Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிற்சேர்க்கை

கடவுளுடைய பெயர் — அதன் பயன்பாடும் அர்த்தமும்

கடவுளுடைய பெயர் — அதன் பயன்பாடும் அர்த்தமும்

உங்களுடைய பைபிளில் சங்கீதம் 83:17 (சில பைபிள்களில் வசனம் 18) எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு இவ்வசனத்தைப் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளது: ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணர்ந்து கொள்வார்களாக.’ ஏராளமான மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளும் இவ்வசனத்தை இதுபோன்றே மொழிபெயர்த்திருக்கின்றன. ஆனால், அநேக மொழிபெயர்ப்புகள் யெகோவா என்ற பெயரை இவ்வசனத்தில் பயன்படுத்துவதில்லை, அதற்குப் பதிலாக, “கர்த்தர்” அல்லது “ஆண்டவர்” போன்ற பட்டப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கின்றன. இந்த வசனத்தில் எதைப் பயன்படுத்த வேண்டும்: ஒரு பட்டப் பெயரையா அல்லது யெகோவா என்ற பெயரையா?

எபிரெய எழுத்துக்களில் கடவுளுடைய பெயர்

இந்த வசனம் ஒரு பெயரைப் பற்றிச் சொல்கிறது. மூல எபிரெயு பைபிளில் (பைபிளின் பெரும்பகுதி எபிரெயு மொழியில்தான் எழுதப்பட்டது) தனிச்சிறப்பு வாய்ந்த இப்பெயர் இவ்வசனத்தில் காணப்படுகிறது. எபிரெய எழுத்துக்களில் அது יהוה (YHWH) என்றுள்ளது. தமிழில், பொதுவாக அந்தப் பெயர் “யெகோவா” என மொழிபெயர்க்கப்படுகிறது. அந்தப் பெயர் பைபிளில் ஒரேவொரு தடவை மட்டும்தான் காணப்படுகிறதா? இல்லை. எபிரெய வேதாகமத்தின் மூலப் பிரதியில் ஏறக்குறைய 7,000 தடவை அது காணப்படுகிறது!

கடவுளுடைய பெயர் எந்தளவு முக்கியமானது? இயேசு கிறிஸ்து சொல்லிக்கொடுத்த ஜெபத்தை எடுத்துக்கொள்ளுங்கள். “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று அது ஆரம்பிக்கிறது. (மத்தேயு 6:9) இயேசு வேறொரு சமயத்தின்போது கடவுளை நோக்கி, “பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” என்று ஜெபித்தார். அப்போது “மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்” என்று வானத்திலிருந்து கடவுள் பதிலளித்தார். (யோவான் 12:28) எனவே, கடவுளுடைய பெயர் மிக மிக முக்கியமானது என்பது தெளிவாகிறது. அப்படியானால், சில மொழிபெயர்ப்பாளர்கள் இந்தப் பெயருக்குப் பதிலாக ஏன் பட்டப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்?

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. முதலாவது, இந்தப் பெயர் பூர்வ காலத்தில் எப்படி உச்சரிக்கப்பட்டது என்பது தெரியாததால் அதை இன்று பயன்படுத்தக் கூடாது என அநேகர் வாதிடுகிறார்கள். பூர்வ எபிரெய மொழி, உயிரெழுத்துக்கள் இல்லாமல் எழுதப்பட்டது. ஆகையால், YHWH என்பதை பைபிள் காலங்களில் மக்கள் எப்படி உச்சரித்தார்கள் என்பதை இன்று யாராலுமே திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அதற்காக, கடவுளுடைய பெயரையே நாம் பயன்படுத்தக் கூடாதா? பைபிள் காலங்களில், இயேசு என்ற பெயர் யெஷுவா என்று உச்சரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது யெஹோஷுவா என்று உச்சரிக்கப்பட்டிருக்கலாம், அதை யாராலும் நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. என்றபோதிலும், இயேசு என்ற பெயரை உலகெங்குமுள்ள மக்கள் இன்று வித்தியாசமான விதங்களில், பொதுவாகத் தங்களுடைய மொழியின் உச்சரிப்புக்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்கள். முதல் நூற்றாண்டில் அந்தப் பெயர் எப்படி உச்சரிக்கப்பட்டதென்று தெரியாததால் அதை அவர்கள் பயன்படுத்தாமலேயே இருந்துவிடவில்லை. அதுபோலவே, வெளிநாட்டுக்குச் செல்வீர்களென்றால், அந்த நாட்டின் பாஷையில் உங்களுடைய பெயர் ரொம்பவே வித்தியாசமாக உச்சரிக்கப்படுவதை ஒருவேளை நீங்கள் கவனிக்கலாம். எனவே, கடவுளுடைய பெயர் பூர்வத்தில் எப்படி உச்சரிக்கப்பட்டதென்று தெரியாததைக் காரணங்காட்டி அதைப் பயன்படுத்தாமலேயே நாம் இருந்துவிட முடியாது.

கடவுளுடைய பெயரை பைபிளிலிருந்து நீக்கிவிட்டதற்கான இரண்டாவது காரணம் யூதர்களுடைய நீண்ட நாளைய பாரம்பரியத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. கடவுளுடைய பெயரை உச்சரிக்கவே கூடாதென்று அநேக யூதர்கள் நம்புகிறார்கள். பைபிளிலுள்ள ஒரு சட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டதன் காரணமாகவே இந்த நம்பிக்கை ஏற்பட்டதாகத் தெரிகிறது; அந்தச் சட்டம் இவ்வாறு சொல்கிறது: “உன் தேவனாகிய கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் [“யெகோவா,” NW] தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.”—யாத்திராகமம் 20:7.

கடவுளுடைய பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுவதை இந்தச் சட்டம் தடைசெய்கிறது. ஆனால் அவருடைய பெயரை மரியாதைக்குரிய விதத்தில் பயன்படுத்துவதை அது தடைசெய்கிறதா? இல்லவே இல்லை. எபிரெய பைபிளை (“பழைய ஏற்பாடு”) எழுதிய எல்லாருமே பூர்வ இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த சட்டங்களின்படி வாழ்ந்த விசுவாசமிக்க ஆட்கள். என்றாலும், கடவுளுடைய பெயரை அவர்கள் அடிக்கடி பயன்படுத்தினார்கள். உதாரணத்திற்கு, கடவுளுடைய வணக்கத்தார் ஒன்றுசேர்ந்து சப்தமாகப் பாடிய சங்கீதங்களில் அந்தப் பெயரைப் பயன்படுத்தினார்கள். தம்மை வணங்குவோர் தம்முடைய பெயரை உபயோகிக்கும்படி யெகோவா தேவனே கட்டளை கொடுத்திருந்தார், அந்தக் கட்டளைக்கு அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் கீழ்ப்படிந்தார்கள். (யோவேல் 2:32; அப்போஸ்தலர் 2:21) ஆம், இயேசு செய்ததைப் போலவே, கிறிஸ்தவர்கள் இன்று கடவுளுடைய பெயரை மரியாதையோடு பயன்படுத்த கொஞ்சங்கூடத் தயங்குவதில்லை.—யோவான் 17:26.

மொழிபெயர்ப்பாளர்கள் கடவுளுடைய பெயருக்குப் பதிலாக பட்டப் பெயர்களைப் பயன்படுத்துவது மாபெரும் தவறாகும். அவர்கள் அப்படிச் செய்வதன் மூலம் கடவுள் ஆள்தன்மையற்ற ஒரு சக்தி, அவரை யாரும் அணுக முடியாது என்ற எண்ணத்தை ஜனங்களுடைய மனதில் ஏற்படுத்துகிறார்கள்; ஆனால் பைபிளோ ‘யெகோவாவுடன் நெருக்கமான பந்தத்தை’ ஏற்படுத்திக்கொள்ளும்படி மனிதர்களை ஊக்குவிக்கிறது. (சங்கீதம் 25:14, NW) மிக நெருங்கிய நண்பர் ஒருவரைச் சற்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த நண்பருடைய பெயரை நீங்கள் தெரிந்துகொள்ளவே இல்லையென்றால், அவருடன் நீங்கள் நெருக்கமாக இருக்க முடியுமா? அதேபோல, கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை ஜனங்களிடமிருந்து மறைத்து வைத்தால், அவர்கள் எப்படி உண்மையிலேயே அவரோடு நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்? அதுமட்டுமல்ல, கடவுளுடைய பெயரை ஜனங்கள் பயன்படுத்தாதபோது, அதன் அருமையான அர்த்தமும் அவர்களுக்கு விளங்காமல் போய்விடுகிறது. கடவுளுடைய அந்தப் பெயர் எதை அர்த்தப்படுத்துகிறது?

விசுவாசமிக்க ஊழியரான மோசேயிடம் கடவுளே தம்முடைய பெயரின் அர்த்தத்தைச் சொல்லியிருந்தார். கடவுளுடைய பெயரைக் குறித்து மோசே கேட்டபோது, “இருக்கிறவராக இருக்கிறேன்” என்று யெகோவா பதிலளித்தார். (யாத்திராகமம் 3:14) ரோதர்ஹாம் மொழிபெயர்ப்பு இந்த வார்த்தைகளை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “எப்படியெல்லாம் ஆக வேண்டுமென விரும்புகிறேனோ அப்படியெல்லாம் நான் ஆவேன்.” எனவே, தம்முடைய நோக்கங்களை நிறைவேற்ற எப்படியெல்லாம் ஆக வேண்டியிருக்குமோ அப்படியெல்லாம் ஆவதற்கு யெகோவாவால் முடியும்.

எப்படியெல்லாம் ஆக வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அப்படியெல்லாம் ஆவதற்கு உங்களால் முடியுமென்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது என்ன செய்வீர்கள்? உங்கள் நண்பர்களுக்கு எப்படி உதவுவீர்கள்? அவர்களில் ஒருவருக்கு ரொம்பவே உடம்பு சுகமில்லாமல் போய்விட்டால், நீங்கள் திறம்பட்ட ஒரு டாக்டராக ஆகி, அவரைக் குணப்படுத்துவீர்கள். மற்றொரு நண்பருக்குப் பண நஷ்டம் ஏற்பட்டதென்றால், நீங்கள் ஒரு பெரிய பணக்காரராக ஆகி, பிரச்சினையிலிருந்து அவரை விடுவிப்பீர்கள். ஆனால் உண்மை என்னவெனில், நீங்கள் நினைத்தபடியெல்லாம் உங்களால் ஆக முடியாது. நம் எல்லாராலும்தான். என்றாலும், யெகோவா தம்முடைய நோக்கங்களை நிறைவேற்ற எப்படியெல்லாம் ஆகவேண்டுமோ அப்படியெல்லாம் ஆகிறார் என்பதை பைபிளைப் படிக்கப் படிக்க நீங்கள் புரிந்துகொள்ளும்போது அசந்துபோய் விடுவீர்கள். தம்மை நேசிக்கிறவர்களின் சார்பாக, தம்முடைய வல்லமையைப் பயன்படுத்தும்போது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். (2 நாளாகமம் 16:9) யெகோவாவுடைய பெயர் தெரியாதவர்களுக்கு அவருடைய குணாதிசயத்தின் இத்தகைய அழகிய அம்சங்களெல்லாம் தெரியாமலேயே போய்விடுகின்றன.

எனவே, யெகோவா என்ற பெயர் பைபிளில் பயன்படுத்தப்பட வேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது. அதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்வதும், நம்முடைய வணக்கத்தில் அதைத் தாராளமாகப் பயன்படுத்துவதும் நம் பரலோகத் தகப்பனான யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு வலிமைமிக்க விதத்தில் உதவுகின்றன. *

^ பாரா. 3 கடவுளுடைய பெயர், அதன் அர்த்தம், வணக்கத்தில் அதை ஏன் பயன்படுத்த வேண்டும் ஆகியவற்றைக் குறித்த கூடுதலான தகவல்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும் என்ற சிற்றேட்டைக் காண்க.