Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பதினெட்டு

முழுக்காட்டுதலும் கடவுளோடுள்ள உங்கள் பந்தமும்

முழுக்காட்டுதலும் கடவுளோடுள்ள உங்கள் பந்தமும்
  • கிறிஸ்தவ முழுக்காட்டுதல் எப்படிக் கொடுக்கப்படுகிறது?

  • முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன் என்னென்ன படிகளை நீங்கள் எடுக்க வேண்டும்?

  • ஒரு நபர் கடவுளுக்குத் தன்னை எவ்வாறு ஒப்புக்கொடுக்கிறார்?

  • முழுக்காட்டப்படுவதற்கு விசேஷ காரணம் என்ன?

1. தன்னை முழுக்காட்டும்படி எத்தியோப்பிய மந்திரி ஏன் கேட்டுக்கொண்டார்?

“இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் [அதாவது, முழுக்காட்டுதல்] பெறுகிறதற்குத் தடையென்ன?” முதல் நூற்றாண்டிலிருந்த எத்தியோப்பிய மந்திரி ஒருவர் கேட்ட கேள்விதான் இது. இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை கிறிஸ்தவரான பிலிப்பு அவருக்கு நிரூபித்துக் காட்டியிருந்தார். வேத வசனங்களிலிருந்து கற்றுக்கொண்ட காரியங்கள் அந்த எத்தியோப்பிய மனிதனின் இதயத்தை ஆழமாகத் தொட்டதால், கற்றுக்கொண்டதற்கு இசைவாக அவர் உடனே செயல்பட்டார். தன்னை முழுக்காட்டும்படி கேட்டுக்கொண்டார்!—அப்போஸ்தலர் 8:26-36.

2. முழுக்காட்டுதல் பெறுவதைக் குறித்து நீங்கள் ஏன் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

2 இந்தப் புத்தகத்தின் ஆரம்ப அதிகாரங்களை யெகோவாவின் சாட்சி ஒருவரோடு சேர்ந்து நீங்கள் கவனமாகப் படித்திருந்தால், ‘முழுக்காட்டுதல் பெறுவதற்கு இனி எனக்கு என்ன தடை?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளத் தோன்றலாம். இதுவரை, பரதீஸில் நித்திய ஜீவன் கிடைக்குமென்ற பைபிளின் வாக்குறுதியைப் பற்றி நீங்கள் கற்றிருப்பீர்கள். (லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 21:3, 4) இறந்தவர்களின் உண்மையான நிலையைக் குறித்தும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைக் குறித்தும் கற்றிருப்பீர்கள். (பிரசங்கி 9:5; யோவான் 5:28, 29) யெகோவாவின் சாட்சிகளுடைய சபை கூட்டங்களிலும் கலந்துகொண்டு, உண்மை வணக்கத்தை அவர்கள் எப்படிக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதையும் ஒருவேளை கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள். (யோவான் 13:35) மிக முக்கியமாக, யெகோவா தேவனோடு தனிப்பட்ட பந்தத்தை வளர்த்துக்கொள்ளவும் ஆரம்பித்திருப்பீர்கள்.

3. (அ) இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு என்ன கட்டளை கொடுத்தார்? (ஆ) தண்ணீர் முழுக்காட்டுதல் எப்படிக் கொடுக்கப்படுகிறது?

3 கடவுளுக்குச் சேவை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் எவ்வாறு காண்பிக்கலாம்? இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம்: ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுங்கள்’ என்று சொன்னார். (மத்தேயு 28:19) நமக்கு ஒரு முன்மாதிரியாக, இயேசு தாமே தண்ணீரில் முழுக்காட்டப்பட்டார். முழுக்காட்டுதலின்போது அவர் மீது வெறுமனே தண்ணீர் தெளிக்கப்படவில்லை, அல்லது அவர் தலையில் ஏதோ கொஞ்சம் தண்ணீர் ஊற்றப்படவில்லை. (மத்தேயு 3:16) “முழுக்காட்டுதல்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை “முக்கியெடுத்தல்” என்ற அர்த்தமுடைய கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. ஆகவே, கிறிஸ்தவ முழுக்காட்டுதல் என்பது தண்ணீரில் முழுமையாக முக்கி எடுப்பதை, அதாவது அமிழ்த்தி எடுப்பதை அர்த்தப்படுத்துகிறது.

4. தண்ணீர் முழுக்காட்டுதல் எதைச் சுட்டிக்காட்டுகிறது?

4 யெகோவா தேவனோடு ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள் கட்டாயம் தண்ணீர் முழுக்காட்டுதல் பெற வேண்டும். கடவுளுக்குச் சேவை செய்ய நீங்கள் மனதார ஆசைப்படுகிறீர்கள் என்பதை முழுக்காட்டுதல் வெளியரங்கமாகக் காட்டுகிறது. யெகோவாவுக்குப் பிரியமான காரியங்களைச் செய்வதில் நீங்கள் அகமகிழ்கிறீர்கள் என்பதையும் காட்டுகிறது. (சங்கீதம் 40:7, 8) ஆனால், முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன் குறிப்பிட்ட சில படிகளை நீங்கள் எடுத்தாக வேண்டும்.

அறிவும் விசுவாசமும் தேவை

5. (அ) முழுக்காட்டுதலுக்கு முன் எடுக்க வேண்டிய முதல் படி என்ன? (ஆ) கிறிஸ்தவ சபை கூட்டங்கள் ஏன் முக்கியமானவை?

5 முதல் படியை நீங்கள் ஏற்கெனவே எடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள். எப்படி? யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவைப் பெற்று வருவதன் மூலமாகும்; இந்த அறிவை ஒருவேளை முறைப்படி பைபிளைப் படித்துப் பெற்றிருப்பீர்கள். (யோவான் 17:3, NW) என்றாலும், தெரிந்துகொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. ‘தேவனுடைய சித்தத்தை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவினாலே நிரப்பப்பட’ வேண்டுமென கிறிஸ்தவர்கள் விரும்புகிறார்கள். (கொலோசெயர் 1:9) இதற்கு, யெகோவாவின் சாட்சிகளுடைய சபை கூட்டங்களில் கலந்துகொள்வது உங்களுக்கு அதிக உதவியாக இருக்கும். அவற்றில் தவறாமல் கலந்துகொள்வது மிகவும் முக்கியம். (எபிரெயர் 10:24, 25) அப்படிச் செய்வது கடவுளைப் பற்றிய அறிவிலே அதிகமதிகமாக வளர உங்களுக்கு உதவும்.

கடவுளுடைய வார்த்தையிலிருந்து திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்வது முழுக்காட்டுதலுக்குத் தயாராவதற்கான ஒரு முக்கிய படியாகும்

6. முழுக்காட்டுதலுக்கு முன், உங்களுக்கு எந்தளவு பைபிள் அறிவு இருக்க வேண்டும்?

6 ஆனால், பைபிளிலுள்ள விஷயங்களை ஒன்றுவிடாமல் தெரிந்து வைத்திருந்தால்தான் முழுக்காட்டுதல் பெற முடியுமென்று அர்த்தமல்ல. எத்தியோப்பிய மந்திரிக்குக் கடவுளைப் பற்றி ஓரளவு அறிவு இருந்தது, என்றாலும் வேத வசனங்களின் சில பாகங்களைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவி தேவைப்பட்டது. (அப்போஸ்தலர் 8:30, 31) அதுபோல, உங்களுக்கும்கூட கற்றுக்கொள்வதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. சொல்லப்போனால், கடவுளைப் பற்றி நித்திய காலத்திற்கு நீங்கள் கற்றுக்கொண்டே இருக்கலாம். (பிரசங்கி 3:11, NW) ஆனால், முழுக்காட்டுதலுக்கு முன், பைபிளின் அடிப்படை போதனைகளை மட்டுமாவது அறிந்து அவற்றை நீங்கள் மனதார ஏற்றிருக்க வேண்டும். (எபிரெயர் 5:12) உதாரணத்திற்கு, இறந்தோரின் நிலையைக் குறித்த உண்மை, கடவுளுடைய பெயரின் முக்கியத்துவம், அவருடைய ராஜ்யத்தின் முக்கியத்துவம் போன்றவற்றை அறிந்து, அவற்றை நீங்கள் மனதார ஏற்றிருக்க வேண்டும்.

7. பைபிள் படிப்பு என்ன செய்ய உங்களுக்கு உதவும்?

7 என்றாலும், அறிவு மட்டுமே போதாது, ஏனெனில் ‘விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியமாகும்.’ (எபிரெயர் 11:6) பூர்வ கொரிந்து பட்டணத்திலிருந்த சிலர், கிறிஸ்தவர்கள் பிரசங்கித்த செய்தியைக் கேட்டபோது, “விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.” (அப்போஸ்தலர் 18:8) அவ்வாறே, பைபிள்தான் கடவுளுடைய வார்த்தை என்று விசுவாசிக்க இந்த பைபிள் படிப்பு உங்களுக்கு உதவும். அதுமட்டுல்ல, கடவுளுடைய வாக்குறுதிகளிலும், இயேசுவுடைய பலியின் இரட்சிக்கும் வல்லமையிலும் நீங்கள் விசுவாசம் வைக்க இந்த பைபிள் படிப்பு உங்களுக்கு உதவும்.—யோசுவா 23:14; அப்போஸ்தலர் 4:12; 2 தீமோத்தேயு 3:16, 17.

பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குச் சொல்லுதல்

8. நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் பேசுவதற்கு எது உங்களைத் தூண்டும்?

8 உங்கள் இருதயத்தில் விசுவாசம் வளர வளர, கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது. (எரேமியா 20:9) ஆம், கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு நீங்கள் பலமாகத் தூண்டப்படுவீர்கள்.​—⁠2 கொரிந்தியர் 4:13.

நீங்கள் நம்புகிற விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்ல விசுவாசம் உங்களைத் தூண்டும்

9, 10. (அ) பைபிள் சத்தியங்களை முதலில் நீங்கள் யாருக்குச் சொல்ல ஆரம்பிக்கலாம்? (ஆ) யெகோவாவின் சாட்சிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழிய வேலையில் பங்குகொள்ள விரும்பினால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

9 முதலில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், சக வேலையாட்கள் ஆகியோருடன் பைபிள் சத்தியங்களைப் பற்றி நீங்கள் பக்குவமாகப் பேச ஆரம்பிக்கலாம். அதன் பிறகு, யெகோவாவின் சாட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் பிரசங்க வேலையில் பங்குகொள்ள நீங்கள் விரும்பலாம். அப்படி விரும்பினால், உங்களுக்கு பைபிள் படிப்பு நடத்துகிறவரிடம் அதைத் தயங்காமல் சொல்லுங்கள். பிரசங்க ஊழியத்திற்கு நீங்கள் தயாராக இருப்பது அவருக்குத் தெரிந்தால், சபையிலுள்ள இரண்டு மூப்பர்கள் உங்களையும் அவரையும் ஒன்றாகச் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்வார்.

10 இப்படிச் சந்திக்கையில், கடவுளுடைய மந்தையை மேய்க்கிற கிறிஸ்தவ மூப்பர்கள் சிலரோடு இன்னும் நன்கு அறிமுகமாக உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும். (அப்போஸ்தலர் 20:28; 1 பேதுரு 5:2, 3) அடிப்படை பைபிள் போதனைகளை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதையும், அவற்றை நம்புவதையும், கடவுளுடைய நியமங்களுக்கு இசைவாக வாழ்வதையும், ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்க உண்மையிலேயே விரும்புவதையும் இந்த மூப்பர்கள் கண்டால், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக பிரசங்க ஊழியத்தில் நீங்கள் பங்குகொள்ளலாம் என உங்களிடம் தெரிவிப்பார்கள்.

11. பிரசங்க வேலையில் பங்குகொள்வதற்கு முன் என்னென்ன மாற்றங்களைச் சிலர் செய்ய வேண்டியிருக்கலாம்?

11 இல்லையென்றால், அந்த மூப்பர்களின் ஆலோசனைப்படி பிரசங்க வேலையில் பங்குகொள்வதற்கு முன் உங்களுடைய வாழ்க்கைப் பாணியிலும் பழக்கவழக்கங்களிலும் நீங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். யாருக்கும் தெரியாமல் செய்துவருகிற சில கெட்ட பழக்கங்களைக்கூட நீங்கள் நிறுத்த வேண்டியிருக்கலாம். எனவே, முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபியாக வேண்டுமென கேட்பதற்கு முன், பாலியல் ஒழுக்கக்கேடு, குடிவெறி, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற வினைமையான பாவங்களில் நீங்கள் ஈடுபடாதிருக்க வேண்டும்.—1 கொரிந்தியர் 6:9, 10; கலாத்தியர் 5:19-21.

மனந்திரும்புதலும் வாழ்க்கையை மாற்றியமைத்தலும்

12. மனந்திரும்புவது ஏன் அவசியம்?

12 முழுக்காட்டுதலுக்கு முன் வேறு சில படிகளையும் நீங்கள் எடுக்க வேண்டும். அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு சொன்னார்: “உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.” (அப்போஸ்தலர் 3:20) மனந்திரும்புவது என்பது நீங்கள் செய்த ஏதோவொரு காரியத்திற்காக உள்ளப்பூர்வமாய் வருத்தப்படுவதாகும். ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்ந்த ஒருவர் மனந்திரும்புவது பொருத்தமானதே, என்றாலும் ஒழுக்கரீதியில் ஓரளவு சுத்தமான வாழ்க்கை வாழ்கிற நபரும்கூட மனந்திரும்புவது அவசியமாக இருக்கிறது. ஏன்? ஏனென்றால் எல்லா மனிதர்களுமே பாவிகள், எல்லாருக்குமே கடவுளுடைய மன்னிப்பு தேவைப்படுகிறது. (ரோமர் 3:23; 5:12) பைபிளைப் படிப்பதற்கு முன், கடவுளுடைய சித்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியாதிருந்தது. அப்படியானால் முழுக்க முழுக்க அவருடைய சித்தத்தின்படி உங்களால் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? அதனால்தான் மனந்திரும்புவது அவசியம்.

13. வாழ்க்கையை மாற்றியமைப்பது என்றால் என்ன?

13 மனந்திரும்பிய பிறகு, குணப்பட வேண்டும், அதாவது வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும். நீங்கள் வெறுமனே மனம் வருந்துவது மட்டும் போதாது. உங்கள் முன்னாள் வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, இப்போது முதற்கொண்டு சரியானவற்றைச் செய்ய திடதீர்மானத்துடன் இருக்க வேண்டும். ஆம், மனந்திரும்புவதும் வாழ்க்கையை மாற்றியமைப்பதும் முழுக்காட்டுதலுக்கு முன்பு நீங்கள் கட்டாயம் எடுக்க வேண்டிய படிகளாகும்.

ஒப்புக்கொடுத்தல்

14. முழுக்காட்டுதலுக்கு முன் என்ன முக்கியமான படியை நீங்கள் எடுக்க வேண்டும்?

14 முழுக்காட்டுதலுக்கு முன் மற்றொரு முக்கியமான படியை நீங்கள் எடுக்க வேண்டும். யெகோவா தேவனுக்கு உங்களையே நீங்கள் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

உங்களுடைய ஒப்புக்கொடுத்தலைக் கடவுளிடம் ஜெபத்தில் தெரிவித்து விட்டீர்களா?

15, 16. கடவுளுக்கு உங்களை ஒப்புக்கொடுப்பதன் அர்த்தம் என்ன, அப்படிச் செய்ய எது ஒருவரைத் தூண்டுகிறது?

15 ஊக்கமான ஜெபத்துடன் யெகோவா தேவனுக்கு நீங்கள் உங்களை ஒப்புக்கொடுக்கையில், என்றென்றும் அவரை மட்டுமே வணங்குவீர்கள் என்று அவருக்கு வாக்குக் கொடுக்கிறீர்கள். (மத்தேயு 4:10) ஆனால், எதற்காக அப்படி ஒப்புக்கொடுக்க வேண்டும்? ஓர் உதாரணத்தை இப்போது கவனிக்கலாம். ஓர் ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பெண்ணைப் பற்றி அவன் அதிகமாகத் தெரிந்துகொள்ளும்போதும், அவளிடமுள்ள அருமையான குணங்களைப் பார்க்கும்போதும் அவளிடம் இன்னும் அதிகமாகச் சுண்டியிழுக்கப்படுகிறான். நிச்சயமாகவே சிறிது காலத்திற்குப் பின், தன்னை மணந்துகொள்ளும்படி அவளிடம் கேட்பான். உண்மைதான், திருமணம் செய்துகொள்வதில் அதிகப்படியான பொறுப்புகள் உட்பட்டுள்ளன. என்றாலும், அவள் மீதுள்ள அன்பின் காரணமாக அந்த முக்கிய படியை எடுக்க அவன் தூண்டப்படுகிறான்.

16 அவ்வாறே, நீங்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவர் மீது அன்பு செலுத்த ஆரம்பிக்கும்போது அவருக்குச் சேவை செய்ய தூண்டப்படுகிறீர்கள், எந்த நிபந்தனைகளையும் விதிக்காமல் அல்லது எந்த வரையறைகளையும் வகுக்காமல் அவருக்குச் சேவை செய்ய தூண்டப்படுகிறீர்கள். அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிற எவருமே ‘தங்களைத் தாங்களே சொந்தம் கைவிட’ வேண்டும். (மாற்கு 8:34, NW) அப்படிச் செய்வதற்கு, நம்முடைய சொந்த ஆசைகளும் இலட்சியங்களும் கடவுளுக்கு முழுமையான கீழ்ப்படிதலைக் காட்டத் தடையாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியானால், முழுக்காட்டப்படுவதற்கு முன்னரே, யெகோவா தேவனுடைய சித்தத்தைச் செய்வது உங்கள் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.—1 பேதுரு 4:2.

வாக்குத் தவறி விடுவோமோ என்ற பயத்தை மேற்கொள்ளுதல்

17. சிலர் ஏன் தங்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்காமல் இருந்துவிடுகிறார்கள்?

17 சிலர் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கத் தயங்குகிறார்கள், ஏன்? ஏனென்றால் அத்தகைய முக்கியமான படியை எடுக்க அவர்கள் கொஞ்சம் பயப்படுகிறார்கள். அப்படி ஒப்புக்கொடுத்துவிட்டால் கடவுளுக்குத் தாங்கள் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அஞ்சுகிறார்கள். எங்கே வாக்குத் தவறிவிடுவோமோ, யெகோவாவுக்கு ஏமாற்றத்தை அளித்து விடுவோமோ என்ற பயத்தில், அவருக்கு ஒப்புக்கொடுக்காமலேயே இருந்துவிடுகிறார்கள்.

18. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க எது உங்கள் மனதைத் தூண்டலாம்?

18 யெகோவா மீது அன்பு செலுத்த நீங்கள் கற்றுக்கொள்ளும்போது, உங்களையே அவருக்கு ஒப்புக்கொடுப்பதற்கும், அதற்கு இசைய வாழ உங்களால் முடிந்ததைச் செய்வதற்கும் தூண்டப்படுவீர்கள். (பிரசங்கி 5:4) அப்படி ஒப்புக்கொடுத்த பிறகு, “கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள” கட்டாயம் நீங்கள் விரும்புவீர்கள். (கொலோசெயர் 1:10) கடவுள் மீது அந்தளவு அன்பு இருப்பதால், அவருடைய சித்தத்தைச் செய்வது உங்களுக்குக் கஷ்டமாகவே தெரியாது. “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” என்று அப்போஸ்தலன் யோவான் சொன்ன வார்த்தைகளை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை.​—⁠1 யோவான் 5:3.

19. கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதைக் குறித்து நீங்கள் ஏன் பயப்படத் தேவையில்லை?

19 கடவுளுக்கு உங்களை ஒப்புக்கொடுக்க நீங்கள் பரிபூரணராய் இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய வரையறைகள் யெகோவாவுக்குத் தெரியும், எனவே உங்களால் செய்ய முடியாத காரியங்களை ஒருபோதும் அவர் உங்களிடம் எதிர்பார்க்க மாட்டார். (சங்கீதம் 103:14) நீங்கள் வளமுடன் வாழ வேண்டுமென்றே அவர் விரும்புகிறார், அதற்கு அவருடைய ஆதரவும் உதவியும் உங்களுக்கு இருக்கும். (ஏசாயா 41:10) ஆம், யெகோவாவை உங்கள் முழு இருதயத்தோடு நம்பினால், நிச்சயம் அவர் உங்கள் “பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”—நீதிமொழிகள் 3:5, 6.

ஒப்புக்கொடுத்தலை முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்துதல்

20. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்ததை ஏன் மனதிற்குள் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது?

20 இப்போது நாம் கலந்தாலோசித்த விஷயங்களைச் சிந்தித்துப் பார்ப்பது ஜெபத்தின் மூலம் உங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க உதவலாம். கடவுளை உண்மையிலேயே நேசிப்பவர்கள் ‘இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணவும்’ வேண்டும். (ரோமர் 10:10) அதை நீங்கள் எவ்வாறு செய்யலாம்?

முழுக்காட்டுதல் என்பது நம்முடைய பழைய வாழ்க்கை முறைக்கு மரித்து, கடவுளுடைய சித்தத்தைச் செய்யத் திரும்ப உயிரோடு வருவதை அர்த்தப்படுத்துகிறது

21, 22. உங்கள் விசுவாசத்தை நீங்கள் எப்படி “வாயினாலே அறிக்கை பண்ண” முடியும்?

21 முழுக்காட்டப்பட விரும்புகிறீர்கள் என்பதை உங்களுடைய சபை மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். சபையிலுள்ள சில மூப்பர்கள் பைபிளின் அடிப்படை போதனைகள் சம்பந்தப்பட்ட நிறைய கேள்விகளை உங்களுடன் மறுபார்வை செய்வதற்கு அவர் ஏற்பாடு செய்வார். நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என இந்த மூப்பர்கள் ஒருமித்துத் தீர்மானித்தால், வரவிருக்கும் மாநாடு ஒன்றில் நீங்கள் முழுக்காட்டுதல் பெறலாம் என அவர்கள் உங்களிடம் தெரிவிப்பார்கள். * பொதுவாக அத்தகைய சந்தர்ப்பங்களில், முழுக்காட்டுதலின் அர்த்தத்தைக் குறித்து ஒரு பேச்சு கொடுக்கப்படும். பேச்சின் முடிவில், முழுக்காட்டப்படத் தயாராய் இருக்கிற அனைவரையும் இரண்டு எளிய கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு பேச்சாளர் அழைப்பார்; அப்படிப் பதிலளிப்பது தங்கள் விசுவாசத்தை “வாயினாலே அறிக்கை பண்ண” அவர்களுக்கு வாய்ப்பளிக்கும்.

22 அவ்வாறு முழுக்காட்டப்படுவது, நீங்கள் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த ஒரு நபர் என்பதையும், இப்போது நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறீர்கள் என்பதையும் வெளியரங்கமாகக் காட்டுகிறது. முழுக்காட்டப்படப் போகிறவர்கள் யெகோவாவுக்குத் தங்களையே ஒப்புக்கொடுத்திருப்பதை எல்லாருக்கும் காண்பிப்பதற்காகத் தண்ணீருக்குள் முழுமையாய் அமிழ்த்தி எடுக்கப்படுகிறார்கள்.

உங்கள் முழுக்காட்டுதலின் அர்த்தம்

23. “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டப்படுவதன் அர்த்தம் என்ன?

23 தம்முடைய சீஷர்கள் “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டப்படுவார்கள் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 28:19) இதன் அர்த்தம் என்ன? முழுக்காட்டப்படத் தயாராயுள்ள நபர் யெகோவா தேவனுடைய அதிகாரத்தையும் இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை அர்த்தப்படுத்துகிறது. (சங்கீதம் 83:17; மத்தேயு 28:18) அதோடு, கடவுளுடைய பரிசுத்த ஆவியின், அதாவது செயல் நடப்பிக்கும் சக்தியின், நோக்கத்தையும் செயல்களையும் புரிந்து ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதையும் அர்த்தப்படுத்துகிறது.—கலாத்தியர் 5:22, 23; 2 பேதுரு 1:21.

24, 25. (அ) முழுக்காட்டுதல் எதை அடையாளப்படுத்துகிறது? (ஆ) எந்தக் கேள்விக்கு பதில் தேவை?

24 என்றாலும், முழுக்காட்டுதல் என்பது வெறுமனே தண்ணீரில் ஸ்நானம் செய்வதை அர்த்தப்படுத்துவதில்லை. மிக மிக முக்கியமான ஒரு காரியத்திற்கு அது ஓர் அடையாளமாய் இருக்கிறது. தண்ணீருக்கு அடியில் செல்வது பழைய வாழ்க்கை முறைக்கு மரித்துவிட்டீர்கள் என்பதை அடையாளப்படுத்துகிறது. தண்ணீருக்கு வெளியே வருவது கடவுளுடைய சித்தத்தைச் செய்யத் திரும்ப உயிரோடு வந்திருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. ஏதோவொரு வேலைக்கோ, ஒரு குறிக்கோளுக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, ஓர் அமைப்புக்கோ அல்ல, ஆனால் யெகோவா தேவனுக்கே நீங்கள் உங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறீர்கள் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும் கடவுளோடுள்ள மிக நெருக்கமான நட்பிற்கு—மிக அன்னியோன்னியமான பந்தத்திற்கு​—⁠ஆரம்பப் படிகளே.—சங்கீதம் 25:14, NW.

25 என்றாலும், முழுக்காட்டுதல் பெற்றால் கண்டிப்பாக இரட்சிப்பு கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.” (பிலிப்பியர் 2:12) முழுக்காட்டுதல் என்பது வெறும் ஆரம்பமே. இப்போது கேள்வி என்னவென்றால், கடவுளுடைய அன்பிலே நீங்கள் எப்படி நிலைத்திருக்க முடியும்? கடைசி அதிகாரம் இதற்குப் பதிலளிக்கும்.

^ பாரா. 21 யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படுகிற வருடாந்தர மாநாடுகளில் முழுக்காட்டுதல் கொடுப்பது வழக்கமான ஓர் அம்சமாகும்.