரி

5, 6. (அ) சபையை இயேசு நடத்துகிற விதம் கணவர்களுக்கு எப்படி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது? (ஆ) பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

5 இயேசு தம்முடைய சீஷர்களை எப்படி நடத்தினாரோ அப்படியே கணவர்களும் தங்கள் மனைவிகளை நடத்த வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. பைபிள் தரும் இந்த வழிநடத்துதலைச் சிந்தித்துப் பாருங்கள்: ‘புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத் தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.’—எபேசியர் 5:23, 25-29.

6 தமது சீஷர்கள் மீது இயேசு வைத்திருந்த அன்பு, கணவர்களுக்கு ஒரு பரிபூரண முன்மாதிரியாகத் திகழ்கிறது. தம்முடைய சீஷர்கள் அபூரணர்களாய் இருந்தபோதிலும் இயேசு “முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்,” அவர்களுக்காக தமது உயிரையே தியாகம் செய்தார். (யோவான் 13:1; 15:13) அதேபோல, “உங்கள் மனைவிகளில் [“தொடர்ந்து,” NW] அன்புகூருங்கள், அவர்கள் மேல் கசந்து கொள்ளாதிருங்கள்” என கணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். (கொலோசெயர் 3:19) குறிப்பாக மனைவி விவேகமாக நடந்துகொள்ளத் தவறும் சமயங்களில் இந்த ஆலோசனையைக் கடைப்பிடிக்க எது ஒரு கணவனுக்கு உதவும்? தானும்கூட தவறுகள் செய்வதை அவர் நினைத்துப் பார்ப்பது அவசியம்; அதுமட்டுமல்ல, கடவுளுடைய மன்னிப்பைப் பெற தான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் நினைத்துப் பார்ப்பது அவசியம். அவர் என்ன செய்ய வேண்டும்? தனக்கு விரோதமாகப் பாவம் செய்பவர்களை மன்னிக்க வேண்டும், தன்னுடைய மனைவியையும் சேர்த்துத்தான். அதேபோல, அந்த மனைவியும் அவரை மன்னிக்க வேண்டும். (மத்தேயு 6:12, 14, 15) ‘மன்னிக்கும் இரு மனங்களின் சங்கமமே மகிழ்ச்சி பொங்கும் மண வாழ்க்கை’ என்று சிலர் ஏன் சொல்லியிருக்கிறார்கள் என இப்போது உங்களுக்குப் புரிகிறதா?

7. இயேசு எதைக் கவனத்தில் வைத்தார், இதன் மூலம் கணவர்களுக்கு என்ன முன்மாதிரி வைத்தார்?

7 இயேசு எப்போதுமே தம் சீஷர்களுக்குக் கரிசனை காண்பித்தார் என்பதையும் கணவர்கள் நினைவில் வைக்க வேண்டும். சீஷர்களுடைய வரையறைகளையும் சரீரத் தேவைகளையும் அவர் கவனத்தில் வைத்தார். உதாரணமாக, அவர்கள் களைப்படைந்தபோது, “வனாந்தரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள்” என்று அவர் கூறினார். (மாற்கு 6:30-32) அத்தகைய தனிப்பட்ட கவனிப்பைப் பெற மனைவிகளும்கூட தகுதியானவர்களே. அவர்களைப் ‘பலவீன பாண்டங்கள்’ என பைபிள் விவரிக்கிறது, அதோடு அவர்களுக்குரிய ‘கனத்தைக்’ கொடுக்கும்படியும் கணவர்களுக்கு அது கட்டளையிடுகிறது. ஏன்? ஏனெனில் கணவன், மனைவி ஆகிய இரு தரப்பினருமே “ஜீவனாகிய கிருபையைச்” சேர்ந்து சுதந்தரித்துக்கொள்ளப் போகிறார்கள். (1 பேதுரு 3:7) கடவுளுடைய கண்களில் ஒரு நபரை அருமையானவராக ஆக்குவது அவர் ஆணா பெண்ணா என்பதல்ல, ஆனால் அந்த நபருடைய உண்மைத்தன்மையே என்பதைக் கணவர்கள் மனதில் வைக்க வேண்டும்.—சங்கீதம் 101:6.

8. (அ) “தன் மனைவியில் அன்புகூருகிற” ஒரு கணவன் எப்படி “தன்னில்தான் அன்புகூருகிறான்”? (ஆ) கணவனும் மனைவியும் ‘ஒரே மாம்சமாயிருப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது?

8 “தன் மனைவியில் அன்புகூருகிற” ஒரு கணவன் “தன்னில்தான் அன்புகூருகிறான்” என பைபிள் சொல்கிறது. ஏனென்றால் இயேசு குறிப்பிட்டபடி, ‘அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.’ (மத்தேயு 19:6) எனவே, அவர்கள் இருவரும் தங்களுக்குள் மட்டுமே பாலியல் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 5:15-21; எபிரெயர் 13:4) சுயநலமற்ற விதத்தில் ஒருவர் மற்றொருவருடைய தேவைகளுக்குக் கரிசனை காட்டுவதன் மூலம் அதைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். (1 கொரிந்தியர் 7:3-5) இந்த முக்கிய நினைப்பூட்டுதலைக் கவனியுங்கள்: ‘தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லை; ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.’ ஆகையால், கணவர்கள் தங்களுடைய தலைவரான இயேசு கிறிஸ்துவுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து, தங்களை நேசிப்பது போல தங்கள் மனைவிகளை நேசிக்க வேண்டும்.—எபேசியர் 5:29; 1 கொரிந்தியர் 11:3.

9. பிலிப்பியர் 1:8-⁠ல், இயேசுவுடைய எந்தக் குணம் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்தக் குணத்தை கணவர்கள் தங்கள் மனைவிகளிடத்தில் ஏன் காண்பிக்க வேண்டும்?

9 ‘இயேசு கிறிஸ்துவின் உருக்கமான அன்பைப்’ பற்றி, அதாவது கனிவைப் பற்றி, அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (பிலிப்பியர் 1:8) அவருடைய கனிவான குணம் புத்துணர்ச்சி அளித்தது; அந்தக் குணம் அவரைப் பின்பற்றிய பெண்களின் மனதைக் கவர்ந்தது. (யோவான் 20:1, 11-13, 16) அத்தகைய கனிவை கணவர்கள் காண்பிக்க வேண்டுமென மனைவிகள் ஏங்குகிறார்கள்.

மனைவிகளுக்கு ஒரு முன்மாதிரி

10. மனைவிகளுக்கு இயேசு எப்படிப்பட்ட முன்மாதிரி வைக்கிறார்?

10 குடும்பம் என்பது ஓர் அமைப்பாகும், எனவே எல்லாக் காரியங்களும் சுமுகமாக நடைபெற அதற்கு ஒரு தலைவர் தேவை. இயேசுவுக்கும்கூட ஒரு தலைவர் இருக்கிறார், அவருக்கு இவர் கீழ்ப்பட்டு நடக்கிறார். ஆம், ‘ஒரு ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறது’ போல ‘கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறார்.’ (1 கொரிந்தியர் 11:3) கடவுளுடைய தலைமை ஸ்தானத்திற்கு இயேசு கீழ்ப்பட்டிருப்பது நமக்கு அருமையான ஒரு முன்மாதிரி, ஏனென்றால் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவர் இருக்கிறார்.

11. ஒரு மனைவிக்கு தன் கணவனைக் குறித்து என்ன மனப்பான்மை இருக்க வேண்டும், அவளுடைய நடத்தையால் என்ன பயன் உண்டாகலாம்?

11 அபூரணத்தன்மையுள்ள ஆண்கள் தவறு செய்துவிடுகிறார்கள், சிறந்த குடும்பத் தலைவர்களாக இருக்கவும் அடிக்கடி தவறிவிடுகிறார்கள். அப்படியானால், ஒரு மனைவி என்ன செய்ய வேண்டும்? தன் கணவன் ஏதோவொன்றைச் செய்யும்போது அவரை மட்டம்தட்டக் கூடாது அல்லது அவருடைய தலைமை ஸ்தானத்தை அபகரித்துக்கொள்ளக் கூடாது. கடவுளுடைய பார்வையில், சாந்தமும் அமைதலுமுள்ள குணமே பெருமதிப்பு வாய்ந்தது என்பதை ஒரு மனைவி ஞாபகத்தில் வைக்க வேண்டும். (1 பேதுரு 3:4) அத்தகைய குணமிருந்தால், கஷ்டமான சூழ்நிலைகளில்கூட கடவுளுக்குக் கீழ்ப்பட்டு நடப்பது அவளுக்கு எளிதாக இருக்கும். அதுமட்டுமல்ல, ‘மனைவி புருஷனிடத்தில் பயபக்தியாய் இருக்கக்கடவள் [அதாவது, ஆழ்ந்த மரியாதை காண்பிக்கக்கடவள்]’ என பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:33) ஆனால் அந்தப் புருஷன், கிறிஸ்துவைத் தன் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? மனைவிகளை பைபிள் இவ்வாறு ஊக்குவிக்கிறது: ‘உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய [அதாவது, ஆழ்ந்த மரியாதையோடுகூடிய] உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்.’—1 பேதுரு 3:1, 2.

12. மனைவி தன்னுடைய கருத்துகளை மரியாதையுடன் தெரிவிப்பது ஏன் தவறல்ல?

12 கணவன் ஒரு விசுவாசியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மனைவிக்கு வேறுபட்ட கருத்துகள் இருந்தால், அவற்றை நாசூக்காக அவரிடம் அவள் தெரிவிக்கலாம்; அப்படித் தெரிவிப்பது அவமரியாதை காட்டுவதாய் இருக்காது. சொல்லப்போனால் அவளுடைய கருத்து சரியானதாக இருக்கலாம், கணவன் அவளுடைய சொல்லைக் கேட்பது முழு குடும்பத்துக்கும்கூட நன்மை பயக்கலாம். ஏதோவொரு வீட்டுப் பிரச்சினை எழுந்தபோது ஆபிரகாமிடம் சாராள் நடைமுறை தீர்வைச் சொன்னாள், ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும், ‘அவள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்’ என ஆபிரகாமிடம் கடவுள் கூறினார். (ஆதியாகமம் 21:9-12) ஆனால், கடவுளுடைய சட்டத்திற்கு முரண்படாத விதத்தில் கணவன் ஒரு முடிவை எடுக்கும்போது, மனைவி அதை ஆதரிப்பதன் மூலம் தன்னுடைய கீழ்ப்படிதலைக் காண்பிக்கிறாள்.—அப்போஸ்தலர் 5:29; எபேசியர் 5:24.

மனைவிகளுக்கு சாராள் என்ன அருமையான முன்மாதிரி வைத்தாள்?

13. (அ) எப்படி நடந்துகொள்ளும்படி தீத்து 2:4, 5 மணமான பெண்களை ஊக்குவிக்கிறது? (ஆ) பிரிந்து வாழ்வதைப் பற்றியும் விவாகரத்தைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது?

13 குடும்பத்தைக் கவனிப்பதில் ஒரு மனைவி பல்வேறு விதங்களில் தன் பங்கை வகிக்கலாம். உதாரணத்திற்கு, மணமான பெண்கள், ‘தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்க’ வேண்டுமென பைபிள் காண்பிக்கிறது. (தீத்து 2:4, 5) இவ்விதத்தில் மனைவியாகவும் தாயாகவும் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, குடும்பத்தாரின் அன்பும் மரியாதையும் எப்போதுமே கிடைக்கும். (நீதிமொழிகள் 31:10, 28, 29) இரு அபூரணர்கள் ஒன்று சேருவதே திருமணம் என்பதால் சமாளிக்க முடியாத சில சூழ்நிலைகள் உருவாகையில், பிரிந்து வாழவோ விவாகரத்து செய்யவோ நேரிடலாம். குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் தம்பதிகள் பிரிந்து வாழ்வதை பைபிள் அனுமதிக்கிறது. என்றாலும், சிறு சிறு விஷயங்களையெல்லாம் காரணம்காட்டி தம்பதிகள் பிரிந்து போகக்கூடாது, ஏனெனில் பைபிள் இவ்வாறு அறிவுறுத்துகிறது: “மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்து போகக் கூடாது . . . புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக் கூடாது.” (1 கொரிந்தியர் 7:10, 11) தம்பதியரில் ஒருவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்தால் மட்டுமே விவாகரத்து செய்துகொள்ள பைபிள் அனுமதிக்கிறது.—மத்தேயு 19:9.

பெற்றோர்களுக்கு ஒரு பரிபூரண முன்மாதிரி

14. பிள்ளைகளை இயேசு எவ்வாறு நடத்தினார், பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு என்ன தேவைப்படுகிறது?

14 பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டுமென்ற விஷயத்தில் பெற்றோர்களுக்கு இயேசு பரிபூரண முன்மாதிரி வைத்தார். சிறு பிள்ளைகளைத் தம்மிடம் வரவிடாதபடி மற்றவர்கள் தடுத்தபோது, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்” என அவர் கூறினார். அதன் பிறகு “அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்” என பைபிள் சொல்கிறது. (மாற்கு 10:13-16) சிறு பிள்ளைகளோடு இயேசுவே நேரம் செலவிட்டாரென்றால், நீங்களும்கூட உங்களுடைய மகன்களோடும் மகள்களோடும் நேரம் செலவிட வேண்டும், அல்லவா? அவ்வப்போது கொஞ்ச நேரம் மட்டுமே நீங்கள் அவர்களோடு இருந்தால் போதாது, நிறைய நேரம் அவர்களோடு செலவிட வேண்டும். நேரமெடுத்து நீங்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும், அதைத்தான் பெற்றோர்களாகிய உங்களுக்கு யெகோவா கட்டளையிடுகிறார்.—உபாகமம் 6:4-9.

15. தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

15 இப்போது உலகம் நாளுக்கு நாள் பொல்லாததாக ஆகிவருகிறது. ஆகவே, பிள்ளைகளுக்குத் தீங்கிழைக்கிற ஆட்களிடமிருந்து, முக்கியமாக, பிள்ளைகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்கிற காம வெறியர்களிடமிருந்து அவர்களைப் பெற்றோர்கள் பாதுகாக்க வேண்டும். “பிள்ளைகளே” என்று தமது சீஷர்களைப் பாசமாக அழைத்த இயேசு, அவர்களை எப்படிப் பாதுகாத்தார் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அவர் கைதுசெய்யப்பட்டு, சீக்கிரத்தில் கொலை செய்யப்படவிருந்த வேளையில், சீஷர்கள் தப்பித்துப் போவதற்காக வழி செய்தார். (யோவான் 13:33; 18:7-9) உங்கள் பிள்ளைகளுக்குத் தீங்கிழைக்க பிசாசு எடுக்கும் முயற்சிகளைக் குறித்து பெற்றோர்களாகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். முன்கூட்டியே அவர்களை எச்சரித்து வைக்க வேண்டும். * (1 பேதுரு 5:8) சரீர, ஆன்மீக, ஒழுக்க ரீதியில் அவர்களுடைய பாதுகாப்பு முன் எப்போதையும்விட இப்போது ஆபத்திலிருக்கிறது.

பிள்ளைகளை இயேசு நடத்திய விதத்திலிருந்து பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

16. தமது சீஷர்கள் பல தவறுகள் செய்தபோதிலும் இயேசு அவர்களை நடத்திய விதத்திலிருந்து பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

16 இயேசு இறப்பதற்கு முந்தின இரவன்று, அவருடைய சீஷர்கள் தங்களில் யார் பெரியவர் என்று சண்டை போட்டுக்கொண்டார்கள். அவர்கள் மீது கோபப்படுவதற்குப் பதிலாக, இயேசு தம்முடைய வார்த்தையாலும் முன்மாதிரியாலும் தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். (லூக்கா 22:24-27; யோவான் 13:3-8) நீங்கள் ஒரு பெற்றோர் என்றால், உங்கள் பிள்ளைகளைத் திருத்தும்போது இயேசுவின் முன்மாதிரியை எவ்வாறு பின்பற்றலாம் என்பது உங்களுக்குப் பிடிபடுகிறதா? உண்மைதான், அவர்களைக் கண்டிப்பது அவசியமே, ஆனால் “மட்டாய்” கண்டிக்க வேண்டும், அதாவது அளவோடு கண்டிக்க வேண்டும், அதுவும் கோபத்தோடு கண்டிக்கக் கூடாது. “பட்டயக் குத்துகள் போல்” யோசிக்காமல் வார்த்தைகளை வீசிவிடாதபடி கவனமாய் இருக்க வேண்டும். (எரேமியா 30:11; நீதிமொழிகள் 12:18) அப்படிக் கண்டித்தது தனக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருந்தது என்பதைப் பிள்ளை பிற்பாடு புரிந்துகொள்ளும் விதத்தில் அந்தச் சிட்சை கொடுக்கப்பட வேண்டும்.—எபேசியர் 6:4; எபிரெயர் 12:9-11.

பிள்ளைகளுக்கு ஒரு முன்மாதிரி

17. பிள்ளைகளுக்கு இயேசு எவ்விதத்தில் ஒரு பரிபூரண முன்மாதிரி வைத்தார்?

17 இயேசுவைப் பார்த்து பிள்ளைகள் கற்றுக்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும்! பெற்றோர்களுக்கு எப்படிக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை இயேசு தம்முடைய சொந்த முன்மாதிரியின் மூலம் காண்பித்தார். “என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்” என அவர் கூறினார். அதுமட்டுமல்ல, ‘பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்’ என்றும் அவர் கூறினார். (யோவான் 8:28, 29) இயேசு தம்முடைய பரலோகத் தந்தைக்கு எப்போதும் கீழ்ப்பட்டிருந்தார், பிள்ளைகளும் அவ்வாறே தங்கள் பெற்றோர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென பைபிள் சொல்கிறது. (எபேசியர் 6:1-3) இயேசு ஒரு பரிபூரண பிள்ளையாக இருந்தபோதிலும், தம் அபூரண பெற்றோரான யோசேப்புக்கும் மரியாளுக்கும் கீழ்ப்பட்டிருந்தார். நிச்சயமாகவே அது இயேசுவின் குடும்பத்திலிருந்த ஒவ்வொருவருக்கும் சந்தோஷத்தை அளித்தது!—லூக்கா 2:4, 5, 51, 52.

18. இயேசு ஏன் எப்போதும் தம்முடைய பரலோகத் தந்தைக்குக் கீழ்ப்படிந்திருந்தார், இன்று பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் கீழ்ப்படிந்திருக்கும்போது யார் மகிழ்வார்கள்?

18 எந்தெந்த வழிகளில் இயேசுவைப் போலவே நடந்துகொண்டு, தங்கள் பெற்றோர்களுடைய மனதைச் சந்தோஷப்படுத்த முடியும் என்பது பிள்ளைகளுக்கு விளங்குகிறதா? தங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கீழ்ப்படிவது கஷ்டமென சிலசமயம் பிள்ளைகள் நினைப்பது உண்மைதான், என்றாலும் பிள்ளைகள் அப்படிக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே கடவுளுடைய விருப்பம். (நீதிமொழிகள் 1:8; 6:20) இயேசு எப்போதும் தம்முடைய பரலோகத் தந்தைக்குக் கீழ்ப்படிந்திருந்தார், கஷ்டமான சூழ்நிலைகளில்கூட கீழ்ப்படிந்திருந்தார். வெகு கடினமான ஒரு காரியத்தை இயேசு செய்ய வேண்டும் என்பது ஒருமுறை கடவுளுடைய சித்தமாக இருந்தபோது, “இந்தப் பாத்திரம் [கடவுள் எதிர்பார்க்கிற ஒரு காரியம்] என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்” என இயேசு ஜெபம் செய்தார். என்றபோதிலும், தமக்கு எது மிகச் சிறந்ததென்று தம்முடைய பிதாவுக்குத் தெரியும் என்பதை உணர்ந்துகொண்டு, அவர் சொன்னபடியே அதைச் செய்து முடித்தார். (லூக்கா 22:42) பிள்ளைகள் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்வதன் மூலம் தங்கள் பெற்றோர்களை மகிழ்விப்பார்கள், அதோடு தங்கள் பரலோகத் தந்தையையும் மகிழ்விப்பார்கள். *நீதிமொழிகள் 23:22-25.

சோதனைகள் வரும்போது பிள்ளைகள் எதை யோசித்துப் பார்க்க வேண்டும்?

19. (அ) பிள்ளைகளைச் சாத்தான் எப்படிச் சோதிக்கிறான்? (ஆ) பிள்ளைகள் ஒழுக்கம் தவறி நடக்கும்போது பெற்றோர்கள் எப்படிப் பாதிக்கப்படலாம்?

19 தவறான காரியத்தைச் செய்வதற்கு இயேசுவையே பிசாசாகிய சாத்தான் சோதித்தானென்றால், இன்றைய பிள்ளைகளையும்கூட சோதிப்பான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. (மத்தேயு 4:1-10) அவன் மற்ற பிள்ளைகளைப் பயன்படுத்தி, எதிர்ப்பதற்குக் கடினமான அழுத்தங்களை அவர்களுக்குக் கொடுக்கிறான். அப்படியானால், கெட்டவர்களுடன் பிள்ளைகள் சகவாசம் வைத்துக் கொள்ளாதிருப்பது எவ்வளவு முக்கியம்! (1 கொரிந்தியர் 15:33) யாக்கோபுவின் மகள் தீனாள், யெகோவாவை வணங்காதவர்களுடன் சகவாசம் வைத்தாள், இதனால் பிற்பாடு ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்தன. (ஆதியாகமம் 34:1, 2) குடும்பத்திலுள்ள ஒரு நபர் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டால், அந்தக் குடும்பம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!—நீதிமொழிகள் 17:21, 25.

சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு முக்கிய வழி

20. சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்?

20 பைபிள் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கும்போது குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிப்பது எளிதாகிறது. சொல்லப்போனால், அத்தகைய ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். ஆக கணவர்களே, உங்கள் மனைவிகளை நேசியுங்கள், இயேசு தம் சபையை நடத்துவது போல அவளை நடத்துங்கள். மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கீழ்ப்படியுங்கள்; நீதிமொழிகள் 31:10-31-⁠ல் விவரிக்கப்பட்டுள்ள குணசாலியான மனைவியின் உதாரணத்தைப் பின்பற்றுங்கள். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவியுங்கள். (நீதிமொழிகள் 22:6) தகப்பன்மார்களே, உங்கள் ‘சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துங்கள்.’ (1 தீமோத்தேயு 3:4, 5; 5:8) பிள்ளைகளே, உங்கள் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். (கொலோசெயர் 3:20) குடும்பத்தில் யாருமே பரிபூரணர் கிடையாது, எல்லாருமே தவறு செய்பவர்கள்தான். எனவே, மனத்தாழ்மையோடு ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள்.

21. என்ன மகத்தான எதிர்பார்ப்புகள் நமக்கு உள்ளன, சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை இப்போதே நாம் எப்படி அனுபவிக்கலாம்?

21 ஆம், குடும்ப வாழ்க்கை பற்றிய விலைமதிக்க முடியாத ஆலோசனைகளும் அறிவுரைகளும் பைபிளில் ஏராளமாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல, கடவுளுடைய புதிய உலகம் பற்றிய விஷயங்களும் யெகோவாவை வணங்குகிற சந்தோஷமான மக்கள் நிறைந்த பரதீஸ் பூமி பற்றிய விஷயங்களும் பைபிளில் இருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 21:3, 4) எப்பேர்ப்பட்ட மகத்தான எதிர்பார்ப்புகள்! கடவுளுடைய வார்த்தையான பைபிளிலுள்ள அறிவுரைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் வருங்காலத்தில் மட்டுமல்ல, இப்போதேகூட நாம் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

^ பாரா. 15 பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு உதவும் ஆலோசனைகளை பெரிய போதகரிடமிருந்து கற்றுக்கொள் என்ற புத்தகத்தின் 32-⁠ம் அதிகாரத்தில் காணலாம். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

^ பாரா. 18 கடவுளுடைய சட்டத்தை மீறும்படி அம்மாவோ அப்பாவோ பிள்ளையிடம் சொல்லும்போது மட்டுமே அந்தப் பிள்ளை அவர்களுக்குக் கீழ்ப்படியத் தேவையில்லை.​—⁠அப்போஸ்தலர் 5:29.